இறுகிய மௌனம் – விஜயகுமார் சிறுகதை

1

இரவு ஒன்பது மணி! சிக்காகோவில் சன்னமாக பனி பெய்துகொண்டிருந்தது. ஒன்பதாவது தளத்தில் உள்ள தன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தும்போது அன்று அலுவலகத்திலிருந்து வர தாமதமாகிவிட்டது என்பதை உணர்ந்தேயிருந்தான் சுந்தர். கதவைத் திறந்தாள் மனைவி கமலா. தாமதமாக வரும்போது இருக்கும் இறுகிய முகம் அன்றி இன்று மெல்லிய உற்சாக புன்னகை கொண்டிருந்தாள். அது சுந்தருக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. உள்ளே வந்து ஷூவை கழட்ட குனிந்த சுந்தரின் புட்டத்தில் அவள் செல்லமாகத் தட்டினாள். “டோய்..” என்று சட்டென நிமிர்ந்தவன் அந்த குறும்பு தீண்டலுக்கு பதில் சொல்பவனாக முத்தம் கொடுப்பவனைப்போல் முன்சாய, அவள், “ஐயோ பாப்பா..” என்று தள்ளிவிட்டாள். அவன் சிரித்தவாறே பின்வாங்கினான்.

டிவி பார்த்துக்கொண்டிருந்த குழந்தை சங்கீதாவின் உச்சந்தலையில் முகர்ந்தவாறு ஒரு முத்தம் வைத்துவிட்டு அருகிலுள்ள சோஃபாவில் அப்பாடாவென்று அமர்ந்தான்.
கமலா அருகில் வந்து தரையில் அமர்ந்தாள். முழங்கால்களை இரு கைகளாலும் கட்டிக்கொண்டு இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கவனம் தன் மீது சற்று கனமாக விழுவதை உணர்ந்த சுந்தர் “என்ன?” என்பது போல புருவங்களை மேலுயர்த்தி கீழிறக்கி கேட்டான். அவள் கண்களை மூடி தலையை ஆட்டியும் ஆட்டாமலும் ஒன்றுமில்லை என்பது போல செய்தாள். ஏதோ யோசித்தவன் சட்டென்று எழுந்து, “அப்பா எழுந்திருச்சு இருப்பாருன்னு நினைக்கிறேன்” என்று கைப்பேசியை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு சென்றான்.

“ஹலோ அப்பா எப்படி இருக்கீங்க? அந்த லாண்ட் ப்ரோக்கர பாத்தீங்களா? அந்த இடம் என்ன ஆச்சு? செட் ஆச்சா? ஒரு நாப்பத்தியஞ்சு வரைக்கும் போகலாம். அதுக்கு மேல வேணாம். ப்ரோக்கர் கமிஷன் வேற ரெண்டு பர்சன்ட்”. மறுமுனையில் ஆமோதிக்கும் வண்ணம் அப்பா ஏதோ சொன்னார். “கேட்கும் போது நாப்பத்திரெண்டுன்னு கேளுங்கள். நாப்பத்தியஞ்சு வரைக்கும் பாருங்க அதுக்கு மேலன வேண்டாம்னு சொல்லிருங்க. வேற இடம் பாத்துக்கலாம்” மற்ற சில பொது விசாரணைகளுக்கு பிறகு கைபேசியை அனைத்து விட்டு வந்தான்.

சோஃபாவில் அமர்ந்த உடன் கமலாவிடம் ஏதோ சொல்ல முற்பட்டான். ஆனால் அவள் முந்திக்கொள்ள இவன் நிறுத்திக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தான். “அருணுக்கு போஸ்டிங் பூனேயில் போட்டு இருக்காங்கன்னு சொன்னேன் இல்ல, ஜாயிண் பண்றதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கும் போல” கமலா நிறுத்திக்கொண்டு சுந்தரத்தின் மறுமொழிக்காக பார்த்தாள். அவன் எதுவும் சொல்லாமல் சரி என்பது போல தலையசைத்தான். அவனது கவனம் இன்னும் தன்னிடம் தான் இருப்பதை ஊர்ஜிதம் செய்த கமலா தொடர்ந்தாள். “இதுதான் நல்ல டைம், அப்புறம் அவன் வேலையில சேர்ந்துட்டா இந்த மாதிரி டைம் அமையாது.” என்று சொல்லிவிட்டு சிறிது இடைவேளை விட்டாள். இவள் ஏதோ ஒரு கணமான இடத்துக்கு வருவதை உணர்ந்த சுந்தர், “ம்ம் ஏன் நிறுத்துற? சொல்ல வந்ததை சொல்லு” என்று உற்சாகம் குறைந்த ஆனால் சலிப்பை காண்பிக்காத தொனியில் கேட்டான். “அதான் இந்த லீவுக்கு அவங்களை இங்க சிக்காகோவுக்கு கூட்டிட்டு வரலாமான்னு நினைக்கிறேன். நாம இந்த ஊருக்கு வந்து நாலு வருஷம் ஆச்சு. அத்தை மாமா கூட ரெண்டு வாட்டி வந்துட்டு போயிட்டாங்க. அப்பா அம்மா அருணையும் ஒருவாட்டி இங்க கூட்டிட்டு வந்து ஊர காட்டிட்டா ஒரு கடமை முடிஞ்ச மாதிரி இருக்கும்.” இதை சற்றும் எதிர்பாராத சுந்தர் ஒரு கணத்த ஏமாற்ற புன்னகை செய்தான். “என்ன சொல்றீங்க” என்று கமலா இவனது மறுமொழியை வினவினாள். தன் ஆரம்ப அதிருப்தியை ஒரு பெருமூச்சுவிட்டு காண்பித்தான் அதைத் தொடர்ந்து “ஏம்மா எனக்கு ப்ராஜெக்ட் டெலிவரி டைம் ப்ரோமோஷன் டைம் போதாதற்கு ஊர்ல ஒரு இடம் வாங்குறதுக்கு பணத்தைப் புரட்டிக்கிட்டும் லாண்டு ப்ரோக்கர் கிட்ட பேசிக்கிட்டும் இருக்கோம். இப்போ போய் அவங்க மூணு பேரையும் எப்படி கூட்டிட்டு வந்து பாத்துகிறது?….”

