வளவ. துரையன்
குமாருக்கு எப்பொழுதும் மருத்துவமனையின் வாடையே பிடிக்காது. அறையை விட்டு வெளியே வந்து வராந்தாவில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தான். காலை மணி எட்டு இருக்கும். நோயாளிகளுக்குச் சிற்றுண்டி வாங்கிக் கொண்டு வருபவர்களும் வாங்கச் செல்பவர்களும் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தனர். குமாரின் அண்ணன் கோபுவும் அதற்குத்தான் போயிருந்தார். குமார் சன்னல் வழியே பார்த்தான். உள்ளே அம்மா கட்டிலில் படுத்திருந்தார். அப்பா பக்கத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.
நேற்று காலை கோபுதான் தஞ்சாவூரிலிருந்து அலைபேசியில் பேசினார். “அம்மா முதுகு ரொம்ப வலிக்குதுன்னு சொல்றா. டாக்டர்கிட்டப் போய்க் கட்டினேன். எக்ஸ்ரே எடுத்துப் பாத்ததில முதுகுத் தண்டுவடத்துல ஏதோ பாதிப்போம். படுத்துக்கிட்டே இருந்தா கொஞ்சநாள்ல சரியாப் போயிடுமாம், இங்கியே தஞ்சாவூர்லக் கோபால் மருத்துவமனையிலதான் சேத்து இருக்கேன்”
கேட்டவுடன் குமார் புறப்பட்டு வந்தான். கும்பகோணத்திலிருந்து வர இரண்டு மணி நேரமாகிவிட்டது. வந்ததுமே மருத்துவமனை என்று கூடப் பார்க்காமல் அண்ணி பொரிந்து தள்ளிவிட்டாள். “இதுக்குதான் நான் இங்கக் கூப்பிட்டுக்கிட்டே வர்றதில்ல. இப்ப பாருங்க; இங்க வந்தாதான் அவங்களுக்கு ஏதாவது ஆயிடுது. அடுத்த வாரம் என் பொண்ணு பிரசவத்துக்கு வரா. நான் என்ன செய்யறது? சொல்லுங்க” இனி நான் இங்கே வைத்துக் கொள்ள முடியாது என்பதை மறைமுகமாகச் சொல்வது குமாருக்குப் புரிந்து விட்டது. அண்ணாவும் கேட்டுக்கொண்டு சும்மாதான் இருந்தார்.
குமாரால் அதற்குமேல் சும்மா இருக்க முடியவில்லை. “நான்தான வச்சுக்கிட்டு இருந்தேன். நாங்க ரெண்டு பேரும் முக்கியமான கல்யாணம்னு குடும்பத்தோடப் பாண்டிக்குப் போறோம்னுதான் இங்கப் போன வாரம் அனுப்பி வச்சோம். முந்தா நேத்திக்குதான் வந்தோம். இப்பப் பாருங்க நேத்திக்குக் காலைலயிலதான் உமா தோட்டத்துக்குப் போகும்போது கீழே உழுந்து தசை பிசகிப் போய்க் கட்டு போட்டுக்கிட்டு இருக்கா. இன்னும் முப்பது நாளாகும் கட்டுப் பிரிக்க; எங்களயும் புரிஞ்சிக்குங்க” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அண்ணி “அதெல்லாம் எனக்குத் தெரியாது; ஒங்க அண்ணா வெளியில போயிடுவாரு நான்தான் லோல்படணும் புரிஞ்சிக்குங்க’ இங்க இனிமே நான் வச்சுக்க முடியாது” என்று கூறினாள். “என்னை ஆரம்பகாலத்துல எப்படியெல்லாம் படுத்தி வச்சாங்க”ன்னு அவள் நினைத்தாள்
அவர்கள் மொத்தம் மூன்று பேர். பெரியவர் கோபு; அடுத்தவன் கோயம்புத்தூரில் வக்கீலாக இருக்கும் நடராஜன். கடைசியில் குமார். நடராஜன் இப்பொழுது கோவையிலிருந்து வந்துகொண்டிருந்தான். நேற்று இரவு கோபுவும் அண்ணியும் வீட்டுக்குப் போய் விட அப்பாவும் குமாரும் மட்டும் மருத்துவமனையில் இருந்தனர். காலையில் அண்ணா வந்தவர் இப்பொழுது கடைக்குப் போயிருக்கிறார்.
