புதுயுகம்

எஸ். சுரேஷ் 

சிவசுப்ரமணியம் உரக்கச் சிரித்தார். என்னாச்சு உங்களுக்கு என்று கேட்ட மனைவி சீதாவிடம், அனுஷா என் ரிக்வெஸ்ட் ஆக்ஸெப்ட் செஞ்சிட்டா என்றார். எப்படி? நான் ஒரு ஃபேக் ஐடி உருவாக்கினேன். அந்த ஐடிலிருந்து ரிக்வெஸ்ட் அனுப்பிச்சேன். அவ ஆக்ஸெப்ட் செஞ்சிட்டா. எதுக்குங்க நம்ம பிள்ளைய நாம வேவு பாக்கணும்? உனக்கு இந்த புதுயுகத்தப் பத்தி ஒண்ணும் தெரியாது. நம்ம காலத்துல பசங்க பேரண்ட்ஸ்வீட்லையே இருந்து படிச்சு வேலைக்கு போனாங்க. அவங்க என்ன செய்யராங்கன்னு ஓரளவுக்கு தெரியும். நல்லது கெட்டது சொல்ல முடிஞ்சிது. இப்போ பார். நம்ம பெண் காலேஜுக்கு கான்பூர் போனா, மேல்படிப்புக்கு அமெரிக்க போனா. இப்போ பெங்களூர்ல வேல பண்றா. அவளப் பத்தி நமக்கு ஒண்ணும் தெரியல. சோசியல் மீடியா வழியாதான் அவ என்ன பண்றான்னு தெரிஞ்சிக்கணும். எனக்கு என்னமோ இது சரின்னு படலைங்க. உங்க வேலைக்கு நடுவுல இது எதுக்கு?. நீ கவலப்படாத. நான் பாத்துக்கறேன். அவர் ஒரு பெரிய கம்பெனியில் சீ.எஃப்.ஓவாக இருந்தார். மும்பை மெரின் ட்ரைவில் பல்லடுக்கு குடியிருப்பில் – அரபிக்கடலைப் பார்க்க தோதாக – பத்தாவது மாடியில் கம்பெனி ஃப்ளாட்டில் குடியிருந்தார். அவர் மகள் அனுஷா கான்பூர் ஐ.ஐ.டியில் படிப்பு முடித்து, அமெரிக்காவில் எம்.பி.ஏ பட்டம் பெற்று, பெங்களூரில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருக்கிறாள். அவளுக்கு முப்பது வயதாகியும் இன்னும் திருமணமாகாமல் இருப்பது பெற்றோருக்கு கவலையாக இருந்தது.

தினமும் காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்துவிட்டு கையில் காஃபி கோப்பையுடன் அரபிக்கடலைப் பார்க்கும் சிவசுப்ரமணியம் இப்பொழுது காஃபி கோப்பையுடன் மொபைலைப் பார்க்க ஆரம்பித்தார். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என்று எல்லா இடத்திலும் ஒரு பெண்ணின் பெயரில் ஃபேக் ஐடி தயார் செய்து அனுஷாவைப் பின் தொடர ஆரம்பித்தார். அனுஷா இன்ஸ்டாக்ராமில் அதிகம் போஸ்ட் செய்வதால், முதலில் இன்ஸ்டாக்ராமைப் பார்க்க ஆரம்பித்தார். அவள் போஸ்ட் செய்யும் புகைப்படங்களை பார்த்தார். அவற்றுக்கு யாரெல்லாம் லைக் போடுகிறார்கள் என்று பார்த்தார். யாரெல்லாம் கமெண்ட் எழுதுகிறார்கள் என்று பார்த்தார். யாருடன் அனுஷா அதிகமாக உரையாடுகிறாள் என்பதை கூர்ந்து நோக்கினார். ஆண்கள் யாருடனாவது அவள் உரையாடினால் அவன் இன்ஸ்டாக்ராம் பேஜுக்கு சென்று அவன் எப்படிப்பட்டவன் என்பதை பார்த்தார். இவை எல்லாம் செய்ய அவருக்கு தினமும் காலையில் ஒரு மணி நேரம் தேவைப்பட்டது. இந்தப் பழக்கம் மெதுவாக இரவிலும் தொடர்ந்தது.  இரவிலும் ஒரு மணி நேரம் இதற்காக செலவிட்டார். உங்களுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு என்று சொன்ன சீதாவை பார்த்து நாளைக்கு சன்டே. நான் என்ன கண்டுபிடிச்சிருக்கேன்னு சொல்றேன். நீ அசந்துபோயிடுவ.

