நீர் நின்றன்ன – வெ சுரேஷ் சிறுகதை

“அப்பா கேபிள்ல நிறைய சானல்கள் வர்றதேயில்லை. நீங்க போய் அந்த கேபிள் ஆபிஸ்ல கேக்கறேன் கேக்கறேன்னுட்டு கேக்கவே இல்ல. இன்னிக்காவது கொஞ்சம் போய் கேட்டுட்டு வாங்கப்பா,” என்று பாதி கோரிக்கையாகவும் பாதி குற்றச்சாட்டாகவும் என் மகள் சொன்னபோது அந்த நாள் எனக்கு மிகவும் சங்கடமான நாளாக இருக்கப் போவதை நான் அறியவில்லை. “நாங்க போன் பண்ணிச் சொன்னா சரி சரிங்கறாங்க, ஆனா, அதே மாதிரிதான் இருக்கு’”.
“ஆமாம்மா மறந்து மறந்து போயிடறது, இன்னிக்கு ஒரு ஒன் டே மேட்ச் வேற இருக்கே… இரு, அந்த சானலாவது வருதா பாக்கறேன்,” என்று சொல்லிக் கொண்டே, அவசர அவசரமாக டிவியை ஆன் பண்ணி சோனி ஈஎஸ்பிஎன் சானலுக்குப் போனால், ஏதோ சப்ஸ்க்ரிப்ஷன் கட்டவில்லை, அதனால் வரவில்லை, என்று ஸ்க்ரால் ஓடிக் கொண்டிருந்தது. சரி, வேற வழியில்லை, இன்னிக்கு கேபிள் டிவி ஆபிசுக்கு நேரா போய்தான் பாக்கணும்.

டிபன் முடித்துவிட்டு, கேபிள் டி வி ஆபிசுக்குப் போய் மாடி ஏறும்போது வழியில் ஒரு முதியவர் தயங்கித் தயங்கி இறங்கி வந்து கொண்டே, “சார், இந்த கேபிள் டிவி ஆபிஸ்…” என்று இழுத்தார்.

”ஆமா சார், நானும் அதுக்குத்தான் வந்தேன்,” என்று சொல்லவும், அவர் முகத்தில் ஏமாற்றம். “ஓ, நீங்க கேபிள்காரர் இல்லையா…” என்று முனகினார். “என்னமோ தெரியல, நிறையச் சானல்கள் வரல, புகார் கொடுக்கலாம்னு வந்தேன்.”

“சரி மேல யாரும் இல்லையா?”

அவர் மெதுவான குரலில்,”யாருமே இல்லையே சார்,” என்று மீண்டும் முனகினார்.

யோசனையாக கீழே இறங்கினேன். மாடிப்படிக்கு பக்கத்திலேயே இன்னொரு ஹாலில் நாராயணன், கேபிள் பணம் வசூலிக்க வருபவர், இருந்தார். கொஞ்சம் நிம்மதியாக உள்ளே நுழைந்து, “பணம் கட்டின நிறைய சேனல் வரவேயில்ல நாராயணன், என்னனு பாக்கலாம்னு வந்தேன்,” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த பெரியவரும் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து அதையே சொன்னார்..

இரண்டு பேருக்கும் படிவங்களைக் கொடுத்து, “எதெது வரல்லன்னு டிக் பண்ணிக் குடுத்திடுறாங்க சார்,” என்றார் நாராயணன்.

கடகடவென்று டிக் பண்ணிக் கொடுத்து விட்டு, “எப்ப வரும்,” என்று கேட்டேன். “நீங்க வீட்டுக்குப் போறதுக்குள்ள சார்,” என்றார் நாராயணன். அடப்பாவி டெக்னாலஜி அவ்வளவு தூரம் வளர்ந்துச்சான்னு நினைத்துக் கொண்டே, சரி பாதி மேட்ச் ஆனும் பாத்துடலாம் என்று திரும்ப எத்தனித்தேன்.

பின்னாலிருந்து தீனமாக, சார், என்று ஒரு குரல். அந்த முதியவர்தான். “சார் எனக்கு ரொம்பக் குழப்பமா இருக்கு, எழுத்தும் ரொம்பப் பொடிப் பொடியா இருக்கு கண்ணுக்கே தெரியல, கொஞ்சம் ஹெல்ப் பண்றேளா?”

“ம்ம்… உங்களுக்கு என்ன சானல்ல்லாம் வேணுமோ அதைச் சொல்லுங்க சார்,” அவரிடமிருந்த படிவத்தை வாங்கினேன்.

