தாயம்

 

                வேல்விழி மோகன்                                  

                அந்த தாய விளையாட்டுக்கு பிறகு அவர் சோர்ந்து போனார்.  அவர் அங்கிருந்த நான்கைந்து நபர்களும் கிளம்பி போன பிறகு அந்த கோவில் திண்ணையில் அந்த தாய கோடுகளுக்கு பக்கத்தில் தூசியாகி இருந்த இடத்தில் தனது துண்டை நாலு தட்டு தட்டி ஒரு பக்கமாக படுத்துக்கொண்ட போது அந்த சின்ன தடுப்பை தாண்டி அடுப்பை நோண்டிக்கொண்டிருந்த பெரியம்மா “உக்கும்” என்றாள். அவளுக்கு கோவிலில் படுப்பது தாயம் விளையாடுவது எல்லாம் பிடிக்காது.  ஆனால் அந்த கூட்டத்தில் அவளுடைய வீட்டுக்காரனும் ஒருத்தன். கிழவனுக்கு வேற என்ன வேலை என்று உள்ளுக்குள் முனகிக்கொள்வாள். அவர் இவள் இங்கு அடுப்பு வைக்க வரும்போது கூட்டத்திலிருந்து கிளம்பிவிடுவார். இப்போது கிளம்பிப் போனவர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவர் நேராக அந்த குழந்தைகள் பள்ளிக்கு அருகில் மரத்தடியில் இன்னொரு கூட்டத்துடன் சேர்ந்திருப்பார் என்பது அவளுக்கு தெரியும். சாம்பலும் தூசியுமாக இருந்த அடுப்பை சரி செய்து ஒரு ஓரமாக தள்ளிவிட்டு அதை வாரி சற்று தூரத்தில் இருந்த குப்பையில் கொட்டிவிட்டு அக்கம் பக்கம் அந்த வீடுகளை பார்த்தவாறு மீண்டும் அடுப்பு பக்கமாக வந்து உட்கார்ந்து விறகுகளை வைக்க ஆரம்பித்தாள். திரும்பி பார்த்தபோது அந்த கோவிலின் மூடிய கதவுக்கு வெளியே வழக்கமாக அந்த கருப்பு நாய் படுத்திருப்பதும் சற்று ஓரத்தில்  அந்த பக்கம் தடுப்புக்கான நிழலில் அது கண்களை மூடியபடி இருப்பது தெரிந்ததும் இவள் முதல் இரண்டு புட்டை அதற்கு தருவதற்கான காத்திருப்பு இன்றைக்கு இருக்காது என்கிற நிம்மதியில் ஒரு காகிதத்தை பற்ற வைத்து விறகுகளுக்கு நடுவில் வைத்து ஒன்றிரண்டு ஓலைகளை உடைத்து போட்டபோது அது நிதானமாக பற்றிக்கொண்டது.

அப்போது அவரிடமிருந்து குறட்டை சத்தம் வருவது போல தெரிந்ததும் “உருப்புட்ட மாதிரிதான்” என்று முனகியபடி அடுப்பின் புட்டு கல்லை வைத்து இரண்டு வீடுகள் தள்ளி ஏதோ ஒரு பாட்டு கேட்பதை கேட்டு முனகிக்கொண்டாள். “நாமளும் இனிமே பாட்டு கேக்கனும்”

“என்னாம்மா?” என்றார் பெரியவர். இவள் முகத்தை சுருக்கிக்கொண்டு “நீ தூங்கலையா இன்னும்?”

“தூக்கம் வரலை”

“அந்த நாய் தூங்கிருச்சு பாரு”

“புருயுது. அந்த நாயும் நானும் ஒன்னுதான். இன்னைக்கா சொல்லற. ஆனா அது வயித்தை கவனிச்சியா?” என்றபோது ஒருத்தன் சைக்கிளில் வந்து நின்று “ஆகலையாக்கா புட்டு இன்னமும்?”

“கொஞ்சம் லேட்டாயிருச்சுப்பா”

“பத்து நிமிசம் இருப்பா. ஆயிடும்” என்று குறுக்கிட்டு பெரியவர் சொன்னபோது பெரியம்மா வெடுக்கென்று “நீ சும்மா கெட” என்றவள் திரும்பி “ஆமாப்பா.. ஒரு பத்து நிமிசம்”

“அப்படின்னா அப்பறமா வர்றேன்” என்று அந்த சைக்கிள்காரன் போய்விட.. நேராக இருந்த அரச மரத்தடியில் அந்த பெண் நின்றிருப்பதை பார்த்து பெரியவர் “டௌனுக்காம்மா?” என்று கண்களை விழித்து தலையை தூக்கி படுத்தபடியே ஒரு கையால் தலையை தாங்கியபடி கேட்டபோது அவள் சிரித்தபடியே “ஆமா தாத்தா”

“பஸ்ஸூ இப்பதானே போச்சு”

“தம்பி வருவான். கூட்டிக்கிட்டு போக”

“புட்டு வாங்கிட்டு போம்மா”

“இப்பதானே அடுப்பு பத்த வைக்கறாங்க”

“ஆயிடும் பத்து நிமிசத்துல. புட்டு நல்லாருக்கும். தக்காளி சட்னி. கூட வெங்காயம்.. பச்ச மொளகா.. பருப்பு போட்டு எண்ணய ஊத்தி சுட்டு தருவா. சாப்புட்டதில்லையா நீ?”

“இல்லையே”

“சாப்புட்டு பாரு. தினமும் வாங்கி சாப்புடனமுன்னு தோணும்” என்றபோது பெரியம்மா அவரை திரும்பி பார்த்து முறைக்கவும் அந்த பெண் புரியாமல் இவளிடம் “நல்லதுதானே சொல்றாரு”

“இந்தாளு பேசி பேசி வியாபாரமே குறைஞ்சிருச்சும்மா” என்றபோது பெரியவர் சிரித்து “குறையலை. அதிகமாயிடுச்சு” என்றபோது அந்த பெண் ஒரு பத்து ரூபாயை எடுத்து பக்கத்தில் வந்து பெரியம்மாவிடம் நீட்டி “இந்தாங்க”

“இருந்து வாங்கிட்டு போறியாம்மா?”

“இல்ல. நாய்க்கு” என்று அந்த நாயை காட்டி “பாவம். புள்ளதாச்சி”

“பாவமுன்னு சொல்லாதம்மா”

“சொன்னது அது பசியா இருக்கலாமுன்னு. வயிறு காலியா தெரியுது பாருங்க”

“சர்தான்” என்றபோது பெரியவர் நாயை திரும்பி பார்த்து. “உனக்கு வந்த அதிஷ்டத்தை பாத்தியா?” என்றவர் “ஏய். சூ. சூ” என்று கையை வீசியதும் அது திடுக்கிட்டு பதறியபடி எழுந்து அந்த தடுப்புக்கு அப்பால் தாண்டி ஒரு பக்கமாக ஓடிப்போனது. அந்த பெண் “அடடா” என்று பரிதாபமாக பெரியம்மாவை பார்க்க.. அவள் கையை அவரை நோக்கி நீட்டி “நீயெல்லாம் ஒரு மனுசன்.  தூ.. எப்ப பாத்தாலும் இங்க படுத்துக்கிட்டு தாயம் உருட்டிக்கிட்டு எவனாவது எதையாவது எடுத்துக்கிட்டு வந்தா அதை புடுங்கி தின்னுக்கிட்டு” என்றபோது அந்த பெண் அந்த நாய் மறுபடியும் வராதா என்பது போல பார்ப்பதை கவனித்து பெரியவர். “பக்கத்துலதாம்மா இருக்கும். வந்துடும். அதுக்கு இங்கதான் குடியிருப்பு. புள்ளைங்கள போட்டுச்சுன்னா இங்கன பூராவும் சுத்தும். ஒவ்வொரு முறையும் எடுத்து வெளிய விட்டிரனும். இல்லைன்னா போன முறை மாதிரி பிரிச்சு விட்டிரனும்” சற்று தள்ளி அந்த குப்பையை காட்டி “அதுக்கு பக்கத்துலதான் குட்டிகளை போடும். இல்லைன்னா கோவிலுக்கு பின்னாடி பள்ளம் ஒண்ணு போட்டு வச்சுருக்குது. அதுல போடும். குட்டி வேணுமுன்னா ரண்டு மூணு மாசம் கழிச்சு வாம்மா. பால் குடி மறக்கும்போது தூக்கிட்டு போயிடலாம்”

அந்த பெண் முகத்தை சுருக்கிக்கொண்டு தன்னுடைய பார்வையை பெரியம்மாவின் மீது திருப்பியபோது அந்தம்மா அதே பார்வையை பெரியவரின் மீது திருப்பி “அது அப்படிதான்” என்பது போல கையை அவரை நோக்கி முறித்ததை கவனித்து இவர் சிரித்து “அது எனக்கு பழக்கப்பட்ட நாய்ம்மா. கோயிந்தான்னா வந்திடும். இப்ப பாருங்க. கோயிந்தா.. கோயிந்தா..” என்றார் வேறு பக்கமாக பார்த்தபடி.

“ம்.. வருது இரு” என்று பெரியம்மா மறுபடி முகத்தை சுழித்துக்கொள்ள. அந்த பெண் வரும் என்பது போல ஆவலாக பார்க்கும்போது அவர் மறுபடி “கோயிந்தா.. கோயிந்தா..” என்றார் சத்தமாகவே.

அந்தப்பக்கமாக போன ஒரு பெருசு ஒரு நொடி நின்று சிரித்தபடி போனது. அந்த பெண் ஏனோ அங்கிருந்து அந்த தம்பிக்காக காத்திருப்பதை தொடரலாமா என்பது போல யோசித்து ரொம்ப தள்ளி போய் நின்றுக்கொண்டபோது இவர் அந்த நாய் வராமல் போன எரிச்சலில் ஆனால் சிரித்தபடியே “வந்திடும்.. வந்திடும்..” என்றார் சத்தமாக அவளுக்கு கேட்பதுபோல.

பெரியம்மா குறுக்கிட்டு “நீ மொதல்ல இடத்தை காலி பண்ணு. தினமும் பெருக்கறது நானு. இடத்தை அசிங்கம் பண்ணிட்டு”

“சும்மா பெருக்கறியா..? கோயிலுக்கு பக்கம் வியாபாரம் பண்ணறே. அதனால பெருக்கற. சும்மா செய்யற மாதிரி”

“அப்படியே இருந்துட்டு போகட்டும். மொதல்ல இடத்தை காலி பண்ணு”

“அதெல்லாம் முடியாது. இன்னிக்கு புட்டு கொடு. பத்து ரூபாய்க்கு” என்றபோது அவள் கோவமாக “ஏற்கனவே அம்பது ரூபாய் வரணும். நாயை வேற தொறத்திட்ட. எப்படிதான் தூங்க முடியுதோ உன்னால..? அதென்னா புதுசா கோயிந்தான்னு பேரு அதுக்கு..?”

“இப்பதான் கண்டுபுடுச்சேன்”

“அதானே பாத்தேன்” என்றபோது புட்டு தட்டில் மாவை ஊற்ற ஆரம்பித்தாள். வெங்காயமும் பருப்பும் கலந்த வாசனை வந்தபோது அவருக்கு பசி உடனே தெரிய ஆரம்பித்தது.

