தழலாட்டம்- கமல தேவி சிறுகதை

கமல தேவி

சந்தியா விடியலில் எழும்போது இரவு சரியாக உறங்காத அயர்வு எஞ்சியிருந்தது. தலையின் பின்புறம் குறிப்பிட்ட இடத்தில் மெலிதாக எதோ அடைத்த உணர்வு அவளுக்கு எரிச்சலைத் தந்தது. சில மாதங்களாக அவள் எழும்போதே தலைவலியும் எழுந்து கொள்கிறது. தலை வலிக்கிறது என்ற உணர்வு நாள் முழுவதும் இறக்கி வைக்க முடியாத சுமையாக கனத்துக் கொண்டேயிருக்கிறது.

இந்த சில மாதங்களில் அவள் தலைவலியைவிட, அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது அல்லது யாருக்கும் புரிய வைக்க முடியாது என்று நன்றாக உணர்ந்திருந்தாள். எந்த வலியுமே அவ்வாறுதான் என்று சந்தியா உணர்ந்தபின் மற்றவர்கள் மீதான ஆதங்கமும், வலியை வெளியே சொல்வதும் குறைந்தது.

மார்கழியின் குளிர் அறைக் கதவைத் திறக்கத் தயங்க வைத்தது. தலையில் ஸ்கார்ப்பைக் கட்டிக்கொண்டு கதவைத் திறந்தாள். காத்திருந்த குளிர் சட்டென்று அறைந்து பரவியது. வெளியில் நின்று மேற்கே பார்த்தாள். ஒரு தடயமாகக்கூட கொல்லிமலைத்தொடர் கண்களுக்குத் தெரியவில்லை. வெண்நிற புகையாய் பனி சூழ்ந்து நாடி நரம்புகளை விதிர்க்கச் செய்தது. விறுவிறு என்று தலையில் வலி பரவி பின் மெதுவாகக் குறைந்தது.

சந்தியா கனவில் இருப்பது போன்று கிளம்பி அம்மாவுடன் பேருந்து நிறுத்தத்தை அடையும் நேரத்திலும் குளிர் அப்படியே இருந்தது. மக்கள் மந்திரக்கோலால் ஆளப்படுபவர்கள் போல நின்றிருந்தார்கள். ஆலமரத்து காளைகள்கூட கூலத்தின் மேல் அசையாமல் படுத்திருந்தன.

பக்கத்தில் மணல் மாட்டுவண்டிகளை ஓட்டும் ஒட்ட நாய்க்கர்கள் காளைகள் கழித்துப்போட்ட கூலத்தையும், குச்சிகளையும், பேப்பர்களையும் போட்டுக் கொளுத்தி, தீயைச் சுற்றி அமர்ந்து கைகளை உரசி கன்னங்களிலும், மேல்கைகளிலும் தடவிக் கொண்டிருந்தார்கள். எரிப்பான்களை கொஞ்சம் கொஞ்சமாகத் தீயில் போடவும், தீ தாழாமல் எம்பிக் கொண்டிருந்தது. தீயில் மின்னிய அவர்களின் முகங்களில் சூடு தெரிந்தது. தீ எம்புவதும், கீழிறங்குவதும், காற்றில் சரிவதும், கலைவதும், சீறுவதுமாக நிலையில்லாமல் இருந்து கொண்டிருந்தது.

பச்சை தலைப்பாகை கட்டியிருந்தவர் தீயின் விளிம்பில் கைகளை விரித்துக்காட்டி, பழுப்பு தலைப்பாகைக்காரரின் கன்னங்களில் வைக்கப்போக, அவர் முகத்தைத் தள்ளிக்கொண்டு காவிப்பற்கள் தெரிய சிரித்தார். புன்னகைத்தபடி திரும்பிய சந்தியா, ‘அங்கே போய் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு அமர்ந்தால் எப்படியிருக்கும்?’ என்று நினைத்துக் கொண்டாள். அம்மா வேல்பீடத்தில் அமர்ந்து காளங்கன் தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்தாள். அனைத்துமே தீ மாதிரிதானே என்று அவளுக்குத் தோன்றியது.