சுந்தர் முடிக்கும் முன்னரே தான் ஏற்கனவே இசைந்து வைத்திருந்த சொற்களை அதன் தாளகதியோடு அவ்விடத்தை நிரப்ப ஆரம்பித்தாள், “எனக்கு தெரியும் நீங்க இப்படித்தான் ஏதாவது சொல்லுவீங்கன்னு. எனக்கும் அப்பா அம்மாவை பார்க்கணும்னு இருக்காதா? இந்த ஊர்ல இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போறோம்? நான் ஒன்னும் கேக்கல. அப்பா தான் கேட்டார். அவரும் ரிடயர் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு. இதுவரைக்கும் என்கிட்ட எதுவும் கேட்டதில்லை அவரு. எல்லா நாளும் இந்த நாலு செவத்த பாத்துகிட்டுதான் இருக்கணும்னு எனக்கு தலையெழுத்து.” என்று குரலை உயர்த்தி தாழ்த்தி, தான் இன்னும் முடிக்கவில்லை என்பதுபோல் நிறுத்தினாள். அவள் முகம் சிறுத்து அழும் ஆரம்ப சமிக்ஞைகளை ஏந்தி இருந்தது. கண்களில் ஈரப்பதம் துளிர்த்திருந்தது.

மீண்டும் ஒரு சண்டையா என்பதுபோல் குழந்தை சங்கீதா பயந்து திரும்பி பார்க்க, அதை உணர்ந்த சுந்தர் அந்த அசௌகரிய சூழலுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதற்காகவும், சொத்து வாங்கும் சமயம்; பணி உயர்வுக்கான சமயம் என்பதற்காகவும் மீண்டும் மனைவியுடன் ஒரு பணிப்போருக்கான தின்மம் தன்னிடம் இல்லை என்பதற்காகவும் “சரி சரி” என்றான். “சரின்னா?”. “சரின்னா!! கூட்டிட்டு வரலாம்ன்னு அர்த்தம். சின்ன குழந்தை மாதிரி அழுது கிட்டு! அழுமூஞ்சி!..” கொஞ்சுவது போல் சைகை காட்டி அவளது ஆத்திர அலைகளை அடக்கினான். அவள் திருப்தியான பிரகாசத்தை முகத்தில் படிப்படியாக ஒளிரவிட்டு “காபி சாப்பிடுறீங்களா?” என்று சமையலறைக்கு சென்றாள். சுந்தர் இறுகின சிந்தனை மௌனத்தில் ஆழ்ந்தான். எல்லாம் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையை வலிந்து வரவைத்துக்கொண்டான். இரவு தூக்கம் வராமல் அப்பா, லாண்ட் ப்ரோக்கர், காலிமனை, அதன் தோராய விலை என்று மனம் அலைபாய்தது. அவற்றையெல்லாம் “விமான டிக்கெட் விலை” என்ற எண்ணம் ஆக்கிரமித்து இறுகிய கனத்த ஒற்றை எண்ணமாக உருக்கொண்டது. எப்போது தூங்கிப்போனான் என்று தெரியவில்லை.

2

“ஏன் உம்முன்னு இருக்கியா? நல்லா கேட்ட போ மச்சி. எதைச் சொல்ல ஒண்ணா ரெண்டா. கம்முனு காப்பியக்குடி. அப்செட் எல்லாம் ஒன்னும் இல்லடா. புலம்பி மட்டும் என்ன வரப் போகுது. சொல்றேன் சொல்றேன். ப்ராஜக்ட் பிரச்சனை பிரமோஷன் பிரச்சனை ஊர்ல இடம் வாங்கணும் பணம் பொரட்டமும் இதெல்லாம் பத்தாதுன்னு என் மாமனார் வேற. என்ன! மாமனார் என்ன பண்ணாரா? என்ன பண்ணினார்ன்னா என்ன பண்ணினார்ன்னு சொல்றது! ஒன்னும் இல்லை. அப்புறம் என்ன வா. அவரு ரிடயர் ஆகிட்டார் அதற்காக என் உசுர வாங்குறதா. அமெரிக்கா பாக்கணுமாம்மா. அதனால மாமியார் குடும்பத்தையே நான் இங்க கூட்டிட்டு வரணும் இப்போ. இப்போ வேண்டாம்ன்னு நான் என் வைஃப் கிட்ட எவ்வளவோ சொன்னேன். கேட்க மாட்டேங்கிறா, நேத்து ஒரே சண்டை ஒரே அழுகை. ஒரே பிடியா நின்னுட்டா. இப்போ டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா. அவங்க ஒரு மாசம் தங்கினாங்கன்னா இங்க அங்கன்னு கூட்டிட்டு போகணும், செலவு பிச்சுக்கும். லாண்ட் வாங்கின மாதிரிதான் போ. ஏற்கனவே எனக்கும் அவருக்கும் ராசி பொருந்தாது. கல்யாணத்திலேயே முட்டிகிட்டோம். நம்ம என்ன மாமனார் கிட்ட அது வேணும் இது வேணும்ன்னா கேட்கிறோம். குறைந்தபட்சம் செலவு வைக்காமயாவது இருக்கணும் இல்ல. எல்லாம் தலையெழுத்து தான் மச்சி. எங்க அப்பாதான் தனியா இப்போ லாண்ட் ப்ரோக்கர் வச்சு தேடிக்கிட்டு இருக்கார். இப்ப போய் இத அவர்கிட்ட சொல்ல முடியுமா நான். மாமனாருக்கு நான் சொத்து வாங்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்னு நல்லா தெரியும் ஒரு வார்த்தை கூட என்னன்னு கேக்கல. என்னத்த சரி விடு சரி விடுன்னு சொல்லிட்டே இருக்க. அடச்சீ! நான் ஒன்னும் எதிர்பார்க்கல சும்மா சொல்றேன்… அப்படியா சொல்ற?.., அதாவது நம்ம அவங்களை இங்க கூட்டிட்டு வந்து குஷி படுத்துனா அவங்க நம்ம லேண்ட் வாங்குறப்ப உதவி செய்வாங்கன்னு சொல்ற. கேட்க நல்லாத்தான் இருக்கு ஆனா நம்ம அப்படியெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. அப்படிங்கிற?.. சரி விடு செஞ்சுதான் பார்ப்போம்…”

