இன்று இறப்பது அவ்வளவு விசேசம்
1
வீடுதிரும்ப நேரமானதால்
எல்லோரின் முகமும் பதற்றமாக இருந்தது
என்னை கண்டதும் ஆரத்தழுவிக்கொண்ட அப்பா
போனவருடம் நடந்த சாலைவிபத்தில்
ஏதோ நீ அடிபட்டதாகச் சொன்னார்கள்
சரி இங்கேயே இரு
எதற்கும் வெளியே சென்று
உன்னைத் தேடிவிட்டு வருகிறேன் என
பதைபதைக்கக் கிளம்பிப்போனார்
அவர் கூறுவது
உண்மையாகவும் இருக்கலாமென
நானும் தேடுவதற்கு உடன் சென்றேன்
2
வெகுநாளைக்குப் பின்பு
சாலையில் நல்ல விபத்து
சிறிய லாரிதான்
லேசாக நசுக்கியதற்கே
அனைத்தும் நொறுங்கிப்போய்
அடையாளம் தெரியாதளவு சிதைந்திருந்தது
போனவருடம் இறந்துபோன
நண்பனை ஒப்பிடும்போது
இதெல்லாம் சாதாரணம்
நினைவு நாளென்பது யாரையும் பாதிக்காமல்
இறந்துபோதலோ
என் நண்பா
பேசாமல் நீயும் இன்றே இறந்திருக்கலாம்.
-பெரு. விஷ்ணுகுமார்
(ழ என்ற பாதையில் நடப்பவன்- மணல்வீடு வெளியீடு)
•••
இன்று இறப்பது அவ்வளவு விசேசம் என்ற தலைப்பிலேயே கவிதை தொடங்கிவிடுகிறது. வாழ்க்கையை தவறவிடுவது விசேசமா? இன்று ஏன் இறக்கவேண்டும்? இப்படியாக எண்ணங்கள் விடாப்பிடியாய் தலைக்குள் குதிக்கத் தொடங்குகின்றன. தெளிவாக சொல்லப்போனால், தலைப்பை அபத்தம் என்று சுட்டலாம். வாசிப்பவனை இன்று சாக அழைக்கிறது. வாசகன் அந்த சிக்கலுக்குள் செல்லாமல் கவிதைக்குள் நுழைந்தால் அங்கு தொடர் கவிதைகள் என்று கூறத்தக்க இரண்டு நிகழ்வுகள் மொழியில் சொல்லிக்காட்டப்படுகின்றன. குடும்ப அமைப்புகளில், நிலவும் அதீத பாதுகாப்புணர்வு அது கொடுக்கிற பதற்றம். அப்பதற்றத்திலிருந்து உருவாகிற நம்பிக்கையின்மை. மீண்டும் அங்கிருந்து பிரவாகமெடுக்கிற நம்பிக்கையின்மையின் மீதான நம்பிக்கையின்மை. சற்று யோசித்துப்பார்த்தால், இன்றைய குடும்ப அமைப்புகளில் இந்த அதீத பாதுகாப்புணர்வு தேசிய கீதத்தைப் போல தினசரி இசைக்கப்படுகிறது என்றுதான் தோன்றுகிறது. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் அப்போது ஒரு இரும்பு கம்பியைப் போல நின்றே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. குடும்ப அமைப்பை உதறி சென்ற தலைமுறை இன்று கதையாகவும் நினைவின் மியுசியத்தில் வைக்கப்படும் காட்சிப் பொருளாகவும் ஆகியிருக்கின்றனர். மேற்கண்ட கவிதை இச்சிக்கலை மிக நன்றாகவே எதிர்கொள்கிறது. தன் மகன் கண்ணெதிரே இருக்கிறானென்று தெரிந்தும் “இரு எதற்கும் உன்னை தேடிவிட்டு வருகிறேன்” என பதைபதைக்க கிளம்பும் அப்பா இருக்கிறார். அவருக்கு துணையாக தன்னைத்தானே தேடிச் செல்லும் மகனும் இருக்கிறான். இந்த இரண்டு தேசங்களையும் வகுத்துச்செல்லும் எல்லைக்கோடு போல இன்றைய நவீன வாழ்வின் செறிவூட்டப்பட்ட அபத்தம் இருக்கிறது. இந்த அபத்தம் எங்கிருந்து உருவானது?
இரண்டாவது கவிதையும் ஒரு அபத்த தருணத்தை எதிர்கொள்கிறது. “நல்ல விபத்து” என்ற சொற்சேர்க்கையை அதன் மையம் என்று சொல்லலாம். எதிரெதிரான சொற்களை உருக்கி இணைத்தல். கவிதையிலிருக்கும் ஒவ்வொரு வரியையும் நான், மனிதர்கள் கால்கடுக்க நிற்கும் நீண்ட நெடிய வரிசை என்று எண்ணிக்கொள்வதுண்டு. ஒவ்வொரு சொல்லும் ஒரு நபர். வரியிலிருக்கும் சொற்களுக்குள் எந்த சண்டை சச்சரவும் இருக்கக்கூடாது. சில சொற்களை அருகருகே நிறுத்தியவுடன் அவை ஏதோ ஏழெட்டு ஜென்மமாய் இணைபிரியாத காதலர்களாக வாழ்ந்ததுபோல இணைந்தேயிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். இன்னும், சில சொற்களை அருகருகே நிறுத்தியவுடன் உங்கள் மூக்கில் ஒரு குத்து விட்டதையும் நீங்கள் உணர்ந்திருக்கலாம். போகட்டும். நல்ல*விபத்து என்ற சொல்லை பார்க்கையில் மாற்றி மாற்றி துப்பாக்கியை நெற்றியை நோக்கி நீட்டிக்கொள்ளும் நண்பர்கள் மனதில் காட்சியாக தெரிகின்றனர். இரு அகால மரணங்கள் ஒப்பிடப்படுகின்றன. மரணங்களை ஒப்பிடமுடியுமா? பீஷ்மரின் சாவும் துரியோதனனின் சாவும் ஒன்றா? இவன் அவனைவிட நன்றாக இறந்தான் என்பது எப்படி தொனிக்கிறது? அபத்தம்தான். பொதுப்புத்தியில் மனிதநேயமற்ற பார்வை என்றுகூட கூறலாம். தாஸ்தாவெஸ்கியின் நிலவறை மனிதன் சொல்வதுபோல “உலகம் எக்கேடோ கெட்டு ஒழியட்டும், நான் என்னுடைய தேநீரை பருகவேண்டும்” என்ற தனிநபர்வாதத்தின் குரல்தான். ஆனால் இக்கவிதையில் கடைசி இரண்டு வரிகளில், அபத்தத்தை பற்றிக்கொண்டவாறு வெளிச்சத்தை மீட்டுக்கொள்வது நடக்கிறது. அதுதான் இக்கவிதை உணர்த்த விழைகிற செய்தியென்று நினைக்கிறேன். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு அபத்தத்தை கைவிளக்காக பிடித்துக்கொண்டு கூட போய்விடலாம் என்பதுதான் அது. ஒருவேளை அப்படி போகும்போது வழியில் பாதாளம் ஏதும் குறட்டைவிட்டபடி தூங்கிக்கொண்டிருக்குமோ?