ஐ கிருத்திகா
கொடியடுப்பில் முள்ளங்கிக் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. அதன் வாசம் நாசியைத் தொட்டு ராசுப்பயலை எழுப்பிவிட்டது. அவனுக்கு முள்ளங்கிக் குழம்பென்றால் பெரும்பித்து.
“எங்கம்மா முள்ளங்கிக்கொளம்பு வைக்கும் பாரு. அதுக்கு ஒரு தனி ருசிடா…” நண்பர்களிடம் கதையளப்பான்.
“நல்லா தாராளமா பருப்ப வேவுச்சி கடஞ்சி ஊத்தி இம்மாம் வெங்காயத்த வதக்கி கொளம்ப கொதிக்கவுடும். முள்ளங்கிய நெலாத்துண்டாட்டம் நறுக்கி வதக்குறப்ப ஒரு வாசமடிக்கும் பாரு. வார்த்தையால சொல்லமுடியாது.” அவன் கண்கள் தானாக மூடிக்கொள்ளும்.
“மேல சொல்லுடா…” நண்பர்கள் தூண்டிவிடுவார்கள்.
“முள்ளங்கிக் கொளம்புன்னா மஞ்சத்தூள ரெண்டுசிட்டிக கூடுதலாத்தான் போடும் எங்கம்மா. அதனால கொளம்பு மஞ்ச, மஞ்சேர்ன்னு இருக்கும். மொதநா கொளம்பவுட மய்க்கா நா கொளம்புக்கு ருசி அதிகம்.”
” அதெப்புடிடா…?” வேண்டுமென்றே கேட்பார்கள்.
” எங்கம்மா காலம்பற எந்திரிச்சதும் மொத வேலயா மீந்த கொளம்ப கொடியடுப்புல போட்டு சுண்டவைக்கும்.அதுல ரெண்டு கைப்புடி முருங்கைக்கீரைய உருவிப் போட்டுடும். அந்த வாசம் புடிச்சா நாக்கு ஊறும். காந்த வாசனை அடிக்கிற கொளம்புல வெந்த முருங்கக்கீர வதங்கி சவுக், சவுக்குன்னு கடிபடும். அதெல்லாம் தின்னாத்தான்டா தெரியும்.”
ராசுப்பயலுக்கு பள்ளிக்கூடம் போகும் வரை சொல்வதற்கு தினமும் ஆயிரம் கதைகளிருந்தன. நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கழியில் புத்தகப்பையை மாட்டி இருவர் மாற்றி இருவராக சுமந்து செல்வார்கள். பள்ளிக்கூடம் சற்று தூரம்தான்.
ராசுப்பயலின் பேச்சு தூரத்தைக் கடக்க தினமும் தேவைப்பட்டது. சோறு, அரசமரப்பிள்ளையார், தடி வாத்தியார், இலவச டிவியில் பார்த்த சினிமா என்று ஏதோ ஒன்று ராசுப்பயலுக்கு சொல்லக் கிடைத்துவிடும். சிலசமயம் ஏற்பாடில்லாமல் கதையை ஆரம்பிப்பான். கதை அவனைத் தன்பாட்டுக்கு இழுத்து சென்றுவிடும். நண்பர்கள் உம் போட்டபடி செல்வர்.
ஐந்தாறு பேர் ஒரு குழுவாக பள்ளிக்கூடத்துக்குப் போவார்கள். பள்ளிக்கூடம் கடைத்தெருவிலிருந்தது. கடைத்தெரு முடியுமிடத்தில் இடதுபுறம் திரும்பி பத்து தப்படி நடந்தால் பள்ளிக்கூடம். அந்தத் திருப்பத்தில் ஒரு பிள்ளையார் கோவிலுண்டு. அங்கு வந்ததும் பேச்சை நிறுத்தி விழுந்து கும்பிட்டுவிட்டு கிரில் கதவின் கம்பிகளில் சிந்திக்கிடக்கும் விபூதியை பூசிக்கொள்வார்கள். ராசுப்பயல் பெரும்பட்டையாக இட்டுக்கொள்வான்.
அவனுக்குப் பள்ளிக்கூடம் செல்வதொன்றும் அவ்வளவு விருப்பமான செயலாக இருக்கவில்லை. மதியசோறும், முட்டையும் அவனை வா, வாவென்று கூப்பிட்டதில் போய்க்கொண்டிருக்கிறான். பள்ளி முடிந்து வீட்டுக்குவருபவன் புத்தகப்பையை கடாசிவிட்டுத் தெருப்புழுதிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுவான் .
“வெளக்கு கொளுத்தியாச்சி. இந்தப் பயல இன்னும் காணும். பொஸ்தவத்த எடுத்து ஒரு எளுத்து படிக்க மாட்டேங்கிறான். நல்லவிதமாவும் சொல்லிப் பாத்துட்டன், வெளக்கமாத்தால வெளுத்தும் பாத்துட்டன். வெளங்காத பய….அவுங்கப்பனாட்டமே ஊர் மேய கெளம்பிடுறான்.”
ஈசுவரி பக்கத்து வீட்டு முத்தரசியிடம் புலம்பித் தீர்த்தாள். நாலெழுத்து படித்து மகன் உருப்பட்டுவிட வேண்டுமென்பதுதான் அவள் நினைப்பு.
“பள்ளிடத்துல பேக்கு, டவுசர், சட்ட, பொஸ்தவம் எல்லாம் குடுத்து சோத்தையும் போட்டு படிக்க சொல்லுறாங்க. புத்தியுள்ள புள்ள அத பயன்படுத்திக்கிட்டு முன்னேறி வந்துடும். இது என்னாவுமோ, மண்ணாத்தான் போவுமோ…” தலையிலடித்துக்கொள்வாள்.
மழை வரும் போலிருந்தது. மாடக்குழியில் ஏற்றி வைத்திருந்த விளக்கு, வீசிய காற்றுக்கு அல்லாடியது. ஈசுவரி ஆடுகளைப் பக்கவாட்டிலிருந்த தொழுவத்தில் அடைத்து புல்கட்டை பிரித்து உதறிவிட்டாள். அன்று நல்ல வளப்பமான புற்கள் பெருத்த கட்டாக அறுத்துக் கட்ட கிடைத்திருந்தன. கைக்கு லாவகமாய் பிடித்தறுக்க பெரிது, பெரிதான புற்கள். ஈசுவரிக்கு மனசு நிறைந்துவிட்டது. மண்டைக்காத்தான் கண்டால் சவட்டிவிடுவான்.அவன் வயலை ஒருவரும் அண்டமுடியாது. மழைக்குப் பயந்து ஈசுவரி துணிந்து விட்டாள். நல்லவேளையாக அவன் தலைகாட்டவில்லை. புற்கள் வீச்சு, வீச்சாக வளர்ந்து கிடந்தன. ஒரேமூச்சாக அறுத்துப் பெருங்கட்டாக கட்டிவிட்டாள்.
கோடைவெயிலுக்கு எரிந்து கிடக்கும் புற்களைக் கண்டு மனம் வெதும்பி நிற்பதற்கு மாறாக பொங்கும் புதுப்புனல் போல மனம் நுரைத்துப் பொங்கிற்று. ஆடுகள் புசு,புசுவென்று மூச்சு விட்டபடியே பருபருவென்று புற்களைத் தின்றன. ராசுப்பயல் குதிரைமுகம் வரை புழுதியப்பிய கால்களோடு வந்து நின்றான். கையிலிருந்த பனையோலை காற்றாடி சுழன்று கொண்டிருந்தது.
“பசிக்கிது சோறு போடும்மா…”
குனிந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் பின்புறம் நின்று குதிகால்களை எக்கிப்பார்த்து சொன்னான். ஈசுவரி பதில் சொல்லவில்லை.
“சோறாக்கலயாம்மா…?”
சுழன்று கொண்டிருந்த காற்றாடியைக் கட்டைச்சுவரில் வைத்துவிட்டு அடுப்புமேல் மூடியிருந்த குண்டானைத் திறக்கப் பாய்ந்தான். ஈசுவரி திரும்பி, ஓங்கின வேகத்துக்கு முதுகில் ஒன்று வைத்தாள்.
“வெளக்கு வச்ச நேரத்துல ரெண்டு வார்த்த படிச்சோமுன்னு இல்லாம தெருத்தெருவா சுத்திட்டு வந்து சோறு போடுன்னா, சோறு எங்கேயிருந்து வரும். ஒங்கப்பனா கையெளுத்துப் போட்டு சம்பாரிச்சி கொண்டாந்து கொட்டுறான்.”
அவளுக்கு ஆவேசமாக இருந்தது. முட்டைப் போல் வயிறு பெருத்திருந்த சமயத்தில் இன்னொருத்தியுடன் ஓடிப்போனவனைத் திட்டுவதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்க தேவையிருக்கவில்லை. எதொன்றுக்கும் அவனை இழுத்துவைத்து வசவுகளை விட்டெறிவதற்கு அவளுக்குக் கைவரப்பெற்றிருந்தது.
ராசுப்பயல் திண்ணையில் அமர்ந்தான். முதுகு திகுதிகுவென்று எரிந்தது. வலது கையை எட்டும் மட்டும் வளைத்துப் பின்புறம் துழாவி தடவிக்கொண்டான். மழைத்தூறல்கள் போட்டது. சாய்வு, சாய்வான ஊசித்தூறல்கள். மழைக்குப் பயந்துதான் அவன் இவ்வளவு சீக்கிரமாக வீட்டுக்கு வந்ததே. இல்லாதுபோனால் இருளின் வீச்சு முழுமையடைந்திருக்கும்போது மெல்ல தலைகாட்டும் பசியை உணர்ந்து அலுப்புஞ்சலிப்புமாய் விடைபெற்றுக்கொள்வான். சோறு, சோறு என்று வயிறு குதியாட்டம் போடும். தெருவில் அநேகமாய் விளக்குகள் எரிவதில்லை. இருட்டு மசி போல் அப்பிக்கிடக்கும் தெருவில் அவன் மனதிலூரும் பயத்தை அடக்க சத்தம் போட்டுப் பாட்டு பாடியபடியே வருவான்.
கையில் எப்போதும் ஒரு குச்சி இருக்கும். அதை அப்படியும், இப்படியுமாக அசைத்து தன் கவனத்தை அதில் பதித்துக்கொள்வான். ஈசுவரி வெளியே எட்டிப்பார்த்தாள். பெருமழை கொட்டிக் கொண்டிருந்தது.
“எந்திரிச்சி வந்து சோத்தத் தின்னு. கரண்டு போச்சின்னா தொளாவணும்.”
அவன் அசிரத்தையாக எழுந்தான். புழுங்கலரிசிச்சோறின் மணம் மூக்குக்கு இதமானதொரு வாசத்தைப் பரப்ப, அக்கறையில்லாதவன் போல் தட்டின் முன் அமர்ந்தான். குண்டுபல்பின் மஞ்சள் ஒளியில் சோறு மினுமினுத்தது. உதிரி, உதிரியாய் கொஞ்சம் புளியம்பூ நிறத்தில் தட்டு நிறைய சோறு.
அள்ளித் திங்க வேண்டும்போல மனசு பரபரத்தது. ஈசுவரி குழம்பை சோற்றின் மேல் பரவலாக ஊற்றினாள். கத்தரிக்காய் துண்டுகள் சோற்றில் விழுந்தன.
“கால், கை களுவுற பளக்கமெல்லாம் இருந்தா நீ உருப்புட்டுடமாட்ட…”
ராசுப்பயல் எழுந்துபோய் ஒழுகிய மழையில் கால், கையை நீட்டி கழுவிவிட்டுவந்தான்.
“களுவிட்டன்.”
வேகமாய் அமர்ந்து குனிந்து சாப்பிடத் தொடங்கினான். பள்ளிக்கூடத்து மதியசோறு வயிறு நிரம்பத்தான். மற்றபடி அதொன்றும் ருசியாக இல்லை என்பான் அவன்.
“கல்யாண ஊட்டுல எல நெறச்சி சோறு போடுவாங்க. ரெண்டு வகை காயி, வடை, பாயசம்னு எக்கச்சக்க அயிட்டம் இருக்கும். அந்தமாரி சாப்பாடு சாப்புட்டு பாக்கணும்டா ” என்று நண்பர்களிடம் சொல்லி, சொல்லி மாய்ந்து போவான்.
தெருவில் நடக்கும் விசேஷங்களுக்கு ஈசுவரி மட்டும் போவாள். வரும்போது வடையையோ, போண்டாவையோ மடியில் கட்டிக்கொண்டு வருவாள். ராசுப்பயல் தானும் வருவதாக சொன்னால் முதுகில் சாத்துவாள்.
“இருவது ரூவாய வச்சிப்புட்டு ரெண்டுபேரு வந்து தின்னுபுட்டுப் போறாங்கன்னு பின்னாடி பேசுவாளுங்க…வேணுமுன்னா நீ போ. நான் போவல” என்பாள்.
“கறியும், கூட்டும் திங்கவா போறன். நாலு சனம் வேணுமுன்னு போறன். நாளபின்னாடி என் எளவுன்னா தூக்க நாலுபேரு வரணுமில்ல.” குரல் அழுகையில் பிசிறடிக்கும். ராசுப்பயல் பேசாமல் அமர்ந்திருப்பான்.
மழை மறுநாளும் தொடர்ந்ததில் பள்ளிக்கூடம் விடுமுறை அறிவித்திருந்தது. பள்ளிக்குப் போகாமல், விளையாடவும் போகமுடியாமல் வீடடங்கி கிடப்பது ராசுப்பயலுக்கு பெரும் அவஸ்தையாயிருந்தது. மின்சாரம் அவிந்து போயிருந்ததில் இலவச டிவி இருண்டு கிடந்தது.
திடீர், திடீரென வீசிய காற்றுக்கு கிளேரியா மரம் அசைந்ததில் பெருத்த நீர்ச்சொட்டுகள் சொட்டித் தெறித்தன. ஆடுகள் சாரலுக்குப் பயந்து நெருக்கியடித்துத் திண்ணையில் நின்றிருந்தன. தெருவடைத்த மழை. இரண்டுநாள் மழைக்கு மண் வாந்தோடிப் போயிருந்தது. முன்பு இப்படியொரு பெரு மழையில்தான் அவன் பிறந்தான்.
“அப்பிய மாசம் பொத்துக்கிட்டு ஊத்துது. கருக்கிருட்டு புடிச்சி ஊரே இருண்டு கெடக்கு. ஒருவா கஞ்சி குடிச்சிப்புட்டு கம்முன்னு படுத்துக்கிடலாம்னு பாத்தா திடீர்ன்னு வலி பொரட்டியெடுக்க ஆரம்பிச்சிடுச்சி. முத்தரசி கொடலையத் தூக்கி தலையில போட்டுக்கிட்டு ஓடிப்போயி ஒன் பெரியாத்தாள கூட்டியாந்தா. சிம்னி வெளக்க பொருத்தி வச்சிக்கிட்டு ஆத்தா பிரசவம் பாத்துச்சி.” ஈசுவரி சொன்ன கதையை ஜோடித்து ராசுப்பயல் தன் நண்பர்களிடம் கூறுவான்.
“கொளேர்ன்னு ஒரே இருட்டாம். அப்ப துணுக்கு சுடராட்டம் நான் பொறந்ததும் எல்லாருக்கும் கண்ணு கூசிப்போச்சாம். தவமா, தவங்கெடந்தாலும் இப்படியொரு புள்ள பொறக்காதுடின்னு ஆத்தா கண்ணு தண்ணி வுட்டுச்சாம்.”