3

“என்னடா லேண்ட் ஓனர் சுந்தர். சரி சரி முறைக்காத. உன் மாமனார் மாமியார் வந்தா இப்ப இருக்கிற கார் பத்தாதுன்னு உன் வைஃப் சொன்னாங்களாமே? அதுவும் கரெக்ட் தானே அந்த சின்ன கார வச்சுக்கிட்டா அவங்களை எங்கேன்னு தான் கூட்டிட்டு போவ? எனக்கு யார் சொன்னாங்களா? என் வைஃப் தான். நீயும் இந்த ஓட்டக்கார வச்சுக்கிட்டு எத்தனை நாளைக்கு தான் சமாளிப்பே. நான் கார் வாங்கின இடத்தில நல்ல ஆபர். நான் எத்தனை நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன் உன்கிட்ட. போய் பார்த்துட்டு வருவோம். இ.எம்.ஐ தாண்டா கட்ட போறா… சரி அது இருக்கட்டும்.. நீ இருக்கறதே ஒரு சிங்கிள் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் அவங்க வந்தா பத்தாதே? பேசாம ஒரு டபுள் பெட்ரூம் அபார்ட்மென்ட்க்கு மாரிரு. என்னை ஏன்டா திட்டுற? நான் உள்ளது தான் சொல்றேன். சரி சரி விடு! வாழ்க்கைன்னா சில பல செலவுகள் வரத்தான் செய்யும். மொத்தமா மாமனார்கிட்ட இருந்து பின்னால வசூல் பண்ணிக்குவியாம். உன்ன பாத்தா எனக்கு சிரிப்புதான் வருது லேண்ட் ஓனர்.”

4

அன்று வாரத்தின் முதல் நாள். அலுவலகத்தில் அதிக வேலை இருக்கும் நாள். சுந்தர் விடுப்பு எடுத்திருந்தான். ஏழு இருக்கைகள் கொண்ட புது காரில் சுந்தரும் கமலாவும் சிகாகோ விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். காலையிலிருந்தே கமலா ஆகாயத்தில் இருந்தாள். சுந்தரம் அந்தரத்தில் இருந்தான். அவளது சந்தோசப் பிரகாசத்தை உள்வாங்கி மீண்டும் நடித்துக் காட்டிக்கொண்டிருந்தான். குடிவரவு சோதனைகள் முடிந்து முதலில் தலை காட்டியது கமலாவின் தம்பி அருண். கையசைத்துக் கொண்டே வந்தான். அவனுக்கு சற்று பின் அத்தை. அத்தைக்கு பின் மிலிட்டரி ஆபீஸர் கணக்கில் ஒரு ரிட்டயர்ட் கணக்கு வாத்தியார்.

“மாமா..” என்று கத்திக்கொண்டு வந்த அருணிடம் “டேய்! அருண்” என்றுவிட்டு பாசமான புன்னகையுடன் “மாப்பிள்ளை..” என்ற அத்தையிடம் “அத்தை..” என்று அதே புன்னகையை பிரதி செய்துவிட்டு திரும்பினால் கணக்கு வாத்தியார். தலையாட்டுகிறாரா புன்னகைக்கிறாரா என்று ஊகிக்க முடியாமல் கனமாக ஒரு வினாடி கழிந்த பின்னர் “வாங்க மாமா..” என்றான். இம்முறை கண்டிப்பாக புன்னகை செய்தார் என்பதை உணர்ந்தவுடன் சுந்தருக்கு மிக மெல்லிய வெற்றி உணர்ச்சி ஏற்பட்டது. அவ்வுணர்ச்சி அரை வினாடிக்கும் குறைவாக உயிர்வாழ்ந்து மறைந்தது. மீண்டும் அவனுள் இறுக்கம் சூழ்ந்தது. ஒருகூட்டு பறவைகள் என அவர்களுக்குள் மொய்க்க ஆரம்பிக்கும்போது பெட்டியை எடுப்பது போல் கொஞ்சம் தள்ளி வந்து நின்றான். லேசாக மூச்சு கனத்தது. வீட்டுப் பாடத்தை முடிக்காதவனைப் போல் உணர்ந்தான்.

வீடு வரையிலான பயணத்தில் கணக்கு வாத்தியார் முன் சீட்டில் அமர்ந்து வெளியே பராக்கு பார்த்துக் கொண்டு மௌனமாக வந்தார். மற்றவர்கள் பின்சீட்டில் ஏதோ ஏதோ பேசிக்கொண்டு வந்தார்கள் ஆனால் சுந்தரின் காதுகளுக்கு எதுவும் விழவில்லை. சுந்தர் மாமனாரின் மௌனத்தின் மீது ஒரு கவனமும் ரோட்டின் மீது ஒரு கவனமும் வைத்து வீடு வந்து சேர்ந்தான். “அவருக்கு பயண களைப்பாக இருக்கும். ரிட்டயர் தான் ஆகிட்டாரு இல்ல அப்புறம் அந்த வாத்தியார் கிரீடத்தைதான் கொஞ்சம் இறக்கி வைக்கிறது. நம்மளுக்கு என்ன வந்துச்சு, இவங்க இருக்க வரைக்கும் ஒழுங்காக கவனிச்சு அனுப்ப வேண்டியதுதான்.”

