ஸிந்துஜா
கிழக்கு மேற்காகத் திருப்பரங்குன்றம் சாலை ஓடிற்று. சாலையின் வடக்கில் இருந்த பஸ் ஸ்டாப்புக்குப் பின்புறம் வரிசையாக நான்கு வீடுகள் ஒரே காம்பவுண்டுக்குள் சாலையைப் பார்த்தபடி நின்றன. இடது பக்கம் இரண்டு, வலது பக்கம் இரண்டு என்று பிரித்து நடுவில் உயர்ந்து நின்ற இரும்புக் கிராதியிட்ட கேட்டின் வழியே ஒரு பாதை சென்றது. பாதை வழியே உள்ளே சென்றால் உள்ளே இடது பக்கம் முன்பு கோடவுன் என்று கட்டப்பட்டு அப்புறம் வீடாய் மாறி விட்ட கட்டிடம். வலது பக்கம் பெரிய கிணறு. வீட்டுக்குள்ளேயே கக்கூஸ் கட்டிக் கொள்ளும் நாகரீகத்தை ஒத்துக் கொள்ளாத காம்பவுண்டின் சொந்தக்காரர் கிணற்றைத் தாண்டி மூன்று கழிவறைகள் கட்டியிருந்தார். தவிர பெண்கள் வீட்டின் முற்றத்திலேயே குளியல் வேலைகளை முடித்துக் கொள்பவர்களாக இருந்ததால், குடியிருக்கும் வீட்டு ஆண்கள் உபயோகிக்க என்று இரண்டு குளியலறைகளும் அங்கே இருந்தன. கோடவுனுக்கு என்று கட்டப்பட்டு யாரும் வராததால் இரண்டு மூன்று தடுப்புச் சுவர்களை எழுப்பி ஒரு வீடாக அதை வீட்டுச் சொந்தக்காரர் மாற்றியும் அது முறையான வீடாக அமையாதிருந்த
தால் குடி வருவதற்கும் ஆள் கிடைப்பது பெரும்பாடாக இருந்தது. கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன்னால்தான் தர்மலிங்கம் குடும்பம் அந்தப் பின் வீட்டுக்குக் குடி வந்தது..
தர்மலிங்கம் வீட்டில் அவர், அவரது மனைவி, பிள்ளை நாராயணன் என்று மொத்தம் மூன்று பேர். அந்த வீட்டில் எப்போதும் ஒருவித மயான அமைதி நிலவியது. வீட்டில் உள்ளவர்கள் பேசும் குரல்களைக் கூட யாரும் கேட்கவில்லை. அந்த மூன்று பேரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்களா என்று கூட மற்றவர்களுக்கு ஐயம் இருந்தது.
காம்பவுண்டில் முன்புறம் சாலையைப் பார்த்து நின்ற நான்கு வீடுகளிலும் நடுத்தரக் குடும்பத்தினர்தாம் வசித்து வந்தனர். முதல் வீட்டில் பழனிச்சாமி வாத்தியார் என்று வீணை வித்துவான் குடி இருந்தார். சிபாரிசு, சபா போன்ற புழுக்களை அவர் மதிக்காமல் இருந்ததால் கேடு கெட்ட உலகம் அவர் பக்கம் திரும்பாமல் இருந்தது. ட்யூஷன்களிலும் மீனாக்ஷி அம்மன் கோயில் நவராத்திரி போன்ற விசேஷக் கச்சேரிகளிலும், அவ்வப்போது கிடைத்த கல்யாண வீட்டு வாசிப்புகளிலும் ஜீவனம் நடத்த முடிந்தது. அவர்களுக்கு விஜயா என்று பெண். அவள் பள்ளி இறுதி வகுப்பை முடித்து விட்டு நான்கு வருஷங்களாகக் கலியாணத்துக்குக் காத்துக் கொண்டிருந்தாள்.
இரண்டாம் வீட்டில் இந்தியன் வங்கியில் வேலை பார்த்த வரதராஜுவும் அவர் மனைவி லட்சுமியும் இருந்தார்கள்.
இந்தக் கதைக்கு மற்ற இரண்டு குடித்தனக்காரர்களைப் பற்றிய அறிமுகம் தேவை இல்லை.
வரதராஜுதான் எல்லோரிடமிருந்தும் மாத வாடகையை வசூலித்து அவர் அலுவலகம் போகும் வழியில் இருந்த வீட்டுக்காரரிடம் கொண்டு போய்க் கொடுத்தார். இதற்காக மாதம் ஒரு முறை அந்தந்த வீட்டுக்
காரர்கள் வரதராஜுவிடம் வந்து நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கொடுத்து விட்டுச் செல்லுவார்கள். இந்த வசூல் விவகாரத்தின் பொருட்டு தர்மலிங்கத்துக்கு வரதராஜுவுடன் பேசும் பழக்கம் ஏற்பட்டது. முதல் மாத வாடகை கொடுக்க வந்த போது வரதராஜு அவரிடம் “இதுக்கு முன்னாலே எங்கே குடியிருந்தீங்க?” என்று கேட்டார்.
அவர் “கல்கத்தாலே” என்றார். “ரிட்டயர்மென்டுக்கு அப்புறம் ஆழ்வார்குறிச்சிக்குப் போயிடலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அதுதான் சொந்த ஊரு. ஆனா நாப்பது வருஷங் கழிச்சும் பரமகல்யாணியைத் தினமும் சேவிக்கிற பாக்கியம் கிடைக்கலே” என்று சிரித்தார்.
வரதராஜு ‘ஏன், என்ன ஆச்சு?’ என்று பார்வையாலேயே கேட்டார்.
“பையனுக்கு இங்கே காலேஜில் சீட்டு கிடைச்சிது. ஆஸ்டல்லே விடலாம்னுதான் இருந்தேன். ஆனா என் சம்சாரம் ஒத்துக்கலே. இங்க ஒரு மூணு வருஷம் மீனாச்சியைப் பாத்துகிட்டு சிவனேன்னு கிடடான்னு நமக்கு எழுதியிருக்கு.”
