Author: பதாகை

Train Graffiti – Nakul Vāc

image1

From Newyork Times


The No.5 train
roaring down rat alleys
slamming out the tunnel
going whop-pop onto the high tracks

Me riding the sky
in the heart of the inner city
Over the whole burnt
and rusted country

Unseen
Unknown
Making the art of the backstreets talk

The trains go rattling over
garbagy Streets
Past the dead-eye windows of
empty tenements

That have people living there
Even if you don’t see them

Now, see
Our tags
Our cartoon figures
Bright and Rhyming poems

Our art that can’t stand still
Climbing across your eyeballs
Night and Day

Flashing those colors in your face
The flickery jumping art
of slums and dumpsters
As if
they were your movie
Motherfucker

A Found Poem, discovered in  pages 440-441 of the Scribner edition of Don Delillo’s Underworld

விட்டத்தைத் தொடுதல் – இலக்கிய மிகையுணர்ச்சி குறித்து: NICK RIPATRAZONE

மொழியாக்கம்: பீட்டர் பொங்கல்

nick_photo

http://nickripatrazone.com

மே 8, 2007 அன்று ஒரு கட்டுரை என்னை அழ வைத்தது. நியூ ஜெர்சியில் பெட்மின்ஸ்டரில் ஒரு பொது நூலகத்தில், என் மனைவி வேலையிலிருந்து திரும்பக் காத்திருந்தேன். அதற்கு முந்தைய ஒரு மணி நேரம் நான் சில கல்லூரி மாணவர்களுடன் கூடைப்பந்து மைதானமெங்கும் ஓடிக் களைத்திருந்தேன் (‘running full-court press’). இப்போது கூடைப்பந்துக்கு பதில் நூலகத்தின் நீண்ட மேஜைக்கும் புஷ்கார்ட் பரிசு 2006ஆம் ஆண்டு பதிப்பின் திறந்திருந்த அறுபத்து ஏழாம் பக்கத்துக்கும் வந்திருந்தேன். பிரையன் டாயில் எழுதிய “யோயாஸ் வோலாடோராஸ்”  . கட்டுரையின் இறுதிப் பகுதியைப் படிக்கும்போதுதான் நான் அழுதேன். அந்தக் கண்ணீர் முழுமையாகவே எதிர்பாராதது. என் வலப்புறம் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவனிடமிருந்தும் என் இடப்புறம் இருந்த சிறுவனுக்கு பாடமெடுத்துக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்தும் நான் அழுகையை மறைத்துக் கொண்டேன், லேஸ் அவிழ்க்கப்பட்ட, கணுக்காலைத் தாண்டி உயர்ந்திருந்த என் ஹைடாப்களை நகர்த்திக் கொண்டேன், முட்டிக்குக் கீழ் நீண்ட ஜிம் ஷார்ட்ஸ்களை இழுத்து விட்டுக் கொண்டேன். நான் இருபத்து ஆறு வயது ஆண், என்னை அழ வைப்பதற்கல்ல இலக்கியம்.

நான் எழுதும் அறையின் வாசல் கதவின்மேல் உயரத்தில் என் தாத்தாவின் சிலுவை தொங்கிக் கொண்டிருக்கிறது. பெல்ட் ஒன்றால் செலுத்தப்பட்ட மோட்டாரின் ஆற்றலைப் பயன்படுத்தி என் பெற்றோருக்கு அவர் ட்ரை சிங்க்  செய்து கொடுத்தார். திடுக்கிட்ட இதயம் போல் அந்த மோட்டார் அடிக்கடி துள்ளும். இப்போது அந்த ட்ரை சிங்க் எங்கள் வீட்டு வாசல் அறையில் இருக்கிறது. நான் பதினெட்டு மாத குழந்தையாக இருந்தபோது தாத்தா இறந்தார். ஆனால் நான் இன்னும் அவரைச் சுமந்து கொண்டிருக்கிறேன். நான் அவரது தோல், அவரது ரத்தம், அவர் மகனின் மகன். நாங்கள் இருவரும் வாழ்வைப் பகிர்ந்து கொண்ட குறுகிய காலத்தில், அவர் என் பெற்றோர் வசித்துக் கொண்டிருந்த வீட்டுக்கு ஒரு அறை செய்து தந்தார். ட்ரைவ்வேயில் இருக்கும் உடைந்த மரத்துண்டங்களுடனும் மரத்தூள்களுடனும் நான் நின்று, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். எப்போதும் அவருடன்தான் இருப்பேன் என்பதால் அம்மா வந்து என்னை வீட்டுக்குள் தூக்கிப் போவாள். “அவன் பெரிய பையன் ஆயிட்டான்,” என்று அவர் என்னைப் பற்றிச் சொல்வார், இப்போது அந்தச் சொற்களில் என் அப்பாவின் குரலின் ஏற்ற இறக்கங்களைக் கேட்க முடிகிறது.

