இன்னும் பனி விலகவில்லை. வைகறை இருட்டின் மீது காதல் கொண்டாற் போல சில்லென்று காற்று தவழ்ந்து வந்தது. மனிதர்களைப் படுக்கையிலிருந்து எழுப்புவதற்காகவென்று மரங்களிலிருந்து தத்தம் இனிய குரல்களுடன் பறவைகள் பறந்து சென்றன. இதெல்லாம் போதாது என்று சொல்வது போல ஒரு வீட்டு வாசல் வழியே எம்.எஸ். சுப்ரபாதம் சொல்வது கேட்டது. தில்லியில் பல நாள்கள் எட்டு மணி எட்டரை மணிக்குதான் பக்கத்து பிளாட்டிலிருந்து சுப்ரபாதம் கிளம்பி வரும்.
தெரு ஆரம்பத்தில் ஒரு வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு உள்ளே செல்லும் ஒரு பெண்ணை சபரி பார்த்தான். கோலத்தின் நடுவில் மஞ்சள் பூசணிப் பூ பளீரென்று மின்னிற்று. கல்யாணத்துக்கு நிற்கும் பெண் போலிருக்கிறது. அந்த வீட்டில்தான் பதினைந்து வருஷம் ஹேமு இருந்தாள்.
அவன் வீட்டை நெருங்கியதும் சபரி ஆட்டோவை நிறுத்தச் சொன்னான். வாசல் கம்பியைப் பிடித்துக் கொண்டு அம்மா நிற்பதைப் பார்த்தான். பையை ஆட்டோவிலிருந்து எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு ஆட்டோக்காரரிடம் பணம் கொடுத்தான். அம்மாவை நெருங்கும் போது அவள் “வராதவன் வரானேன்னு ட்ரெயின்காரனும் சரியான நேரத்துக்கு வந்துட்டானா?” என்று சிரித்தாள். அந்தச் சிரிப்பில் அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளாத ஒன்பது வருஷ தூரம் தூக்கியெறியப் பட்டது என்று சபரிக்குத் தோன்றிற்று.
“திருஷ்ணாப்பள்ளிக்கு மூணு மணிக்கே வந்தவனை அவுட்டர்லே போட்டான். அப்படியும் வண்டி தஞ்சாவூருக்கு நாலு அம்பதுக்கு டாண்ணு வந்துடுத்து” என்றான் சபரி.
“என் காலத்து இன்ஜின் டிரைவர் போல!” என்ற அம்மா “உள்ளே வா” என்று சொல்லி விட்டுத் திரும்பி உள்பக்கம் நடந்தாள்.
சபரி உள்ளே நுழைந்தான். வாசலைத் தாண்டி நடை ஆரம்பத்தில் இரு பக்கமும் நீண்ட திண்ணைகள் உட்கார்ந்திருந்தன. வலது பக்கத் திண்ணையில் முக்கால் வாசி இடத்தை மூட்டைகள் அடைத்துக் கொண்டிருந்தன. நவரைப் பட்ட நடவு தொடங்கும் சமயத்தில் வேண்டியிருக்கும் உரங்களை அடக்கிய மூட்டைகளாயிருக்கும். இடது பக்கத்துத் திண்ணை ஹோவென்று விரிந்து கிடந்தது. ஒரே சமயத்தில் நான்கு படுக்கைகளைப் போட்டுத் தூங்கலாம். அவன் இடது கையை வைத்துத் திண்ணையைத் தடவினான். வழக்கம் போலக் குளிர்ச்சியும் வழவழப்புமாக அவனைக் கூப்பிட்டது. பகலில் விளையாட்டுத் ‘திடலா’கவும் வெய்யிலோ, மழையோ, பனியோ எதுவாக இருந்தாலும் இரவு அவனைப் போட்டுக் கொஞ்சுமிடமாகவும்தான் அது இருந்தது என்று நேசத்துடன் நினைத்தபடி உள்ளே சற்றுக் குறுகலாக ஓடிய ரேழியைக் கடந்து கூடத்தில் நுழைந்தான்.
கூடத்து ஊஞ்சல் மீது தோள்பையை வைத்தான். வலது பக்கமிருந்த அறை வாசலில் சார்த்தியிருந்த கதவுக்கு முன்னால் அம்மா நின்றாள். அந்த அறைக்குள்தான் அப்பா படுத்துக் கொண்டிருக்கிறார். அவர் கட்டிலை விட்டு எழ முடியாமல் படுத்த படுக்கையாய் அங்கே வாசம் செய்கிறார் என்று அன்று அண்ணாசாமி ஊருக்குத் திரும்பிப் போகுமுன் அவனுக்குப் போன் பண்ணிச் சொன்னான். அவன் அம்மாவை நெருங்கியதும் அவள் கதவைச் சத்தமில்லாமல் திறந்தாள். அவன் பார்வை கட்டில் மீது விழுந்தது. படுக்கையில் ஒரு ஈர்க்குச்சி படுத்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். மை காட்! என்னமாய் உருக்குலைந்து கச்சலாகி விட்ட உடம்பு ! வயல்காடுகளில் ஆஜானுபாகுவாகத் திரிந்து ஆட்களை வேலை செய்யச் சொல்லி விரட்டியடித்த ராஜமய்யரா இப்படி பிரேதமாகப் படுத்துக் கிடக்கிறார்? ராஜமய்யரது கண்கள் மூடியிருந்தன. ஏறி இறங்கும் மார்புதான் உயிரை இழுத்துப் பிடித்திருக்கும் உடம்புக்குச் சாட்சி சொன்னது. ‘தூங்கட்டும்’ என்பது போல் சைகையில் தெரிவித்து விட்டு அம்மா கதவை மூடினாள்.