0000

அந்த அரசமரத்தை தாண்டி அகலமான இடத்தில் பேருந்து நின்று அடுத்த ஊருக்கு கிளம்பும்.  நிற்கும்போது அந்த டிரைவர் அங்கிருந்து “அம்மா” என்பான். அல்லது சைகை செய்வான். இவள் அந்த மந்தாரை இலையில் பத்து புட்டை கட்டிக்கொண்டு நடுவில் தக்காளி சட்னி வைத்து எடுத்துக்கொண்டு போய் கொடுத்துவிட்டு வருவாள்.  சில சமயம் அவனே நிறுத்திவிட்டு வருவான்.  நேரமிருந்தால் இருந்து சாப்பிட்டுவிட்டு போவான்.  இரண்டு நிமிடங்களில் பத்து புட்டையும் தக்காளி சட்னியில் தோய்த்து சாப்பிடும்போது முழுசாக அவன் சாப்பிடுவது அழகாகவும் இருக்கும்.  தக்காளிதான் அதிகமாக தேவைப்படும்.  நான்கு முறையாவது வாங்கிவிடுவான்.  பிறகுதான் தெரிந்தது.  அவனுக்கு சாப்பாடே இதுதான் என்று. இன்றும் வண்டியை நிறுத்தியபோது வழக்கத்துக்கு மாறாக கண்டக்டர் இறங்கி வந்து “எனக்கும் பத்து ரூபாய்க்கு பார்சல் பண்ணு”

“நீ எப்பவும் சாப்புட மாட்டியே?”

“எனக்கு வீட்டு சாப்பாடு வந்துடும்”

“சும்மா கூட சாப்புட மாட்டியே?”

“கொரானா பாரு. அங்கங்க சாப்புடக்கூடாதுன்னு வீட்ல உத்தரவு”

“இப்ப?”

“எனக்கில்லை இது. பஸ்ல ஒரு குழந்தை பசிக்கு அழுகுது. அந்தம்மா பிஸ்கட்டு வாங்கறதுக்கு கீழ இறங்கறதா சொன்னாங்க. நான்தான் புட்டு வாங்கிட்டு வர்றதா வந்தேன். அப்படியே டிரைவருக்கும் கொடுத்துரு”

“ஒரு ரண்டு சாப்புடு நீயும்”

“வேணாம்மா. வீட்டுக்காரி வார்த்தையை மீறக்கூடாது. தப்பு” என்றபடி ஏதோ அசைவு தெரிந்ததை கவனித்து பெரியவரை பார்த்தபோது அவர் இவனை பார்த்து கையாட்டி ஏதோ முனகி சிரித்தபோது “என்னாப்பா?” என்றான் புரியாமல்.

பெரியம்மா உடனே. “பேசாதப்பா அந்தாளுக்கிட்ட. காசு கேக்கும்”

“அப்படி தெரியலை. பசிக்குதுன்னு சொல்ற மாதிரி இருக்குது”

“அப்படின்னா புட்டு கேக்கும்”

“அந்தாளுக்கு ஒரு அஞ்சு கொடுத்துடு”

“குடுக்காதப்பா. அந்தாளுக்கு இதே வேலை. இங்க வர்றவங்களையும் சாப்பட விடாம. நீ எடுத்துக்கிட்டு போ. அது கெடக்குது” என்றவள் பணத்தை வாங்கியபடி பார்சலை கொடுத்துவிட்டு “சட்னி இன்னிக்கு நல்லா இருக்குமுன்னு சொல்லுப்பா டிரைவருக்கிட்ட. நல்லா காரமா சுள்ளுன்னு”

“இது வேறையா?” என்று அவன் நகர்ந்தபோது இங்கிருந்தே பழக்க தோழத்தில் விசில் அடித்து சிரித்தபடியே போனபோது டிரைவரும் கீழே குனிந்து பெரியம்மாவை பார்த்து சிரித்து கியரை மாற்றி கிளம்புவதற்கு தயாராக இருப்பது போல தயாரானபோது பெரியம்மா திரும்பி பார்த்தாள்.  அந்த நாயை காணோம். இவள் அடுத்த தட்டில் புட்டு மாவை ஊற்றியபோது கவனமாக சட்னி பாத்திரத்தை சரியாக மூடி புட்டு பாத்திரத்தையும் நான்கைந்து புட்டுகள் இருப்பதை கவனித்து மூடி வைத்தாள். வெங்காயம் தாளித்து தனியாக வைத்திருந்ததை இன்னும் கொஞ்சம் எடுத்து மாவில் கலந்து கலக்கிவைத்து பிறகு எண்ணையை இன்னும் தனியாக கொஞ்சம் ஊற்றிவைத்து சரியாக மூடிவைத்து இப்போது சின்ன கரண்டியால் புட்டு மாவின் மீது எண்ணையை ஊற்றியபோது பெரியவர் இருமியபடி “எனக்கு வரவேண்டிய புட்டை கெடுத்துட்ட இல்ல?”

இவள் திரும்பாமல் “வீட்ல போயிட்டு முழுங்கு.  உம்பொண்டாட்டி செஞ்சு போடறாளா இல்லையா உனக்கு?”

“அதைய பத்தி நீ பேசாத”

“பின்ன யாரு பேசுவா?” என்றபோது அந்த சைக்கிள்காரன் வந்து இறங்காமல் நின்று “பத்து ரூபாய்க்கு கொடு“ என்றவன் இவர் சைகையை கவனித்து கண்டுக்கொள்ளாமல் வேறு பக்கம் பார்த்தபடி “அப்படியே சட்னி நிறைய வச்சு கொடு”

“வேலைக்கு போகலையா இன்னைக்கு?”

“இல்லை. நாளைக்குதான்”

“வழில கடைக்கு பக்கம் காய்கறி விக்கறா பாரு. அவ இருக்காளா?”

“ஆமா. இருக்கற மாதிரிதான் தெரியுது”

“அவளுக்கு ஒரு பொட்டலம் தர்றேன். கொடுத்திடு”

“ம். சரி” என்றபடி அவன் ஓரக்கண்ணால் கவனித்தபோது பெரியவர் மறுபடி சைகை செய்வதை கவனித்து ஆனால் பேச்சு வாக்கில் “சட்னியை மறந்துடாதம்மா”

“உம் முன்னாடிதானே கட்டறேன்”

“அந்தம்மாவோட பணம்?”

“அது கொடுத்துடும்.  யார்கிட்டேயாவது கொடுத்தனுப்பும்.  பாவம் அது. வீட்ல இருந்து சாப்பாடு வர்றதலை. மருமக தொல்லை அதுக்கு. இந்த மாதிரிதான் சாப்புடுது தினமும்.  புட்டு.. கிழங்கு.. போண்டான்னு இப்படியே சாப்புட்டு காலத்தை போக்குது.  சில சமயம் பிஸ்கட்டு சாப்புடும்.  பாத்தா கஸ்டமா இருக்கும்”

“காய் விக்கற காசை கேக்கும் போல மருமக”

“பையனும்தான். வீட்டை புடுங்கிட்டாங்க. பெரியவரு இறந்த பிறகு அந்தம்மாவுக்கு வீட்லேயே ஒரு ஓரமா ரூமை கொடுத்துட்டு ஒதுக்கிட்டாங்க. பேரப்பசங்க கூட உள்ளாற வர்றதில்லையாம். சத்தம் மட்டும்தான் வருதாம். பசங்க உள்ளாற வந்தா மருமக வந்து இழுத்துக்கிட்டு போய்டறாளாம்.  நான் என்னா தப்ப செஞ்சேன்னு அந்தம்மா எங்கிட்ட ஒரு நாளு புலம்பிடுச்சு.  ஆனா அதுக்கப்பறம் அதை பத்தி பேசறதை நிறுத்திடுச்சு”

“ஓ”

“பழகிடுச்சுன்னு சொல்லிடுச்சு.  பேரப்பசங்க மேல காட்டற பாசத்தை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கறது ரொம்ப கஸ்டம். ஆனா அது கூட பழகிருச்சுன்னு சொன்னப்ப அந்தம்மாவுக்கு கஸ்டமா ஏதும் தெரியலைன்னு தோணுது. இப்படியெல்லாம் இருக்காங்க. இந்தாளை பாரு” என்று கையை பின்னாடி காட்டியபோது கூட இவன் திரும்பாமல் பார்சலை வாங்கிக்கொண்டு கிளம்பினான் சைக்கிளை வேகமாக மிதித்தபடி.

பெரியவர் சிரித்து “அவன் ஏன் சைக்கிளை வேகமா மிதிக்கிறான் தெரியுமா?”

“அது கெடக்குது. எப்படிய்யா தலைல ஒரு கையை வச்சுக்கிட்டு ஒரு பக்கமா படுத்துக்கிட்டு அப்படியே கிடக்க முடியுது?”

“பழகிருச்சு”

“நாசமா போற பழக்கம். உண்மைய சொல்லு. கோயிந்தா பேரு யாரோடது?”

“நாயோட பேருதான்”

“இல்லை. புளுகறே. உம் பொண்டாட்டி பேருதானே?”

“அவ பேரு கோயிந்தம்மா”

“அதேதான். உம் பொண்டாட்டியை எப்புடி கூப்புடுவே?”

“கோயிந்தின்னு”

“அதையேதான் மாத்தி கோயிந்தான்னு கூப்புடறே” என்றபோது இவர் சிரித்தபடி “அப்படியெல்லாம் இல்லை”

“அப்படிதான். வீட்டுக்கு போனா பொண்டாட்டி தொல்லை. இங்க வந்தா நாய் தொல்லைன்னு உனக்காக நினைச்சுக்கறேன் நான். அந்த நாயை கண்டா உனக்கு புடிக்கறதில்லை. நீ இல்லைன்னா உன்னோட இடத்துல அது வந்து உக்காந்துக்குதுன்னு எரிச்சல் உனக்கு. நான் ஒரு விசயம் சொல்லட்டா?”

“சொல்லு”

“உன்னால என் வியாபாரம் கெடுது”

“நான் எதுவும் செய்யறதில்லையே?”

“வர்றவங்க நீ இருக்கறியான்னு பாத்துட்டுதான் புட்ட வாங்கறாங்க. உன்னோட தாயம் விளையாடறவங்கதான் இங்க வந்தா உனக்கு ஒண்ணை தூக்கி போட்டுட்டு சாப்புடறாங்க. அவங்க கூட மரத்தடி பக்கமா போயிடறாங்க. வீட்ல சாப்புடறியா இல்லையாய்யா நீ?”

“வீட்டுக்கு போனாதானே” என்றபடி அவர் சிரித்தபோது இவளுக்கு வந்த எரிச்சலை மறைத்து அடுத்து வந்த ஆள் நேராக பெரியவர் பக்கமாக வந்து அந்த சின்ன தடுப்பின் மீது உட்கார்ந்து “என்னா பெருசு. புட்டு சாப்புடறது?” என்றவனை பார்த்து லேசாக சிரித்தாள்.

“வேணாம்பா”

இவளிடம் திரும்பி “எனக்கு ஒரு பத்து ரூபாய்க்கு கொடும்மா”

“சாப்புடறியாப்பா?”

“ஆமா. அப்படியே பெருசுக்கும் தனியா”

இவர் அவசரமாக “வேணாம்பா. சொன்னா கேளு. நான் இப்பதான் சாப்புட்டேன்” என்றபோது பெரியம்மா திரும்பி அவரை பார்த்து மறுபடியும் திரும்பிக்கொண்டாள்.  அவன் கால் மீது கால் போட்டுக்கொண்டு பிறகு மறுபடி நேராக மடக்கி அதன் பிறகு ஒரு காலை அந்த தடுப்பின் மீது மடித்துப்போட்டு “சாப்புடு பெருசு”

“இல்லையப்பா. வேணாம்”

“அப்பறம் உன்னிஷ்டம். ஏம்மா. எனக்கு மட்டும் கொடு” என்றபோது பெரியம்மா உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு “சட்னி வைக்கனுமா?”

“ஆமாம்மா. அது இல்லைன்னா எப்புடி?”

“முட்டை புட்டு கூட போடறேன். வேணுமா?”

“இல்லைம்மா. வேணாம். கொஞ்சம் எண்ணைய விடு. வரவரன்னு இருந்தா எனக்கு புடிக்காது”

“சரிப்பா”

“ஒரு சிலருக்கு செவப்பா உப்பிட்டு வருதே. எப்புடிம்மா அது?”

