Author: பதாகை

எதற்காக எழுதுகிறேன்? – கலைச்செல்வி

கலைச்செல்வி

sakkai

எதற்காக என்பதை விட நான் எப்போது எழுத தொடங்கினேன் என்பதை யோசிக்கிறேன்.  பிறப்பும் கல்வியும் நெய்வேலி நகரத்தில். வாசிப்பிற்கு நேரம் செலவிட தோதான வாழ்க்கையமைப்பு வாய்க்கப் பெற்றிருந்தது. ஆனாலும் அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அறிமுகமானவை அமுதசுரபி, மஞ்சரி போன்றவைதான். பிறகு உயர்கல்வி, திருமணம், அரசாங்கப்பணி, குழந்தைகள் என்ற பரபரப்பான வாழ்க்கை எனக்கும் தொற்றிக் கொண்டது. எனக்கு பணிப்புரிவதில் விருப்பம் இருப்பதில்லை. அப்பா சொல்கிறார்.. நான் செய்கிறேன்.. என்பதைத் தாண்டி வேறேதும் வேலைக்கான தேர்வுகள் குறித்து எனக்கு தோன்றியதில்லை. வங்கித்தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனாலும் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. அடுத்தடுத்த இரண்டு அரசு தேர்வுகளில் வெற்றி பெற, இதற்கிடையே திருமணம் நடைபெற ஏதோ ஒரு வேலைக்குள் என்னை முழ்கடிக்க வேண்டியிருந்தது.

எவ்வித விருப்பமும் அற்று கடமைக்கு சென்றேன் கடமையாற்ற. என் நேரத்தை என் விருப்பப்படி செலவிட முடியாத நிலை எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வியை அளித்தது போன்ற உணர்வு. விடுப்புகளே எனக்கு கைக்கொடுத்தன. கிட்டத்தட்ட முழு மொத்த பணிக்காலத்துக்கும் தேவைப்படும் விடுப்பை எடுத்து முடித்திருந்தேன். குழந்தைகள் வளர்ப்பில் ஆழ்ந்துப் போனதில் வேறெதும் தோன்றாத நிலை. புத்தகங்களை கையில் எடுப்பதேயில்லை. ஆனாலும் விட்டகுறை தொட்டக்குறையாக புத்தகக் கண்காட்சிகளுக்கு செல்ல தவறுவதில்லை. ஒருவேளை குடும்பத்தோடு வெளியே செல்ல ஒரு இடமாக அதை நான் கருதியிருக்கலாம். பெண்களை நோக்கிய பொதுபார்வையாக முன் வைக்கப்படும் சமையல் புத்தகமும் வாங்கத் தோன்றாது. கோலப்புத்தகங்களும் வாங்கத் தோன்றாது. தால்ஸ்தோய், தஸ்தாயெவஸ்க்கி என்றும் அலையத் தோன்றாது. வாஸந்தி, அனுராதாரமணன், சுஜாதா இவர்களின் புத்தகங்களை பார்ப்பேன், வாங்கும் எண்ணமின்றி. என் கணவர் இப்புத்தகங்களை விரும்புகிறேனோ என்று எண்ணி அதை பில்லுக்கு அனுப்பி விடுவார். வாங்கிய புத்தகங்களைத் தொடும் எண்ணமும் தோன்றுவதில்லை.

காலம் நல்லப்படியாகவே நகர்ந்தது. ஆயினும் மனதில் ஏதோ ஒரு வெறுமை. தேடல்களற்ற வாழ்க்கை எதையோ கைகளிலிருந்து அடித்துச் செல்வது போலிருந்தது. வழக்கமான வாழ்க்கைச் சுற்றுப்பாதைக்குள் மனம் திருப்திக் கொண்டாலும் எனக்கென ஒரு பாதை தேவைப்பட்டதை… அல்லது என் மனம் தேடுவதை.. நான் புரியாமல் உணர்ந்துக் கொண்டிருந்தேன். சிறு பள்ளியொன்றை ஆரம்பித்தோம். அதில் நிறைய புதுமைகளை புகுத்த ஆர்வம் கொண்டது என் மனம். காலை வழிபாடு முதல் பள்ளி முடியும் தருணங்கள் வரை புத்தம்புதிதான செய்திகளுடன் கல்வி கற்பித்தோம். அதற்கான எண்ணங்களை எழுத்தாக்கும் போது, நான் எழுதியதை திரும்ப வாசித்த போது நன்றாக எழுதியிருப்பதாக தோன்றியது. ஆனாலும் அதைத் தாண்டி வேறேதும் செய்ய தோன்றவில்லை. அதிலும் குடும்பம், அலுவலகம் தாண்டி குறைவாகவே நேரத்தை செலவிட முடிந்தது.