“எனக்கு பழைய அந்த 100 ரூவா ஸ்கீமோட, சன், விஜய், இருந்தா போதும் சார், அது வர்ற மாதிரி பில் அப் பண்ணிக் குடுக்கறேளா அப்புறம் பணமும் கட்டணும்”

அதற்குண்டான பெட்டிகளை டிக் பண்ணினேன். நடுங்கும் விரல்களால் அவர் கையெழுத்திட்டவுடன் அவரிடமிருந்து பணத்தை வாங்கி நானே கட்டிவிட்டு, வெளியே வந்தேன். கூடவே அவரும் வந்தார். மேலும், தயங்கின ஒரு குரலில், “ஏன் சார் இந்த கிரிக்கெட் மேட்செல்லாம் இதுல வருமோ”

“இந்த விஜய் பேக்கேஜுல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வருங்கறாங்க சார். உறுதியா தெரியல,” என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்து அவரைப் பார்த்தபோதுதான் எங்கேயோ பார்த்து பரிச்சயமான முகம் என்று தோன்றியது. நல்ல சிவந்த, படர்ந்த முகம், இந்த வயசுக்கு அடர்த்தியாக, ஆனால் வெள்ளை வெளேரென்ற நிறத்தில் தலைமுடி, நெற்றியில் நல்ல சிவப்பில் குங்குமப் பொட்டு. ரெண்டு நாள் தாடி, கண்ணைப் பெரிதாகக் காட்டும் தடித்த கண்ணாடி. அதற்குப் பின்னாலிருந்த கண்களில் குழப்பமும் தயக்கமும். காவியேறின வேட்டி, கொஞ்சம் அழுக்கான வெள்ளை அரைக்கை சட்டை. இதே கோலத்தில், பாவனையில் இவரை எங்கயோ பாத்திருக்கமே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, ‘சார், உங்கள நான் எங்கயோ பாத்திருக்கேன்,” என்ற அவர் குரல் சிந்தனையைக் கலைத்தது.

“எனக்கும் அப்படிதான் தோணுது சார், நீங்க…?”

“என் பேரு ராமரத்னம்… இதோ இந்த ரோட்ட கிராஸ் பண்ணினா எதுக்க இருக்கே அதான் வீடு,” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் என்னைக் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார்.

“ம்ம்… நான் இங்கதான் கோவாப்பரேட்டிவ் காலனில இருக்கேன்,” என்றேன்.

“ஓ, அப்படியா சார், நான் அங்க வந்ததில்லை. நாங்க மொதல்ல டவுன்லதான் இருந்தோம். இப்பதான் ரெண்டு வருஷமா இங்கே குடியிருக்கோம்.. ஆனா உங்கள எங்கயோ பாத்திருக்கேன் முகம் ரொம்ப பரிச்சயமானதா இருக்கு…” என்று மீண்டும் என் முகத்திலேயே தன் பார்வையை நிறுத்தினார். எனக்கும் குழப்பம். இந்தக் குரல், இந்த தயங்கித் தயங்கிப் பேசும் விதம், முகத்தில் இருக்கும் ஒரு பரிதாபக் களை, எங்கே பார்த்திருக்கிறேன்?

அதற்குள் நாராயணன் அவரை கூப்பிட, “சார், இதோ ஒரு நிமிஷம், வந்துடறேன், இங்கயே இருங்க,” என்று சொல்லிக்கொண்டே திரும்பி உள்ளே நடந்தார். அந்த நடையில் சட்டென்று கன்னத்தில் ஒரு அறை விழுந்தாற்போல நினைவுக்கு வந்துவிட்டது அவர் யாரென்று. ஒரு கணத்தில் அப்படியே சட்டென்று வியர்த்துப் போய் ஸ்தம்பித்து நின்றேன். ஆமாம், அவரேதான், அதே முகம், அதே குழப்பமும், தயக்கமும் நிறைந்த கண்கள், இறைஞ்சும் குரல். அவை இவரின் நிரந்தர முகபாவமா, இல்லை, நாங்கள் சந்தித்துக் கொண்ட அந்த சந்தர்ப்பத்தில் வந்து அவருடன் ஒட்டிக் கொண்டதா?

ஐயோ… என்னவொரு சந்தர்ப்பம், அசந்தர்ப்பம் என்று சொல்ல வேண்டும். ஆம், 2008ம் ஆண்டு ஆகஸ்ட்டு இறுதியில் நாங்கள் சந்தித்திருக்கிறோம். இந்த பதினோரு ஆண்டுகளில் மேலும் தளர்ந்து போயிருக்கிறார். கண்களின் அந்தத் குழப்பமும் தயக்கமும் மேலும் அதிகரித்திருக்கிறது. அப்போதே 70க்கும் மேல் இருக்கும். இப்போது 80க்கும் மேல், அன்று நடந்ததற்குப் பின் இவர் உயிரோடு இருப்பதே பெரிது. இவர் இன்னும் அதிக நாள் தாங்க மாட்டார் என்றே அப்போது நினைத்தேன். இன்னுமா இருக்கிறார் என்று திகைப்புடன் அவர் போவதைப் பார்க்கும்போதே அந்த நடை, அவரை முதன் முதலாக பொள்ளாச்சி விருந்தினர் மாளிகைக்குள் அழைத்துப்போனதை நினைவுபடுத்தியது.

