லூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்

Poem

In the early evening, as now, as man is bending
over his writing table.
Slowly he lifts his head; a woman
appears, carrying roses.
Her face floats to the surface of the mirror,
marked with the green spokes of rose stems.

It is a form
of suffering: then always the transparent page
raised to the window until its veins emerge
as words finally filled with ink.

And I am meant to understand
what binds them together
or to the gray house held firmly in place by dusk

because I must enter their lives:
it is spring, the pear tree
filming with weak, white blossoms.

Louise Glück, 1943


கவிதை

இப்போதைப் போலதொரு இளமாலைப் பொழுதில்
தன் எழுத்துமேஜை மீது குனிந்திருக்கும் ஆடவனொருவன்.
அவன் மெதுவாகத் தலையுயர்த்துகிறான்; ரோஜாக்களுடன் ஏதிர்வருகிறாள் பெண்ணொருத்தி.
ரோஜாத் தண்டுகளின் பசும் ஆரங்கள்
முத்திரையிடும் அவள் முகம் ஆடியில் மிதந்தெழுகிறது.

இதுவும்கூட ஒருவிதத்
துயரம்தான்: பின் எப்போதும், அதன் நாளங்கள்
மை நிரம்பிய வார்த்தைகளாக உயிர்த்தெழும் வரையில்
ஜன்னலெதிரே உயர்த்தப்படும் ஒளிபுகும் வெற்றுக் காகிதம்.

ஒருவருக்கொருவருடனும்
அந்தி அதைப் பெயரவிடாமல் பற்றியிருத்தும் சாம்பல் வீட்டுடனும்
இருக்கும் பிணைப்பை
நான்தான் அர்த்தப்படுத்த வேண்டும் போல

அவர்கள் வாழ்வுகளில் நான் புகவேண்டும் என்பதால்;
இதோ வசந்தகாலம், பேரிக்காய் மரத்தின் மீதோ
வலுவற்ற வெண்மலர்ப் படலம்.

மொழியாக்கம்: நகுல்வசன்


லூயி க்ளூக்கின் ‘கவிதை’ -நகுல்வசன் மொழியாக்கம் பற்றி சில குறிப்புகள்

நோபல் விருது அறிவிப்புக்கு முன் லூயி க்ளூக் பெயர் கேள்விப்பட்டதில்லை. ஆனாலும்கூட அவருக்கு விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சி அளித்தது. சென்ற நூற்றாண்டின் பின்பாதிப் பகுதியும் இந்த நூற்றாண்டின் முதற்பகுதியும் அமெரிக்க எழுத்தாளர்களுக்கு உரியவை, அவர்கள் கிளாசிகல் ருஷ்ய, பிரெஞ்சு, பிரிட்டிஷ் எழுத்தாளர்களுக்கு இணையாக வைத்துப் பேசப்படப் போகிறார்கள் என்ற நம்பிக்கையை உறுதி செய்யும் மற்றுமொரு சான்று இது. அமெரிக்காவின் பொருளாதார, ராணுவ பலம் காரணமாக இந்த விருது வழங்கப்படவில்லை, அதன் பராக்கிரமம் குன்றி வரும் காலம் இது.

நகுல்வசன் மொழிபெயர்ப்பு க்ளூக் கவிதைக்கு ஒரு அறிமுகமாய் அமைகிறது. மேற்கத்திய இலக்கியத்தை அதன் வம்சாவழி பற்றிய புரிதல் இல்லாமல் முழுமையாய் உள்வாங்கிக் கொள்ள இயலாது. ஆனால், அது ஆய்வுத்துறைக்கு உரியது. அவர்கள் வழியே நமக்கு வந்து சேர வேண்டியது. அது இல்லாத நிலையில் நாம் நம்மளவில் சரியாகவோ தவறாகவோ புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மொழியாக்க நோக்கு அது குறித்து கவலை கொள்ளத் தூண்டும் நிமித்தமாக அமைகிறது.

கவிதையின் தலைப்பே ‘கவிதை’ என்பதால் இது கவிதையைப் பற்றிய கவிதை என்ற எண்ணத்துடன் வாசிக்கத் துவங்கலாம்.