காரை விட்டு இறங்கிய உடன் காரை சுற்றி வந்து முன்னும் பின்னும் ஒரு நோட்டம் விட்டார்.”டொயோட்டா வா எவ்வளவு ஆச்சு?” “பேங்க் லோன் தானுங்க. முப்பத்தியஞ்சாயிரம் ஆயிரம் டாலர் ஆச்சுங்க” “ம்ம்..” என்பதுபோல தலையசைத்துவிட்டு முன்நகர்ந்தார். அவர்களை முதலில் லிப்டில் அனுப்பி விட்டு கொஞ்சம் தாமதித்து பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தான். அந்த டபுள் பெட்ரூம் அப்பார்ட்மெண்டிற்குள் சுந்தர் நுழைந்த உடனே அவனுக்கு ஒரு அந்நிய உணர்வு ஏற்பட்டது. எடுபுடி ஆள் போல் தோன்றினான். எல்லா அறைகளிலும் அவர்களே நிரம்பி இருப்பது போல் தோன்றியது. தன் வீட்டிற்குள் தனக்கான மூளை எது என்பது தெரியாததுபோல் சற்று குழம்பினான். அவனது குழந்தை மட்டும் தான் பழையது போல் தோன்றியது. கமலா முற்றிலும் வேறு ஒரு ஆளாக மாறியிருந்தாள். எப்படியோ கமலா சந்தோஷமாக இருந்தால் சரி. அவளது கவன வளையத்திற்குள் இனி ஒரு மாதம் தாம் இருக்கமாட்டோம் என்று தோன்றியது.

நள்ளிரவு வரை அன்று விட்டுப்போன அலுவலக பணிகளை முடித்துவிட்டு மடிக்கணினியை மூடி வைக்கும் போது கமலா அருகில் வந்தாள்.
“எல்லாரும் தூங்கிட்டாங்களா?”
“ஓ எஸ்”
“அப்புறம் கணக்கு என்ன சொல்லுது” என்று கிண்டல் தொனியில் கேட்டான்.
“ம்ம்.. ஆளப் பாரு” என்று கண்களையும் புருவங்களையும் குறுக்கி கோபம் செய்வது போல் முக ஜாடை காட்டினாள். சுந்தர் அதே ஜாடையை இன்னும் கொஞ்சம் அதிகமாக செய்து காட்டி புன்னகை செய்தான். அவள் சிரிக்க இவனும் சேர்ந்து கொண்டான்.
“என்கிட்ட மட்டும் இப்படி வாய் அடிக்கிறீங்க. எங்க அப்பாவோட கொஞ்சம் சகஜமா பேசினாதான் என்ன?”
அதற்கு சுந்தர், “இப்படி எல்லாம் பேசினா வாத்திக்கு கோபம் வந்து என்ன முட்டி போட வைச்சு பிரம்பு எடுத்து விளாசிட்டாருனா?”
“ஆமா..” என்று சலித்துக்கொண்டாள்.
இருவரும் சப்தம் இல்லாமல் அமைதியாக பேசிக் கொண்டது ஏனோ சுந்தருக்கு அந்நியமாக இருந்தது.

5

எல்லோரும் எழும் முன்னரே சுந்தர் கிளம்பி இருப்பதை பார்த்து கமலா எழுந்து வந்தாள். “நேரமே கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.
“ம்ம்” என்றுவிட்டு தொடர்ந்தான். “இங்க பாரு நான் ஒன்னு சொல்லணும், காரை இங்க விட்டுட்டுதான் ஆபீஸ் போறேன், ஃப்ரெண்டோட. மாமாவோ அருணோ காரை ஓட்டிப் பாக்குறேன்னு கேட்டா கொடுக்காத. இங்க லைசென்ஸ் இல்லாம ஓட்டக்கூடாது. வந்த இடத்தில பிரச்சனை வேண்டாம். இத நான் சொல்ல முடியாது நீ தான் சொல்லணும். அப்புறம் அவங்க வெளில எங்கயாவது போக வேணும்னாலும் நீ தனியா அனுப்பாத. நான் ஆபீசில் இருந்து சீக்கிரம் வந்திடுறேன்.”
அவள் பதில் ஏதும் பேசாமல் நிற்க, பதில் வேண்டாம் என்பவன் போல “போயிட்டு வர்றேன்” என்று கையசைத்து விட்டு வேகமாக வெளியேறினான்.

அலுவலகம் வந்ததிலிருந்து நேற்றைய இறுக்கம் தளர்ந்திருந்தது. அவர்களை மறந்து வேலையில் மூழ்கியிருந்தான். நண்பன் மணி வந்து வீட்டுக்கு போலாமா டா என்று கேட்கும் போது தான் மனதில் உரைத்தது, “காலையில அவ கிட்ட அப்படி சொல்லியிருக்கக் கூடாது, கிறுக்குத்தனம் பண்ணிட்டேன். சரி எப்படியும் ரெடியா இருப்பாங்க எல்லாரையும் வெளியில சாப்பிட கூட்டிட்டு போக வேண்டியதுதான்.” வீட்டுக்குப் போகப் போகிறோம் என்று நினைத்த உடன் மீண்டும் இறுக்கம் கூடி மனதிற்குள் ஏதோ ஒன்று தட்டுப்படாமல் தத்தளித்தது.

வீடு வந்து சேர்ந்தவுடன் கவனித்தான். எல்லாம் உற்சாககதியில் நிகழ்ந்து கொண்டிருந்தது. நண்பனிடம் இரவல் வாங்கி வந்த ப்ளே ஸ்டேஷனில் மூழ்கியிருந்தான் அருண். அம்மாவும் மகளும் சமையலறையை பிரித்து மேய்ந்து கொண்டு இருந்தார்கள். கணக்கு வாத்தி தனக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.