“ரமேஷ், சங்கரோட அப்பா, அம்மா, அக்கா, அவங்க ஹஸ்பண்ட், நாலு பேரும் இப்பதான் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டு கிட்ட வந்திருக்காங்கன்னு போன் வந்திருக்கு, நீயும் மூர்த்தியும் உடனே போய் அவங்கள பாத்து பொள்ளாச்சி ஐபிக்குக் கூட்டிட்டு வந்துருங்க, சிவப்பு கலர் ஆல்டோ கார். நாங்க இப்பதான் சுல்தான்பேட்டையை நெருங்கிட்டிருக்கோம். இன்னும் சங்கரோட பாடி கிடைக்கல. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்னும் தெரியல. அவங்கள அங்கேயே தங்கவும் வெக்க ஏற்பாடு பண்ணிருங்க… அதுல பிரச்னையிருக்காது, எஸ்ஈகிட்ட ஏற்கனவே ரூம்ஸுக்கு சொல்லியாச்சு என்ன ஓகேவா?“ மறுத்துப் பேச முடியாத கண்டிப்பில் நண்பர் பாண்டியனின் குரல் கட்டளையாக ஒலித்தது. நான் மூர்த்தியைப் பார்த்தேன். பாண்டியன் என்ன சொன்னார் என்று அவருக்கும் புரிந்திருக்க வேண்டும். ம்ம் சரி, என்று முனகிவிட்டு போனை கட் செய்தேன். பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பினோம்.

‘சங்கரோட பாடி’ அந்த வார்த்தை இப்போது மிகக் கடுமையாக ஒலித்தது. நேற்று பின்னிரவு வரை கூட நாங்கள் அப்படி சொல்லத் துணியவில்லை, ஆனால் இப்போது நண்பர்கள் எல்லோருக்குமே வேறு எப்படியும் சொல்ல முடியாமல் போய்விட்டது. நண்பர்கள் என்றால் இங்கே என்னுடன் இருக்கும் மூர்த்தியையும் பாண்டியனோடு போயிருக்கும் ப்ரகாஷையும் தவிர மற்றவர்கள், சென்னையிலிருந்து வந்தவர்கள்- சங்கர், பாண்டியன், கதிர், சந்துரு, மற்றும் பிரசாத் ஆகியோர்.

முந்தா நாள் சென்னையிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸில் கிளம்பி நேற்று அதிகாலை திருப்பூரில் இறங்கி வேன் வைத்துக் கொண்டு உடுமலைப்பேட்டையில் இருக்கும் கதிரின் வீட்டுக்குப் போய் விட்டு முற்பகலில் கிளம்பி டாப்ஸ்லிப், அதனைத் தொடர்ந்து பரம்பிக்குளம் என்று போவதாக ஒரு திட்டம். இரவுத் தங்கலுக்கு பரம்பிக்குளத்தில் விருந்தினர் மாளிகையில் ஏற்பாடாகியிருந்தது போல. கதிரின் வீட்டுக்குச் சென்று சேருவது வரை எந்தப் பிசகும் நேரவில்லை. தவறு நேர்ந்தது உடுமலை போகும் வழியில், கெடிமேடு வாய்க்காலைப் பார்த்ததில்தான். பரம்பிக்குளம் ஆழியாறு ப்ராஜெக்ட்டின் பிரதான கால்வாய் அது. பிஎம்சி என்பார்கள். இவர்கள் கிளம்புவதற்கு முந்தைய நாள்தான் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள். கால்வாய் நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. கால்வாயைப் பார்த்தவுடன், கதிர் வீட்டுக்குப் போய் குளித்துவிட்டு டாப்ஸ்லிப் கிளம்ப இருந்த திட்டத்தைச் சற்றே மாற்றி கதிர் வீட்டிலிருந்து கால்வாய்க்கு வந்து அங்கே குளித்து விட்டு மீண்டும் கதிர் வீட்டுக்கே சென்று டிபன் சாப்பிட்ட பின்னர் கிளம்புவதாக மாற்றியிருக்கிறார்கள். கதிரின் அம்மா, “இப்பதான் டேம் திறந்து விட்ருக்காங்கப்பா, புதுக் தண்ணி உடம்புக்கு ஆகாது. மழை வேற வர மாதிரி இருக்கு, வூட்டிலயே வெந்நீர் போட்டுத் தரேன். குளிச்சி டிப்பன் சாப்டுட்டு கெளம்பிருங்க,” என்று சொல்லியும் கேட்காமல் கால்வாய்க்கு குளிக்க வந்திருக்கிறார்கள்.