“இப்போதைப் போலதொரு இளமாலைப் பொழுதில்/ தன் எழுத்து மேஜை மீது குனிந்திருக்கிறான் ஆடவனொருவன்,” என்று துவங்குகிறது கவிதை. போலொரு தெரியும், போன்றதொரு தெரியும், அது என்ன போலதொரு? (ஹைப்ரிட் எழுத்தாளரான நகுல் வசனின் ஹைப்ரிட் சொல்லாக்கம் இது, அவருக்கேயுரியது இருந்துவிட்டுப் போகட்டும்.) ‘இப்போதைப் போலதொரு இளமாலைப் பொழுதில்’ என்பதில் வரும் அந்த ‘இப்போது’ புதிர்த்தன்மை கொண்டதே. ஆனால் க்ளூக் சொல்ல வருவது புரிகிறது. இளமாலைப் பொழுதை கற்பனை செய்து கொள்ளச் சொல்கிறார், அது நிகழ்தன்மை கொண்டது. கவிதையை நாம் வாசிக்கும் இக்கணம், இளமாலைப் பொழுது. இப்பொழுது ஆடவனொருவன் தன் எழுத்து மேஜை முன் குனிந்து அமர்ந்திருக்கிறான். அவன் மெல்ல முகம் தூக்கிப் பார்க்கிறான். ஒரு பெண் வருகிறாள், அவள் கைகளில் ரோஜாக்கள். “ரோஜாத் தண்டுகளின் பசும் ஆரைகள் முத்திரையிட / ஆடியில் மிதந்தெழுகிறது அவள் முகம்.” “marked with the green spokes of rose stems,” என்று க்ளூக் எழுதுகிறார். ஸ்போக்ஸ் என்றதும் நமக்கு உடனே சைக்கிள் சக்கரத்தின் கம்பிகள் நினைவுக்கு வருகின்றன. இது ஏதோ ரோஜா தண்டுகளாலான வட்ட முத்திரை போலிருக்கிறது, அவள் முகத்தின் மீது தன் குறி இட்டிருக்கிறது- “Her face floats to the surface of the mirror.” கண்ணாடி எங்கிருந்து வந்தது? நினைவின் உருவகம் அது என்று நினைக்கிறேன். தன் எழுத்து மேஜை மீது குனிந்திருப்பவன் முகம் தூக்கிப் பார்க்கிறான்- அவன் முன் ஒரு பெண் ‘தோன்றுகிறாள்’, appears. இது நினைவில் தோன்றும் மாய உரு என்பதால்- ‘ஆடியில் மிதந்தெழுகிறது அவள் முகம்’. அதில் ரோஜாத் தண்டுகளின் முத்திரை. எப்போதும் போல் இப்போதும் அவள் ரோஜாக்கள் கொண்டு வருகிறாள். அவளும் ரோஜாவும் ஒன்றென அவன் நினைவில் ஆகிவிட்டவள்.

“It is a form/ of suffering,” என்பதை, “இது ஒரு வகை துயர வடிவம்,” என்றும் வாசிக்கலாம். அவன் நிமிர்ந்து பார்ப்பதும், அவள் ரோஜாக்களுடன் தோன்றுவதும். இது புகைப்படம் என்றால் இருள் அறையில் அதன் உருவம் வளரும். ஆனால் இது மனப்படம், ஒளியில் அதன் உருவம் முழுமை பெறுகிறது. எப்போதும் ஒளி ஊடுருவும் காகிதம் ஜன்னலுக்கு எதிரே உயர்த்திப் பிடிக்கப்படுகிறது, மெல்ல மெல்ல அதில் சொற்கள் தோன்றுகின்றன, அவை அந்தக் காகிதத்தின் நாளங்களை வெளிப்படுத்துகின்றன. காகிதத்தின் உயிரோட்டம், அதன் நாளங்களின் வரைபடம், சொற்களால் புலப்படுத்தப்படுகிறது. ஒளி வரைந்து முடிக்கும் வரை காகிதம் ஜன்னலின் முன் உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. அந்தப் பெண், கவிஞனின் muse, அவன் எழுத்தைத் தூண்டும் தேவதை, என்று நினைக்கிறேன். அவள் நினைவில் அவன் எழுதுகிறான், இந்தப் பத்தி படிமச் சித்தரிப்பைக் கொண்டு, கவிதை உருவம் பெறுவதை விவரிக்கிறது.

ஆங்கிலத்தினுடன் ஒப்பிடாமல்கூட இதைச் சொல்லலாம்-

“இதுவும்கூட ஒருவிதத்
துயரம்தான்:”

என்று சொல்லி விட்டு,

“பின் எப்போதும்,
அதன் நாளங்கள்
மை நிறைந்த வார்த்தைகளாய்
உயிர்த்தெழும் வரை
ஜன்னலெதிரே உயர்த்தப்படும்,
ஒளிபுகும் வெற்றுக் காகிதம்,”

