கவாஸ்கரும் கபில்தேவும்

மு. முத்துக்குமார்

பரபரத்துக் கொண்டிருந்த கடைவீதிக்கு, சற்றும் பொருந்தாமல் தூரத்தில் ஒரு வாழைமரம் தெரிந்தது. ஸ்டார் ஐஸ் பேக்டரி, ராஜேஸ்வரி ஹோட்டல், ஒரு வங்கி, பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை, மீன் அங்காடியின் நுழைவு வாயில் என அனைத்தையும் தாண்டி தூரத்தில் தெரிந்த வாழைமரத்திற்கு அருகில் வந்திருந்தார் கோவிந்தன். சற்றுமுன் பெய்த மழையால் சேறும் சகதியுமாய் இருந்த சாலையில் நடந்த அயர்ச்சியை, வாழையிலையில் அரும்பியிருந்த மழைத்துளி சற்று குறைத்து கோவிந்தனை ஆசுவாசப்படுத்தியது..

அந்தக் கடையின் பெயர் இப்போது கோவிந்தன் மருந்துக் கடையல்ல. ‘அஜாஸ் மெடிக்கல்ஸ்’ என்று மாறியிருந்தது. “என்ன அங்கிள் இவ்வளவு தூரம்?..மருந்த சொல்லி விட்டிருந்தா நடராஜன்ட்ட கொடுத்து விட்டிருப்பேன்ல…” என்ற ஜாகீரிடம், “பரவாயில்லப்பா…” என்று மருந்து சீட்டை கொடுத்து விட்டு விசாலமான அந்த கடையின் முகப்பிலிருந்த கண்ணாடிப் பெட்டிக்கு முன்னாலிருந்த வாடிக்கையாளர் நாற்காலியில் மெல்ல அமர்ந்தார்.

ஐந்தாறு வருடங்களுக்கு முன்புவரை அக்கடையின் உரிமையாளராக இருந்த நினைவுகள் மேலெழும்பி வருவதை தவிர்க்க நினைத்தாலும், கோவிந்தனால் முடியவில்லை. அப்போதுதான் அஜாஸ் மெடிக்கலுக்கு புதிதாக வந்திருந்த மருந்துகளை சரிபார்த்து உள்ளே அடுக்கிக் கொண்டிருந்த அவர் பேரன் நடராஜன், தன் ஊதாரித்தனத்தால் இக்கடையை தன்னிடமிருந்து இழக்க வைத்த இறந்து போன தன் மகனை நினைவுக்கு கொண்டு வந்தான்.

கோவிந்தன் வாழும் தெரு தலைமுறைகளாக வெளியாட்களை சுவீகரித்துக் கொண்டதில்லை. அவர் ஃபார்மஸிஸ்டுக்கு படித்த காலத்தில் இருந்தே இத்தெரு இப்படித்தான் இருக்கிறது. எதிர் வீட்டில் இப்போதிருந்தால் 90 வயது தாண்டியிருக்கும் சீனிவாசய்யரின் மூன்றாம் தலைமுறை குடியிருக்கிறது. அவருடைய கொள்ளுப் பேரன்கள் நடராஜனுடன் தான் பள்ளி இறுதியில் படிக்கிறார்கள். இத்தெருவிலுள்ள பையன்கள் எல்லாம் கிரிக்கெட் மேல் மோகம் கொண்டு ஈடுபாட்டுடன் விளையாடுவதற்கு காரணம் சீனிவாசய்யர் குடும்பத்திற்கு விடுமுறை தோறும் வந்து போகும் அவருடைய உறவினர் ஒருவர்தான். பக்கத்து வீட்டு ஜாகீர் அவருடைய கண்டுபிடிப்புதான். இந்தியாவிற்கு முதல் உலகக் கோப்பையை கபில்தேவ் பெற்றுத் தந்திருந்த காலக்கட்டமது. எண்பதுகளின் நடு. கவாஸ்கரின் ஆட்டம் சற்று தொய்வடையத் தொடங்கிய காலகட்டமும் கூட.

“இந்தாங்க கோவிந்தன் நீங்க கேட்ட ரெண்டு லட்சம்…” என்ற ஜாகீரின் தந்தையிடம், “அபுபக்கர் பாய், இன்னொரு யோசன எனக்குத் தோணுது…” என்றார் கோவிந்தன்.

” சொல்லுங்க கோவிந்தன்…”

” என் பையனும் ஊதாரியா போய்ச் சேந்துட்டான். இனிமே என்னாலயும் இந்த மருந்துக் கடய நடத்த முடியாது. இன்னும் மேல ரெண்டு லட்சம் குடுத்துட்டு நிலத்தோட அந்தக் கடய எடுத்துக்குங்க. உங்க ரெண்டாவது பையன் ஜாகிருக்கு ஒரு தொழில் அமைஞ்ச மாதிரி இருக்கும்…நானும் கடன்காரனாகாம இருப்பேன்…” என்றார் கோவிந்தன்.

நீண்ட யோசனைக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட்டு தகராறில் தன் கையையும், வாழ்க்கையையும் இழந்திருந்த தன் மகனுக்கு அது உகந்ததாக இருக்கும் என்று எண்ணி ஒப்புக் கொண்டார் அபுபக்கர்.

ஜாகிரின் பந்து வீச்சு அந்த ஊரில் உள்ள கிரிக்கெட் ஆடுபவர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றது. எதிரணிகளின் பேட்ஸ்மென்களுக்கு, அவனுடைய தெத்துப் பல்லும் நீண்ட தூரத்திலிருந்து ஓடிவந்து, பந்தை கையிலிருந்து விடுவிக்கும் முன் தேர்ட்மேன் திசையை கண நேரம் நோக்கும் அந்த பெரிய கண்களும் எப்போதும் கபில்தேவை ஞாபகப்படுத்தும். சீனிவாசய்யரின் அந்த உறவினர் தந்த பயிற்சியாலும், ஊக்கத்தாலும் ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்கி அதன் கேப்டனாகவும் இருந்தான் ஜாகிர். கல்லூரியில் தன்னை செதுக்கிக் கொள்வதைவிட தன்னுடைய ரெயின்போ கிரிக்கெட் அணியைச் செதுக்குவதில்தான் நேரம் செலவழித்தான்.

கிரிக்கெட் பிடிபட்டதுபோல் மருந்து வியாபாரம் பிடிபடவில்லை ஜாகிருக்கு. கோவிந்தன் ஆறு மாதங்களுக்கு மேலாக அவனுடன் கடையில் இருக்க வேண்டியிருந்தது.

இலையின் நுனியிலிருந்து புழு தொங்கி ஆடுவது போல் தன் இடது தோளிலிருந்து சின்னதாய் தொங்கிக் கொண்டிருந்த வெட்டப்பட்ட கையின் அடிக்கூம்பு அங்குமிங்கும் ஆட பரபரப்பாய் இருந்த ஜாகிர், “இப்ப ஓரளவுக்கு எல்லாம் புடிபடுது அங்கிள்…” என்று கோவிந்தனின் நினைவுகளை கலைத்தான்.

சாலையில் நிலைகுத்தியிருந்த பார்வையை விலக்கி, மூக்கிலிறங்கியிருந்த கண்ணாடியை சற்று மேலேற்றியவாறு, ஜாகிரின் எஞ்சியிருந்த கையை நோக்கினார் கோவிந்தன்.

“பாழாப் போன அந்த கிரிக்கெட் சண்டைல என் ஊதாரிப் பையன காப்பாத்துறேன்னு, கையத் தொலைச்சுட்டயே ஜாகிரு…” என்று கலங்கியவரிடம், “அதெல்லாம் நான் எப்பவோ கடந்தாச்சு அங்கிள். கை போயும் அண்ணன காப்பாத்த முடியாம போச்சுங்குற வருத்தந்தான் இன்னு இருக்கு…சரி இந்தாங்க உங்க மருந்து. நட்டு, தாத்தாவ விட்டுட்டு வந்துர்ரயா…”

“இல்லப்பா…நானா போயிருவேன்…” என்று மெல்ல எழும்பியவர், “நட்டு, மதியம் சாப்பாட்டுக்கு வந்துரு…” என்று கிளம்பினார். தன் மகனுடைய இடத்தில் ஜாகிர் அமர்ந்திருப்பது தன்னை பெரிதாக பாதிக்காவிட்டாலும், அவனிடம் நடராஜன் வேலை செய்வது ஏதோ ஒரு விதத்தில் அவரைப் பெரிதும் சோர்வடையச் செய்தது.

நடராஜன் அவர் செல்வதையே சற்று நோக்கி விட்டு மீண்டும் வேலைகளில் தொலைய முயன்றான். அப்பா இறப்பதற்கு முன்னாலும் தாத்தாவின் மருந்துக் கடை வருமானம்தான் அவனையும், அவன் அம்மாவையும் காத்தது. அப்பாவின் அரசாங்க சம்பளம் முழுதும் கிரிக்கெட், சீட்டு விளையாட்டு என்று விரயம்தான் ஆனது என்பார் தாத்தா. அப்பாவிற்கு பிறகு தான் அந்த சம்பளம் அவர்கள் குடும்பத்திற்கு உதவியது, அம்மாவிற்கு கொடுக்கப்பட்ட அரசாங்க வேலை வழியாக. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் இந்த மருந்துக் கடைக்கு வந்துருவான். இங்கு வந்த முதல் கோடை விடுமுறையின்போது தாத்தா அமர்ந்திருந்த இடத்தில் இப்போது ஜாகிர் அங்கிள் இருக்கிறார். இங்கு கிடைக்கும் பணம், அவனுடைய கல்விச் செலவுகளை சமாளிக்க உதவுகிறது. அப்பா, இங்கு அமர்ந்திருந்தால் நான் இங்கு வரவேண்டியிருந்திருக்குமா? என்று அவனை எப்போதும் தொந்தரவு செய்யும் கேள்வி ஜாகிர் அங்கிளை பார்த்தவுடன் காணாமல் போய் விடுவது அவனுக்கு எப்போதும் ஆச்சரியத்தையும் விடுதலையுணர்வையும் ஒரு சேர அளிப்பது.

கவாஸ்கர் வரும் ‘ஒன்லி விமல்…’ விளம்பர ஈர்ப்பில் அந்தக் கம்பெனி சட்டையை அடுத்த வருடம் முதல் முறையா கல்லூரிக்கு போகும் போது போடவேண்டும் என்ற நினைப்பையும் ஜாகிர் அங்கிள் நிறைவேற்றுவார் என்று அதிகம் விற்பனையாகும் லோபரட் மற்றும் லாசிக்ஸ் மாத்திரைகளை எளிதில் எடுக்குமிடத்தில் அடுக்கிக் கொண்டிருந்தான்.

கடையின் இரும்பு சுருள் கதவை நடராஜன் மேலிருந்து இழுத்து பூட்டியபோது, இரவு மணி ஒன்பதைத் தொட்டிருந்தது. கடைவீதி கிட்டத்தட்ட காலியாயிருந்தது. ராஜேஸ்வரி ஹோட்டல் மட்டும் திறந்திருந்தது. அங்குதான் பெரும்பாலும் இவர்களிருவருக்கும் இரவுணவு.

“அதென்னடா, கவாஸ்கர் மேல இவ்வளவு ஈர்ப்பு…” என்ற ஜாகிரிடம், ” வீடு ஃபுல்லா அவர் போட்டாவத் தான அஙகிள், அப்பா ஒட்டி வச்சிருந்தாரு… உங்களுக்கு தெரியாதா?… அப்பா போனதுக்கப்புறம் தாத்தா எல்லாத்தயும் கிழிச்சுப் போட்டுட்டாரு…அப்பாவும் கவாஸ்கரும் இன்னமும்…”

“… ம்ம்ம்… உங்கப்பா அசாருதின் மாதிரி உயரமா இருக்குற ஒரு கவாஸ்கர்டா. இவன் பேட்ல மேக்னட் எதுவும் வச்சுருக்கானாடாம்பாரு சீனிவாசய்யரோட வீட்டுக்கு வர்ர சொந்தக்காரர். அவன் பேட்டு போகுற இடத்துக்கெல்லாம் பந்து போகும்.. அதுவும் அந்த பேக் ஃபுட்ல போய் ஃபிளிக் பண்ற ஸ்டைல பாத்து அப்படியே அசந்து போயிருவோம். அவனோட பேட், சில சமயம் அவனோட கையோன்னு தோணும்… பௌலரோட ரன்னப், கையில பந்து வச்சுருக்கிற விதம் இத எல்லாத்தயும் வச்சு பந்து எங்க விழும்ங்கறத அவனால துல்லியமா கணக்கு போடமுடியும். உங்கப்பா ஒரு கிரிக்கெட் ஜீனியஸ்டா. உங்க தாத்தா கடைசிவர இத புரிஞ்சுக்கல. சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு, அவரோட விதவை தங்கச்சி பொண்ண. கவர்மெண்ட வேலயும் வாங்கி கொடுத்துட்டாரு. ரெண்டுலயும் உங்கப்பாவால ஒட்ட முடியல…

“உங்கப்பா போனதோட என்னோட ரெயின்போ கிரிக்கெட் கிளப்பும் போயிடுச்சி… எளவு அன்னக்கு மட்டும் உங்கப்பாவுக்கு ரன் அவுட் கொடுத்துருந்தா, நார்த் ஸ்டார் கிளப்பு ஜெயிச்சுருப்பாங்க. உங்கப்பாவோட உயிரும், என்னோட கையும் மிஞ்சியிருக்கும். நம்ம ஊர் எம்எல்ஏ பேர்ல நடக்குற பிரமாண்டமான கிரிக்கெட் டோர்ணமென்ட் அது. பெரிய பெரிய ஊர்ல இருந்தெல்லாம் வந்து விளையாடுவாங்க.”

“என்னப்பா மேட்லாம் இல்லயா, டர்ப்லதான் ஆடணுமா? கிரிக்கெட் பாலா இல்ல கார்க் பாலா…” என்று ஏளனம் செய்யும் நகர அணிகளின் தொழில் முறை ஆட்டக்காரர்கள் ஒரு போட்டிக்குப் பின் ஆச்சரியமடைந்து ஜாகிரிடம் ஆடுகளம் தயாரிக்கப்பட்ட விதத்தை கேட்டறிந்து வியப்பார்கள். ஆறு மாத இடைவிடா பணியிது. ஜாகிரும், அவனுடைய ரெயின்போ கிரிக்கெட் கிளப்பும் இந்த டோர்ணமென்டில் ஆடுவது, அதை நடத்துவது, அதற்கான தயாரிப்பில் ஈடுபடுவது என்றே வருடம் முழுதுமிருப்பார்கள். படிப்பு, வீடு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் மட்டுமே.

ஒவ்வொரு முறையும் ரெயின்போ கிளப், இறுதி ஆட்டம் வரை வந்து விடும். ஆனால், கோப்பையை மட்டும் வென்றதில்லை. ஏதாவது ஒரு வெளியூர் அணிக்கே கோப்பையும் ரொக்கப் பரிசான 25001 ரூபாயும் கிடைக்கும். இவ்வளவு பெரிய தொகைக்காகவே, அந்த ஊர் எம்எல்ஏ பெயரில் இந்த டோர்ணமென்ட் நடத்தப்படுகிறது. நடராஜின் அப்பா கொல்லப்பட்ட அந்த ஆண்டும் இறுதி வரை முன்னேறியிருந்தது ஜாகிரின் ரெயின்போ கிளப்.

அந்தக் கண்மாயை போர்த்தியிருந்த இருளாடை, மெதுவாக விலக ஆரம்பித்திருந்தது. எப்போதாவது வெள்ளம் வந்தால் மட்டுமே கிட்டத்தட்ட பத்து கி.மீ சுற்றளவுள்ள முழுக்கண்மாயும் நிரம்பும். ஊரையும், கண்மாயையும் ஊடறுத்துச் சென்று கொண்டிருந்தது ரயில் தண்டவாளம். அந்த அதிகாலையிலும், இருவர் மிகப் பெரிய இரும்பு உருளையை, மெதுவாக அக்கண்மாயிலுள்ள ஆடுகளத்தின் மேல் உருட்டிக் கொண்டிருந்தார்கள். நேற்றைய ஆட்டத்தின் சுவடுகள் அந்த உருளையின் கனத்தில் மறைய, சுற்றியிருந்த பசும்புல் பரப்பால் புதுப்பொலிவு கொள்ள ஆரம்பித்தது ஆடுகளம். ஒரு ஐந்தாறு பேர், எல்லைக் கோட்டிலிருந்து ஆடுகளம் நோக்கிப் பரந்திருந்த அப்பசும் புல்பரப்பில் குனிந்து தேவையற்ற கற்களையும், சிப்பிகளையும் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஊரின் முடிவில், இயற்கையாகவே அமைந்த இந்த கிரிக்கெட் மைதானம், மிகப் பெரிய கொடை. சாலையிலிருந்து ஏறி தண்டவாளத்தைத் தாண்டி இறங்கினால் ஒரு கி.மீ. தொலைவில் மைதானத்தின் எல்லைக் கோடு வந்து விடும்.