“நாப்பது வருஷமா? வேலையெல்லாம்?”
“ஒரு வெள்ளைக்காரன் கம்பனியிலே. சேந்தப்போ பத்து மணி ஆபீசுக்கு எட்டு மணிக்கே போயி கூட்டிப் பெருக்கணும்; டேபிள் சேர் எல்லாத்தையும் துடைக்கணும். பாத்ரூமைக் கழுவி சுத்தம் பண்ணனும். ஆபீஸ்லே வேலை பாக்கறவங்களுக்கு சமோசாவும் டீயும் அவங்க கேக்கிறப்போ வாங்கிக் கொடுக்கணும். ரூமுலேதான் தங்கி இருந்தேன். அங்கே திரும்பிப் போக ராத்திரி ஆயிரும். கடைசி பத்து வருஷத்திலே வீட்டுக்கும் ஆபீசுக்கும் சேத்து யூஸ் பண்ணக் கார் கொடுத்தாங்க. பதினோரு மணிக்கு ஆபீஸ். நாலு மணிக்கு வீடு. கம்பனி கஸ்டமர்களுக்கும் சப்ளையர்களுக்கும் தீபாவளிக்கு ரசகுல்லாவும் துர்கா பூஜைக்கு சோன் பப்டியும் பாக்கெட் பாக்கெட்டா அட்டன்டர்களை விட்டு அனுப்புவேன். மாசத்திலே பாதி நாள் இன்கம்டாக்ஸ், சேல்ஸுடாக்ஸ் ஆபீசர்களுக்கு ஸ்டார் ஹோட்டல்லே பார்ட்டி கொடுக்கிற நெலைமைக்கு ஏத்தி விட்டுட்டான் வெள்ளைக்கார பாஸ்” என்று புன்னகை செய்தார்.
பிறகு “நீங்க இந்த ஊர்தானா?” என்று தர்மலிங்கம் வரதராஜுவைக் கேட்டார்.
“எனக்குப் புட்டபர்த்தி பூர்வீகம். இங்கே ஒரு மில்லுலே வேலை கிடைச்சுதுன்னு வந்தேன். அப்புறம் பேங்கிலே வேலை கிடைச்சு இங்கேயே செட்டில் ஆயிட்டேன்” என்றார் வரதராஜு. “நானும் மீனாச்சி கிட்டே வந்து முப்பது வருஷம் ஆயிடுச்சு.”
“புட்டபர்த்தின்னா சத்திய சாயி பாபா?”
“ஆமா.”
“நிஜமாவே விபூதி எல்லாம் மேலேந்து கொட்டுமா?”
“எல்லாம் நம்பிக்கைதான். கடவுள் தலைக் கொண்டையிலே கங்கையை முடிஞ்சு வச்சார்னும், கெட்டவனுக்குப் பத்து தலை இருந்ததுன்னும், செங்கடலை வத்த வெச்சு மத்தவங்க நடக்கறதுக்கு வழி பண்ணிக் கொடுத்தார்னும் சொல்லிட்டு இருக்கறதை எப்பிடி நம்புறோம்? அது மாதிரிதான்” என்றார் வரதராஜு.
“நீங்க கல்கத்தாலே இருந்தது பத்திப் பேசிட்டிருந்தீங்க. கல்கத்தாலே நீங்க எங்க குடியிருந்தீங்க?” என்று வரதராஜு யதார்த்தமாகக் கேட்டார்.
தர்மலிங்கம் கொஞ்சம் யோசித்தவர் போல மௌனமாக இருந்தார். பிறகு “அலிப்பூர்லே” என்றார். “நீங்க கல்கத்தா வந்திருக்கீங்களா?”
“நாங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே ஒரு பத்து நாள் என் மச்சான் வீட்டுலே போய்த் தங்கினோம். அவன் அங்கே ரயில்வேலே இருக்கான்” என்றார் வரதராஜு
“அலிப்பூர்லேயா?”
“இல்லே. ஜே சி போஸ் ரோடுக்குப் பக்கத்திலே. அங்கேர்ந்து அலிப்பூர் பக்கந்தான்னு என் மச்சான் சொல்லுவான் அங்கே அவனோட மாமனார் வீடு இருந்திச்சின்னு அடிக்கடி போவான். நாங்க கல்கத்தா போனப்போ எங்களையும் ஒரு தடவை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிக் காமிச்சான் ” என்றார் வரதராஜு.
” ஓ சம்பந்திங்க வீடா? அவங்க எங்கே இருந்தாங்க அலிப்பூர்லே? ” என்று தர்மலிங்கம் கேட்டார்.
வரதராஜு கொஞ்சம் யோசித்தார். பிறகு “எனக்கு ரோடு பேரு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது” என்றார். “ஆனா நாங்க போனப்போ சம்பந்தி வீடு பக்கத்திலே ஒரு ஆஸ்பத்திரி இருந்திச்சு. பெரிய ஆஸ்பத்திரி.”
தர்மலிங்கம் “ஆஸ்பத்திரியா? அப்போ கமாண்ட் ஆஸ்பத்திரியாதான் இருக்கும்” என்றார்.
வரதராஜு “ஆமா. அதேதான்” என்றார்.
“சரி, நான் கிளம்பறேன்” என்று எழுந்தார் தர்மலிங்கம்.
அவர் கூடவே வாசலுக்கு வந்த வரதராஜு “அப்ப எங்க இருந்தீங்க?” என்று கேட்டார்.
தர்மராஜு திடுக்கிட்டு “என்ன? என்ன?” என்றார்,
“இல்லே, நீங்க அலிப்பூர்லே எங்கே இருந்தீங்கன்னு கேட்டேன்” என்றார் வரதராஜு. .
“ஓ, அதுவா?” என்றார் தர்மலிங்கம். “ஆஸ்பத்திரிக்குக் கொஞ்சம் தள்ளி.”
“ஒரு வேளை நீங்க என் தம்பியைக் கூடப் பாத்திருப்பீங்க. அவனுங் கூட உங்களைப் பாத்திருப்பான்” என்றார் வரதராஜு.