சந்தியா பையைத் திறந்து பணம், மருத்துவமனையின் அடையாள அட்டையை மீண்டும் சரிபார்த்தாள். தலைவலியால் குளிரிலும் அவளுக்கு வியர்க்கத் தொடங்கியிருந்தது. அவளுக்கு எங்காவது அமர்ந்தால் பரவாயில்லை என்று இருந்தது.

ஏற்கனவே வந்திருந்தவர்கள் கருங்கல் பலகை, வேல்பீடங்களில் அமர்ந்திருந்தார்கள். அருகிலிருந்த வண்டியின் கைப்பிடியை பிடித்தபடி நின்றாள். கால் மாற்றி, கால் மாற்றி சலித்து யாரையாவது தள்ளி அமரக் கேட்டு அமரலாம் என நகர்ந்த வேளையில் இருளில் பேருந்தின் ஒலி கேட்டது. முகத்தைச் சுளித்து மூக்கைத் தடவியபடி திரும்பினாள். தீயில் பாலித்தீன் ஒன்று புகைந்து கொண்டிருந்தது.

கடந்து செல்லும் குன்றுகளையும் வயல்களையும் எந்த நினைப்புமின்றி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறுநத்ததைத் தாண்டி காலிமனைகளாகவும், முள்முளைத்த காடுகளாகவும் மாறியிருந்த பெரிய ஏரியின் படுகையில் அரக்கனை துதிக்கையில் சுருட்டி எறியக் காத்திருக்கும் பிள்ளையாரைக் கண்டதும் அவளின் முகம் விரிந்தது.

ஒரு காலை முன் வைத்து பின்காலை ஊன்றி எழுந்து வெளிரிய நீலநிற இடையாடை பறக்க, தூக்கிய துதிக்கை அசுரனோடு காற்றில் நிற்க, கைகள் முன்பின்னாக வீசி நிற்கும் பிள்ளையாரின் வான் நோக்கிய முகத்தின் கண்கள் எப்படியிருக்கும், என்ற கற்பனை தெளிவாக பிள்ளையாரின் கண்களைக் காட்டாது மின்னி மறைந்தது. கிழக்கில் பச்சைமலைக் குன்றுகளில் இருந்து எழுந்த சூரியனைப் பார்த்ததும், ஆதவனும் நிலவென எழும் அழகிய மார்கழி என்று அவளுக்குத் தோன்றியது.

துறையூர் சாலைமாரியம்மன் கோவிலைத் தாண்டும்போதும் மீண்டும் தலைவலி என்று எதுவோ ஒன்று. அவளுக்கே ஐயமாக இருந்தது, நினைத்துக் கொள்ளும்போது வருகிறதா அல்லது அதிகமாகும்போது தெரிகிறதா என்று. பேருந்து நிலையத்தின் சிமெண்ட்  தரையில் ஏதோ ஒரு பேப்பர் அட்டையில் படுத்து கோணியைப் போர்த்தி சுருண்டிருந்த தாடிக்காரரைக் கண்டதும், இவருக்கெல்லாம் தலைவலி இல்லை என்று அவள் நினைத்துக் கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

திருச்சி சாலையில் பயணிக்கையில் மனதில் பதட்டம் வந்து போனது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க எவ்வளவு நேரமாகும்? அதில் என்ன முடிவுகள் தெரியும், என்று மனம் நினைத்து அலைபாய்ந்து கொண்டேயிருந்தது.

அலைபேசியை எடுத்து, ‘யூஸ் ஆஃப் எம்.ஆர்.ஐ,’ என்று எழுதிவிட்டு தேடுதலுக்கு தொடாமல் தயங்கினாள்.  “நெட்ல சர்ச் பண்ணாதீங்க,” என்று மருத்துவர் சொன்னது நினைவுக்கு வந்ததும் பின்வாங்கினாள்.

மணச்சநல்லூர் இரட்டைக் கால்வாய் மெதுவான ஓட்டத்திலிருந்தது. எங்கு பார்த்தாலும் நெல்லறைக்கும் ஆலைகள். குனிந்து பாதை ஓரத்து பாசன வாய்க்கால்களைப் பார்த்தபடி எண்ணத்தில் ஆழ்ந்தாள். குளிர் விட்டு வெயில் தெரியத் தொடங்கிய நேரத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கினார்கள்.