செயற்கையை பராமரிப்பதைவிட இயற்கையை பராமரிப்பது மிகக் கடினம். இதைச் செம்மையாகச் செய்வது, ஜாகிரும் அவனுடைய ரெயின்போ கிரிக்கெட் கிளப்பும் தான். இறுதி ஆட்டத்திற்கான ஆடுகளம் கிட்டத்தட்ட தயாராயிருந்தது. எல்லைக் கோட்டைத் தாண்டி உருட்டி நிறுத்தப்பட்டிருந்த, இரும்பு உருளை தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. எல்லைக் கோடு முழுவதும், ‘V’ வடிவத்தில் ஆழமாக வெட்டப்பட்டு சுண்ணாம்பால் நிரப்பப்பட்டு, பல வண்ணச் சிறு கொடிகளை சீரான இடைவெளியில் ஏந்தியிருந்தது.

நார்த் ஸ்டார் கிளப்பும் உள்ளூர் அணி எனபதால், இந்த தடவையாவது வெற்றிபெற வேண்டிய அழுத்தம் ரெயின்போ கிளப்பிற்கு அதிகமாக இருந்தது. காலையின் மென்வெயில் தற்போது சுட்டெரிக்க, ஆடுகளம் இறுகி பந்துகள் இடுப்பளவு எகிற ஆரம்பித்தன. அதிலும், ஜாகிரின் அவுட் ஸ்விங்கர்கள் விசேஷமானவை. நார்த் ஸ்டாரின் விக்கெட்டுகள் சீரிய இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்தன. ஆட்டத்தின் கடைசி ஓவர் வரைக்கும் கூட இரண்டு சிலிப்கள் இருந்தன. முதல் ஸ்லிப் எப்போதும் நடராஜின் அப்பாவுக்கானது. பேட்ஸ்மென்களின், பேட்டைத் தவிர வேறெங்கும் நோக்காத அவன் சிலிப் கேட்சுகளை தவற விடுவதேயில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவரில், எட்டு விக்கெட்டுகளை இழந்து, நூற்றி எழுபத்தெட்டு ரன்கள் மட்டுமே எடுத்தது நார்த் ஸ்டார். எளிதான இலக்கை விரட்டிய ரெயின்போவினர் திணறினார்கள். ஒரு முனையில் விக்கெட்டுகளாக விழுவதை, மறுமுனையில் துவக்க ஆட்டக்காரனான நடராஜின் தந்தையால் வேதனையுடன் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. பெரும்பாலும் அவனை எதிர்முனையில் வைத்திருக்கவே நார்த் ஸ்டார் முயற்சித்தனர். இருந்தும், அவனுடைய கவர் டிரைவ்களாலும், ஃபிளிக்குகளாலும் நூற்றைம்பதை தாண்டியிருந்தார்கள் ரெயின்போ. ஆறு ஓவர்கள் மீதம் இருந்தது, கையில் இன்னும் மூன்று விக்கெட்டுகள் இருந்தது. வழக்கம் போல், தன்னை பேட்டிங் முனையில் தக்க வைத்துக் கொள்வதற்காக அந்த ஓவரின் கடைசிப் பந்தை, சார்ட் மிட் ஆன் திசையில் நளினமாக தட்டி விட்டு விரைந்து ஓடினான். அவன் எதிர்பாராத விதமாக, சார்ட் மிட் விக்கெட் திசையில் இருந்த ஃபீல்டர் பாய்ந்து அந்த பந்தை தடுத்தெடுத்து ஸ்டம்புகளை நோக்கி வீச, என்ன செய்வதென்று அறியாமல் தடுமாறி கிரீசைத் தொடுவதற்குள் ஸ்டம்புகள் சிதறியிருந்தன.

“அது ரன் அவுட் தாண்டா…. ஆனா நாங்க ஜெயிக்கணும்னு அம்பயர் தான் அவுட் தரல… அதுக்கப்புறம் நடந்ததெல்லாம்…” என்று கலங்கிய ஜாகிரின் பெரிய கண்களில் தானும் கலங்குவதை பார்த்தான். தன் தந்தையை கடைசியாக தாங்கிப் பிடித்த மிச்சமிருக்கும் அந்தக் கையை கலக்கத்துடன் இறுக்கிப் பிடித்தவாறு ராஜேஸ்வரி ஹோட்டலில் இருந்து வெளியேறினான் நடராஜன்.

செய்வலர்: செமிகோலன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.