தி. இரா. மீனா
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உலகம் ஒரு துக்கமான மூட்டத்திற்குள் தன்னைத் திரையிட்டுக் கொண்டது. அமைதியான ஆற்றில் படகு மெதுவாக ஊர்ந்தது.
படகின் புறப்பகுதிகளுக்கு எதிராகத் தண்ணீர் சிறிய அலைகளை ஏற்படுத்தியது. வாழ்க்கையின் எந்த உயிர்ப்பும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. உயிரற்ற உலகம் ஓசையின்றி ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. அந்த ரீங்காரம் செவிக்குப் புலப்படாதது, ஆனால் அதை உடல் உணர்ந்து எதிர்முழக்கமாக மனதிற்குள் நிரப்பியது. வாழ்க்கை முடிவடைவது போன்ற உணர்வு, எல்லா நம்பிக்கைகளும் முற்றிலும் ஒழிந்த நிலை என்று மனம் நகர்ந்து கொண்டிருந்தது. தொலைவிலுள்ள மரங்கள் தெளிவற்ற , புதிரான வடிவங்களாக படகுடன் வந்து கொண்டிருந்தன. அருகிலுள்ள மரங்கள் பின்னால் நகர்வது பிசாசுகள் பரட்டைத் தலையுடனிருப்பது போலத் தெரிந்தது. படகு அசையவில்லை. சிற்றாங்கரை பின்னால் போய்க் கொண்டிருந்தது.
இருட்டில் என் கண்கள் அமைதியான ஆற்றின் ஆழத்தை ஊடுருவிக் கொண்டிருந்தன. நட்சத்திரங்கள் நீர்ப்படுக்கையில் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நிதானமான அலைகளில் கனவோடு ஊஞ்சலாடிக் கொண்டு, கண்கள் அகன்று திறந்திருக்க, தூங்கிக் கொண்டிருந்தன.
காற்றில் எந்த அசைவுமில்லை. படகோட்டிகள் கயிற்றால் படகைத் தளர்த்தியும் ,இறுக்கியும் படகை இழுக்க, வழிகாட்டி கம்பின் மணிகள் ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்றாற் போல ஒலித்தன. படகின் ஒரு ஓரத்திலிருந்த உலையடுப்பில் நெருப்பின் செம்மை மாறி ,மாறிக் குறைந்தும் அதிகரித்தும் கொண்டிருந்தது. படகிற்குள் சிறு சிறு ஓட்டைகளில் கசிந்த தண்ணீரை ஒரு சிறுவன் சிறிய வாளியில் எடுத்து வெளியே கொட்டிக் கொண்டிருந்தான்.நெல், வெல்லம் , புளி இன்ன பிற பொருட்கள் சாக்குகளில் கட்டப்பட்டு படகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன
படகின் மேல் பகுதியில் ,வானத்தை வெறித்தவாறு நான் டுத்திருந்தேன். படகினுள்ளே, மெல்லிய புகையிலையின் மணம் வர, சத்தமற்ற குரல்கள் எல்லாத் திசைகளிலும் பரவின. எழுத்தர் உட்கார்ந்திருந்த அறையில், ஒரு சிறிய எண்ணெய் விளக்கு இருட்டில் மின்ன, படகு நகர்ந்து கொண்டிருந்தது.
“தயவுசெய்து இந்தக் கரைக்கு படகைக் கொண்டு வாருங்கள் —இங்கு” என்று தொலைவிலிருந்து ஒரு குரல் கேட்டது. படகு அந்தக் கரையை நெருங்கியதும், இரு உருவங்கள் படகிற்குள் குதித்தன. படகு அந்தப் பக்கம் ஓரளவு சாய்ந்தது .
“தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் மேல் பகுதியிலேயே உட்கார்ந்து கொள்கிறோம்,”ஒரு பெண்குரல் சொன்னது.
“ரங்கி, இவ்வளவு நாட்களாக எங்கே இருந்தாய்? சமீப காலத்தில் நான் உன்னைப் பார்க்கவேயில்லையே,” சுக்கானில் உட்கார்ந்திருந்தவர் கேட்டார்.
“என்னவர் பல இடங்களுக்கு என்னை அழைத்துப் போனார் — விஜயநகரம், விசாகப்பட்டினம் என்று. நாங்கள் இருவரும் சேர்ந்து அப்பண்ணா மலை கூட ஏறினோம்.”
