பொதுபுத்தி – ராதாகிருஷ்ணன் சிறுகதை

ராதாகிருஷ்ணன்

வாசலில் நுழையும்போதே அந்தப் பெண் இன்னும் போகாமல் உள்ளே இருப்பது தெரிந்தது, தயங்கி வெளியேவே நின்று விட்டேன். உள்ளே ராஜன் அண்ணனின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது கொஞ்சம் ஆசுவாசம் அளித்தது, அவர் சூழலை சமாளிப்பார் என்பது கொஞ்சம் தைரியம் அளித்தது, இருந்தாலும் உள்ளே சென்று அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்க தைரியமில்லை, வெளியேவே பைக்கின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். உள்ளிருந்து டீ வாங்க வெளியே வந்த சாம், “ஏனே இங்கயே நின்னுட்டீங்க, எல்லாரும் உள்ள இருக்காங்க போங்க,” என்றான், சாமின் பேச்சு சத்தம் கேட்டு உள்ளே ஜன்னல் பக்கம் இருந்த அங்குராஜ் அண்ணா திரும்பி பார்த்தார், ” உள்ள வாடா ” என்றார், தப்பிக்க வழியின்றி உள்ளே சென்று காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன், அந்தப் பெண்ணைப் பார்க்க சங்கடப்பட்டு தலை தூக்காமல் அமர்ந்திருந்தேன்.

சங்க அலுவலகம் வரத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, 18 வயதில் அங்குராஜ் அண்ணா வழியாகத்தான் உள்ளே வந்தேன், வந்த புதிதில் இங்கேயே பலியாக கிடப்பேன், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வேன், சங்கம் என் பலத்தை பன்மடங்கு பெருக்கியதாக எண்ணினேன், எந்த அநீதியையும் சங்கம் வழியாக எதிர்த்து வெல்ல முடியும் என்று நம்பினேன், ஆனால் நாளாக நாளாக யதார்த்தம் புரிந்தது, பிறகு ஆர்வம் குறைய ஆரம்பித்தது, எனினும் பழக்கம் காரணமாக தினமும் காலையில் இங்கு வந்துவிட்டுத்தான் பிறகு எங்கும் செல்வேன், வேலைகள் ஏதும் இல்லாத சமயங்களில் இங்குதான் இருப்பேன், இன்று இந்த ஊரில் எங்கு சென்றாலும் அங்கு எனக்கு பரிச்சயமான ஒருவர் இருப்பதற்கு காரணம் இந்த சங்கம்தான். அனைத்து நாளிதழ்களும், பத்திரிக்கைகளும் வாங்கிவிடுவார்கள், இந்த இதழ் வாசிப்புகள் வழியாகத்தான் எனக்கு புத்தக வாசிப்பு பழக்கம் உருவானது.

சங்கத்தில் சேர்ந்த காலங்களில் எல்லாவற்றிற்க்கும் என் கருத்துக்களை சொல்வேன், நல்ல கருத்துக்கள் என பாராட்டுக்கள் எல்லாம் கிடைக்கும், ஆனால் முடிவுகள் என வரும்பொழுது அது மேலிருந்து வரும் முடிவுகளாகவோ அல்லது அதிகாரம் கொண்டவர்களின் செயலாகவோ இருப்பதை உணர்ந்த பிறகு கருத்துக்கள் வைத்து வாதிடுவது தன்னாலேயே குறைந்தது. கருத்துக்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை என்பதுதான் நான் இங்கு பயின்ற முதற் பாடம். பெரும்பாலும் சாதாரண வேலைகளை பெரிய பணி என்று சொல்லி ஒப்படைப்பார்கள், சாதாரண வேலைகள் என்பது அலைச்சல் வேலைகள் மற்றும் எடுபிடி பணிகள், ஆனால் எனக்கு இந்த வகை வேலைகளில் இயல்பாகவே ஆர்வம் இருந்ததனால் இவற்றினையெல்லாம் சந்தோசமாகவே செய்வேன், இந்த வேலைகள் வழியாக எல்லோருடனும் பழகவும் அவர்களை அறியவும் முடிந்தது, இந்தப் பழக்கம் வழியாகத்தான் ராஜன் அண்ணா எனக்கு வழிகாட்டியாக, ஆசிரியனாக கிடைத்தார்.

