மொழியாக்கம்: பீட்டர் பொங்கல்
மே 8, 2007 அன்று ஒரு கட்டுரை என்னை அழ வைத்தது. நியூ ஜெர்சியில் பெட்மின்ஸ்டரில் ஒரு பொது நூலகத்தில், என் மனைவி வேலையிலிருந்து திரும்பக் காத்திருந்தேன். அதற்கு முந்தைய ஒரு மணி நேரம் நான் சில கல்லூரி மாணவர்களுடன் கூடைப்பந்து மைதானமெங்கும் ஓடிக் களைத்திருந்தேன் (‘running full-court press’). இப்போது கூடைப்பந்துக்கு பதில் நூலகத்தின் நீண்ட மேஜைக்கும் புஷ்கார்ட் பரிசு 2006ஆம் ஆண்டு பதிப்பின் திறந்திருந்த அறுபத்து ஏழாம் பக்கத்துக்கும் வந்திருந்தேன். பிரையன் டாயில் எழுதிய “யோயாஸ் வோலாடோராஸ்” . கட்டுரையின் இறுதிப் பகுதியைப் படிக்கும்போதுதான் நான் அழுதேன். அந்தக் கண்ணீர் முழுமையாகவே எதிர்பாராதது. என் வலப்புறம் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவனிடமிருந்தும் என் இடப்புறம் இருந்த சிறுவனுக்கு பாடமெடுத்துக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்தும் நான் அழுகையை மறைத்துக் கொண்டேன், லேஸ் அவிழ்க்கப்பட்ட, கணுக்காலைத் தாண்டி உயர்ந்திருந்த என் ஹைடாப்களை நகர்த்திக் கொண்டேன், முட்டிக்குக் கீழ் நீண்ட ஜிம் ஷார்ட்ஸ்களை இழுத்து விட்டுக் கொண்டேன். நான் இருபத்து ஆறு வயது ஆண், என்னை அழ வைப்பதற்கல்ல இலக்கியம்.
நான் எழுதும் அறையின் வாசல் கதவின்மேல் உயரத்தில் என் தாத்தாவின் சிலுவை தொங்கிக் கொண்டிருக்கிறது. பெல்ட் ஒன்றால் செலுத்தப்பட்ட மோட்டாரின் ஆற்றலைப் பயன்படுத்தி என் பெற்றோருக்கு அவர் ட்ரை சிங்க் செய்து கொடுத்தார். திடுக்கிட்ட இதயம் போல் அந்த மோட்டார் அடிக்கடி துள்ளும். இப்போது அந்த ட்ரை சிங்க் எங்கள் வீட்டு வாசல் அறையில் இருக்கிறது. நான் பதினெட்டு மாத குழந்தையாக இருந்தபோது தாத்தா இறந்தார். ஆனால் நான் இன்னும் அவரைச் சுமந்து கொண்டிருக்கிறேன். நான் அவரது தோல், அவரது ரத்தம், அவர் மகனின் மகன். நாங்கள் இருவரும் வாழ்வைப் பகிர்ந்து கொண்ட குறுகிய காலத்தில், அவர் என் பெற்றோர் வசித்துக் கொண்டிருந்த வீட்டுக்கு ஒரு அறை செய்து தந்தார். ட்ரைவ்வேயில் இருக்கும் உடைந்த மரத்துண்டங்களுடனும் மரத்தூள்களுடனும் நான் நின்று, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். எப்போதும் அவருடன்தான் இருப்பேன் என்பதால் அம்மா வந்து என்னை வீட்டுக்குள் தூக்கிப் போவாள். “அவன் பெரிய பையன் ஆயிட்டான்,” என்று அவர் என்னைப் பற்றிச் சொல்வார், இப்போது அந்தச் சொற்களில் என் அப்பாவின் குரலின் ஏற்ற இறக்கங்களைக் கேட்க முடிகிறது.
நியூ ஜெர்சியில் உள்ள லேக் மோஹாக்கில் என் தாத்தா வீடு கட்டும் தொழில் செய்தார். அவர் ஊர் திரும்பியதும் தனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டார். அது கட்டி முடிக்கப்படும்வரை அதுவரை செய்து முடித்திருந்த அறைகளில் அவரது குடும்பத்தினர் தங்கியிருந்தனர். அவர் எப்போதும் இரவில்தான், ரெஸ்டாரண்டுகள் மூடப்பட்டபின், கடைகள் கதவடைக்கப்பட்டபின் வேலை செய்வார். அவரது கெட்டித்து போன கைகள் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காக அரை இருளில் ஓர் உலகம் படைத்துக் கொண்டிருக்கும். இப்போதும் என் அப்பா தாத்தாவின் கருவிகளைப் பயன்படுத்துகிறார்: க்ராஸ்-கட் ஸா, ரிப் ஸா, உளி, குத்தூசி. அவற்றின் உலோகம் இன்றளவும் கூர்மையாய் இருக்கிறது.
நான் ஒருமுறைதான் என் அப்பா அழுது பார்த்திருக்கிறேன். அவரது உள்ளங்கைகள் டைனிங் ரூம் டேபிளில் அழுந்தியிருந்தன, என் தாத்தாவின் மறைவுக்குப்பின் அவரது அபார்ட்மெண்ட்டை ஒழிப்பது குறித்து அப்பா பேசிக் கொண்டிருந்தார். நான் அறிந்த அனைவரையும் விட அதிக உடல் பலம் கொண்டவர் அவர், தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார். அப்பா தன் குழந்தைகளில் எவரையும் அழ வைத்ததில்லை.
ஆண்கள் ஏன் அழுகையை அடக்கிக் கொள்கிறார்கள்? எழுத்தாளர்கள் ஏன் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்வதில்லை?
நான் எப்போதும் உணர்ச்சியற்றவனாக இருந்ததில்லை. ஆனால் ஒரு எழுத்தாளனாகவும் வாசகனாகவும் இருந்ததில் பெரும்பாலும் எழுத்தில் உணர்ச்சியைத் தவிர்த்திருக்கிறேன். இதற்கு ஒரு காரணம், ஜான் கார்ட்னரின் “எழுத்துக் கலை”யாக இருக்கலாம் . “பொதுப் பிழைகள்” என்ற அத்தியாயத்தில் அவர், புனைவில் மிகையுணர்ச்சி வெளிப்படுவதை “உத்திப்” பிழை என்று குறிப்பிடுவதில்லை. அவர் அதை “ஆன்ம” குற்றம் என்றே அழைக்கிறார். புனைவுகளில் மெய்யுணர்ச்சியும் மிகையுணர்ச்சியும் வேறு என்று பிரித்துப் பார்க்கிறார் அவர். தக்க அளவில் வெளிப்படும் உணர்ச்சிகளும் உணர்வுகளும் மெய்யானவை. எழுத்தாளன் “பொதுவாக ஏதோ ஒரு வகையில் ஏமாற்றுவதால் அல்லது மிகைப்படுத்துவதால் அடையப்பட்டு, போலித்தனமாய் ஒலிக்கும்” உணர்ச்சி அல்லது உணர்வு மிகையுணர்ச்சி என்கிறார் அவர். நான் கார்ட்னரை சிறிது பிழைவாசிப்பு செய்திருக்கிறேன் என்பது இப்போது தெரிகிறது. “உணர்ச்சி இல்லாத புனைவு எதற்கும் உதவாதது”, என்பதில் அவர் தெளிவாக இருப்பதை நான் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர் மிகையுணர்ச்சியை விமரிசித்ததைதான் நான் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறேன், அதை ஒரு மன்னிக்கப்படக்கூடிய குற்றமாய் கருதாமல் பெரும்பாபம் என்று புரிந்து கொண்டிருக்கிறேன்.