கெடிமேடு- உடுமலை ரோட்டில் கால்வாய் குறுக்கிடும் இடத்துக்கு அருகில் எப்போதும் லாரிகளும் வேறு வாகனங்களும் கழுவிக் கொண்டிருப்பார்கள். எனவே கால்வாய் ஓரமாகவே சற்று தெற்கே உள்ளே போய் ஒரு தென்னந்தோப்புக்கு அருகில் குளிப்பது என்று தீர்மானித்துப் போயிருக்கிறார்கள். எல்லோருமே நீச்சல் தெரிந்தவர்கள்தான். கால்வாயின் தண்ணீர் வேகத்தையும் ஓரளவுக்கு ஊகித்து, கால்வாயின் இரண்டு கரைகளுக்குமாக கம்பத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டுதான் இறங்கி குளிக்க இறங்கியிருக்கிறார்கள். கதிர், சந்துரு, பாண்டியன், பிரசாத் எல்லாம் ஒரு புறம் குளித்துக் கொண்டிருக்க, இருப்பதிலேயே இளையவனும் அபாரமான வாலிபால் விளையாட்டு வீரனுமான சங்கர் மட்டும் ஒருமுறை கால்வாயில் குதித்துக் குறுக்காக நீந்தி மறுகரையில் ஏறி அங்கிருந்து ஒரு தாவு தாவி உள்ளே குதித்து இவர்கள் பக்கம் வந்திருக்கிறான்.

இந்த இடத்தில் தான் என்ன நடந்தது என்று இவர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உள்ளே குதித்த சங்கரிடம் தண்ணீரைத் தொட்ட சில கணங்களுக்குப் பின் ஏதோ தடுமாற்றமும் நீந்துவதற்கு சற்றே திணறலுமிருந்ததை பாண்டியன் கவனித்திருக்கிறான். சங்கர் மல்லாந்து நீந்த முயல்கிறானா அல்லது கால்வாயின் நீரோடு மிதந்து அடித்துச் செல்லப்படுகின்றானா என்ற குழப்பத்துடன் அவனுக்கு எதிரே சென்று கைகளை விரித்து தடுக்க முயன்றிருக்கிறான். ஆனால், அவன் கைகளில் பட்டு கைகளின் அடியே வழுக்கிக் கொண்டு போய்விட்டான் சங்கர். இவர்கள் அங்கே போயிருந்த அந்த 9-9.30 மணிக்கு இவர்களின் கூக்குரலை கேட்க தோப்பின் அருகில் யாருமே இருக்கவுமில்லை. கத்திக்கொண்டே கெடிமேடு உடுமலை சாலை சந்திப்பு வரை ஓடியிருக்கிறார்கள். ஆனால், அதன் பின் சங்கரை அவர்கள் பார்க்கவேயில்லை. ஒரு மணி நேரத்துக்குப் பின் பொள்ளாச்சி பொதுப்பணித் துறையிலிருந்த நண்பர் பிரகாஷுக்கு விஷயத்தைச் சொல்ல, அவர் அங்கே இருக்கும் பொறியாளர்களிடமும் லஸ்கர் எனப்படும் களப்பணியாளர்களுக்கும் சொல்ல, தேடுதல் வேட்டை தொடங்கியிருக்கிறது. மதியமே பிரகாஷ், மூர்த்திக்கும் எனக்கும் செய்தி வரவும் நாங்கள் ஈரோட்டிலிருந்தும் கோவையிலிருந்தும் மாலைக்குள் பொள்ளாச்சி வந்து சேர்ந்தோம்.

சங்கர், சங்கர்ராமன் கோவையைச் சேர்ந்தவன்தான் என்றாலும் எனக்கு அவ்வளவு பழக்கமில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே நான் தலைமையகத்தில் இருந்ததைவிட வெளியே அயல்பணியில் இருந்ததே அதிகம். இவன் அங்கே சேர்ந்து ஐந்தாறு வருடங்கள்தான் ஆகியிருக்கும். இரண்டு மூன்று முறை நான் அங்கே போனபோது இந்த நண்பர்களோடு பார்த்திருக்கிறேன். அவனது உயரத்துக்கும் ஆகிருதிக்கும் சம்பந்தமில்லாமல் ரொம்ப அடக்கமாக இருப்பான். மிக மென்மையாகவே பேசுவான். பெரும்பாலும் பேசவே மாட்டான். எனக்கும் கோவை என்பதால் ஒரு சந்திப்பில் சற்று இணக்கம் கூடி குடும்ப விவரங்களை சுருக்கமாக சொல்லியிருக்கிறான். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில்தான் பூர்வீக வீடு. ஆனால், சென்னையில் வேலைக்கு வந்தபின் வயதான பெற்றோரையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். அவனது ஒரே அக்காவின் குடும்பம் ஏற்கனவே சென்னையில்தான். இவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரியும். வயதும் 27, 28தான் இருக்கும்.

