Author: பதாகை

நிறப்பிரிகை: ஐந்து – அரிசனம்

சரவணன் அபி

இலைகள் தோறும்
இழையாடைகள் சரிந்து
மெதுவே மிக மெதுவே
சருமம் போர்த்திய
சருகுகள் ஒதுக்கி
நிலம் மெல்ல நடுங்கிட
காதல் செய்யும் வீர்யன்

இருத்தலின் சுடர்
இயக்கத்தின் தீ
அளையிடை இருக்கவொண்ணா
அக்கினிக்குஞ்சு

மேன்மையொன்றே கருதி
எரிந்தழித்து
முளைத்தெழும்
அரிசனம்

எதற்காக எழுதுகிறேன் – மு. வெங்கடேஷ்

மு வெங்கடேஷ்

“எதற்காக எழுதுகிறேன்?” என்று பதாகை என்னிடம் கேட்டபோதுதான் நான் முதன் முதலாக என்னையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டேன். இதற்கு முன் இதே கேள்வியைப் பலமுறை பலபேர் பல சூழ்நிலைகளில் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அடுத்து அவர்களிடம் இருந்து வரும் கேள்வியைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிலை அந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சொல்லிவிட்டு நழுவிக் கொள்வேன். இருந்தாலும் கேட்டு விடுவார்கள். “பணம் கிடைக்குமா?” “புகழ் கிடைக்குமா?” “அப்படியே சினிமாவுக்குப் போய்டலாமா?” என்று. உள்நாட்டில்தான் இப்படி என்றால் வெளிநாட்டு நண்பர் ஒருவர் “Congrats on becoming a writer and what are you going to do with the royalty?” என்று கேட்டார். சிரிப்பைத் தவிர வேறு எதையும் பதிலாக அளிக்கத் தோன்றவில்லை.

இப்படி எல்லோரிடமும் ஏதாவது ஒரு மழுப்பலான பதிலைச் சொல்லித் தப்பித்த எனக்கு பதாகையிடம் அவ்வாறு சொல்ல மனமில்லை. அதனால் வேறு வழியின்றி என்னிடமே இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேன். “ழ” வை “ழ” என்றே சரியாக சொல்லத் தெரியாத, பழந்தமிழ் இலக்கியம் எதுவுமே தெரியாத, தமிழ் எழுத்தாளர்கள் எவரையுமே இதுவரை சரியாக வாசித்திராத நான் எதற்காக எழுதுகிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டதற்கு கிடைத்த பதில் இதோ-

எதற்காக எழுதுகிறேன் என்பதற்கு முன் எவ்வாறு எழுதத் தொடங்கினேன் என்று பார்த்துவிடலாம்.

குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் மட்டுமே படித்துக் கொண்டிருந்த ஒரு சராசரி ஆள் நான். என்னை இந்த எழுத்துலகிற்கு இழுத்து வந்த பெருமை மாதவன் இளங்கோவைச் சாரும். என்னைப் பொறுத்தவரை எழுதுவதென்பது ஒருவகை போதை. மற்ற போதைப் பழக்கங்களைவிட மிகக் கொடுமையான எழுத்துப் பழக்கத்திற்கு என்னை அடிமையாக்கிய பெருமை மாதவன் இளங்கோவுக்கே உரியது (இதில் என்னை இப்போது ஊக்குவிப்பவர்கள் பலர்  உண்டு, ஆனால் நான் எழுத ஆரம்பித்ததற்கு முதல் காரணம் மாதவன் இளங்கோதான்).

நான் எழுதத் தொடங்கிய நாள் இன்றும் என்னால் மறக்க முடியாத ஒரு நாள். பணி நிமித்தமாக பெல்ஜியம் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது மேற்கூறிய மாதவன் இளங்கோவைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அதற்கு முன்பிருந்தே எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்தோம். ஆனால் அதுவரை தமிழ்,இலக்கியம், சிறுகதை இப்படி எதைப் பற்றியுமே நாங்கள் பேசியது கிடையாது.

அப்போது அவர், தான் எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். வீட்டிற்கு எடுத்து வந்த நான் அதைப் படிக்கத் தொடங்கினேன். எனக்குண்டான ஒரு கெட்ட பழக்கம், ஏதாவது ஒன்று பிடித்துவிட்டால் அதைக் கடைசிவரைப் படித்துவிட்டுத் தான் கீழே வைப்பேன். அப்படித்தான் அன்றும் நடந்தது. அதிலுள்ள ஒவ்வொரு கதையாகப் படிக்கப் படிக்க அதற்குத் தொடர்புடைய, என் வாழ்வில் நடந்த ஏதாவதொரு சம்பவம் ஞாபகத்துக்கு வர, நாம் ஏன் அதை எழுதக் கூடாது என்று தோன்றியது. அன்றுதான் என் எழுத்தார்வம் உதித்தது.

இவ்வாறு எழுதத் தொடங்கிய நான் இன்று இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். நான் ஒன்றும் பல கவிதைகளையோ கட்டுரைகளையோ சிறுகதைகளையோ இதுவரை எழுதிவிடவில்லை. இருப்பினும், “எதற்காக எழுதுகிறேன்” என்று பதாகை என்னிடம் கேட்டதே ஒரு அங்கீகாரமாகக் கருதுகிறேன்.

எழுதத் தொடங்கிய புதிதில், நான் எழுதி அனுப்பும் கதை “நன்றாக உள்ளது” என்று நண்பர்கள் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருப்பேன். அவ்வாறு வரும் பதிலே எனக்கு “ஆஸ்கார்” விருது கிடைத்ததற்குச் சமமாக எண்ணிக் கொள்வேன். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் இதுவரை நான் என்ன எழுதி அனுப்பினாலும் “நன்றாக இல்லை” என்று சொன்னதே இல்லை, மாறாக “நல்லா இருக்கு ஆனா….” என்று இழுப்பார்கள். அந்த இழுவையிலேயே எனக்குப் புரிந்துவிடும் அது தேறாது என்று. கதையை அவர்களிடம் ஓகே வாங்கிவிட்ட பின் அதை எப்படியாவது ஒரு இதழில் பதிப்பித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.அதற்காக பல முயற்சிகள் எடுப்பேன். ஒரு காலத்தில் அதுவும் சாத்தியமானது (சிறகு, பதாகை, சில்சீ, அகம்) வாயிலாக.

இப்போது என் மனதில் ஓடிக் கொண்டிருப்பதெல்லாம் எப்படியாவது அந்தக் கதைகளை எல்லாம் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டுமென்று. கண்டிப்பாக இதுவும் ஒரு காலத்தில் சாத்தியமாகி விடும். இது அதோடு நின்று விடுமா என்ன? கண்டிப்பாக இல்லை. ஏன்?

இப்போது எதற்காக எழுதுகிறேன் என்பதைப் பார்த்து விடலாம்:

பணம் – இல்லை என்பது எதார்த்த நிலைமை அறிந்த எனக்குத் தெரியும். தமிழில் எழுதி எவ்வளவு சம்பாதித்துவிட முடியும் என்பதும் எனக்குத் தெரியும். அப்போ வேறு எதற்கு?

புகழ் – ஓரளவிற்கு ஆம் என்றே சொல்லுவேன். ஏன் அந்த ஓரளவிற்கு என்று கேட்டால், தமிழில் தலை சிறந்த, உலகத் தரம் வாய்ந்த எழுத்தாளர்கள் இருந்தும் அவர்களுள் நமக்கு எத்தனை பேரைத் தெரியும்? அப்போ வேறு எதற்கு?

மனநிறைவு  – ஆம், என் மன நிறைவிற்காக மட்டுமே. நான் ஒரு தமிழ் எழுத்தாளன் என்று சொல்வதற்காக மட்டுமே. என் “passion” காக மட்டுமே. வேறு எந்தவொரு காரணமாகவும் இருக்க முடியாது.

எழுதுவதென்பது எனக்கு “passion” ஆகிப் போனதால்.ஒவ்வொரு கதை எழுதும்போதும் எனக்கு கிடைக்கும் மன நிம்மதி மற்றும் சந்தோசத்திற்காக மட்டும் எழுதுகிறேன். நான் எழுதும் கதை பெரும்பாலும் என் வாழ்க்கையில் நடந்ததோ அல்லது நான் கேள்விப் பட்டதாகவோ இருக்கும். அவ்வாறு எழுதும்போது நான் பல நேரங்களில் சிரித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன். என் எண்ண ஓட்டங்களை கதைகளில் கொண்டுவர நான் மெனக்கிட்டிருகிறேன். இதெல்லாம் நான் விரும்பி ஏற்றுக் கொண்டு செய்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை கதை சொல்வதென்பது எளிது. ஆனால் கதை எழுதுவதென்பது?எண்ணத்தில் தோன்றுவதை எழுத்தில் கொண்டுவருவது? முக்கியமாக அதை வாசிப்பவரிடம் கொண்டு சேர்ப்பது? சவாலான விஷயம்தான். இந்த சவாலை சாத்தியமாக்குவதற்கு ஒரே வழி சிறந்த எழுத்தாளர்களை வாசிப்பது மட்டுமே. அவர்கள் எப்படி தாங்கள் சொல்ல வரும் கருத்தை, உணர்ச்சியை வாசிப்பவரிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்று தெரிய வரும்.

மேலும் எழுதும்போது நாம் இவ்வுலகை வேறு ஒரு கோணத்தில் பார்க்கத் தொடங்கி விடுவோம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்று கூர்ந்து கவனிக்கத் தொடங்குவோம். அதிலிருந்து எதை எடுக்கலாம், எதை கதையாக வடிவமைக்கலாம் என்ற எண்ண ஓட்டம் வந்து விடும். எழுதுவதற்கு முன் – பின் என என்னால என்னுள் பல மாற்றங்களை  உணர முடிகிறது. முன்பெல்லாம் சுற்றி என்ன நடந்தாலும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் சென்று விடுவேன். ஆனால் இப்போது எதைப் பார்த்தாலும், வாசித்தாலும், கேட்டாலும் என்னால் அதில் ஆழமாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது. அவ்வாறு கூர்ந்து கவனிக்கும்பொழுது என்னுள் ஒரு கதை ஓடிக்கொண்டே இருக்கிறது.

இது அனைத்திற்கும் காரணம் “passion” ஆக இருக்க முடியுமே தவிர பணமோ, புகழோ இருக்க வாய்ப்பில்லை.

என் எழுத்தார்வத்துக்கு எடுத்துக்காட்டாக இப்போது நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

என் மனைவி சோகமாக இருந்திருக்கிறாள். உடன் பணிபுரியும் தோழி என்னவென்று கேட்க, “நேத்து வீட்ல எனக்கும் என் கணவருக்கும் சண்ட,” என்று சொல்லிருக்கிறாள்.” ஐயோ அப்படியா என்னாச்சு அப்புறம்,” என்று தோழி கேட்க, “என்னாச்சு? ஒன்னும் ஆகல. அவர் கோவிச்சிட்டு கதை எழுதத் தொடங்கிட்டாரு,” என்று சொல்லியிருக்கிறாள்!.

 

 

 

 

 

மீதமிருக்கும் கனவுகளின் ஈரம்

ஜிஃப்ரி ஹாசன்

களுத்துறைக்குச் செல்வதற்காக புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் பஸ்சுக்காக காத்துக் கொண்டு நின்றேன். எனக்கு கொழும்பு வரக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் களுத்துறையிலுள்ள எனது நண்பன் ஒருவனை அநேகமாக சந்திக்கச் செல்வது வழக்கம். அவனும் அதை விரும்பி இருந்தான். எனது பல்கலைக் கழகத் தோழியான மிதிலா பாணந்துறையைச் சேர்ந்தவள். அவளது ஊரைக் கடந்துதான் அங்கு செல்ல வேண்டும். ஆனால் அங்கு செல்லும் ஒவ்வொரு பொழுதும் பாணந்துறை வரும் போது எனக்குள் பதட்டமும் ஒருவித சோகமும் கவிழ்ந்து கொள்கின்றன. இத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னால் அந்த ஞாபங்களிலிருந்து இன்னும் விடுபட முடியாதிருப்பது ஓர் ஆழமான அர்த்தத்தில் நான் தோற்றுப் போய்விட்டதாக உணர்கிறேன். சிலவேளைகளில் களுத்துறைக்குச் செல்லாமலே நான் வீடு திரும்பி விட நினைத்ததுமுண்டு. எதேச்சையாக அவளை அங்கு சந்திக்க கிடைத்து விடக்கூடிய சந்தர்ப்பங்களை இயன்றளவு தவிர்ந்து கொள்ளவே நான் அப்படி நினைத்தேன்;.

எங்கள் பல்கலைக்கழக நாட்களில் எங்களுக்குள் ஓர் ஆழமான நட்பும் புரிதலும் இருந்தது. அது எப்படி ஆரம்பித்தது எப்படி முடிந்து போனது என்பது இன்றளவும் ஒரு கனவு போல என்னுள் ஈரமாக அப்பிக்கிடக்கிறது. எனது பெட்ச்மெட்டான அவள் ஆங்கில இலக்கியத்தை சிறப்புப் பாடமாகப் பயின்றாள்.

நான் இப்போது பஸ்ஸில் ஏறிக் கொண்ட போது அவளும் இதில் வரக்கூடாதா என்று என் கட்டுப்பாட்டையும் மீறி ஏதோ ஒரு நப்பாசையில் பஸ் முழுவதும் ஒரு கணம் சுற்றிப் பார்க்கிறேன். முன்பொரு முறை நான் களுத்துறைக்குச் செல்லும்போது எதேச்சையாக இருவரும் ஒரே பஸ்ஸில் அருகருகே அமர்ந்து செல்லும் சந்தர்ப்பம் உருவானது. ஒரு மழைக்காலத்தில் வாய்த்த அந்த சந்தர்ப்பத்தை என்னை விட அவளே வளாகத்தில் வைத்து அதிகம் நினைவுகூர்ந்தாள்.

‘வீடு செல்கிறீர்களா?’ என்று நான் அப்போது அவளைக் கேட்டேன்.

‘ஓவ்’ என்று தலையசைத்தாள். அவள் எப்போதும் இப்படித்தான் தலையசைப்பது வழக்கம். பகிடிவதைக் காலத்திலிருந்தே அவள் என்னை அடிக்கடி ‘வேண்டுமென்றே’ பார்ப்பதை நான் அவதானித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் ‘பாவம் இவனெல்லாம் எப்படித்தான் இந்த ‘ரெகிங்’ கை தாங்கிக் கொள்ளப் போகிறானோ’ என்று என் மீது பரிதாபப்பட்டுத்தான் இவள் என்னைப் பார்க்கிறாள் என்று நினைத்துக் கொள்வேன். எனினும் அது உண்மையிலேயே பரிதாபப் பார்வைதானா என்பதில் எனக்கு உள்ளுர ஒரு இலேசான சந்தேகமும் இருக்கத்தான் செய்தது.

ரெகிங் பீரியட்டில் முதலாமாண்டு மாணவர்கள் தாங்கள் நினைத்தபடி ஆடையணிய முடியாது. சிரேஸ்ட மாணவர்கள் விதித்திருந்த வரையறையின்படியே நாங்கள் ஆடையணிந்து கொள்ள வேண்டி இருந்தது. ஆயினும் அந்த ஆடையில் கூட அவள் அழகாக இருந்தாள். அவளிடம் சற்று அமைதியான சுபாவம் இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். அவள் என்னுடன் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்த முனைபவள் போல் காணப்பட்டாள். ‘ரெகிங் பீரியட்டிலுங்’கூட அதற்கான சந்தர்ப்பங்களை அவள் வலிந்து உருவாக்கிக் கொள்வதை ஓரளவு என்னால் அவதானிக்க முடியுமாக இருந்தது. அதற்கான காரணத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

‘ஒரியன்டேஷன்’ நாளில் முதலாமாண்டு மாணவர்கள் தங்களுக்கிடையில் நண்பர்களாகிக் கொள்ள வேண்டும். ஒரு ஆண் ஒரு பெண் நண்பர்களாகி தங்களைப் பற்றி அடுத்தவருக்குத் தெரியப்படுத்திக் கொள்வது இந்த நட்புமயமாதலின் உள்ளடக்கமாக இருந்தது. இதற்கென சில மணித்தியாலங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. அதற்குள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். என்ன அதிர்ஸ்டம்! எனக்கருகில் தேடிப்பிடித்து அவள் வந்து சேர்ந்திருந்தாள். அந்த நட்புமயமாதலின் முதல் நாளிலேயே அவளது பெயர் மிதிலா என்பதையும் அவளது ஊர் பாணந்துறை என்ற தகவல்கள் உள்ளடங்களாக அவள் பற்றிய இன்னும் பல முக்கிய தகவல்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். சீனியர்ஸ் கேட்கும் போது நான் அவற்றை ஞாபகம் வைத்திருந்து சொல்ல வேண்டும். அவளும் என்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுக் கொண்டாள்.

அந்த இனிமையான நாளில் என்னை ஒரு பாட்டுப் பாடும்படி வினயமாகக் கேட்டாள். தெரிந்த ஒரு சில தமிழ் பாட்டுக்களை எடுத்து விட்டேன். என்னை ஒரு சிறந்த பாடகன் என்று பாராட்டினாள். என் மனம் நோகாமல் இருக்கத்தான்? அவள் அப்படி சொல்லி இருக்க வேண்டும். எதற்கும் அருகில் எனது தமிழ் பேசும் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என ஒரு முறை நோட்டமிட்டுக் கொண்டேன். அதற்கிடையில் அருகிலிருந்த அவளது தோழிகளிடமும் நான் ஒரு பாடகனாக அவளது புண்ணியத்தில் அறிமுகமாகிக் கொண்டிருந்தேன். இதை எல்லாம் எனது நண்பர்கள் கேள்விப்பட்டால் என்ற ஒரு அச்ச உணர்வும் எனக்குள் எட்டிப்பார்க்கத்தான் செய்தது. ‘அவள் என்ன தப்பா புரிஞ்சிட்டாள் மச்சான்’ என்று சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து ஓரளவு ஆசுவாசப்படுத்தியது. மேற்கொண்டு பாடுவதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. என்னுடைய துரதிஸ்டம் அப்போது அவளையும் பாடும்படி கேட்க எனக்கு அன்றொரு ஜென்ரல் நொலிட்ஜ் இல்லாமல் போய்விட்டது. அதை நினைத்து சில வேளைகளில் நான் துக்கம் அனுஸ்டித்ததும் உண்டு.

அவள் எனது பார்வையில் சற்று வித்தியாசமானவளாகத் தெரிந்தது உண்மைதான். ஏனைய சிங்களப் பெண்களின் நடை உடை பாவனையிலிருந்து அவள் வேறு பட்டிருந்ததை நான் அறிவேன். அது அவளது இயல்பான போக்கா அல்லது திட்டமிட்டு அவ்வாறு நடந்துகொள்கிறாளா என்பது பற்றிய ஆராய்ச்சிகளை நான் அப்போது மேற்கொள்ளுமளவுக்கு அவள் மீது ஆர்வம் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் மிகவும் மென்மையான சுபாவமுடையவளாகவும் அழகியலை ஆராதிப்பவளாகவும் இலக்கிய நாட்டமுடையவாளாகவுமிருப்பதை நான் ஓரியன்டேஷன் நாட்களிலிலேயே தெரிந்து கொண்டேன்.

அவளுடன் சரளமாக உரையாடுவதற்கு எனக்கு மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. சிங்களத்தில் ஓரளவு உரையாடும் திறன் எனக்கிருந்தது. இடையிடையே ஆங்கிலக் கலப்பும் உரையாடலின்போது கைகொடுத்தது.

‘நீங்கள் மிகவும் மென்மையானவர்’ என்று ஒரு நாள் என்னிடம் சொன்னாள். நானும் ‘நீங்களும் அப்படித்தான்’ என்று சொன்னேன். இருவருக்குமிடையில் இப்படி ஒரு ஒற்றுமை இருப்பது உண்மைதான். ஆனால் அவளிடம் ஒரு வித பிடிவாதக் குணமுமிருந்ததை நான் பின்னாட்களில் அறிந்து கொண்டேன். அந்தக் குணந்தான் என்னிடம் அறவே வர மாட்டேன் என்கிறதே என்று ஒரு நாள் வெளிப்படையாகவே அவளிடம் சொல்லிவிட்டேன்.

அவளுக்கிருந்த இலக்கிய ஈடுபாடு காரணமாக ஆங்கில இலக்கியத்தை  தனது பட்டப்படிப்பில் சிறப்புப்பாடமாகத் தெரிவு செய்திருந்தாள். அபாரமான ஆங்கில அறிவு அவளுக்கிருந்ததை நான் அறிவேன். தாங்கள் அன்றைய பாடத்தில் படித்த ஆங்கிலக் கவிதைகள் பற்றி எப்போதும் என்னுடன் உரையாடும் பழக்கம் அவளுக்கிருந்தது. எனக்குள்ளும் ஒரு தீவிர வாசகனும் எழுத்தாளனும் இருப்பதை ஆரம்ப நாட்களில் அவள் அறிந்திருக்கவில்லை. அதை நான் விரும்பி இருக்கவுமில்லை.

ஒரு நாள் கமலாதாஸ் சுரைய்யா என்றொரு ஆங்கிலத்தில் எழுதும் கவிஞையைப் பற்றியும் அவர் இஸ்லாத்தைத் தழுவியது பற்றியும் என்னிடம் பேசினாள். அன்றிலிருந்து அவளை விடத் தீவிரமாக ஆங்கில இலக்கிய வாசிப்பில் நான் மூழ்கத் தொடங்கிவிட்டேன். அவள் சொல்லும் ஒவ்வொரு எழுத்தாளரைப்பற்றியும் நானும் அவளுடன் பகிர்ந்து கொண்டபோது அவள் மிகவும் ஆச்சரியப்பட்டாள். ‘நீங்களும் ஆங்கில இலக்கியம் எடுத்திருக்கலாம்’ என்றாள். ‘ஓ எடுக்கிற மாதிரித்தான் இரிந்திச்சி’ என எனக்குள் எழுந்த சிந்தனையை சிரமப்பட்டு விழுங்கிக் கொண்டேன். பின் வந்த நாட்களில் அவளது ஆங்கிலப் பாடப் பரீட்சைகளுக்கு அவளைத் தயார்படுத்தும் விரிவுரையாளர் பாத்திரத்தையும் நானே வகிக்க வேண்டி வந்தது.

தமிழ்மொழியில் நான் ஒரு எழுத்தாளனாக கடந்த சில ஆண்டுகளாக செயற்பட்டு வருவதை அவள் நம்பக்கூடிய ஒரு கட்டம் வந்தபோது வெளிப்படுத்தினேன். அது அவளை மேலும் என்னுடன் இணைத்துப் பிணைப்பதாக இருந்தது.

மிதிலா எனது சமயத்தைப் படிக்கும் ஆர்வத்தை ஒரு நாள் என்னிடம் வெளிப்படுத்தினாள். அதற்குண்டான வசதிகளை நான் செய்து தருவதாக அவளிடம் கூறினேன். இதனை முஸ்லிம் மஜ்லிசுக்கும் தெரியப்படுத்தினேன். இதன் முதல் கட்டமாக குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்புப் பிரதி ஒன்றை இரகசியமாக அவளது கைகளுக்குச் சேர்ப்பித்தேன். பிறகு பல்கலைக்கழக நூலகத்தில் காணப்பட்ட இஸ்லாம் சம்பந்தமான நூல்களை இரவல் பெற்றுப் படிக்கும்படி கூறினேன். நானும் இரவல் பெற்றுக் கொடுத்தேன். சிங்களத்தில் வெளிவந்து கொண்டிருந்த இஸ்லாமிய சஞ்சிகைகளுக்கு நான் சந்தாதாரனானேன். இவை அனைத்தையும் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் நான் செய்து கொண்டிருந்தேன்.

ஆனால் எனக்குள் இருக்கும் ஒரு வித கோழைத்தனமான கூச்ச சுபாவம் இப்போது தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. ஒரு சிங்களப் பிள்ளை என்னுடன் நெருங்கிப் பழகுவதை அடுத்தவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று என் மனம் இப்போது குறு குறுக்கத் தொடங்கி இருந்தது. பல்கலைக்கழக சூழலில் அது ஒன்றும் பெரிய விசயமில்லை என்ற போதிலும் அது பற்றி அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். எனினும் அவசரப்பட்டு எந்தவொரு முடிவுக்கும் வராது அது பற்றி நண்பர்கள் வட்டாரத்தில் பேச்சுக்கள் கசியும் வரை காத்திருப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

சில மாதங்களில் அவள் இஸ்லாம் குறித்து என்னளவுக்குத் தெரிந்து கொண்டு விட்டதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு ஃபங்ஷன் தினமொன்றில் மாணவிகள் தங்களை மிகவும் அலங்கரித்து ஆடல் பாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இவளோ சற்று மரியாதையான ஆடையணிந்து ஆடல் பாடல்களில் பங்கேற்காது என்னைப் போல் ஒதுங்கி இருந்து வெறுமனே பார்த்தல் இரசித்தல் பாத்திரத்தை வகித்துக் கொண்டிருந்தாள். மாணவர்கள் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டபோது, அவளையும் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளும்படி உற்சாகப்படுத்தினேன். அதற்கு அவள் போட்டோ பிடிப்பது ஹராம் என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள்.

‘இதுக்கு இவள் இஸ்லாத்தப் படிக்காமலே இருந்திருக்கலாம்’ என்ற சிந்தனை அக்கணத்தில் எனக்குள் மின்வெட்டி மறைந்தது.

இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த  நோன்பு மாதமொன்றில், ‘நீங்கள் நோன்பா?’ என்று என்னிடம் கேட்டாள். நான் ‘ஆம்’ என்று தலையசைத்தேன். ‘நானும் அடுத்த வருசம் நோன்பு பிடிப்பேன்’ என்று அவள் சொன்னபோது அருகிலிருந்த சிங்கள மாணவிகள் அவளை கடுமையாக திட்டினர். நீ என்ன முஸ்லிமா? என ஒருத்தி கடுமையாக அவளை வைய்தது போது எனக்குள் அவள் மீது ஒரு வித பரிவுணர்வு ஏற்பட்டதை உணர்ந்தேன். சக மாணவிகளால் அவள் அந்த இடத்தில் கடுமையாக இம்சிக்கப்பட்டாள். ஒரு மதத்தின் மீது தனக்கிருந்த ஈடுபாட்டை அவள் வெளிப்படுத்திய போது அன்று அவளுக்கு ஏற்பட்ட அவமானத்தால் அவளை விடவும் நான்தான் மிகவும் நொந்து போயிருந்தேன். அப்படியானால் அவள் ஹொஸ்டலில் எவ்வளவு இன்னல்களைச் சந்திப்பாள் என்று என் மனம் அவள் மீது மீண்டும் பரிவு கொள்ளத் தொடங்கியது. ஆனால் அது பற்றி எதுவும் நான் அவளிடம் கேட்கவில்லை.

எங்கள் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்கள் தொழுகை நடத்துவதற்கென ஒரு Prayer Room  தரப்பட்டிருந்தது. எங்களது சமய விவகாரங்களுக்கான மத்திய நிலையமாகவும் அதுவே தொழிற்பட்டது. ஒரு நாள் அதைக் காண்பிக்கும் படி என்னிடம் அவள் கேட்டாள். நான் அவளை உள்ளே அழைத்துச் சென்று அதனைக் காண்பித்தேன். அப்போது அரபியில் அவளது பெயரை எழுதிக் காண்பிக்கும்படி என்னிடம் கையை நீட்டினாள். நான் கையைப்பிடித்து எழுதுவதை தவிர்ந்து கொள்ளும் நோக்குடன் அரபை கையில் எழுதக் கூடாது என்று ஒரு பச்சைப் பொய்யை சொல்லி அந்த இக்கட்டிலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொண்டேன். இதிலிருந்து சில நாட்கள் கழித்து கெண்டினில் வைத்து அவளது கையில் எனது பெயரை அரபியில் எழுதி இது சரியா எனக் கேட்டாள். சரியாகத்தான் எழுதி இருந்தாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மொழிகளை கற்பதில் அவளுக்குள் தீவிர ஆர்வமும் ஆற்றலுமிருந்ததை அந்நாட்களில் நான் அறிந்தே வைத்திருந்தேன். இப்படியே போனால் ஒரு நாள் குர்ஆனுக்கும் தப்ஸீர் எழுதி விடுவாள் என நான் நினைத்துக்கொண்டேன்.

அவள் பரீட்சைக்கான தயார்படுத்தலில் மிகவும் பிஸியாக இருந்த ஒரு நாளில் ஆங்கிலக் கவிதை உலகின் இரட்டையர்களான தோமஸ்-ஃப்ரொஸ்ட் ஆகியோரின் கவிதைகளில் வர்ணிக்கப்படும் இயற்கையின் அழகு நமது வளாகத்தின் சுற்றுச் சூழலில் நிறைந்து கிடக்கிறது என்று அவளிடம் எனது ஆங்கில இலக்கியப் புலமையை காட்ட முற்பட்ட போது அது வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய சீலமாக முடிந்தது. அவர்களின் கவிதை தனது பரீட்சை வினாத்தாளில் முக்கிய கேள்வியாக இடம்பெறும் எனக்கூறி அவற்றை முழுமையாக எழுதித் தரும்படி ஒரே பிடியாகப் பிடித்துவிட்டாள். அதற்கு முக்கியும் முண்டியும் தயாராகி எழுதிக் கொடுக்க வேண்டி இருந்ததால் எனது பாடத்தில் நான் கோட்டைவிடும் நிலமையும் போதாக்குறைக்கு உருவாகிக் கொண்டு வந்தது.

மிதிலாவின் தந்தை ஒர் உயர் அரசாங்க உத்தியோகத்தராக இருந்தார். அடிக்கடி கோபப்படும் சுபாவம் அவரிடம் இருந்த போதும் அனைவருடனும் அன்பாகப் பழகக்கூடியவர் என்று மிதிலா தனது அப்பாவைப்பற்றி என்னிடம் சொல்லி இருந்தாள். நான் நண்பனைச் சந்திப்பதற்காக களுத்துறைக்குச் சென்ற போது அவளது அழைப்பை ஏற்று அவளது வீட்டுக்கும் சென்றிருந்தேன். அவளது தந்தையும் குடும்பத்தினரும் என்னுடன் அன்பாகப் பழகினர். அவர்கள் என்னுடன் பழகிய விதத்திலிருந்து அவள் என்னைப் பற்றி ஏற்கனவே அவர்களிடம் சொல்லி இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டேன்.  நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதால் அவர்கள் என்னிடம் யுத்தம் பற்றியே அதிகம்  பேச விரும்பினர். ஆனால் மிதிலா மதத்தைப் பற்றிப் பேசவே விரும்பினாள். ஆனால் இத்தகையதொரு தருணத்தில் இப்படிப்பட்ட பேச்சுக்களைத் தவிர்ந்திருக்கவே நான் விரும்பி இருந்தேன். அவளது தந்தை ஒரு அவசர வேலை காரணமாக வெளியேறிச் செல்வதாக என்னிடம் விடைபெற்றுச் சென்ற சில நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கி இருந்தது. அது எதிர்பாராத விதமாக எனது புறப்படலை தாமதப்படுத்தி விட்டது.

அந்த இடைவெளியில் மிதிலா தனது வீட்டு நூலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்களும் அங்கு காணக்கிடைத்தன. ஆனால் அதற்கு தனது தந்தையிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததாக கூறினாள்.

‘இந்த மாதிரியான புத்தகங்களை படிப்பது உனது பட்டப்படிப்பில் இல்லாத ஒன்று’ என்று அவளது அப்பா அவளைக் கடிந்து கொண்டதை அம்மாவுக்கு கேட்காத வகையில் என் காதருகே வந்து மெதுவாகச் சொன்னாள். அது காதலர்கள் இருவரின் கிசுகிசு உரையாடலைப் போன்றே இருந்தது. வீட்டில் அவளது வாசிப்புச் சுதந்திரம் வரையறுக்கப்பட்டிருந்ததை மிகுந்த மனவேதனையுடன் எதிர்கொண்டேன். அத்தகைய புத்தகங்களை அப்பாவின் பார்வையிலிருந்து மறைத்து வைக்குமாறு அவளுக்கு அறிவுரை கூறிவிட்டு அவளிடமிருந்து விடைபெற்றேன்.

ஸ்டடி லீவு என்பதால் அவள் வீட்டில் தங்கி இருந்து படிக்க முடிவு செய்திருந்தாள். நான் நண்பனின் வீட்டுக்குச் செல்வதா அல்லது எனது ஊருக்கே சென்று விடுவதா அல்லது வளாகம் மீள்வதா என்ற குழப்பத்துடன் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். எனினும் இனம்புரியாத ஒரு சோகம் என் உள் மனதில் எதையோ செய்வதை அன்று முதன்முதலாக உணர்ந்தேன். இன்னும் மழைபெய்து கொண்டிருக்கக் கூடாதா என என் உள் மனம் குறுகுறுத்தது. நினைவுகளின் குப்பைக் கூடையாய் இதயம் கனத்து வழிய நான் பயணத்தை தொடக்க வேண்டி இருந்தது. அன்று களுத்துறைக்குச் சென்று நண்பனைச் சந்திப்பதற்கு மனம் ஒப்பவில்லை. நேரடியாக பல்கலைக் கழகத்துக்கு அல்லது வீட்டுக்குச் சென்று விடுவது என்ற முடிவில் அங்கிருந்து வெளியேறினேன். ஆனால் வளாகத்தில் சும்மா அரட்டையடித்துக்கொண்டிருக்கும் நண்பர்களின் தொந்தரவுகளிலிருந்து தப்பிக்க என் முன்னுள்ள ஒரே தெரிவாக வீடு செல்வதே இருந்தது.

மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் புகையிரததத்தில் யன்னலருகே ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டேன். எப்போதும் இரயில் பயணங்களில் இரைச்சலால் இடறும் இதயத்தில் இன்று வேறொரு துயரம் நிரம்பி இருந்தது.

இப்போது புகையிரதம் அவளை விட்டும் என்னை வெகுதூரம் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. இந்த சேய்மை சொல்ல முடியாத வலியை உடலெங்கும் பரவவிட்டது. நாம் நேசிப்பவர்களை விட்டும் நாம் தூரச் செல்லும் போதுதான் அவர்கள் மீதான நேசம் நமக்குள் அதிகரித்து உயிர் கொல்லும் கொடிய அரக்கனாக மாறிவிடுகிறது என்பதை நான் யதார்த்தபு+ர்வமாக உணரும் தருணம் வந்தது.

வழக்கமாக வீடு வரும் போது மேலிடும் ஆவல் இன்றில்லை. அவளுடனான அந்த உறவில் மிகவும் அபாயகரமான கட்டத்தை நான் அடைந்திருப்பதை அன்றுதான் தீவிரமாக உணர்ந்தேன். அந்த வலியிலிருந்து என்னை மீட்க நான் எப்போதும் நேசிக்கும் இலக்கியத்தாலும் முடிந்திருக்கவில்லை. நான் அதுவரை காலமும் நம்பி வந்த, வாசித்து வந்த மாபெரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் கூட என்னை இரட்சிக்க முடியாமல் அந்நாட்களில் என்னை ஈவிரக்கமற்றுக் கைவிட்டுக் கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட எதையும் சரியாக ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒரு வித இழப்புணர்வுசார்ந்த இந்த நிலமையிலிருந்து அவசரமாக விடுபட்டாக வேண்டும் என்ற முடிவுக்கு என்னை அந்த நிலமை கொண்டு வந்து சேர்த்தது. எனினும் ஒரு கலாசாரத் தடை அவளை நெருங்க விடாமலும் ஒரு நேசப் பிணைப்பு அவளைப் பிரிய விடாமலும் என்னைத் திணறடித்துக் கொண்டிருந்தன. இரு திசைகளிலும் இடம்பெயர்ந்து திரிந்த என் நெஞ்சின் வலியை யார்தான் அந்நாட்களில் அறிந்திருக்கக்கூடும்?

அவளது விசயத்தில் சமூகத்தை, கலாசாரத்தை மீறி நான் செல்வதில்லை என்ற உறுதியான ஒரு முடிவை எடுப்பதும் பின் அந்த முடிவை மீள்பரிசீலனை செய்வதும் என எனது ஸ்டடி லீவு கழிந்து கொண்டிருந்தது. இறுதியில் குடும்பமும் கலாசாரமும் எனக்குள் மேலோங்கி அவளை விட்டும் தூரமாவது என்ற முடிவுடன் வளாகம் சென்றேன்.

ஒருவாரம் கழித்து அவளை வளாகத்தில் சந்தித்தேன். அவளை நேரில் சந்தித்த போது நான் ஏற்கனவே எடுத்திருந்த முடிவு எனக்கே ஞாபகம் இல்லாமல் போய்விட்டது. நான் கலாசாரத்தை மீற முடியாத போராட்டத்தில் அவளை இழப்பது என்ற முடிவை தினமும் எடுப்பதும் பின் அவளை நேரில் சந்திக்கும் தருணத்தில் அக்கணமே அதை மறப்பதுமே அன்றைய நாட்களின் அன்றாட நிகழ்வாகிப் போயின. அதுவே எனக்கு மிகப்பெரிய அவலமாகவும், அருவருப்பாகவும்  இருந்தது. ஆனால் முடிந்தளவு அவளை சந்திப்பதை தவிர்ந்து கொள்ளும் உத்தியைக் கையாண்டு அவளை விட்டும் விலகிவிடுவது என்ற முடிவை நான் ஒரு போதும் கைவிடுவதாகவுமில்லை.

இதற்கிடையில் அவளும் என்னை விடுவதாக இல்லை. பூனையின் தலையில் பனங்காயை வைத்தது போல என் நிலமை அந்நாட்களில் மாறிப் போயிற்று. நான் வேண்டுமென்றே அவளை சந்திப்பதை தவிர்ந்து கொள்ள விரும்புவதை அவள் அறிந்து கொள்ளும்படி செய்வது என்ற முடிவையும் எடுப்பதும் பின் கைவிடுவதுமாக இருந்தேன். வாலும் இல்லை நூலுமில்லை வானில் பறக்கும் பட்டம் ஆனேன் என்ற பாடலை எனக்காகத்தான் எழுதி இருக்க வேண்டும் என்று பெரியளவிலும் அப்போது நான் யோசிக்க வேண்டி வந்தது.

எனது போக்கில் ஏற்பட்ட மாறுதலை அவள் புரிந்து கொண்டுவிட்டாளா என்கிற பரிசோதனைகளையும் நான் அவ்வப்போது மேற்கொண்டு வந்தேன். அதைப் புரிந்து கொண்டவள் போலும் புரியாதவள் போலும் அவளும் வேறு தாப்புக் காட்டித் தொலைத்தாள். அதேநேரம் நான் ஏற்கனவே அச்சப்பட்டது போல் தமிழ் பேசும் நண்பர்கள் வட்டாரத்திலும் எங்களது விசயம் முக்கிய பேசுபொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. எங்கள் இருவருக்குமிடையில் இருப்பது இஸ்லாமா? இலக்கியமா? அல்லது வேறு ஒன்றா என்பதை உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சங்கத்திலிருந்து சிலர் புறப்பட்டிருந்தனர். நான் விசயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த இந்த தருணத்தில்தான் அங்கிருந்து விசாரணைகள் முடிக்கி விடப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தை சாக்காக வைத்து அவளிலிருந்து ஒதுங்கும் முயற்சியில் நானும் தீவிரமாக இருப்பது என்ற முடிவுக்கு வந்தேன். துரதிஸ்டவசமாக அந்த முடிவும் அவளை நேரில் சந்திக்கும் வரைதான் தொடர்ந்தது. இனி எந்தவொரு முடிவும் எடுப்பதில்லை என்றொரு முடிவும் அந்நாட்களில் நான் எடுத்ததாக ஞாபகம்.

இரண்டாம் ஆண்டு முதலாவது செமஸ்டர் பரீட்சைகள் நிறைவுபெற்று ஒரு- மாத விடுமுறை எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை எனக்கு சாதகமா அல்லது பாதகமா என்பதை மனக் கணக்குப் போட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அன்றைய நாளில் அவள் என்னை தனியே சந்தித்துப் பேச வேண்டும் என்று அழைத்தாள். வீடு செல்வதற்கு முன் அவளை வந்து சந்திக்கும் படி கேட்டுக் கொண்டாள். அவள் எதைப் பற்றிப் பேசப்போகிறாள். இஸ்லாம் பற்றியா? இலக்கியம் பற்றியா? அல்லது “வேறு ஒன்று” பற்றியா? என்ற குழப்பத்தில் மூழ்கியபடியே நடந்து கொண்டிருந்தேன். ஆனால் அன்று அவளது வழமையான கலகலப்பையும் மகிழ்ச்சியையும் அவளது முகத்தில் என்னால் கண்டு கொள்ள முடியவில்லை. நான் அன்றிரவு ஒன்பது மணிக்கு வீடு புறப்படுவதாக முடிவு செய்திருந்தேன்.

இலேசாக மழை தூறிக் கொண்டிருந்த அன்றைய மாலைப்பொழுதில் சிறு மரங்களின் தலைகளில் மேகங்கள் விசிறிக் கொண்டிருந்த வேளை நான் ஹொஸ்டல் நோக்கி நடந்து கொண்டிருந்தேன். சிலவேளைகளில் அவளும் என்னுடன் நடந்து வருவதுண்டு. அந்த நடைப் பயணத்தின் முழு நேரத்தையும் இலக்கியமும் இஸ்லாமும் விழுங்கி இருக்கும். ஆனால் அன்று நான் தனிமையில் நடக்க விரும்பினேன். மௌனமாக எனக்குள் உரையாட விரும்பினேன். எனது நேசத்தின் பயங்கரத்தை சுற்றி இருந்த காட்டின் எல்லா உயிர்களுக்கும் கேட்கும்படி அலறுவதற்கு விரும்பினேன். அனைத்துத் துயரங்களிலிருந்தும் விடுதலைக்காய் ஏங்கினேன்.

அவளும் அதே பதட்டத்துடன்தான் இருந்தாளா? அவளது நேசிப்பும் பயங்கரமானதா? அவளது கதறலும் கானகத்தை நிறைத்ததா? அல்லது கலாசாரத்தின் தடையை ஏறிக் கடக்கும் துணிச்சல் அவளிடம் இருந்ததா? அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் பனி போல் நழுவிச் செல்லும் இலேசான காற்றுப் போல் வளாகத்தில் நான் வீசிக் கொண்டிருந்தேன்.

அவளைச் சந்திக்காமல் வீடு செல்வது என்றொரு முடிவை அன்று உறுதியாக எடுத்து விட்டிருந்தேன்.

 

 

கட்டுக்கழுத்தியம்மன்

கலைச்செல்வி

பூசாரி தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பூசை சாமான் அடங்கிய பொட்டலங்களை ஒவ்வொன்றாக பிரித்தார். அடுக்கி கிடந்த தொன்னைகளை வெளியே எடுத்து தனித்தனியாக பரப்பி வைத்தார். விபூதி பொட்டலத்தைப் பிரித்து தொன்னை ஒன்றில் கொட்டும் போது அவர் வாய் தானாகவே முணுமுணுத்துக் கொண்டது.

ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ

ஓம் ஸ்ரீ குல தேவதாய நமஹ

ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதாய நமஹ

ஓம் ஸ்ரீ அதிஷ்ட தேவதாய நமஹ

பூசாரிக்கு வயது அறுபதுக்கு மேலிருக்கும். கண்கள் சாராயத்தின் வீக்கத்திலிருந்து விடுபடாதது போலிருந்தது. மீசையும், தாடியும், புருவமும் முகத்தை அளவுக்கதிகமாவே ஆக்கிரமித்திருந்தது. குளித்த உடலில் காவி நிற வேட்டியை சுற்றியிருந்தார். ஈரம் காயும் முன்பே பூசிய விபூதி வெள்ளை வெள்ளையாக காய்ந்து கருத்த உடலுக்கு தேஜஸ் கொடுத்தது. சந்தன பொட்டலத்தைப் பிரித்தார். பரவால்ல.. துாளு சந்தனந்தான்.. தொன்னையில் கொட்டினார். அருகிலிருந்த பன்னீர் பாட்டிலை எடுத்து சிறுவனிடம் நீட்டினார். மகள் வயிற்று பேரன். மிஞ்சிப் போனால் பத்து வயதிருக்கும் அவனுக்கு. தாத்தாவின் பார்வையிலேயே தேவைகளை புரிந்துக் கொண்டு பரபரப்பாக செயல்பட்டான். சுவரில் கையை தேய்த்து சொரசொரப்பாக்கிக் கொண்டு பாட்டிலை திறந்து பன்னீரை கொஞ்சமாக சந்தனம் வைத்திருந்த தொன்னையில் ஊற்றினான்.

பொழுது விடிந்தும் விடியாததுமாக இருந்தது. நேற்று காலையில்தான் பெரியவர்  பூசாரிக்கு தகவல் சொல்லி அனுப்பியிருந்தார். பெரியவர் ஊரில் முக்கிய தலைக்கட்டு. நிலபுலத்துக்கு குறைவில்லாத குடும்பம். ஊருக்குள் அவர் பேச்சுக்கு மறுபேச்சு அநேகமாக இருப்பதில்லை. எப்போதாவதுதான் அவர் பேசுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். முழங்கால் உயர திண்ணையில் கால்களை பின்னலிட்டு அமர்ந்திருப்பவரின் பார்வையை அத்தனை எளிதாக கடந்து விட முடியாது. “அய்யா.. சாப்டீயல்லா..“ அசடு வழிய கேட்க வேண்டியிருக்கும். பதிலாக தலை அசைப்பு மட்டுமே. மகன் மருதமுத்து வேலைக்காக பிரிந்து சென்றபோதோ பிறகு அங்கேயே வீடு வாங்கி குடியேறியபோதோ கூட ஏற்பட்ட தவிப்பை அவர் வார்த்தைகளாக்க விரும்பவில்லை. என்றோ சில சமயங்களில் தானாகவே வாய் விட்டு பேசுவதை யாராவது பார்க்க நேரிடும். அது குறித்து யாரும் அவரிடம் கேட்டதில்லை.

“பெரியவுக மவன் குடும்பத்தோடு வர்றாப்பலயாம்.. பூசைக்கு ஏற்பாடு செய்ய சொன்னவோ.”

”சுத்த பூசயா..? பலி பூசயாம்மா..?” மருதைய்யனுக்கென்றால் பலி பூசைதான் வழக்கம்.