நியூ ஜெர்சியில் உள்ள லேக் மோஹாக்கில் என் தாத்தா வீடு கட்டும் தொழில் செய்தார். அவர் ஊர் திரும்பியதும் தனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டார். அது கட்டி முடிக்கப்படும்வரை அதுவரை செய்து முடித்திருந்த அறைகளில் அவரது குடும்பத்தினர் தங்கியிருந்தனர். அவர் எப்போதும் இரவில்தான், ரெஸ்டாரண்டுகள் மூடப்பட்டபின், கடைகள் கதவடைக்கப்பட்டபின் வேலை செய்வார். அவரது கெட்டித்து போன கைகள் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காக அரை இருளில் ஓர் உலகம் படைத்துக் கொண்டிருக்கும். இப்போதும் என் அப்பா தாத்தாவின் கருவிகளைப் பயன்படுத்துகிறார்: க்ராஸ்-கட் ஸா, ரிப் ஸா, உளி, குத்தூசி. அவற்றின் உலோகம் இன்றளவும் கூர்மையாய் இருக்கிறது.

நான் ஒருமுறைதான் என் அப்பா அழுது பார்த்திருக்கிறேன். அவரது உள்ளங்கைகள் டைனிங் ரூம் டேபிளில் அழுந்தியிருந்தன, என் தாத்தாவின் மறைவுக்குப்பின் அவரது அபார்ட்மெண்ட்டை ஒழிப்பது குறித்து அப்பா பேசிக் கொண்டிருந்தார். நான் அறிந்த அனைவரையும் விட அதிக உடல் பலம் கொண்டவர் அவர், தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார். அப்பா தன் குழந்தைகளில் எவரையும் அழ வைத்ததில்லை.

ஆண்கள் ஏன் அழுகையை அடக்கிக் கொள்கிறார்கள்? எழுத்தாளர்கள் ஏன் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்வதில்லை?

நான் எப்போதும் உணர்ச்சியற்றவனாக இருந்ததில்லை. ஆனால் ஒரு எழுத்தாளனாகவும் வாசகனாகவும் இருந்ததில் பெரும்பாலும் எழுத்தில் உணர்ச்சியைத் தவிர்த்திருக்கிறேன். இதற்கு ஒரு காரணம், ஜான் கார்ட்னரின் “எழுத்துக் கலை”யாக இருக்கலாம் . “பொதுப் பிழைகள்” என்ற அத்தியாயத்தில் அவர், புனைவில் மிகையுணர்ச்சி வெளிப்படுவதை “உத்திப்” பிழை என்று குறிப்பிடுவதில்லை. அவர் அதை “ஆன்ம” குற்றம் என்றே அழைக்கிறார். புனைவுகளில் மெய்யுணர்ச்சியும் மிகையுணர்ச்சியும் வேறு என்று பிரித்துப் பார்க்கிறார் அவர். தக்க அளவில் வெளிப்படும் உணர்ச்சிகளும் உணர்வுகளும் மெய்யானவை. எழுத்தாளன் “பொதுவாக ஏதோ ஒரு வகையில் ஏமாற்றுவதால் அல்லது மிகைப்படுத்துவதால் அடையப்பட்டு, போலித்தனமாய் ஒலிக்கும்” உணர்ச்சி அல்லது உணர்வு மிகையுணர்ச்சி என்கிறார் அவர். நான் கார்ட்னரை சிறிது பிழைவாசிப்பு செய்திருக்கிறேன் என்பது இப்போது தெரிகிறது. “உணர்ச்சி இல்லாத புனைவு எதற்கும் உதவாதது”, என்பதில் அவர் தெளிவாக இருப்பதை நான் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர் மிகையுணர்ச்சியை விமரிசித்ததைதான் நான் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறேன், அதை ஒரு மன்னிக்கப்படக்கூடிய குற்றமாய் கருதாமல் பெரும்பாபம் என்று புரிந்து கொண்டிருக்கிறேன்.

கார்ட்னர் ஒரு விமரிசகராக அல்ல, உத்தியைக் கற்றுத் தருபவராக நமக்கு பயன்படுகிறார். ஆனால் இந்த விவாதம் நிகழ்ந்த சூழ்நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்வது நமக்கு உதவியாக இருக்கும். 1970களின் பிற்பகுதியில் அவர் எழுத்தாளரும் தத்துவவியலாளருமான வில்லியம் ஹெச். காஸ்உடன் தொடர்ந்து சில விவாதங்களை பொது மேடைகளில் நிகழ்த்தினார். இவற்றில் மிகவும் முழுமையான விவாதம், சின்சினாட்டி பல்கலை புனைவுத் திருவிழாவில் அக்டோபர் 24, 1978 அன்று நிகழ்ந்தது. அன்றைய நிகழ்ச்சியில் “பொறி பறக்க வேண்டும்” என்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் விரும்பினார்கள் என்கிறார் தாமஸ் லெக்ளேயர். அதைச் செய்யக்கூடியவர்களாக இருந்த ஜான் பார்த்தும் ஜான் ஹாக்ஸ்சும் “பரஸ்பரம் பாராட்டிக் கொண்டார்கள்”. அன்று நிகழ்ந்த விவாதம் போன்ற பல நீண்ட, பசையுள்ள விவாதங்களை கார்ட்னருடன் அவரது கார்பன்டேல் இல்லினாயிஸ் பண்ணை சமையற்கூடத்திலும் வேறு இடங்களிலும் செய்திருப்பதாக காஸ் 2003ஆம் ஆண்டு ஒரு மின்னஞ்சலில் விளக்கம் அளித்தார். இருவரும் தம் “வேறுபாடுகளை” விவாதிக்க விரும்பினார்கள், அது குறித்து “அச்சமோ அச்சுறுத்தலோ” இருக்கவில்லை. கார்ட்னர் :”அற விழுமியங்கள் குறித்து நம்பிக்கை கொண்டவராக” இருந்தார். காஸ், “என் அழகியல் விழுமியங்களில் உறுதியாக இருந்தேன். அவர் மானுடத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் எழுதுவதாகச் சொல்லிக் கொண்டார். எனக்கு அதன் புட்டத்தில் உதைப்பதுதான் திருப்தியாக இருக்கிறது”.

