சலூன் – சங்கர் சிறுகதை

சங்கர்

எங்கள் தெருவில் புதிதாக ஆரம்பித்திருந்த பிரபல சலூனிற்கு அழைத்திருந்தேன். “சீனியர் இல்லை. ட்ரைனீதான் இருக்கிறார் உங்களுக்கு ஓக்கேவா?” என்று மறுபடி அழைத்துக் கேட்டார்கள். “இல்லை, நாளை வருகிறேன்,” என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

திரும்பினால் அம்மா. “ஏன்டா… முடிவெட்ட போகலயா?”

“இல்லம்மா… ஸ்பெசலிஸ்ட் இல்லயாம்”

“முடிவெட்றதுல என்னட ஸ்பசெலிஸ்ட்… எதுக்குத்தான் இப்படி காசக் கரியாக்குறியோ… நீ ஸ்கூல் படிக்கும்போது உனக்கு பழனி வெட்டிவிடுவான் நியாபகம் இருக்கா… அஞ்சோ பத்தோதான் வாங்குவான்.. ஆனா நல்ல ஒட்ட வெட்டிவிடுவான். இப்ப என்னடான்னா நாலு முடிய வெட்டிக்கிட்டு வந்து எழ நூறு ரூபா ஆச்சுங்கிற. மணி பத்தாகப் போகுது சீக்கிரம் வேற எங்கயாச்சும் போய் வெட்டிட்டு வாடா. ஊர்ல வேற கடையா இல்ல? வெளக்கு வைக்கிற நேரத்துல அப்றம் முடிவெட்டப்போறேன்னு கிளம்புவ…”

“நீ எப்பத்தான்மா மாறுவ?”

“என்னடா மாறனும்?”

ஒரு நொடி அமைதியாக இருந்தேன். “இப்பயும் ஸ்கூல் பையனாட்டம் ஒட்ட வெட்டிப்பாங்களா?”

“ஆமா, அப்றம் தல வலிக்குது. தலைல நீர் கோத்துருக்குன்னு யாரு சொல்றா, நானா நீயா?” அம்மா அடுத்த பத்து நிமிசத்திற்கு பேசுவார் என்று தெரியும். சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினேன்.

பழனி. அம்மா ஒவ்வொரு முறை முடிவெட்டப் போகும்போதும் சொல்வதாலோ ஏனோ அவரை இன்றுவரை நான் மறக்கவில்லை. அல்லது வேறு காரணங்களுக்காகவும் இருக்கலாம்.

“அம்மா பழனி வந்துருக்கான்மா”

“முடிய நல்லா ஒட்ட வெட்ட சொல்லு. போன வாரந்தான் வெட்டுனது. அதுக்குள்ள காடு மாதிரி வளந்து நிக்குது”

கிணத்தடியில் பையுடன் உட்கார்ந்திருந்தார் பழனி. காதுக்கு மேலே இரண்டு பக்கமும் கொஞ்சம் கருப்பு முடி இருந்தது. மற்ற இடங்களிலெல்லாம் அவர் சிரிப்பைப் போல் பளிச்சென்று இருந்தன.

“பழனி, நீ இன்னைக்கு பொடனி பக்கம் கோடு போடாத. அப்படியே விட்று. கிருதாவும் எடுக்க வேணாம்”

“அய்யோ அம்மா வையும் சாமி…” என்று சொல்லிக்கொண்டே முடியை வெட்டத் தொடங்கினார்.

ஒவ்வொரு முறை முடி வெட்டும்போதும் நான் சொல்லும்படி வெட்டுமாறு அவரிடம் கெஞ்சி, அழுது புரள்வேன். பள்ளியில் வித்தியாசமாக தெரியவேண்டும் என்பது ஆசை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அம்மா சொல்லும்படியே வெட்டுவார். ஏறக்குறைய மொட்டையடித்த மாதிரிதான் இருக்கும்.

“தீவாளிக்கு ஊருக்கு போலையா?” என்று கேட்டார்.

“போறோம்…” என்றேன் விசும்பலுடன். “பழனி… ப்ளீஸ், கிருதாவ எடுக்காத, ப்ளீஸ்.”

“அம்மா வையும் சாமீ… அழுகாம திரும்பு…” அழுகையை அடக்கமாட்டாமல் கத்தத் தொடங்கினேன். அம்மா அடுப்படியிலிருந்து வந்தார். ” அம்மா…ப்ளீஸ்மா… முடிய ஒட்ட வெட்ட வேணாம்ன்னு சொல்லும்மா. கிருதாவ எடுக்க வேணாம்மா…”

“டேய்… சளி புடிச்சுக்கிட்டே இருக்கு. எத்தன தடவ ஒரு மாசத்துல ஆஸ்பிடல் போறது,.. ஒழுங்கா ஒட்ட வெட்டிக்க,” என்று சொல்லிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் போய்விட்டார். அன்று கடவுளுக்கும், பழனிக்கும் என் அம்மாவுக்கும் இரக்கமே எல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அம்மா சொன்னபடியே வெட்டிவிட்டு இரண்டரை ரூபாயையும், நான்கு மாம்பழங்களையும் வாங்கிக்கொண்டு சென்றார் பழனி.

ஊரில் இரண்டு முடிவெட்டும் கடைகள் இருந்தன. பழனி மட்டும்தான் வீட்டிற்கு வந்து வெட்டிக்கொண்டு இருந்தார். எனக்கு கடைக்குச் சென்று முடி வெட்டிக்கொள்ள வேண்டுமென்று ஆசை. ஆனால் அதற்கு ஒன்றரை கிலோமீட்டர் நடந்து வர வேண்டும். அப்பாவிடம் சைக்கிளில் கொண்டு வந்து விடச் சொன்னால், ” எதுக்கு கடைக்குலாம் போகனும்… அதான் பழனி வர்றான்ல…” என்பார்.

அடுத்தடுத்த முறைகளும் அதே கதைதான். நான் அழுவதும் அவர், “அம்மா வையும் சாமீ,” என்பதுமாய் சென்றன. ஒரு மாதம் கழித்து வந்த அன்று எப்போதும் இருக்கும் அந்த பளிச் புன்னகை அவர் முகத்தில் இல்லை. அதே சமயம் கோபமாய் இருப்பதாயும் இல்லை.

பழனி வெட்ட ஆரம்பித்தார். எப்படியும் நான் சொல்லும்படி வெட்டப்போவதில்லை என்பதால் போன முறையிலிருந்தே அழுகையை நிறுத்தியிருந்தேன். “எப்படியோ வெட்டிவிட்டுப் போ,” என்று அமைதியாக உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் பழனியும் அமைதியாகவே அவர் வேலையைச் செய்து கொண்டிருந்தார். கிருதாவையும் எடுத்தார். எழுந்திருக்கப் போனவனிடம், “இரு சாமீ,” என்று கண்ணாடியில் பின் கழுத்தைக் காட்டினார். எப்போதும் இருக்கும் கோடு இல்லை. பின் கழுத்தில் இருக்கும் முடியை எடுக்காமல் அப்படியே விட்டிருந்தார். எங்கிருந்தோ வந்த சந்தோசம் என்னைப் போட்டு அமுக்குவது போல் உணர்ந்தேன். “தாங்ஸ் பழனி… தாங்ஸ்” என்று கத்தினேன். வந்ததிலிருந்து அமைதியாக இருந்தவர் அப்போது மெலிதாய் ஒரு சிரிப்பை சிரித்தார். பின் காதோரம், “மெயின் ரோட்டுல கடை போட்ருக்கேன். அடுத்த வாட்டில இருந்து கடைக்கு வந்துரு,” என்றார். நான் அவர் சொன்னதை சரியாய் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. எனக்கு சந்தோசம் தலைக்கு மேல் ஓடியதால் குடுகுடுவென்று ஓடி அம்மாவிடம் தண்ணீர் வைக்கச் சொன்னேன்.