மாநகரப் பேருந்தில் மாரீஸ் தியேட்டர் தாண்டும்போதே கண்கள் சிக்னலைத் தேடித் தவித்தன.

“ம்மா… அடுத்த ஸ்டாப்…” என்றாள்.

சிக்னலில் இறங்குகையில் அம்மா வேகமாக, “கண்டக்டர் அங்கன்னு சொன்னான்… ஒரு விவரம் தெரியுதா என்ன?” என்று புலம்பியபடி நடந்தாள்.

முன்னால் சந்தியா தெளிவற்று அலைபாய்ந்த கண்களை மூடித் திறந்து சூரிய வெளிச்சத்தை எதிர்கொள்ளாமல், உள்ளே மனம் எச்சரிக்கை எனப் பதற சாலையை குறுக்கக் கடந்து குறுக்குச் சாலையில் நுழைந்தாள். வலது ஓரத்தில் பெயர்ப் பலகைகளையும், கட்டடங்களையும் பார்த்தபடி கடந்தாள்.

“எங்கன்னு ஒழுங்காத் தெரியுமா… இல்ல அவனுக்கு போன் பண்ணட்டுமா?”

“இந்த சந்து தாம்மா… என்ன தொந்தரவு பண்ணாம வாங்க. பயப்படாதீங்க… பாத்துப் போகலாம்.”

“அந்த தள்ளுவண்டிக்காரங்கிட்டக் கேளு”

“சும்மா வாங்கம்மா…”

ஸ்கேன் சென்டரின் முகப்புத் தெரிந்ததும் ஏதோ ஒன்று மெல்லப் பறந்து மறைந்து, வேறு ஏதோ வந்து மனதில் அமர்ந்தது. கண்ணாடிக் கதவில் கை வைக்கும்போது அதன் அசைவு கலைக்க பின்நகர்ந்தாள். சக்கர நாற்காலியில் கைகளை மடக்கி தலை சாய்த்து விழிகள் வெறுமையாய், வயோதிகத்தில் குனிந்த உடலுடன் கடந்து செல்பவரை சந்தியா பார்த்தபடியிருக்க அம்மாவின், “உள்ளப் போ…” என்ற குரல் அவளைக் கலைத்தது.

அந்நேரத்திற்கே கர்ப்பிணிகளும் வயோதிகர்களுமாக கூடம் நிறைந்திருந்தது. வரவேற்பறையில் நின்ற மூன்று பேரும் வேலையில் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.

அம்மாவை அமர வைத்துவிட்டு சந்தியா அங்கு சென்றாள்.

கொஞ்சம் அழுந்திய மூக்கும், விரிந்த இதழும் கொண்டவள், “யாருக்கு எம்.ஆர்.ஜ?” என்றாள்.

சந்தியா கையிலிருந்த மருத்துவரின் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, “எனக்குத்தான் மேடம்,” என்றாள்.

அவள் புருவத்தை உயர்த்தி, ‘என்ன?’ என்னும் பாவனையில் பார்த்து, “என்ன பிரச்சனை,”என்றபடி எழுதினாள்.

“தலைவலி”

சீட்டை நீட்டியபடி, “எனக்கும்தாங்க… தலைவலி பெரிய பிரச்சனை,”என்று முகத்தை சுருக்கினாள்.

“ம். ஆனா இது வேற மாதிரி…”

“தெரியுங்க. தனியாவா வந்தீங்க…”என்றவளிடம் அம்மாவைக் காட்டினாள்.

பணம் செலுத்தியபின் வந்து அமர்ந்தாள். தண்ணீர் குடித்தபின் சுற்றிலும் பார்த்தாள். ஒரு நாளுக்கு இங்கு மட்டும் இத்தனை மக்களா என்று தோன்ற மீண்டும் ஒருமுறை சுற்றிப் பார்த்தாள். தன் முகம் சோர்வாகவோ, வேதனையாகவோ இருக்க வேண்டும் என்று சந்தியாவுக்குத் தோன்றியது. தன்னைப் பார்க்கும் கண்களில், முகங்களில் அது தெரிகிறது என்று நினைத்த அவள் முகத்தை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள். உதடுகளை சப்பிக்கொண்டு கண்களை சிமிட்டி முன்னாலிருந்த கண்ணாடிக் கதவை நோக்கிப் புன்னகைத்தாள்.