அவளுடன் சேர்ந்து சபரியும் சமையலறைக்குச் சென்றான்.
“என்னம்மா இப்பிடி ஆயிட்டார் அப்பா?” என்று அவன் தாங்க முடியாது கேட்டான்.
“சொல்றேன் அப்புறம்” என்றாள் அம்மா. அடுப்பைப் பற்ற வைத்துப் பால் குக்கரை ஏற்றினாள். அவனிடம் “பெங்களூர் ஸ்டைலா இல்லே திருவையாத்து ஸ்டைலா நீ இப்ப காப்பி குடிக்கப் போறது?” என்றாள்.
“வென் யூ ஆர் இன் ரோம் யூ மஸ்ட் பீ எ ரோமன்” என்றான் சபரி. “பல் தேச்சிட்டு வந்து காப்பி குடிக்கிறேன்.”
பிறகு “ரொம்ப இளைச்சிட்டியேம்மா” என்று அவள் கையைப் பிடித்துத் தன் கையில் வைத்துக் கொண்டான். “பாரு, எப்படி நரம்பெல்லாம் தெரியறது?” என்று வருத்தமான குரலில் கேட்டான்.
“ஆமா, இப்ப எனக்கு பதினஞ்சு வயசுதான் ஆறது திம்மு திம்முன்னு இருக்கறதுக்கு!” என்றாள். “நீயும் கூடத்தான் பாக்க சகிக்காம இருக்கே. ராஜா மாதிரி எப்படியெல்லாமோ இருந்திருக்க வேண்டியது..ஹூம், நாமென்ன கடவுளா நினைச்சதை நினைச்சபடி நடத்தி முடிக்க?” என்றாள் அம்மா.
அவள் பேச்சை எங்கே நகர்த்துகிறாள் என்று அவனுக்குத் தெரியும். “சரி, நான் போய்ப் பல் தேச்சிட்டு வரேன்” என்று ஊஞ்சலை நோக்கி நடந்தான். அவள் பெருமூச்சு விட்டாள். கையில் பிடிபடாமல் பறக்கப் பார்க்கும் நாகணவாய். காப்பிப் பொடியை டப்பாவிலிருந்து எடுத்து ஃபில்டரின் அடிப்பாத்திரத்திற்கு மேலே இருந்த வட்டமான சிறு சல்லடையில் போட்டு அதன் மேலே வெந்நீரை ஊற்றினாள். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் காப்பி திக்காக இருக்க வேண்டும். எவ்வளவோ விஷயங்களில் இருவருக்கும் ஒரே குணம். விருப்பு வெறுப்பு எல்லாவற்றிலும் இருவருக்கும் அப்படியொரு பொருத்தம். ஒன்றைத் தவிர. சபரி ஹேமுவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள அவர் ஒப்புதல் தெரிவிக்க மறுத்து விட்டார்.
சபரி தாழ்வாரம் வழியே வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தை அடைந்தான். கண்ணை இறுக்கி மனசில் பரவசத்தை ஊட்டும் பச்சை சுற்றிலும் நிரம்பியிருந்தது. துணி துவைக்கும் கல்லில் இரண்டு தையல் சிட்டுக்கள் அவைகளும் பச்சையில் மயங்கியனவாகத் தோற்றம் தந்து உட்கார்ந்திருந்தன. அவனைப் பார்த்ததும் கொண்டையை நாலைந்து முறை ஆட்டி ‘கீ’ ‘கீ’ என்று குசலம் விசாரித்து விட்டுப் பறந்தன. ஹேமுவுக்கும் இந்தப் பச்சை மரங்கள், செடி கொடிகள் மீதும் பறவைகள் மீதும் அப்படி ஒரு ஈர்ப்பு. அவளை நினைக்கும் போது மழைநீர் ஒற்றிய சாயங்காலத்தில் திடீரென்று சிரித்துக் கொண்டு வானில் வளைய வரும் வில், காவேரியாய்ப் புரளுகிறோம் என்ற கர்வத்தில் அலைகளுடன் பொங்கி ஓடும் கணபதி அக்கிரகார ஆறு, ஐயாறப்பர் சன்னதியில் இருட்டை அண்ட விடாது மினுங்கிக் கொண்டிருக்கும் ஆளுயர எண்ணெய் விளக்கு இவையெல்லாம் ஞாபகத்துக்கு வருகின்றன.அவளும் இப்போது ஓடிச் சென்ற சிட்டுக்களைப் போலத்தான் பறந்து போய்விட்டாள். சிட்டுக்களைப் போவென்று விரட்டாத மாதிரிதான் சபரி ஹேமுவிடமும் இருந்தான். ஆனால்?
பற்பசை ஈஷிக் கொண்டிருந்த பிரஷ்ஷை வாயில் வைத்துக் கொண்டு கிணற்றிலிருந்து நீரை எடுத்து அங்கு கிடந்த வாளியில் ஊற்றினான். பற்களைத் தேய்த்து விட்டு வாயைக் கொப்புளித்தான். வாளியில் மிதந்து கொண்டிருந்த செம்பை நீரில் முக்கி கைகளிலும் கால்களிலும் விட்டுக் கொண்டான். இரு கைகளாலும் நீரை அள்ளி முகத்தில் அடித்துக் கொண்டான். பாதி குளித்து விட்ட முயற்சியில் உடல் சூடு இழந்து மலர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாக உணர்ந்தான்.