நேரம் ஆக ஆக எல்லோருடைய நம்பிக்கையும் குறைந்து கொண்டே வந்தது. இருட்டில் இனியும் தேடுவது முடியாது என்ற நிலையில் நாங்கள் அனைவரும் பொள்ளாச்சி ஆய்வு மாளிகைக்கு வந்து சோர்ந்து உட்கார்ந்திருதோம். ஆனால் மாலை 5.30 மணிக்கே அங்கிருந்த களப்பணியாளர்கள், “சார் இதுவரைக்கும் கண்டு பிடிக்க முடியலன்னா இனி சுல்தான்பேட்டை சைப்பன்லதான் பாடி கிடைக்க சான்சு,” என்றார்கள். ‘பாடி’ என்ற சொல் எல்லோரையும் நிலைகுலைய வைத்து விட்டது. ஆனால், அவர்கள் இம்மாதிரி எத்தனையோ பார்த்தவர்கள். என்ன நடக்கும் என்று அறிந்தவர்கள். “வேற வழியில்லை சார், காலைல செய்தி வரும் பாருங்க,” என்று சொல்லிவிட்டு சுல்தான்பேட்டையிலிருந்த ஆட்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டுப் போய்விட்டனர். பொறியாளர்கள் அனைவருமே அவர்கள் சொன்ன மாதிரிதான் நடக்கும், வேறு வாய்ப்பில்லை என்றார்கள்.

இதற்கிடையே, ஊருக்குப் போன மகன் போன் பண்ணவில்லை என்று சங்கரின் அப்பா பாண்டியனின் செல்லுக்கு ஐந்தாறு முறை அழைத்துவிட்டார். அங்கே இருந்தவர்களில் பாண்டியன்தான் சங்கருக்கு மிகவும் நெருக்கம். அவரால் என்ன பதில் சொல்வது என்றே தீர்மானிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் என்னென்னவோ சொல்லி சமாளித்திருக்கிறார். ஆனால், களப்பணியாளர்களும், பொறியாளர்களும் இப்படி சொன்னதற்குப் பின் மாலை 7 மணியளவில், சங்கரின் அக்கா கணவரை அழைத்து, இங்கே சங்கரை கொஞ்ச நேரமாக காணவில்லை, தேடிட்டிருக்கோம், முடிஞ்சா நீங்க மட்டும் கொஞ்சம் இப்பவே கிளம்பி பொள்ளாச்சி வந்துருங்க, என்று சொன்னார். பின் திரும்பி எங்களிடம், “இவருக்கே கொஞ்சம் பத்தாது, ஆனால் சங்கருக்கு அண்ணன் தம்பி யாரும் இல்ல, அப்பாகிட்டயும் சொல்லவே முடியாது, வேற வழியில்லாமதான் இவருகிட்ட சொன்னேன், என்ன பண்ணப் போறாரோ,” என்று பரிதாபமாகச் சொன்னார்.

ஒன்றும் செய்வதற்கில்லை. இனி விடியற்காலையில்தான் தேடுதலைத் தொடங்கவும் முடியும். சென்னையிலிருந்து வந்தவர்களும் நாங்கள் உள்ளூர்க்காரர்களும், ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி அரற்றியபடியே இரவைக் கழித்தோம். மறுநாள் காலை 7 மணிக்கே, பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்த ஜீப்பில் ஏறி அவரும் கதிரும் பாண்டியனும் சுல்தான்பேட்டைக்கு புறப்பட்டனர். அப்போதுதான் அவருக்கு சங்கரின் அக்கா கணவரிடமிருந்து போன் வந்திருக்க வேண்டும். தொடர்ந்து என்னிடம் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