சந்தியா பெயர் சொல்லி அழைக்கப்பட அவள் எழுந்து சென்றாள்.

“இன்னிக்கு இனிமே நீங்க ஒரு எம்.ஆர்.ஐதான். இங்கயே இருங்க… எடுத்தறலாம்,” என்றவனிடம் தலையாட்டிவிட்டு அமர்ந்தாள். திரும்பித் திரும்பிக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் அலைபசி அழைத்தது.

“இன்னும் இங்க வேல முடியாம ஹாஸ்பிடலுக்கு பேசி என்னப் பண்றது?”

“…”

“நான் சமயம் பாத்து பண்ணிக்கறேன்…” என்ற பின் நிமிர்ந்து கண்ணாடிக் கதவைப் பார்க்கத் தொடங்கினாள்.

அம்மாவின் அலைபேசி அழைத்து முடித்தது.

அம்மா, “அவன்தான் சொல்றானில்ல… போன் பண்ணி டோக்கன் போட்டா என்ன? எதுக்கெடுத்தாலும் பிடிவாதம்…” என்றாள்.

சந்தியா, “இல்லம்மா இன்னும் கொஞ்சம் நேரமாகட்டும். ஒம்பதுமணிக்கு மேலதான் கால் பண்ணனுன்னு போட்டிருக்கு…” என்றாள்.

“போன் பண்ணத் துப்பில்ல… எங்கிட்டநல்லா பேசு”

சந்தியா ஒன்றும்பேசாமல் அலைபேசியை காதில் வைத்தாள்.

“ஹலோ மேடம்… டோக்கன் போடனும்…”

“….”

“சாரி மேடம்… வலியோட பேசறவங்ககிட்ட இப்பிடித்தான் பேசுவீங்களா?”

“…..”

சந்தியா அலைபேசியை வைத்தாள்.

“பேசும்போதே அடிச்சும் பேசனும். பூனமாதிரி பேசினா?”

“சந்தியா… மிஸ். சந்தியா…” என்ற குரல் கேட்டு எழுந்தாள்.

“நீங்கதான் சந்தியாவா?”

“ஆமாம்…”

அவன் பின்னால் நின்ற இன்னொருவனிடம் கண் காட்டி வாய்க்குள் சிரித்தான். சட்டென்று அவளுக்கு எரிச்சலாக வந்தது.

“கொஞ்ச நேரம் இருங்க எடுக்கலாம்…”

“இன்னும் சாப்பிடல சார்… போயிட்டு வர்றோம்…”

“இல்லங்க… எடுத்துட்டுதான் போகனும்…”

அவள் பொறுமையிழந்து, “எம்.ஆர்.ஐ வெறும் வயித்தில எடுக்கனுன்னு அவசியமில்ல தானே சார். சாப்பிட்டுட்டு வந்திடறாம்,” என்றாள்.

“ஓ.கே,” என்றபடி நகர்ந்தான். அம்மாவுடன் இறங்கி தெருவில் நடக்கையில் சந்தியாவுக்கு மீண்டும் கண்கள் கூசியது. அந்தஇடத்தில் தெருக்கடை தவிர சாப்பிட ஒன்றுமில்லை. நடந்து அடுத்த மையப்பாதைக்கு வந்து சாலையை குறுக்காக கடக்கும்போது போக்குவரத்து முன்பைவிட அதிகமாக இருந்தது.

“எங்கனுதான் போவானுங்களோ இவ்வளவு வேகமா…” என்று பதறியபடிய அம்மா கூட வந்தாள்.