“இப்போது எங்கே போகிறீர்கள்?”
“மண்டபகா. நீங்கள் நலமா அண்ணா?அதே எழுத்தர்தான் இன்னமும் இங்கு வேலை செய்கிறாரா?”
“ஆமாம்.”
ஆணுருவம் ஒரு மூட்டையில் சாய, அவனுடைய சுருட்டு வாயிலிருந்து நழுவியது. அந்தப் பெண் அதை எடுத்துத் தந்தாள்.
“ஒழுங்காக உட்கார்,” அவள் சொன்னாள்.
“வாயை மூடு, நான் குடித்திருக்கிறேன் என்று நினைக்கிறாயா? என்னைத் தொந்தரவு செய்தால் அடி பிய்த்து விடுவேன்.”
அவன் இங்குமங்கும் உருண்டான்.அந்தப் பெண் அவனை ஒரு துணியால் மூட ,அவன் உருளும் போது அது நழுவியது. அவள் ஒரு சுருட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டாள்.தீக்குச்சியின் ஒளியில், நான் ஒரு கணம் அவள் முகத்தைப் பார்த்தேன். கருமை முகம் சிவப்பாக மின்னியது. குரலில் ஒருவித மென்மை இருந்தது. அவள் பேசும் போது, தனது ஆழ்மன அந்தரங்கங்களை நம்மை நம்பி இயல்பாக சொல்வதைப் போல உணரமுடியும். அவள் அழகி இல்லை; அவள் தலைமுடி பரட்டையாகக் கிடந்தது, என்றாலும் அவளிடம் ஒருவித கௌரவம் தெரிந்தது. அவள் அணிந்திருந்த
கறுப்புச் சோளி எதுவும் அணியாத ஒரு பாவனையைத் தந்தது. மின்னும் அவள் கண்கள் உயிர்ப்பு பொங்கிய ஒரு தன்மையை அந்த இருளிலும் வெளிப்படுத்தின. தீப்பெட்டியை பற்ற வைத்த போது, அருகில் நான் படுத்திருப்பதை அவள் கவனித்தாள்.
“யாரோ இங்கே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், ”சொல்லிவிட்டு அந்த மனிதனை எழுப்ப முயற்சித்தாள்.
“பேசாமல் படு,மீண்டும் என்னைத் தொந்தரவு செய்தால் அடித்து நொறுக்கி விடுவேன்.”
முயற்சி செய்து அவன் லேசாக அந்த இடத்திலிருந்து நகர்ந்தான்.
“அவன் யார் ரங்கி ?” கையில் எண்ணெய் விளக்குடன் நின்ற எழுத்தர் கேட்டார்.
“அவன் என்னுடையவன், பட்டாலு… தயவுசெய்து இந்தப் பயணத்திற்காக எங்களிடம் காசு வாங்காதீர்கள் சார்.”
“அவன்தான் பட்டாலுவா ?அவனை வெளியே தள்ளு.அவன் திருடன். உனக்கு அறிவில்லையா?அவன் முட்ட முட்டக் குடித்திருக்கிறான். நீ அவனை படகில் அழைத்து வந்திருக்கிறாய்!”
“நான் குடித்தேன் என்று யார் சொன்னது?” பட்டாலு புகாராகக் கேட்டான்.
“அவனைப் படகிலிருந்து இறக்கி விடுங்கள். அவனை ஏன் ஏற அனுமதித்தீர்கள்? அவன் குடித்திருக்கிறான்,” எழுத்தர் பணியாளர்களைக் கோபித்துக் கொண்டார்.
“நான் அவ்வளவு குடிக்கவில்லை. எனது தாகத்தைப் போக்கிக் கொள்ள கொஞ்சம்தான் குடித்தேன்.” பட்டாலு எதிர்த்தான்.
“பேசாமலிருக்க மாட்டாயா?” என்று அவனைக் கடிந்து கொண்டு, “கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் சார். இரக்கம் காட்டுங்கள்.மண்டகாவில் நாங்கள் இறங்கி விடுவோம்.”அவள் கெஞ்சினாள்.