அவன் முகத்தைக் கையில் வைத்திருந்த டவலால் துடைத்துக் கொண்டே சமையலறைக்குச் சென்றான். அம்மா ஃபில்டரின் மேல் மூடியை வைத்து ஃபில்டரைத் தட்டி டிகாக்ஷன் இறக்கிக் கொண்டி
ருந்தாள். அவனைப் பார்த்தும் காப்பி கலந்து கொடுத்தாள்
அவன் ஒரு வாய் அருந்தி விட்டு “ஆஹா பிரமாதம்” என்றான். அம்மா அதைக் கேட்டுச் சிரித்தாள்.
“அப்பாவுக்குக் கொண்டு போய்க் கொடுக்கட்டா?” என்று கேட்டான்.
“அப்பாவுக்கா? அவருக்குக் காப்பியை நிறுத்தி ரெண்டு மாசமாச்சு” என்றாள் அம்மா.
“ஏம்மா?”
“திடீர்ன்னு ஒரு நாள் வாண்டாம்னுட்டார். காப்பிக்குப் பதிலா ஒரு வாய் ஹார்லிக்ஸ் குடிப்பார். சாப்பாடும் இப்ப ரொம்ப கொறஞ்சு போயாச்சு. எல்லாம் கரைச்சுக் கொடுக்கறதுதான். இட்லி பண்ணினாக் கூட மிக்சிலே அரைச்சு ஜூஸ் கொடுக்கற மாதிரி கொடுத்திண்டு இருக்கு. சாப்பாடுன்னா மோர் சாதம்தான். அதையும் கரைச்சுதான் கொடுக் கறேன். லேசா காரம் இருந்தாக் கூட பீச்சிண்டு அடிக்கறது. டாக்டர் வந்து பாத்துட்டு காரமில்லாம கஞ்சி மாதிரி வாட்டரியா கொடுங்கோ, ஜீரண சக்தியும் குறைஞ்சாப்பிலே இருக்குன்னுட்டார்.”
“ஏன் திடீர்னு இப்படி?”
“நீ லண்டனுக்குப் போய் நாலைஞ்சு மாசம் ஆனப்போ இவர் படுக்கையிலே விழுந்தாச்சு. அன்னிலேர்ந்தே இந்தக் கஷ்டகாலம் ஆரமிச்சிடுத்தே” என்றாள் அம்மா.
சபரிக்கு அண்ணாசாமி போன் பண்ணிய அன்றைய தினம் ஞாபகத்தில் தெளிவாக இருந்தது. அப்போது அவன் படுக்கையில் இருந்தான். வெளியே லண்டன் மழை தூறிக் கொண்டிருந்தது. அந்தக் குளிர் நசநசப்பும் ஞாயிற்றுக் கிழமையும் அவனைச் சோம்பேறித்தனத்தில் ஆழ்த்திக் காலை எட்டு மணிக்குக் கூடப் படுக்கையிலிருந்து எழ வைக்கவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் இந்தியாவுக்குத் திரும்பிப் போக வேண்டும். அவனுடைய ஆறு மாத டிரெய்னிங் காலம் முடிந்து விடும்.
கைபேசி அடித்த போது எடுத்துப் பார்த்தான். தெரிந்த நம்பராக இல்லை.
“ஹலோ! சபரி ஹியர்.”
“சபரி, நான் அண்ணாசாமி பேசறேன்டா. எப்படியிருக்கே? இன்னிக்கிக் காத்தாலேதான் எங்க குலதெய்வப் பிரார்த்தனைன்னு திருஷ்ணா
பள்ளிலேந்து காரை எடுத்துண்டு வீரசிங்கம்பேட்டைக்கு வந்தேன் அம்பாளுக்கு அபிஷேகம் முடிஞ்சதும் பதினோரு மணிக்கு இங்கே ஆத்துக்கு வந்தேன். சித்தப்பாவையும் சித்தியையும் கூடவே தரிசனம் பண்ணிட்டுப் போலாமேன்னு” என்ற அவனது இயல்பான குரல் அவனுக்கு முதலில் எந்த சந்தேகத்தையும் எழுப்பவில்லை. அண்ணா சாமி அவனுடைய பெரியப்பாவின் பையன்.
“எங்கே ஆத்திலேர்ந்தா பேசறே? வேறே என்னமோ சத்தம்லாம் கேக்கறதே?”
“இங்கே ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கோம்.”
“ஏன்? யாருக்கு என்னாச்சு?” என்று அவன் பதறியபடி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.
“நான் ஆத்துக்கு வந்து சித்தே நாழி ரெண்டு பேர் கிட்டேயும் பேசிண்டு இருந்தேன்.அரை மணி கூட ஆகலே. திடீர்னு சித்தப்பாக்குத் தலை கிறுகிறுத்து நடக்க முடியாம போயி எல்லாரும் தஞ்சாவூருக்கு ஓடி வந்தோம். மீனாட்சியிலேதான் அட்மிட் பண்ணியிருக்கு. பி.பி., சுகர்லாம் எகிறிக் கிடக்குங்கறா. திடீர்னு கொலஸ்ட்ரால் வேறே ரொம்ப ஜாஸ்தியா இருக்காம். அப்பப்போ பாக்காம விட்டுட்டுதுனாலே இப்ப இப்படி ஆயிடுத்துங்கறார் டாக்டர்” என்று அண்ணாசாமி சொல்லும் போது சபரிக்கு உடம்பு ஒரு தடவை நடுங்கி விட்டுப் பழைய நிலமைக்குத் திரும்பியது.
“இப்ப எப்படி இருக்கார்? நான் இன்னிக்கிக் கிளம்பி வரட்டா?”
“இரு. அம்மாகிட்டே கொடுக்கிறேன். நீ அடுத்த மாசம் திரும்புவேன்னு உங்க ஆபீஸிலே கேட்டதுக்கு சொன்னா. இன் பாக்ட் உன்னோட போன் நம்பரையே நான் உன் ஆபீஸ்லேர்ந்துதான் வாங்கினேன்.”
அம்மா அவனிடம் நேரடியாக “நன்னாயிருக்கு. நீயென்ன மாயவரத் திலேயா இல்லே கும்பகோணத்திலேயா இருக்கே பஸ் பிடிச்சு உடனே கிளம்பி வரதுக்கு? டாக்டர் வாயிலே ஐயாரப்பர் வந்து உக்காந்து உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லேன்னு சொல்லிட்டுப் போயிட்டார். ஒரு வாரம் இங்கே அப்பா இருக்கணும். அப்பா ஆத்துக்குத் திரும்பி வரவரைக்கும் அண்ணாசாமி கூடவே இருக்கேங்கறான். நீ கிளம்பி வந்தா ஆஸ்பத்திரி வாசல்லே வேப்பமர நெழல்லே உக்காந்துண்டு போறவா வரவாளோட கவலை மூஞ்சிகளைப் பாத்துண்டு இருக்கலாம்” என்றாள். அப்பா ! என்ன ஒரு நிதானம்! ஒரு இம்மி அளவு பயம், நடுக்கம் எதுவும் தெரிவிக்காத குரல்!
அடுத்து வந்த நாள்களிலும் அவன் அவளுக்குப் போன் போட்டுப் பேசும் போதெல்லாம் அவனுக்கு எதெது எவ்வளவு தெரிய வேண்டுமோ, அவ்வளவு தெரிஞ்சால் போதும் என்பது போலப் பேசுவாள். அவள் சொல்வதை வைத்து அவன் மேற்கொண்டு எதுவும் கேட்க விடாத மாதிரி அவள் பேச்சு இருக்கும். அப்பா ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனது, அவர் சாப்பிடும் மாத்திரை, மருந்துகள், டாக்டர் வந்து போனது, அவரை வந்து பார்த்து விட்டுப் போன உறவு ஜனம் என்று ஏதோ நிறைய விஷயங்களை சொல்லி விட்டது போன்ற பாவனையை ஏற்படுத்தி விடுவாள். அவர் காப்பி சாப்பிடுவதை நிறுத்தியது, நீர் ஆகாரமாய் சாப்பிடுவது, உடல் இவ்வளவு மோசமாகத் தேய்ந்து போய்விட்டது பற்றியெல்லாம் இன்றுதான் அவன் தெரிந்து கொண்டான். தொலைவில் தனியாக இருக்கிறவன் கவலையில் கிடந்து மன்றாடக் கூடாது என்று நினைத்திருப்பாள்.
அம்மா கையில் ஹார்லிக்ஸ் எடுத்துக் கொண்டாள். இருவரும் அப்பாவின் படுக்கைக்குச் சென்றார்கள். ராஜமய்யர் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவனைப் பார்த்ததும் அவர் முகத்தில் சந்தோஷம் தோன்றுவதை சபரி கவனித்தான். கையை மெல்ல அசைத்து அவனைத் தன் பக்கம் வரச் சொன்னார். அம்மா அவன் கையில் ஹார்லிக்ஸ் தம்ளரைத் தந்தாள். சபரி அவர் ஹார்லிக்ஸ் குடிப்பதற்கு உதவினான்.அவர் மிகவும் மெல்லிய குரலில் அவனிடம் ஏதோ கேட்டார். சற்றுக் குழறலாய்த் தொனித்த வார்த்தைகளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“‘நீ எப்போ வந்தே? சௌக்கியமா இருக்கியான்னு கேக்கறார்” என்றாள் அம்மா.
அவன் சற்று உரத்த குரலில் “நா நன்னாயிருக்கேம்ப்பா. உங்களுக்கு எப்படி இருக்கு? ரொம்ப மோசமாயிருக்கேளே?” என்றான்.
அம்மா சபரியிடம் “நீ குரலை ஒசத்திப் பேச வேண்டியதில்லே. உன் உதடைப் படிச்சு நீ கேக்கறதைத் தெரிஞ்சுப்பார்” என்றாள்.
அப்பா அவனுடைய வலது கையைப் பற்றித் தன் கையுடன் கோர்த்துக் கொண்டார். வாடிய பூ தன் கையை உரசுவது போல அவனுக்கு இருந்தது.
