ப்ராஸ்ட் எழுதிய கவிதைகளில் அதிக புகழ் பெற்ற கவிதை, நிச்சயம் அவரது ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்றல்ல. மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதைகளில் ஒன்றும்கூட. இத்தனைக்கும், அக்கவி பாடுபவனது பார்வையை மென்மையாக கேலி செய்யும் வகையில் முரண்நகைப் பொருளில் தான் சொன்னது, தரிசன வாக்கியம் போன்ற ஒன்றாக பிழைபொருள் கொள்ளப்படுவது குறித்து தன் எரிச்சலை அவர் வெளிப்படையாக தெரிவித்தும் இருக்கிறார். என்றபோதும் இந்தக் கவிதையை பிடிவாதமாக பிழைவாசிப்பு செய்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் அதற்காக வருத்தப்பட வேண்டாம். ப்ராஸ்டின் நண்பர், கவிஞர் எட்வர்ட் தாமஸ், இக்கவி பாடுபவனது முன்மாதிரியாய்க் கொள்ளப்படுபவர், அவரும் கூட இந்தக் கவிதையில் ப்ராஸ்ட்டின் சுயசரிதையை வாசித்தார். ஆம், பார்த் சொன்னது முழுக்க முழுக்க சரிதான்- ஆசிரியன் நாசமாய்ப் போகட்டும், பிரதி மட்டுமே நீடிக்கும்.
கவிதையின் சபிக்கப்பட்ட நோக்கங்களுக்கு வருவோமென்றால், இருவரும் காலாற நடந்து செல்லும்போது ஒவ்வொரு முறையும், கடந்து வந்த பாதைக்கு மாறாய் வேறொரு பாதையில் சென்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று பெருமூச்செறியும் தாமஸ் “போல் இருந்தால் எப்படி இருக்கும்,” என்பதன் கவித்துவ அறிதலுக்கான முயற்சியே இக்கவிதை என்று ப்ராஸ்ட் தெளிவுபடுத்தி விட்டார் என்பதைச் சொல்ல வேண்டும். அத்தனை மத்திய மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆதர்சமாக கொள்ளும் அப்பெருமூச்சு, ஒரு பகடிப்-பெருமூச்சே, ஒரு பாவனை, “வேடம் தரிப்பதன் மகிழ்ச்சிக்காக” செய்தது.
“E.T.க்காக” என்ற இன்னொரு கவிதையில் (நிச்சயம் தன்சரிதைத்தன்மை கொண்டதுதான்), கவிஞர் இரங்கற்பாவுக்குரிய மனநிலையை வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்; ஆனால் முதல் உலக யுத்தத்தில் மாண்ட அதே எட்வார்ட் தாமஸ், தன் நண்பன், குறித்த அவரது உணர்வுகள், “குறிப்பிட்ட ஒரு சாலையைத் தேர்ந்தெடுக்காததன்” பின்விளைவுகளை நேருக்கு நேர் நோக்குமளவு அவரை மெய்யென ஆட்கொள்கின்றன; ப்ராஸ்ட், “வாழ்வில் நான் தவற விட்ட வாய்ப்பு எனக்கு இல்லாது போகலாம்/ ஏதோவொரு தாமதத்தால். உன் முகத்தைக் கண்டழைக்க-/ நீ முதலில் வீரன், பின் கவிஞன், பின் இரண்டும்/ உன் இனத்தின் வீர-கவிஞனாய் இறந்தவன்”, என்று தன் துயரை வெளிப்படுத்துகிறார்.
ஆனால், இத்தகைய வாழ்க்கைச் சரித்திர தகவல்கள் இல்லாமலும்கூட தேர்ந்த வாசகன் ஒருவன், தன் உள்ளத்தை மகிழ்விக்கக்கூடிய ஒரு பாவனையை கவிஞன் தொடர்ந்து ‘மேற்கொள்வதை’ உணர முடியும். எதிர்கால வாசகர்கள் போலவே அவனும் கவிதையின் ஆதார உண்மைகள் ஒரு பொருட்டல்ல என்று பாவித்துக் கொள்கிறான் (அத்தனை சால்ஜாப்புகளையும் கடந்து அந்த உண்மைகள் கவிதைக்குள் புகுந்து விடுகின்றன). தற்போது தேர்வு செய்த சாலையின் அழைப்பு, “புற்கள் செழித்து சிதையாது இருப்பதால்” “மேலான தகுதி கொண்டது” என்று சொல்வதற்கு முன் அவன், மற்றையதும் “அதே அழகு கொண்டது” என்று சொல்லியிருக்கிறான். அடுத்து, “அதேயளவு அதுவும்” சிதையாதிருந்தது, பாதம் படாத இலைகளால் அதேயளவு மூடப்பட்டிருந்தது (“எந்தப் பாதமும் மிதித்துக் கறுத்த இலைகள் இல்லை”) என்றும் கூறுகிறான்.