கோபு வரும்போதே, ”நடராஜன் வந்துட்டானா” என்று கேட்டுக்கொண்டே வந்தார். “இல்லண்ணே; பஸ் ஸ்டாண்டுல எறங்கிட்டானாம். டவுன் பஸ்ல வந்துக்கிட்டிருக்கான்” என்றான் குமார். கோபு உள்ளே சென்று சிற்றுண்டிப் பொட்டங்களைக் கொடுத்து அம்மாவையும் அப்பாவையும் சாப்பிடச் சொல்லிவிட்டு வந்தார். உட்கார்ந்தவர், “என்னா செய்யறதுன்னே புரியல. எனக்கோ வருஷக் கடைசி; லீவே தரமாட்டேன்றான். ஒனக்குப் பள்ளிக்கூடம் இல்லாதது இப்ப நல்லதாப் போச்சு” “பள்ளிக்கூடம் இல்லாட்டாலும் நாங்க யாராவது ரெண்டு பேரு மாத்தி மாத்திப் போயிட்டுதான் வரணும்ணா” என்ற குமாருக்கு அவர் பதிலேதும் சொல்லவில்லை.
நடராஜன் வந்ததுமே ”இப்ப எப்படி இருக்கா” என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனான். இருவரும் எழுந்து உள்ளே சென்றார்கள். அப்பாவும் அம்மாவும் இட்லிகளைத் தின்றுகொண்டிருந்தனர். ”எப்படிம்மா இருக்க?” என்று கேட்டான் நடராஜன். “வலிதாண்டா இருக்கு; ஒக்காறவே முடியல. டாக்டரு படுத்துக்கிட்டே இருக்கணும்னு சொல்லிட்டாரு” என்று சொன்னவர் குமாரைப் பார்த்து, இதோ ரெண்டு பொட்டலம் இருக்கு; நீயும் இவனும் சாப்பிடுங்க” என்றார்.
”நான் சாப்பிட்டுட்டே வந்துட்டேன்; நீ சாப்பிடுடா” என்றான் நடராஜன். குமார் பொட்டலத்தைப் பிரித்தான். “அதுக்குள்ள நான் போயி டாக்டரைப் பாத்துட்டு வரேன்” எனக் கூறி நடராஜன் கிளம்பினான். ”நானும் வரேண்டா” என்ற கோபுவைத் தடுத்து, “வேணாம்ணா; நான் வக்கீலுன்னு சொல்லிப் பாக்கறேன்” என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பாராமல் சென்றான்.
நடராஜன் சற்றுத்தள்ளி வெளியே வந்தவன், அலைபேசியில் மனைவி விமலாவிடம் பேசினான். அவள் தெளிவாகச் சொல்லிவிட்டாள். “நான் சொல்றதைக் கேளுங்க; நம்ம நெலமையைப் புரிஞ்சுக்குங்க; படுக்கையிலியே வச்சு இங்க என்னால செய்ய முடியாது. நான் வேற சி.ஏக்குப் படிக்கறேன். அத்தோட அவங்க ரெண்டு பேரும் புள்ளயப் படிக்கவிடாம டி.வி பாத்துக்கிட்டே இருப்பாங்க, இன்னும் இருபது நாள்ல எங்கப்பாவுக்கு அறுபதாம் கலியாணம் நடக்க இருக்கிறது தெரியும்ல, நான் அடிக்கடி அங்கப் போக வேண்டி இருக்கும்; ஒங்கத் தலையிலக் கட்டிடப்போறாங்க; எதாவது சாக்கு சொல்லிட்டு வாங்க”
”அன்னிக்கு என் கல்யாணத்துல வெள்ளி வெளக்கு ரெண்டு இன்ச் கொறைவா இருக்குன்னு என்னா ஆட்டம் ஆடினாங்க; இவங்கள வச்சு நான் செய்யணுமா?” என்று விமலா சொல்லவில்லையே தவிர மனத்துள் நினைத்துக் கொண்டாள். தலைமை மருத்துவரையே போய்ப் பார்த்தான். “படுக்கையிலியே இருக்கணும்றது இல்ல; அதெல்லாம் நடக்கலாம் சார். ஆனா அவங்க கோஆப்பரேட் செய்ய மாட்டறாங்க; இன்னும் மூணு நாள்ள அனுப்பிடுவோம்; மத்தபடி நல்லாதான் இருக்காங்க” என்றார் அவர்.