”கட்ளத்தியம்மனுக்கு நேத்திக்கடென் கெடக்காம்.. அதான்..”

உருவிய சாராய பாட்டிலை கூரையின் இடுக்குக்குள் சொருகினார் பூசாரி. கட்டுக்கழுத்தியம்மனுக்கு நேர்த்தியென்றால் சுத்த பூசைதான். படையலுக்கு பொங்கலும் சுண்டலும் போதும். ஆனாலும் பெரியவர் வீட்டு படையலென்றால் தவுசுபிள்ளை ஏற்பாட்டில் வடை பாயாசத்தோடு மதிய சாப்பாடு பெரிய விருந்தாகி விடும். கிளம்பும்போது முழுசாக முள்ளங்கிப்பத்தையாட்டம் ஆயிரம் ரூபாய் தாளொன்றை புது வேட்டி சட்டையோடு வைத்து நீட்டுவார்கள். மனசு கும்மாளம் போட்டது பூசாரிக்கு. அதிகாலையிலேயே பேரனை எழுப்பி குளிக்க வைத்து அழைத்து வரும்போது பூசாரியின் மனைவி வீட்டை சாணமிட்டு மெழுகிக் கொண்டிருந்தாள். கொண்டைக்கடலை பெரிய அண்டாவில் ஊறிக் கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கலும் சுண்டலும் அவள் பொறுப்பு.

சிறிய கோவில் அது. மருதையன் ஏழுக்கு ஒன்பது அளவிலான கருவறையில் சீரான உயரத்தில் மண்ணாலான சிலைக்குள் குடிக் கொண்டிருந்தார். சிவப்பு நிற உடலும் கரிய பெரிய மீசையும் மஞ்சள் நிற கதுப்பான கன்னங்களுமாக வீரக்களையுடன் கையில் நீண்ட அரிவாள் வைத்திருந்தார். சிறுவன் சிலையின் மடிப்புகளில் இருந்த குளவிக் கூடுகளை தட்டி விட்டு சுத்தமாக துடைத்தான். சிலையின் முன்பாக தரையில் பதிக்கப்பட்டிருந்த அரிவாள் எண்ணெய் தடவலில் பளபளத்திருந்தது. சிலையின் பீடம் எண்ணெய் பிசுக்கேறியிருந்தது. பூஜை கண்டு நாளாகிப் போனதில் கரிய சுவரில் மடிப்புகளாக ஒட்டடை தொங்கியது. யாரோ வேண்டுதலுக்காக தொங்க விட்ட சர விளக்கிலிருந்து தரையில் வழிந்திருந்த எண்ணெயின் மீது காற்றின் உபயத்தால் மண் பூத்துக் கிடந்தது. சிறுவன் தேங்காய் நாரால் பிசுக்கை பரபரவென்று தேய்த்தான். கற்பூர ஆரத்தி மட்டுமே சிலைக்கு. அபிஷேகம் மற்றதெல்லாம் அரிவாள் வடிவ மருதையனுக்குதான். மருதையனின் கட்டுப்பாட்டில் ஏழெட்டு கிராமங்கள் இருந்ததில் சிறிய கோபுரம் எழுப்பி கோவிலை புனரமைக்க முடிந்தது. முன்புறத்தை விரிவாக்கி பேச.. உட்கார, பிடிக்க.. சமைக்க, பரிமாற.. என சிமிண்ட் தளம் அமைத்து ஆஸ்பெஸ்டாஸ் கூரையை ஆங்கிளால் நிறுத்தி பயன்பாட்டை கூட்டியிருந்தனர்.

கருவறையை தாண்டிய வராண்டா சுவர்களால் தடுக்கப்பட்டு சிறிய அறை போல ஆக்கப்பட்டிருந்தது. எல்லாம் பெரியவர் வீட்டு கைங்கர்யம்தான். அதிலிருந்த கான்கீரிட் மேடையில் அதீதமான வெண்கல புன்னகையுடன் கட்டுகழுத்தியம்மன் வீற்றிருந்தாள். ஐம்பந்தைந்து வருடங்களை கடந்த புன்னகை. பெரியவரின் மனைவியாக வீரம்மாள் என்ற பெயரில் உயிரும் உடலுமாக நடமாடும்போது தொலைத்த வசந்தமனைத்தையும் மீட்டெடுப்பது போன்ற நித்ய புன்னகை. தெய்வக்கதைகளை கேட்கவும் மெனக்கெட்டு சொல்லவும் ஆளின்றி போனதில் தை வெள்ளி.. ஆடி வெள்ளிகளுக்கான அம்மனாக மாறிப் போனாள். கட்டுக்கழுத்தியம்மன் என்ற அவள் பெயரும் அதற்கு காரணமாக இருக்கலாம்.  அணிவிக்கப்பட்டிருந்த அடர் பச்சையாலான சரிகை சேலையில் துாசி படிந்திருந்தது  ”தப்புதண்டா செஞ்சிருந்தா மன்னிச்சுக்கம்மா..“ பெரிதாக ஒரு கும்பிடு போட்டு விட்டு சிலையின் மேலிருந்த காய்ந்த மாலையை அகற்றி சுத்தப்படுத்தத் தொடங்கினார் பூசாரி.

கருவேல செடி அடர்வில் மறைந்து மறைந்து வந்து நின்றது அந்த சாம்பல் நிற கெட்ஸ் வண்டி. காரின் கதவை ஆதரவாக பிடித்துக் கொண்டு முன்னிருக்கையிலிருந்து மெல்ல இறங்கினார் பெரியவர். எண்பது வயதிருக்கும். வீரம்மாளை மணக்கும் போது இருபத்து மூன்றில் இருந்தார் ஓங்குதாங்கான தேகம். மாநிறத்தை கடந்த நிறம். தங்கநிற சரிகை கரை வேட்டி அணிந்திருந்தார். கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த துண்டு நெஞ்சு வரை வழிந்திருந்தது. உடல் அதிகம் தளர்ந்திருக்கவில்லை. அவர் வயதையொத்த அங்காளிபங்காளிகள் கொள்ளு பேரனை பார்த்து விட்ட போதிலும், இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அடுத்த தலைமுறை வித்தாக பேத்தி பிறந்திருந்தாள்.

ஓட்டுநர் இருக்கையிலிருந்து மருதமுத்து இறங்கினான். பெரியவரின் தத்து புத்திரன். முப்பது வயதிருக்கும். அதிகாரிக்குரிய முகவெட்டு. உறங்கிக் கொண்டிருந்த மகளை தோளில் சாய்த்துக் கொண்டு அவன் மனைவி அபிநயா இறங்க கூடவே சின்னவரும். பெரியவரை ஒற்றி எடுத்ததுப் போன்ற தோற்றம் சின்னவருக்கு. தகப்பனை இழக்கும் போது சின்னவருக்கு இரண்டு வயதிருக்கும். தாயின் புடவை தலைப்பே கதியாக்கி கொண்டவருக்கு பிறகு அதுவே சுபாவமாகிப் போனது. அண்ணனை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்து பேசுவது கூட சின்னவருக்கு சவால்தான். வயல் வேலைக்கு அஞ்சாத தேகம். இரவுநேர படுக்கை கூட வயல்காட்டில்தான் என்றாலும் சின்ன மின்னலோ.. இடியோ.. கூட சின்னவரின் உறுதியை குலைத்து விடும்.

காரின் அருகே ஓடி வந்தார் பூசாரி. ”அய்யா.. வாங்கய்யா.. வாங்கய்யா.. எல்லாரும் வரணும்..” என்றார் பணிந்து குழைந்து.

அலங்காரமின்றி பளிச்சென்று துடைத்து விடப்பட்ட மருதைய்யனையும் கட்டுக்கழுத்தியம்மனையும் திருப்தியாக பார்த்து விட்டு பிறகு பெரிய கும்பிடாக வைத்தார் பெரியவர். ”பிரசாதமெல்லாம் ஆயிட்டுருக்கில்ல..”

”ரவைக்கே கடல ஊற போட்டாச்சுங்கய்யா.. அர அவர்ல ரெடியாயிடும்…”

அடர்த்தியாக தொடுக்கப்பட்டு மெல்லிய வெண்பட்டு சரிகையால் சுற்றப்பட்ட மல்லிகை மாலை அடங்கிய பையை கட்டுக்கழுத்தியம்மன் பீடத்தில் வைத்து விட்டு நகர்ந்தவர் துாணோரம் கால்களை நீட்டியப்படி அமர்ந்துக் கொண்டார். சுற்றிலும் பரவியிருந்த கருவேல மரங்கள் அதிகாலை பொழுதில் கூட அழகற்று இருந்தன. கட்டுக்கழுத்தியம்மன் சன்னதியையொட்டி மருதமுத்து மனைவியுடன் அமர்ந்துக் கொண்டான். சுற்று சுவர்களில்லாத வெளியில் வீசிய அதிகாலைக் காற்று மடியில் துாங்கிக் கொண்டிருந்த மகளின் உறக்கத்திற்கு தாலாட்டாக இருந்தது.

நீட்டி நிமிர்ந்திருந்த அரிவாளில் விபூதி பட்டையிட்டார் பூசாரி. எலுமிச்சம்பழத்தை கையில் எடுத்தவர் ”அந்த சேப்பு எடுப்பா..” என்றார் பேரனிடம்.

”சேப்ப காங்கலயே தாத்தா..” என்றான் சிறுவன். அந்நிய ஆட்கள் முன் அவன் பேச்சு வெட்கத்தில் குழைந்தது.

”தோ.. இருக்கு பாருப்பா..” குவிந்திருந்த பூசை சாமானுக்குள்ளிருந்து  குங்கும பாக்கெட்டை உருவி நீட்டினான் மருதமுத்து. நழுவி விழாத நவீன வேட்டி அணிந்திருந்தான். வேட்டியின் பாக்கெட்டில் பர்ஸ் துருத்திக் கொண்டிருந்தது. வெற்று மார்பில் முசுமுசுத்து வளர்ந்து கிடந்தன மயிர்கள்.

“இதென்னா தாத்தா சேப்பு இரத்த கலர்லருக்கு..?” சேப்புன்னா ரோசு கலர்ல்ல இருக்கும்.. என்ற குழப்பம் ஆட்கொண்டதில் தலையை நிமிர்த்தாமலேயே கேட்டான்.

”சொம்மா இர்ரா.. அப்டியெல்லாம் பேசக்குடாது..“ பேரனை அதட்டினார் பூசாரி.

”தம்பி.. எப்போ வந்தீங்க..?” பேச்சுக் கொடுத்தார்.

”ராத்திரி பன்னெண்டாயிடுச்சுல்ல..” மருதமுத்துவின் குரலில் அலுப்பு மீதமிருந்தது.

“அதான் புள்ள துாங்கிடுச்சு..“ சம்பிரதாயமாக பேசிக் கொண்டே எலுமிச்சம் பழத்தை அரிவாளில் சொருக, அதிலிருந்த குங்குமம் சாறோடு கலந்து செந்நீராய் வழிந்தது.

“எங்க..? சின்னய்யாவ காங்கில..?”

“தோ வாரேன்ல..“ வேட்டி நுனியை பிடித்தபடியே செருப்பிலிருந்து கால்களை விடுவித்துக் கொண்டு அருகில் வந்தார் சின்னவர்.  “நல்லாருக்கீயளாய்யா.? உள்ளுருன்னுதான் பேரு.. பாத்து நெடுநாளாச்சு..”

சின்னவரின் விசாரிப்பில் சங்கடப்பட்டு நெளிந்தார் பூசாரி.

“எளநீயெல்லாம் வச்ச வாவுல கெடக்கு.. அருவாள எடுங்க.. கண்ண தொறந்து வச்சிடுறன்..” வந்தவுடனேயே பரபரப்பான சின்னவரிடம் ”நீங்க குந்துங்கய்யா.. பய பாத்துக்குவான் அதெல்லாம்..“ என்றார் பூசாரி.

”புள்ளய குடும்மா.. எம்புட்டு நேரமா கால்ல போட்டுக்கிட்டு.. காத்தாட துாக்கீட்டு போறன்..“ ஓரிடமாக உட்காருவது பழக்கப்படவில்லை சின்னவருக்கு.

“எலேய்.. போய் அம்மாச்சிக்கு வெறகு எடுத்தாந்து போடுய்யா..” பேரனை ஏவினார் பூசாரி.

மந்தையிலே மாரியாயி

மல மேல மாயவரே..

சந்திரரே சூரியரே..

இந்திரனே மருதைய்யா.

மழை நல்லா பெய்ய வேணும்..

மக்களளெல்லாம் வாள வேணும்..

சுதந்திரம் கிடைத்தது போல பாடிக் கொண்டே துள்ளி குதித்து ஓடினான் சிறுவன்.

”பேரனுக்கும் சொல்லி குடுத்துட்டீங்க போல..” என்றாள் அபிநயா. கால்களை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

”கூடவே கெடக்கற பய.. தன்னால வந்துடும்.. ஆளுங்கள காணவும் வெக்கம் வந்துடுச்சு பயபுள்ளக்கு.. இல்லேன்னா வெளுத்து வாங்கிடுவான்..” என்றார் பெருமையாக. கணவனும் மனைவியுமாக தனித்து விடப்பட்டதில் பூசாரிக்கு பேச்சு வளர்க்க தோதுவாகிப் போனது. வெளியூரில் பிழைக்க சென்றோர்க்கு சொந்த ஊரின் மீது ஒரு கரிசனம் இருக்கும். நேக்கு பார்த்து தட்டு விட்டால் பேச பேச காசுதான்.

”பெரியவரு வூட்ல ராம லச்சுமணன்மாரி ரெண்டே பசங்கதான்.. பெரியய்யாவும் சின்னவருந்தான்.. சிறு வயசுலயே பெரியவரோட அப்பா பொண்டாட்டி புள்ளங்கள வுட்டுட்டு போய் சேந்துட்டாரு.. பொம்பளயாயிருந்தாலும் மல்லுக்கட்டா சொத்த காவந்து பண்ணி கொண்டாந்துருச்சு அந்தம்மா.. பெரிய மவன கேக்காம ஒண்ணு கூட செய்யாது.. பெரியவருக்கும் அம்மான்னா உசுருன்னு வச்சிக்கயேன்.. பக்கத்துல கல்லுக்காரன்பட்டியிலதான் மவனுக்கு பொண்ணெடுத்துச்சு.. ஏளைப்பட்ட பொண்ணுன்னாலும் மவாலட்சுமிகணக்கா இருக்கும் பெரியவரு சம்சாரம்.. வீரம்மானு பேரு.. குடும்பத்துக்கேத்த பொண்ணு.. மாமியாட்ட ஒத்த வாருத்த எதுத்துக்கிட்டது கெடயாது.. ஆரு கண்ணு பட்டுச்சோ தெர்ல.. பெரிய வென ஆயி போச்சு அந்த குடும்பத்துக்கு..”

கட்டுக்கழுத்தியம்மனின் கைகள் ஒவ்வொன்றுக்கும் மஞ்சளால் வளையலிட்டார் பூசாரி.

”ஆச ஆசயா கண்ணாலம் பண்ணி வச்சுது பெரிய மவனுக்கு.. ஆனா என்னா..? வம்சம் தளைஞ்சு வாரத பாக்க குடுப்புன இல்லாம போச்சு அந்தம்மாளுக்கு.. சின்னவருக்கு பொண்ணு தேடிக்கிட்டுருந்த தாவுல அரவம் தீண்டி உசுரு அமைஞ்சு போச்சு..”

திருமணமாகி வருடம் இரண்டு கடந்தும் வீரம்மாள் மலடாகவே இருந்தது  மாமியாருக்கு கோபமாக வெளிப்பட தொடங்கியது. மாதாந்திர ஒதுக்கத்தில் பின்கட்டில் தனித்திருப்பவளுக்கு சாப்பாடு கூட சரியாக கிடைப்பதில்லை. கைக்கும் வாய்க்குமே பிரச்சனையான வீட்டில் பிறந்தவளுக்கு பட்டினி கிடப்பதொன்றும் பெரிய விஷயம் இல்லைதான். ஆனால் எதற்கும் எதிர்வினையாற்றாத கணவனும் திரும்பி போகவியலாத பிறந்த வீடும் தனக்கு எதிராக அமைந்ததில் மௌனம் காக்க வேண்டியிருந்தது வீரம்மாளுக்கு. வீரம்மாளின் தாய்க்கு மகளை நினைத்து நெஞ்சுவரைக்கும் கவலை.  எங்கோ உடுக்கடித்து பார்த்ததில் கர்ப்பவாய் திறந்து கிடப்பதாக சேதி வந்தது. சாமியாடியும் அதையே உறுதிப்படுத்த, சற்று நிம்மதியாக இருந்த நேரத்தில்தான் சம்மந்தியம்மாளின் திடீர் மரணம்.

தாயும் மகனுமாக பார்த்த குடும்ப நிர்வாகம். மாமியாரிடமிருந்து திடீரென தன் கைக்கு மாறியதில் திக்குமுக்காடிப் போனாள் வீரம்மாள். சுதாரித்து கொண்டு நிமிர வருடம் ஒன்று ஓடிப் போனது. தாயில்லாத மகன்கள் இருவருக்கும் தாயாகி போனதும் இந்த காலக்கட்டத்தில்தான்.

தன்னை விட இரண்டொரு வயது மூத்தவரான கொழுந்தனிடம் முதலில் தயங்கி தயங்கிதான் பேசினாள் வீரம்மாள். பிறகு கொழுந்தனின் சுபாவம் புரிப்பட்டு போனதில் அதட்டலும் உரிமையுமாக பழக தொடங்கினாள். தொட்டதெற்கெல்லாம் தாயிடம் அபிப்பிராயம் கேட்கும் பழக்கம் அண்ணியிடம் என்றாகி போனது சின்னவருக்கு. “தொட்ட தொண்ணுாறுக்கும் கேட்டுக்கிட்டு கெடந்தா நாளக்கு கட்டிக்கிட்டு வாரவோ கா காசுக்கு ஒன்ன மதிக்க மாட்டா.. சொல்லிட்டேன்.. ஆமா..” என்பாள் கண்டிப்பாக கொழுந்தனிடம்.

“இனிமேட்ல்லாம் மாத்திக்க முடியாதுண்ணி..“ என்பார் சின்னவரும் விடாப்பிடியாக.

மருதமுத்துவுக்கு சித்தப்பன் மூலமாக இந்த கதைகள் அத்துப்படி. புகைப்படத்தில் கூட பார்த்திராத வீரம்மாளின் உருவம் மெல்ல மெல்ல தாயாக அவனுக்குள் குடி புகுந்தது அப்படிதான்.

சரிகை பட்டுச்சேலையும் மல்லிகை மாலையுமாக கட்டுக்கழுத்தியம்மன் அத்தனை நேர்த்தியாகத் தெரிந்தாள். மஞ்சள் கிழங்கு தாலி கழுத்தில் எடுப்பாக தொங்கிக் கொண்டிருந்தது. கழுத்தில் அணிவிக்கப்பட்ட தங்கத்தாலான சங்கிலி சிலையின் வயிறு வரை ஓடியிருந்தது. விசேஷ நாட்களில் கையோடு கொண்டு வந்து அணிவித்து பார்ப்பதில் எல்லோருக்குமே விருப்பமிருந்தது.

”மவராசி போயி சேந்து முழுசா ரெண்டு வருசம் முடியில.. மரிமவளயுமில்ல கூப்டுக்குச்சு.. சாவற வயசா தாயி அது.. ஒங்காம நொங்காம நெருப்புல்ல தின்னுட்டுப் போச்சு அந்த புள்ளத்தாய்ச்சி பொண்ண..”.

”பிள்ளத்தாய்ச்சியா..” சின்னவரிடம் ஆச்சர்யமாக கேட்டான் மருதமுத்து அன்று இரவு.

”ஊரு மருவாதி.. பேரு மருவாதின்னு ஒண்ணு இருக்குல்ல.. ஆயிரம் பொய்ய சொல்லி கண்ணாலமே பண்ணுதுவோ.. இது சாவு தானே..” என்றார் சின்னவர். முகம் சிறுத்திருந்தது. அன்று இரவு முழுக்க சுமையை இறக்கவும் ஏற்றவுமான மனநிலையில் இருவரும் இருந்தனர்.

சம்மணமிட்டு மரத்திருந்த கால்களை சட்டென்று உதறி கொண்டு எழுந்தான் மருதமுத்து. “அபி.. பாப்பா இந்நேரம் முழிச்சிருப்பா.. போய் பாத்துட்டு வர்றேன்..”

கை குறைய குறைய பூசாரிக்கு கதை சொல்லும் ஆர்வம் மிகுந்துப் போனது.

“செத்துப் போன ஆத்தாதான் மவளா பொறக்குமுன்னு பெரியவரு கனவா கண்டுருக்க.. எல்லாமே நெருப்புல பொசுங்கி போச்சு தாயீ.. பொசுங்கிப் போச்சு..” அப்போதுதான் நிகழ்ந்தது போல் தான் பார்த்தேயிராத இறப்பு பற்றி உருக்கமாக சொன்னார் பூசாரி.

”அன்னீக்கு வெறுத்துப் போனவருதான் பெரியவரு.. அதுக்குபொறவு ஆளு எங்கயும் தட்டுப்படுல.. தேடாத எடம் பாக்கியில்ல.. சின்னவருக்கு ஒரேடியா பதைக்குது.. படுத்தபடுக்கையாவே ஆயிட்டாரு.. மருதைய்யனுக்கு எதோ கொறப்பாடாருக்கும்.. கடா சோறு போட்டு எச்சி எல எடுக்கணும்னு எங்கப்பன்தான் சொன்னாராம்.. கடா வெட்டி முளுசா ஏழு நாளு களியில பாத்துக்க.. தாயீ.. ஒம் மாமனாரு திரும்பீட்டாரு.. மருதய்யன் அம்புட்டு பவுருஃபுல்லு..  குரலை தழைத்துக் கொண்டார். “சின்னவருக்கு எங்கிட்டுருந்துதான் அம்புட்டு தகிரியம் வந்துச்சோ தெர்ல.. பொறந்தவன மொகத்துக்கு மொகம் கூட பாக்க முடியாதுன்னுட்டாரு.. அம்புட்டு கோவம் அண்ணாரு மேல.. பொறவு..? அம்புட்டு பேரும் வுட்டுட்டு போயீட்டா அந்த பயங்கொள்ளிப்புள்ள என்னா செய்யும் சொல்லு தாயீ..“

”எங்க போயிருந்தாராம்..?”

”ஆருக்கு தெரியும்.. அவருக்கிட்ட கேக்கற அளவுக்கு அம்புட்டு தகிரியம் ஆருக்கு இருக்கு.. பொண்டாட்டி நெனப்பு தாங்காம போனவரு அந்த மவராசிய செலயா செதுக்கில்ல கொண்டாந்தாரு..”

”சின்னவர் கோவமெல்லாம் எப்போ தீந்துச்சு..?”

”ஒத்த ஒடம்பொறப்புங்க.. எம்புட்டு நாளு அப்டியே இருப்பாவோ.. எல்லாம் மாறிப் போச்சு தாயீ.. பொறவு நல்ல நாளா பாத்து செலய இங்க கொண்டாந்து வச்சாச்சு.. அதுலேர்ந்து ஊருக்காரங்களுக்கு கண்கண்ட தெய்வமா ஆயிட்டா.. அவள கேக்காம ஒரு கண்ணாலம் கூட நடக்கறதில்ல.. சுமங்கலி தெய்வமில்லயா.“

படைப்பதற்காக எடுத்த வந்த பட்டுச்சேலையை பூசாரியிடம் நீட்டினாள் அபிநயா. “கவர் மேலயே சேலய வச்சுடுங்க.. எண்ணெய் கறை பட்டுடும்..”

”செரி தாயி.. சாக்கெட்டு..”

”பொடவைக்குள்ளயே மடிச்சு வச்சிருக்கன் பாருங்க..”

நெகிழிப் பையை கட்டுக்கழுத்தியம்மன் முன் பரப்பி பட்டுப்புடவையையும் சாக்கெட்டையும் வைத்து அதன் மீது வெற்றிலை பாக்குடன் ஒரு இணுக்கு பூவும் மஞ்சள் உருண்டையும் வைத்தார் பூசாரி. பூசாரியின் மனைவி சர்க்கரை பொங்கல் நிறைந்த பெரிய அன்னக்கூடையின் இருபக்க பிடிகளை பிடித்து துாக்க முடியாது துாக்கி வந்து அம்மனுக்கு முன் வைத்து மூங்கில் தட்டால் மூடினாள். நெய்யும், வறுத்த முந்திரியும் வெல்ல வாசமும் மூங்கில் தட்டை மீறியது.

”சாம்ராணி பொக போடணும்.. அடுப்ப அமைக்கங்குள்ளயும் நெருப்பு கரிய எடுத்து வச்சுடு.. மறந்துபுடாத..” என்றார் மனைவியிடம்.

“ஆங்.. தெரியாதாக்கும்..“

”நம்பள எதுத்துக்கலேன்னா இந்த பொட்டச்சிக்கு கண்ணுல இம ஒட்டாது..” சந்தோஷமாக சிரித்தார் பூசாரி. ”வெளையாட.. புடிக்கன்னு ஒருத்தி இருந்துட்டால்ல தேவல.. பொண்டாட்டி போன பொறவு மறு கண்ணாலமே வேணாம்னு கச்ச கட்டிக்கிட்டு நின்னுட்டாரு பெரியவரு.. சின்னவரும் தனக்கு வேணாமுன்னு அண்ணனுக்கு தோதா ஆமாசாமி போட.. அதுக்கு பொறவு ரெண்டு பேத்துக்கும் தொறவு வாழ்க்கதான்.. நெலம் நீச்சுக்கு பஞ்சமா.. வூடு வாசலுக்கு கொறப்பாடா..? ஊரே சொல்லி சொல்லிதேன் ஒன் புருசன உள்ள கொண்டாந்தாங்க.. அதுமுட்டுந்தா ஊர் பாடு.. பொறவு பெரியவருக்கு எல்லாமே மவன்தான்..”

உடன்பங்காளியின் மகன் மருதமுத்துவை தத்தெடுக்கும்போது பெரியவருக்கு வயது ஐம்பதைக் கடந்திருந்தது. ஆறு மாத குழந்தையாக அத்தனை சொத்துக்கும் வாரிசாக வந்த மருதமுத்துவுக்கு தாய் இல்லாததே பெரிய குறை என்பது தாமதமாகதான் புரிந்தது சின்னவருக்கு. தெரிய வந்த பிறகு அவர் தாயுமாகி போனார். இப்போது கூட கிராமத்துக்கும் பெங்களுரூக்குமான இடைவெளியை கடந்து கடந்தே குறைத்து வைத்திருந்தார்.

பெரியவர் அருகில் வருவது தெரியவும் பூசாரி சத்தமாக  பாட தொடங்கினார்.

காட்டு வழியில கள்ளர் பயமில்ல..

எங்க வீட்டு கொல தெய்வம் வீரம்மா காக்குமடா

நிறுத்து வண்டியன்னு கள்வங்க கேக்கயிலே

வீரம்மா பேர சொன்னா காலனும் தெறிச்சுடுவான்..

“தவுசுப்புள்ள சமயல தொடங்கியாச்சு.. லிஸ்டுல வுள்ளது ஒண்ணும் வுட்டுடுலயே..“ என்றார் பெரியவர் பூசாரியிடம்.

”இல்லீங்கய்யா.. ஆனந்தேன் மளிகயில எல்லாம் செட்டா வாங்கிட்டேங்கய்யா..”

“நல்லதா போச்சு.. செரி.. வேலையாயிடுச்சுல்ல.. இன்னும் பத்து நிமிசத்துல நல்ல நேரம் தொடங்குதுன்னு காலண்டர்ல போட்டுருக்கான்..”

”எல்லாம் முடிஞ்சாச்சுங்கய்யா..”

”நீங்க ஏம்மாமா மேரேஜ் பண்ணிக்கல..?” பெங்களுருக்கு வந்த போது சின்னவரிடம் கேட்டாள் அபிநயா. பெரியவரிடம் இப்படியெல்லாம் நெருக்கமாக உணர்வதை நினைத்துக் கூட பார்க்கவியலாது அவளால். அவர் தன்னிடம் மொத்தமாக பத்து வார்த்தைகள் பேசியிருந்தால் அதிகம் என நினைத்துக் கொள்வாள்.

”ஒத்த பொம்பள ஒம்போது புள்ளய வளத்துடும்.. ஆனா ரெண்டு ஆம்பளங்க ஒத்தப் புள்ளய  வளக்கக்குள்ளயும் நாக்கு தள்ளிப் போச்சும்மா..”

”மாமா.. நா ஒண்ணு கேட்டா நீங்க ஒண்ணு சொல்றீங்க..”

”என்னமோ தோணல ஆயி..” என்றார் சின்னவர்.

“அவுருக்கு சாமி கும்புட்டுக்கிட்டே கெடந்தா பத்தாது..?” என்றான் மருதமுத்து கிண்டலாய்.

“எனக்கு மழையும் ஆவல.. தீயும் ஆவல.. பயங்கொள்ளி ஆம்பளய எந்த பொட்டச்சிக்கு புடிக்கும் சொல்லு..”

அன்றைய இரவு சின்னவருக்கும் மருதமுத்துவுக்கும் கனமாக நகர்ந்துக் கொண்டிருந்தது.

கல்லுக்காரன்பட்டியில் திருவிழா நடந்த சமயம் அது. நட்சத்திரங்களற்ற இரவு வானம் கருங்குடையாக கவிழ்ந்து கிடந்தது. எப்போதும் போல இரவு உணவுக்கு பின் வயல்காட்டுக்கு கிளம்பி விட்டாலும் தலையை உயர்த்தி வானத்தை பார்க்கவே நடுக்கமாக இருந்தது சின்னவருக்கு. மோட்டார் அறை கதவை இழுத்து சார்த்தி உட்புறம் தாளிட்டுக் கொண்டார். அண்ணி இழுத்து வைத்து பரிமாறியதில் அளவுக்கதிகமாவே சாப்பிட்டாயிற்று. தலை வரை போர்வையை இழுத்து விட்டுக் கொண்டு கயிற்றுக் கட்டிலில் சாய்ந்தவர் அப்படியே துாங்கிப் போனார். இரவு வானத்தை மின்னல் வெட்டியதை சிமிண்ட் கிராதி மௌனமாக கடத்திக் கொண்டிருந்ததில் திடுக்கிட்டு விழிப்பு வந்தது. நடுக்கமாக இருந்தது. பெருமழை வருவதற்குள் கிளம்பி விட வேண்டும்.  “பச்சப்புள்ள பச்சப்புள்ளன்னு முந்தானைக்குள்ள சுருட்டி வச்சு வளத்துட்டு எனக்கென்னான்னு வுட்டுட்டு போயிடுச்சு..” அம்மாவின் மீது கோபமாக வந்தது அவருக்கு. ஐந்து நிமிட நடை துாரம்தான். கால்களை எட்டி போட்டு நடந்தார்.

கிழக்கு பார்த்த வீடு. ஓட்டு வீடு என்றாலும் அளவில் பெரிய வீடு. நீண்டு அகன்ற பட்டாச்சாலை. அதன் முடிவில் இருபுறமும் அறைகள். இருபக்க அறைகளையும் பெரிய முற்றம் இணைத்தது. சமையலறையை நெற்குதிரும் தானிய மூட்டைகளும் நிறைத்திருக்கும். முன்புற திண்ணையையொட்டி இறக்கப்பட்ட கீற்றுக் கொட்டகையில்தான் சமையலெல்லாம்.

கொண்டான் கொடுத்த சனங்களெல்லாம் கல்லுக்காரன்பட்டியில் முகாமிட்டு விட ஊர் அரவற்று கிடந்தது. வீரம்மாளுக்கும் போக ஆசைதான். ஆனால் கணவனை மீறி எதுவும் செய்து விட முடியாது. மாவிளக்கு மாவும் அதிரசமுமாக மகளை பார்க்க வந்திருந்தாள் வீரம்மாளின் தாய். தனது பலவீனம் குறித்து அண்ணிக்கு தெரிந்திருந்தாலும் எப்போதும் போல இன்றும் தயக்கமாகதான் இருந்தது சின்னவருக்கு. போதாக்குறைக்கு சம்பந்தியம்மாள் வேறு.

திடீரென்ற ஏற்பட்ட விழிப்பில் கண்களை திறந்து பார்த்தாள் அபிநயா. கணவனின் படுக்கை காலியாக இருந்தது. தலையணையை விட்டு நகர்ந்துக் கிடந்த மகளை இழுத்து தலையணையில் கிடத்தி விட்டு கதவை திறந்து முன்னறையை எட்டிப் பார்த்தாள். அப்பாவும் மகனும் முக்கியமான முக பாவனைகளோடு பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. “இன்னுமா துாங்கல..“

“.நீ துாங்கும்மா.. வர்றேன்..” என்றான் மருதமுத்து.

”என்னாதான் பேசுவீங்களோ.. குசுகுசுன்னு..” மகள் விழித்துக் கொள்ளக் கூடாது என்ற அக்கறையில் மிக மெதுவாக கதவை மூடி உட்புறமாக தாழிட்டுக் கொண்டாள் அபிநயா.

சமையலறையை கடந்து விட்டால் யார் கண்ணிலும் பட வேண்டியிருக்காது. வேகமாக வந்தவர் சுருட்டின் ஒற்றை நெருப்பில் தயங்கி நின்றார். கீற்றுக் கொட்டகையில் பேச்சுக் குரல் வேறு கேட்டது.

“மாப்ளக்கிட்ட சொல்லிக்கிட்டேன்.. மழ வர்றதுக்குள்ள நா கௌம்பறேன்.. ஒங்கப்பாரு கெடந்து கத்தும்..” சம்பந்தியின் குரல்.

”ம்க்கும்.. மணி பத்தாச்சு.. இந்நேரங்காட்டியும் எங்க போவ.. இங்ஙனயே படுத்துட்டு காலைல கௌம்பு..”

”காரு புடிச்சா போறன்..? ஊரு சனமே திருளாவுல கூடிக் கெடக்கு.. என்னைதான் பெசாசு புடிக்குதாக்கும்..”

“எம்மா.. செத்த இருந்துட்டு போ.. ஒன் வூட்ட ஆரும் துாக்கீட்டு போயிர மாட்டாவோ..”

தாயும் மகளும் பேசிக் கொண்டிருக்கும்போதே நைசாக நழுவி உள்ளே ஓடி விட வேண்டியதுதான். கால்களை ஒரு எட்டு வைத்தவர் இன்னும் சுருட்டின் தீ கங்கு தெரிவதை பார்த்து விட்டு தயங்கி நின்றார்.

”புடிச்சா மொசலுக்கு காலு மூணுன்னு நிப்ப..“ கூரைக்குள் சொருகிக் கிடந்த பாய் தலையணையை உருவும் சத்தம் கேட்டது.

