கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் தலையானவரும், தன்னுடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெலுங்குக் கீர்த்தனைகளினால், ராம பக்தி ஒன்றையே தன் வாழ்வாகக் கொண்டிருந்தவர் தியாகராஜ சுவாமிகள் அவர்கள். நூற்றாண்டுகளாக இன்றளவும் அவர் தெய்வத்திற்கு சமமாகப் போற்றப்படுபவர். வருடந்தோறும், அவர் இறைவனின் திருவடிகளை அடைந்த பகுள பஞ்சமி அவருடைய ஆராதனை விழாவாகக் கொண்டாடப் படுகிறது. ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த இசை விழாவில் பங்கேற்க அகில உலகத்திலிருந்தும் கர்நாடக இசைக் கலைஞர்கள், இசை விற்பன்னர்கள், தங்கள் கற்றுக் கொண்ட இசையின் வடிவை, குரல்வழியாகவோ, இசைக் கருவிகள் வழியாகவோ இவர் சன்னதியில் வந்து சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வருடந்தோறும் இந்த சமர்ப்பணத்தைத் தங்கள் கடமையாகவே கருதுகிறார்கள். இந்த விழாவில் கலந்து கொண்டு இரண்டு கீர்த்தனைகளாவது பாடி விட வேண்டும் என நினைக்கிறார்கள். பரத நாட்டியக் கலைஞர்கள், சிதம்பரம் நடராஜர் சன்னதியில் அரங்கேற்றம் செய்து விட வேண்டும் என நினைப்பது போல, நாட்டியாஞ்சாலியில் பங்கேற்று விட வேண்டும் என ஆசைப்படுவது போல கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்பவர்கள், தியாகராஜ ஆராதனை விழாவில் ஒரே ஒரு கீர்த்தனையாவது பாடி விட வாய்ப்பு பெற்று விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். பகுள பஞ்சமி அன்று பாடப்படும் அவரது பஞ்சரத்ன கீர்த்தனைக் குழுவில் இடம் பெற்றோ, இடம் பெறாமல், பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கொண்டோ பாடுவதை அந்த மகானுக்கு செலுத்தும் அஞ்சலியாக நினைக்கிறார்கள். இதன் மூலம், அவர்கள் சங்கீதத்தோடு, அதையே தன் வாழ்க்கை முறையாகக் கொண்ட தியாகராஜ சுவாமிகளை வணங்குவதாக நிம்மதியடைகிறார்கள். தியாகராஜர் இப்படி வணங்கப்படுவதற்கான காரணம் அவர் தன் வாணாள் முழுவதும், சங்கீதத்தின் மூலம் தன்னுடைய ராம பக்தியைச் செலுத்தி வந்தார். அவருக்கு அதைத் தவிர வேறொன்றும் நினைவில்லை இந்த வாழ்வில். ராம பக்தியையே தன் மூச்சாகக் கொண்டிருந்தார். அவருடைய ஆத்ம விசாரங்கள் முழுவதும் ராமனை நோக்கியே கீர்த்தனைகளாக வெளிப்பட்டன.
பக்தியை, அதன் வெளிப்பாட்டை சங்கீதத்தின் மூலம் ஓர் உபாசனையாகச் செய்தவர். அவருடைய “ சங்கீத ஞானமு பக்தி விநா “ என்ற கீர்த்தனையில், சமர்ப்பணமற்ற வெறும் சங்கீத அறிவால் மட்டும் இறைவன் சரணத்தை அடைய முடியுமா மனமே என்று தன் மனதைக் கேட்டுக் கொள்கிறார். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் எனும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் ஆறு உட்பகைவர்களை வெல்வதற்கு இந்த சங்கீத சமர்ப்பணத்தைத் தவிர தனக்கு வேறு ஒன்றும் உபாயம் தோன்றவில்லை என ராமனிடம் முறையிடுகிறார். அவரது நாடி நரம்புகள் முழுவதுமே ராம பக்தியும், சமர்ப்பண உணர்வுமே நிறைந்திருந்தது.