கமலா அருகில் வந்தாள். “வெளியே சாப்பிட போலாமா?” என்ற சுந்தரின் கேள்விக்கு “நாங்க பூரி சுடுறோம் நாளைக்கு போலாம்” என்றாள்.
“மாமாவுக்கு சரக்கு வாங்கி வச்சிருக்கேன், அவரோட ரூம் டிவி டேபிளுக்கு கீழே இருக்கு.”
“அதெல்லாம் மத்தியானமே ஆரம்பிச்சுட்டாரு!”
சுந்தர் ஒரு திருப்தியான புன்னகை செய்துவிட்டு “சரி, இந்த வாரம் எல்லாரும் நயாகரா போலாம். நான் ஹோட்டல் புக் பண்றேன்.” என்று புருவங்களை ஏற்றி இறக்கி சொன்னான்.
“அப்போ இந்த வாரம் லீவு போட போறீங்களா?” என்று குழந்தை சங்கீதாவின் உற்சாக பாவனையை பிரதி செய்தாள். அப்பாவனை முன் இவன் பிடி என்றும் பலவீனமானதுதான். காலையில் இவன் விட்டுச்சென்ற இறுக்கம் காணாமல் போயிருந்தது. இவளைப் பற்றி எல்லாம் ஒன்றும் கவலை இல்லை அவரை நினைத்தால் தான். சரியாக கவனித்து அனுப்பிவிட வேண்டும் இல்லையென்றால் அதுவே ஒரு பேராக மாறிவிடும். அலுவலகத்தில் விடுப்பு சொல்வது என்பது ஒரு பூதாகரமான வேலை என்பது இவர்களுக்கு தெரியவா போகிறது.

ஏதோ மறந்தவள் போல, “ஏங்க மாமா போன் பண்ணாரு” அவள் மீதியை தொடர்வதற்குள் அருண் அருகில் வந்து நின்றான் “அக்கா நயாகரா போறுமா?” சுந்தரை அந்தரத்தில் விட்டுவிட்டு அவர்கள் இருவரும் குதூகல சம்பாஷணைக்குள் சென்றார்கள். பொறுமை இழந்த சுந்தர் “ரெண்டு பேரும் அப்புறம் கொஞ்சிக்குவீங்களாம், அப்பா என்ன சொன்னாரு? அவரு பார்க்கப் போன இடத்தை பத்தி சொன்னாரா?” குழந்தை பாவனையில் இருந்து மனைவி பாவனைக்கு இறங்கிய கமலா, தன் குதூகலத்தை சட்டென்று தொலைத்தவளாக, “முதல்ல நல்ல போன் ஒன்னு வாங்குங்க அப்புறம் இடம் வாங்கலாம். யாராவது அவசரத்துக்கு உங்ககிட்ட பேச முடியுத? கஞ்சதனத்திற்கும் ஒரு அளவு இருக்கு”. “சரிமா கோவப்படாத! அப்பா என்ன சொன்னாரு சொல்லு” அதற்குள் கணக்கு வாத்தியார் கமலா என்று உள்ளிருந்து அழைத்தார்.

என்னங்க அப்பா என்று உள்ளே ஓடியவளை சுந்தரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் வரும் வரை பல்லைக் கடித்துக்கொண்டு நின்றிருந்தான். இடம் அமைந்ததா அமையவில்லையா என்று மனம் கிடந்து தவித்தது. ஒரு ஐந்து நிமிடம் கழித்து வந்து எங்கே விட்டேன் என்று ஆரம்பித்தாள். ” ம்ம் அந்த இடம் ரொம்ப அதிகமா வெலை சொல்லுவான் போல. இறங்கியே வரலையாம். மாமா உங்கள கூப்பிட சொன்னாரு. ஏதோ அறுவதோ அறுவதியஞ்சோ சொல்லிட்டு இருந்தாரு.”

அன்று இரவே வீட்டின் அலை ஓய்ந்தபின்னர் தனிமையில் வந்து அப்பாவுக்கு போன் செய்தான். அனைத்து லட்சங்களும் பொருந்திவந்த அந்த இடத்தை விடக்கூடாது என்று அவரும், தன்னால் அவ்வளவு பணம் புரட்ட இயலாது என்று இவனும் சண்டையிட்டுக்கொண்டனர். ” நான் இருக்கும்போதே உனக்கு ஒரு நல்லது நடக்கணும்ன்னு பாக்குறேன்”. என்று அவர் அங்கலாய்ப்பும் வருத்தமுமாக முடித்துக்கொண்டபோது அது கனத்த சோகமாய் சுந்தரின் நெஞ்சில் இறங்கியது.

“ஒவ்வொன்றாய் செய்வோம். முதலில் நயாகராவை முடித்துக்கொண்டு பிறகு முழுமூச்சாய் இதில் கவனம் செலுத்துவோம்.” எனினும் மனம் சமம் ஆகவில்லை.

5

“என்னடா! நயாகரா எப்படி இருந்துச்சு” என்று வந்த மணியிடம் ஒரு சுயபரிதாப புன்னகை செய்தவாறு தலையை முன்னும் பின்னுமாக ஆட்டிவிட்டு அமைதியானான்.
அதை சற்று புரிந்துகொண்ட மணி “சரி வா ஒரு டீ அடிக்கலாம்” என்று கூட்டிசென்றான்.

சிறிது நேரம் அமைதியாய் இருந்தான். அந்த அமைதியே அவனை தூண்டியதால் ஒருமூச்சு அனாயச சிரிப்புடன் ஆரம்பித்தான். “எல்லாத்துக்கும் நல்லவனா மட்டும் இருக்கக்கூடாது மச்சி. அப்படி இருக்கணும்னா நம்மளுக்கு சொந்த ஆசை இருக்கக்கூடாது. என்ன கேட்டா? நயாகரா எப்படி இருந்துச்சுன்னா? அதை ஏண்டா மச்சி கேக்குற. நான் வெறும் டிரைவர் மட்டும் தானே. ஆறுநூறு மைல் டிரைவ், காலையில அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பலாம்ன்னு சொன்னேன். நான் மட்டும்தான் கிளம்பினேன். அவங்க எல்லாரும் காருக்கு வர ஏழு மணி ஆயிடுச்சு. அருண் தான் முன்னாடி உட்கார்வான்னு மனசுல செட் ஆயிருந்துச்சு. வந்து பாத்தா கணக்கு வாத்தியார். பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லை. ஒரு மணி நேரத்துக்குள்ள அஞ்சு ஸ்டாப். பாத்ரூமில் காபி பிரேக்பாஸ்ட். நடுவுல ரெண்டு மூணு இடம் போய் பார்த்துட்டு நயாகரா போக நைட் ஆயிடுச்சு. அப்புறம் அங்கேயே ஒரு ரூம் போட்டு மாமனாருக்கு சரக்கு மாமியாருக்கு ஸ்நாக்ஸ் அருணுக்கு என்டர்டைன்மென்ட்டு இப்படி பல சர்வீஸ் பார்க்க வேண்டியதாயிடுச்சு. அப்புறம் நயாகரா காமிச்சி எல்லாரையும் வீடு கொண்டுவந்து சேக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. கமலா அருண் ஹாப்பி. ஆனால் மாமனார் வாயே தொரக்கல. எப்படியோ ஒரு பெரிய டாஸ்கை முடிச்ச ஃபீலிங். அப்பா எங்க ஊர்ல இடம் வாங்குறதுக்கு நாய் படாத பாடு படுறாரு. ஆனா நான் இங்கே இவங்களையெல்லாம் கூட்டிக்கிட்டு ஊர் சுத்திக்கிட்டு இருக்கேன். இவங்களையும் சொல்லி குத்தமில்ல. அப்பாவுக்கு போன் பண்ண சரியா பேசக்கூட மாட்டேங்குறாரு. அந்த இடம் தட்டிப் போனதில அவருக்கு பெரிய வருத்தம். அதற்கு நான் என்ன பண்ணுறது. அவர் ரிஸ்க் எடுக்கிற காலத்துல எடுக்காம என் காலத்துல ஆகணும்னு நினைச்ச முடியுமா? அவரை சொல்லியும் குத்தம் இல்லை. இப்ப கூட அருண் போன் பண்ணினான். இந்தவாட்டி மாமாவுக்கு பிளெண்டட் ஸ்காட்ச் வாங்க வேண்டாமாம். சிங்கிள் மால்ட் ட்ரை பண்ணணுமாம். நாலு நாளைக்கு ஒருவாட்டி ஒரு லிட்டர் பாட்டில் காலி பண்றாரு. சரி விடு என்ஜாய் பண்ணிட்டு போறாரு. அருணுக்கு பர்த்டே வருது. சரி நம்ம மாப்பிள்ளை தானே சர்ப்ரைஸா இருக்கட்டும்னு ஐ-போன் ஆர்டர் பண்ணி இருக்கேன். என் கையும் சும்மா இருக்க மாட்டேங்குது. கிரெடிட் கார்ட் வேற கமலா கிட்ட இருக்கா, அவ ஷாப்பிங் அது இதுன்னு தேச்சு தள்ளுரா. அடுத்தவாரம் இவங்கள வேற எங்கேயாவது கூட்டிட்டு போகணும். நம்மளுக்கு ப்ராஜெக்ட் வேலை வேற கம்மியா இருந்தா பரவால்ல. என் மேனேஜர் ஏற்கனவே உசுர வாங்குறான். சரி விடு டா மச்சி இத பத்தி சொன்னா சொல்லிக்கிட்டே இருக்கணும். ” இப்படியாக புலம்பியதில் சுந்தர் கொஞ்சம் ஆறுதல் அடைந்தான்.

6

அடுத்து வந்த நாட்களில் அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வர முயற்சி செய்தான். அதில் சில நாட்களுக்கு வெற்றியும் பெற்றான். அப்படி வந்த நாட்களில் வீட்டாரை அருகில் உள்ள கோயில் பூங்கா நல்ல உணவு விடுதிகள் என்று கூட்டியும் சென்றான். அலுவலக வேலை, அப்பாவுடனான பரஸ்பர உறவு, வந்தவர்களை கவனித்தல் என்று ஒன்று மாற்றி ஒன்று அவனை உருக்க, கொஞ்சம் உடல் இளைத்தது போலவும் காணப்பட்டான். ஆனால் கமலாவின் பூரிப்பு இவனுக்கு ஆறுதல் தந்தது. மனதின் சோர்வு மௌனம் உடலை ஆக்கிரமித்து இருந்தாலும் அவனது கண்களின் ஒளியை அது பாதிக்கவில்லை. அது வந்தவர்களை கவனித்தல் என்ற காரியம் மட்டும் சரியாக நடப்பதன் விளைவு. இந்த சிறு திருப்தி மட்டும் இரவுகளில் சுந்தரை தூங்க செய்தது.