அவன் சற்று நிறம்தான். அதனால் நண்பர்கள் அதை ஒத்துக்கொண்டு பேசாமலிருந்தனர். மழை நின்று வெயில் காட்டத் தொடங்கிவிட்டது. ஈசுவரி ஆடுகளைக் கொட்டகையில் தள்ளி கட்டிவிட்டு நூறுநாள் வேலைக்குக் கிளம்பிவிட்டாள்.
பகல்பொழுதில் மேயவிட்டால் பச்சையைக் கண்டமேனிக்கு பாய்ந்துவிடும். நிலத்துக்குச் சொந்தக்காரன் பிடித்து வைத்துக்கொள்வான். போய் நின்றால் காது கூச கூச்சல்போடுவான்.
பிறகு தண்டமழுது கூட்டிவரவேண்டும். அந்தப்பாடுகளுக்கு பயந்து அவள் அவிழ்த்துவிடும் வேலை வைத்துக்கொள்வதில்லை. வேலை முடிந்து வரும்போது எங்காவது புகுந்து ஒரு கட்டுப்புல் தேற்றிவிடுவாள். விடுமுறை நாட்களில் ராசுப்பயலை நச்சரிப்பாள்.
“அவுத்துட்டுப் போயி மேச்சிட்டு வாயன்டா. சும்மாதான கெடக்குற…”
அவள் கேட்கும்போதெல்லாம் அவன் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி சமாளிப்பான்.
“பரிச்ச ஆரமிக்கப்போவுது. படிக்கணுமில்ல…” என்பான்.
“பெசல் கிளாசு வச்சிருக்காங்கம்மா. பள்ளிடம் போவணும் ” என்று புத்தகமூட்டையை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவான்.
வடக்குத் தெருவில் தாழப் படர்ந்திருக்கும் மரத்தின் கிளையொன்றில் அவன் பை தொங்கிக்கொண்டிருக்கும். அந்தத் தெருவில் அவனுக்கு ஏராளமான நண்பர்களுண்டு. அவர்களுடன் சேர்ந்துகொண்டு மண்டையில் தெறிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் விளையாடுவான்.
விளையாட்டு அலுக்கும் நேரங்களில் நண்பர்களுடன் கடைத் தெருவை சுற்றிவருவான். ஊரில் ஒரேயொரு கிளப் கடை இருந்தது. காலையில் போட்ட பூரி கண்ணாடிப் பெட்டிக்குள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்.
அதைப் பார்த்தபடி சற்றுநேரம் பொழுது போகும். பறக்கும் தட்டு போன்ற பூரிகள். அதன் உப்பல் ரகசியம் இன்றுவரை அவனுக்குப் பிடிபடவேயில்லை. ஒரேயொருமுறையாவது அந்தப் பூரியைத் தின்றுபார்த்துவிட மனசு ஆவலாய் துடிக்கிறது.
ஒரு செட் பூரி முப்பது ரூபாய். விளிம்பற்ற தட்டில் வாழையிலை போட்டு இரண்டு பூரிகளோடு கிழங்கு அள்ளி வைத்துத் தருவார்கள். வெளியிலிருந்து பார்த்தாலே மேசைகள் தெரியும். பொன் நிறமாய் மினுமினுங்கும் கிழங்கு தெரியும். அவக், அவக்கென்று விழுங்கும் வாய் தெரியும். ஆர்டர் சொல்லிவிட்டு ஆவலாய் பறந்தலைகிற கண்கள் தெரியும். இன்னொரு செட் என்று சொல்கிற குரலை வைத்து முதுகுகாட்டி அமர்ந்திருக்கிற காளிமுத்து மாமாவையோ, சின்னான் பெரியப்பாவையோ இனங்கண்டுகொள்ளமுடியும் .
தினம் கடையைக் கடக்கும் தருணங்களில் காற்றில் மசாலா வாடை அடிக்கும். சால்னாவோ, கிழங்கோ வாயு ரூபத்தில் வந்து மூக்கைத் தடவும். அது ஒரு சுகந்த மணம். அதை அனுபவிப்பதற்காகவே ராசுப்பயல் நடையைத் தளர்த்துவான். ஒருமுறை ஈசுவரியிடம் நைச்சியமாக கேட்டும் பார்த்தான். முப்பது ரூபாய் என்றதும் அவள் மலைத்துவிட்டாள்.