தேடல்கள் ஓயவில்லை என்பது புரிந்தது. எதுவும் முழுமையடையாமலே இருப்பதுபோல தோன்றும். எனக்குள் என்னை சமாளிப்பதே பெரும் பிரச்சனையாக இருந்தது. சுயபச்சாதாபம் ஆட்கொள்வதில் அழுகை முந்திக் கொண்டு வந்து விடும். சிந்தனைகள் நிறுத்த முடியாமல் தோன்றிக் கொண்டேயிருந்தன. அந்த நேரம் நிறைய வாசிக்கவும் தொடங்கியிருந்தேன். அசோகமித்ரன், ல.சா.ரா, கு.பா.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், நா.பிச்சமூர்த்தி, அம்பை, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஆ.மாதவன், சா.கந்தசாமி என்றும்  கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஆல்பெர் காம்யு, மாப்பசான், இடாலோகால்வினோ, விர்ஜினாஉல்ஃப் எனவும் கலந்து கட்டி வாசிக்க தொடங்கினேன். தமிழ் இலக்கிய வரலாறு, சங்க இலக்கியங்கள், சேரர், சோழர் வரலாறு என தமிழார்வமும் வந்தது. சுற்றுலாக்களை கூட அதையொட்டி அமைத்துக் கொள்ளத் தளைப்பட்டேன். ஆனால் பகிரவோ பேசவோ யாரும் இருக்கவில்லை.

தனிமையுணர்வு என்னை ஆக்ரமிக்க தொடங்க, அந்த அழுத்தத்தில் முதன்முதலாக நான் பேச வந்ததை.. அல்லது நினைத்ததை.. எழுத்தாக்கினேன். அது கதையென்று நினைத்து எழுதவில்லை. ஆனால் கதை போன்ற தோற்றமிருந்தது.  அந்த நேரம் பார்த்து தினமணி நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2012க்கான சிறுகதைப் போட்டி அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதை அனுப்பி பார்ப்போமே.. என்று அனுப்பினேன். அந்த முதல் கதையே இரண்டாவது பரிசு பெற்றது. ஆனந்தம் என்பதை விட அதிர்ச்சிதான் அதிகமிருந்தது. கதை என்பது இத்தனை சுலபமான ஒன்றா என்றெல்லாம் கூட தோன்றியது சிறுப்பிள்ளைதனமாக. நான் பிறந்து வளர்ந்த அதே ஊரில் பரிசு, பாராட்டு எனக் கிடைத்தபோது எழுதும் உத்வேகம் கூடிப் போனது. அந்நேரம் சிற்றிதழ்கள் அறிமுகமாகியிருந்தன. கணையாழி, உயிரெழுத்து என் கதைகளை வெளியிட ஏதோ எழுத வருகிறது என்று எண்ணிக் கொண்டேன். செய்தித்தாளில் என் பெயருக்கு முன்னிருந்த எழுத்தாளர் என்ற அடைமொழி புதிதாக தோன்றியது. அடுத்த ஆண்டு இதே தினமணி சிறுகதைப் போட்டியில் (2013) புனைப்பெயரில் (சுப்ரமணியன்.. எனது தகப்பனார் பெயர்) எழுதி அனுப்பினேன். அக்கதைக்கு முதல் பரிசு வழங்குவதாக சேதி சொன்னார்கள். மீண்டும் நெய்வேலி. மீண்டும் பரிசு. செய்தித்தாளில் வண்ணப்புகைப்படம். மிக அதிக விவேரணைகளோடு தினமணிக்கதிரில் கதை வெளியானது. நிறைய கடிதங்களும், தொலைப்பேசி அழைப்புகளும் வந்தன.  பிறகு வாசிப்பிலிருந்து அதிமேதாவித்தனமாக எழுத்தையே நாடியது மனம். இப்போது நினைத்தால் சற்று கூச்சமேற்படுகிறது.