இராமாயணத்தில் வரும் சபரி, ராமனுக்காகக் காத்திருப்பதையே தன் தவமாக மேற்கொண்டவள். வெறும் காட்டுவாசிப் பெண்ணாக சரியாகப் பேசவும் அறியாமல் இருந்தவள், மதங்க முனிவருக்கு சிறிய கைங்கர்யங்கள் செய்ததால், அவரிடமிருந்து ராம நாமத்தை உபதேசமாகப் பெற்றவள், பனிரெண்டு ஆண்டுகள் ராம நாமத்தை மட்டுமே உபாசித்தவள். ராமனின் தரிசனம் பெற்ற பிறகு, அவள் முக்தியடைவதற்காக குடிலில் அமர்ந்து கொள்கிறாள். அவள் உடல் உருக்குலைந்து வெறும் எலும்புக்கூடு மட்டும் இருக்கிறது. அந்தக் கூட்டினை எங்கு தொட்டாலும், அது ராம நாமத்தை ஒலித்தது என்று புராணங்கள் சொல்கின்றன. சபரியின் இந்த ராம பக்தியும், தியாகராஜரின் ராம பக்தியும் ஒன்றேதான். சபரியுடையது ராம ஜெபம்; தியாகராஜருடையது ராம கீர்த்தனைகள். இரண்டிலும் இருந்தது உபாசனை.
சங்கீதத்தை ஒரு யோகம் போல, உபாசனையாக ஏற்றுக் கொண்டு, எவ்வித சமரசமும் அற்று தன் வாழ்வையே சங்கீதத்திற்கு அர்ப்பணம் செய்து கொண்ட ஒரு வித்வான் பற்றிய நாவலாக, 1952 ல் ந. சிதம்பர சுப்ரமண்யன் அவர்களால் எழுதப்பட்டது “ இதயநாதம் “ . கிட்டுவுக்கு சங்கீதப் பித்து. ஆனால், அவன் தந்தை இதே சங்கீதப்பித்தாக இருந்ததால், வாழ்க்கையையே தொலைத்ததால், தாய்க்கு இவனுடைய சங்கீத ஆர்வம் எரிச்சல்படுத்துகிறது. கணவன் போலவே இவனும் வாழ்க்கை இழந்து விடுவான் என அச்சம் கொள்கிறாள். அவனை வேதம் பயில அனுப்ப முடிவு செய்கிறாள். இதை அறிந்த கொண்ட கிட்டு வீட்டை விட்டு அம்மாவுக்குத் தெரியாமல் வெளியேறி விடுகிறான். பதின்வயது தொடக்கத்தில் இருக்கும் அவன், எப்படியோ கணேச சாஸ்திரிகள் கையில் அகப்படுகிறான். அவனுடைய பிறவி சங்கீத ஞானம் அவரைக் கவர்கிறது. அவனை சபேசய்யர் என்கிற மகா வித்வானிடம் கொண்டு போய் விடுகிறார். குருகுல வாசம் போன்று அவன் அவர் விட்டீலேயே தங்கி சங்கீதம் பயில்கிறான். அவருடைய மகன் மாகாதேவனும் அவன் கூடவே சங்கீதம் கற்றுக் கொள்கிறான். ஆனாலும், கிட்டுவின் ஞானத்தை அவனால் எட்ட முடியவில்லை. சபேசய்யரின் மனைவியும் கிட்டுவிடம் தன் மகனிடம் காட்டும் வாஞ்சையைக் காட்டுகிறாள். இருவருக்கும் அவர்களே பூணூல்கல்யாணம் செய்து வைக்கிறார்கள். சபேசய்யர் தன் இறுதிக் காலத்தில், கிட்டுவையே தன்னுடைய இசை வாரிசாக அறிவிக்கிறார். கிட்டு, குருகுலத்தில், இசையோடு, வாழ்க்கைக் கல்வியையும் பயில்கின்றான். எந்த நிலையிலும், சங்கீதத்தை உபாசனையாக மட்டுமே செய்ய வேண்டும் என்பதையும், வாழ்க்கை ஒழுக்கங்களையும் தன் குருவிடமிருந்தே சுவீகரித்துக் கொள்கிறான்.