தன் தேர்வு குறித்து மகிழ்ச்சியடைய அவனுக்கு புறவயப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை, இது நான் தேர்ந்தெடுத்த பாதை என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். இந்த உணர்வு கடைசி பத்திக்கு ஓர் அச்சாரமாகிறது: அங்கு அவன், எதிர்காலத்தில் சோக உணர்வுடன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் பாவனை மேற்கொள்கிறான் (கவியின் “நான்” (I) “பெருமூச்சுடன்” (sigh) யாக்கப்படுகிறது, இப்படிப்பட்ட புனைபாவனைகளைக் கொண்டு அவனது இருப்பு அத்தனையும் கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பது போல்)- தான் முதலில் எடுத்த முடிவை குறித்து துவக்கத்தில் வருந்தி (இல்லையென்றால் ஏன் பெருமூச்செறிய வேண்டும்), அதன்பின் நினைவேக்கப் பொன்னொளிக்குரிய பிரத்யேக மொழியில் உணர்வுகளை துரிதமாகவே வார்த்தெடுத்துக் கொள்கிறான்.
ஆனால் இதே பத்தியை நாம் பின்னாலிருந்தும் வாசித்து மாறுபாடு என்ற சொல்லிலிருந்து பெருமூச்சுக்கும் வரலாம் (மாறுபாடு (difference), எனவே (hence), ஏக்கம் (sigh) என்ற யாப்பில் பொருள் கொள்ளலாம்): ஆனால் இப்போது நாம் காணும் மாறுபாடு எந்தப் பாதை உயர்ந்தது என்பதல்ல, வேறொரு பாதையைத் தேர்வு செய்திருந்தால் எந்த வாதையைத் தவிர்த்திருக்கலாம் என்பதாய் மாறி விடுகிறது.
ப்ராஸ்டின் இந்தக் கவிதை அளிக்கும் வெளிச்சத்தில் விஜய் நம்பீசனின் புகழ் பெற்ற ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ (https://solvanam.blog/2014/01/02/மொழிபெயர்ப்புக்-கவிதைக-2/) கவிதையை வாசிப்பதும் ஒரு சுவையான அனுபவமாய் இருக்கும்: அங்கும் தேர்வுகளின் குழப்பம் உண்டு (எப்போதும் போல, “நீளமான தண்டவாளங்கள் தொலைவில் சென்று” மறையும்), ஆனால் அவற்றுக்கான பொறுப்பு நேர்மையாக எதிர்கொள்ளப்படுகிறது. “ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது” என்பது கவிக்கு சொல்லாமலே தெரிந்திருக்கிறது, எனவே தன் தேர்வின் விளைவுகளுக்கு அவன் பொறுப்பேற்றுக் கொள்கிறான்: “எங்கே அவனது இருப்பு வேண்டியதாயில்லை,” என்ற உண்மையின் கசப்பு மாத்திரையை விழுங்கி விட்டு, “தன் வேண்டாதவன் நிலையை வேறெங்காவது எடுத்து” செல்கிறான்.
ஆனால் ‘கர்த்தா மரணித்து விட்டான்’, பிரதியோ நமக்குரியது. நம்முன் உள்ள பிரதி இப்படிதான் இருக்கிறது என்றாலும், தேர்ந்தெடுக்கப்படாத சாலையை நாம் உந்துதல் அடையும் வகையில் வாசிக்கலாம்: நம் வாழ்வில் ஒவ்வொரு முறையும் “தார்மீகப் பாதையை” தேர்வு செய்து கொள்ளலாம், அதனால் வேறெந்த பயன் இல்லாவிட்டாலும் இந்தப் பாதையை நான் தேர்ந்தெடுத்துச் சென்றேன் என்று சமாதானப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்வது பலரும் நடந்து சென்ற பாதையில் ஒரு வாசகராய் நாம் நம் காலடித் தடத்தை இழப்பதற்குச் சமம்!
(பதாகை ஜனவரி 2019 மின்னூலில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரையின் இணைய பிரதி)
பதாகை ஜனவரி 2019: