தாட்சாயணி
தீண்டுவாரற்றுக் கிடந்தன சடலங்கள்
உயிர் மூச்சைப் பிடித்து
நாங்கள் ஓடிக்கொண்டிருந்த போது,
தெருவிலே தீண்டுவாரற்றுக் கிடந்தன சடலங்கள்.
முகமிழந்து, நிறமிழந்து,
முழங்கைகள், கால் இழந்து
தலை இழந்த முண்டங்கள் ஆகி,
வீதியெங்கும் சதைத்துண்டங்களாக,
தீண்டுவாரற்றிருந்தன அவை
இரைந்து கொண்டிருந்த எமன்களை
வானம் அணைத்து வைத்திருந்தது.
எரிகுண்டுகள் பின்னாலேயே சீறிக் கொண்டிருந்தன.
ஓயாத சில கரங்கள்,
தீண்டுவாரற்றுப் போன அந்தச் சடலங்களை
வீதியோரக் குழிகளுக்குள்
போட்டு மூடிக் கொண்டிருந்தன.
தீண்டுவாரற்றுக் கிடக்கும் சடலங்களைப் பற்றி
நீங்கள் யாரேனும்
ஒரு கணமாவது நினைத்துப் பார்த்ததுண்டோ?
நாங்கள் அறிந்திருந்தோம்,
யுத்தத்தின் அனல் மூண்ட நாட்களில்,
துரோகத்தின் நிழல் மூடிய காலங்களில்
தீண்டுவாரற்றுக் கிடந்தன
ஏராளம் சடலங்கள்.
வெறுவெளிகளில் கிடந்த பள்ளங்களில்
குண்டுகள் வீழ்ந்து மூடியிருக்கும் சடலங்கள்
மலக்கூடக் குழிகளுக்குள்,
நிர்ப்பந்தமாய் வீசி மூடப்பட்ட சடலங்கள்
பதுங்குகுழிகளின் சரிவில்
சமாதியாக்கப்பட்ட சடலங்கள்
நள்ளிரவின் இருண்மைக்குள்
அடையாளமற்றுத் துண்டிக்கப்பட்ட தலைகளோடு
கம்பங்களில் கட்டப்பட்ட சடலங்கள்
எனத் தீண்டுவாரற்ற சடலங்களின் கதை
சொல்லச் சொல்ல நீளும்.
இப்போதும்
தீண்டுவாரற்றுக் கிடக்கின்றன சடலங்கள்.
யாரிடமும் கொடுப்பதற்குமில்லை
யாரும் ஏற்பதற்குமில்லை.
உறவுகளின் கதறலொலி மட்டும்
தூரத்தில் எங்கோ கேட்கும்
வானத்தில் ஆத்மாக்கள்
சுழன்றடித்துக் கொண்டேயிருக்கின்றன.
வேண்டத்தகாத ஒரு பொருளாய்
உடல்களை வீசியெறிந்து பற்ற வைக்கிறார்கள்.
சுவாலை எழுகிறது
சுவாலை எழுகிறது
தீண்டத்தகாத உடலங்களெனினும்,
சுவாலை மட்டும்
அவ்வுடல்களைத் தழுவிக் கொண்டேயிருக்கிறது.
அரசியல் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழன் உலக வரலாற்றில் தனக்கான பக்கங்களை எழுதிவிட்டான் தனது வீரமரணத்தால்.
இழப்பதற்கும் பெறுவதற்கும் ஏதோவொன்று மனிதனை வன்மம் கொள்ள செய்கின்றன.
வரலாற்றில் அனேக பகுதிகளுக்கும் இப்படி தான் எழுதப்பட்டுள்ளன.
கடந்து போன வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.