தர்மலிங்கம் “அப்ப நான் வரட்டுமா?” என்று கேட்டபடி வெளியே சென்றார்.
அதற்குப் பின் அடுத்த மாதம் வாடகை கொடுக்க வந்தார் தர்மலிங்கம், அவர் வரும் போது மாலை நாலரை இருக்கும். வரதராஜு காப்பி குடித்துக் கொண்டிருந்தார்.
வந்தவரைப் பார்த்து “வாங்க. உக்காருங்க. காப்பி சாப்பிடுங்க” என்று உபசரித்தார் வரதராஜு.
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நான் அப்புறமா வரட்டுமா?” என்று கேட்டார் தர்மலிங்கம் நின்று கொண்டே.
“அட, உக்காருங்க சொல்லுறேன். நம்ம வீட்டுக் காப்பியையும் டேஸ்ட் பண்ணிப் பாருங்க” என்று வரதராஜு சொல்லிக் கொண்டிருக்கும் போதே லட்சுமி ஒரு தட்டில் பட்சணங்களைக் கொண்டு வந்து ஒரு ஸ்டூலில் தர்மலிங்கம் முன்னால் வைத்து “சாப்பிடுங்க” என்றாள்.
அவர் சங்கோஜத்துடன் நாற்காலியில் உட்கார்ந்தார். தட்டிலிருந்து
அல்வாத்துண்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.
வரதராஜுவிடம் “பிரமாதமா இருக்கே. நாகப்பட்டினம் மிட்டாய்க் கடையிலே வாங்கினதா?” என்று கேட்டார்.
“இல்லே. நம்ம வீட்டிலே செஞ்சதுதான்” என்றார் வரதராஜு சிரித்துக் கொண்டே.
“அடடா, எவ்வளவு பிரமாதமா இருக்கு? நான் ஒரு முட்டாள், நாகப்
பட்டினம் கடை அல்வாதான் உலகத்திலேயே டேஸ்டின்னு நினைச்சு
கிட்டு இருந்தேன்” என்று சிரித்தார். “அப்படியே கரையுதே நாக்கிலே! என்னமா ஒரு ஸ்மெல்லு!” என்று விடாமல் புகழ்ந்தார்.
“கொஞ்சம் மிச்சரையும் எடுத்துக்குங்க. காப்பி குடிக்கறப்போ
நாக்குலே கொஞ்சம் காரம் இருக்கணுமில்லே” என்றார் வரதராஜு.
மிக்சரை எடுத்து வாயில் போட்டு மென்றார். “இப்பவாச்சும் நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாப் பேசணும்! இது வீட்டிலே செஞ்சதுதானே!” என்றார்.
உள்ளேயிருந்து சிரித்துக் கொண்டே வந்த லட்சுமி அவரிடம் காப்பிக் கோப்பையைக் கொடுத்தாள்.
“இவ்வளவு காப்பியா?” என்று அவர் பிரமித்தார். “இன்னிக்கி ராத்திரி எங்க வீட்டிலே நான் ஒண்ணும் சாப்பிட வேணாம்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க” என்றார். அப்புறம் வாடகைப் பணத்தைக் கொடுத்தார்.
“உங்க மச்சான் இந்தப் பக்கம் வருவாரா?” என்று கேட்டார்.
திடீரென்று அவர் அப்படிக் கேட்டதும் வரதராஜூவுக்கு ஒன்றும் புரியவில்லை. விழித்தார்.
“அதான் கல்கத்தாலே இருக்காருன்னிங்களே!”
“ஓ அவனா? எனக்கு மொத்தம் மூணு மச்சாங்க இருக்காங்க. அதான் நீங்க திடீர்னு கேட்டதும் முழிச்சிட்டேன். அவன் எங்க இப்ப கல்கத்தாலேந்து வர்றது? போன வருஷந்தான் வந்திட்டுப் போனான். குடும்பத்திலே எல்லாரையும் இழுத்துப் பிடிச்சி அழச்சிட்டு வரதுன்னா சும்மாவா இருக்கு?” என்றார் வரதராஜு.
“அது சரி, அது சரி” என்று எழுந்தார் தர்மலிங்கம்,
லட்சுமி உள்ளேயிருந்து வந்து ஒரு பாத்திரத்தை அவரிடம்கொடுத்தாள்.
“கொஞ்சம் அல்வாவும், மிச்சரும் வச்சிருக்கேன். அம்மாவுக்கும் தம்பிக்கும் கொடுங்க.”
வியப்பு அவரை அடித்துத் துவைத்துப் போட்டது போல ஒரு நிமிஷம் தர்மலிங்கம் அப்படியே நின்றார். பிறகு லட்சுமியைப் பார்த்து வணங்கி விட்டு மெதுவாக வெளியே சென்றார்.
வரதராஜு “இந்த மனுஷன் ஒரு மாசம் கழிச்சு வந்து எதுக்கு உன் தம்பியைப் பத்தி கேக்கறாரு? ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியாம முழிச்சிட்டேன்” என்றார் மனைவியிடம்.
“கல்கத்தாலே உங்க மச்சான் இருக்கான்னதும் நீங்க ரொம்ப சொந்தமாயிட்டீங்க போலிருக்கு” என்று சிரித்தாள் அவர் மனைவி,
“அப்பிடியா சொல்லுறே? எனக்கு என்னமோ அப்படித் தோணலியே?” என்றார் வரதராஜு.
“பின்னே எப்பிடித் தோணுதாம்?”
அவர் ஒன்றும் சொல்லாமல் அவளைப் பார்த்தார்.
“வந்ததுக்கு ஏதாவது பேசிட்டுப் போகணும்னு நினைச்சிருப்பாரு. பாவம்” என்றாள் லட்சுமி.
ஒரு நாள் தாயம்மா லட்சுமியிடம் வந்து “நம்ம அய்யாவோட பிரெண்டு
ஊருக்குப் போயிருக்காரு” என்றாள்.
“யாரு? எந்த ஊருக்கு?” என்று லட்சுமி கேட்டாள்.
“அதான் பின் வூட்லே இருக்காரே அவருதான்.”