“உயிர்ப்பு” கொண்ட, “அறுபடலற்ற” புனைவெனும் கனவு, என்ற கார்ட்னரின் ஆதர்ச நம்பிக்கையை காஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அது கல்விப்புலத்தைவிட, உத்தி குறித்த புத்தகத்துக்கு மட்டுமே ஏற்ற சிந்தனை. இதனால்தான் காஸ், அத்தனை நீண்ட, பசையுள்ள விவாதங்களில் ஈடுபட்டார் என்று நினைக்கிறேன்; கார்ட்னருக்கு புனைவில் உள்ள பெருவிருப்பம் தெளிவாகப் புலப்படுவது. அது பிறருக்கும் தொற்றிக் கொள்வது. ஆனால், கலைக்கென்று ஒரு காலம் இருப்பது போலவே கோட்பாட்டுக்கும் ஒரு காலம் உண்டு என்பதை காஸ் உணர்ந்திருந்தார்.

மிகையுணர்ச்சி குறித்து கார்ட்னர் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லவும் செய்தார். “நிகழ்வுகளே மாபெரும் புனைவுகளில் நம்மை நெகிழச் செய்கின்றன, நிகழ்வுகளைச் சித்தரிக்கும் எழுத்தாளரின் கேவல்களும் ஓலங்களும் அல்ல” என்று பிரகடனம் செய்கிறார். ஆனால் எப்போதும் போலவே இப்போதும் அவர் நிதானப்படுத்திக் கொள்கிறார்: “கதைக்கு முடிவு காணும் இறுதிப் பகுதிகளை மிகவும் வலுவாக அமைத்துவிடக்கூடாது. கதையை அர்த்தமுள்ளதாகச் செய்ய தீவிரமாக முயற்சி செய்வதில், மிகுந்த கவனத்துடன், செயற்கையாக, “பயிலரங்கில் எழுதப்பட்டது போன்ற” உணர்வு ஏற்பட்டு, வாசகர் கவனம் புனைவெனும் கனவிலிருந்து தடுமாறக்கூடும். அதே சமயம், மிகையுணர்ச்சி வந்துவிடக் கூடாது என்றோ எளிய விஷயத்தைச் சொல்வதாக இருக்கக் கூடாது என்றோ மிக நுட்பமாகவும், துணிவில்லாமலும் எழுதிவிடவும் கூடாது- அப்படிச் செய்தால், யாருக்கும், ஆம், விட்டத்தில் சிறகடித்துக் கொண்டிருக்கும் தேவதைகளுக்கும் உன் கதை எதிரொலிக்காது”

கார்ட்னரின் முன்னுதாரணத்தையொட்டி, பிற எவற்றையும் விட, கலவியின் இலக்கிய விவரிப்புகள் உட்பட எல்லாவற்றையும் விட, மிகையுணர்ச்சியை, உயர்வுநவிற்சியுடன்  விவரிக்கப்படும் விசாரத்துடன்/சோகத்துடன்  தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறேன். இங்கே தி மில்லியன்ஸில் “A Sentimental Education: Sex and the Literary Writer ” என்ற கட்டுரையை ஜூலியா ஃபியரோ எழுதியிருந்தார். “உணர்ச்சிகள் உட்பட எல்லாவற்றையும்விட நுண்மையே உயர்ந்தது” என்ற நம்பிக்கை “படைப்பிலக்கிய பயிலரங்குகளில்” போதிக்கப்பட்டதை அவர் இங்கு பதிவு செய்கிறார். மிகையுணர்ச்சி குறித்த விமரிசனங்கள், வெளிப்படையாகவும் உட்கிடையாகவும், அவர் ஒரு பெண்ணாய் எழுதுவதன் மீதான விமரிசனங்களாக உள்ளது என்று தொடர்புபடுத்திக் கொள்கிறார்.

Sarah Vap என்ற கவிஞர், மிக அருமையான ஒரு கட்டுரையில் மிகையுணர்ச்சி குறித்த குற்றச்சாட்டுகளும் பெண்களின் எழுத்து குறித்த குற்றச்சாட்டுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பதை விவாதிக்கிறார். Pleiades இதழின் ஒரு பதிப்பில் நிகழ்ந்த கலந்துரையாடலில், “Poetry, Belligerence, and Shame (PDF)” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. அந்தப் பதிப்பில் உள்ள கட்டுரைகள் ஜே கட்ஸ்சால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. கட்ஸ், 2010 ஆண்டு நிகழ்ந்த AWP கான்பரன்சில் மிகையுணர்ச்சி குறித்த ஒரு கலந்துரையாடலில் தலைமை தாங்கியவர்களில் ஒருவர். நவீனத்துவம், “கவிதையின் இதயத்தைக் குளிர்வித்தது;  வாக்குமூலம் அதை உயிர்ப்பித்தது; பின்-அமைப்பியல் அதன் மீது ஒரு பக்கெட் குளிர்நீர் ஊற்றியது” என்று முன்னுரையில் எழுதுகிறார் கட்ஸ்.

குறிப்பிட்ட ஒன்றை மட்டும் வாசகன் உணரும்படி,  அவனை  “செலுத்த” முற்படும் படைப்பு  என்று அவர் மிகையுணர்ச்சி கவிதையை வரையறை செய்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். மிகையுணர்ச்சி மட்டும் கொண்ட படைப்புகளை அவர் விரும்புவதில்லை என்றாலும், இதயத்தைப் பற்றியிழுக்க முயற்சி செய்யும் கவிதைகளை வெறுக்கும் சிலர் போல் மிகையுணர்ச்சி கொண்ட கவிதைகள் “ஆபத்தானவை” என்று அவர் நினைப்பதில்லை. உணர்ச்சிகளைத் தொட்டெழுப்பும் முயற்சிகளே சிறந்த கவிதைகள் உருவாகக் காரணமாகின்றன என்று அவர் கருதுகிறார். இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பதற்கு பரிசளிக்க வேண்டுமே தவிர மௌனத்தை நோக்கி மழுங்கடிக்கக் கூடாது என்கிறார் அவர். மிகையுணர்ச்சி குறித்த கவனத்துடன் கவிதை வாசித்து, அத்தகைய தருணங்களைச் சுட்டிக் காட்டுவதை அவர் வெறுக்கிறார்- “ஒரு சில வாழ்வனுபவங்களும் படிப்பினைகளும் சிறுமைப்படுத்தப்படுவதற்கும், சில கலாசாரங்களும் அவை உலகை உணரும் வகைப்பாடுகளும் முக்கியத்துவம் இழப்பதற்கும், ஒரு சில பேசுபொருட்களும் குரல்களும் கவிதை வகைமைகளும் “மிகையுணர்ச்சி” என்ற பதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு மலினப்படுத்தப்படுவதற்கும், ஊமையாக்கப்படுவதற்கும், அமைதிப்படுத்தப்படுவதற்கும், மதிப்பிழப்பதற்கும் இப்படிப்பட்ட தணிக்கைக்கும் உள்ள தொடர்பை” அவர் வெறுக்கிறார்.

வாப் சொல்வது உண்மைதான். மிகையுணர்ச்சியின் மிகப்பெரும் குற்றம், “அத்தனையையும் மழுங்கடிக்கச் செய்தல், அத்தனையையும் ஒரு மையத்தை நோக்கி இழுத்துச் செல்லுதல்”- இந்த மையம் இதயத்தை விட்டு வெகு தொலையில் உள்ள இடமாக இருக்கலாம். தன் இலக்கிய நுண்ணுணர்வுகளை கத்தோலிக்க சமயம் கட்டமைத்ததை அவர் உதாரணம் சொல்கிறார்: “என் அத்தனை வழிபாட்டு உணர்வுகளும், ஆனந்தங்களும், தொடர்புறுதல்களும் மிக அதிக சடங்குகள் கொண்ட கத்தோலிக்கம் வாயிலாய் வெளிப்பாடு கண்டன”. ஆனால், அதன் மொழியை அவர் கவிதையில் பயன்படுத்தினால், மிகையுணர்ச்சியுடன் எழுதுகிறார் என்று அடையாளப்படுத்தப்படும் சாத்தியம் இருக்கிறது. மேலும், ஒரு பெண்ணாய், அவர் பேறுகாலம் குறித்தோ தன் குழந்தைகள் குறித்தோ எழுதினாலும், இத்தகைய விமரிசனத்துக்கு ஆளாகலாம். மிகையுணர்ச்சி இலக்கியத்தில் ஒரு குற்றமாக இருக்கலாம், ஆனால் அது பெயர் சுட்டவும் பாலறுக்கவும் உதவும் வழியுமாகிறது.

மேலும் வாசிக்க – http://www.themillions.com/2014/05/reach-the-rafters-on-literary-sentiment.html

எதற்காக எழுதுகிறேன் – தி. வேல்முருகன்

தி வேல்முருகன்

எழுதுவது – அதைப்பற்றி அருமை எழுத்தாள முன்னோடிகள் எல்லாம் நல்லவனவே எழுதி விட்டார்கள்

நான் ஏன் எழுதுகிறேன்?

ஆம் அதை சொல்லிதான் ஆக வேண்டும்

வெறும் வார்த்தை ஐாலத்தை நம்பி கைப்பணத்தை இழந்த அன்று, எப்படி படிப்படியாக ஏமாற்றப்பட்டோம் என்பதை அப்படியே எழுதியபோது கதையாகிவிட்டது. தனிமையில் நேரப்போக்குக்கு ஏதோ நினைப்பில் எழுத ஆரம்பித்த பிறகு எழுத வேண்டிய நினைப்பும் எழுத்தும் என்னை பிடித்துக் கொண்டது- ஆம் அதுதான் உண்மை

எழுத ஆரம்பித்த பிறகு என்னிடம் பணி சார்ந்த பதட்டம் குறைந்து நிதானம் வந்திருக்கிறது. இனி எழுதாமல் என்னால் இருக்க முடியாது போலிருக்கிறது

எப்போது எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது? ஏன், எதற்கு அதை எழுத வேண்டும்?

ஏதாவது மனதை தொடும் சம்பவங்கள், ஏமாற்றங்கள், அவலங்களை பத்திரிகையிலோ கதைகளிலோ வாசிக்கும்போது அதை ஒட்டிய வாழ்வில் நடந்த சம்பவங்களை மனம் மெள்ள கோர்க்க ஆரம்பித்து விடுகிறது பிறகு அதை எழுத தொடங்கினால் எழுத்து தானாகவே ஓடி அதுவாகவே முடிகிறது எனக்கு சிறிது முயற்சிக்க வேண்டும் அவ்வளவுதான்

எண்பத்தி ஒன்பதில் கட்டிடவியலில் பட்டயப்படிப்பு
முடித்து விட்டு வேலையின்மையும் வேலையும் சார்ந்து ஊர் ஊராகவும் பிறகு நாடு நாடாகவும் அலைந்தபோது மிகப்பெரிய கடிதங்கள் எழுதுவேன் நண்பர்களுக்கு அனுபவங்களையும் வீட்டிற்க்கு அன்பையும் தெரிவிக்கும் அவைகள் தான் என் முதல் எழுத்துகள். எழுத வேண்டும் என்ற ஆவல் எப்போதும் உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தது. இரண்டு வருடமாக பணிக்காக ஒவ்வொரு நாளும் நீண்ட பயணம் செய்வதால் கிடைக்கும் நேரத்தில் எழுத ஒரு வாய்ப்பமைந்துவிட்டது.

என் முதல் வேலையே வீடற்றவர்களுக்கான திட்டமான தொகுப்பு வீடுகள் கட்டுவதுதான் மிக எளிய மக்கள் வறுமையிலும் நேர்மையானவர்கள் நாளெல்லாம் கீற்று முடைந்து வாழ்க்கை நடத்துபவர்கள் அவர்களிடம் அரசியல் செய்யும் கான்ராக்டர்கள். அப்படி ஒரு சூழலில் வேலை பார்த்த அனுபவம் அதுவரை இருந்த என்னை இளக்கி விட்டது

பசியில் பசுமை தேடி அலையும் ஆவினம் போல் வேலை தேடிச் செய்யும் நிர்பந்தம் எப்போதும் எனக்கு இருக்கிறது. தொழில் சார்ந்து எளிய மனிதர்களான தொழிலாளர்களுடன் பழக வேண்டி உள்ளதால் அவர்கள் நல்லவைகள் கெட்டவைகள் ஏமாற்றம் எல்லாம் அருகே இருந்து அந்த வாழ்க்கையை பார்த்து இருப்பதால் அதை எழுத வேண்டும் என்ற ஆவல் என்னுள் வந்து விடுகிறது.

எழுதுவதை தொழில் சார்ந்து இப்படி கூட சொல்ல தோன்றுகிறது, எப்படி சுய உழைப்பினால் கட்டி முடித்த வீட்டில் வாழும் திருப்தியிருக்குமோ அப்படி ஒரு திருப்தி எழுதுவதால் எனக்கு இருக்கிறது.

எந்த வேலையும் தெரியாதவன் வெறும் கையையும் காலையும் கொண்டு கட்டிட வேலையில் வந்து கற்றுச் செய்ய முடியும். ஆனால் ஒரு நல்ல வேலைக்காரன் மட்டும் தான் தன் வேலையில் சுயதிருப்தி ஏற்படும் வரை திரும்ப திரும்ப திருத்தி செய்து கொண்டு இருப்பான். செய்யும் தொழிலில் நல்ல வேலைக்காரனான நான் எழுத்திலும் அப்படியே இருக்க விரும்புகிறேன் வேறொன்றுமில்லை…

எனது பதின்ம வயதில் வாசிக்க தொடங்கியவன் இலக்கியம் பற்றிய எந்த அளவீடோ புரிதலோ இல்லாமல் யார் எழுத்து மனதை வருடுகிறதோ, இரக்க உணர்ச்சியை தூண்டுகிறதோ அதை மட்டுமே நூலகத்தில் எடுத்து வாசிப்பேன். அந்த எழுத்தாளர் புத்தகங்களை தேடி தேடி படிப்பேன்.

அது தான் இலக்கியம் என்று எனக்கு தெரியாது ஆனால் தெரியாமல் வாசித்தது எல்லாம் தமிழில் புகழ்பெற்ற இலக்கிய புத்தகங்கள். பிறகு இணையத்தில் வாசிக்க ஆரம்பித்த பிறகு தான் இலக்கியம் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன்.

நான் எழுத்தாளன் அல்ல நல்ல வாசகனகவும் வாசித்துக் கிடைக்கும் திறப்பில் மகிழவுமே விரும்புகிறேன்..

…….

(கடலூர் மாவட்டம், அகரம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த திரு. தி. வேல்முருகனை allimurugan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)

புன்னகை

– ஸ்ரீதர் நாராயணன்

காப்பிக்கடை ஜன்னல் வழியே
கோப்பையைத் தரும்-
கோடென வரைந்த தாடியுடனான-
இளைஞனின் புன்னகை.

முன்னர் அதே ஜன்னலில்
காப்பி கோப்பையை தந்து கொண்டிருந்த-
நீள தலைமுடியை
தொப்பியினுள் செருகிக் வைத்திருக்கும்-
இளைஞனின் புன்னகையை
நினைவுப்படுத்தியது.

இருவரும் ஒன்றாகவும் இருக்கலாம்.

கவனத்திற்குட்பட்டவைக்கும்
அல்லாதவைக்குமான
ஊசலாட்டத்தினிடையே
அந்தப் புன்னகை மட்டும்
பத்திரமாக இருக்கிறது.

 

எதற்காக எழுதுகிறேன் – பாஸ்டன் பாலா

– பாஸ்டன் பாலா-

“You see, in this world, there is one awful thing, and that is that everyone has his reasons.”
― Jean Renoir

சமீபத்தில் ‘கல்வாரி’ (Calvary) படம் பார்த்தேன். ஒருவர் ஏன் கத்தோலிக்க பாதிரியார் ஆனார் என்பதைச் சொல்லியிருந்தார்கள். அதில் வருவது போல், நான் எழுதுவது என்பதும் திருச்சபை பிரசாரகர் போல் ஃபேஸ்புக் சபையில் சொற்பொழிவாளராகும் விருப்பத்தினால்தான்.

தேவாலயத்தை வைத்தும் கல்வாரி திரைப்படத்தை வைத்தும் மேலும் விவரிப்பதற்கு முன் எழுதுவதற்கான வெளிப்படையான காரணங்களைப் பார்க்கலாம்:

  1. மற்றவர்களைத் திருத்துதல்: அதிவிற்பனையாகும் விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களில் வரும் பொதுமைப்படுத்தல்களைப் படித்து, அவற்றின் போதாமைகளையும் பிழைகளையும் சுட்டிக் காட்டுதல்
  2. அனுபவங்களைப் பகிர்தல்: அண்டார்டிகாவிற்கே செல்லாமல், பயணக்கட்டுரை எழுதும் தமிழ்ச்சூழலில், சுயமாகக் கண்டறிந்ததை பலரும் அறிய வைத்தல்
  3. விவாதங்களை உருவாக்குதல்: பேசாப்பொருளாக, மூடுமந்திரமாக தாளிட்டு வைக்கப்படும் கொள்கைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சி, மாற்றுக் கருத்துகளைச் சுட்டிக் காட்டுதல்
  4. பொழுதுபோக்கு கேளிக்கையில் ஈடுபடல்: வேலை முடிந்து சோர்வடைந்த வேளைகளில் புத்துணர்ச்சிக்காக ஐ.பி.எல், என்.எஃப்.எல், என்.பி.ஏ எல்லாம் பார்க்காமல், விளையாட்டாக எழுதி உற்சாகம் அடைதல்
  5. தியாகம் செய்தல்: எண்ணங்களைப் பதிவு செய்து காப்புரிமை பெற்று காசாக்குவதில் கிடைக்கும் பணத்தை விட எழுத்தில் பகிர்வதால் திருப்தி கிடைத்தல்
  6. தனிமையைக் போக்குதல்: எனக்கெனவே நான் வாழ்கிறேன் என நினைத்து சுயநலத்தில் மூழ்காமல், நண்பர்களைக் கண்டடையும் முயற்சியில் இறங்குதல்.