“நான் குடிக்கவில்லை சார். மண்டபகா போக அனுமதியுங்கள்.” அந்த மனிதனும் கெஞ்சலில் கலந்து கொண்டான்.
“ஏதாவது உன் கைவரிசையைக் காட்ட முயன்றால் ஆற்றில் தூக்கியெறிந்து விடுவேன், ஜாக்கிரதை.” அவர் எச்சரித்துவிட்டு தன் அறைக்குப் போனார். பட்டாலு எழுந்து உட்கார்ந்தான்.உண்மையில் அவன் குடித்திருக்கவில்லை.
“என்னை ஆற்றில் தூக்கிப் போட்டு விடுவானாம். முட்டாள்,” மெதுவான குரலில் சொன்னான்.
“பேசாமலிரு. நீ சொன்னதை அவன் கேட்டுவிட்டால் நம் கதை அவ்வளவுதான்.”
“காலையில் அவன் படகைச் சுற்றிப் பார்க்கட்டும்..காற்றில் பறந்து விடுவான்.”
“ஸ்ஸ்..இங்கே ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார்.”
பட்டாலு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.கனமான மீசை. முகம் ஓவல் வடிவம். அவன் முதுகு வில் போல வளைந்திருந்தது. தசைகளோடு ஒல்லியாக இருந்தான்.
திரும்பவும் படகு மெதுவாகப் போனது.சாப்பிட்டு முடித்தவுடன் படகுப் பணியாளர்கள் தங்களுக்குள்ளே பேசியபடி பாத்திரங்களைக் கழுவினர்.
குளிராக இல்லாதபோதும் நான் போர்த்திக் கொண்டேன்.இருட்டில் என் உடல் வெளியே தெரிவது எனக்குச் சிறிது பயமாக இருந்தது. காற்று குத்துவது போலிருந்தது. பெண்ணின் தீண்டல் போல தண்ணீரில் படகு மென்மையாகப் போனது. இரவு மென்மையால் உறையிடப்பட்டிருந்தது…காணாத பெண்ணின் தழுவல் போல.
எனக்கு மிக அருகில் இருட்டில் இரண்டு சுருட்டுகளின் சிவப்பு வெளிச்சம் தெரிந்தது. வாழ்க்கை அங்கே கனமாக உட்கார்ந்து புகைபிடித்துக் கொண்டு, தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது போல எனக்குத் தெரிந்தது.
“அடுத்து வரப்போகும் கிராமம் எது?”
“கல்தாரி.”
“நாம் நீண்ட தூரம் போகவேண்டும்.”
“இன்று எதுவும் செய்யாதே. நீ கவனமாக இருக்கவேண்டும். பாதுகாப்பாக இருக்கும் இன்னொரு நாளில் முயற்சி செய்வோம். நான் சொல்வதைக் கேட்பாயல்லவா?” ரங்கி கெஞ்சினாள்.
“நீ மிகவும் பயப்படுகிறாய்,” பட்டாலு சொல்லிவிட்டு அவளை லேசாகக் கிள்ளினான்.
“ஓ!” என்று சொல்லிவிட்டு அந்த உணர்வு தனக்கு எப்போதும் நிரந்தரமாக வேண்டு்மென்பது போல வானத்தைப் பார்த்தாள்.
நான் கண்ணயர்ந்தேன் .படகு மெதுவாக கீழிறங்கி நகர்ந்து அதுவும் தூங்குவது போலிருந்தது. எனக்கு அருகிலுள்ள இரண்டு உருவங்கள் ரகசியமாக தங்களுக்குள்ளே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தன. நான் தூங்கினாலும் ,என்னில் ஒரு பகுதி விழித்திருந்தது. படகு நகர , தண்ணீர் அதன் பக்கங்களைத் தொட்டுக் கொண்டிருக்க, கரையிலுள்ள மரங்கள் பின்னோக்கிப் போய்க் கொண்டிருந்தன. படகிற்குள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர். ரங்கி என் பக்கத்திலிருந்து நகர்ந்து சுக்கானைச் செலுத்திக் கொண்டிருந்த மனிதனின் அருகே போனாள்.
“ எப்படியிருக்கிறீர்கள் அண்ணா?”
“ நீ எப்படியிருக்கிறாய்?” என்று அந்த மனிதர் கேட்டார்.