அடுத்த நாள் மதிய உணவிற்கு பிறகு, சோஃபாவில் சீதாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, மொபைலை கையிலெடுத்தார். இன்ஸ்டாக்ராம் ஓபன் செய்து அனுஷாவின் பேஜுக்கு சென்றார். அனுஷா எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருந்த படங்களை ஒவ்வொன்றாக காண்பிக்க ஆரம்பித்தார். பல படங்களில் அனுஷா தனியாக இருந்தாள். #ootd என்று ஏதோ எழுதியிருந்தது. இது நேஹாதானே? ஆமாம். பல படங்களில் நேஹாவும் கூட இருந்தாள். நேஹா அனுஷாவின் நெருங்கிய தோழி. இருவரும் முதல் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்தவர்கள். அவளும் கான்பூர் ஐ.ஐ.டியில் படித்தாள். பிறகு அவளும் அமெரிக்கா சென்று படித்துவிட்டு இப்பொழுது பெங்களூரில் அனுஷாவின் ரூம்மேட்டாக இருக்கிறாள்.சீதா பார்த்த அந்த படத்தில் அனுஷா குட்டை முடியுடன் ஜீன்ஸ் மற்றும் டீ-ஷர்ட்டில் காணப்பட்டாள். நேஹா அடர்த்தியான தலைமுடியுடன் சல்வாரில் இருந்தாள். நம்ப பொண்ணும் நேஹா போல் முடி வளர்த்து நல்ல டிரஸ் போடலாம் எதுக்கு இது போல் டிரஸ் செய்யணும்? நேஹா முக்கியமில்லை. நான் இப்போ உனக்கு காமிக்கப் போற ஃபோட்டோதான் முக்கியம்.அவர் அனுஷா-நேஹா படத்தைத் தள்ளினார். அடுத்த படம் வந்தது. அதில் அனுஷா ஒரு ஆணின் தோளின் மேல் கை போட்டு நின்றுகொண்டிருந்தாள். அவன் பார்ப்பதற்கு அழகாக இருந்தான். கண்ணாடி போட்ட உருண்டை முகம், அடர்த்தியான சுருள் தலைமயிர். நீல வண்ணத்தில் டீ ஷர்ட். இருவரும் ஒரு மோட்டார்பைக் மேல் சாய்ந்து கொண்டிருந்தார்கள். யாருங்க இந்தபிள்ள? சிவசுப்ரமணியம் சிரித்தார். இதுக்கு தான் நான் வேவு பாக்குறேன். இந்த பிள்ள பேரு சுதீர். அவன் ஒரு கூர்கி. அப்படின்னா? கர்நாடகாவில இருக்கற கூர்க் மாவட்டத்திலேர்ந்து வரான். நல்ல வசதியான குடும்பம். ஏக்கர் கணக்குல அவங்களுக்கு காஃபி எஸ்டேட் இருக்கு. இவன் அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ள. எல்லா சொத்தும் இவனுக்குதான். இந்த கணக்கு பாக்கற புத்தி உங்களவிட்டு போகாது. நம்ம பெண் இவன லவ் பண்ணுதா?இங்க பார் இந்த ஃபோட்டோ கீழ என்ன எழுதியிருக்கான்னு. ‘#MyClosestCompanion” லவ் இல்லைனா மிக நெருக்கமான நண்பன்ணு சொல்லுவாளா? அவங்க போஸ் பாத்தாலே அவங்க லவ்வர்ஸ்தான்னு உனக்கு தெரியலையா? ஏங்க, நம்ம பக்கம் ஆளுங்க பார்த்தா ஏதாவது சொல்லப்போராங்க. அதுக்குத்தான் அவ ப்ரோஃபைல் லாக் செஞ்சிருக்கா. என்ன தவிர யாருக்கும் தெரியாது விடு. இவனதான் கல்யாணம் கட்டிப்பாளா? எனக்கு என்ன தெரியும் ஆனா அவ இவன கட்டிக்கிறதா இருந்தா எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. என்னங்க அப்படி சொல்றீங்க. நம்ப மனுஷங்க என்ன சொல்லுவாங்க. அவங்க ஜாதி என்ன. அவங்க பழக்க வழக்கம் என்ன. எப்படிங்க அப்டி ஒண்ணுமே தெரியாம ஒத்துக்க முடியும்? சீதா, காலம் மாறிப்போச்சு. இப்போ நம்ப பிள்ளைங்க கல்யாணம் கட்டிட்டா போதும்ன்னு எல்லாரும் இருக்காங்க. பாக்க அழகா இருக்கான். நல்ல பணக்கார குடும்பம். நல்லா படிச்சிருக்கான். அனுஷாவுக்கு அவன பிடிச்சிருக்கு. இதுக்கு மேல என்ன வேணும். சீதா மௌனமானாள். சிவசுப்ரமணியம் ஒவ்வொரு படமாக தள்ளிக்கொண்டு வந்தார். பல படங்களில் அனுஷாவும் சுதீரும் இணைந்திருந்தார்கள். இணக்கமாகவும் இருந்தார்கள். அனுஷா மற்றும் சுதீர் இருக்கும் படங்களை மட்டுமே பார்த்தார்கள். மற்ற படங்களை எல்லாம் அவர்கள் அதிகம் கவனிக்கவில்லை.

இப்பொழுதெல்லாம் தினமும் இரவில் ஒரு அரை மணி நேரம் அனுஷா வலையேற்றும் படங்களைசிவசுப்ரமணியன் சீதாவுக்கு காட்டுகிறார். பல நாட்கள் அனுஷா தனியாகவோ, நேஹாவுடனோ இருக்கும் படங்கள் வருகின்றன. சில நாட்கள் சுதீரும் வருகிறான். அவன் வரும் படங்களிலெல்லாம் அனுஷா அவன் தோல் மேல் கை போட்டபடி நிற்கிறாள். என்னங்க நாம சைவம், அந்த பிள்ள அசைவமா இருந்தா? இருந்தா என்ன? அவன் கூர்கி. அசைவமாதான் இருப்பான். இந்த காலத்துல எல்லோரும் அசைவம் சாப்பிடராங்க. இதெல்லாம் பெருசா எடுத்துக்கக் கூடாது. சிவசுப்ரமணியம் படத்தை நகர்த்தினார். அடுத்த படத்தில் அனுஷா, நேஹா, சுதீர் மற்றும் வேறொரு ஆண் இருந்தார்கள். அனுஷாவின் தோளில் நேஹா சாய்ந்திருந்தாள், நேஹா சுதீர் தோளில் சாய்ந்திருந்தாள். சுதீர் அருகில் இருந்த ஆணின் தோளில் கையை போட்டுக்கொண்டிருந்தான். எல்லோரும் வலது கையை நீட்டி வெற்றி சைகையை காட்டிக்கொண்டிருந்தனர். எல்லோர் முன்னேயும் அவர்கள் சாப்பிடும் பண்டம் இருந்தது. சீதா இதை பார்ப்பதை பார்த்த சிவசுப்ரமணியம் சுதீர் முன் இருந்த திண்பண்டத்தை கவனித்தார். பின்பு படத்தின் கீழே என்ன எழுதியிருக்கிறது என்பதை படித்தார். “எஞ்ஜாயிங்க் மை பந்தி கறி”. போர்க். பன்றிக்கறி!! சிவசுப்ரமணியம் இதை எதிர்ப்பார்க்கவில்லை. சீதாவின் முகம் மாறி இருப்பதை கவனித்து, ஏதோ சொல்ல வாயெடுத்தார் ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. சீதாவின் முகத்தில் அவருக்கு புரியாத உணர்ச்சி ஒன்று குடிகொண்டிருந்தது. சீதா மெல்லிய குரலில் சொன்னாள் இது நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராதுங்க. அவள் குரலை கேட்டவுடன் சிவசுப்ரமணியமுக்கு பயம் எடுத்தது. மௌனமாக இருந்தார்.