‘நீ ஏன் இப்படி இளைச்சுப் போயிருக்கே? ஒழுங்கா சாப்பிடறதுக்கு என்ன? லண்டனிலேந்து நேரே இங்கே வந்தியா? எப்போ திரும்ப ஊருக்குப் போய் வேலையிலே ஜாயின் பண்ணனும்? எனக்காக நீ இங்கே தங்க வேண்டாம். ஆனா நாலஞ்சு நாள் இருந்தேன்னா மரூருக்குப் போய் நிலத்தைப் பாத்துட்டு வா. திருநாவு கணக்கெல்லாம் சரியாய் எழுதி வச்சிருக்கானான்னு ஒரு பார்வை பாத்துட்டு வா. அவன் நல்லவன்தான். ஆனா யாரும் பாக்கலே கேக்கலேன்னா சோம்பேறியா ஆயிடுவான். எழுத வேண்டிய செலவை மறந்து போயிடுவான், அதுக்குத்தான் சொல்றேன்’ என்று அவரது கேள்விகளையும் உத்திரவுகளையும் அம்மா மொழிபெயர்த்துக் கொண்டே இருந்தாள்.
அவனும் அம்மாவும் அவரிடமிருந்து வெளியே வந்ததும் சபரி அம்மாவிடம் “ரொம்ப தெளிவாதானே இருக்கார்” என்றான் சற்று உற்சாகத்துடன்.
“எல்லாம் உன்னைப் பாத்த சந்தோஷம்தான்” என்றாள் அம்மா. “ஆனா இன்னிக்கே இன்னொரு சமயம் வேறே மாதிரி அவதாரத்தில் இருப்பார். உனக்கு அப்ப அவரைப் பாத்தா வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்.”
சபரி அவளை உற்றுப் பார்த்தான்.
“அவர் மனசிலே என்ன ஓடறதுன்னு யாருக்கு தெரியறது? கத்துவார். கூப்பாடு போடுவார். வாயிலிருந்து அவ்வளவு நாத்தமான வார்த்தைகள் நாராசமா வரும். கட்டில்லேர்ந்து கீழே விழறதுக்கு அப்படி ஒரு ஆகாத்தியம் பண்ணுவார். அப்போல்லாம் எதுத்தாப்பிலே நிக்கறது யாருன்னு தெரியாது. என்னோட அப்பாவைக் கூட்டிண்டு வாடின்னு என்னைப் பாத்து சத்தம் போடுவார்.செத்துப் போனவாளைக் கொண்டு வர நான் என்ன கிருஷ்ண பரமாத்வாவா இல்லே என் மாமனார்தான் பரீக்ஷித்தா?”
“இப்படி தினமும் நடக்குமா?”
“ஆமா. அவரைப் பாசத்தோட பரிவோட பாக்க வராளே சொந்தக்காராளும் சினேகிதாளும், அப்ப அவாளைத் துச்சமாப் பார்த்து அவர் காரி உமிழ்றது இருக்கே அது எல்லார் மனசையும் குத்திப் பிடுங்கிடும். எப்படி இவரோட இருக்கேன்னு பயத்தோட, ஆச்சரியத்தோட மரியாதையோட கனிவோட என்னைப் பாத்துட்டுப் போவா. இவ்வளவுக்கும் அவருக்கு ஒண்ணும் கல்லு மனசு இல்லே, அவாளைக் காயப்படுத்தணும்கிற வெறி எதுவும் இல்லேன்னு அவாளுக்கு ரொம்ப நன்னாவே தெரியும். ஆனா ஒரு தடவை வந்தவா ரெண்டாவது தடவை வந்தான்னு இதுவரை இருக்கலே. ஒரு நா காத்தாலே லால்குடியிலேந்து ஹைமவதிப் பாட்டி வந்தா. ‘தொண்ணூறு வயசுக்கு எதுக்கு இப்பிடி நீங்க டிரெயினிலேயும் பஸ்சிலேயும் அவதிப்பட்டுண்டு வந்தேள்?’ன்னு கூட நான் கேட்டுட்டேன். “பாக்கணும் போல இருந்துதுடி. நா தூக்கி வளர்த்த பிள்ளையாச்சே’ன்னா. கண்ணுலே கரகரன்னு ஜலம் ஊத்தறது. கட்டிலுக்குப் பக்கத்திலே போய் கிழவி நின்னா. இவர் இமைய அசைக்காம அவளையே முறைச்சுப் பாத்துண்டு இருக்கார். அவள் பேசற எதையும் கேக்கறதுக்குத் தனக்குக் காதே இல்லாத மாதிரி ஒரு முக்கல் முனகல் இல்லாமே முறைச்சிண்டு இருக்கார். அஞ்சு நிமிஷம் ஆச்சு. பத்து நிமிஷம் ஆச்சு. அப்புறம் வேறே பக்கம் திரும்பிப் படுத்துண்டு அசையவே இல்லே.”
சபரிக்குத் திகைப்பாக இருந்தது. ஏதோ மாந்தரீகத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிப்பவர் போல ஆகி விட்டாரா? அவரது உடல்நிலமையின் சீரழிவு அவர் மனதை ஆட்டிப்படைக்கும் விஷயங்களில் பொதிந்தி ருக்கிறதா? என்ன மாதிரியான விஷயங்கள் அவை?
அம்மா “சரி. நீ போய்க் குளிச்சிட்டு வா. நான் தோசைக்கு அரைச்சு வச்சிருக்கேன். சாப்பிட்டு விட்டு கொஞ்சம் தூங்கு. ராத்திரி பூரா முழிச்சிண்டு கவலைப்பட்டுண்டு வந்திருப்பே” என்று சமையலறையை நோக்கிச் சென்றாள். அவன் குளித்து விட்டு சுவாமி கும்பிட பூஜை அறைக்குச் சென்றான். சுவாமி மாடத்தில் குத்து விளக்கு அரை வெளிச்சத்தில் ஆடிக் கொண்டிருந்தது. அவன் மர பீரோவுக்குப் பின்னால் இருந்த சுவிட்சை அமுக்கினான். விளக்கு எரியவில்லை. ஃபியூஸ் ஆகி விட்டது போல என்று நினைத்துக் கொண்டே சுவாமி கும்பிட்டான். டிபன் சாப்பிட்டு முடித்ததும் மாடியில் இருந்த அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தான். படுத்த உடன் தூங்கியும் விட்டான்.