“அதெல்லாம் நமக்குத் தோதுப்படாதுடா” என்று அந்தப் பேச்சுக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள். முப்பது ரூபாயில் பருப்பு, உப்பு, புளி, மிளகாய் வாங்கி பத்து நாட்களை ஓட்டிவிடுவாள்.
நண்பர்களில் யாராவது பூரி சாப்பிட்டதாக சொன்னால் பசி கப்பென்று காதையடைக்கும். பூரிப்பசி. அவர்கள் தின்றதை விட அதைப்பற்றி அவர்கள் கதையளப்பதைத் தாங்கிக் கொள்வது பெருங்கடினமாக இருந்தது அவனுக்கு.
தங்களுக்கும் கதை சொல்லத் திறமை வந்துவிட்டதைப்போல அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்படி, இப்படியென்று அவன் பட்டாளத்திலிருந்த அத்தனை பேரும் பூரி சாப்பிட்டிருந்தார்கள். சிலர் கடன் சொல்லி சாப்பிட்டதாக சொன்னார்கள். பின்னாடியே அவர்களுடைய அப்பாக்கள் வந்து கடனடைத்து விடுவார்களாம்.
ராசுப்பயலுக்கு முதன்முறையாக அப்பா இல்லாதது பெருங்குறையாகப்பட்டது. அதுநாள்வரை அப்பாவைப்பற்றி அவன் யோசித்ததில்லை. தெளிவற்ற பிம்பமாக கூட அவர், அவனுடைய விழிப்படலத்தில் உறைந்திருக்கவில்லை. சிறுநெல் மணியளவு கருப்பைக்குள் ஊன்றி தரித்திருக்கையிலேயே அவர் விட்டுப் போய்விட்டார்.
அம்மாவின் ஒவ்வொரு வசவின்போதும் அவரின் இருத்தல் குறித்த ஞாபகம் வரும். அம்மாதிரியான ஒரு உறவுக்கு வீரியமிருப்பதாகவே அவன் நினைக்கவில்லை. இப்போது பூரியின் மீதான காதலில் அவரின் நினைவு வந்தது.
காலையில் எழும்போதே ஈசுவரி அந்த சந்தோஷ செய்தி சொன்னாள். “எலே பயலே, உன் புத்தகப்பையி மேல காசு வச்சிருக்கேன். கிளப்பு கடையில பூரி வாங்கித் தின்னு.”
ராசுப்பயலுக்கு சட்டென்று காதுகள் அடைத்துக்கொண்டதைப் போலிருந்தது. திருதிருவென்று விழித்தான்.
“முப்பது ரூவாதான….?”
ஈசுவரி தலையாட்டிக் கேட்டாள். ஆவென வாயைத் திறக்க மா…..வுக்கு காற்று மட்டும் வந்தது.
“காசு பத்திரம்…”
ஈசுவரி அடுப்புச்சாம்பல் ஒதுக்கி சாணி மெழுகினாள். மூன்று பத்து ரூபாய்த்தாள்கள் பைமேல் மடித்து வைக்கப்பட்டிருந்தன. ராசுப்பயல் புத்தகப்பைக்குள் ரூபாயை பத்திரப்படுத்திக்கொண்டான். அவசரமாக நீரை மொண்டள்ளிக் குளித்தான். பாட்டின் வார்த்தைகள் இஷ்டத்துக்கு வந்தன. பூரிகள் பறக்கும் தட்டுகளாய் கண்ணுக்கெதிரே காற்றில் அலைந்தன. அவசரமாய் சீருடை அணிந்து மாடத்தில் கிடந்த விபூதியை நெற்றியில் அப்பிக்கொண்டு புத்தகப்பையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டான்.