கிட்டு வளர்ந்து, நீலாவைக் கரம் பிடித்து, கிருஷ்ண பாகவதராக இசையுலக ஜாம்பவனாகக் கொடி கட்டிப் பறக்கிறார். அப்போது கூட, கச்சேரிக்குப் பணம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தன் சங்கீதத்தை ஒரு நாதோபசனையாகக் கடைப்பிடிக்கிறார். தாயைத் தேடித் தன் சொந்த ஊருக்குப் போகிறார். தாய் இறந்த செய்தி கிடைக்கிறது. கரம் பிடித்த மனைவியோ சங்கீத ரசனையற்று, பொருள் வயப் பட்ட வாழ்க்கையை எதிர்பர்க்கிறாள். அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. சங்கீதத்தைத் தன்னை மாதிரியே உபாசிக்கும் பண்பு உள்ளவர்க்கே பயிற்றுவிக்கிறார். அப்படி, அவரிடம்தான் சங்கீதம் பயில வேண்டும் என்ற பெருவிருப்பத்துடன் அவரை அணுகும் பொதுமகள் குலத்து பாலாம்பாள் அவரிடம் வந்து சேர்கிறாள். அவளுடைய அபார சங்கீதத் திறமை அவரை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. மாறி மாறி அவள் இவர் வீட்டுக்கு வருவதும், அவள் இவர் வீட்டுக்கு வருவதுமாக சங்கீதம் வளர்கிறது. ஊரில் பலர் தவறாகப் பேசினாலும், கிருஷ்ண பாகவதர் கலங்கவில்லை. பாலாம்பாள் ஒரு நாள் தன் மனநிலை தடுமாறி, அவர் மேல் தனக்கு இருக்கும் ஈர்ப்பை வெளிப்படுத்துகிறாள். அதில் சிக்கிக் கொள்ளாமல் வெளி வருகிறார் கிருஷ்ண பாகவதர். அவரைச் சரியாகப் புரிந்து கொண்டது கந்தசாமி பாகவதர் மட்டும்தான். அவர், கிருஷ்ண பாகவதரை அந்த அதிர்ச்சியான மன நிலையிலிருந்து மீட்டு ஆற்றுப் படுத்துகிறார்.
அந்த ஊரின் பஜனை மடக் கட்டடத்தைச் சரி செய்வதற்காக, நிதி திரட்டுவதற்கு தன் கச்சேரி பயன்படட்டும் என்று கிருஷ்ணனேதான் உபாயம் சொல்கிறார், ஆனால், அந்தக் கச்சேரியைச் செய்ய முடியாமல், அவருக்கு, காய்ச்சல் வந்து தொண்டை கட்டிப் போகிறது. தான் பொருளுக்காக கச்சேரி செய்ய எத்தனித்ததால்தான், தனக்கு இப்படி ஆகி விட்டது என்று மனம் வருந்துகிறார். அப்போது, கந்தசாமி பாகவதர் அவரை சமாதானப்படுத்தி
இசை என்பது வெறும் காதுகளிலும், குரலிலும் மட்டுமில்லை. மௌனத்தின் வழியே இறைவனை நினைந்து இதயத்திலிருந்து எழும் நாதம் கொண்டு உபாசனை செய்யலாம் என்று சொல்கிறார். கிருஷ்ண பாகவதர் தன் இதய நாதத்தில் அமிழ்ந்து லயிக்க ஆரம்பிக்கிறார்.
நாவல் ஒரு சிறிய நீரோடை போல தெளிவாக அமைதியாக ஓடுகிறது. சங்கீதம் என்றில்லை, ஒருவர் வாழ்க்கையில் தன்னுடைய விருப்பம், அல்லது நோக்கம் அல்லது லட்சியம் என்று எதுவோ ஒன்றைப் பயணமாக ஏற்றுக் கொண்டால், அந்தப் பயணத்தின் இலக்கை அடைவதில் உறுதி வேண்டும். தடங்கல்கள் வந்தால் அவற்றை எதிர்கொண்டு, சமாளித்து, வெற்றி கொண்டு முன்னேற வேண்டும். கிருஷ்ண பாகவதர் கிட்டுவாக, தன் தாயையே துறக்கிறான். அடுத்தது, நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அதையும் துறக்கிறான்; பண ஆசையும் துறக்கிறான். பெண்ணாசை அவரை உலுக்க பாலாம்பாள் எனும் வடிவெடுத்து வருகிறது. அதையும் வெற்றி கொள்கிறார். இத்தனை தடைகளையும் கடந்ததால்தான், கிருஷ்ண பாகவதரால், மௌனத்தின் மொழி கொண்டும். தன் இதயத்துள்ளே இருக்கும் இசை என்னும் இறைவனை உபாசனை செய்ய முடிகிறது.