குதிரைப் பந்தயம் பார்த்திருக்கிறீர்களா? பந்தயத்தின் துவக்கத்தில் பத்து பன்னிரெண்டு குதிரைகள் ஓட ஆரம்பிக்கும். குதிரையை ஓட்டுபவர் அதன் மீது உட்கார்ந்து கொண்டு அதை விரட்டுவார். கடைசியில் ஒரேயொரு குதிரை ஜெயிக்கும். மற்ற குதிரைகளுக்கு தான் தோற்று விட்டோம் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் சூட்சுமம் கிடையாது. ஆனால், அதற்கு முன்பு கிடைத்த நல்ல சாப்பாட்டிற்கும், தோல்விக்குப் பின் கிடைக்கும் பசும்புல்லுக்கும் பெரிய வித்தியாசம் தெரியப் போவதில்லை. ஜெயித்த குதிரையும் தங்கக் கோப்பையை தன் கால்களினால் தூக்கிக் காட்டி புகைப்படத்திற்கு குதிரைப்பல்லை ஈயென்று இளித்து காண்பிக்கப் போவதில்லை. குதிரை ஜாக்கிக்கும் குதிரையை வாங்கிய பணமுதலைக்கும் ஒளிபாய்ச்சப்படும்.

நான் எழுதுவது என்பது குதிரையைப் போன்றது. தன்னால் இயன்ற அளவு நன்றாக ஓட வேண்டும் (யாரோ விரட்டுகிறார்கள் என்பதற்காக, என்னால் எழுத முடியாத ஓட்டத்தில் ஓடி, காலை உடைத்துக் கொள்ளும் சம்பவங்களும் உண்டு). சில சமயம் ஓட்டத்தில் இருந்து நிறுத்தம் கண்டு, கொட்டிலில், போட்டதைத் தின்று, காலங்கழிக்கும் தருணங்கள் உண்டு. சில சமயம் நன்றாக ஓடி, முதல் பரிசை யாருக்கோ வாங்கிக் கொடுத்திருக்கிறோம் என்பது தெரியாமல், தன் பாட்டுக்கு அடுத்த ஓட்டத்திற்கு தயார் செய்து கொள்வதும் உண்டு.

நல்ல எழுத்து என்பதற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. அதே போல் ‘நீங்கள் எழுத்தாளரா’ என்பதற்கு என்ன அடையாளங்கள் என்று பட்டியலிட்டால், ஏன் எழுதுகிறேன் என்பதற்கான விடைகள் கிடைக்கலாம்.

ஒரு எழுத்தாளர் என்று நான் எவரை ஏற்றுக் கொள்கிறேன் ?

  • அ. தொடர்ந்து எழுதுவது: இந்த நேரம்தான் எழுத முடியும்; இந்த மனநிலையில்தான் எழுதமுடியும்; இந்தச் சூழலில்தான் எழுத முடியும் என்றில்லாமல், எங்கும் எப்பொழுதும் தயாராக இருப்பது
  • ஆ. பல்வகையில் எழுதுவது: நகைச்சுவைதான் வரும்; சினிமா விமர்சனம்தான் போடுவேன்; கவிதை மட்டுமே வார்ப்பேன் என கொம்பனாக இல்லாமல், எல்லா விதமான முயற்சிகளையும் செய்வது
  • இ. உரையாடலில் ஈடுபடுவது: இன்னாருடன் பேசினால் விதண்டாவாதம்; இந்தக் கொள்கையை ஆதரித்தோ/எதிர்த்தோ எழுதுவது நேரவிரயம் என்று புறந்தள்ளாமல், பொறுமையாக விளக்குவது
  • ஈ. நல்ல மனிதராக இயங்குவது: சமரசங்கள் செய்துகொண்டாலும் தன்னளவில் நேர்மையாகவும் தெளிவாகவும் குடும்பத்துக்கும் உற்றார் உறவினருக்கும் பாந்தமான சொந்தமாகவும் நேசிக்கத்தக்கவராக இருப்பது
  • உ. கல்லுளி மங்கராக இருப்பது: இந்தப் பத்திரிகைக்கு இது போதும்; இந்த வாசகருக்கு இவ்வளவு சொன்னால் போதும் என்று விட்டுவிடாமல், தொடர்ந்து ஆழமாகவும் எளிமையாகவும் முழுமையாகவும் எழுதிக் கொண்டேயிருப்பது.

இப்பொழுது நான் யாரை எழுத்தாளர் என நம்புகிறேன் என்பதைச் சொன்னால், ‘எதற்காக எழுதுகிறேன்… எப்படி அவர் போல் ஆக முயல்கிறேன்’ என்பது எனக்கு பிடிபடலாம்.

சுஜாதாவை எழுத்தாளர் என நினைக்கிறேன். அவரைப் போல் இரட்டை குதிரைச் சவாரி முடியும் என நம்புகிறேன். ஒரு பக்கம் அறிவியல் வேலை; இன்னொரு பக்கம் புனைவு அமர்க்களங்கள்; மற்றொரு பக்கம் தொழில்நுட்ப விளக்கங்களை சுவாரசியமான கட்டுரைகளாக்குதல்; பிறிதொரு பக்கம் இதழ் ஆசிரியராக பணி; அது தவிர ஆன்மிக ஈடுபாடு; தத்துவ விசாரம்; அறிபுனை ஆக்கங்கள் என ஒவ்வொரு துறையிலும் முத்திரை படைப்புகள். கூடவே எழுத்தாளராய் இல்லாத மற்றொரு பணியில் 9 முதல் 5 வரையிலான வேலையிலும் தீவிர செயல்பாடு என பன்முகம் கொண்டவராக இருக்க வேண்டும்.