“நா கொட்டாயிலயே படுத்துக்கறன்.. நீ உள்ள போ.. மாப்ள காத்துக்கிட்டுருப்பால..“

”உள்ள போயீ..? எங்க படுக்க..? பட்டாச்சாலல கெடக்கறதும் ஒண்ணுதான்.. இங்ஙன படுக்கறதும் ஒண்ணுதான்..”

”ஏன்டீ.. வெலக்காயிட்டீயா..?” கவலை தோய்ந்திருந்தது சம்பந்தியின் குரலில்.

”சும்மா கெடம்மா.. புள்ளயெல்லாம் மந்திரத்துல மாங்கா காய்ச்சாதான் வரும் பாத்துக்க..”

“மாப்ள ஊர்லதான இருக்காரு..”

”ஊர்ல இருந்தா மட்டும்..? எல்லாம் தனியாதான் படுக்கறது..”

”அடிப்பாவீ.. எம்புட்டு நாளா..?“

”ம்ம்.. கண்ணாலமான நாளாதான்…”

”என்னாடீ சொல்ற..?“

”சொல்றன் சொரக்காயிக்கு உப்பில்லேன்னு…” அழுகிறாள் போலும்.

“அடிப்பாவீ.. மருமவள பிரிச்சு படுக்க வச்சுட்டுதான் ஒன் மாமியாரு வண்ட பேச்சு பேசுனாளா..?”

”நா சொன்னாதானே அதுக்கு தெரியும்.. அவங்கம்மா இருக்கவரைக்கும் ஒரே ரூம்புலதான் படுப்போம்.. அவங்கம்மாவுக்காவ.. அம்புட்டுதான்..”

”அடிப்பாவீ.. படபடங்குதுடீ எனக்கு.. இம்புட்டு பெரிய விசயத்த ஏன்டீ மறச்சே..?”

”ம்ம்… தெரிஞ்சா நீ என்ன பண்ணுவே..? ஒன் வூட்டுக்கு வந்துதான் நா என்னா பண்ணுவேன்.. பேசாம படு.. அந்த மனுசன் சுருட்டு புடிக்க வார நேரந்தான்..”

”வருட்டும்.. வருட்டும்.. என்ன பயமா..? பொளுது விடியுட்டும்.. கேளுங்க இந்த அக்குறும்பத்தன்னு பஞ்சாயத்த கூட்டீட மாட்டேன்..? கஞ்சிக்கு செத்தவங்கன்னா மானம் கெட்டவங்கன்னு நினைச்சு எம்புட்டு பேச்சு பேசியிருப்பா ஒம் மாமியாருகாரி.. ஏயப்பா.. ஒம் புருசன்மாரி சால்சாப்புகார ஆம்பளய என் ஆயுசுக்கும் பாத்ததில்லடீ.. ஊம ஊர கெடுக்கும்ன்னு சும்மாவா சொல்லி வச்சாவோ.. ரெண்டுல ஒண்ணு தெரியாம நவுர மாட்டேன்.. பாத்துக்க..” ஆத்திரமும் ஆவேசமுமாக பேசினாள் சம்பந்தி.

பெரியவருக்கும் ஆத்திரமும் ஆவேசமும் வந்தது. தீக்குச்சியை உரசி கூரை மேல் விட்டெறிந்த பிறகும் கூட அது நீடித்தது. கூரை நெருப்போடு விறகடுப்பில் லேசான கனைப்பிலிருந்த நெருப்பும் லாந்தர் நெருப்பும் சேர்ந்துக் கொண்ட பிறகும் கூட அது தணியாதிருந்தது. கொட்டகைக்கு பின்னே நடுங்கி படபடத்து கிடந்த சின்னவரை பார்க்கவியலாத அளவுக்கும் அது கண்களை மறைத்தது. “சோத்துக்கு நாதியத்த பொட்ட செறுக்கிக்கு ஒடம்பு சொகம் கேக்குதோ.?“

மருதமுத்து மகளை துாக்கிக் கொண்டு வந்தான்.

மீதமிருந்த கதம்ப மாலையை அங்கிருந்த உண்டியலின் கழுத்தில் சுற்றி விட்டார் பூசாரி. “இன்னும் செத்த நேரத்துல இந்த பூவெல்லாம் ஆடு வவுத்துக்குள்ள போயி உருமாறிடும்.. எல்லாம் அப்டிதான்.. தெய்வங்கூட அப்டிதான்.. பதிமூணு தலமொறைக்கு பிற்பாடு அதுங்க கூட மாறிடும்..”

“அதெப்புடீ..?“

”பதிமூணு சென்மத்தோட ஒரு வம்சத்து கணக்கு முடிஞ்சுடும்னு ஒரு நம்பிக்க தாயீ… நம்ம கட்ளத்தி ஆத்தாளுக்கு இதாம் மொத சென்மம்..”

”அதென்ன இப்டியொரு பேரு..?

”புருசன் இருக்க கட்டுக்களுத்தியா போனவ இல்லியா.. அதான்.. கன்னிமாரா இருக்குற சின்ன பொண்டுவ போயிடுச்சுங்கன்னா கன்னிசாமிம்பாங்க.. இந்த பொண்டுவதான் அந்தந்த கொலத்த காக்கற கொலதெய்வம் தாயீ.. வருசந்தவறாம பொங்க வச்சு நேத்தி செஞ்சுட்டோம்னு வையி.. அதுங்களே கொலத்தி விருத்தி பண்ணிடுங்க.. பெரியய்யா செத்து போன பொண்டாட்டிய தெய்வமாக்கி கும்புட்டுதால என்னா கெட்டா போயீட்டாரு..? கட்டுக்களுத்தியா வயித்து புள்ளத்தாய்ச்சியா போன புள்ள அது.. தான் இருந்துட்டு போன வமுசத்த காசும் பணமுமா சீரும் பேருமாதானே வச்சிருக்கா… இந்த தெயிவத்த அடுத்த தலமொறக்கு சேக்கற பொறுப்பு ஒங்கிட்டதான் தாயீ இருக்கு.. மொதல்ல ஒரு ஆம்பளப்புள்ளய பெத்தெடு தாயீ..”

கோயிலுக்கு முன் கும்பல் சேரத் தொடங்கியது.

”அய்யா.. பூசை போட்டுடுலாம் வாரீங்களாய்யா..” கறிவேலங்காட்டில் பார்வையை பதித்து கொண்டிருந்தவரை நோக்கி குரலெழுப்பினார் பூசாரி.

பெரியவரும் சின்னவரும் இம்மாதிரியான நேரங்களில்தான் சேர்ந்து நிற்பதை பார்க்க முடியும். பெரியவரையொட்டி மருதமுத்து குடும்பத்தோடு நின்றிருந்தான்.

முதலில் மருதைய்யனுக்கு சுத்த பூசை போடப்பட்டது.

ஊருக்குள்ள ராசாவாம்..

ராமரு.. லெட்சுமணனாம்..

கொடுக்க புடிக்கையில கர்ணரு பரம்பரையாம்..

பேரு பெத்த சிங்கம் ரெண்டும்

போட்டதம்மா சின்னக் குட்டி

தாயான தாயம்மா.. வீரம்மா காத்திடம்மா.“

சாம்பிராணி புகையால் மணத்து கிடந்தது அந்த இடம் முழுவதும்.

 வாக்கப்பட்ட வூரு இது..

வாழ வச்சு பாரு..தாயி..

கொறவுப்பட்ட ஆயுசுகாரி..

நெறவுப்பட்ட வாழ்க்ககாரி..

நாடு செழிக்க வச்சிடம்மா..

காடு வெளைய காத்திடம்மா..

மழையா பேஞ்சுடம்மா..

நெல்மணியா வௌஞ்சிடும்மா..

கணீரென்ற அவரின் குரல் கூடியிருந்தோரின் உடலை சிலிர்க்க வைத்தது.

“பொண்டுவல்லாம் கட்ளத்தியம்மன கும்புடுக்கங்க..” கூட்டத்தை நோக்கி சத்தமிட்டார். பெரிய சூட வில்லையை இட்டு பெரு நெருப்பாக்கி அம்மனுக்கு தீபாராதனைக் காட்ட கும்பல் கன்னத்தில் போட்டுக் கொண்டது.

மனைவியில் கையிலிருந்த மகளின் கரங்களை குவித்து வைத்தான் மருதமுத்து. “பாப்பாவ நல்லா படிக்க வையீன்னு கன்னிசாமிய கும்புட்டுக்கம்மா..”

புரியாமல் கணவனைப் பார்த்தாள் அபிநயா. ”பச்சப்புள்ளக்கு சரியா சொல்லிக் குடுங்க..” பூசாரியின் படிப்பினையில் பொறுப்பு வேறு சேர்ந்திருந்தது அவளிடம்.

”எல்லாம் சரியாதான் சொல்றேன்..” என்றான் மருதமுத்து சத்தமாக.

***

 

​எதற்காக எழுதுகிறேன் – ஆரூர் பாஸ்கர்

ஆரூர் பாஸ்கர்

arur basakr

 

எழுத்து ஓரு அழகிய கலைவடிவம். அந்த விதை பொதிந்த மனம் நடைமுறை சிக்கல்களையும், தடைகளையும் தாண்டி முட்டி மோதி வேர்பிடித்து, துளிர்விட்டு மேன்மேலும் எழுதி எழுதி தன்னை தானே வளர்த்துக்கொண்டு கிளை பரப்பி பிரமாண்ட விருட்சமாகிறது.

பெய்யும் மழை போல ,அடிக்கின்ற அலை போல, அசையும் காற்று போல. எங்கேனும், என்றேனும் யாரேனும் வாசிப்பார்கள், ரசிப்பார்கள் எனும் நம்பிக்கையில் ஓரு படைப்பாளி தன் தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறான்.

அது பாடும் பறவைகளை , ஓடும் நதிகளை, குளிரும் நிலவை, சுடும் சூரியனை வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஓன்று தொடர்ந்து இயக்கிக் கொண்டிருப்பதைப் போன்றது.

அப்படி அன்றாட வாழ்வின் நெருக்கடிகளையும் பிடுங்கல்களையும் தாண்டி ஏதோ ஓன்று என்னை எழுத உந்தித்தள்ளுகிறது. தொடர்ந்து எழுத, எழுத எதை எழுத வேண்டும்- எதை எழுத வேண்டாம் எனப்பிடிபடுகிறது. எழுத்து என்னுள் பல திறப்புகளைத் திறந்துவிட்டுச் செல்கிறது.

துக்கம், வலி, மகிழ்ச்சி, கோபம்,பதற்றம் என மனத்தில் தோன்றிய ஏதோ ஓன்றை எழுதி முடித்தபின் எனக்குள் ஓரு பெரிய நிம்மதி. ஆசுவாசம், ஆனந்தம். அதையும் தாண்டி அகமனத்தின் எல்லா அடுக்குகளிலும் போராட்டம் அடங்கிய, அமைதியான ஓரு ஆழ்ந்த ஜென் மனநிலை. அது வெயில் புழுங்கும் வீட்டின் ஜன்னல்களை திறந்தால் வீசும் குளிர்ந்த வெளிக்காற்றின் சுகம் போல.

சிலர் சொல்வதுபோல பணத்துக்காக, புகழுக்காக எழுதலாம்தான். ஆனால் அது பசியில்லாமல் உண்ணும் விருந்துபோல -ருசியிருப்பதில்லை.

அதே சமயத்தில் ஓரு படைப்பாளி தன் படைப்புகளை இந்தச் சமூகத்தின் முன் வைத்து அதற்கான நியாயமான அங்கீகாரத்தை, விமர்சனத்தை எதிர்பார்த்தே காத்திருக்கிறான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

(ஆரூர் பாஸ்கரின் ‘பங்களா கொட்டா’ அகநாழிகை பிரசுரமாய் அண்மையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது)