அந்தர்வாஹினி

மாலதி சிவா

 

அவன் நிழல் நீண்டு அவர் காலைத் தொட்டது.

ரேழியில் நின்று கொண்டு கையில் இருந்த துண்டு கடுதாசியைப் படிக்க முயன்று கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார்.

“கதவு திறந்துதான் இருக்கு வாங்கோ” என்றார்.

கம்பி அழிக்கதவைத் திறந்துகொண்டு வந்தவன் திண்ணைகளுக்கு இடைப்பட்ட ஆளோடியில் தயக்கமாக நின்றபடி

“ஈஸ்வர அய்யர் வீடு….?.” என்று கேள்வி மாதிரி கேட்டான்.

“ஆமா! ஈஸ்வர அய்யர் , எங்க அப்பாதான், ஆனா அவர் காலம் ஆகி ஆறேழு வருஷம் ஆறதே” என்றார்.

“ஆமா! மாமா! எங்க அப்பா சொல்லியிருக்கார்”

வந்தவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கும்.வேஷ்டியும் சட்டையும் பழையதாயிருந்தாலும் துவைத்து மொரிச்சென்று இருந்தது. சட்டை காலரின் மடித்த பகுதியில் நைந்து பிசிர் தெரிந்தது. தொண்டையின் முழை ஒரு சிறிய கோலிக்குண்டு. கையில் ஒரு பழைய காக்கிப் பை சுருட்டின வாக்கில் இருந்தது.

“உள்ளே வாங்கோ”  என்றபடி ரேழியைக் கடந்து கூடத்துக்குப் போனார்.

திரும்பிப் பார்த்து மறுபடி” வாங்கோ”’ என்றார்.

“உக்காருங்கோ” என்றார்.

அவருக்கு அருகில் இருந்த மர நாற்காலியைத் தவிர ஒரு மர முக்காலியும் , வர்ணமிழந்த தகர நாற்காலியும் இருந்தன. அவன் முக்காலியில் அமரப் போனான்.

“இல்ல! அது வேண்டாம். ரண்டு மரப் பலகையைச் சேத்து வச்சு பண்ணியிருக்கான். அதுல இடை வெளி விட்டுப் போயிடுத்து. உக்காந்தா கடிக்கறது. சேர்லயே உக்காந்துக்கோங்கோ!”என்றார்.

அவன் உட்கார்ந்த பின் கேட்டார்,

“நீங்க?”

“என்பேர் நீலகண்டன். அப்பா பேரு சதாசிவம்”

“சரி…..”

உள்ளேயிருந்து ஒரு சின்னக் குட்டி சமையல் ரூமுக்கும் கூடத்துக்கும் இடையிலான நிலைப்படியில் வந்து நின்றது. நாலைந்து வயதிருக்கும், தலையை இழைய வாரி  நுனியில்   சிவப்பு பட்டு நூலில் முடிந்திருந்தது.

இவனுடைய தொண்டடையின் கோலிக்குண்டையே உறுத்துப் பார்த்தது. கோலிக்குண்டு இன்னும் வேகமாக அசைந்தது.

அவர் குழந்தைகளிடம் பேசும் பொழுது வருகிற  ஒருமென்மையான குரலில் இடை வெளி விட்டு விட்டு  நிதானமாக

“தர்மு! மாமா வெய்யில்ல வந்திருக்கா பாரு! கொஞ்சம் ஜலம் கொண்டு வரயா?” என்றார்.

அது தலையை அசைத்து விட்டு உள்ளே போனது. பின்பக்கத்திலிருந்து யாரோ பேசுகிற சத்தமும், மாடியிலிருந்து குழந்தைகள்  சச்சரவிடுகிற சத்தமும்  கேட்டுக் கொண்டிருந்தன.

“இவ திருவையாறு போஸ்டிங்க்ல இருக்கும் போது பொறந்தா, அதான் தர்மசம்வர்தனின்னு பேரு. எந்த ஊர் போஸ்டிங்க்ல குழந்தை பொறக்கறதோ அந்த ஊர் அம்பாள் பேரை வச்சுடறது. இப்போ வீடு நிறைய அம்பாள்தான்“ அவர் சிரித்தார்.

“சரி! நீங்க சொல்லுங்கோ? எங்கேயிருந்து வரேள்? என்ன சமாசாரம்?” என்றார்.

“ நா ஜீயபுரம் , அம்மங்குடியிலேந்து வரேன்!”

குழந்தை அதற்குள் ஒரு சொம்பு ஜலத்தைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு வந்தது.

“ அடடே! நீயே தூக்கிண்டு வந்தயா? அம்மாகிட்டயோ , அத்தை கிட்டயோ சொல்ல மாட்டயோ” என்றார்.

அவனிடம் தண்ணீரைக் கொடுத்துவிட்டு,

“ஜீயபுரம் ஜாஸ்தி பழக்கமில்லை!  முந்தி எப்பவோ ஒரு தரம் வந்திருக்கேன்!”

அதற்குள் உள்ளேயிருந்து ஒரு மடிசார் மாமி ஒல்லியாய் வெடுவெடுவென்று உயரமாய் “ சாமினாதா” என்று  சத்தமாக கூப்பிட்டுக்கொண்டே வந்தாள்.

வேற்று மனிதனை  அங்கு எதிர்பாராததால்  சட்டென்று தயங்கி நின்று  மெதுவான குரலில் “வாங்கோ” என்றாள்.

“யாரு?” என்று இழுத்தாற்போல் கேட்டாள்.

சாமினாதன் “ அக்கா! இவருக்கு ஜீயபுரமாம்!” என்றார்.

அவனிடம் “ இது எங்க அக்கா!” என்றார்.

“அப்பிடியா? ஜீயபுரத்தில யாரு? எங்க ஜாகை?” மாமி கேட்டாள்.

“ஸ்டேஷன் மாஸ்டர் ஜம்புனாதையர்  இருக்காரில்லையா? அவாத்துக்கு மேலண்டைப் பக்கம் ரண்டு ஆம் தள்ளி” என்றான் வந்தவன்.

“ அடடே!  அப்பிடியா சமாசாரம்? ஜம்பு நாதய்யர் எங்க புக்காத்து வழியில தூரத்து சொந்தம்.

அவாத்துல ஒரு சீமந்தத்துக்கு ஜீயபுரம் வந்திருக்கேன், ரொம்ப வருஷத்துக்கு முன்னால!” என்றாள்.

“அப்பா என்ன பண்றார்?” அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“அப்பா இப்ப இல்லை! அவர் மூணாம் வருஷம் போயிட்டார்!”

சாமினாதன் “அடடா!” என்றார்

மாமி “த்ஸோ! த்ஸொ! பாவமே!” என்றாள்.

“இங்க தெப்பக்குளம் பக்கத்துல மெடிகல் ஸ்டோர்ல வேலை பாத்துண்டிருந்தார்.”

“ரங்கனாதா மெடிகல் ஸ்டோரா?”என்றாள்.

“இல்லை மாமி , அதைத் தாண்டி மூணு நாலு கடைக்கப்பறம் வினாயகா மெடிகல்ஸ்னு”

“ ஒல்லியா கண்ணாடி போட்டுண்டு , மருந்து எடுத்துக் குடுக்கறது, பில்லு போடறது எல்லாம் பண்ணுவாரே அந்த மாமாவா உங்க அப்பா?”

அவன் “ஆமா மாமி!! முதலாளிக்கு வலது கை மாதிரி  இருந்தார். முதலாளியும் அப்பா பேர்ல ரொம்ப மதிப்பும் , மரியாதையுமாதான் இருந்தார்” என்றான்.

“என்ன பண்றது, நல்ல மனுஷாளுக்கெல்லாம் இப்படி சட்னு முடிவு வந்துடறது கஷ்டமாத்தான் இருக்கு”

கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது.

தர்முவைப் பார்த்து

“ நீ என்னடி இங்க வாயைப் பாத்துண்டு நிக்கறே? அவாளோட விளையாடப் போகலையா?  என்றாள்.

அது தலையை அசைத்து “நீ போ அத்தை!” என்றது.

“அது சரி ! நா போய் விளையாடறேன்! நீ பெரிய மனுஷி! பேச்சைக் கவனி!” என்று சிரித்துவிட்டு.

“நீங்க பேசிண்டிருங்கோ!  நான் காபி எடுத்துண்டு வரேன்” என்றபடி மாமி உள்ளே போனாள்.

“அதெல்லாம் வேண்டாம் மாமி!”

அவர் “இருக்கட்டும் , இருக்கட்டும் , காபிக்கென்ன? குடிக்கலாம்” என்றார்.

கூடத்து மாடப் பிறை பக்கத்தில் இந்திய வரைபடம் மாதிரி காரை உதிர்ந்து இருந்தது. ஜம்மு காஷ்மீர் ஏரியா மாத்திரம் கொஞ்சம் பெரிதாக இருக்கிற இந்திய வரைபடம்.

தொண்டையை லேசாக கனைத்துக்கொண்டே ஆரம்பித்தான்.

“எங்க அப்பாவோட இந்தாத்துக்கு ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால  வந்திருக்கேன். உங்களை அப்ப பாக்கல. அதான் உங்க பேர் தெரியல. மன்னிச்சுக்கோங்கோ!”

“அதனால என்ன பரவாயில்லை. நான் இப்பத்தான் நாலு வருஷமா இங்க இருக்கேன். அதுக்கு முன்னாடி ஊர் ஊரா  போஸ்டிங்க்! இங்க இருக்கும் படி நேரலை! படிக்கற காலத்தில இங்க இருந்ததோட சரி , அப்புறம் இப்பதான் நாலைந்து வருஷம் முன்னாடிதான் இங்க வந்தேன். அப்பாக்குத் தள்ளாமை வந்தப்புறம், ஆத்துக்காரி  குழந்தைகள் எல்லாரும் இங்க முன்னாடியே வந்துட்டா.  நா மாத்திரம் ஊர் ஊரா போயிண்டிருந்தேன்” என்றார்.

“ எட்டு வருஷத்துக்கு முன்னாடி அப்பா ரண்டாம் அக்கா கல்யாணத்துக்கு மாமா கிட்ட , அதான் உங்க அப்பாகிட்ட ஆறாயிரம் ரூபா கடன் வாங்கியிருந்தா. அடுத்த வருஷமே திருப்பித் தரதா பேச்சு! ஆனா அடுத்த வருஷம் பெரிய அக்கா பிரசவத்துக்கு வந்துட்டா.

உங்களுக்குத் தெரியுமே சம்சாரிகள் ஆத்துல பிரச்னைகளுக்குப் பஞ்சமேது? அதுக்கடுத்த வருஷம் அறுவடை சமயத்துல வெள்ளம் வந்து சாகுபடியெல்லாம் வீணாப் போச்சு!”

தர்மு பெரிய கண்களை விரித்து அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தது.

“அப்பாவுக்குத்தான் ரொம்ப தாபமா இருந்தது.  திருப்பி தரதா சொன்ன டயத்திலே பணத்தைக் கொடுக்க முடியலயேன்னு சொல்லிச் சொல்லி ஆத்துப் போயிட்டார்.

சாகற அன்னிக்குக் காத்தால கூட என் கையைப் பிடிச்சுண்டு அழுதார், நான் கடனாளியா சாகறேனேன்னு. எப்பிடியாவது சீக்கிரம் வட்டியும் முதலுமா குடுத்துடுடா குழந்தைன்னார்”

அவன் குரல் கரகரத்து ரகசியம் போலவும் அழுவது போலவும் ஒலித்தது.

தர்மு மெதுவாக அவன் பக்கத்தில் வந்து நின்றது.

“ ஆறாயிரத்தோட வட்டியா ஒரு மூவாயிரம் சேத்துக் கொண்டு வந்திருக்கேன். இப்போதைக்கு அவ்வளவுதான் சேக்க முடிந்தது. பாக்கி வட்டியை மொள்ள மொள்ள கொஞ்சம் கொஞ்சமா குடுத்துடறேன்.”

கலங்கிய கண்களொடு அவரைப் பார்த்தான்.

அவர் “ இருங்கோ! இருங்கோ! அவசரப் படாதீங்கோ! எங்க அப்பா கொஞ்ச நாள் படுத்துண்டு இருந்துட்டுதான் போனார். யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கணும், எங்களுக்கு எங்கேர்ந்து எவ்வளவு வரணும் எல்லாம் சொல்லிட்டுத் தான் போனார்.  உங்க அப்பா பேரு என்ன சொன்னேள்? சதாசிவமா?  அப்படி யாரும் எதுவும் கொடுக்கணும்னு சொல்லலையே?” என்றார்.