பல நேரம் என் குரல் எடுபடாமல் போகும்பொழுது ராஜன் அண்ணாதான் தேற்றுவார், “எதுவும் ஒரே நாளில் மாறிடாது, உனக்கு மாற்றம் கொண்டு வர விருப்பம்னா அதை, அதன் பலன்களை மற்றவர்களுக்கு புரிய வைக்கணும், விழிப்பு மட்டும்தான் மாற்றத்தை உருவாக்கும்,” என்பார். இப்பொழுதெல்லாம் எதற்கும் வருத்தப்படுவதும் எதையும் பொருட்படுத்துவதும் இல்லை, மாறாக கொஞ்சம் உற்சாகம் கொண்டு இயங்குகிறேன், காரணம் இங்கு எனக்கு ஜுனியர்கள் வந்து விட்டதுதான்! அந்த வகையில் சாம் அப்படியே என் நகல்.

நேற்று இரவு சாம் அழைத்து ஒரு பெண் வந்து அழுது கொண்டு நின்றிருக்கிறாள் என்று சொன்னவுடனே எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு விரைவாக வந்து பார்த்தேன். மிக ஒல்லியாக இருந்தாள், நீளமான முகம், கழுத்தில் தங்கநிறம் மங்கிய பித்தளை செயின் சுற்றிலும் தேமல் இருந்தது, முடி எல்லாம் எண்ணை படாமல் செம்பட்டை நிறம் கொள்ளத் துவங்கியிருந்தது, மலிவான சேலை உடுத்தியிருந்தாள், பிளாஸ்டிக் செருப்பு அணிந்திருந்தாள், அருகில் சிறு பெண் ஒருவள் நின்றிருந்தாள், அப்படியே இந்தப் பெண்ணின் சிறு வடிவம், நிறம் மங்கிய, அழுக்கானதைப் போல தெரிந்த கவுன் அணிந்திருந்தாள், காலில் செருப்பு இல்லாமல் இருந்தது. அருகில் சாம் மட்டும் நின்றிருந்தான், அவன் முகத்தில் சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பது தெரியாத குழப்பத்தை காண முடிந்தது. என்னைப் பார்த்ததும் “அக்கா, பயப்படாதீங்க, வந்துட்டாங்க,” என்றான். அவள் திரும்பி என்னைப் பார்த்து அழுதபடி கை கூப்பினாள்.

அவளிடம் காணப்பட்ட பய உணர்வு எனக்கு மனதிற்குள் நடுக்கத்தை அளித்தது. “அழாதீங்கம்மா, என்னனு சொல்லுங்க,” என்றேன், திரும்பி சாமை நோக்கி, “ராஜன் அண்ணாக்கு தகவல் சொல்லு,” என்று பணித்தேன், அவன், “கூப்பிட்டேன், உங்களைக் கூப்பிட்டு பேசச் சொன்னாரு, ” என்றான், மனதிற்குள் திக்கென்று ஆகி விட்டது, நான்தான் இனி பொறுப்பு, இந்தச் சிக்கலை என் தலையில் கட்டி விட்டார்கள், காலையில் சாவகாசமாக வந்து என்னிடம் விசாரிப்பார்கள் என்பதை எண்ணும்போதே எரிச்சலாக வந்தது.

“என்னன்னு சொல்லுமா,” என்றேன். அவள், “வீட்டைப் பிடுங்கிட்டாங்க, எங்கள வீட்டுல இருந்து வெளிய போகச் சொல்லிட்டாங்க,” என்றாள், அவளால் சீராகப் பேச முடியவில்லை, பேசப்பேச அவளின் அழுகையும் பயமும் அதிகமாகியது. “வீட்டுக்காரர் எங்கே?” என்றேன், “அவரு பயந்து ஓடிப் போயிட்டாரு,” என்றாள், எனக்கு அவன் மீது கோபமாக வந்தது.