“யாரு கல்கத்தாக்காரரா?”
“ஆமா. அவருதான். அந்த ஊருக்குத்தான் போயிருக்காராம்” என்றாள் தாயம்மா.
லட்சுமிக்கு வியப்புடன் கூடவே சற்றுக் கோபமும் வந்தது. கல்கத்தா போற மனுஷனுக்கு நம்ம கிட்டே ஒரு வார்த்தை சொல்லத் தோணலை பாரு என்று நினைத்தாள். தர்மலிங்கம் போவதை அவளிடம் தெரிவித்திருந்தால் தம்பிக்குக் கொஞ்சம் பலகாரங்கள் செய்து கொடுத்திருப்பாள். அடுத்த மாதம் அவன் மனைவிக்குப் பிறந்த நாள் வருகிறது. அதுக்கு ஒரு புடவை வாங்கிக் கொடுத்தனுப்பி இருக்கலாம்.
மாலையில் வரதராஜு வீட்டுக்கு வந்த போது அவள் தாளமாட்டாமல் அவரிடம் பொருமினாள்.
“போன மாசம் ஒரு நாள் திருச்சிக்கு அவரு மாத்திரம் ஒரு கலியாணத்துக்குப் போயிட்டு வரேன்னு உங்ககிட்டே சொல்லிட்டுப் போனாரில்லே? இப்போ உங்க மச்சான் இருக்கற ஊருக்குப் போகறதைக் கூட சொல்லாமப் போறாரு! ஏதாச்சும் பார்சல் கட்டிக் கொடுத்திருவோமுன்னு பயமா?”
“சரி விடு. அந்த மனுஷனுக்கு என்ன பிரச்சினையோ, நமக்கு என்ன தெரியும்? திடீர்னு போயிருக்காருன்னா ஒண்ணும் குறை சொல்ல முடியாது. ஆனா பிளான் போட்டு ஊருக்குப் போனாருன்னா நாமதான் அவருகிட்டேர்ந்து விலகி நிக்கணும். இல்லியா?” என்றார் அவர்.
ஒரு வாரம் கழித்து தர்மலிங்கம் திரும்பி விட்டார்.அவர் டாக்சியிலிருந்து இறங்கும் போது வாசலில் நின்ற வேப்பமரத்திலிருந்து வரதராஜு வேப்பங்குச்சியை ஒடித்துக் கொண்டிருந்தார். தர்மலிங்கம் கூட ஓர் இளைஞனும் இறங்கினான். உயரமாக, கட்டுடலுடன், செவேலென்று இருந்தான். காரிலிருந்து ஒரு பெட்டியும் இரு தோள் பைகளும் இறக்கப்பட்டன. தர்மலிங்கம் அவரருகே வரும் போது வரதராஜுவிடம் “இது என் பையன் சார். செல்வம்னு பேரு. நாராயணனுக்கு அண்ணன். கல்கத்தாலே வேலை பாக்குறான்” என்றார். அவனைப் பார்த்து “சாருக்கு வணக்கம் சொல்லுடா” என்றார். அவன் கை தூக்கி அவரை வணங்கினான்.
“திடீர்னு கிளம்பிப் போக வேண்டியதா ஆயிடிச்சு. அதான் உங்ககிட்டே ஒரு வார்த்தை சொல்லிக்கக் கூட முடியாமப் போயிருச்சு” என்றார் தர்மலிங்கம்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லே. போன வேலை திருப்தியா ஆச்சுன்னா சரிதான்” என்றார் வரதராஜு. அவர்கள் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நடந்தார்கள். அந்தப் பையன் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்துக் கொண்டே போனான்.
அடுத்து வந்த நாள்களில் காம்பவுண்டில் உள்ளவர்களுக்கு செல்வம் பெரும் காட்சிப் பொருளாகி விட்டான். தினமும் மாலையில் அண்ணனும் தம்பியும் வெளியே கிளம்பி விடுவார்கள். செல்வம் அணிந்திருந்த உடைகள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தன. ஒரு நாள் அணிந்த உடையை அவன் மறுநாள் அணிந்து யாரும் பார்க்கவில்லை. அண்ணனும் தம்பியும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு செல்வார்கள்.
ஒரு நாள் மாலையில் வாத்தியாரின் மனைவியும் லட்சுமியும் பேசிக் கொண்டிருந்த போது விஜயாவின் கலியாணப் பேச்சு வந்தது.
“நானும் படாதபாடு படுறேன். இந்தப் பொண்ணுக்கு ஒரு சம்பந்தம் அமைஞ்சிட்டா தேவலே” என்றாள் வாத்தியாரின் மனைவி.
“நாமதான் கையிலே வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையறமோன்னு தோணுது” என்றாள் லட்சுமி.
“என்ன சொல்றீங்க?”
“ஆமா. இந்தப் பின்வீட்டுலே இருக்காரே தர்மலிங்கம், அவர் பிள்ளையைப் பாத்தீங்கள்ளே? ராஜா மாதிரி இருக்கான். கல்கத்தாலே வேலையிலே இருக்கான்னு சொல்றாங்க. அவனை விஜயாவுக்குப் பாக்கலாமில்லே?”
“ஆனா யாரு எப்பிடிப் போயி கேக்கறது? அவங்க வீட்டுலே இருக்கிறவங்க சண்டிகேஸ்வரரைக் குலதெய்வமா வச்சிருக்கிற மாதிரியில்லே இருக்காங்க? அவங்க யாரும் இங்கே யாரோடையும் பேசி நான் பாத்ததில்லையே!” என்றாள் வாத்தியாரின் மனைவி. அவள் குரலில் லட்சுமியின் யோசனைக்கு வரவேற்பிருந்தது.
“நா எங்க வீட்டுக்காரரைக் கேக்கச் சொல்லறேன். அந்த வீட்டு மனுஷன் நாலுலே ரெண்டிலே இவங்க கிட்டே வந்து பேசிட்டுப் போவாரு” என்றாள் லட்சுமி. அன்றிரவு அவள் வரதராஜுவிடம் இதைச் சொன்ன போது “இந்த ஐடியா நல்லா இருக்கே. தர்மலிங்கத்துக்கிட்டே கேட்டுப் பாக்கலாம்” என்றார். ஆனால் மறுநாள் அவர் ஆபிசிலிருந்து வரும் போதே இரவு மணி எட்டாகி விட்டது. அவரைப் பார்த்ததும் சூடாகத் தோசை சுட லட்சுமி அடுப்படிக்குச் சென்றாள்.
எட்டரைக்கு எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்போது ‘ஓ’வென்று பெருங் குரலில் யாரோ ஓலமிடுவது கேட்டது. பதறியடித்துக் கொண்டு வரதராஜு வாசலுக்கு ஓடினார். ஆனால் சத்தம் பின் வீட்டிலிருந்து வந்து கொண்டு இருந்தது. அவர் வேகமாகத் தர்மலிங்கத்தின் வீட்டை அடைந்தார். அவருக்குப் பின்னாலேயே பழனிச்சாமி வாத்தியாரும் ஓடி வந்தார். வரதராஜு “தர்மலிங்கம் சார், தர்மலிங்கம் சார்!” என்று சத்தமாக அழைத்தார். உள்ளேயிருந்து எந்த மறுமொழியும் வரவில்லை. உள்ளே இருந்த அழுகுரல் சத்தத்தில், தான் கூப்பிடுவது கேட்கவில்லை போலும் என்று வரதராஜு கதவைத் தட்டினார். வாத்தியாரும் சேர்ந்து கொள்ள இருவரும் பலமாகக் கதவைத் தட்டினர். ஆனால் எந்தவித பதிலும் உள்ளிருந்து வரவில்லை. சில வினாடிகளில் அழுகுரலின் உக்கிரம் அடங்கி நின்றது. ஓரிரு நிமிஷங்கள் இருவரும் காத்திருந்து விட்டுத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.
மறுநாள் காலையில் தர்மலிங்கம் வீட்டில் பால் கொண்டு வந்து தரும் கறுப்பாயி, லட்சுமியிடம் வந்து அவர்கள் வீட்டில் கதவைத் தட்டினாலும் திறக்கவில்லை என்று சொன்னாள். வரதராஜூவுக்கும் லட்சுமிக்கும் வயிற்றில் கலவரம் பிடுங்கித் தின்றாலும் வேறு எதுவும் செய்ய முடியாத நிலைமையில் இருப்பதை உணர்ந்தார்கள். வரதராஜு மாலை வீடு திரும்பியதும் லட்சுமி அவரிடம் அன்று மத்தியானம் தர்மலிங்கம் வீட்டை விட்டு வெளியே வந்து தண்டல்காரன்பட்டிப் பக்கம் நடந்து சென்றதாகச் சொன்னாள். ஒரு மாதிரி தள்ளாடிக் கொண்டே அவர் சென்றது பார்க்கப் பரிதாபமாக இருந்தது என்றாள்.
ஆனால் அடுத்த இரண்டு நாள் கழித்து நடந்ததுதான் மிகுந்த அதிர்ச்சியை வரதராஜுவிடம் ஏற்படுத்தி விட்டது. வரதராஜுவின் வீட்டுக்கு அன்று மாலையில் வந்து வாத்தியார்தான் விஷயத்தைச் சொல்லிக் கோபப்பட்டார். அன்று காலை வாத்தியாரின் வீட்டுக் கொல்லைப்புறம் வழியாக அவர் வீட்டுக்குள் வெகு வேகமாக செல்வம் ஓடி வந்தானாம். வந்தவன் வாசல் வரை சென்று விட்டு மறுபடியும் அதே வேகத்தில் திரும்ப வந்தானாம். வெள்ளிக்கிழமையென்று அப்போதுதான் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வெளியே வந்த விஜயாவின் மீது மோதி அவள் கீழே விழுந்து விட்டாள். அவன் நின்று அவளைப் பார்த்துச் சிரித்தானாம். அவள் பயந்து போய் “ஐயோ ஐயோ!” என்று கத்தியதைக் கேட்டு விஜயாவின் அம்மா வந்து பார்த்து அவளும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள். செல்வம் மறுபடியும் திரும்பி வாசல் வழியே ஓடிப் போய் மெயின் ரோடில் நின்றானாம். அங்கே அப்போது பஸ்களும் லாரிகளும் கார்களும் பறந்து கொண்டிருந்த நேரம். இதற்குள் அவன் வீட்டில் இல்லாததைக் கண்டு பிடித்த நாராயணன் வாசலுக்கு வந்து ரோடில் நிற்பவனைப் பார்த்திருக்கிறான். அவனை நோக்கி ஓடிய இவனைப் பார்த்து அவன் ரோடின் குறுக்காக எதிர் முனைக்கு ஓடினானாம். அப்போது வந்து கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்றின் மேல் மோதி செல்வம் ரோடில் விழுந்து விட்டான். கையிலும் காலிலும் நல்ல அடி. தோல் சிராய்ப்பினால் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஒரே களேபரமாகிக் கடைசியில் நாராயணன் அவனை ஒரு ரிக் ஷாவில் ஏற்றிப் பக்கத்தில் இருந்த கிளினிக்குக்கு எடுத்துச் சென்றான். அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்த போது மதியம் ஒரு மணியாகி விட்டதாம். கைகளிலும் கால்களிலும் கட்டுப் போட்டிருந்த அவனை நாராயணன்தான் ரிக் ஷா விலிருந்து தூக்கிச் சென்றானாம்
கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்த முகத்துடன் இதையெல்லாம் சொல்லி விட்டு பழனிச்சாமி அவரிடம் “என்ன சார் இங்கே நடக்குது? வீட்டுக்குள்ளாற ஒருவன் தாந்தோணியா ஓடி வாரான். குளிச்சிட்டு வந்த பொம்பளைப் புள்ளே மேலே இடிச்சு அதைக் கீளே தள்ளி விட்டுருக்கான். போதாதுக்கு அவ கீளே விளுந்து கிடக்கிறதைப் பாத்து சிரிச்சுகிட்டே நின்னானாம். மனுஷத்தன்மையே இல்லாத பயலால்லே இருக்கான்? ‘இப்பிடி ஆயிருச்சே, மன்னிச்சுக்குங்க’ன்னு ஒரு வார்த்தை அந்தப் பயலோட அப்பன் கிட்டேயிருந்து இதுவரைக்கும் வரலே. என்னை என்னா கையாலாகாத பயலுன்னு நினைச்சுகிட்டு இருக்காங்களா? வீச்சரிவா எடுத்தா ஒரே போடுதான். நான் செயிலுக்குப் போனாலும் ஆயிட்டுப் போகுதுன்னு வெட்டிப் போட்டிருவேன்” என்று கத்தினார்.
“சார். பதட்டப்படாதீங்க. உங்க கோபம் எனக்குப் புரியுது. உங்க நிலைமையிலே இருந்தா நான் கூட இப்படித்தான் இருப்பேன். நாம அங்கே போயி தர்மலிங்கத்தையே கேப்போம்” என்று வரதராஜு அவரைச் சமாதானப்படுத்த முயன்றார்.
“நாம போவோம். ஆனா நீங்க நாளைக்கு வீட்டுக்காரரைப் பாத்து முதல்லே இந்தக் குடித்தனத்தை வெளியே போகச் சொல்லணும்” என்றார்.
“நிச்சயமா. காலேலே மொத வேலையாப் போயி வீட்டுக்காரரைப் பாத்துப் பேசிடறேன்” என்றார் வரதராஜு. அவராலும் ஆத்திரத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
அவர்கள் தர்மலிங்கத்தின் வீட்டை அடைந்து கதவைத் தட்டினார்கள். தர்மலிங்கம்தான் கதவைத் திறந்தார். அவரைப் பார்த்ததும் வரதராஜு திடுக்கிட்டு விட்டார். சில தினங்களில் ஒருவரால் இவ்வளவு கிழடு தட்டிப் போக முடியுமா? நைந்த கண்களும், வதங்கிய முகமுமாகக் காணப்பட்ட அவர் கதவைப் பிடித்துக் கொண்டிராவிட்டால் கீழே விழுந்து விடுவார் போலத் தோன்றியது. கோபத்துடன் வந்த வாத்தியார் கூட ஒரு நிமிடம் அரண்டு போய் நின்றார்.
தர்மலிங்கம் அவர்களை உள்ளே அழைத்து உட்காரச் சொன்னார்.
“இன்னிக்கிக் காலையிலே உங்க பையன் எங்க வீட்டுக்கு வந்து அடிச்ச கூத்து உங்களுக்குத் தெரியுமா?” என்று பழனிச்சாமி தர்மலிங்கத்தைப் பார்த்துக் காட்டமாகக் கேட்டார்.
தர்மலிங்கம் திடுக்கிட்டு அவரைப் பார்த்தார். “என்ன ஆச்சு? எனக்குத் தெரியாதே” என்றார் குரல் நடுங்க.
பழனிச்சாமி அன்று அவர் வீட்டில் நடந்ததைக் கூறினார். “இது வெளியே தெரிஞ்சா எம் பொண்ணுக்கு எவ்வளவு அவமானம். பெத்த மனசு துடிக்குது.”
தர்மலிங்கம் வாத்தியாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு “இதை உங்க காலா நினைச்சு விழுந்து கும்பிடறேன். தயவு செய்து மன்னிச்சிருங்க என்னை” என்றார்.
வாத்தியார் “நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்கறீங்க? அந்தப் பயித்தியக்காரப் பயலைக் கூப்பிடுங்க. நீங்க மட்டும் இல்லேன்னா, இத்தினி நேரத்துக்கு அவன் கையைக் காலை முறிச்சிப் போட்டிருப்பேன்” என்றார் கோபமாக.
“நீங்க சொல்லுறது ரொம்ப சரி. அவன் பயித்தியக்காரன்தான். இப்ப ரூமுக்குள்ளாறே அடைச்சுப் போட்டிருக்கோம்” என்றார் தர்மலிங்கம்.
“என்னது?”
“இது என்ன வியாதின்னு தெரியலே. எல்லாரையும் மாதிரி ஒழுங்கா பேசுவான், நடப்பான், சாப்புடுவான், தூங்குவான். முன்னாலே ஒரு வருஷத்துக்கு ஒன்றரை வருஷத்துக்கு ஒரு வாட்டி திடீர்னு யாரோட கண்ட்ரோலுக்கும் அடங்காம, திடீர்னு சிரிச்சுக்கிட்டு திடீர்னு அழுதுகிட்டு, தனக்குள்ளேயே பேசிகிட்டு ஓடுவான். ஏன் இப்பிடின்னு யாருக்குமே தெரியாது. இன்னிக்கி உங்க வீட்டுக்குள்ளே ஓடி வந்த மாதிரி திடீர்னு வீட்டை விட்டு வெளியே வந்து ஓடிப் போயிருவான்.
ஆனா இப்ப இந்த ஒரு வருஷத்திலே இது மாதிரி நடக்கறது மூணாவது தடவை. அதுக்குத்தான் பதறிட்டு கல்கத்தா போனேன். டாக்டர் அவனைத் தனியா விடாதீங்க. கொஞ்ச காலம் உங்க கூடவே இருக்கட்டும்னு சொல்லிட்டாரு. அதனாலே இங்கே கூட்டிக்கிட்டு வந்தேன்” என்றார்.
சத்தம் போட வந்தவர்கள் சத்தமடங்கிக் கிடந்தார்கள்.
தர்மலிங்கம் பழனிச்சாமியிடம் “சாரு கூட என்னையத் தப்பா நினைச்சிருப்பாரு. அவரு நான் கல்கத்தாவில் இருக்கறதை பத்திக் கேக்குறப்போ அதை மறிச்சிகிட்டு வேறே எதாவது கேள்வி கேட்டு பதில் சொல்லிப் பேச்சை மாத்தப் பாப்பேன். என் பையனை இவரோ இவரு உறவோ பாத்துறக்கூடாதுன்னுதான் அப்பிடி நடந்துக்கிட்டேன்” என்று மன்னிப்புக் கோரும் குரலில் சொன்னார்.