பாண்டியன் பயந்தபடியே சங்கரின் அக்கா கணவர் சொதப்பிவிட்டார். சங்கரின் அம்மா அப்பாவிடமும் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் அழைத்து வந்து விட்டார். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் கலக்கம் கூடியது. பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே காரில் இருந்த சங்கரின் அம்மாவையும் அப்பாவையும் பார்த்தவுடன் அந்தக் கலக்கம் பன்மடங்கு அதிகமாகிவிட்டது. அந்த முகங்களில் இருந்த பேதைமையும் நம்பிக்கையும் எங்களை வாயடைக்க வைத்தது. ஒன்றும் பேசாமல் ஐ.பிக்கு கூட்டிச் சென்றோம். சங்கர் அங்க இருக்கானா, என்ற முதியவரின் கேள்விக்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை. ஐ.பிக்குச் சென்று அறைகளுக்குள் அனுப்பி, ரெப்ரெஷ் செஞ்சுட்டு வாங்க சார், காபி டிபன் சாப்பிடலாம், என்று சொல்லிவிட்டு வெளியே உட்கார்ந்து கொண்டோம். சங்கரின் அம்மாவையம் அக்காவையும் பார்க்கவே துணிவில்லை.

சங்கரின் அப்பா எதையோ ஊகித்திருக்க வேண்டும். உள்ளே போனவர் மெதுவாக வெளியே வந்து, “சார் நான் சங்கர்கிட்ட இந்த ட்ரிப்பே போக வேணாம்னேன். கல்யாணத்துக்கு ஜாதகம் எடுக்கலாம்னு ஜோசியர்ட்ட இவன் ஜாதகத்தை கொண்டு போனப்ப அவரென்னவோ அத ரொம்ப நேரம் பாத்துட்டு, நீங்க இந்த ஜாதகத்தை அடுத்த மாசம் ஒண்ணாந் தேதிக்கு அப்பறம் கொண்டு வாங்க அப்ப பாத்துக்கலாம். இப்ப வேணாம்னு சொல்லிட்டார். அதுலேருந்து ஏனோ எனக்கும் மனசே சரியில்லே. இந்த வெளியூர்ப் பயணம்லாம் வேண்டாம்டான்னேன். என்னவோ அப்பறம் ஏதோ ஆபிஸ் எக்ஸ்சாம்லாம் வருது. படிக்க உக்காந்துட்டா எங்கயும் போக முடியாது, இந்த ஒரு தடவை ரெண்டுநாள்தானே போயிட்டு வந்துடறேன்னான். இவரு, பாண்டியனும் நாங்க பாத்துக்கறோம் சார், அனுப்புங்கன்னார். கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு அனுப்பிச்சு வெச்சோம். ஒன்னும் பிரச்னையில்லயே,” என்று மென்று முழுங்கிக் கேட்டார். எதையோ சொல்லி சமாளித்து மீண்டும் உள்ளே அனுப்பி வைத்தோம்.

அவர்கள் வெளியே வருவதற்குள் பாண்டியனின் அழைப்பு வந்துவிட்டது. எதிர்பார்த்தபடியே இவர்கள் போவதற்கும் சங்கரின் உடல் சுல்தான்பேட்டை சைப்பனில் கிடைப்பதற்கும் சரியாக இருந்திருக்கிறது. பாண்டியன் போனிலேயே கதறி விட்டார். என்னால் அவருக்கு ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. அவருக்கு.அவரே சற்றுத் தேற்றிக் கொண்டு, “பொள்ளாச்சி மருத்துவமனைக்குத்தான் கொண்டு வந்தாக வேண்டும், போஸ்ட் மார்ட்டம் பண்ணாம முடியாது, கூடுமான வரைக்கும் பாடிய ரொம்ப சேதப்படுத்தாம பாத்துக்கலாம்னு நம்ம இன்ஜினீர்செல்லாம் சொல்லிருக்காங்க, நீங்க இப்போதைக்கு அவங்ககிட்ட எதையும் சொல்ல வேண்டாம், அப்புறம் பாத்துக்கலாம்,” என்று சொல்லி போனை வைத்தார்.

பொள்ளாச்சி மருத்துவமனைக்குள் எடுத்து செல்லப்படும் முன்னர் சங்கரின் உடலைச் சில கணங்கள் மட்டுமே பார்த்தேன். நல்ல ஆஜானுபாகுவான உடல், ஒரு விளையாட்டு வீரனின் உடல், நீருக்குள் இருந்ததால் உப்பிப் பெருத்து இன்னும் பெரியதாக இருந்தது. கண்கள் இருந்த இடததில் பள்ளங்கள். மீன்கள் கடித்துத் தின்றிருக்கும் என்றார்கள் அங்கிருந்தவர்கள். அதற்கு மேல் பார்க்க முடியாமல் ஓடி வந்துவிட்டேன். அதற்குப்பின் நடந்ததெல்லாம் கனவு போல இருந்தது. எப்படி அவர்களிடம் விஷயத்தைச் சொன்னோம், எப்படி சங்கரின் உடலை தகனம் செய்தோம், .எப்படி அவர்களை ஊருக்கு அனுப்பினோம் என்று இப்போதும் என்னால் முழுமையாக நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை.