திடீரென்று பலத்த சத்தம் கேட்டு விழிப்பு ஏற்பட்டது. பிளிறலைப்
போன்று தாங்க முடியாத சப்தம். அவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் தூங்கி விட்டது தெரிந்தது. கீழே சென்றான். அப்பாவின் அறையிலிருந்துதான் சத்தம் வந்து கொண்டிருந்தது. திறந்திருந்த கதவின் வழியே அவன் உள்ளே பார்த்தான். அம்மா அப்பாவை அமுக்கிக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க அவர் திமிறி அவளிடமிருந்து விடுபட முயன்று கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஒரு பொட்டுத் துணி இல்லை.
“ஏ முண்டே, ஏண்டி இங்கே வந்து என் உயிரை எடுக்கறே? என் டிரெஸ்ஸெல்லாம் அவுத்துப் போட்டு… இந்த வயசிலே உனக்கு இவ்வளவு ஆசையா? அவ்வளவு ஆசை இருந்தா யாராவது சின்னப் பயலை இழுத்துப் பிடிச்சிண்டு அலைய வேண்டியதுதானேடி? கொஞ்ச நாள் என்னைப் பாத்துக்கன்னு ஒரு கிணடனைக் கூட்டிண்டு வந்து ஆத்திலே வச்சிண்டிருந்தே. அவன் எதுக்கு ஓடிப் போயிட்டான்னு தெரியலே. என்னை இப்படி டிரெஸ் இல்லாம பாக்க உனக்கு வெக்கமா
இல்லியா? மானங் கெட்ட கழுதை. நீ இப்பிடி இருக்கறதுனாலேதான் ஒரு சொந்தம் என்னை எட்டிப் பாக்கறது இல்லே. எனக்கு இந்த அவமானமெல்லாம் தேவையா? கடவுளே, என்னை சீக்கிரம் கொண்டு போயிடேண்டா. இவ பாட்டுக்கு இவ இஷ்டப்படி ஊர் மேலே திரியட்டும். அடியேய். என் மேலே கை வச்சேன்னா தெரியும். அப்பிடியே முறிச்சுப் போட்டுடுவேன். ஏய், ஏய் என்ன நான் சொல்லிண்டே இருக்கேன். நீ என் கையை அமுக்கிக் கீழே தள்ளிண்டு இருக்கே… நாயே!”
அம்மா அவர் கத்துவது எதுவும் தன் காதில் விழாதது போல அவரது இடுப்பில் கையை வைத்துத் தூக்கி வேட்டியை இடுப்போடு சுற்றிக் கட்டினாள். அவர் திமிறுவதை கொஞ்சமும் லட்சியம் செய்யாது இரு கைகள் வழியாக சட்டையைப் போட்டு விட்டாள். அவர் கால்களை அசைத்துத் திமிருக்கையில் அவை அவளது உடம்பில் உதைகளாக விழுந்தன.
சபரி கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தான் சத்தம் கேட்டு அம்மா நிமிர்ந்து பார்த்தாள். அவனைக் கண்டதும் அவள் முகம் இறுகிற்று. கடுமையைத் தெரிவிக்கும் முகத்துடன் அவள் கண்களாலேயே அவனை வெளியே போகச் சொன்னாள். சபரி தயங்கியபடி காலைப் பின் வைத்தான். கதவை சத்தமில்லாமல் சாத்தினான். கூடத்து ஊஞ்சலில் போய் உட்கார்ந்து கொண்டான். அவனால் சற்று முன் கண்ட காட்சியையும் கேட்ட நாராசங்களையும் நம்ப முடியவில்லை. மூன்று மணி நேரத்துக்கு முன்னால் அவனுடன் அன்பும் பரிவும் சாந்தமும் தெளிவும் நிரம்பிய உடல் மொழிகளுடன் உரையாடியவரையா இப்போது பார்த்தோம் என்று அதிர்ந்தான்.
அவனருகில் அம்மா வந்து நின்றாள். அவள் முகத்தில் களைப்பும் சோர்வும் தெரிந்தன. கலைந்து முன் நெற்றியில் விழுந்திருந்த தலை மயிரை ஒதுக்கிக் கொண்டே அவனருகில் அமர்ந்தாள்.
அவன் அவள் கையைப் பற்றி “என்னம்மா இப்படி ஆயிட்டார்?’ என்று கேட்டான் நடுங்கும் குரலில்.
“ரெண்டு மாசமா இப்பிடித்தான் போயிண்டிருக்கு.”
“யாராவது ஆள் போட்டு இந்த க்ளீன் பண்ணற வேலையை எல்லாம் பாத்துக்கச் சொல்லலாமே? நான் தஞ்சாவூருக்குப் போய்ப் பாத்து கூட்டிண்டு வரேன் இன்னிக்கி” என்றான் சபரி.
“அந்தக் கந்திரகோலமெல்லாம் ஆயாச்சு” என்று அம்மா பெருமூச் செறிந்தாள். “டாக்டர் சௌரிதான் கூட்டிண்டு வந்தார். வந்தவனுக்கு நாப்பது வயசு இருக்கும். ஈச்சங்குடிலே விவசாயம் பாத்துண்டு இருந்தவன். இப்பதான் மழையே அத்துப் போயி தண்ணிக்கு வெளி லேர்ந்து ஓடி வர்ற காவேரியைத்தானே நம்பிண்டு கிடக்கு ஜனங்கள். நாலு மாசம் உதவிக்கு இருக்கட்டும்னு அழச்சிண்டு வந்தார் டாக்டர். வந்தவன் பலசாலி. உங்கப்பாவைப் பட்டுப் போலத் தூக்கி இறக்கி ஏத்தி அப்பிடி சிஷுரூட்சை பண்ணினான். எண்ணி அஞ்சு நாள்தான். கொஞ்ச நாழிக்கு மின்னே கிண்டன்னும் எதனாலேயோ ஓடிட்டான்னும் கத்தி னாரே! அவனை இருக்க விடாம அடிச்சுத் துரத்தினது இவர்தான். பகல்பூரா தூங்கிண்டுதான் இருப்பார். இன்னிக்கி என்னமோ அதிசயம் ஒரு பொட்டுத் தூக்கம் இல்லே. நேத்தி ராத்திரி பூரா தூங்கவே இல்லை. தினம் ராத்திரி தூங்காம இந்த மாதிரி நாராசமா கத்திண்டிருப்பார். அதனாலே பகல்லே அவர் தூங்கிண்டு இருக்கறச்சே அவனைக் காய்கறி வாங்க, மளிகைக்குப் போகன்னு அனுப்புவேன். ரொம்ப ஒத்தாசையா இருந்தான். வந்து அஞ்சாம் நாள் என்கிட்டே வந்தான். அம்மா, இந்த அஞ்சு நாளா உங்க கிட்டே நான் வந்து சொல்லலே. நீங்க படற கஷ்டம் போறாதான்னு என் வாயைத் தச்சுப் போட்டுக்கிட்டு கிடந்தேன். ஆனா இப்ப வேறே வழியில்லே. போறதுக்கு முன்னாலே மகாலட்சுமி நீங்க உங்க கிட்டே சொல்லிடுப் போகணும்னு தோணிருச்சு. அய்யாஎன்னைப் பாத்து பேசாத பேச்செல்லாம் பேசுவாரு. சரி வலியிலே பேசறாருன்னு விட்டிருவேன். அப்புறமா என் குழந்தைகளை என் பொண்டாட்டியைன்னு எல்லோரையும் சபிப்பாரு. என்னைத் தொடாதேடா பாவின்னா நீ கேக்க மாட்டேங்கிறே, உன் குடும்பம் என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு நாசமாய்ப் போகன்னு கத்துவாரு. உம்பசங்க ஒருத்தனும் உருப்படமாட்டாங்கன்னு சாபம் கொடுப்பாரு. நீயும் உன் பொண்டாட்டியும் இந்த பிராமணனை இப்படிப் போட்டு நீ கொல்லு றதுக்கு தெருவிலேதான் போய் நிக்கப்போறீங்கடான்னு என் மேலே எச்சியைத் துப்புவாரு. ரெண்டு நாளைக்கி மின்னாலே என் மூத்த மகன் வேலைக்குப் போனான். ரோடு ஓரமா நடந்து போனவனை ஒரு மோட்டார் சைக்கிள்காரன் அடிச்சுக் கீழே தள்ளிட்டு ஓடிட்டான். ஆஸ்பத்திரிக்குப் போயி கட்டுப் போட்டுக்கிட்டு வந்து வீட்டிலே உக்காந்திருக்கான். பத்து நாள் நகரப்பிடாதுன்னு டாக்டர் சொல்லிட் டாராம். செலவுக்கு செலவு. மனசுக்கு நிம்மதி இல்லே. பத்துப் பதினஞ்சு நாள் கூலி போயிருச்சு. அய்யா திட்டிதான் இப்பிடி ஆச்சுன்னு நான் சொல்லலே. ஆனா அந்த நினைப்பு தானா வந்து குத்திகிட்டே இருக்குன்னு சொல்லி அழுதான். நான் என்னத்தைப் பண்ணறது? அஞ்சு நாள் சம்பளத்தோடு கூட ஒரு ஐநூறு ரூபாய் வச்சுக் கொடுத்தேன். அதுக்கப்புறம் யாரையும் இவர் வரவிட மாட்டார்னு நானே செய்ய ஆரமிச்சிட்டேன்” என்றாள் அம்மா.
சபரி “நான் இங்கே இருக்கற வரைக்கும் இதையெல்லாம் நானே செய்றேம்மா” என்றான்.