நடராஜன் அறையில் நுழையும்போது அனைவருமே பேசிக்கொண்டிருந்தனர். இவனைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தியது என்னவோ போல இருந்தது. ”என்னாடா சொன்னாரு” அப்பா கேட்டார். “டாக்டரு கொஞ்சம் நடக்கலாம்னு சொன்னார்” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அம்மா “எனக்குதான் நடந்தா வலிக்குதே” என்று கோபமாகச் சொன்னாள். “அப்பறம் இன்னும் மூணு நாள்ல வீட்டுக்குப் போயிடலாம்னு சொன்னாரு” என்றான் நடராஜன். அம்மா ”எந்த வீட்டுக்கு” என்று கேலியாகக் கேட்டாள்.
உடனேயே நடராஜன், “கோயம்புத்தூருக்குப் போக முடியாது. என்னைக் கொஞ்சம் புரிஞ்சிக்குங்க; விமலாவுக்கே இடுப்பு வலின்னு அடிக்கடி படுத்துக்கறா. அவ சி.ஏக்குப் படிக்கறா. எனக்குக் கோர்ட்ல வேல சரியா இருக்கு” என்றான். “வேற என்னாடா செய்யலாம்” என்றார் கோபு. அதற்குள் அப்பா, “மூணு பேரும் சொல்றக் காரணங்கள் நல்லாவே புரியுது. கடைசிலவன் பொண்டாட்டிக்குக் கால்ல கட்டு. நடுலவன் பொண்டாட்டிக்கு இடுப்பு வலி. பெரியவன் பொண்டாட்டி நேராவே முடியாதுன்னுட்டா” என்றார்.
“நாங்க என்னா சும்மாவா சொல்றோம்; கொஞ்சம் புரிஞ்சுக்குங்கப்பா” என்றான் குமார்.சற்று நேரம் யாரும் பேசவே இல்லை. மின்விசிறி சுழலும் சத்தம் மட்டும் கேட்டது. “நீங்கதாண்ணா முடிவெடுக்கணும்” என்றான் நடராஜன். கோபு சன்னல் வழியாய் வெளியே பார்த்தான். ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து யாரையோ தள்ளிக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். பூனை ஒன்று வேகமாய் ஓடியது. ”அதான் எனக்கும் புரியல” என்றார் கோபு.
பட்டென்று அம்மா சொன்னார். ”எனக்கு ஒண்ணு புரியுது. அப்படிச்செய்யலாம் ஆனா கொஞ்சம் காசு செலவாகும் பரவாயில்லியா”
”காசைப்பத்தி என்னம்மா? நீ சொல்லம்மா” என்றார் கோபு. “ஆமாம்மா, பணமா முக்கியம்; எதானாலும் நீ சொல்லும்மா” என்றான் நடராஜனும். அப்பா அம்மாவைப் பார்த்தார். இருவரும் கண்களால் பேசிக்கொள்வதைப் போல இருந்தது.
அம்மா சொன்னார். “இப்ப எல்லாருக்கும் இருக்கற நெலமை எனக்கு நல்லாவே புரியுது. ஒங்களுக்கும் புரியுது. இத்தனை வருஷம் ஆகியும் நான் புரிஞ்சுக்கலன்னா நான் மனுஷியே இல்ல. அதால நான் ஒண்ணு சொல்றேன். இங்கியே ஒரு வீடு பாருங்க; நானும் அப்பாவும் இருந்திடறோம். என்னைப் பாத்துக்க நர்ஸ் மாதிரி ஒரு ஆளப் போட்டுடுங்க; பக்கத்துல இருக்கற ஓட்டல்ல இருந்து நர்ஸுக்கும் சேத்து மூணு வேளைக்கும் காப்பி சாப்பாடு எல்லாம் சொல்லிடுங்க. செலவ மூணு பேரும் பிரிச்சுக்குங்க.”
மூன்று மகன்களின் முகங்களும் இறுக்கமாக இருந்தன.”நாம சொல்ல வேண்டியத அம்மாவே புரிஞ்சுக்கட்டு சொல்லிட்டாங்களே” என்ற திருப்தியும் இருந்தது.
ரொம்ப சாதாரண சிறுகதை. கணிக்க கூடிய முடிவு. தட்டையான எழுத்து நடை