“நா அதெல்லாம் மனசிலே வச்சிக்கலையே” என்று வரதராஜு பரிவுடன் அவரிடம் சொன்னார். “ஆனா அன்னிக்கி ராத்திரி உங்க வீட்டுலேந்து அழற குரல் வந்தப்போவே எனக்கு சந்தேகமா இருந்துச்சு. நீங்கதான் நாங்க ரெண்டு பேரும் வந்து அப்பிடிக் கதவைத் தட்டியும் கதவைத் தெறக்கவேயில்லை” என்றார் வரதராஜு.
தர்மலிங்கம் அவர்கள் இருவரையும் பார்த்து “ரெண்டு நிமிஷம் நாம வெளியிலே போய்ப் பேசலாமா?” என்று இறைஞ்சும் குரலில் கேட்டார்.
அவர்கள் மூவரும் வாசலில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றார்கள். சாலையில் போக்குவரத்து எதுவுமில்லாமல் நிசப்தம் தெருவை அடை காத்தது. இருந்த இருள் வெளியில் ஏதோ ஒரு வீட்டில் சுவர்க்கோழிஒன்று ‘ணிக்’கிட்டுக் கொண்டிருந்தது. நின்றிருந்தவர்களின் மனப் போராட்டங்களை எதிரொலித்து வேப்ப மர இலைகள் அசையாமல் நின்றன. அவர்களைப் பார்த்து உறுமிக் கொண்டே ஒரு தெரு நாய் ஓடிற்று.
தர்மலிங்கம் “என் சம்சாரத்தை வச்சுக்கிட்டுப் பேச வேணாமின்னுதான் இங்க உங்களைக் கூட்டிகிட்டு வந்தேன்” என்று சொன்னார். “அன்னிக்கி ஏன் அப்பிடி செல்வம் பய அழுதான் தெரியுங்களா? ராத்திரி எட்டு மணிக்கு சாதாரணமா சிலோன் ரேடியோலே பாட்டு கேட்டுகிட்டு இருந்தவன் தீடீர்னு டிரஸ்ஸைக் கழட்டிப் போட்டுட்டு அம்மணமா நிக்குறான். டேய் டேய் என்னடா பண்ணுறேன்னு அவங்கிட்டே நான் ஓடறேன். அவன் சிரிச்சுகிட்டே எதோ ஓடிப்பிடிச்சு விளையாடற குழந்தை மாதிரி கொல்லப்பக்கம் ஓடுறான். என்ன சத்தம்னு அவங்கம்மா வெளிலே வந்து பாத்து அப்படியே கலங்கி நின்னுடுச்சி. நாராயணன்தான் அவன் பின்னாலேயே ஓடிப் போயி தடுத்து நிறுத்தி வீட்டுக்குள்ளாற இழுத்திட்டு வந்தான். கழட்டிப் போட்ட உடுப்பை மாட்டுறான்னா மாட்டேன்னு மணிக் கணக்கா அடம் பிடிக்குறான். கெஞ்சிக் கதறி மெரட்டி சொன்னாலும் கேக்காம உடுப்பைக் கழட்டி எறிஞ்சு எறிஞ்சு ஓடப் பாக்குறான். நாராயணன் அவனை ரூமுக்குள்ளை தள்ளிக் கட்டிப் போட்டான். அப்போ அவன் மூஞ்சிலே இந்தப் பய காறித் துப்பினான். வேணுமின்னே ஒரு வார்த்தை சொல்லாம உக்காந்தபடியே ஒண்ணுக்குப் போயிட்டான். அப்பதான் நாராயணனுக்கும் பொறுமை போயிருச்சு. உருட்டுக் கம்பை எடுத்திட்டு வந்து சாத்த ஆரமிச்சான். அடிக்காவது பயந்து அடங்கட்டுமின்னு. வலி பொறுக்காம அவன் அலறினதும் அப்பதான்.”
மற்ற இருவரும் வாயடைத்து நின்றார்கள். சமாளித்து வரதராஜுதான் தர்மலிங்கத்தின் முதுகில் அணைப்பாகக் கை வைத்து மெல்லத் தட்டிக் கொடுத்தார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து தர்மலிங்கத்தை அவரது வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பினார்கள்.
வீட்டுக்குத் திரும்பிய வரதராஜு லட்சுமியிடம் தர்மலிங்கத்தின் தோற்றத்தையும், செல்வம் மனநலம் சரியாக இல்லாதவன் என்பதையும் சொல்லிப் புலம்பித் தீர்த்து விட்டார்.
“நீங்க செல்வத்தைப் பாத்தீங்களா?”
“ஆமா. உள்ளே ஒரு ரூமிலே கட்டிப் போட்டு வச்சிருக்காங்க. லேசா கதவைத் திறந்து காமிச்சாரு தர்மலிங்கம். கட்டில்லே அவன் படுத்திருந்தான். எங்க மூணு பேரையும் அவன் கண்ணு பாத்துகிட்டே இருந்திச்சு. அவன் மனசிலே என்ன ஓடிக்கிட்டு இருந்திச்சோ?” என்றார் வரதராஜு.
மறுநாள் வரதராஜு வழக்கம் போல் காலை ஆறு மணிக்கு நடைப் பயிற்சிக்குக் கிளம்பிப் போகும் போது பழனிச்சாமி அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தார்.
“என்ன இன்னிக்கி புதுசா வாக்கிங் ஆரமிச்சிருக்கீங்களா?” என்று பழனிச்சாமியைப் பார்த்து வரதராஜு சிரித்தார்.
“நீங்க வெளியே வரதுக்காகத்தான் நான் காத்துக்கிட்டிருந்தேன். வாங்க போகலாம்” என்று பழனிச்சாமி வரதராஜுவுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார்.
நடந்து செல்கையில் “நேத்தி ராத்திரி இந்த தர்மலிங்கத்தையும் அவரு குடும்பத்தையும் நினைச்சு நான் சுத்தமா தூங்கவே இல்லே” என்றார் பழனிச்சாமி. “உலகத்துலே கடவுள் மனுஷனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறான் பாருங்க.”