“எல்லாம் சோடா மாவு பிரச்சனை. அரிசி மாத்தினா அப்படி வரும்.  நமக்கு டேஸ்டு வந்தா சரி”

“அந்தம்மாவை அடிச்சுக்கறதுக்கு இந்த ஏரியாவுல யாரு இருக்கா?” என்று பெரியவர் இப்போது நிமிர்ந்து படுத்துக்கொண்டபோது தன்னுடைய கைகளை முறுக்கிக்கொள்வதை அவன் ஆச்சரியமாக பார்த்து “நல்லா ஜில்லுன்னு இருக்கா?”“

“ஆமாப்பா.  தூக்கமா வந்திடும் இங்க.  ஆனா தூங்க மாட்டேன். காரணம் நைட்டுக்கு தூங்க முடியாது பாரு” என்றபோது அந்த நாய் மெதுவாக வந்து அங்கு நிற்பதை பார்த்து “இதா. கோயிந்தா வந்துட்டான்”

பெரியம்மா திரும்பி பார்த்து “தொறத்திடாதய்யா. அதுக்கு புட்டு வைக்கனும்”

“நானே வைக்கறேன்” என்ற பெரியவர் அந்தாளிடம் “தம்பி. சொல்லு புட்டை எனக்கு”

“வேணாமுன்னு சொல்லிட்டீங்களே?”

“நாய்க்கு அது. தொறத்திட்டேன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. அந்தம்மா கோவிச்சுக்கிட்டு போயிடுச்சு”

“எந்தம்மா?” என்றபோது பெரியம்மா குறுக்கிட்டு “அது ஒரு கதை. இதாப்பா” என்று அவனிடம் புட்டு இலையை நீட்டியவள் “நீ சாப்புடு. நான் வைக்கறேன் நாய்க்கு” என்றபோது அது நிதானமாக அந்த இரண்டு படிகளை தாண்டி வழக்கமான இடத்தில் பெரியவரை விட்டு தள்ளி அமர்ந்தபோது இவரை பார்த்தபடியே அமர்ந்தது. இவர் அமைதியாக அதை பார்த்து சிரித்தபடி “உக்காரு. உக்காரு” என்றார்.  அவன் “அந்த நாய்க்கு அஞ்சு புட்டு கொடுத்துரும்மா. குட்டிங்க இருக்குது வயித்துக்குள்ள”

உடனே பெரியவர் “நான்தானேப்பா சொன்னேன்”

“யாரு கொடுத்தா என்னா? நாய்க்குதானே?”

“ஆமாப்பா”

“அதுக்குதான் சொல்லறேன்” என்றபோது பெரியவர் பெரியம்மாவை பார்த்து அவள் உள்ளுக்குள் சிரிப்பதை முதுகு வழியாக கவனித்து கோபம் வருவது போல உணர்ந்தபோது அந்த ஆள் தன்னை கவனிப்பதை உணர்ந்து உடனே சிரித்தபடி “அட ஆமாப்பா. யாரு கொடுத்தா என்ன?”

அவன் “இந்த நாய் இங்க படுக்கப்படாது”

“ஏம்பா?”

“நாய பிடிக்காதவங்க தொறத்திட்டே இருப்பாங்க. பின்னாடி அல்லது ஓரமா இருந்துட்டா பிரச்சனை இல்ல. குட்டி போட்டுக்கிட்டு இங்க அடிக்கடி வந்து உக்காந்துட்டு இருந்தா ஒரு மாதிரி வாசனை வரும். பழக்கப்படுத்தி அது ஒரு இடத்துல இருக்கற மாதிரி செய்யனும்” என்றபோது பெரியம்மா குறுக்கிட்டு “அது எப்பவாவதுதாம்பா இங்க வந்து உக்காரும். அதுக்கு கோயிலுக்கு பின்னாடி ஒரு பள்ளம் மாதிரி இருக்குது. அங்கதான் படுத்துக்கும். போன முறை அங்கதான் குட்டி போட்டுச்சு. அப்பறம் அதுவா அந்த குப்பை கொட்ற இடத்துக்கு குட்டிங்களை தூக்கிட்டு போயிடுச்சு. படுக்கறதுக்கு விளையாடறதுக்கு குட்டிகளுக்கு நல்லாயிருக்குதுன்னு“

“அது கூட தெரியுமா உனக்கு?”

“தெரியாம இருக்குமா? அந்த பக்கமா ஆளுங்க போகமாட்டாங்க. பாதுகாப்புதானே?”

“ஆமா” என்றபோது பெரியம்மா ஒரு இலையில் ஆறியிருந்த நான்கைந்து புட்டுகளை வைத்து அந்த நாயின் அருகில் சென்றபோது அது வாலை ஆட்டியபடி அவள் கீழே வைத்ததை முகர்ந்து பார்த்து இவளை மறுபடி நிமிர்ந்து பார்த்து வாலை தொடர்ந்து ஆட்ட.. பெரியவர் “சட்னி வைக்கலைன்னு சொல்லுது”

“அட. ஆமா. மறந்துட்டேன். சட்னில பொரட்டி தந்தா…” என்று முடிப்பதற்குள் பெரியவர் “அப்படியே லபக்குன்னு விழுங்கிகும்” என்றார். அவள் மறுபடி அவரை பார்த்து “அது சாப்புடறதை கூட வேடிக்கை பாப்பியா நீ?” என்று தலையில் அடித்துக்கொண்டு திரும்பிப்போய் சட்னி எடுத்து வந்து இலையில் வைத்து புட்டுகளோடு புரட்டி வைத்து திரும்ப தன்னிடத்திற்கு வந்து உட்காருவதற்கு முன்பு கையை நன்றாக கழுவிக்கொண்டு உட்கார்ந்தபோது திருப்தியாக இருந்தது அவளுக்கு. அந்த ஆள் “ஏம்மா. என் கணக்கா அது?” என்றான் சாப்பிட்டபடியே.

“என் கணக்கு” என்ற பெரியவரை பார்த்து  பெரியம்மா. “இல்லைப்பா. அது ஒரு  பொம்பளையோட கணக்கு. இன்னும் வைக்கனும். போகும்போது வைக்கலாம்”

அவன் “நானும் சொல்லிட்டேன் நாய்க்கு தரச்சொல்லி. எனதையும் சேத்திக்கோங்க” என்றபோது பெரியம்மா மறுபடி திரும்பி பார்த்து பெரியவரை கவனித்தது அவருக்கு பிடிக்காமல் “இல்லைப்பா. பணம் நான் கொடுத்திடறேன்”

“பரவாயில்லைங்க” என்று அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சட்டை பையில் பணத்தை நோண்டி இருபது ரூபாயை கொடுத்துவிட்டு “அஞ்சு நாய்க்கு. அஞ்சு பெரியவருக்கு. பத்து எனக்கு” என்றபோது பெரியவர்  “இல்லை. வேண்டாம்பா” என்றார் மறுபடியும்.

“இருக்கட்டுமுங்க”

“இல்லைப்பா. நாய்க்கு நீ கொடுத்துக்க”

“அப்படின்னா சரி. நாய்க்கு பத்துரூபா. நாளைக்கு வச்சுரும்மா புட்டை என் சார்பா” என்றபோது பெரியம்மா தலையாட்டினாள். பெரியவர் மறுபுறம் திரும்பி படுத்து அந்த நாய் சாப்பிடுவதை கவனித்து பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டபோது தக்காளி சட்னி வாசனைக்கு மீண்டும் பசியெடுப்பதை உணர்ந்தார்.

0000

அந்த அரச மரத்தடியில் இப்போது யாரும் கூடுவதில்லை. கடையும் யாரும் வைப்பதில்லை. பெரியம்மா சற்று தள்ளி கோவில் அருகில் வைத்திருப்பதுதான் அந்த ஒற்றைக்கடையான புட்டுக்கடை. சுற்றிலும் வீடுகள். நான்கைந்து சந்துகள் அங்கிருந்து பிரிகிறது. பெரும்பாலும் மாடி வீடுகள். புதுசாக அல்லது சமீபத்தில் கட்டியதாக. வீடுகளுக்கு முன்புறம் திண்ணைகள் அடையாளம் இல்லை. கேட் போட்டு ஒரு சில வீடுகளில் நாய்களை வளர்க்கிறார்கள். எழுத்துகளில் வீட்டின் உட்புற ஜீவன்களின் பெயர்கள் தெரிகிறது. ஏறக்குறைய பத்து மணிக்கு மேல் அந்த வீடுகளின் கதவுகள் மட்டும் திறந்து கேட்டுகள் வழியே உட்புறம் பார்த்தால் மனித நடமாட்டம் இல்லாமல் அனாமத்து வீடுகள் மாதிரி தெரியும். சந்தடியும் பேச்சுக்குரல்களும் உறிஞ்சப்பட்டது போல அரச மரத்தின் காற்றும் இலைகளின் சலசலப்பும் காதுகளில் வழியும்போது பெரியம்மாவுக்கு சில சமயம் தான் மட்டும் இருக்கிறோமோ என தோன்றும். அந்த தாயத்து உருட்டலும். கூடியிருக்கும் கூட்டத்தின் தாய விளையாட்டின் கூச்சலும் இல்லாவிட்டால் அங்கு நாய்களின் குரல்களை தவிர வேறு எதையும் கேட்கமுடியாது. ஒரு சில ஆண்கள் மட்டும் அவ்வபோது நடந்து வந்தோ.. அல்லது சைக்கிளிலோ.. அல்லது போகிறவர்களோ வருகிறவர்களோ.. சந்துகளுக்கு திரும்புகிறவர்களோ கடைக்கு வந்தால்தான் உண்டு. எறக்குறைய எப்போதாவது பத்து மணிக்கு அல்லது பதினொரு மணிக்கு மேல் ஆரம்பமாகும் தாயம் பெரும்பாலும் இரண்டு மணிக்கு மேலேதான் முடியும். :அதனால் அந்த பகுதியின் மௌனத்தை விரட்டும் சந்தைக்கடை கூட்டமாக அந்த தாயத்து கூட்டம் மாறி அதற்கு இந்த பெரியவர் மையப்புள்ளியாக மாறி இவரை தாயத்து ஆட்டத்தின் நாயகனாக மாற்றி வார்த்தைகளிலும். பார்வையிலுமாக காட்டும்போது அவருக்கு அந்த இடத்தின் அத்தனை உயிரில்லாத பொருள்கள் மீதும் ஆசாபாசம் வந்துவிட்டது. பெரியம்மாவோடு சேர்த்து.

அந்த நாயை தவிர.

முதலில் அது இவருடைய இடத்தை அவ்வபோது பிடித்துக்கொள்வது பிடிக்கவில்லை. பிறகு அது போன பிறகு அங்கு இருக்கும் அந்த வாசனை. பிறகு பெரியம்மா தன்னை விட அதற்கு காட்டும் பிரியம். ஆனால் இன்னொரு பக்கம் அந்த நாயின் மீது ஒரு கவனம் திரும்புவது அவருக்கு பிரச்சனையாக இருந்தது.  தன்னை கூடுமான வரையிலும் நாயோடு ஒப்பிடுவதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாலும் ஒரு சில சமயம் இவரையும் மீறி அது நடப்பது அந்த தாயத்து கதாநாயகன் என்கிற உள்ளார்ந்த விழயத்தையும் மீறி அவருக்கு அவர் மீதே எரிச்சலை வரவழைத்தது. இப்போதுதான் இந்த நொடிதான் அவர் ஒரு தீர்மானம் செய்தார். இனி அதை கண்டுக்கொள்ளக்கூடாது. அதன் வருகை.. அதன் வாசனை.. அதன் இனி வரப்போகும் குட்டிகளை.. அதன் விளையாட்டுத்தனத்தை.. அவைகளின் அழகை.. எதையும்..

இப்போது அவர் கண்களை மூடியபடி சீக்கிரம் தாயத்தை முடித்துவிட்டு கும்பல் கலைந்து போனதுக்கு வருத்தப்பட்டு ஏன் அவ்வாறு நடந்தது என்று யோசித்து அந்த பாதியிலேயே ஆட்டத்தை கலைத்ததோடு இல்லாமல் எல்லோரையும் அங்கிருந்து போக வைத்தவன் மீது கழுத்து வரைக்கும் கோவமாக வந்தது.  ஏதாவது பச்சை மிளகாய் இருந்தால் நறுக்கென்று கடித்து மென்று முழுங்கவேண்டும் போலிருந்தது. ஆனால் நாளைக்கு எல்லோரும் அந்த அடையாளம் இல்லாமல் இங்கு ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று அவருக்கு தெரியும். அவரும் அதில் ஒருவராக இருப்பார். கழுத்து வரைக்கும் இருந்ததை வசதியாக மறந்துவிட்டு அந்த கலைத்தவனிடம் “ஹி. ஹி. ஆடு மச்சான்” என்பார்.

இப்போது நான்கைந்து பேர் அங்கு வந்து உட்கார்ந்தபோது முதுகு காட்டியபடி படுத்திருந்தவர் கண்களை திறக்காமல் ஆனால் தூங்குவதற்கு முயற்சித்தார். அவருக்கு பசியை தூக்கம் கெடுத்தால் சரி என்று தோன்றியது. வீட்டுக்கு போவதை எப்போதும் தவிர்க்க விரும்பும் அவர் இப்போதும் அதை தவிர்க்க விரும்பி தன்னுடைய வயிறின் ஒரு பகுதியை நீவியவாறு கவனத்தை தூக்கத்தின் மீது திருப்பினார்.

அந்த குரல்களில் ஒரு குரல் தாயத்து கூட்டத்து குரல் என்று தெரிந்தது. “அண்ணாச்சிக்கு வீட்டுக்கு போக தோணுமா?” என்று சொன்ன அந்த குரல் “அண்ணாச்சி. அண்ணாச்சி”

பெரியம்மா. “இப்பதானே பேசிட்டிருந்தாரு?”

“தூங்கிட்டாரு போல”

“அப்படி தெரியலை. தொட்டுப்பாருங்க”

“வேணாம். தூக்கத்தை எதுக்கு கெடுக்கறது?” என்ற அந்த குரல் “எல்லாருக்கும் புட்டு குடும்மா”

“சட்னி?”

“சட்னியோடதான்”

“முட்டை?”

“அதெல்லாம் வேணாம். அண்ணாச்சி சாப்புட்டாறா?”

“வாங்கி கொடுத்தா சாப்புடுவாரு”

“யாரு?”

“நீங்கதான்”

“அதுல ஒரு சந்தோழம்மா. உனக்கு தெரியாது. நம்ம வீட்லேயே சாப்பிடனமுன்னு ஏதாவது இருக்கா என்ன? அதுவும் பக்கத்துல புட்டுக்கடை இருக்கும்போது. நீங்க சாப்பாட்டு டைம்ல என்னா பண்ணுவீங்க?”

“சாப்புடுவேன்”

“வீட்டு சாப்பாடா?”

“இல்லை. புட்டுதான்”

“பாத்திருக்கோம். பசிச்சா நாங்க என்னா பண்ணறோம்?”

“தாயம் விளையாடும்போதா?”

“ஆமா”

“யாரையாவது வாங்கி தரச்சொல்லுவீங்க”

“அப்படி இல்லைன்னா?”

“யாராவது வாங்குவாங்க”

“அப்போ என்ன நடக்கும்?”

“ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்குவாங்க”

“அந்த மாதிரிதான் இதுவும். எவனாவது அவனுக்காக வாங்கறானா? வாங்கினா அவனால சாப்புட முடியுமா? அடுத்தவங்க சாப்பிட்டு போகட்டுமுன்னுதான். அண்ணாச்சி எழுந்தா ஒரு பங்கு கொடுத்திடு”

“எவ்வளவுக்கு?”

“அவரு சாப்புடற வரைக்கும்” என்றவன் “ஆனா அவருக்கிட்ட காசு கேட்டுப்புடாத?” என்றபோது அவள் சிரித்ததை  கவனித்து “ஏம்மா?”

“காசு வருமா. வராதான்னு எனக்கு தெரியாதா?”

“அதெப்படி? அஞ்சுக்கும். பத்துக்கும் ஏமாத்தறவரு தாயத்துல ஏமாத்தமாட்டாரா? அவரு விளையாடறது அப்படியா இருக்குது? அப்படி வெட்டறாரு. அப்படி உருட்டறாரு. புட்டு சாப்புட்டு கொடுக்காம இருந்தா கொடுத்திடுவாரு. புட்டு சாப்புடறவன் இவரை கண்டுக்கலைன்னா அது அவனோட புத்தி. அதுக்கு இவரு என்ன செய்ய முடியும்? இங்கேயே இருந்துட்டு.. படுத்துட்டு.. தூங்கிட்டு.. பேசிட்டு.. கவனிச்சுட்டு இருக்கறது உங்களால முடியுமா என்னால முடியுமா?” என்ற குரல் புட்டை வாயில் வைத்து குதப்புவது கேட்டது. பிறகு வேறு விழயத்துக்கு மாறி அப்படியே அமெரிக்கா போய் இலங்கை வழியாக வந்தபோது அவருக்கு தூக்கம் இனிமேல் வராது என்று தெரிந்து ஆனால் கண்களை மூடியபடியே அசையாமல் கிடந்தார். அவருக்கு இபுபோது பசி தெரியவில்லை. ஆனால் அவருக்குள் அந்த நாயை கண்டுக்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாகவே இருப்பதை நினைத்துக்கொண்டார்.