அன்று இரவு அவருக்கு தூக்கம் வரவில்லை. சீதாவின் குரல் அவர் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. ஏசி ரீங்காரமும், கடிகாரத்தில் முள் நகரும் ஓசையும் இரவின் மௌனத்தில் துல்லியமாக அவருக்கு கேட்டன. விட்டத்தை முறைத்து பார்த்தார். சீதா ஏன் இப்படி பயப்படுகிறாள்? அவள் தம்பி, இப்பொழுது அமெரிக்காவில் வசிக்கிறான், மாட்டுக்கறி தின்கிறான். அது சீதாவுக்கு தெரியாது. அவன் இந்தியா வரும்பொழுது வெறும் சைவம்தான் சாப்பிடுவான். அமெரிக்காவில் அவன் சாப்பிடாத ஜந்து இல்லை. இப்பொழுது இந்த பிள்ளை பன்னிக்கறி சாப்பிட்டால் என்ன தவறு? சீதாவுக்கு இந்த புதிய உலகம் புரியவில்லை. இளைஞர்கள் எப்படி இருப்பார்கள், எப்படி ஒருவருடன் ஒருவர் பழகுகிறார்கள், அவர்களில் லட்சியம் என்ன? ஆசைகள் என்ன? இவை எதுவும் சீதாவுக்கு தெரியாது. அவள் உலகம் மாறவில்லை என்ற நினைப்பில் இருக்கிறாள். வெறும் வார இதழ்களை படித்துக்கொண்டும், சீரியல் பார்த்துக்கொண்டும் இருந்தால் இந்த புது உலகம் புரியாது. இதற்கு நாமும் நம் பிள்ளைகளைப் போல் சோசியல் மீடியாவில் சேர வேண்டும். நான் அதை செய்கிறேன். என்னால் அனுஷாவின் முடிவை ஏற்றுக்கொள்ளமுடிகிறது. சீதாவால் முடியவில்லை. அவளை எப்படியாவது சமாதானப்படுத்தவேண்டும்.

அடுத்த நாள் முதல் சீதா படங்களை பார்க்க மறுத்தாள். எனக்கு வேணாங்க என்றாள். சிவசுப்ரமணியம் சுதீரை தினமும் உற்றுப்பார்தார். பிள்ளை அழகாகதான் இருக்கிறான். நல்ல சுருள் முடி,ஆப்பிள் போல் சிவப்பு, ஸ்டைலிஷ் உடை உடுத்துகிறான், முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகை தவழ்கிறது. இவனை எதற்கு மறுக்க வேண்டும். எவ்வளவோ உறவுக்கார பிள்ளைகள் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொள்ளவில்லையா? ஒருத்தி முஸ்லிமை கல்யாணம் கட்டியிருக்கிறாள். நாம் ஏன் இதற்கு பயப்படவேண்டும். சிவசுப்ரமணியம் சீதாவின் மனதை மாற்றப் பார்த்தார் ஆனால் சீதாவோ ஐயோ. உங்களுக்கு இதெல்லாம் புரியாதுங்க என்றாள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அவள் இப்பொழுதெல்லாம் இறுக்கமானமுகத்துடன் காணப்பட்டாள். சிரிப்பதையே மறந்துவிட்டிருந்தாள். அனுஷாவுடன் பேசும்பொழுதும் அவள் குரல் தீனமாக ஒலித்தது. அம்மாவுக்கு என்ன? ஏன் டல்லா இருக்காங்க? உன்னை பற்றி கவலைதான். அனுஷா அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை.