“அவங்ககிட்ட கடன் வாங்கியிருந்தோம் , அவங்க காசுக்கு பதிலா வீட்டை மிரட்டி எழுதி வாங்கிட்டாங்க”

“வீட்டுக்காரர் என்ன தொழில்ங்க?”

“சலூன் வச்சுருந்தோம், அப்பறம் இவரு சரியா நடத்தாம அது போயிடுச்சு”

வலுவில்லாத சாதியினர் இந்த பெண் என்பது உறைத்தது, வீடு திரும்ப கிடைப்பது கடினம் என நினைத்துக் கொண்டேன்.

ஏதோ தோன்றி அவளிடம், “வீட்டுக்காரரு குடிப்பாரா?” என்றேன், அவள் தயங்கி, “குடிப்பாருங்க,” என்றாள், பின் அவளாகவே, “அதனாலதாங்க தொழில் போயி கடனாளி ஆனோம்,” என்றாள்.

“வீட்டுக்காரர் எங்க இருப்பார்னு ஏதாவது தெரியுமா?”

“தெரியலீங்க, அவர இவங்க அடிச்சாங்க, அடிச்சுதான் எழுதி வாங்கினாங்க, இரண்டு நாளா அழுதுட்டே இருந்தாரு, இனி என்ன பண்ணப் போறேன்னு தெரியலையேன்னு சொல்லி என்கிட்ட அழுதுட்டே இருந்தாரு”

“எப்ப போனாரு?”

“இன்னைக்கு காலி பண்ணச் சொல்லி கெடு கொடுத்திருந்தாங்க, நேத்து நைட்டு தூங்காம அழுதுட்டு இருந்தவர்ட்ட, “நாம காலுல விழுவோம் கேட்பாங்க”ன்னு சொன்னேன், அவரு, “இல்லைடி” னு சொல்லி அழுத்துட்டுருந்தாரு, “விடிஞ்சு ஏதாவது செய்வோம்ங்க”னு சொல்லி தூங்க வச்சேன், காலைல பாயில அவரு இல்ல, சுத்தி எங்க தேடியும் காணோம்”

“பணம் கொடுத்தவங்க யாரு?”

“அவங்கள முன்னாடி பழக்கம் இல்லைங்க, அவங்க பத்து ஆளுகளுக்கு மேல கூட்டிட்டு வந்து, “வீட்டை எங்களுக்கு எழுதி கொடுத்துட்டாரு, கிளம்பு” னு சொன்னாங்க, அவங்களைப் பார்க்கவே பயமாயிருந்தது, வெளிய வந்துட்டேன்”

“ஸ்டேஷன் போனீங்களா”

அவள் பதில் ஏதும் சொல்லவில்லை, திரும்பவும் கேட்டபோது, “பயமா இருக்குங்க” என்றாள்.

சாம் இடையில் புகுந்து, “ஷீலா அக்காதான் இங்க அனுப்பி விட்டுருக்காங்க, அவங்ககூட வேலை செய்யறவங்களாம் இவங்க”

அந்தப் பெண்ணை நோக்கி, “உங்களுக்கு இங்க சொந்தக்காரங்க இருக்காங்களா?” என்றேன்.

“இல்லைங்க”

சாமை நோக்கி, “ஷீலா அக்காட்ட கூப்பிட்டு அவங்க வீட்டுல தங்க வை,” என்று சொல்லி பெண்ணை நோக்கி, “கவலைப்படாதமா, வீட்டுக்காரரை கண்டுபிடிச்சிடலாம், எல்லாம் சரியாகிடும், கவலப்படாத,” என்றேன்.

சாமை அழைத்து 500 கொடுத்து, “சாப்பாடு இவங்களுக்கு வாங்கிக் கொடு, நாளைக்கும் இவங்ககூடயே இரு,” என்றேன்.

பிறகு கிளம்பி வீட்டுக்கு வந்தேன், நெடுநேரம் தூங்க முடியாமல் தவிப்பாக இருந்தது, அந்தப் பெண்கூட இருந்த சிறுமியின் முகம் கண்ணுக்குளேயே நின்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட விடியும் நேரத்தில்தான் தூக்கம் வந்தது.