ஒரு சில நொடிகள்தான். அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு தூக்கம் வந்து கண்கள் சொருகி வந்தபோது சட்டென்று விழித்துக்கொண்டு திரும்பி கண்களை விழித்து எழுநது உட்கார்ந்துக்கொண்டபோது அங்கு யாருமில்லை. அந்த பெரியம்மாவின் அடுப்பு எரிந்துக்கொண்டேதான் இருந்தது. வெயிலுக்கு வழக்கமாக மேலே கோவிலின் சின்ன தூணோடு முன்புறம் குச்சி நட்டு ஒரு பிளாஸ்டிக் பையை விரித்திருந்தாள். வழக்கமான தக்காளி சட்னி.. வெங்காயம்.. பருப்பு. வாசனை.. சட்டென்று பக்கத்தில் பார்த்தபோது அந்த நாய் இல்லாததை பார்த்து திருப்தியடையும்போது அவர் அந்த உறுதிமொழியை நினைத்துக்கொண்டு வெட்கப்பட்டு மீண்டும் படுத்துக்கொள்ள முயன்றபோது அந்த பெரியம்மா திரும்பி “உனக்கு புட்டு கொடுக்க சொல்லிட்டு போனாங்க”

“யாரு?”

“கூட விளையாடறவங்க. சாப்புட்ற வரைக்கும் சாப்புட சொல்லி”

“வேணாம்”

“காசு அவங்களே கொடுத்திடுவாங்களாம்”

“வேணாம்” என்றபோது அந்த பக்கமாக நடந்து போன ஆளை பார்த்து “ரத்தனம். ரத்தனம்” என்றார். அந்தாள் நின்று இவரை பார்த்ததும் “இரு வர்றேன்” என்பது போல சைகை செய்துவிட்டு அவசரமாக நடந்து போனார். இவர் இப்போது பழைய மாதிரி ஒரு கையால் தலையை தாங்கிக்கொண்டு பெரியம்மா பக்கமாக திரும்பி அவள் முதுகில் வியர்வையை பார்த்து “வெயில் அதிகமா?” என்றார்.

அவள் திரும்பாமல் அந்த அவசரமாக போன மனிதரை பார்த்து “என்னா. இந்த ஓட்டம் ஓடறாரு?”

“தாயம் ஆடும்போது ஒருமுறை அசிங்கப்பட்டு போனாரு. அப்பலிருந்து வர்றதிலை”

“நான் உனக்கு பயந்துட்டுதான் ஓடுறாருன்னு நினைச்சுட்டேன்”

“காலைல சைக்கிள்ள வந்தவன் கூட அப்படிதான். தாயத்துல காயை தள்ளும்போது தப்பு தப்பா தள்ளுவான். தமாஸ் பண்ணிட்டேன். அப்பலிருந்து என்னைய பாத்தாவே திரும்பிக்குவான். வர்றதில்லை அவனும் இப்ப”

“ஓ.. நான் வேற ஏதோ நினைச்சுட்டேனே”

“சைகை செஞ்சதை சொல்லறியா? வர்றியா தாயத்துக்குன்னு சொன்னேன். ஓடிட்டான்”

“கண்டக்டருக்கிட்ட சைகை பண்ணது?”

“என்னைய கவனிக்கறதுதான் உன் வேலையா? அவன்கிட்ட சைகை செஞ்சது உண்மைதான்”

“உண்மையா?”

“ஆமா”

“எதுக்கு?”

“புட்டுக்குதான். வேற எதுக்கு?”

“வெக்கமாயில்லையா உனக்கு?”

“என்னா வெக்கம். கோயிந்தா பக்கத்துலதான் இருந்தான் அப்ப. அவனை வேடிக்கை பாத்துட்டு. அதுக்குதான் சொன்னேன். புட்டு வாங்கி குடுய்யா அந்த புள்ளதாச்சிக்குன்னு. அவன் கவனிக்கலை. நீயும் கவனிக்கலை. நான் என்னா பண்ண?” என்றபோது அவள் திரும்பிபார்த்து ஆச்சரியமாக “நான் வேற எதையோ நினைச்சுக்குட்டேன்”

“கவனிச்சேன்”

“தினமும் இப்படிதானே சொல்லுவேன். “

“தினமும்தான் கவனிக்கறேன்”

“ஆனா இன்னிக்கு வித்தியாசம் தெரியுது”

“என்னா வித்தியாசமுன்னு தெரியலை. நான் நானாதான இருக்கேன். பசிச்சா கடன் வாங்கி சாப்பிட்டு போறேன். இதுல போயிட்டு என்னா இருக்குது” என்றவர் வயிற்று பசி தெரியாமலிருப்பதை கவனித்து “அப்பாடா” என்று திரும்பி படுத்தபோது அவள் அவர் முதுகை பார்த்தவாறு “நான் ஒண்ணு கேக்கவா?”

“ம்”

“அந்த கண்டக்டருக்கிட்ட.. அப்பறம் இன்னொரு ஆளுக்கிட்ட நாய்க்குதான் புட்டுன்னு சொன்னது உண்மைதானா?”

அவர் ஒரு காலை லேசாக ஆட்டியபடி தலையை வழக்கமாக இன்னொரு கையால் தாங்கியபடி ஏதும் சொல்லாமல் அப்படியே நேராக பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு அவருடைய பார்வை அந்த தாயக்கோடுகள் மீது விழுந்தது தெரிந்தது. ஆட்டிக்கொண்டிருந்த அந்த காலின் பாதத்தில் லேசாக அழுக்கு தெரிந்தது. பின்புறம் சட்டையில் தூசியும் மடிப்புகளும் நிறைய இருந்தது. அவருடைய தலையை தாங்கிய அந்த வலது கையின் முட்டி தரையை தாங்கி. தாங்கி வெளிறி நிறம் மாறியிருந்தது… இவள் தொடர்ந்தாள். “அந்த கண்டக்டரு பேசிட்டிருந்தப்போ நாய் பக்கத்துல வந்து நின்ன மாதிரி எனக்கு தெரியலை”

அவர் தொடர்ந்து அப்படியே இருந்தார். பெரியம்மா சட்டென்று எழுந்து இலையில் இன்னொரு இலையை சேர்த்து கைக்கு வந்து புட்டுகளை அள்ளி வைத்து தக்காளி சட்னியை வைத்து தடுப்புக்கு பின்புறமாக அவரை நெருங்கி அவருடைய முதுகுக்கு பின்புறமாக கொஞ்சம் தள்ளி இலையை வைத்து அவருடைய முதுகை பார்த்தவாறு சொன்னாள்.

“சாப்புடு”

0000

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.