எழுத்திலிருந்து மீண்டு(ம்) வாசிக்கும்போது அவை முற்றிலும் புதியதொரு களத்தை எதிர்க்கொள்வது போல தோன்றியது. எழுத்தாளர்கள் மீது முன்பைக் காட்டிலும் மிக அதிக பக்தியும் பிரேமையும் தோன்றியது. ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்போது எனக்கு எந்த எழுத்தாளரையும் தெரியாது.

தேடலின் நீண்ட வெளி குறைந்துக் கொண்டே வந்தது. நடந்து கிடந்து அதனை களைந்து விடும் நம்பிக்கை முனைப்பாக வெளிப்பட எனது பயணம் தொடர்ந்துக் கொண்டுள்ளது.

(திருச்சியில் வசிக்கும் கலைச்செல்வி.. கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் கொண்டவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட அவரது சிறுகதைகள் பல்வேறு பத்திரிக்கைகளில் பிரசுரமாகி பல பரிசுகளும் பெற்றுள்ளன. வலி என்ற பெயரிலான அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று காவ்யா பதிப்பதகத்தாராலும், சக்கை என்ற பெயரிலான அவரது முதல் நாவல் என்சிபிஹெச் பதிப்பகத்தாராலும் 2015 ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.  திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்ற சக்கை, புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லுாரியில் பி. ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.)

ஏன் எழுதுகிறேன் – வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்– 

நான் ஏன் எழுதுகிறேன்? நீண்ட காலமாக அரட்டைக் குழு நண்பர்கள் சிலர் நான் ஏன் எழுதுவதில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். சரி, கேட்கிறார்களே என்று எழுத ஆரம்பித்தால் நீங்கல்லாம் ஏன் எழுதறீங்க, சொல்லுங்கன்னு பதாகைக்காரர்கள் கேட்டு விட்டார்கள். இப்ப நாம் என்ன நிறைய எழுதிட்டோம்னு இப்படிக் கேக்கறாங்கன்னும் தோணாம இல்ல. ஆனா கேள்வின்னு வந்தாச்சு, பதில் என்னவா இருக்கும்ன்னு யோசித்துப் பார்க்கிறேன்.

உண்மையில் இந்தக் கேள்வி புனைவு எழுதுபவர்களுக்குதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், கட்டுரைகள் எழுதுவது என்ற இடம் நேர்ப்பேச்சில் கருத்து கூறுவதிலிருந்து ஒரு எட்டு எடுத்து, தட்டச்ச ஆரம்பித்தால் வந்து விடுகிறது.. நம் முகத்திற்கு எதிரே இருக்கும் 4 அல்லது 5 பேரிடம் சொல்வதை எவ்வளவு பேருக்கு சொல்கிறோம் என்று தெரியாமல் சொல்லிக் கொண்டிருப்பதே எழுத்து என்ற அளவுதான் இரண்டுக்கும் வித்தியாசம்.. ஏன் சொல்கிறோம் என்பதற்கு என்ன காரணமோ அதேதான் ஏன் எழுதுகிறோம் என்பதற்கும் சொல்ல முடியும். ஆனால் புனைவு அப்படியல்ல என்று தோன்றுகிறது. மிகச் சிரமப்பட்டு ஒரு நிகர் உலகை உருவாக்கி, பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து உணர்வுகளின் வண்ணம் சேர்த்து… .அப்பப்பா, நம்மால் ஆகப்பட்ட காரியம் அல்ல அது.