இரவு  உணவுக்காக அன்று குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தனர். சென்ற ஹோட்டல் மது விநியோகிக்கும்விதமாக இருந்தது .  அது அவருக்கு வசதியாக இருந்தது. அன்று கொஞ்சம் தாராளமாகவே இருந்தார். உணவு மேஜையில் அவரைவிட்டு தனக்கு தேவையான இடைவேளை விட்டு தூரமாகத் தான் அமர்ந்து இருந்தான். ஏற்கனவே இருக்கும் சூக்ஷ்ம திரைக்கு வலுசேர்க்கும் விதமாக குடும்பத்தாரை அவருக்கும் தனக்குமான இடையில் அமர்த்தியிருந்தான். மற்ற மூவரும் சிரித்து பேசி மகிழ்வாக இருக்க இவர்கள் இருவர் மட்டும் அமைதியாக அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அது வழமைதான் என்பதினால் அந்த குடும்ப மேஜை சரியான கதியில் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் சிங்கிள் மால்ட் விஸ்கியின் மகிமையோ என்னவோ எந்நாளும் வராத முகூர்த்தம் ஒன்று கூடி வந்தது

“ஏம்ப்பா சுந்தர்” என்று மாமனார் ஆரம்பிக்க சட்டென்று மேஜை அமைதியானது. சுந்தர் பக்கென்று கமலாவை ஒரு பார்வை “என்ன இது” என்பதுபோல் பார்த்துவிட்டு மாமாவைப் பார்த்தான். அவர் நேராக இவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த அமைதி அசௌகரியமாக மற்ற மூவர் மேல் இறங்க, நிலமையை உணர்ந்து கமலா “என்னப்பா” என்று பதிலளித்தாள்.

“ஆபீஸ்ல வேலையெல்லாம் எப்படி? எட்டு மணி நேரம்தான?”
“ஆமாங்க” சுந்தர் குரல் கம்மியது.
“ஆனா டெய்லி நீ லேட்டா வர்ற, அதான் கேட்டேன்”
சுந்தருக்கு இது எங்கு செல்கிறது என்று சற்று புரிந்தது.
“அது  சொல்ல முடியாதுங்க. ப்ராஜெக்ட் டெலிவரி பொருத்தது.” சொல்லிவிட்டு தன் தட்டை பார்த்து  குனிய அவர் மீண்டும் ஆரம்பித்தார்.
“இந்திய வந்தாலும் இதே வேலை தானா? பிரமோஷன் எல்லாம் எப்படி?”
சுந்தர் பதிலை திரட்டுவதற்குள்,  கமலா அவர் சட்டையை பிடித்து இழுக்க.  அவர்,” இருமா மாப்பிள்ளை கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும் இல்ல”  என்று சொல்லிவிட்டு சுந்தரை பார்த்தார்.
சுந்தர் அலுவலக மன அலைவரிசைக்கு தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு  பதிலளிக்க ஆரம்பித்தான். சுந்தருக்கும் அவருக்கும் இடையில் இருந்த அந்த மாயத்திரை சிறிது விலகி வந்தது. அவர் முதலில் அலுவலகப் பணியைப் பற்றி விசாரிப்புகளில் ஆரம்பித்து அமெரிக்க நிலப்பரப்பு சீதோஷன நிலை என்று முன்னேறினார். ஆரம்பத்தில் பதில்களாக மட்டும் இருந்த சுந்தர் சிறிது நேரம் கழித்து  கேள்விகளாகவும் மாறினான். அது உரையாடலாக பரிணாமம் பெற்று அரசியல் சமூகம் என்று உச்ச கதியில் நிகழ்ந்து மேலைநாட்டு உறவுச் சிக்கல்கள் என்று இறங்கி இனிதே தரை தட்டியது. நடுவில் ஓரிருமுறை மாமா என்றுகூட கூப்பிட்டிருப்பான். அத்தையும் அருணும் அந்த அதிசய நிகழ்வை பார்வையாளர்களாக ரசித்து உள்வாங்கிக் கொண்டிருந்தனர். கமலா மட்டும் ஒரு நெறியாளர் போல இடையிடையே குறுக்கிட்டு தன் அப்பாவின் மீறல்களை யாருக்கும் தெரியாமல் தொடையில் தட்டியும் சட்டையை பிடித்து இழுத்துவிட்டும்; தன் கணவனின் அசௌகரியமான  அமைதியினை நிரப்பியும் நிகழ்வினை ஒருங்கிணைத்து முடித்தாள். கடைசியாக விஸ்கியின் மிதப்பு அவர் முகத்தில் நன்கு தெரிந்தது. யாரும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் சுந்தருக்கு அன்று இனம்புரியாத ஒரு அங்கீகார மகிழ்ச்சி இருந்தது.

அடுத்த நாள் வீட்டில் இருந்து வேலை செய்ய முடிவு செய்திருந்தான். எழும் போதுதான் தெரிந்தது மாமாவை தவிர அனைவரும் வெளியே சென்றிருந்தனர். அவர் தனது அறையில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். தனது மடிக்கணினி அவரது அறையில் உள்ளதை சட்டென்று உணர்ந்தான். ஒருவித கலக்கம் தொற்றிக்கொண்டது. அவரது அறை வரை சென்று உள்ளே செல்ல முடியாமல் ஏதோ தடுத்தது. முக்கியமான பணி இருந்தும் அவனால் உள்ளே சென்று மடிக்கணினியை எடுக்க முடியவில்லை. கமலா வரும் வரை காத்திருந்து அவளது உபகாரத்துடன் மடிக்கணினியை மீட்டான். அவனுக்கு தெரிந்தது திரைகள் எப்போதும் விலகவில்லை என்று.

7

அடுத்து வந்த நாட்களில் தன் அப்பாவை பற்றியும் வாங்க வேண்டிய இடத்தை பற்றியும் முற்றிலுமாக மறந்தே இருந்தான். இடையறாத அலுவலகப் பணிகளுக்கு இடையேயும் கமலாவின் சந்தோஷத்தில் பங்கெடுத்துக்கொண்டு இருந்தான். அவர்கள் எல்லோரையும் ஒரு முறை தமிழ் படத்திற்கும் அருணை மட்டும் மறுமுறை ஒரு ஆங்கில படத்திற்கும் கூட்டிச் சென்று வந்தான். கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரின் இறுக்கம் தளர்ந்து வந்துகொண்டிருக்கும்போதே அவர்கள் திரும்ப ஊருக்கு செல்லும் நாளும் வந்தது. அன்று சுந்தர் உயர் அதிகாரியிடம் சொல்லிக் கொள்ளாமலேயே விடுப்பு எடுத்திருந்தான்.