அவன் தொண்டையின் கோலிக்குண்டு வேக வேகமாக அசைந்தது.

“இல்ல மாமா! எங்க அப்பா சொல்லியிருக்காளே மாமா! அப்படி இருக்காது. எங்கயாவது எழுதி வச்சுருப்பா! கொஞ்சம் பாருங்கோளேன் ப்ளீஸ்!” என்றான்.

“ நீங்க சொல்றது கரக்ட்! அப்பா எல்லாத்தையும் சப்ஜாடா எழுதி வைப்பார். நான்  பல தடவை அந்த நோட்டைப் பாத்திருக்கேனே! உங்க அப்பா பேர் இல்லையே” என்றார்.

தர்மு அவர்களை மாறி மாறிப் பார்த்தது.

“இன்னும் ஒரு தடவை எனக்காகப் பாருங்களேன் “ அவனுக்குத் தொண்டை அடைத்தது.

அவர் மேஜை டிராயரை சாவி போட்டுத் திறந்து, கொஞ்ச நாழி தேடினார்.

கூடத்தின் பக்கவாட்டில் இருந்த கதவுக்கு அப்பால் கொல்லை பசுமையாய் தளதளத்துத் தெரிந்தது. கொய்யாவும் , மாதுளையும் செடி கொள்ளாமல் காய்த்துத் தொங்கின.

கொல்லைக் குழாயில் தண்ணீரும் , காற்றும் கலந்து கொர் புர்ரென்று சத்தம் கேட்டது.

“தண்ணி விட்டுருக்கான் போலிருக்கே! ஒரு நா விட்டு ஒரு நா ஒரு மணி நேரம்தான் வரும். அவாளுக்குக் கேக்கலை போலிருக்கு! இருங்கோ ஒரு நிமிஷம் ! அவாட்ட சொல்லிட்டு வறேன்!”

அவன் கொல்லையையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்பல்லாம் காவிரி வருஷத்தில்  பெரும்பாலும்  மணலாய் இருந்தாலும் ஆயிரம் வருஷமா ஓடிண்டிருந்த காவேரியின் கருணையும் தாய்மையும் அங்கே காயாய் , கனியாய்  திரண்டிருந்தன என அவனுக்குத் தோன்றியது.

திரும்பி  காபி டம்ளர் டபராவோடு வந்தவர் இவனிடம் கொடுத்து விட்டு “ குடியுங்கோ!  அதுக்குள்ள நோட்டைக் கண்டு பிடிக்கறேன்” என்றார்.

“ இதோ கிடைச்சுடுத்தே”

பக்கங்களைத் திருப்பி “ இதோ! குத்தகைக் கணக்கு, தான் வாங்கிய கடன், திருப்பித்தந்த விவரம், தனக்கு  வர வேண்டிய கடன் எல்லாம் தனித் தனியா எழுதியிருக்கார் பாருங்கோ! என்ன பேரு? சதாசிவம் இல்லையா? “ என்று கையை நோட்டில் ஓட்டியபடி தேடினார்.

அவர் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்.

“ஊ ..ஹூம்! கடன் குடுக்கப் பட்டவா பக்கத்துல உங்க அப்பா பேர் இல்லையே” என்றார்.

“மாமா! நா இப்ப என்ன பண்றது? கொடுக்க வேண்டிய கடனை இல்லேங்கறேளே! அப்பா கடனைத் திருப்பிக் கொடுக்க முடியலயேன்னு ரொம்ப வருத்தப் பட்டுண்டே போனார் மாமா!”

கிட்டத்தட்ட அழுவது போல் சொன்னான்.

“நான் என்ன பண்றது சொல்லுங்கோ? எனக்கு உரிமையில்லாததை  நான் எப்படி எடுத்துக்க முடியும் ? அது நியாயமில்லையே! நீங்க வருத்தப் படாதீங்கோ” என்றார் சாமினாதன்.

“மாமா உங்க நியாயத்துல என் தர்மம் அடிபட்டுப் போறதே ! அது சரியா? “   அவரைக் கெஞ்சுவது போலப் பார்த்தான்.

தர்மு அப்பாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அவன் கைகளைத் தொட்டு

“அயாதீங்கோ மாமா! நீங்களே வச்சுக்கோங்கோ! பவ்வால்லை!” என்றது.

 

********************************************

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.