சங்கரின் அப்பா, “சார், நாங்க முன்னாடி போறோம் நீங்க சங்கரைக் கூட்டிண்டு வந்துருங்கோ,” என்று எங்கள் ஒவ்வொருவரிடமும் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார். சங்கரின் அம்மா விஷயத்தைச் சொன்ன மறுகணம் மயங்கி விழுந்தவர், பின் அதிலிருந்து மீண்டு ஊர் திரும்பும் வரை ஒன்றுமே பேசவில்லை. ஆனால், அவர் எங்களை அனைவரையும் பார்த்த பார்வையில் இருந்தது என்ன என்றுதான் இனம் கண்டு கொள்ளவே முடியவில்லை. அது குற்றச்சாட்டா இறைஞ்சலா என்று ரொம்ப நாள் குழம்பிக் கொண்டிருந்தேன்.

ஆனால் பதினொரு ஆண்டுகள் என்பது நீண்ட காலம்தான் போல. இவரையா, சங்கரின் அப்பாவையா நான் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை, என்று மனம் நொந்து கொண்டது. அந்தச் சம்பவங்களின்போது மனதில் தோன்றிய இனம்புரியாத குற்றவுணர்வு மீண்டும் குடையத் தொடங்கியது. சங்கரின் அம்மாவின் பார்வை மீண்டும் மனதில் எழுந்தது. கூடவே இவருக்கு என்னை அடையாளம் தெரியாதது சற்றே ஆறுதலாகவும் இருந்தது.

இந்த எண்ணவோட்டங்களை, ‘சார் உங்களுக்கு சிரமமா இல்லேன்னா என்னைக் கொஞ்சம் இந்த ரோட்ட கிராஸ் பண்ணி எதிர்க்க ஆத்துல விட்டுர்றேளா,” என்ற அவரின் குரல் அறுத்தது. வேறு வழியில்லை. இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி என்று மெதுவாக அவரை அழைத்துக் கொண்டு ரோட்டைக் கடந்து வீட்டு வாசலில் விட்டேன். திரும்பலாம் என்று நினைக்கும்போதே, “சார் உள்ள வந்து ஒரு வாய் காப்பி சாப்பிட்டுட்டு போங்க சார்,” என்று சொல்லத் தொடங்கினார். அதற்குள் வீட்டிற்குள்ளிருந்து, “இதே வேலையாப் போச்சு உங்களுக்கு, சொல்லிட்டுப் போனாத்தான் என்ன, எங்கயாவது விழுந்து வெச்சா உங்க மகளுக்கு நான்தானே பதில் சொல்லணும்?” என்று காட்டமாக ஒரு பெண் குரல் ஒலித்தது.

அதற்குள் அவர் பின்னால் நான் வீட்டின் முன்னறைக்குள் நுழைந்திருந்தேன். உள்ளே ஏதோ ஒரு ஒவ்வாத வாடை அடித்தது. என்னவென்று பார்க்கும்போதே பக்கவாட்டு அறையில், கட்டிலில் ஒரு முதிய பெண்ணுருவம் படுத்திருந்தது தெரிந்தது. அவர் கத்தியிருக்க முடியாதே என்று நினைக்கும்போதே உள்ளறையிலிருந்து எளிய தோற்றத்திலிருந்து ஒரு பெண்மணி வந்தார். என்னைப் பார்த்ததும் அவரது முகபாவம் மாறியது.

“இதுதான் லட்சுமி, எங்கள பாத்துக்கறா, எம் பொண்ணு இங்கிருந்து நாலு மைல் தள்ளி இருக்கா, ரெண்டு நாளைக்கொரு தரம் பாக்க வருவா,” என்றார் பெரியவர்.

அதற்குள் அந்த லட்சுமி, “தெரிஞ்சவாளா சார், கொஞ்சம் சொல்லிட்டு போங்கோ! இப்படி சொல்லாம கொள்ளாம வெளில போயிடறார், ஏதாவது ஆச்சுன்னா நான் அவர் மகளுக்கு என்ன பதில் சொல்லறது? நான் படுத்துருக்கற அந்த மாமியோட பீ மூத்தரம் அள்ளுவனா, சமயலப் பாப்பனா, மத்த வீட்டு வேலைய கவனிப்பனா? இல்ல, இவரையே பாத்துண்டிருப்பனா? என்னதான் கைய நீட்டிக் காசை வாங்கினாலும் இவ்வளவு வேலையை ஒண்டிமா எப்படி சார் செய்யறது. சொல்லுங்கோ,” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

பெரியவர் முகத்தில் இப்போது ஒரு அசட்டுக் களை வந்திருந்தது. வாயே திறக்கவில்லை. என் பார்வை அந்தத் ரூம் பக்கம் போவதைப் பார்த்து மெல்லச் சொன்னார், “என் வைஃப்தான் சார், இப்ப ஒரு நாலு வருஷமா படுத்த படுக்கையாயிட்டா, எல்லாம் பெட்லதான். பாவம், இந்த லட்சுமிதான் எல்லாம் செய்யறா. நல்லவா சார். என்ன, அப்பப்ப என்னைக் கொஞ்சம் திட்டுவா,” என்று சொல்லி குழந்தை மாதிரி சிரித்தார்.