இதற்கும் ‘கல்வாரி’ திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம்?

படத்தின் துவக்கத்தில் இந்த மேற்கோள் வரும்:

“மனம் தளர வேண்டாம்; ஒரு திருடன் காப்பாற்றபட்டான்.
மட்டு மீறிய ஊகம் வேண்டாம்; ஒரு திருடன் பழிக்கப்பட்டவன் ஆனான்!’
– புனிதர் அகஸ்டீன்

கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்துவோடு இரு கள்வர்களும் சிலுவையில் அறையப்பட்டார்கள். அவர்களில் ஒருவன் தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கோரினான். இன்னொருவன் மனத்தினால் வருந்தாமல், அன்பு உள்ளம் கொள்ளாமல், புறத்தே மட்டும் பாசாங்கிட்டு சொர்க்கத்திற்கு வழி கேட்கிறான். அப்போது தன் தந்தையை நோக்கி ’பரமபிதாவே இவர்களை மன்னியும்’ (லூக்கா 23:24) என்று பேசினார் இயேசு. தந்தையிடம் பேசிவிட்டு தம் இரு பக்கங்களையும் நோக்கியபோது, இரு திருடர்கள் தம்மை இரண்டாகப் பங்கு போடுவது தெரிந்தது.

அந்த இருவரையும் பாவத்திற்குப் பரிகாரமாக, அன்பின் அடையாளமாக ஆளுக்கொரு சிலுவையைச் சுமந்து கொண்டு கோயிலுக்கு வரவேண்டும் என்று அனுப்பி வைக்கிறார். இருவரும் பக்கத்திலிருந்த காட்டிற்குச் சென்று ஆளுக்கொரு மரத்தைத் தேர்ந்தெடுத்து சிறப்பானதொரு ஆக்கத்தைச் செய்கிறார்கள். தம்முடைய புத்தம்புதிய சிலுவையைச் சுமந்து புறப்பட்டார்கள். பயணம் நெடுந்தூரமாகவும் முடிவில்லாததாகவும் தெரிகிறது. சிலுவையின் பாரம் அதிகமாகவும் இருக்கிறது. ஓரிடத்தில் ஓய்வு எடுத்தார்கள். ஓய்வு எடுத்த பிறகு ஒரு திருடன் கேட்கிறான். “சிலுவையின் எடையைக் குறைத்து கொள்வோமா?” என்று கேட்டான். “எனக்கு வேண்டாம். நீ வேண்டுமென்றால் சிலுவையைக் குறைத்துக் கொள்” என்று சொன்னான் இன்னொரு திருடன். மற்றவன் குறைத்துக் கொண்டான். மீண்டும் பயணம் தொடர்ந்தது. மீண்டும் ஓய்வு; மீண்டும் மற்றவன் சிலுவையை இன்னும் கொஞ்சம் குறைத்துக் கொண்டான். கூட்டாளி மறுப்பு ஏதும் சொல்லவில்லை. கோவில் முகப்பை அடைந்தார்கள். அப்போது தான் தெரிந்தது கோவில் வளாகத்தை அடைய வழியாக இருந்த பாலம் உடைக்கப்பட்டு இருந்தது. சிலுவையோடு கோவில் வளாகத்தை அடைவது எப்படி என்று இருவரும் யோசித்தார்கள். சிலுவையைக் குறைக்காமல் எடுத்து வந்தவன் சிலுவையைப் பாலமாக வைத்துப் பார்த்தான் சரியாக இருந்தது. சிலுவை மேல் ஏறிக் கரை சேர்ந்து சிலுவையை எடுத்துக் கொண்டான். சிலுவையை குறைத்துக் கொண்டு வந்தவன் சிலுவையை வைத்துப் பார்த்தான் சிலுவை சரியாகப் பொருந்தவில்லை. அக்கரை சேர முடியவில்லை.

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தம்மையே துறந்து தம் சிலுவையை நாள் தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக் 9:23).

அப்போது தான் மனம் மாறிய கள்வனுக்கு ’நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்’ என ஆறுதலாக யேசு கூறியதாக லூக்கா 23:43 சொல்கிறது. இந்த மாதிரி கடைத்தேறத்தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒன்றைப் பற்றி எழுதும்போது அது குறித்த புரிதல் மேம்படுகிறது. திரைப்பட விமர்சனம் ஆகட்டும்; நூல் அறிமுகம் ஆகட்டும்; மனிதரை விமர்சிக்கும் புனைவுகள் ஆகட்டும்; உளவியலை பூடகமாக உணர்த்தும் கவிதை குறித்த அனுபவப் பார்வைகள் ஆகட்டும்; எழுதும்போது எனக்குள் ஏற்படும் ரசவாதம் என் சுமைகளை என்னைச் சுமக்கும் பாலமாக மாற்றி என்னை எனக்கு அப்பால் கொண்டு செல்கிறது – என்றெல்லாம் கற்பனை செய்வதால் எழுதுகிறேன்.