மற்ற பயல்கள் கிளம்பியிருக்கவில்லை. வெயில் மஞ்சள் படலமாய் விரிந்து கிடந்த தெருவில் ராசுப்பயல் ஒரு காலை அழுத்தி, ஒரு காலை உயர்த்தி, திரும்பவும் அதேபோல் அழுத்தி, உயர்த்தி பாட்டுப் பாடியபடியே ஓடினான்.
காலை நேரமென்பதால் கடையில் கூட்டம் அதிகமிருக்கவில்லை. நேரமாக, ஆக மண்டத் தொடங்கிவிடும். ராசுப்பயல் தயங்கியபடியே கடைக்குள் எட்டிப் பார்த்தான். கால்கள் கூசின. கொஞ்சம் படபடப்பாயிருந்தது. தோளில் கிடந்த பையை இடது கைக்கு கொண்டுவந்து துழாவினான். பணம் இருப்பதை உறுதி செய்துகொண்ட மனதுக்கு சற்று ஆசுவாசமாயிருந்தது.
“என்னாடா,,,,?” கல்லாவுக்கு அந்தப்புறமிருந்து முதலாளி எட்டிப்பார்த்துக் கேட்டார்.
“பூரி…..” ராசுப்பயலுக்கு குரல் எழும்பவில்லை.
“சாப்புடணுமா….?” கையை வாய்க்கருகில் கொண்டு சென்று கேட்டார். ராசு தலையாட்டினான்.
“காசு கொணாந்திருக்கியா….?” அவனுக்கு அவமானமாயிருந்தது. சட்டென உடல் கூசிப்போக கண்கள் கலங்கின. வேகமாய் தலையாட்டி பைக்குள்ளிருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் காண்பித்தான்.
“உள்ளாற போயி ஒக்காரு…” அவர் கைக்காட்டிய இடத்தில் சென்றமர்ந்தான். இரண்டு கால்களுக்கிடையில் புத்தகப்பையை நிறுத்தி இறுக்கிக் கொண்டான்.
‘தம்பிக்கு ஒரு செட்டு பூரி குடுப்பா…” முதலாளியே அவனுக்காக குரல் கொடுத்தார். ராசுப்பயல் நாற்காலியின் விளிம்பில் அமர்ந்திருந்தான். கைவிரல்களைக் கோர்த்து தொண்டையை நனைத்துக்கொண்டான். அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சமையல்கட்டை நன்றாகப் பார்க்க முடிந்தது. உள்ளே, கைவைத்த அழுக்கு பனியன் அணிந்திருந்த மாஸ்டர் பூரி தேய்த்துக் கொண்டிருந்தார். பிசைந்து வைத்திருந்த மாவிலிருந்து சிறிது கிள்ளி எடுத்து உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்து உருட்டினார்.
உருட்டிய மாவை அரை நொடியில் பெரிய வட்டமாய் தேய்த்தார். ராசுப்பயல் அதை அதிசயம் போல் கண்கள் விரியப் பார்த்தான். வட்டா நிறைய கொதித்துக் கிடந்த கிழங்கில் கல்பாசியின் தணியாத வாசம். சப்ளையர் பையன் ஒரு பெரிய தம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து வைத்தான். ராசுப்பயல் கொஞ்சமாய் நீர் அருந்திக் கொண்டான்.
“தண்ணி குடிச்சா பசியடங்கிடும் ” என்பாள் ஈசுவரி. நீரில் எண்ணெய் கசண்டடித்தது.
பக்கத்து மேசையில் ஒருவர் பூரி மேல் குருமாவைப் பரப்பி மூன்று விரல்களால் பிய்த்து, பிய்த்து தின்று கொண்டிருந்தார். ராசுப்பயலுக்கு வாய்க்குள் உப்புநீர் சுரந்தது. உதடுகள் லேசாக பிளந்து கொண்டன. கருமணிகள் அசையாது அவரையே உன்னித்தன.