ஒரு மாதம் ஓடியது. பழனி அந்த ஒரு மாதத்தில் ஒரே ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வந்தார், அப்பாவிற்கு முடி வெட்ட. தம்பிக்கு வெட்டச் சொல்லி அனுப்பியபோது வரவில்லை. எனக்கு அப்போதுதான் நினைவிற்கு வந்தது. அம்மாவிடம் பழனி கடை போட்டிருக்கும் விசயத்தைச் சொன்னேன். “கடைல போய் வெட்டனுமா?” என்று ஒரு நிமிடம் பார்த்தவர், “அதெல்லாம் வேண்டாம். நான் பாத்தன்னா இங்கயே வந்து வெட்டிவிடச் சொல்றேன். நீ போய் விளையாடு,” என்றார்.

அப்பாவின் கடைக்குச் செல்லும் வழியில் இருந்த முடிவெட்டும் கடைகளின் பக்கம் தலையை எதேச்சையாய் திருப்பினேன். குப்பென்று வேர்த்துவிட்டது. பயந்து போய் யாரும் பார்த்துவிடுவதற்குள் ஓடத் தொடங்கினேன்.

திரும்பி வரும்போது அப்பாவும் உடன் இருந்தார். அந்த முடிவெட்டும் கடை வந்தவுடன் தலையைத் திருப்பலாமா வேண்டாமா என்று ஒரே குழப்பம். பயம். ஆனாலும் பார்க்க வேண்டுமென்று ஏதோ ஒன்று உந்தியது. ஏற்கனவே கிரிக்கெட் விளையாடும்போது அந்தக் கடையைப் பற்றியும், கடைச் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்ட்டரைப் பற்றியும் இரண்டொரு முறை சண்முகம் பேசியிருக்கிறான். சேலை விலகிய நிலையில் இருக்கும் அந்த பெண்ணின் போஸ்ட்டரை நான் பார்ப்பது அதுதான் முதல் முறை என்பதால் உண்டான பயம் இன்றைக்கும் ஒரு மெல்லிய புன்னகையைத் தந்துகொண்டிருக்கிறது.

அம்மா எப்போது பழனியிடம் பேசினார் என்று தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தூங்கி எழுந்து வரும்போது கிணற்றடியில் தம்பிக்கு முடிவெட்டிக் கொண்டிருந்தார். வெட்டி முடித்தவுடன் அவன் காதிலும் ஏதோ சொன்னார். நினைத்தபடியே வீட்டிற்குள் வந்தவன், “அம்மா பழனி கடைக்கு வரச்சொல்றான்மா,” என்றான்.

அம்மாவிற்கு கோபம் வந்துவிட்டது. அவரிடம், “ஏன் பழனி பசங்ககிட்ட என்ன சொல்லற ஒவ்வொரு தடவயும்”

“இல்ல தாயி, முன்ன மாதிரி நடக்க முடியல. காலு ரொம்ப நோவுது, அதான் கடைப் பக்கம் வரச்சொன்னேன்…”

“அவரு வீட்ல இருக்கறது ஒரு நாளுதான் பழனி. அன்னைக்கும் கடைக்கு கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லலாம் முடியாது. நீ வேணா அஞ்சு ரூபா வாங்கிக்க, நானும் வீட்டுக்கு எடுத்துட்டுபோக எதுனாச்சும் தர்றேன். நீ வீட்டுக்கே வந்து வெட்டிவிட்டுப் போ,” என்றார். பழனி எதுவும் பேசவில்லை. அமைதியாகச் சென்றுவிட்டார்.

அந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு ஓரிரு முறை வீட்டிற்கு வந்தார் பழனி. ஒவ்வொரு முறையும் கடையில் கண்ணாடிகள் வாங்கியிருப்பதாயும், சுத்தும் சேர் வாங்கியிருப்பதாயும் சொல்லுவார். ஆனால் கடைக்கு வா என்று கூப்பிடவில்லை. எனக்கு அவர் கடைக்குப் போகவேண்டும் போலிருந்தது. ஒருவேளை அவர் கடைகளிலும் போஸ்டர்கள் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர் கடையை ஒரு முறை கூட நான் பார்க்கவில்லை. மெயின் ரோட்டில் இருந்த இரண்டு கடைகள் மட்டும்தான் நாங்கள் அந்த ஊரைவிட்டு வரும் வரை இருந்தன. அப்பா என்னை சைக்கிளில் கூட்டிக்கொண்டுபோய் முடிவெட்டிக் கூட்டிக்கொண்டு வரத் தொடங்கிவிட்டிருந்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.