இராமாயணத்தில், சுந்தரகாண்டத்தில், ஆஞ்சநேயர், சமுத்திரத்தைத் தாண்டி, இலங்கையில் சென்று சீதாதேவியைப் பார்ப்பதற்கு வரும் தடைகளை அவர் எதிர்கொள்வதை, இதிகாசத்தின் பகுதியாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், இது ஒவ்வொருவர் அவருடைய இலட்சியத்தை அடைய வரும் தடைகளை, இடைஞ்சல்களை வெல்லும் ஒரு செயல் என எடுத்துக் கொண்டால், அதன் தளம், அதையும் தாண்டி விரிவடைகிறது.
இதயநாதம் நாவலையும், ந. சிதம்பர சுப்ரமண்யன் நாம் இப்படி விரித்துப் பார்க்க முடிகிற விதத்தில் படைத்திருக்கிறார். பணம் புகழ் ஆசைகளையும், உணர்வுப் போராட்டங்களையும் வெற்றி கொண்டு நிற்கும்போதுதான் கலைஞன் அதில் முழுமையடைகிறான். முழுமையின் வடிவம் மௌனத்தில் வந்து நிற்கிறது. மௌனம் ஞானத்தின் உச்சம். இந்த உச்சமே உள்ளத்தின் உபாசனையாகிறது. இந்த நிலையை அடைவதற்கு ஒருவர் மேற்கொள்ள வேண்டிய நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கை ஒரு முனிவரின் தவத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லை. அத்தகைய வாழ்க்கைக்கு, சபேசய்யர் போல ஒரு குருவும், கந்தசாமிபாகவதர் போல ஒரு ஆத்மார்த்தமான ஒரு நண்பரும் கிடைத்து விட்டால் இலட்சியவாதிகளின் உபாசனைகள், தவங்கள் எல்லாம் நிச்சயம் கைகூடும்.
சங்கீதக் காரர்கள் என்றாலே வெற்றிலை, பாக்கு, ஜவ்வாது, மது, பெண்கள் தொடர்பு என்று இருந்த காலக் கட்டத்தில் இலட்சியத்திற்காக வாழ்ந்த ஒரு இசைக் கலைஞரின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டியிருக்கிறார் ந.சிதம்பர சுப்ரமண்யன் அவர்கள். அவரே முன்னுரையில், சங்கீதப் பரம்பரையில் வந்தாலும், அவர் சங்கீதம் கற்றவரில்லை; வாசனை மட்டுமே தெரிந்தவர் என்று குறிப்பிடுகிறார். அதனால்தானோ என்னவோ, அவர், வாழ்க்கையை மட்டுமே எழுதியிருக்கிறார். சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட நாவலாக இருந்தாலும், பாடல்கள் பற்றிய விவரணைகள் எதுவும் இல்லை. ஆனாலும், நாவலை வாசிக்கும்போது, கிருஷ்ண பாகவதருடைய தம்பூராவின் நாதம் வாசிப்பவர் மனதிலும் ஒலிக்கத் துவங்குகிறது,
ந.சிதம்பர சுப்ரமண்யன் அவர்களின் நூற்றாண்டு வெளியீடாக 2012 ல் சந்தியா பதிபகத்தார் இந்த நாவலை பதிப்புத்துள்ளனர். கோவை சிறுவாணி வாசகர் மையத்தினர் இதனை வெளியுட்டுள்ளனர், சிறந்த அச்சாக்கம், நாவலை தடையின்றி வாசிக்கத் தூண்டுகிறது.
இசை பற்றிய ஒரு நூலை மிகச் சிறப்ப்பாக விமர்சனம் செய்திருக்கிறார். கிருஷ்ண பாகவதரின் வரலாறு திரைப்படமாக்கக் கூடிய தகுதி படைத்தது. மோகமுள்ளில் கூட பாபு இசைக்காக இவ்வாளவு தியாகங்க்கள் செய்யவில்லை