ஸ்கேன் எடுப்பதற்கு முந்தைய விளக்கங்களை அளித்தபின் அவன்  சிறுதட்டிகளால் ஆன அறையை காண்பித்துவிட்டு உள்ளே சென்றான். துப்பட்டாவை அவிழ்த்து வைக்கும்போது அவன் சிரித்தது நினைவிற்கு வந்தது. தலையை ஆட்டியபடி வெளியே வந்து ஊக்குகள் நகைகளை அம்மாவிடம் கொடுத்துவிட்டு உள்ளே போனாள்.

அவன் மறுபடியும், “எதாவது சின்னதான மெட்டல்கூட இருக்ககூடாது,”என்றபடி தன்வேலையை ஆரம்பித்தான்.

சட்டென்று உள்ளாடையின் சிறிய ஹீக் நினைவிற்கு வந்ததும், “ஒரு நிமிஷம்,” என்றபடி வெளியில் சென்றாள். மீண்டும் உள்ளே வரும்போது அவளுக்கு முகம் கடுகடுத்திருந்தது.

அவன், “இதில் ஏறிப் படுங்க. ஒரு இருபது நிமிஷம் ஆகும். அசையாம படுக்கனும். எச்சில் விழுங்கக்கூடாது. பயப்படாதீங்க… இங்கதான் இருப்போம்,” என்றபோது அவள் உடல் எந்திரத்தினுள் சென்றது.

அவளுக்கு தான் எங்கோ சந்துக்குள் மாட்டிக்கொண்டது போல இருந்தது. நெருக்கிப் பிடிக்கும் கரங்கள் போல… சுருங்கி நெருக்கும் அறை அல்லது சிறுவயதில் கல் தொட்டியில் மாட்டிக் கொண்டது போல என்ற நினைவு வந்தபோது வியர்த்தது. மெல்லிய இசை காதுக்குள் மிக மெல்லக் கேட்டது. கண்களை விரித்து மிக அருகிலிருந்த வெண்மையான பரப்பை பார்க்கத் தொடங்கியதும் பதட்டம் குறைந்தது. நேரம் பற்றிய நினைவு மறந்து அந்த இசை எங்கோ இருக்க, அவள் எங்கோ தனியாக அலைந்தாள்.

வலது காலில் தொடும் உணர்வு வந்ததும் சட்டென்று விழித்தாள்.

“தூங்கிட்டீங்களா?” என்றான். மனித முகத்தைக் கண்டதும் மூச்சை இழுத்துவிட்டாள்.

“மாத்திர போட்டதுனால…” என்றபடி இறங்கினாள்.

வெளியில் காத்திருக்கையில் மனதின் குதிரை கட்டவிழ்ந்து ஓடியது. குனிந்து அமர்ந்திருந்தாள்.

மீண்டும் அழைக்கும் குரல். உள்ளிருந்து வந்தஅவன், “ரைட் சைடுதானேங்க?”

“ம்”

உள்ளிருந்து ஒருவர் கையாட்டினார். உள்ளே சென்றதும் ஸ்கேன் ரிப்போர்ட்டை கொடுத்து, “ஜோஸ் தானே அனுப்பினார்…” என்றார். ஆமாம் என்று தலையாட்டினாள்.

அவர் சந்தியாவின் தோளில் தட்டி, “போய்ப் பாருங்க..”என்றபடி கணினி பக்கம் திரும்பினார். வெளியில் வந்தார்கள். வெளியே நல்ல வெயில். இடதுபுறம் சிறிய பெட்டி போன்ற சிமெண்ட் ஆலயத்தில் அமர்ந்திருந்த பிள்ளையாரின் கண்கள் நன்றாக தெரிந்தன. எட்டு வயது பிள்ளையின் கண்கள் என்று சந்தியா நினைத்துக் கொண்டாள்.

அவள் புன்னகைப்பதைப் பார்த்த அம்மா, “டாக்டருட்ட போகனுன்னுதான் இல்ல. உனக்கு போகப்போறன்னாலே எல்லா வலியும் சரியாப் போயிரும்…”என்று சிரித்தாள். எத்தனையோ முறை பார்த்தவை என்றாலும் இன்று புதியவை என பிள்ளையாரின் கண்களே சந்தியாவினுள் நிறைந்திருந்தன.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.