என்பது நல்ல தமிழாக்கமாய்த்தான் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஆனால் அந்த துயரத்தை நாம் இன்னமும் சற்று நுட்பமாக வாசிக்கவும் கவிதை இடம் தருகிறது. அந்த பெண் எழுத்தைக் தூண்டும் தேவதையாக படிமாக்கப்படுகிறாள். அந்தப் உன்னதப் படுத்தலில் மட்டுமே அவளுக்கு அவன் மனதில் ஒர் உயிர்ப்புள்ள அடையாளம் அளிக்கப்படுகிறது. அந்த உன்னதத்திற்கும் அப்பால் அவளுக்கு எப்போதுமே ஒளி ஊடுறுவதற்காக காத்திருக்கும் வெற்றுத் தாளின் அடையாளம்தான். கவிதையைப் பிரசவிப்பதால் தேவதையாக மாறிவிடும் அவள் மற்ற சமயங்களில் பிறரால் நிரப்பப்படும் ஒரு கொள்கலனாக மட்டுமே இருக்கிறாள் என்பதே இதில் தோய்ந்திருக்கும் சோகம். கவிதை தனது பிறப்பையும் அதை தற்போது நமக்காக கூறிக் கொண்டிருக்கும் அவ்விருவரின் மகள் அல்லது மகளின் பிறப்பையும் பேசுவதாகவும் நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

கவிதையின் பணி என்ன? அர்த்தப்படுத்துதல், பொருளாதல். இந்தக் கவிதையில் அதன் பணி என்ன? அவர்கள் இருவரையும் எது பிணைக்கிறது என்பதை அர்த்தப்படுத்த வேண்டும், அல்லது, அந்திப் பொழுது உறுதியாய்ப் பற்றி இருத்தும் சாம்பல் வீட்டுடன் அவர்களைப் பிணைத்திருப்பது எது என்பதை அர்த்தப்படுத்த வேண்டும். நேற்று, இன்று, அங்கு, இங்கு, என்றில்லை. இது எப்போதும் நிகழில். கவிதையின் துவக்கத்தில் சொன்னது போல், ‘இப்போதைப் போலதொரு இளமாலைப் பொழுதில்,” இதெல்லாம் நடக்கிறது. ஆனால் இப்போது என்ன அந்திப் பொழுதா? இதை வேறு திசையிலிருந்து அணுக வேண்டும்.

அந்திப் பொழுது சாம்பல் நிற வீட்டை அதன் இடத்தில் உறுதியாய் இருத்தி வைத்திருக்கிறது, அதனுடன் அவர்களுக்கும் ஒரு பிணைப்புண்டு, அது என்ன என்பதே கவிதையின் விசாரணை. சாம்பல் நிறம்- ஒளியும் அல்ல, இருளும் அல்ல, அவற்றுக்கு இடைப்பட்டது. அந்த வீட்டை அதன் இடத்தில் உறுதியாய் இருத்தி வைத்திருப்பது அந்திப் பொழுது, அது ஒளியும் அல்ல, இருளும் அல்ல. இந்த ‘இடை’ வெளி, உருமாற்ற கணம், இதுவே கவிதைக்கு உரியது. கவிதைக்கு மட்டுமல்ல, கவிஞனுக்கும், கவிதா தேவிக்கும் உரியது. கவிதையை நாம் வாசிக்கும் இக்கணம், இதுவும் ஒரு அந்திப் பொழுது, பொருளுக்கும் பொருளின்மைக்கும் இடைப்பட்ட கணம் இது என்பதால்.

இந்தப் புரிதலின் தேவை என்ன? இக்கணத்தில், இவர்கள் இருக்கும் இடத்தில், கவிதை பிறக்கப் போகிறது- “அவர்கள் வாழ்வுகளில் நான் புகவேண்டும் என்பதால்:” கொலோன் குறி இவர்கள் வாழ்வு இன்னது என்று சொல்கிறது: “இதோ வசந்த காலம், பேரிக்காய் மரத்தின் மீதோ/ வலுவற்ற வெண்மலர்ப் படலம்.” ஆங்கிலத்தில், ‘filming with weak, white blossoms,’ என்று அழகாக வருகிறது. வலுவற்ற, வெண்ணிற, அன்றலர்ந்த அரும்புகள் திரை போர்த்திருக்கிறது. வசந்தம் வந்து விட்டது. கவிதை அல்லது குழந்தையின் பிறப்பு என்பது மகிழ்வளிக்கும் விஷயமே. ஆனால் இது மட்டுமே ஒரு மணவாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்குப் போதுமானதா என்பதை இறுதி வரியின் “வலுவற்ற” என்ற உரிச்சொல் அடியறுக்கிறது. இக்கவிதையின் புரிதல் வலுவற்று நிழலாடும் நம் மனவாழ்வுக்கும் பொருந்தும், எனினும் இக்கணம் இனிய கணம்.

(குறிப்பு: டகுல் பாச்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.