இரண்டு வாரங்கள் கழித்து அனுஷா, நேஹா, சுதீர் மற்றும் சில நண்பர்கள் சுதீரின் காஃபி எஸ்டேட்டுக்கு சென்று அங்கு ஐந்து நாட்கள் தங்கினார்கள். தினமும் அனுஷா, நேஹா, சுதீர் ஆகியோர் படங்களை இன்ஸ்டாக்ராமில் வலையேற்றினார்கள். சிவசுப்ரமணியம் தினமும் எல்லாவற்றையும் பார்த்தார். இந்த ட்ரிப்பில் அனுஷாவுக்கும் சுதீருக்குமான நெருக்கம் அதிகமானது போல் அவருக்குப் பட்டது. அதிகாலை வேளையில், இலைகள் நடுவிலிருந்து ஊடுருவி வரும் சூரிய கிரணங்கள் அவர்கள் மேல் விழ, இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். வேறொரு இடத்தில் ரோஜா செடிகள் சூழ இருவரும் நடுவில் நின்றுகொண்டு போஸ் கொடுத்தார்கள். இப்படியாக பல புகைப்படங்கள் இருந்தன. எதையும் சீதா பார்க்க மறுத்தாள்.

இந்த ட்ரிப் முடிந்தவுடன் அனுஷா பெங்களூரு சென்றுவிட்டாள், நேஹா மும்பைக்கு வந்தாள். வந்த முதல் நாளே இவர்கள் வீட்டுக்கு வந்தாள். இவர்கள் வீட்டில் வளர்ந்த பெண் என்பதால் உரிமையுடன் சீதாவிடம், ஆண்ட்டி, ஒரு டீ. சுதீர் எஸ்டேட்ல காஃபி குடிச்சி குடிச்சி போர் அடிச்சிடிச்சி. சிவசுப்ரமணியம் அவளுடன் பேச ஆரம்பித்தார். ஃபுல் எஞ்சாய்மெண்டா? எஸ் அங்கிள். அவன் எஸ்டேட் குட்டான்னு ஒரு எடத்துல இருக்கு. பெரிய எஸ்டேட். அருமையான எஸ்டேட். நானும் அனுஷாவும் எஸ்டேட்ட சுத்தி பாத்து ஷாக் ஆயிட்டோம். விதவிதமான மரங்கள். வனிலா இருக்கு, ஆரஞ்சு இருக்கு,பாக்கு மரம் இருக்கு, பெப்பர் இருக்கு. தென்னை, வாழையெல்லாம் கேக்கவே வேணாம். எவ்வளவோ விதமான பூக்கள். தினமும் காலைல பாக்கணுமே அங்கிள். இங்கேல்லாம் பாக்கவே முடியாத பறவைகள் எவ்வளவோ வருது. நானும் அனுஷாவும் தினமும் காலைல அஞ்சு மணிக்கே எழுந்து, குளிச்சு, பறவைகளைப் பாக்க வெளியே வந்திடுவோம். காலைல அந்த பனில நாங்க ரெண்டும் பேரும் நடந்து போவோம். அது ஒரு டிவைன் எக்ஸ்பீரியன்ஸ் அங்கிள். எஸ்டேட் முதல் முறையாக பார்த்திருப்பாள் போல். அந்த மகிழ்ச்சி அவள் பேச்சில் தெரிகிறது என்று நினைத்துக்கொண்ட சிவசுப்ரமணியம் இஸ் சுதீர் எ குட் பாய்?