அன்று காலை கமலா சுந்தரிடம், “இனி நான் இவங்களை எப்ப பாக்க போரனோ” என்று கண்ணை கசக்கினாள். “அட நீ எப்ப பாக்கணும்னு நினைச்சாலும் டிக்கட் பொட்டுரலாம். கண்ண தொட. சரி சரி இங்க பாரு நான் அருணுக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்.” என்று பேச்சை மாற்றுவதற்காக ஒரு புதிய ஐபோன் டப்பாவை எடுத்து அந்தரத்தில் ஆட்டினான். கமலா சட்டென்று ஒரு குழந்தை தனத்தோடு அருணை பார்த்து கத்தினாள். “அருண் இங்க வந்து பாரு மாமா என்ன வாங்கிட்டு வந்துருக்காரு உனக்கு”. அருகில் வந்த அருண் ஆச்சரியத்தில் கண்கள் விரிய “தேங்க்ஸ் மாமா” என்றான். கமலாவும் அருணும் பரவச குதூகலத்தில் பேசிக்கொள்வதை சுந்தர் சற்று விலகி நின்று வேடிக்கை பார்த்தான். அவனுக்குத் தன் முதிரா இளமைப்பருவம் நினைவுக்கு வர அது அவனது உதடுகளில் மெல்லிய புன்னகையாக மிஞ்சியது.

“கமலா அப்படியே இந்த ரெண்டு பாட்டிலையும் மாமா பெட்டியில் வச்சிரு”

8

அவர்களை விமான நிலையத்தில் இறக்கி விட மணியும் தன் காருடன் வந்து இருந்தான். இரு கார்களில் சென்றனர். விமான நிலையம் வரையிலான பயணம் வழக்கம்போல் சுந்தருக்கு மௌனமாகவே சென்றது. சில நாட்களாக இருந்த திருப்தியை மட்டும் நினைத்துக் கொண்டான். விமான நிலையமும் வந்தாகிவிட்டது.

புறப்படுவதற்கான முன் வேலைகள் அனைத்தும் முடிந்து சோதனை வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது சுந்தரின் அப்பாவிடமிருந்து போன் வந்தது. போனை எடுத்துப்பார்த்த சுந்தருக்கு கலக்கம் கூடி வந்தது. “எல்லாம் ஒரே நேரத்திலயா வரணும்” என்று நினைத்துக்கொண்டு. “ஒரு நிமிஷம்” என்று அவர்களிடம் பொதுவாக சொல்லிவிட்டு சற்றே நகர்ந்துவந்து எடுத்தான்.

“ஹலோ அப்பா. ம்ம்ம்… அவங்களை ஏற்றிவிட ஏர்போர்ட் வந்திருக்கேன்… சொல்லுங்க. இந்த இடமும் கூடி வரலையா… எவ்வளவு சொல்றாங்க?… அப்பா பொருங்க… அவசரப்படவேண்டாம்.. . இன்னும் கொஞ்சம் தள்ளி பார்க்கலாம்.. புரியுது.. அவ்வளவு பணம் பத்தாதுப்பா… ஏற்கனவே கடன் அதிகமாயிருச்சு… சரி சொன்னதையே சொல்லிட்டு இருக்க வேண்டாம்… வேற இடம் பார்க்கலாம்… நான் அப்புறம் போன் பண்றேன்…”

போனை துண்டித்தவுடன் அவனது மேலோட்டமான மௌனம் இன்னும் ஆழமான மெளனமாக மாறி இருந்தது. “சரி இந்த வேலையை முதலில் முழுசாய் முடிப்போம்” என்று நினைத்துக்கொண்டு அவர்களிடம் செல்லும்போது அலுவலகத்தில் இருந்து போன் வர அதை துண்டித்தான்.

கமலா,” ஏங்க?.. அது யாரு?…”

சுந்தர் கண்களை மூடி “யாரும் இல்லை” என்பது போல தலையசைத்தான்.

“ஏன் ஒன்னுமே பேச மாட்டேங்கிறீங்க?”

“இல்லையே”

மற்ற மூன்று ஆண்களும் அங்கு தனியாக நின்றிருந்தனர். அதில் அருணும் மணியும் மட்டும் ஏதோ பேசிக்கொண்டிருக்க அவர் சும்மாதான் நின்று கொண்டிருந்தார். அவர்களை நோக்கி கண்களாலேயே ஜாடை காண்பித்து, “அங்க போய் அவங்களோட நில்லுங்க… ஏன் உம்முன்னு? கடைசி நாள் அதுவுமா.. நாளிலிருந்து நீங்க ஃப்ரீ தான்…” என்றாள் கமலா.

“சரி… சரி…”

மணியும் அருணும் ஏதோ பேசிக்கொண்டிருக்க, சுந்தர் அருகில் வருவதைப் பார்த்துவிட்டு மணி இறுதியாக எல்லோருடனும் வழக்கமாக கேட்பதைப் போல் சுந்தரின் மாமாவிடம் சற்று உரத்தக்குரலில் கேட்டான். “என்னங்க அங்கிள் அமெரிக்காவை நல்லா சுத்தி பாத்தீங்களா… பிடிச்சிருந்ததா?”

கமலாவும் அருணும் விழிகள் விரிய  ஐயையோ என்பதுபோல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்களும் சுந்தருக்கு இப்போது அவசியம் தேவைப்பட்டது. சுந்தர் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று தன் கவனத்தை முழுமையாக அவர்மேல் குவிக்க.

அவர் யாரையும் பார்க்காமல் பொதுவாக , “எங்க பெருசா போனோம், வீட்டுக்குள்ளேயே தான் இருந்த மாதிரி இருந்துச்சு…” என்று மெல்லிய சலிப்புடன் சொன்னார். அரை நொடிக்கும் குறைவான இடைவேளைவிட்டு “ஒரே முதுகுவலி..” என்று ஆரம்பித்து ஏதேதோ சொல்லிக்கொண்டு போனார்.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.