ஆனந்த் குமார்
சாஸ்வதம் ஓம் அன்னையே பேரன்னையே ஆதி பராசக்தி தாயே வணங்குகிறேன். யுகம் யுகமாய் உன் முலைகளின் மீதே கிடந்துறங்குகிறேன் இருந்தும் தீரா உன் பிள்ளை பசி கண்டு உனை உடைத்துக் கொள்கிறாய் நூறாய் கோடியாய் லட்சோபலட்சம் ஒளி தேவதைகளாய் பகுத்துப் பெருக்குகிறாய் உன்னை நளினமாய் கோரமாய் அன்னையாய் வேசியாய் அமுதூட்டி அமுதூட்டி தளரவில்லயா தேவி? அருந்தி உண்டு புணர்ந்து அருந்தி உண்டு புணர்ந்து அயர்ந்து படுத்திருக்கிறேன் மெல்ல வந்து தலை தொடுகிறாய் பசிக்கிறதா என்கிறாய்
தரிசனம் . தடுப்புக் கம்பிகளுக்கு இடையில் திரிந்த சிறியவனை அப்பா இழுத்துப் பிடித்துக் கொண்டார் மேல் கம்பிக்குழாய் கண்ணை மறைக்க தலை நுழைத்து வளைந்து பார்க்கும் பெரியவனுக்கு அம்மா சுட்டிக் காண்பிக்கிறாள் கருவறையை தீபாராதனை காட்டப்படுகிறது. நால்வரும் கண்களை மூடித் தொழ ஒளியின் கயிற்றால் அவர்கள் மூன்று முறை சுற்றிக் கட்டப்படுகிறார்கள்.
பதம் . சுடும் ஒரு டம்ளர் கீழே வைக்கிறேன் எடுக்கிறேன் இத்தனை சூடு எனக்கு ஆகாது ஆறிவிட்டால் குடிக்கத் தோன்றாது சுற்றிச் சுற்றி வருகிறேன் ஒரு பழைய சொல்லை திறக்க ஒரு மூடி வேண்டும் ஆடையென அது படிய தொட்டெடுத்து சுண்டி எறிகிறேன். பின் பருகுகிறேன் கனிந்த சூரியனை சூட்டின் இளம்பிறையை.
தரிசனம் கவிதை மிகச் சிறப்பு
கவிஞரே !