‘The Road not Taken’, by Robert Frost
தமிழாக்கம் : மந்திரம்
மஞ்சள் சிந்தும் காலை வனத்தில் இரண்டு பாதைகள் பிரிகின்றன,
ஒரு பயணத்தை இரண்டு பாதைகளிலும் நிகழ்த்த சாத்தியமில்லை,
காத்திருக்கும் பயணி போல் நின்று கொண்டே இருக்கிறேன்.
கிடையாய் நீளும் பாதையில், மரங்கள் கோடுகளாகும் தூரம்
முதல் வளைவு வரை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பாதங்களின் சுவடுகளை எதிர்நோக்கும் இந்த புல்வெளி பாதை
இயல்பாக ஒன்றை போலவே இருக்கும் மற்றொன்றானாலும்,
என் தேர்வு சிறந்தது என உணர்கிறேன்.
ஆனால் கடந்து செல்லும் வேளையில்
சிறுதடங்கள் பதிந்துள்ள இதுவும் மற்றதை போலன்றி வேறில்லை.
பாதத் தடங்களால் கசங்கியிராத பச்சை இலைகளை
இரு பாதைகளும் அணிய வைத்திருக்கின்றன காலை மரங்கள்.
தவறவிட்ட ஒன்றை இன்னொரு நாள் துவங்கலாம்.
அடுத்து அடுத்துச் செல்லும் இப்பாதை, துவங்கிய புள்ளியை
மீண்டும் அடைவதன் சாத்தியம் நோக்கி நடக்கிறேன்.
அங்கு போவதன் சாத்தியம் சந்தேகமாய் விரிய முன்னகர்கிறேன்.
நாட்களும் நேரங்களும் கடந்து சென்று ஒரு பொழுதில்
தீர்மானமில்லாத என் தேர்வை பற்றி நான் சொல்லுவேன்,
காட்டில் பிரியும் இரு பாதைகளும் நானும் சந்தித்தோம்.
தடங்கள் அதிகம் பதியாத அந்தப் பாதையில் கால் பதித்தேன்,
இவ்வாழ்வின் மாற்றங்கள் அந்தப் புள்ளி உருவாக்கியது.
(1923ஆம் ஆண்டு வரை (அவ்வாண்டு உட்பட) அமெரிக்காவில் முதற்பதிப்பு கண்ட படைப்புகளை 1.1.2019 முதல் சட்டப்படி யாரும் என்னவும் செய்யலாம் (ஆனால் விமரிசகர்களுக்கு எப்போதும் போல் அதன் கலைத்திறன் குறித்து கேள்வி கேட்கும் உரிமை உண்டு), அப்படைப்புகளுக்கான காப்புரிமை பொதுவெளிக்கு வந்து விட்டது. இதைக் கொண்டாடவே, அமெரிக்க கவிதைகளில் மிகச் சிறந்த ஒன்றான ராபர்ட் பிராஸ்டின் இக்கவிதை தமிழுக்கு வந்திருக்கிறது).