அவள் மறுத்துத் தலையை ஆட்டினாள். “உங்கிட்ட சொல்லித்தான் ஆகணும். ஹேமுவை நீ கல்யாணம் பண்ணிக்க விடாம தடுத்தி நிறுத்தினது தான் செஞ்ச பெரிய பாவம்னு அவருக்குள்ளே ஓடிண்டு இருக்கு. ஒரு தடவை என்கிட்டே சொல்லி அழுதுட்டார். நடக்கறது தானே நடக்கும். நீங்க நிறுத்தாட்டா வேறே யாராவது வந்து தடுத்து நிறுத்தியிருப்பா. ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்டிக்க முடியாதுன்னு தெரியாமலா சொன்னா?ன்னேன். அவருக்கு சமாதான மாகலை. அப்படீன்னா சபரிக்குன்னு பொறந்தவளை அவன் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கான்னார். என்ன பதில் சொல்றது?” என்று சிரித்தாள். உயிரற்ற அந்தச் சிரிப்பை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
அன்று மாலை சபரி ஐயாறப்பர் கோயிலுக்குப் போனான். சுவாமி சன்னதியில் அதிகக் கூட்டமில்லை. தரிசனத்தை முடித்து விட்டு அம்மன் சன்னதிக்குச் சென்றான். தர்ம சம்வர்த்தினி அம்மன் சர்வாலங்கார பூஷிதையாய் நின்றாள். அன்று அஷ்டமி என்று கூட்டம். நல்ல நாள் அல்ல என்று மக்கள் ஒதுக்கி விட்ட அஷ்டமியன்று அம்மன் திருமணம் செய்து கொள்ளும் வைபவத்தைக் காணவே கூட்டம். எல்லா நாளும் நல்ல நாளே என்று சிரித்துக் கொண்டு நின்ற அம்மனிடம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒவ்வொரு தினமும் நல்லதினமாக ஆகக் கடாட்சம் புரியுமாறு வேண்டிக் கொண்டான். பிறகு கடைத் தெருவுக்குப் போய்ப் பழங்கள் காய்கறிகள் வாங்கினான். வரும் வழியில் ஒரு எலெக்ட்ரிக் ஷாப்பில் பல்பு வாங்கிக் கொண்டான். வீட்டுக்குள் நுழைந்த போது வீடு அமைதியாக இருந்தது. அப்பாவின் அறைக்கதவை மெல்லத் திறந்து பார்த்த போது அவர் கண்களை மூடியபடி படுத்திருந்தார். வலது கால் லேசாக ஆடிக் கொண்டிருந்தது. காமிரா உள்ளில் அம்மா ஏதோ சுலோகம் சொல்லும் குரல் கேட்டது. முகம் அலம்பி விட்டு தலை வாரிக் கொள்ள அங்கே வந்திருப்பாள் என்று சபரி நினைத்தான். அவன் கையி லிருந்த பைகளை சமையல் அறைக்குள் சென்று வைத்து விட்டு பூஜை அறைக்குச் சென்றான். அம்மா இன்னும் வந்து விளக்கேற்றாததால் வெளி வெளிச்சத்தையும் மீறி அறையினுள் இருட்டு குடியிருந்தது.
இருட்டில் லேசாகத் தடுமாறிக் கொண்டு போய்க் கை எட்டும் தூரத்தில் உயரே தொங்கிக் கொண்டிருந்த ஹோல்டரில் பல்பைச் சொருகினான். இரண்டு மூன்று தடவை முயற்சித்த பின் அது சரியாக உட்கார்ந்து கொண்டது. அவன் மர பீரோவை நெருங்கினான். அதன் பின்புறம் கையை நுழைத்து சுவிட்சைத் தேடினான். அப்போது அறையுள் ஸ்லோகக் குரலுடன் அம்மா நுழைந்தாள்.அவன் அவளை அந்த இருட்டில் கலவரப்படுத்த வேண்டாம் என்று பீரோவின் பின்னே நகர்ந்து நின்றான்.
அம்மா சுலோகத்தைத் தொடர்ந்து கொண்டே சுவாமி மேடையில் இருந்த விளக்கில் எண்ணெய் ஊற்றி அங்கிருந்த தீப்பெட்டியை எடுத்தாள். விளக்கேற்றினாள். பழக்கப்பட்ட இருட்டு என்று சரளமாக அவள் காரியம் செய்கிறாள் என்று சபரி நினைத்தான். அப்போது அவள் குரல் நின்று விட்டதால் சுலோகம் முடிந்து விட்டது போல என்று சபரி நினைத்தான். திடீரென்று அம்மாவின் குரல் கேட்டது. “தாயே புவனேச்வரி. இப்பிடி வாய் விட்டுக் கேக்க வச்சிட்டியேன்னு நான் அழலை. நானும் தினமும் உன்கிட்டே மன்னாடிண்டுதான் இருக்கேன். இந்த மனுஷன் படர பாடு அவராலே தாங்கிக் கொள்ளவே முடியாதபடி இருக்கே. நீதான் கருணை காட்டணும், மனசு வக்யணும். சீக்கிரம் அவரைக் கொண்டு போயிடும்மா. அதை நான் தாங்கிண்டுடுவேன். ஏன்னா எனக்கு அப்புறம் அவரைப் பாத்துக்க யாரும் வரமாட்டா. வந்தாலும் அவரைப் பாத்துக்க அவர் விடமாட்டார். அப்புறம் அவருக்கு உயிரோடேயே நரகம்தான். அதை என்னாலே நினைச்சக் கூடப் பாக்க முடியலே. சர்வேஸ்வரி நீதான் எல்லோருக்கும் நல்லது பண்ணறவ. இவரை சீக்கிரம் நாளேக்கே கூட கூட்டிண்டு போயிடு.”
அம்மா விசும்பும் சத்தம் கேட்டது. சற்றுக் கழித்து எழுந்து அவள் வெளியே சென்றாள் . ஆடாமல் அசையாமல் எரியும் குத்துவிளக்கின் திரியைப் பார்த்தபடி சபரி அரையிருட்டில் நின்றான்.