 

“ஏன்டா லேட்டு” என்று ராஜன் அண்ணா கேட்டபோது முகம் தூக்கி அவரைப் பார்த்தேன், அவர் முகத்தில் துக்கமோ சந்தோஷமோ எதுவுமே வெளிப்படாது, அவர் சிரித்தே இத்தனை வருடங்களில் பார்த்ததில்லை, அதிசயமாக முகம் எப்பவாவது புன்னகைக்கும். ராஜன் அண்ணா முழுநேர சங்கப் பணியாளராக இருக்கிறார், காலையில் பத்து மணிக்கு அலுவலகம் வருவார், மதியம் 3 மணிக்குச் செல்பவர் திரும்ப மறுநாள் காலைதான் வருவார், மதியத்திற்கு மேல் லைப்ரேரியில் அல்லது அவர் அறையில் அல்லது ஸ்டார் பேக்கரி வாசலில் இருக்கும் நீள் மர பெஞ்சில் இருப்பார். மிக அவசரம் என்று இருந்தால் மட்டுமே வருவார், வெள்ளை வேட்டி சட்டை எப்போதும் சுத்தமானதாக இருக்கும், மர விளிம்பு கொண்ட கண் கண்ணாடி அவரை பேராசிரியர் போல எண்ண வைக்கும், நல்ல உறுதியான பழைய சைக்கிள், அதில்தான் எங்கும் போவார், நான் ஸ்கூட்டி அல்லது மொபெட் வாங்கச் சொல்லி பலமுறை கெஞ்சியிருக்கிறேன், அவர் பொருட்படுத்தியதே இல்லை.

அந்த பெண் கொடுத்த நிலத்தின் நகல் பத்திரத்தை பக்கங்கள் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தார். பிறகு கண் கண்ணாடியை மேசையின் மீது வைத்து அந்த பெண்ணை பார்த்தார். “குழந்தை பேர் என்னமா?” என்றார்.

“கிருத்திகாங்க” என்றாள், அவள் முகத்தில் கொஞ்சம் தெளிவு இருந்ததை இப்போதுதான் கவனித்தேன், இரவு அவளைப் பார்த்தபோது தற்கொலை செய்து விடுவாளோ என பயந்தேன், இப்போது அவளில் இருந்த சிறு தெளிவு ஆச்சரியம் தந்தது.

ராஜன் அண்ணா நிதானமாக, “உன் சொந்த ஊர் எது, அம்மா அப்பா இருக்காங்களா?”

“துறையூர்ங்க, அப்பா இல்ல, அம்மாவும் தம்பியும் மட்டும்தான், அவங்ககிட்ட இதை சொன்னா பயந்திடுவாங்க”

“வேற யாராவது சொந்தத்துல பெரியவங்க இருக்காங்களா?”

“இருக்காங்க”

“சரி ஒன்னு செய்யு, ஊருக்கு கிளம்பு, இப்ப கிளம்பினா சாயிங்காலத்துக்குள்ள போயிடலாம், இரண்டு நாள் கழிச்சு வீட்டுல சொல்லி பெரியவங்கள கூட்டிட்டு இங்க வா, பேசிக்கலாம்”

“வீட்டுக்காரர்…”

“அவரு எங்கயும் போயிருக்க மாட்டாரு, இங்க வந்தார்னா நாங்க உனக்கு தகவல் சொல்றோம்”

அவள் மேலும் ஒன்றும் சொல்லவில்லை, ராஜன் அண்ணா சட்டையின் பைக்குள் இருந்து நான்கு 500 ரூபாய் தாள்களை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டினார், “செலவுக்கு வச்சுக்கம்மா”.

அவள் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள், ராஜன் அண்ணா ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவு செய்யாதவர் என்பது ஞாபகம் வந்தது.

ராஜன் அண்ணா சாமை அழைத்து பஸ் ஏற்றி விட்டு வருமாறு பணித்தார்.

