சிற்றலைகள் கால்களை வருடாமல்
திரும்பச் செல்கையில்
ஏமாந்து போகிறாள்
இப்படி ஒவ்வொரு அலையும்
அவளை தீண்டாமல் திரும்பிச்
செல்கிறது
அவள் பிடிவாதமாக
கடலை நோக்கி முன்னேறுவதை
தவிர்க்கிறாள்
அசையாமல் நிற்கும்
அவளின் மனவோட்டத்தை
கடல் அறிந்து கொள்கிறது
திடீரென ஒரு பேரலை எழுந்து
அவள் கால்களை வந்து
நனைக்கிறது
திரும்பிச் செல்கையில் அலை
அவள் பாதங்களில்
குழிபறித்துச் செல்கிறது
அவளும் நானும்
ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தோம்
எனக்கும் அவளுக்கும் கடல்
வெவ்வேறாக தெரிந்தது!
—
அதிகாலையில்
முதல் வேலையாக
அவள் வரைந்த கோலத்தின்
புள்ளிகளை எண்ணிக் கொண்டிருந்தது சூரியன்
குளியலறை சுவரினை
கலர்கலரான ஸ்டிக்கர் பொட்டுக்கள் அலங்கரித்தன
செவ்வாய் கிழமைகளில்
வெளிர்நீல புடவையென்று
அலமாரிக்குக் கூட தெரிந்துவிடுகிறது
அதே நிறத்தில்
கல் வைத்த கவரிங் தோடு டாலடித்தது
தெருவில் அரும்புகள் வரவில்லை
இன்று கொல்லைப்புற
ரோஜாவுக்கு அதிர்ஷ்டமடித்தது
பெருமிதத்தோடு அவள் பின்னலை
அலங்கரித்த அந்த ரோஜா
சாலையில் பிணம் செல்லும்
பாதையில் தூவப்பட்ட
சிகப்பு நிற ரோஜாக்களைப்
பார்த்து எதையோ
உணர்ந்துகொண்டு ஊமையானது!
—
பள்ளிகொண்டிருக்கும் பெருமாளுக்கு
மணியோசை தொந்தரவாய் தான் இருக்கும்
மணிசத்தம் கோபுரங்களில்
தஞ்சமடைந்துள்ள புறா கூட்டத்தை
எழுந்தோடச்செய்யும்
நாலு கால பூஜை, நைவேத்யம்
கூடவே தலைமாட்டில் மகாலட்சுமி
காலடியில் பூமாதேவி
வேறென்ன வேண்டும் அரங்கனுக்கு
தங்கக்கவசம் அணிந்த
பெருமாளை பார்த்தாலே தெரிந்துவிடும்
வருமானத்துக்கு குறைவில்லை என்று
பொழுது போகவில்லையென்றால்
ஆழ்வார்களை பாசுரம்
பாடச் சொல்லி கேட்கலாம்
வைகுண்டத்தில் என்ன நடக்கிறதென்று
நாரதர் வந்து சொன்னால் தான் தெரியும்
ஆதிசேஷனுக்கு அலுப்பு தட்டினால்
அவதாரங்களுடன் பேசிக் கொண்டிருக்க
வேண்டியதுதான்
நாட்டு நடப்புகளை சகித்துக் கொண்டு
கோயிலில் பெருமாளாக வீற்றிருப்பது
நம்மால் முடிகிற காரியமா?
கவிதைகள் புனைந்த தளம் புதிது. வார்த்தைகள் எளிமை ஆனால் பொருள் ஆழம்