என் தோளில் அசைந்தாடியபடி
பயணத்தில் உடன் செல்கிறது
விக்கிரமாதித்தன்
விட்டுச்சென்ற வேதாளம்
விக்கிரமாதித்தன் சுமந்து பழகியது
ஆனால் விக்கிரமாதித்தன்தான் வேண்டும்
என்பதில்லை.
வேதாளத்துக்கு தேவைப்படுவதெல்லாம்
தொங்கிச்செல்ல ஒரு தோள்.
கூரிய நகங்களால்
கூந்தலை கோதி சிக்கெடுத்துக்கொண்டே
சுமந்து செல்பவரின் காலடியின் கதிக்கு ஏற்ப
ஏதாவதொரு பாடலை
மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டே வரும்
வழிநெடுக்க.
அவ்வப்போது
பிசிறடிகும் குரலை மட்டும்
பொருட்படுத்தவில்லை என்றால் போதும்
பெரிய தொந்தரவு என ஏதுமில்லை
பாடல்கள் தீர்ந்து பயணம் நீண்டு விட்டாலும்
பிரச்சினையில்லை. சலிப்பில்லாமல்
எதையாவது பேசிக்கொண்டே வரும் என்பதால்
வழித்துணைக்கு மிகவும் ஏற்றது.
வேதாளத்துடன் செல்வதற்கான
விதிகள் மிகவும் எளியவை.
மெதுவாகச் செல்வதை
வேதாளம் விரும்பாது
கால் தடுமாறும் என்பதால்
ஓடுவதும் கூடாது
எடை அழுத்தி
தோள்பட்டை கடுக்கும்போது மட்டும்
கீழிறக்கி அடுத்த தோள்பட்டைக்கு
மாற்றிக்கொள்ள வேண்டும்.
வேதாளத்தின் பேச்சில்
தன்னிலை மறந்து
தவறிப்போய்
தரையில் சுருண்டு படுத்திருக்கும் சர்ப்பத்தையோ
காய்ந்த இலைகளுக்குள்
மறைந்திருக்கும் நரகலையோ
மிதித்துவிடாமல் நடக்க வேண்டும்.
முருங்கைமரம் அடர்ந்த வழியில்
செல்லும்போது மட்டும்
இன்னும் சற்று
எச்சரிக்கை தேவை.
கவனம் இன்றி நாம் சொல்லும்
பிழையான பதிலில் கோபமுற்று,
சடாரென பாய்ந்து ஏறிக்கொள்ளும்
மரத்தில்.
பிறகு மரமேறி, சமாதானம் கூறி
கட்டுக்களை வெட்டி வீழ்த்தி
தலைகீழாய் தொங்கிக் கொண்டிருக்கும் வேதாளத்தை
நிதானமாய் இறக்க வேண்டும்.
கோபம் குறையவில்லை என்றால்
ஒரு முறை மானசீகமாய் கொஞ்சி
மன்னிப்பு கோரினால் போதும்.
உற்சாகமடைந்து
உடனே வந்து ஏறிக்கொள்ளும்
தோளில்.
வழுக்கும் கோந்து கொண்டது
கம்பளிப்பூச்சிகள் அடர்ந்தது
எளிதில் உடையக்கூடியது, என்பதால்
முருங்கை மரத்திடமும்
கவனம் அவசியம்
இவ்வளவு
பிரச்சினைகளை வைத்துக்கொண்டு
ஒரு வேதாளத்தை
ஏன் சுமக்க வேண்டும்?
என்று நீங்கள் கேட்கலாம்
யாருமில்லாமல்
தனியாக செல்வதற்கு பதில்
வழித்துணைக்கு
ஒரு வேதாளத்தையாவது
அழைத்துபோகலாம்தானே?
எனக் கேட்டு நட்பாய் சிரிக்கிறது
வேதாளம்
சரி போகிறது
நம்மை விட்டால்
வேறு எவர்தான் வேதாளத்தை
வெளியே அழைத்துச் செல்வது?
நடந்து செல்கையில் சர்ப்பத்தை மிதித்து விட்டால் இன்னொரு சம்பவம் நடக்கும்!
தூக்கிக்கொண்டு செல்பவன் விஷத்தால் இறந்துபோய், அவனது ஆவி ஒரு வேதாளமாகி, பழைய வேதாளத்துடன் முருங்கை மரத்தில் தொங்குவான் ! பேச்சுத் துணைக்கு இரு “நண்பர்கள்” தொங்குவார்கள்!
முருங்கைமர கம்பளிப் பூச்சிகள் தயாரிக்கும் “கம்பளிகள்” இருவருக்கும் குளிர் தாங்க இரவில் உதவும்!
இப்படியே பல “வேதாளங்கள் ” சேர்ந்து சங்கம் அமைத்து , சுற்றுலா செல்ல முருங்கை மரத்தால் ஆன ஒரு வாகனம் (பஸ்) தயார் செய்வது மேலும் சிறப்பு ஊட்டும் !
(மேலும் ஆலோசனைகள் தர நான் தயார் ! )
SUper kavidhai!