என்று கேட்டார். ரொம்ப நல்லவன் அங்கிள். நானும், அனுஷாவும் ஏதாவது அட்வைஸ் கேக்கணும்னா அவன் கிட்டதான் போவோம். வெரி நான்-ஜட்ஜ்மெண்டல். அப்பொழுது சீதா டீயுடன் வந்தாள். அவளுக்கு நான்-ஜட்ஜ்மெண்டல்என்றால் என்ன என்று தெரிந்திருக்காது என்று சிவசுப்ரமணியம் அவன் யாரை பற்றியும் எந்த முன்முடிவும் எடுக்கமாட்டானாம். அவங்க அவங்க அவங்களுக்கு பிடித்ததை செய்யட்டும் என்று விட்டுவிடுவானம் என்று நீண்ட உரை ஒன்றை கொடுத்தார். சீதா தலையசைத்தாள். ஆண்ட்டி, டீ சூப்பரா இருக்கு. சீதா கஷ்டப்பட்டு சிரிப்பது போல் சிவசுப்ரமணியமுக்கு பட்டது. சோஃபாவில் நன்றாக சாய்ந்துகொண்டு சுதீர் பற்றியும், அவளும் அனுஷாவும் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை பற்றியும் விரிவாக நேஹா சொல்லிக்கொண்டிருந்தாள். குட்டாலிருந்து அஞ்சு  கிலோமீட்டர் தூரத்துல வயநாடு. அது கேரளால இருக்கு. அங்கே பூக்கோடு லேக்ல நானும் அனுஷாவும் ரோ செஞ்சிட்டு போட்ல போனோம். எல்லோருமா திருநெல்லி கோவிலுக்கு போனோம். வழியில மூணு பெரிய யானை பார்த்தோம். கண் விரிய சொல்லிக்கொண்டிருந்தாள். சுதீர் நான்-வெஜ் சாபிடுவானா? உரக்கச் சிரித்தாள். அங்கிள், அவனால நான்-வெஜ் இல்லாம ஒரு நாள் கூட இருக்க முடியாது. பந்தி கறி அவனோட ஃபெவரிட். மதியம் இங்க சாப்பிடு. வேணாம் ஆண்ட்டி. நான் இன்னொரு ஃப்ரெண்ட்ட பாக்கணும். நாளைக்கு முடிஞ்சா  வரேன். இல்லைனா பை. அவள் சென்ற பிறகு அவர் சீதாவை பார்த்தார். அவள் முகம் இன்னும் அதிகம் இறுகியிருந்தது போல் அவருக்கு பட்டது. பிள்ள நல்ல பிள்ளைதான் போல் இருக்கு என்று சொன்னார். சீதா ஏதும் பதிலளிக்காமல் சமையலறைக்குள் சென்றாள்.

