தொ.ப. படிக்கப்பட வேண்டியவர்

முனைவர் ம இராமச்சந்திரன்

‘இவ்வளவு காலமாக எங்கையா இருந்தீங்க’ – கா.சிவத்தம்பி

தமிழ் இலக்கியப் பரப்பில் மக்களிடம் இருந்து இலக்கியத்திற்கு என்ற சிந்தனை மரபு பல ஆளுமைகளை உருவாக்கித் தந்தது. படித்தல் என்ற செயல் நூல் வழியாகக் கற்றல் என்ற மரபான சிந்தனைக்கு மாற்றாகப் படித்தல் என்பது வாழ்க்கையைப் படித்தல், மனிதர்களைப் படித்தல், பண்பாட்டுக் கூறுகளைப் படித்தல் என்று புதிய நோக்கில் பயணித்தவர்களில் தொ.ப.வும் ஒருவர். இலக்கிய வளமையும் சிந்தனைத் தெளிவும் காலம் காலமாக வேர்விட்டு வளர்ந்த நெல்லை மண்ணில் தனக்கான வேர்களைத்தேடி பயணித்தவர் தொ.பரமசிவன். நா.வானமாமலை, சி.சு.மணி என்று தனது சிந்தனை முன்னோடிகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து இயங்கியவர்.

நெல்லை மண் இடதுசாரி சிந்தனைக்குப் பெயர் பெற்றது. அதேபோலச் சமூக வரலாற்றில் அனைத்து நிகழ்வுகளுக்கும் எதிர்வினை ஆற்றும் திராணியும் கெத்தும் கொண்டது. தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் நெல்லை மண்ணைத் தவிர்த்துவிடவே முடியாது. அத்தகைய வளமான பின்புலத்தில் சோடை போகாமல் தன்னைக் கல்வெட்டாகச் செதுக்கிக் கொண்டார் தொ.ப. மார்க்சியச் சிந்தனை, தேசியச் சிந்தனை, திராவிடச் சிந்தனை, பண்பாட்டுச் சிந்தனை என்று முரண்பாடுகளில் சிக்கிக்கொண்ட தமிழ்ச் சிந்தனை மரபில் தனக்கான தனிவழியை உருவாக்கிக் கொண்டு சாதித்துக் காட்டியவர் தொ.ப.

தொடர் வாசிப்பின் வளர்ச்சியில் சிந்தனைப் போக்குகளை அறிந்து கொண்டு அவற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பகுத்துப் பார்க்கவேண்டும் என்று ஆழமாகச் சிந்தித்தார். நா.வானமாமலை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிமுறை அவரைக் கவர்ந்தது. அதேபோலச் சி.சு.மணி கருத்துக்களை எடுத்துரைக்கும் விதம், சான்று காட்டுதல், சொல்லாட்சி என்று பல நெறிமுறைகளைப் பின்பற்றும் போக்கைத் தனது வெளிப்பாட்டு முறையியலாக உருவாக்கிக் கொண்டார். சி சு.மணி சைவ சித்தாந்த நூல்களில் பெரும் புலமை மிக்கவர். இவரின் இறைவன், உயிர், உலகம் (பதி, பசு, பாசம்) ஆகியவற்றின் உண்மை நிலையை எடுத்துக்கூறும் தர்க்கவியலை விரும்புபவர் தொ.ப. வைணவ இலக்கியத்தின் பேரன்பு கோட்பாடு அவரை ஆழப் பாதித்தது. அகலச் சிந்திக்கத் தூண்டியது.

இத்தகைய பின்புலத்தில் தனது முனைவர் பட்ட ஆய்விற்கு அழகர் கோயிலை ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டார். “பண்பாடு என்பதே உற்பத்தி சார்ந்தது, உற்பத்தி நடவடிக்கைகளிருந்து அது உருப்பெறுவது” என்ற மார்க்சியச் சிந்தனை மரபும் சித்தாந்த சிந்தனை மரபுவழி தாக்கமும் கொண்ட தொ.ப. அழகர் கோயிலை ஆய்வுக்கு உட்படுத்தும்போது பண்பாட்டுச் சிக்கல்களையும் சமூக வாழ்வியல் போக்குகளையும் நேரடியாகக் கள ஆய்வு மூலம் கண்டுகொண்டார். தொடர்ந்த வாசிப்பும் மக்களின் வாழ்க்கையும் அவருக்கு தனக்கான யதார்த்த நிலையை உருவாக்க கற்றுத் தந்தன. நடைமுறைக்கும் சிந்தனைக்கும் இடையே காணப்பட்ட வேறுபாடும் அகலமும் அவரைப் புதியத் தளத்திற்கு எடுத்துச்சென்றன. மக்களின் அறிவுத் தெறிப்பின் எளிமை அவரை ஆழமாகக் கவர்ந்தது. இதன் காரணமாகத் தனது சிந்தனைத் தெறிப்புகளைப் பெரும்பாலும் எளிமையான உரைநடையில் பம்பாத்து இல்லாமல் நேரடி உரையாடலில் அமைத்துக்கொண்டார். தான் என்ற இருத்தலை ஒதுக்கித் தள்ளிவிட்டு அறிவு என்ற தளத்திற்கு முதன்மை தந்தார். அவரின் அனைத்துச் சிந்தனை வெளிப்பாட்டு முறைகளும் புதுமையானவை, முன்மாதிரியற்றவை.

அழகர்கோயில் வழிபாடு என்பது கருப்பணசாமி வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மதுரை மாவட்ட மக்களில் கள்ளர் மற்றும் பிற சாதியினர் வழிபடும் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பணசாமி. இந்த நாட்டார் வழிபாடு பிற்காலத்தில் பெருந்தெய்வ வழிபாட்டால் உள்வாங்கப்படும்போது அம்மக்களின் வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும் எப்படி மாற்றம் பெற்றன என்பதும் இதன்வழி அம்மக்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளை ஆய்வுக்கு உட்படுத்திப் புதிய கருத்துக்களை வெளிக்கொணர்தலுமாகத் தொ.ப.வின் ஆய்வு அமைந்திருந்தது. அவர் முன்வைத்த கருத்துகளும் அதனை உறுதிப்படுத்த கொடுத்தச் சான்றுகளும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. வாழ்க்கையில் அனைவரும் கேட்டிருக்கும், புழங்கியிருக்கும் சொல்லை, கருத்தை மிக விரிவாக ஆவணப்படுத்தும் போக்கில் கையாளும் இவரின் ஆய்வுநெறி புதுமையானது.

தொ.ப. தனக்கான கருத்துப் புலப்பாட்டுத் தன்மையை உருவாக்கிக் கொண்டார். கருத்துக்களின் புதுமை, செறிவு, சொல்லாராய்ச்சி என்று தனது சிந்தனைப்போக்கில் சித்தாந்த முரண்பாடுகள் ஏற்படுவதை உணரத்தான் செய்தார். திராவிட நெறியில் நின்றுகொண்டு மக்களின் பண்பாட்டுக் கூறுகளைப் பகுப்பாய்வு செய்வதில் பல சிக்கல்கள் தோன்றினாலும் அவற்றின் யதார்த்த பின்னணியை அறிவியல்பூர்வமாக இல்லாமல் வாழ்வியல் தேவையாக வெளிப்படுத்த தயங்கியதில்லை. பண்பாட்டில் சாதிச் சிக்கல், வர்ணாசர்ம தர்மம் என்பவைகளுக்குத் தனது கருத்துகளை, “இல்லைங்கிறது உண்மையே தவிர, அத யாரும் எதிர்த்து நிலை கொள்ளாம போச்சுனு சொல்றதுக்கில்ல. எழுத்திலதான் அது இருக்கே தவிர அது வாழ்நிலைல ஒரு போதும் இல்ல. எழுத்துலதான் நான்கு வர்ணம்னு இருக்கு. நடைமுறைல சாதிகள்தான் இருந்தன. வர்ண பேதம் இல்லை” என்று தெளிவாகத் தமிழகத்தில் வர்ணாசர்ம கொள்கை நடைமுறையில் இல்லை என்று சான்றுகளுடன் விரிவாக விளக்குகிறார். இன்றைய சாதிமுறையும் பிற்காலத்தில் வந்திருக்க வேண்டும் என்று கூறி இதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கூறுகிறார். சாதிகள் பற்றிய சிக்கல் என்பது இன்றும் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்து வருகிறது.

தொ.ப. தனது சமகாலச் சிந்தனை ஆளுமைகளை அடையாளம் காட்டாமல் இருந்ததில்லை, நல்ல நூல்களை நல்ல அறிஞர்களைத் தனது எழுத்துகள் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் அங்கீகரிக்க தவறுவதில்லை. நேர்காணல் ஒன்றில் தமிழ் இசை குறித்த கேள்விக்குப் பேராசிரியர் மம்மது அவர்களின் பணியை மெச்சிக் கூறி பதிவு செய்தது வியக்கத்தக்கது. இதுபோலப் பலரையும் தனது செயல்பாடுகள் வழியாகப் பிறருக்குக் கடத்திச் சென்றுள்ளார். ஓர் ஆய்வாளருக்கு இருக்கவேண்டிய கண்ணியமாக இதனைக் கூறலாம்.

தொல்லியல் நாட்டம் தொ.ப. அவர்களுக்குக் கள ஆய்வின் அனுபவத்தில் கிடைத்தது. மக்களையும் வரலாற்றையும் அறிய எண்ணியவர் கல்வெட்டு ஆராய்ச்சியில் செயல்படத் தொடங்கினார். கல்வெட்டுக்களை அடையாளம் காணுதல், படித்தல் என்று தன்னை ஆய்வாளராக என்றும் வளர்த்துக் கொண்டேயிருந்தார். தான் மட்டுமல்ல ஒரு கூட்டத்தையே எப்போதும் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லுதலும் விவாதித்தலும் அவரது பண்பாக இருந்தது. மதுரை மாவட்டத்தில் காணப்படும் சமணப் படுக்கைகள், கல்வெட்டுகள், தொல்லியல் சான்றுகள் என்று தனது சிந்தனைக்கு வலிமை சேர்க்கும் ஆதாரங்களை ஆழமாகக் கவனத்தில் வைத்துக் கொண்டார். இவரின் உரையாடல்கள் பலரையும் புருவம் உயர்த்த செய்வதற்கு காரணம் அவர் முன்வைக்கும் சான்றுகளும் அதற்கான பின்புலமும்தான். பண்பாட்டு ஆய்வுகள் மானுடவியல் துறையாக வளர்ச்சி கண்ட நிலையில் இதன் செயல்பாடுகளைக் கூறும்போது இன்றைய ஆய்வாளர்களின் செயல்பாடுகளையும் அவர்களின் நூல்களையும் வெளிப்படுத்த தயங்கியதில்லை. மானுடவியல் என்றதும் பக்தவச்சல பாரதியின் பணிகளை எடுத்துக் கூறும் பண்பாளர் தொ.ப.

சூழலியல் பற்றிய தொ.ப. வின் கருத்துகள் யதார்த்த புரிதல் கொண்டவை. தமிழாய்வில் சங்க கால மக்கள் இயற்கையைப் போற்றினார்கள். நிலமும் பொழுதும் அவர்களின் முதன்மை சிந்தனையாக இருந்தது என்று உயர்த்திக் கூறும்போது சங்க கால மக்களின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தே இருந்தது என்றும் அன்றைய மக்களுக்குச் சூழலியல் விழிப்புணர்வு தேவைப்படவில்லையென்றும் யதார்த்தத்தை இயல்பாகக் கூற வேண்டும் என்ற புரிதலும் தொ.ப.வை மற்றவர்களிடமிருந்து உயர்த்திக் காட்டுகிறது.

திராவிடச் சிந்தனை மரபில் பாரதிதாசனை உயர்த்திக் கூறுவதும் பாரதியை ஏற்க மறுப்பதுமான போக்குத் தொ.ப. காலத்தில் இருந்தது. தொடக்கத்தில் பாரதியாரைப் பற்றிய புரிதல் தொ.ப. அவர்களுக்குப் பார்ப்பன எதிர்ப்பு என்ற எல்லையில் நின்றுவிட்டது. ஆனால் தனது ஆழ்ந்த வாசிப்பின் மூலம் இந்த நிலைபாட்டை மாற்றிக் கொண்டார். பாரதியின் ஆளுமையை உணரத் தொடங்கியதாக அவரே கூறியுள்ளார். இவ்வாறு கோட்பாட்டு முரண்பாடுகள் பலவற்றை இலகுவாகக் கடந்து சென்றவர் தொ.ப. இவரின் சிந்தனை மரபு மக்கள் மரபோடு இணைத்துப் பார்க்கும் தன்மையும் யதார்த்த இருத்தலுக்கு வழங்கும் முதன்மையும் வியக்க வைக்கின்றது.

மதமாற்ற தடைச் சட்டம், ஆடு கோழி பலியிடுதல் தடை என்ற அரசின் செயல்பாடுகளுக்கு இயல்பான தனது கருத்துகளைச் சான்றுகளோடு வெளிப்படுத்தியுள்ளார். மதம், சாதி, கோயில், வழிபாடு என்று எதுவாக இருந்தாலும் வயிறு (பசி) என்று வரும்போது மக்கள் எதையும் மாற்றிக் கொள்ளும் பண்பு கொண்டவர்கள் என யதார்த்த வாழ்வியலைக் கூறுவது தொ.ப.வின் சிறப்புகளில் ஒன்று.

இந்திய சமூக ஆய்வில் பெரும் சிக்கலாகச் சாதி உருவாக்கம் விளங்கி வருகிறது. ஒற்றைத் தன்மையான புரிதலை நோக்கிய ஆய்வில் பன்முகத்தன்மையே எஞ்சி நிற்கிறது. இதன் காரணமாகச் சாதி ஒழிப்பு சிந்தனையும் அதற்கான தீர்வும் நீண்டுகொண்டே செல்கிறது. இது குறித்த உரையாடலில் “தமிழ்ல ‘சாதி கெட்டவன்’ னு ஒரு வசவுச்சொல் உண்டு. ராஜாக்கள் எல்லோரும் சாதி கெட்டவன்தான். ஏன்ன எல்லா சாதியிலயும் பெண் எடுத்துருக்கான். ராஜராஜனும் அப்படித்தான். மனைவிமாரே நாலு பேரு” என்று தமிழ்ப் பொதுப்புத்தியில் போற்றப்படும் மன்னனைச் சாதி கெட்டவன் எனக் கூறுவதற்கு ஆய்வுத் துணிச்சல் வேண்டும் இது தொ.ப.விடம் இயல்பாகக் காணப்படுகிறது.

இவ்வாறு பண்பாடு, மதம், வழிபாடு, கல்வெட்டு, நாட்டார் வழக்கு, வரலாறு, சொல்லாராய்ச்சி, திராவிடச் சிந்தனை, கள ஆய்வு, அகழாய்வு, அரசியல் எனப் புதிய கண்ணோட்டத்தில் படிக்கப்பட வேண்டிய மனிதர் தொ.ப.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.