என் கவனம் உள்ளே படுக்கையிலிருந்த பெண்மணியின் மேலே இருந்தது. இப்போது அவர் சற்றே திரும்பி ஒருக்களித்து எங்களைப் பார்க்கத் தொடங்கியிருந்தார்.

பெரியவர், “லட்சுமி, சாருக்கு ஒரு தம்பளர் காபி போடு, அப்படியே எனக்கு அரை தம்பளர் குடு,” என்று சொல்லிக் கொண்டிருந்தார். லட்சுமி முணுமுணுப்புடன் உள்ளே போக, நான் அவசர அவசரமாக, “இல்ல சார், நான் காபி டீ குடிக்க மாட்டேன். அப்பறம் ஒரு வேலையிருக்கு உடனே போகணும்,” என்றேன்.

வாய் இதைச் சொல்லிக் கொண்டிருந்தாலும், கண்கள் அந்த அறையில் படுத்திருந்த சங்கரின் அம்மாவையேதான் பார்த்துக் கொண்டிருந்தன.. அப்போது சட்டென்று அவரும் என்னை பார்த்தார். ஒரு கணம் என் கண்களை சந்தித்தது அவரின் கண்கள். என்னவோ சொல்ல எத்தனிக்க, வாய் கோணத் தொடங்கியது, கொஞ்சம் இனம் புரியாத சத்தங்கள் வந்தன. பெரியவர், “சார், அவ உங்களப் பாத்துதான் ஏதோ சொல்ல ட்ரை பண்றா,” என்றார்.

பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த முதிய கண்கள் அப்போது பெற்ற கூர்மை என் வயிற்றிலிருந்து ஒரு சங்கடத்தைக் கிளப்பி நெஞ்சை லேசாக அடைத்தது. அர்த்தமற்ற ஒலிகள் இப்போது சற்றே தெளிவடையத் தொடங்கின. என்னை மிகக் கூர்மையாக பார்த்தபடி, மிகத் தெளிவாக அவர் சொன்ன, “பொள்ளாச்சி, பொள்ளாச்சி,” என்ற சொற்கள் என் காதைக் கிழித்தன. அடுத்த கணம் நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறி ஒரு கணத்தில் ரோட்டைக் கிராஸ் செய்து வண்டியை அடைந்து உதைத்துக் கிளம்பினேன்.

பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் அந்தப் பக்கம் போனபோது அந்த வீட்டில் ஏதோ விசேஷம் போல ஒரு சிலர் வெளியே போவதும் வருவதுமாக இருந்தார்கள். எனக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. வெளியே வந்த ஒருவரின் பின்னால் தொடர்ந்து சென்று மெதுவாக, “சார், அந்தத் வீட்ல என்ன சார்?” என்று தயங்கியபடியே கேட்டேன். உனக்கென்ன அதில், என்ற தொனியில் எற இறங்கப் பார்த்தாலும், “ஒரு டெத்து சார், காரியம்லாம் முடிஞ்சு இன்னிக்கு 13ம் நாள் கிரேக்கியம்,” என்றார்.

“அடடா முடியாம படுத்திருந்தாங்களே அந்த அம்மாவா?”

”அந்தக் கொடுமையை ஏன் சார் கேக்கறீங்க? அப்படியாவது நடந்திருக்கலாம். அவங்க ஆத்துக்காரர், எனக்கு சித்தப்பா முறை, அவர் போயிட்டாரு சார், திடீர்னு,” என்றார். நான் எதுவும் பதில் சொல்வதற்கு முன், “சார் அதோ பஸ்ஸு வந்துடுத்து,” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்று விட்டார். நானும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தேனே தவிர எவ்வளவு நேரமான பின்னும் என்னால் உள்ளே போக முடியவில்லை.

3 comments

  1. மானுட வாழ்வென்பது , விதியின் கரங்களில் விளையாட்டுப் பொருள்..!

  2. சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ராம் வசந்த், இதே போன்ற ஒரு உண்மை நிகழ்வைப் பதிவிட்டிருந்தார்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.