அறையில் சிறிது நேரம் யாரும் பேசவில்லை.

மெதுவாக அங்குராஜ் அண்ணா அசைந்தபோதே அவர் பேசப் போகிறார் என்பது தெரிந்தது, “இனி வீட்டை இந்த பொண்ணு மறந்திட வேண்டியதுதான்,” என்றார், நான் ஏற்கனவே அதை உணர்ந்திருந்தாலும் இவர் சொல்லும்போது இவர் மேல் வெறுப்பு வந்தது.

“ஆனா வீட்டை பிடுங்கவுள்ள செஞ்சிருக்காங்க, நாம போயி பேசி இந்த பொண்ணுக்கு ஏதாவது பண்ணிக் கொடுக்கணும்,” என்றேன்.

“நடக்கற காரியம் சொல்லுடா,” என்றார்.

“இந்த ஏமாற்று வேலையை கண்டுக்காம இருக்க சொல்றீங்களா?” என்றேன்.

அவர் சிரித்து, “சரி, நீ போய் கேளு,” என்றார்.

நான் மேற்கொண்டு அவரைப் பார்க்காமல் திரும்பி ராஜன் அண்ணாவை நோக்கினேன், அவர் மேசையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

“அண்ணா, நீங்களும் இப்படித்தான் நினைக்கிறீங்களா?” என்றேன், அவரைப் பார்த்து, ஏறிட்டு என்னைப் பார்த்தவர் ஏதும் சொல்லாமல் திரும்பவும் மேசையை ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்தார். எனக்கு உள்ளுக்குள் விரக்தி தோன்றி பிறகு அதை அப்படியே விட்டு கைகளை மேல் தூக்கி சோம்பல் முறித்தேன், அங்குராஜ் அண்ணா, “அப்ப நான் பிறகு வரேன்,” என்று சொல்லிக் கிளம்பினார்.

ராஜன் அண்ணாவும் நானும் மட்டும் அறையில் இருந்தோம். அவர் மேஜையை ஒழுங்குபடுத்தும் வேலையை எல்லாம் முடித்து, இருக்கையின் பின்பக்கம் சாய்ந்து உடலைத் தளர்வாக்கி பின் நிதானமாக பேச தொடங்கினார். “டே வெறும் நியாயத்தை மட்டும் வச்சு ஒன்னும் பண்ண முடியாது, நாம காந்தி இல்ல, காந்திக்கு இருக்கற ஆன்மபலம், காந்தியவாதிகள்கிட்ட இருக்கற ஆன்மபலம் என்பதெல்லாம் இயல்புலயே ஒரு சிலர்க்கு இருக்கக்கூடிய விஷயங்கள், நீ நானெல்லாம் சாதாரண மனுஷங்க, சாதாரண மனுஷன் என்ன பண்ண முடியுமோ அதைத்தான் நம்மால பண்ண முடியும்”.

நான் பதில் ஏதும் சொல்லாமல் அவரைப் பார்த்தேன், அவரில் இருந்த நிதானம் எரிச்சல் கொடுத்தது.

“அந்த நிலத்தை பிடுங்கனவனுகளுக்கு போலீஸ் உட்பட எல்லா இடத்திலும் ஆள் பலம் இருக்கும், என்ன மோதினாலும் கஷ்டம், எழுதி வாங்கிட்டானுக, சட்டம் அவங்க பக்கம்தான் பேசும்”

” ஆனா நியாயம் இந்த பொண்ணுகிட்ட இல்ல இருக்கு”

“வெறும் நியாயத்தை வச்சுட்டு என்ன பண்ண, அதை நிலைநிறுத்த பலம் வேணும், இவ ஊருல இருந்து ஆட்களை கூட்டிட்டு வந்தா நாம இவளுக்கு உதவலாம், அதும் நேரடியா இல்ல “.

நான் பதில் ஏதும் சொல்லாமல் கவனிப்பது போல பாவனை செய்தேன், அவர் பேசும்போது இடையில் பிறர் பேசினால் மேற்கொண்டு பேசுவதை நிறுத்தி அமைதியாகி விடுவார்.

