குறிப்பு ஒன்று – சாலையென்றால் ஓடும்
எனக்கு காரோட்டத் தெரியாதுதான்
ஏறிக்கொள்ளுங்கள் சாலையை ஓடச் சொல்கிறேன் என்றால்
ஒருவரும் நம்பவில்லை
ஓடுகிறேன் என்பதை சாலையையே சொல்ல வைத்தேன் அது தனிக்கதை
எல்லாரும் காருக்குள் ஏறினோம்
நான் ஸ்டீரிங்கைப் பிடித்து போஸ் கொடுத்தேன்
கீழே பார்த்தால் தலை தெறிக்கிற மாதிரி சாலை ஓட ஆரம்பித்தது
நடந்து சென்ற ஒருவர் காரை முந்தினார்
எங்கள் மூளையின் பிசுபிசுப்பை இளையராஜா தொட்டுப் பார்த்த போது
ஒரு நிமிடம் இளையராஜா என அவரிடம் கேட்டு
சாலை சோர்வடைந்தால் இறங்கி யாராவது சாலையை
தள்ளவேண்டியது வரும் என்றேன்
இதை முதலிலேயே சொல்லவில்லை என்று சண்டை செய்தார்கள்
நானே ஓடிக்கொள்கிறேனென்று
வழியில் நெல்மணியை கொத்திக் கொண்டிருந்த மைனாவை
சூவென பத்திவிட்டது சாலை
சாவகாசமாக தலையை திருப்பி மைனா சாலையை தூர விரட்டியது
யாருடைய ஸ்டாப்பும் வரவில்லை
தூங்கி எழுந்த போது சாலை ஒரே வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது
ஏறிய இடம் வந்துவிட்டது இறங்குங்கள் இறங்குங்களென
அவசரப்படுத்தியதும்
ஓடிக்கொண்டிருக்கும் சாலையில் கவனமாக காலை வைத்து
கீழே ஒவ்வொருவராக இறங்கினோம்
குறிப்பு இரண்டு – தன்னு மொட்டை
சொகுசு வேனிலிருந்த ஒன்றரை வயதுக் குழந்தை தன்யாவை
எல்லாரும் கொஞ்சினர்
வண்டி போகயில் ஓட்டுநர் எழுந்து வந்து குழந்தையைத் தூக்கி
மடியில் வைத்துக் கொண்டார்
இன்னொருவர் ஓட்டுநர் அருகே வந்து ஸ்டீரிங் இடிக்காதவாறு
ஓட்டுநரைத் தூக்கி மடியில் வைத்தார்
இன்னொருவர் அவர்களைத் தூக்கி மடியில் வைக்க
இப்படித் தூக்கி வைத்துக் கொண்டே அடுக்கியவாறு சென்றனர்
வண்டி எப்போதும் வென்றானைக் கடந்ததும்
ஓட்டுநர் சும்மா இராமல் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி தன்னுமா
என்று தனது வாயில் ஒன்று வைக்க அவ்வளவு தான்
ஓட்டுநரை மடியில் வைத்திருந்தவர் ஓட்டுநர் வாயிலிருந்து எடுத்து
ஒன்று இட்டுக் கொண்டார்
மாற்றி மாற்றி வாயில் இட்டுக் கொண்டே போயினர்
ஒரே நேரத்தில் அந்தக் குழந்தை
இருபத்து மூன்று பேர்கள் மடியில் இருந்தது
அவர்கள் கிடக்கிறார்கள் நான் கிச்சு கிச்சு மூட்டுகிறேனென
தூத்துக்குடி சாலையில்
தன்னைத் தானே ஓட்டிச் சாகசம் காட்டியது அந்த வண்டி
தனக்காக எல்லாரும் இவ்வளவு மெனக்கெடுகிறார்களென்று
மயிர்கள் குத்திட்டு நின்ற தன்னு
சுனைக்கோயில் வந்ததும் இறங்கி முதல் வேலையாக
சவரக்காரரிடமிருந்த கத்தியை தானே வாங்கி
அதன் பளபளப்பின் முன்னால் தன் மண்டையைக் காட்டி
உடலையே நன்றாக நாலாப் பக்கமும் சுழற்றி வர
மொட்டை நிகழ்வு அன்றைக்குச் சிறப்பாக நடந்தேறியது
மொட்டையின் போது உங்கள் எல்லாருக்குமாகத் தான்
ஒரு சொட்டு கூட கண்ணீர் சிந்தவில்லையென்று தன்னு சொல்ல
அத்தனை பேரும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்