“பூரி……” சப்ளையர் ணங்கென்று தட்டை வைத்தான். அவன் ராசுவைவிட நான்கைந்து வயது மூத்தவனாயிருப்பான். முகம் கடுகடுத்திருந்தது. திடீரென்று பக்கவாட்டிலிருந்து குரல் வந்ததில் தவம் கலைந்த தினுசில் ராசுப்பயல் அதிர்ந்துபோனான்.
தட்டில் இளம்பச்சை நிற குருத்து வாழையிலையில் இரண்டு உப்பல் பூரிகள். பக்கத்தில் மஞ்ச, மஞ்சேரென்று ஆவாரம்பூ குருமா. மூன்று விரலால் பிய்க்க வேண்டும். பக்கத்துமேசை மனிதர் சொல்லித் தந்திருந்தார். பிய்த்தான். பிஞ்சு விரல்கள் எண்ணெயில் மினுமினுத்தன. குருமாவில் தோய்த்தான். விழிகளில் பறந்தலைகிற ஆவல். தலையை லேசாக உயர்த்தி கிழங்கோடு பூரியை வாயிலிட்டுக்கொண்டான். அப்போது கண்கள் தானாக மூடிக்கொண்டன. அதுவரை அனுபவித்தறியாத ருசியின் தீண்டலில் நாக்கு இளஞ்சிவப்பு மலர் போல மலர்ந்து போனது. ஒவ்வொரு வாய்க்கும் எழுந்த கிளர்ச்சி மனதை பரபரக்க செய்தது. கால்கள் பையை இறுக்கிக்கொண்டன.
மூளையின் செல்களை உணர்வூட்டி விட்டது போல அவனுக்குள் கதைகள் கிளைத்தன. இன்னொருமுறை கடைக்கு வருவது போன்ற நிகழ்வை நிகழ்த்திப் பார்த்து மனசு சந்தோஷப்பட்டது. ஒவ்வொரு வாய்க்கும் இடைவெளி விட்டு ருசிக்க, கண்கள் சுற்றியலைந்தன. உடல் முன்னும், பின்னுமாக லேசாக அசைந்தது. கடைசிவாயை வழித்து வாயிலிட்டுக்கொண்டபோது வயிறு நிறைந்து போனது.
குருமாவின் மசாலா வாசம் உள்ளங்கையில் மிதந்தது. உள்ளங்கை எண்ணெய் மினுமினுப்பில் வாழைப்பூ போல இளமஞ்சள் நிறத்தில் பளபளத்தது. கழுவிய கையை
சட்டையில் துடைத்துக்கொள்ள பயமாயிருந்தது. ஒருமாதிரி அடிபட்ட கை போல உடம்பில் படாதவாறு வைத்துக்கொண்டு ராசுப்பயல் பிள்ளையார் கோவிலண்டை வந்து நின்றான். தூரத்தில் சகாக்கள் வருவது தெரிந்தது.
“ஒசத்தியான மஞ்ச நெறத்துல ஆவாரம்பூவாட்டம் குருமா. …” மனதில் சொல்லிப் பார்த்துக்கொண்டான் .
கதை மாந்தர்களின் மனவோட்டங்களை ஏற்ற இறக்கமின்றி சொல்வதிலும் சூழ்நிலையை காட்டுவதிலும் ஆசிரியர் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கிறார். தனுஷ்கோடி ராமசாமியின் ஓர் சிறுகதையை (“சேதாரம்” தொகுப்பு) நினைவுபடுத்தியது, இந்த கதை. இந்தக் கதையின் சிறப்பாக, ரூபாய்த்தாளின் வெள்ளிக்கோடாக நான் கருதுவது, கதைச்சொல்லி- சிறுவனின் கதைச்சொல்லும் பழக்கம்தான்… ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்
மிக எளிமையான ஆனால் கனமான மனத்தை உருக்கும் கதை. ஒரு பூரி சாப்பிடுவது என்பது கூட சாதாரண ஏழைச்சிறுவனுக்குக் கனவாக இருக்கிறது. இது இன்னும் கூட சில இடங்கலில் இருக்கிறது மிக யதார்த்தம்