“நாம இதைச் சார்ந்து ஏதாவது பண்ணனும்னு நினைச்சா பொதுபுத்தியில இதைப் பற்றின விழிப்பை உருவாக்க முயற்சி பண்ணலாம், அதுதான் ஏதாவது பலனை கொடுக்கும்”

நான் என்ன என்பது போல முகத்தை வைத்து கொண்டேன்.

“பொதுவா நிலம் வைத்திருந்து இரண்டு மூணு தலைமுறை தாண்டினவங்களுக்கு இந்த புத்தி இருக்காது, நிலம் இல்லாதவன், நிலம் வாங்க நினைக்கறவன், புதுசா சம்பாத்தியம் பெறவன் எல்லாத்துக்கும் இந்த அபகரிப்பு புத்தி இருக்கும், இதைச் சரி செய்யறது ரொம்ப கஷ்டம், ஒன்னு மட்டும்தான் பண்ண முடியும், சமூக ஒழுக்க விதியில் இதை தீவிரமா வலியுறுத்தலாம். சமூகத்துல பொது ஒழுக்கம் என்பதே கண்காணிப்புக்கு பயந்து உருவாகிற ஒன்னுதான், கண்காணிப்பு மட்டும்தான் இவனுகள கட்டுப்பாட்டுல வைக்கும். இப்படி திருடறவங்களை சமூகத்தில் விலக்குவது மாதிரியான மனநிலை உருவாக்கணும், அதாவது நேர்மை மனநிலையை மதிப்பானதாவும், ஏமாற்றுத்தனத்தை சில்லறத்தனமாவும் பொதுபுத்தில உருவாக்கறது, இது மாதிரியான விஷயங்களதான் நம்ம சங்கம் செயல்பாடுகளா முன்னெடுக்கணும் .”

யதார்த்தம் பற்றிச் சொல்ல வாயெடுத்து பின் எதிர்மறையாக சொல்லவேண்டாம் என நினைத்து விட்டுவிட்டேன். அவர் தனக்குள்ளேயே பேசுவதைப் போல தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். “இதெல்லாம்விட ஒன்னு இருக்கு, ஒரு கூட்டம்கிறது ஓரளவுக்கு மேல இருக்கக் கூடாது, அப்படி அதிகமாகிடுச்சுனா ஆதிக்கம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க, ஓரளவுக்கு மேல எந்த கூட்டமும் உடையனும், சமூகத்தோட மிகப் பெரிய எதிரியே இந்த கும்பல் மனோபாவம்தான், கும்பலா தன்னை உணர்ந்தாங்கன்னா பிறகு அவனுகளுக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் ஆக்கிடுவானுக, அந்த மனநிலை என்பது பிறகு அவங்ககிட்ட இருந்து மறையவே மறையாது”

சரி என்பதைப் போல ஆமோதித்தேன், பிறகு ஏதோ தோன்றி, “ஒற்றுமையே தப்புனு சொல்ல வரீங்களா?” என்றேன்.

“தான் பிறன்னு பிரிக்காத எந்த ஒற்றுமையும் நல்லதுதான், ஆனா நடைமுறைல மனுசங்க பிறப்பு சார்ந்த ஒற்றுமைக்குள்ளதான் போவாங்க, நாம அதை உடைக்கணும்,” என்றார்.

“இது ஆகற காரியமா?”

“எதுவும் கிளை பிரிந்து தனித்தனியா பிரிவுகளாக ஆகும், அதுதான் இயல்பு, அதை தடுக்கற விஷயங்களை உடைத்தால் போதும்”

பாதி புரிந்த மாதிரியும் பாதி புரியாத மாதிரியும் இருந்தது. பிறகு இருவரும் ஏதும் பேசிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தோம், இடையிடையே இப்படி நடந்து விடுவதுண்டு, பேச்சின் இடையே உருவாகும் மவுனம் அப்படியே விரிசலாகி உரையாடல் அப்படியே நின்றுவிடுவது என. அவர் பேசினதையே மறந்து தனக்குள் மூழ்கி விட்டிருந்தார். நான் வெறுமனே அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன், நாளாக நாளாக அழகாகிக் கொண்டே வருகிறார் என்று தோன்றியது, முடி நரைகூட லட்சணமாக, பொருந்தி அமைவதைப் போல இருந்தது.