இன்னொரு கோணத்தில், சுற்றியிருக்கும் உலகின் நடவடிக்கைகளை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கும் ஒருவர் எழுதாமல் இருப்பதுதான் கடினம் என்று தோன்றுகிறது. உலகின் போக்கு குறித்த எதிர்வினைகள் எப்போதும் கணத்துக்குக் கணம் மனதில் தோன்றிய வண்ணமே இருந்தாலும் அவற்றைத தொகுத்து, சீராக அடுக்கி, எழுத்தில் கொண்டு வருவது எல்லோர்க்கும் உடனடியாக வருவதில்லை. சிலருக்கு தங்கள் பதின்ம வயதிலேயே இந்தக் கலை வசப்பட்டு விடுகிறது. என் போன்ற சிலருக்கு அதிக காலம் பிடிக்கிறது ஆனால் ஏதோ ஒரு சமயத்தில், ஒரு அசோகமித்திரன் கதையில் ஒரு பாத்திரத்துக்கு சட்டென்று காரில் கிளட்ச் போடுவது பிடிபடுவது போல இது நிகழ்ந்து விடுகிறது. அதற்கப்புறம் எழுதாமலிருப்பதே உண்மையில் சிரமம்.

பல சமயங்களில் எழுதுவதற்கு பிறரின் தூண்டுதலும் வழிகாட்டலும் தேவையாயிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில்,இவை இரண்டுக்குமான பழி இருவருக்கு உரியது, ஒருவர், சக நண்பர். அவர் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டினார். இன்றும் ஒவ்வொரு முறை பேசும்போதும், இப்ப என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க, என்று கேட்கத் தவறுவதில்லை. மற்றவர் ஜெயமோகன். அவருடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு, அவர் ஒரு விஷயத்தை எப்படி தொகுத்துச் சொல்கிறார் என்பதும், அந்தத் தொகுத்தலே அவரது எழுத்துக்கு அடிப்படையாக அமைவதையும் நேரில் பார்த்து என்னையறியாமல் உள்வாங்கியிருப்பது நான் எழுத உதவுகிறது என்று சொல்லவேண்டும்.

அப்புறம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை, நாம் எழுதினால் உலகம் என்ன நினைக்குமோ என்ற ஒரு லஜ்ஜை தடுக்கிறது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது வயதில் அது உதிர்ந்து, நான் உலகைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமாகிவிடுகிறது. அங்கே எழுத்து தொடங்கிவிடுகிறது.

தமிழில் தீவிர இலக்கியம் வாசிப்பவர்களுக்கு ஒரு பெரிய கஷ்டம், நாம் படித்த புத்தகத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளக்கூடிய நண்பரை நம் உடனடி வட்டத்தில் கண்டுபிடிப்பது. இதனால் இரண்டு வகையில் பாதிப்பு உண்டாகிறது. பகிர்ந்து கொள்ளுதலும் இல்லை புதிதாகத் தெரிந்து கொள்ளுதலும் இல்லை., அங்குதான் நாம் படித்த நல்ல புத்தகங்கள் குறித்து நிச்சயமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. நான் எழுதியவற்றில் பெரும்பான்மையும் புத்தகங்கள் பற்றியே. அவை மதிப்பீடா விமர்சனமா என்று வகைப்படுத்த நான் முயல்வதில்லை. .முன்னொரு சமயம், கணையாழியில், என்.எஸ். ,ஜெகன்னாதன் அவர்கள், உலகில் மனிதனின் சிந்தனைகள், பல துறைகளில் பெருகியபடியே உள்ளன, இவற்றையெல்லாம், தமிழ் மட்டுமே அறிந்த ஒருவருக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்று, கவலைப்பட்டார். உலக மொழிகளில் என்று இல்லை தமிழிலேயே வந்திருக்கும் ஏராளமான நல்ல புத்தகங்கள்கூட இன்னும் சரியான அறிமுகமோ, மதிப்புரையோ இல்லாமல் இருக்கின்றன. ஆகவே ஒரு குறைந்தபட்ச முயற்சியாக நான் படிக்க நேரும் நல்ல புத்தகங்கள் குறித்தாவது பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணமே எழுதுவதற்கு முக்கியமான காரணம். பிறகு கடந்த 6, 7 வருடங்களாக,, நாஞ்சில் நாடன், கோபாலக்ருஷ்ணன், சு. வேணுகோபால் இரா. முருகவேள் போன்ற எழுத்தாளர்களின் அறிமுகமும் நட்பும், கோவை த்யாகு நூல் நிலைய நண்பர்களுடனான கருத்துப் பரிமாற்றமும், நான் எழுதுவதற்காண காரணங்களில் முக்கியமான ஒன்று. இத்தகைய ஒரு வட்டம் நிச்சயம் எழுதுவதை ஊக்கப்படுத்துகிறது.