நானும் சுதீரும் அடுத்த வாரம் முன்பைக்கு வரப்போறோம். உங்களோட பேசணும். என்ன பேசணும். வந்து சொல்றேன். ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்பவா? வேணாம். நாங்க டாக்ஸி புடிச்சு வறோம். செய்தியை கேட்டவுடன் சீதா ஆழ ஆரம்பித்தாள். இதை எதிர்பார்க்காத சிவசுப்ரமணியம் அதிர்ச்சி அடைந்தார். இத பாரு. என் பொண்ணுக்கு யார பிடிக்குதோ அவங்களுக்கு கல்யாணம் கட்டிக்கொடுப்பேன். யார் என்ன சொன்னாலும் எனக்கு பரவாயில்லை. சீதா தலையை இல்லை என்பது போல் ஆட்டினாள். இல்லைங்க. இது சரிப்பட்டு வராது. நீங்க புரிஞ்சிக்கமாட்டீங்க. எனக்கு எல்லாம் தெரியும். உன் அழுகையை நிறுத்து. சிவசுப்ரமணியம் மாடியிலிருந்து அபார்ட்மெண்டு கேட்டை பார்த்துக்கொண்டிருந்தார். அனுஷா எந்த நிமிடமும் வரலாம். வாசலில் ஏதாவது வண்டி வந்து நின்றாலே அவருக்கு உற்சாகம் கூடியது. அனுஷா தான் காதலை பற்றி சொல்லப்போகிறாள். அவளுக்கு டென்ஷன் அதிகம் இருக்கும். நான் சரி என்றவுடன் அவள் குஷியில் சிரிப்பாள். அந்த சிரிப்பை பார்க்கவேண்டும். தன் அப்பா இந்த காலத்துக்கு தகுந்தாற்போல் மாறிவிட்டார் என்று அவள் உணர்வாள். அப்பா மேல் அன்பும் மரியாதையும் கூடும். சீதா தான் அழுவாள். சுதீர் முன் அவள் அழுதால் அவன் என்ன நினைத்துக்கொள்வான். சமாளிக்கலாம்.

அரை மணி நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்த பிறகு அவர் எதிர்பார்த்த நிகழ்வு நடந்தது. அனுஷாவும் சுதீரும் டாக்ஸியைவிட்டு இறங்கினார்கள். இரண்டு அடி எடுத்து வைத்த பிறகு அனுஷா சட்டென்று நின்றுவிட்டாள். வேணாம் என்பது போல் தலையை ஆட்டினாள். அவள் அருகே சென்ற சுதீர் அவள் கையை பற்றிக்கொண்டான். அனுஷா அவன் தோல் மேல் சாய்ந்தாள். அவன் அவள் காதில் ஏதோ சொன்னான். சரி என்பது போல் தலையை ஆட்டிவிட்டு அவன் கைகளை அவள் இறுக்கமாக பற்றிக்கொள்ள இருவரும் மறுபடியும் நடக்க ஆரம்பித்தனர். சிவசுப்ரமணியம் லிப்ட் இருக்கும் இடத்தில் நின்றார். கதவு திறந்தவுடன் அவரைக் கண்ட அனுஷா, ஹாய் டாட் என்றாள் ஆனால் முகத்தில் மகிழ்ச்சி இல்லாதது சிவசுப்ரமணியனுக்கு வருத்தம் அளித்தது.. மீட் சுதீர். ஹலோ அங்கிள். ஹலோ. கம் இன். எல்லோரும் வீட்டுக்குள் நுழைந்து சோஃபாவில் உட்கார்ந்தார்கள். டிவியில் ஏதோ ப்ரோக்ராம் ஓடிக்கொண்டிருந்தது. டிவியை அணைத்தார். அம்மா எங்க? சமையலறையில் இருக்கா. வருவா. சரி ஏதோ பேசணும்னு சொன்னியே? ஆமாம் டாட் என்று சொல்லிவிட்டு சுதீரைப் பார்த்தாள். சிவசுப்ரமணியத்திற்கு சிரிப்பு வந்தது. நான் எப்படியும் சரியென்று சொல்லப்போகிறேன். இவள் ஏன் தவிக்கிறாள்? பயப்படாமல் சொல்ல வேண்டியதை சொல் என்று சுதீர் ஆங்கிலத்தில் அவளிடம் சொன்னான். சமையலறையிலிருந்து அழுகை சத்தம் கேட்டது. சிவசுப்ரமணியம் அந்த திசையை நோக்கி முறைத்தார். அனுஷா சுதீர் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு, நான் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்கேன். சிவசுப்ரமணியம் புகத்தில் புன்னகை மலர்ந்தது. தலையை குனிந்தவாறு, நான் நேஹாவ… சமையலறையில் அழுகை சத்தம் வலுப்பெற்றதை அவர் கவனிக்கவில்லை.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.