“ ஓ! நானும் என்னவரும் என்ன அதிசயமெல்லாம் பார்த்தோம்! நாங்கள் சினிமாவிற்குப் போனோம். ஒரு கப்பலைப் பார்த்தோம்.அது என்ன அருமையான கப்பல்! அண்ணா, அது நம் கிராமம் போல மிகப் பெரியதாக இருந்தது. அதன் சுக்கான் எங்கிருந்தது என்று எனக்குத் தெரியவில்லை” அவள் நூறு விஷயங்களைச் சொன்னாள். தூக்கத்தில் அவள் குரல் என்னை வருடுவதாக இருந்தது.
“பெண்ணே! எனக்குத் தூக்கம் வருகிறது,” சுக்கானிலிருந்தவர் சொன்னார்.
“நீங்கள் போய்த் தூங்குங்கள், நான் பிடித்துக் கொள்கிறேன்.” ரங்கி சொன்னாள்.
படகு அமைதியாக –- நிதானமாகப் போய்க் கொண்டிருந்தது. அமைதியைப் பாதிக்காமல் மிக மெலிதான ரங்கி பாடினாள்.
“எங்கே அவன் என் மனிதன்
தட்டில் சாப்பாடு போட்டு அவனுக்காகக் காத்திருக்கிறேன்.
ஒரு நிழல் போல இரவு ஆழமாக, கண்கள் துயிலின்றித் தவிக்கிறது
குளிர் தேளாகக் கொட்ட நரம்புகள் வலிக்கக் காத்திருக்கிறேன்.”
அவள் குரலில் இசையிருந்தது. எல்லா உயிர்களும் தங்கள் தூக்கத்தில் அந்தப் பாடலைக் கேட்டது போலிருந்தது. பழங்கதைகளில் உள்ள காதலை எதிரொலிப்பதாக சோகமாகவும், புதிரானதாகவுமிருந்தது. அது தண்ணீர் விரிப்புப் போலவும் ,உலகம் அதன் மீது ஒரு சிறிய படகாக மிதப்பது போலவுமிருந்தது. மனித வாழ்க்கை,அதன் காதலோடும், ஏக்கத்தோடும், தவிர்க்க முடியாததாகவும், வினோதமானதாகவும் தெரிந்தது.
எனக்குச் சிறிது தொலைவில் பட்டாலு தலையைத் துணியால் மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். ஒரு வளைகுடா அவனை ரங்கியிடமிருந்து பிரித்தது போலிருந்தது. சிறிது நேரத்தில் பட்டாலு படகின் உள்ளே போய்விட்டான். நான் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.மீண்டும் ரங்கி “ குடிசைக்குப் பின்னாலிருக்கிற பெண்ணை ரகசியமாகப் பார்க்கப் போனாயா?” என்று பாடத் தொடங்க அதில் மயங்கித் தூங்கிவிட்டேன். ஓர் ஆணும்,பெண்ணும் ஆட என் கனவுலகம் விரிந்தது. பட்டாலுவும்,ரங்கியும் பல வடிவங்களில் ஆடினார்கள். பின் அந்தப் பாடல் என் நினைவிலிருந்து தப்பியது, மெதுவாக என் மனம் கனவுகளின் கதவைக் கூட மூடிவிட்டது.
படகில் ஏதோ சத்தம் கேட்க எழுந்து உட்கார்ந்தேன். கரையில் ஒரு மரத்தில் படகு கட்டப்பட்டிருந்தது. கையில் லாந்தர்களுடன் படகின் பணியாளர்கள் கரைக்கும், படகுக்குமாக வேகமாக நடந்து கொண்டிருந்தனர். கரையில் இரண்டு மனிதர்கள் ரங்கியின் இருபுறமும் அவள் கையைப் பிடித்தபடி நின்றிருந்தனர். அதிலொருவர் எழுத்தர். அவர் தன் கையில் மடித்த கயிற்றின் ஒரு பகுதியை வைத்திருந்தார். ரங்கியை விளாசப் போவது போல தெரிந்தது. நான் கரையில் குதித்து என்ன நடந்ததென விசாரித்தேன்.
அவர் முகம் கோபத்தால் சிவந்தது.”நம்முடைய சில பொருட்களைத் ிருடிக் கொண்டு அந்தக் கயவன் ஓடிவிட்டான்.நாம் எல்லோரும் தூங்கியபிறகு இவள் படகைக் கரைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். அவள்தான் சுக்கானைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.” அவர் குரலில் பதட்டம் வெளிப்பட்டது.
“எதைத் திருடியிருக்கிறார்கள்? ” கேட்டேன்.
“இரண்டு கூடை வெல்லம், மூன்று மூட்டை புளி,.அதனால்தான் நான் அவர்களை படகில் ஏற்றக் கூடாதென்று சொன்னேன். இந்த இழப்பை நான்தான் ஈடுகட்ட வேண்டும். எங்கே அந்தப் பொருட்களை இறக்கினீர்கள்?” ரங்கியிடம் கேட்டார்.
“கல்தாரியில்.”
“பொய் சொல்லாதே. நாங்கள் அனைவரும் கல்தாரியில் விழித்து கொண்டுதானி்ருந்தோம்.”
“அப்படியானால் நிதாதவோலுவாக இருக்கவேண்டும்.”
“இல்லை. அவள் நம்மிடம் சொல்ல மாட்டாள். அட்டிலியில் அவளை போலீசிடம் ஒப்படைத்து விடுவோம். எல்லோரும் படகில் ஏறுங்கள்.”
“தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள் சார்.”
“படகில் ஏறு,” அவளைப் பிடித்து தள்ளினார். இரண்டுபேர் அவளை இழுத்துப் போனார்கள்.
“தூங்குமூஞ்சிகள் ! பொறுப்பற்ற முட்டாள்கள் ! உங்களுக்கு பொறுப்பில்லையா? ஏன் சுக்கானை அவள் கையில் கொடுத்தீர்கள்?” அவர் கத்திக்கொண்டே தன் அறைக்குப் போனார்.
ரங்கி தன் பழைய இடத்திலேயே உட்கார்ந்து கொண்டாள். அவளுக்கு அருகில் ஒரு படகுத் தொழிலாளி உட்கார்ந்தார். படகு புறப்பட்டது. நான் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.
“சார், எனக்கும் ஒன்று கொடுங்கள்,” ரகசியமாகக் கேட்டாள். நான் நெருப்புப் பெட்டியும், சிகரெட்டும் தர, அவள் பற்ற வைத்துக் கொண்டாள்.
“அண்ணா, என்னைப் போலீசில் ஒப்படைப்பதால் உங்களுக்கு என்ன ஆதாயம்?”
“எழுத்தர் உன்னை விடமாட்டார்,”படகுத் தொழிலாளி சொன்னார்.
“பட்டாலு உன் கணவனா?” நான் கேட்டேன்.
“அவன் என்னுடையவன்! ”பதிலளித்தாள்.
“இவள் சிறுமியாக இருக்கும்போதே அவன் மயக்கிவிட்டான். கல்யாணம் செய்து கொள்ளவில்லை. இப்போது வேறு ஒரு பெண் இருக்கிறாள். அவள் எங்கிருக்கிறாள் ரங்கி?” தொழிலாளி கேட்டார்.
“கொவ்வூரில். அவளுக்குச் சின்ன வயது. என்னைப் போல கஷ்டபட்டால், அவள் என்னைவிட மோசமாக இருப்பாள்.”
“பின் ஏன் நீ அவனுடன் இருக்கவேண்டும்?” கேட்டேன்.
“அவன் என்னுடையவன்,” எல்லாவற்றையும் விளக்கிவிட்டதைப் போல பதில் சொன்னாள்.
“ஆனால் அவனுக்கு இன்னொருத்தி இருக்கிறாளே.”
“நான் இல்லாமல் அவனால் என்ன செய்யமுடியும். ஒருவனுக்கு எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அவன் ராஜா. யாரும் அவனைப் போல இருக்க முடியாது .நான் சொல்கிறேன்.”
“சார், இவன் எப்படிப்பட்டவன் என்று உங்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. இவள் அவனோடு போனபோது இளமையும், துடிப்புமாக இருந்தாள். ஒரு நாளிரவு குடிசைக்குள் இவளைப் பூட்டி வைத்துவிட்டு குடிசைக்குத் தீ வைத்து விட்டான். இவள் எரிந்து சாம்பலாகும் நிலைக்கு வந்துவிட்டாள். அதிர்ஷ்டம்தான் இவளைக் காப்பாற்றியது.”
“அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடலாமென்று நினைத்தேன். எரிந்து கொண்டிருந்த குடிசையின் உச்சியிலிருந்து ஒரு மூங்கில் கம்பு என் முதுகில் விழுந்தது,” அவள் ரவிக்கையை சிறிது உயர்த்திக் காட்டினாள், இருட்டிலும் முதுகில் ஒரு வெள்ளைத் தழும்பை என்னால் பார்க்க முடிந்தது.
“இவ்வளவு ஆனபிறகும் ஏன் அவனுடனிருக்கிறாய்? ”
“என்னால் அவனை விடமுடியாது சார். அவன் என்னுடனிருக்கும் போது அவனுடன் ஒட்டிக் கொண்டேயிருப்பேன். மிக நன்றாகப் பேசுவான், அதனால் எனக்கு அவன் மேல் இரக்கம் அதிகமுண்டு. இன்று மாலை நாங்கள் கொவ்வூரிலிருந்து கிளம்பினோம்.இந்தக் காரியத்தைச் செய்யவேண்டுமென்று வரும் வழியில் கெஞ்சினான். தன்னிடம் எதுவுமே இல்லையென்றான். நிடாவுடு கால்வாய் வழியாக வயல்களைக் கடந்து குறுக்கு வழியில் வந்தோம்…”
“எங்கே அந்தச் சாமான்களை அவன் இறக்கினான்? ”
“எனக்கு எப்படித் தெரியும்?”
“ஓ..திருடி..இவள் உண்மையைச் சொல்ல மாட்டாள்,”தொழிலாளி சிரித்தபடி சொன்னான்.
அவள் முகத்தை நன்றாகப் பார்க்கவேண்டும் என்ற ஒரு திடீர் வேகம் எனக்குள் எழுந்தது. ஆனால் அந்த இருட்டில், அவள் விவரிக்க முடியாதவளாகத் தெரிந்தாள்.
தவழ்வது போல படகு மிக மெதுவாகச் சென்றது.நடு இரவு கடந்து விட்டதால் காற்று ஊசியாய் மாறியது. மரங்களில் இலைகளின் மெல்லிய ஒசை. நான் அன்றிரவு தூங்கவில்லை. ரங்கியின் பாதுகாவலன் தனது தூக்கத்தோடு சண்டை போட்டு ,பின் பலனின்றித் தூங்கிப் போனான். ஆனால் ரங்கி சிகரெட்டைப் புகைத்தபடி தன் நிலையிலிருந்து மாறாதவளாக இருந்தாள்..
“நீ கல்யாணமே செய்து கொள்ளவில்லையா?” கேட்டேன்.
“இல்லை. பட்டாலு என்னைக் கூட்டிக் கொண்டு போனபோது நான் மிகச் சிறியவள்.”
“உன் சொந்த ஊர்?”
“இந்திரபாலம்…அப்போது அவன் குடிகாரனென்று எனக்குத் தெரியாது…இப்போது அவனிடமிருந்து கற்றுக் கொண்டு விட்டேன். ஒருவர் குடிப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் சிலசமயங்களில்குடிக்கும் போது அவன் காட்டுமிராண்டி ஆகிவிடுவான்.”
“நீ அவனிடமிருந்து விலகி உன் பெற்றோரிடம் போயிருக்கலாம்.”
“அவன் காட்டுமிராண்டியாகும் போது அப்படித்தான் நினைப்பேன். ஆனால் அவனைப் போல யாருமிருக்க முடியாது.உங்களுக்கு அவனைப் பற்றித் தெரியாது. குடிக்காத போது அவன் சாதுவான ஆட்டுக்குட்டி போல இருப்பான். எத்தனை பேரிருந்தாலும் என்னிடம் தான் வருவான். நானில்லாமல் அவனால் என்ன செய்யமுடியும்?” அவளுடைய மனப்பான்மை எனக்கு விசித்திரமாகத் தெரிந்தது, எந்த புனிதம் அவர்களிருவரையும் சேர்த்து வைத்திருக்கிறது என்று என்னால் சொல்ல முடியவில்லை. ரங்கி தொடர்ந்தாள்.
“எந்த வேலையும் எங்களிருவருக்கும் ஒத்து வரவில்லை. அதனால் திருட்டைச் செய்ய வேண்டியிருந்தது.என் அம்மா உயிரோடிருந்த போது, என்னையே முட்டாளாக்கிக் கொள்ளும் நிலைக்காக என்னைத் திட்டுவாள்.ஒரு நாள் அந்தப் பெண்ணையே குடிசைக்கு அழைத்து வந்துவிட்டான்.”
“எந்தப் பெண்ணை?”
“இப்போது அவனுடனிருப்பவள். என் படுக்கையிலே அவளைப் படுக்க வைத்து ,தானும் படுத்துக் கொண்டான்.என் கண் முன்னாலேயே !இருவரும் குடித்திருந்தனர்.நான் அவள் மேல் விழுந்து பிராண்டினேன்.அவன் குறுக்கே புகுந்து என்னை அடித்துக் காயப்படுத்தினான்.நள்ளிரவில் அவளை அழைத்துக் கொண்டு எங்கோ போய்விட்டான். திரும்பவும் வந்தான். அவனை வீட்டுக்குள் விடாமல் திட்டித் தீர்த்தேன். கதவருகே விழுந்து குழந்தையைப் போல அழுதான்.எனக்கு மனமிளகி விட்டது. அருகில் உட்கார்ந்தேன்.என்னைக் கட்டிக் கொண்டு நெக்லஸைத் தரும்படி கேட்டான்.“எதற்கென்றேன்? அவளுக்காக” என்றான். அந்தப் பெண் இல்லாமல் தன்னால் வாழமுடியாதென்றழுதான். என் கோபத்திற்கு அளவில்லாமல் போனது. அவனை வெளியே தள்ளி கதவைத் தாளிட்டேன். தட்டிப் பார்த்துவிட்டுப், போய்விட்டான்.தூங்க முடியாமல் வெகுநேரம் தவித்தேன். ஒரு வழியாக நான் தூங்கிய பிறகு வீடு தீப்பற்றிக் கொண்டது. அவன் குடிசையை வெளியே பூட்டிவிட்டு தீ வைத்து விட்டான். கதவைத் திறக்க முயற்சித்தேன். இரவு நேரமென்பதால் என் கூச்சல் அக்கம்பக்கத்தவர்களுக்குக் கேட்கவில்லை. மயக்கமானேன். அந்த நிலையில் அக்கம்பக்கத்தவர்கள் என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும். மறுநாள் போலீஸ் அவனைக் கைது செய்தது. ஆனால் அவன் இதைச் செய்திருக்க மாட்டானென்று நான் உறுதியாகச் சொன்னேன். அன்று மாலை வந்து மணிக்கணக்கில் அழுதான். சில சமயங்களில், குடித்திருக்கும்போது அப்படித்தான் அழுவான். ஆனால் குடிக்காத போது அவன் மிக வேடிக்கையானவன். நான் நெக்லஸை அவனிடம் கொடுத்து விட்டேன்.”
“நீ ஏன் இன்னமும் குற்றங்கள் செய்ய அவனுக்கு உதவி செய்கிறாய்?”
“அதில்தான் அவன் முழு வாழ்க்கையும் அடங்கியிருக்கிறதென்று என்னிடம் வந்து அழும்போது என்னால் என்ன செய்ய முடியும்?”
“உண்மையாக எல்லா இடங்களுக்கும்–விஜயநகரம்,விசாகப்பட்டினம் அழைத்துப் போயிருக்கிறானா?”
“இல்லை. படகுக்காரர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகச் சொன்னேன். இதே படகில் முன்பு இரண்டு முறை திருட்டு நடத்தப்பட்டிருக்கிறது.”
“போலீஸ் உன்னைக் கைது செய்தால் என்ன செய்வாய்? ”
“நான் என்ன செய்தேன்? அவர்களால் என்ன செய்ய முடியும்? என்னிடம் எந்தத் திருட்டுச் சாமான்களுமில்லை. திருட்டிற்கு யார் பொறுப்பு என்று யாருக்குத் தெரியும்? அவர்கள் என்னை அடிக்கலாம். ஆனால் கடைசியில் என்னை விட்டுவிடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.”
“ஒருவேளை பட்டாலு சாமான்களுடன் பிடிபட்டு விட்டால்? ”
“இல்லை. இதற்குள் அவன் எல்லாவற்றையும் விற்றிருப்பான். அவன் தப்பித்துப் போய், எல்லாவற்றையும் சரிசெய்யும் வரையிலான நேரம் வரை நான் படகில் இருந்திருக்கிறேன்..” அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். “இவையெல்லாம் அவளுக்குத்தான் போகும். அவள் இளமை தொலையும் வரை அவன் விடமாட்டான். அவளுக்காகத் தான் இப்படி நான் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.”
அவள் குரலில் உணர்ச்சியோ, நிந்தனையின் சாயலோ இல்லை அவனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்காக எதுவும் செய்யத் தயாராக இருந்தாள். அது தியாகமோ, பக்தியோ ஏன் காதலோ கூட இல்லை. அது ஒரு பெண்ணின் மனம் — அன்பும் ,பொறாமையும் சேரக் கலந்த பெண்மனம். அவள் ,தன் மனதைக் கவர்ந்தவனுக்காக ஏங்கும் ஒரு நிலைதான் அது. அந்த மனதின் ஒவ்வொரு நரம்பும் அந்த மனிதனுக்காக ஏங்கின. ஆனால் அவளுக்கு நெறிமுறையிலோ அல்லது தார்மீகமாகவோ அவனிடம் எந்த வேண்டுகோளுமில்லை. அவளுக்கு உண்மையானவனாக அவன் இல்லாவிட்டாலும், கொடுரமானவனாக இருந்தாலும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவனுடைய எண்ணக் கோளாறுகள், அற்பத்தனங்கள், காட்டுமிராண்டித்தன இயல்பு , அடங்காத மனநிலை என்று எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டாள். அந்த வாழ்க்கையிலிருந்து அவளுக்கு என்ன கிடைத்தது? அவளுக்கான இழப்பீடு என்ன ?அந்த மாதிரியான வாழ்க்கை சுமையாகவும், துன்பமாகவும் இருக்காதா? ஆனால், பின்பு , மகிழ்ச்சி என்றாலென்ன? துன்பவுணர்வு குறைவாக இருக்கும் நிலை என்பதுதானே ? இந்தப் பார்வையில் மதிப்பிட்டு நான் மகிழ்கிறேனா ?
காற்று மெதுவாக பெரிதானது.படகு வேகமாகப் போனது.உலகம் மெதுவாக விழித்துக் கொள்வதற்கான உற்சாகமான அறிகுறிகள். விவசாயிகள் இங்குமங்குமாக வயல்களுக்குப் போய்க் கொண்டிருந்தனர். இன்னமும் விடிவெள்ளி முளைக்கவில்லை. ரங்கி தன் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து மறையும் இரவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அவன் என்னுடையவன். எங்கு போனாலும் அவன் வர வேண்டிய இடம் என்னுடையதுதான்,” என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். சுருங்கச் சொன்னால் இந்த வார்த்தைகள்தான் மாற்ற முடியாத ஒரு நம்பிக்கை, ஒரு பலம், ஒரு விசுவாசம் ஆகியவற்றைத் தந்து வாழ்க்கையோடு அவளை இணைத்திருந்தது. அவள் முழு வாழ்க்கையும் இந்த ஒரு புள்ளியைச் சுற்றித்தான். இரக்கம், பயம் எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு அந்தப் பெண்ணின் மேல் மரியாதை இருந்தது. மனித மனதின் செயல்பாடுகள் எவ்வளவு குழப்பம் ,விகாரம், அச்சம்,ஏன் பித்துப் பிடித்தலைக் கூட உள்ளடக்கியது என்று வியந்தேன் ! விடியும்வரை நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.படகை விட்டு இறங்குவதற்கு முன்னால், யாரும் கவனிக்காதபடி அவள் கையில் பணத்தை வைத்தேன். அவளுடைய எதிர்வினைக்குக் காத்திருக்காமல் புறப்பட்டுவிட்டேன். அதற்குப் பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை.
————————–
நன்றி : Contemporary Indian Short Storirs Series 1 Sahitya Akademi
One comment