கடைசியாகச் சொன்னாலும், மிக முக்கியமான ஒன்று இருக்கிறது, இணையமும் இ-மெயிலும் தரும் வசதி. இப்போது இதைக்கூட, ‘ஒரு வெள்ளைத்தாள் எடுத்து, மார்ஜின் விட்டு, பக்க எண் அளித்து எழுதி, பிழை திருத்தி, உறையிலிட்டு, தபால் தலை ஒட்டி அனுப்பு’, என்றால்….சிரமம்தான், அதற்கெல்லாம் வேலை வைக்காமல், ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்திருக்கும், (இன்னமும் அதே வழியில் எழுதிக் கொண்டிருக்கும் சிலரையும்) நம் முன்னோடிகளையும் நினைத்தால், தலை தன்னால் வணங்குகிறது

எதிர்க்கவிதையின் அல்வாப்பதம்

பெருந்தேவி

தலைப்பு செய்தி.

***

ஒரு கோப்பை விஷத்தை வாயிலூற்றி அதை இன்னொரு கோப்பையில் துப்பவேண்டும். இதைச் செய்யும்போது வாயில் நீர் ஊறக் கூடாது விழுங்கக்கூடாது தெறிக்கக்கூடாது. வாய் இடையில் பங்குபெறுகிற சிறு பாத்திரம்தான். இந்தக் கலைச் சூத்திரங்கள் மொழியில் கூடிவர வேண்டும்.

***

மொழியிடம் ஆடுறா ராமா என்று கூவுவது பாவம் உண்மையில் மொழி ரங்கராட்டினம். மேலே ஏறும் போது அச்சமில்லாமல் கீழே இறங்கும்போது ஊக்கம் குறையாமல் இருப்போம். குரங்காட்ட ரசிகர்களிடமிருந்து மொழியைக் காக்கும் கடமை நமக்குண்டு.

***

கவிதையின் பிம்பமல்ல எதிர்க்கவிதை. சூனியக்காரியின் கையிலிருக்கும் கண்ணாடியிலிருந்தும் உள்ளபடி உரைக்காதிருப்பதில் வேறுபடுகிறது எதிர்க்கவிதை. இடம் அதில் ரேகை. காலங்கள் தங்கள் எச்சம்.

***

எதிர்க்கவிதை ஒரு நல்ல நாளில் நாள்பட்ட ஒயின் போலச் சுவைக்கும். மோசமான நாளில் முதல் வரியில் தூங்கவைக்கும்.

***

தமிழுக்குப் பல என்று பேர்.

 

நிறப்பிரிகை: நான்கு – துய்யம்

சரவணன் அபி

இறையின் முன்
கரைந்தொழுகும் கண்ணீர்

இரவும் விடியலும்
இல்லாதோரின்
எதிர்நோக்கல்
எளிமையின் திறப்பு
சாதனையின் உச்சம்

எதுவும் அறியாத
எதுவும் நிறையாத
எதுவாகவும் இல்லாத
எதுவாகவும் உருமாறும்
உன்னதம்
துய்யம்

வாழ்விலே வெம்மை

சிகந்தர்வாசி

சதாப்தி ரயில் விட்டு இறங்கியவுடன்
வெம்மை தாக்குகிறது

தலை மேல் இரண்டு பெட்டிகளையும்
தோளில் ஒரு பையும் சுமந்து கொண்டு
கூலி நடக்கிறான்

பிதுங்கி வழியும் கூட்டத்தைச் சுமந்து கொண்டு
உச்சி வெயிலில் ஊர்ந்து செல்கிறது
ஒரு பஸ்

நடுரோட்டில் இரண்டு வயோதிக பெண்மணிகள்
சுவாரஸ்யமாய் எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்

தவற விட்ட பஸ்ஸைப் பிடிக்க
வேகமாக ஓடுகிறான் ஒருவன்

ஒற்றை வியர்வைத் துளி காதோரத்தில் வழிய
ரயில் நிலைய முகப்புக் கூரையின் கீழ்
காருக்காக காத்திருக்கிறேன் நான்.