“ஆமா. விஜயாவுக்கு நடந்ததைப் பத்தி நானும் லட்சுமியும் கூட நேத்து ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தோம். இன்னிக்கிக் காலேலே முடியாது. ஆனா சாயங்காலம் ஆபீஸ்லேர்ந்து திரும்பி வரப்போ வீட்டுக்காரரைப் பாத்து சொல்லிட்டு வந்திடறேன்” என்றார் வரதராஜு.
“இல்லே. வேணாம். நீங்க வீட்டுக்காரரைப் பாத்து தர்மலிங்கத்தைக் காலி பண்ணச் சொல்ல வேணாம்.”
வரதராஜு அவரை உற்றுப் பார்த்தார்.
“நேத்து ராத்திரி விஜயாவுக்கு நடந்ததைப் பத்தி நான் எனக்குள்ளேயே பேசிக்கிட்டிருந்தேன். யோசிச்சுப் பாத்தா ஒருத்தன் பைத்தியமா இருக்குறப்போ அவனுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்குதான்னு சந்தேகமாத்தான் இருக்கு. ‘அவன் கண்ணு பாக்குறது காது கேக்குறது எல்லாம் அவன் மூளையிலே பதிஞ்சு பாக்குறானா கேக்குறானா என்ன?’ன்னு எனக்குத் தோணிச்சு. நாம வயசுப் பிள்ளைகளா இருந்தப்போ பக்கத்திலே எதுத்தாப்பிலே வர்ற நம்ம வயசுப் பொண்ணுங்களை ஓரக் கண்ணாலே பாப்போம். அவ பார்வை நம்ம பக்கம் இல்லேன்னு நல்லாத் தெரிஞ்சா அவ மேலே முழுக் கண்ணையும் வச்சுப் பாப்போம். அப்போ நம்ம மனசிலே அப்பிடி ஒரு சந்தோஷம் வரும். பயமும் வரும். நமக்கெல்லாம் அப்போ இருபது இருபத்திரண்டு வயசு இருந்திருக்குமா? இப்போ இந்த செல்வம் பயலுக்கும் அந்த வயசுதானே இருக்கும்? அன்னிக்கு செல்வம் பய கீழே விழுந்து கிடந்த என் மகளைப் பாத்தப்போ அவன் கண்ணு அவ மேலே பட்ட மாதிரி இருந்திருக்கும். ஆனா பார்வை? அந்தப் பித்த நிலையிலே ஆம்பளை பொம்பிளைங்கிற வித்தியாசமெல்லாம் தெரிஞ்சிருக்குமா அவனுக்கு? எனக்கு நான் அது வரைக்கும் குமுறிக்கிட்டே இருந்ததை நினைச்சு ராத்திரி ரொம்ப வெக்கமாயிருச்சு” என்றார் பழனிச்சாமி.
பழனிச்சாமி பேசிக் கொண்டு வந்தார். வானம் அலம்பி விட்ட தரை போல சுத்தமாக இருந்தது. அவர்களைத் தழுவிச் சென்ற அதிகாலையின் இளங்காற்றில் பழனிச்சாமியின் வார்த்தைகள் குளித்தெழுந்து மெருகேறியது போல வரதராஜூவுக்குத்தோன்றிற்று.அவரைத்
தழுவிக் கொண்டு நிற்க வேண்டும் போலவும் அவரது கைகளையும் நெற்றியையும் முத்தமிட வேண்டும் போலவும் வரதராஜூவுக்கு இருந்தது. அக்கம் பக்கம் வந்து போய்க் கொண்டிருந்த ஜனம் வேடிக்கை பார்க்கும் என்ற தயக்கத்தில் அவர் எதுவும் செய்யாமல் நடந்து சென்றார்.
பழனிச்சாமி “தர்மலிங்கமும் என்னா பாடு பட்டுக்கிட்டு இருப்பாரு? சொந்த வீட்டிலே கண்ணுக்கு முன்னாலே சொந்த மகனை ஜெயில்லே போடுற மாதிரி கட்டிப் போட்டு பாத்துகிட்டு இருக்குறதை விட வேறே பெரிய தண்டனை இந்த வயசிலே அவருக்கு வேணுமா? அவரு சம்சாரத்தை நினைச்சா எனக்கு அப்பிடியே புரட்டிக்கிட்டு வருது. வயசுக்கு வந்த மகன் உடம்புல ஒரு பொட்டுத் துணி இல்லாமே நிக்கறதைப் பாக்குற அம்மாவோட மனசு எப்பிடி முறிஞ்சு போயிருக்கும்? அந்தத் துக்கத்தை அவுங்க யாரோடவாவது பகிந்துக்க முடியுமா? நினைச்சு நினைச்சு மறுகுறதைத் தவிர வேறே என்ன செய்ய முடியும் அவுங்களாலே? தர்மலிங்கத்தோட சம்சாரம் அனுபவிச்சிட்டு இருக்கிற கஷ்டத்துக்கு முன்னாலே என்னோட வீட்டக்காரம்மா ஓரு நா பட்ட கஷ்டம் எந்த மூலைக்குன்னு நெஞ்சு பொங்கி கிட்டே இருக்கு. கடவுள் ஏன் இப்படியாப்பட்ட கஷ்டத்தைக் கொடுக்குற கயவாளியா இருக்கான்னு திட்டணும் போல இருக்கு” என்று உடைந்த குரலில் சொன்னார். அவரது உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்ததை வரதராஜு பார்த்தார்.
“சரி, ரெண்டு நிமிஷம் உக்காந்துட்டுப் போகலாம்” என்று சாலை ஓரத்தில் போட்டிருந்த சிமெண்டு பெஞ்சுக்கு பழனிச்சாமியை வரதராஜு அழைத்துச் சென்றார்.
மிகச் சிறப்பான சிறுகதை. வாழ்வின் எந்தப் பக்கம் திரும்பினாலும் சோகம்தான். மனத்தை அழுத்தமாக்கும் சிறுகதை