அவர் இப்படி அமைதியாகி சிந்தனையில் மூழ்கினார் என்றால் அருகிலிருப்பவர்களைக்கூட மறந்து விடுவார். தொந்தரவு தர வேண்டாம் என்று நினைத்து வெளியே எழுந்து செல்ல நினைத்தேன், டீ குடிக்க வேண்டும் என தோன்றியது. அவரிடம் ஏதும் சொல்லாமல் வெளியே வந்தேன்.

அலுவலகத்தின் நேர் எதிரில்தான் பேக்கரி, இது எங்களுக்கு இரண்டாவது அலுவலகம் போல, அங்கு இல்லையெனில் இங்கு இருப்போம். பேக்கிரியின் முன் திண்ணையில் அங்குராஜ் அண்ணா பேப்பர் படித்து கொண்டிருந்தார். “நீங்க இன்னும் கிளம்பலையா?” என்றேன், அவர் என்னைப் பார்த்தவுடன் பேப்பரை மடித்து கீழே வைத்தார், அவர் அருகில் போய் அமர்ந்து கொண்டேன். அவர் கிண்டலாகச் சிரித்தபடி, “என்ன சொல்றார் உங்க குரு?” என்றார்.

“உங்க தலைமைல கொடி பிடிச்சு ஒரு போராட்டம் நடத்த சொன்னாப்புல!” என்றேன் சிரித்து.

சிரித்தவர், “பரவாலயே, நான் உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுவாருனுல்ல நினைச்சேன்!”

நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன் .

” டே , நான் இந்த திருப்பூர் வந்து 20 வருஷம் மேல ஆயிடுச்சு, இது போல பல சம்பவங்களைப் பார்த்துட்டேன், பொண்ணுக கொஞ்ச நாள்ல தெளிவாயிடுங்க, அடுத்தது என்னனு போயிடும்ங்க, ஆனா ஆண்கள் மரை களண்டவனுக போல ஆயிடுவானுக, குடி ஒன்னுதான் மீட்பு, அதுவும் குடிக்கற சமயத்துலதான்.”

“இப்படி ஏமாத்தறவனுகளுக்கு ஒன்னும் ஆகறது இல்லையா?”

அவர் சிரித்து, “அப்படி ஆனதே நான் பார்த்ததில்லை, நல்லாத்தான் இருக்கானுங்க”.

இதை பற்றி பேசுவதை விட்டு விடலாம் என எண்ணி ” டீ சொல்லவா?” எனக் கேட்டு இரண்டு டீ ஆர்டர் செய்தேன்.

அவர் திடீரென ஞாபகம் வந்ததைப் போல, “டே, ராஜன் அண்ணா அந்தப் பொண்ணுக்கு ஏன் அவ்வளவு பணம் கொடுத்தாரு தெரியுமா?” என்றார், அவர் முகத்தில் சுவாரஸ்யம் சொல்லப் போகும் ஆர்வம் இருந்தது, அதைக் கேட்ட ஒருசில கணத்திற்குள் என் மனம் சொடுக்கி என்னென்னவெல்லாமோ யோசிக்கத் துவங்கி விட்டது, பிறகு மனமே தீர்வு கண்டு, ‘ அவர் நல்லவர்’ என்று சொல்லியது. அங்குராஜ் அண்ணனிடம், “ஏன்?” என்று கேட்டேன்.

“ராஜன் அண்ணா சொத்தையும் இப்படித்தான் பிடுங்கனானுக, பிறகுதான் ஊரை விட்டு ஓடி இங்க வந்து சேர்ந்தாரு, வந்து இருபது வருசமாச்சு, இப்ப வரை அவரு ஊருக்கு போனதில்ல,” என்றார். எனக்கு அப்போது அந்தப் பெண்ணும் கூட இருந்த சிறுமியும் மனதில் வந்து சென்றார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.