கார்ட்னர் ஒரு விமரிசகராக அல்ல, உத்தியைக் கற்றுத் தருபவராக நமக்கு பயன்படுகிறார். ஆனால் இந்த விவாதம் நிகழ்ந்த சூழ்நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்வது நமக்கு உதவியாக இருக்கும். 1970களின் பிற்பகுதியில் அவர் எழுத்தாளரும் தத்துவவியலாளருமான வில்லியம் ஹெச். காஸ்உடன் தொடர்ந்து சில விவாதங்களை பொது மேடைகளில் நிகழ்த்தினார். இவற்றில் மிகவும் முழுமையான விவாதம், சின்சினாட்டி பல்கலை புனைவுத் திருவிழாவில் அக்டோபர் 24, 1978 அன்று நிகழ்ந்தது. அன்றைய நிகழ்ச்சியில் “பொறி பறக்க வேண்டும்” என்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் விரும்பினார்கள் என்கிறார் தாமஸ் லெக்ளேயர். அதைச் செய்யக்கூடியவர்களாக இருந்த ஜான் பார்த்தும் ஜான் ஹாக்ஸ்சும் “பரஸ்பரம் பாராட்டிக் கொண்டார்கள்”. அன்று நிகழ்ந்த விவாதம் போன்ற பல நீண்ட, பசையுள்ள விவாதங்களை கார்ட்னருடன் அவரது கார்பன்டேல் இல்லினாயிஸ் பண்ணை சமையற்கூடத்திலும் வேறு இடங்களிலும் செய்திருப்பதாக காஸ் 2003ஆம் ஆண்டு ஒரு மின்னஞ்சலில் விளக்கம் அளித்தார். இருவரும் தம் “வேறுபாடுகளை” விவாதிக்க விரும்பினார்கள், அது குறித்து “அச்சமோ அச்சுறுத்தலோ” இருக்கவில்லை. கார்ட்னர் :”அற விழுமியங்கள் குறித்து நம்பிக்கை கொண்டவராக” இருந்தார். காஸ், “என் அழகியல் விழுமியங்களில் உறுதியாக இருந்தேன். அவர் மானுடத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் எழுதுவதாகச் சொல்லிக் கொண்டார். எனக்கு அதன் புட்டத்தில் உதைப்பதுதான் திருப்தியாக இருக்கிறது”.
“உயிர்ப்பு” கொண்ட, “அறுபடலற்ற” புனைவெனும் கனவு, என்ற கார்ட்னரின் ஆதர்ச நம்பிக்கையை காஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அது கல்விப்புலத்தைவிட, உத்தி குறித்த புத்தகத்துக்கு மட்டுமே ஏற்ற சிந்தனை. இதனால்தான் காஸ், அத்தனை நீண்ட, பசையுள்ள விவாதங்களில் ஈடுபட்டார் என்று நினைக்கிறேன்; கார்ட்னருக்கு புனைவில் உள்ள பெருவிருப்பம் தெளிவாகப் புலப்படுவது. அது பிறருக்கும் தொற்றிக் கொள்வது. ஆனால், கலைக்கென்று ஒரு காலம் இருப்பது போலவே கோட்பாட்டுக்கும் ஒரு காலம் உண்டு என்பதை காஸ் உணர்ந்திருந்தார்.
மிகையுணர்ச்சி குறித்து கார்ட்னர் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லவும் செய்தார். “நிகழ்வுகளே மாபெரும் புனைவுகளில் நம்மை நெகிழச் செய்கின்றன, நிகழ்வுகளைச் சித்தரிக்கும் எழுத்தாளரின் கேவல்களும் ஓலங்களும் அல்ல” என்று பிரகடனம் செய்கிறார். ஆனால் எப்போதும் போலவே இப்போதும் அவர் நிதானப்படுத்திக் கொள்கிறார்: “கதைக்கு முடிவு காணும் இறுதிப் பகுதிகளை மிகவும் வலுவாக அமைத்துவிடக்கூடாது. கதையை அர்த்தமுள்ளதாகச் செய்ய தீவிரமாக முயற்சி செய்வதில், மிகுந்த கவனத்துடன், செயற்கையாக, “பயிலரங்கில் எழுதப்பட்டது போன்ற” உணர்வு ஏற்பட்டு, வாசகர் கவனம் புனைவெனும் கனவிலிருந்து தடுமாறக்கூடும். அதே சமயம், மிகையுணர்ச்சி வந்துவிடக் கூடாது என்றோ எளிய விஷயத்தைச் சொல்வதாக இருக்கக் கூடாது என்றோ மிக நுட்பமாகவும், துணிவில்லாமலும் எழுதிவிடவும் கூடாது- அப்படிச் செய்தால், யாருக்கும், ஆம், விட்டத்தில் சிறகடித்துக் கொண்டிருக்கும் தேவதைகளுக்கும் உன் கதை எதிரொலிக்காது”
கார்ட்னரின் முன்னுதாரணத்தையொட்டி, பிற எவற்றையும் விட, கலவியின் இலக்கிய விவரிப்புகள் உட்பட எல்லாவற்றையும் விட, மிகையுணர்ச்சியை, உயர்வுநவிற்சியுடன் விவரிக்கப்படும் விசாரத்துடன்/சோகத்துடன் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறேன். இங்கே தி மில்லியன்ஸில் “A Sentimental Education: Sex and the Literary Writer ” என்ற கட்டுரையை ஜூலியா ஃபியரோ எழுதியிருந்தார். “உணர்ச்சிகள் உட்பட எல்லாவற்றையும்விட நுண்மையே உயர்ந்தது” என்ற நம்பிக்கை “படைப்பிலக்கிய பயிலரங்குகளில்” போதிக்கப்பட்டதை அவர் இங்கு பதிவு செய்கிறார். மிகையுணர்ச்சி குறித்த விமரிசனங்கள், வெளிப்படையாகவும் உட்கிடையாகவும், அவர் ஒரு பெண்ணாய் எழுதுவதன் மீதான விமரிசனங்களாக உள்ளது என்று தொடர்புபடுத்திக் கொள்கிறார்.
Sarah Vap என்ற கவிஞர், மிக அருமையான ஒரு கட்டுரையில் மிகையுணர்ச்சி குறித்த குற்றச்சாட்டுகளும் பெண்களின் எழுத்து குறித்த குற்றச்சாட்டுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பதை விவாதிக்கிறார். Pleiades இதழின் ஒரு பதிப்பில் நிகழ்ந்த கலந்துரையாடலில், “Poetry, Belligerence, and Shame (PDF)” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. அந்தப் பதிப்பில் உள்ள கட்டுரைகள் ஜே கட்ஸ்சால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. கட்ஸ், 2010 ஆண்டு நிகழ்ந்த AWP கான்பரன்சில் மிகையுணர்ச்சி குறித்த ஒரு கலந்துரையாடலில் தலைமை தாங்கியவர்களில் ஒருவர். நவீனத்துவம், “கவிதையின் இதயத்தைக் குளிர்வித்தது; வாக்குமூலம் அதை உயிர்ப்பித்தது; பின்-அமைப்பியல் அதன் மீது ஒரு பக்கெட் குளிர்நீர் ஊற்றியது” என்று முன்னுரையில் எழுதுகிறார் கட்ஸ்.
குறிப்பிட்ட ஒன்றை மட்டும் வாசகன் உணரும்படி, அவனை “செலுத்த” முற்படும் படைப்பு என்று அவர் மிகையுணர்ச்சி கவிதையை வரையறை செய்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். மிகையுணர்ச்சி மட்டும் கொண்ட படைப்புகளை அவர் விரும்புவதில்லை என்றாலும், இதயத்தைப் பற்றியிழுக்க முயற்சி செய்யும் கவிதைகளை வெறுக்கும் சிலர் போல் மிகையுணர்ச்சி கொண்ட கவிதைகள் “ஆபத்தானவை” என்று அவர் நினைப்பதில்லை. உணர்ச்சிகளைத் தொட்டெழுப்பும் முயற்சிகளே சிறந்த கவிதைகள் உருவாகக் காரணமாகின்றன என்று அவர் கருதுகிறார். இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பதற்கு பரிசளிக்க வேண்டுமே தவிர மௌனத்தை நோக்கி மழுங்கடிக்கக் கூடாது என்கிறார் அவர். மிகையுணர்ச்சி குறித்த கவனத்துடன் கவிதை வாசித்து, அத்தகைய தருணங்களைச் சுட்டிக் காட்டுவதை அவர் வெறுக்கிறார்- “ஒரு சில வாழ்வனுபவங்களும் படிப்பினைகளும் சிறுமைப்படுத்தப்படுவதற்கும், சில கலாசாரங்களும் அவை உலகை உணரும் வகைப்பாடுகளும் முக்கியத்துவம் இழப்பதற்கும், ஒரு சில பேசுபொருட்களும் குரல்களும் கவிதை வகைமைகளும் “மிகையுணர்ச்சி” என்ற பதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு மலினப்படுத்தப்படுவதற்கும், ஊமையாக்கப்படுவதற்கும், அமைதிப்படுத்தப்படுவதற்கும், மதிப்பிழப்பதற்கும் இப்படிப்பட்ட தணிக்கைக்கும் உள்ள தொடர்பை” அவர் வெறுக்கிறார்.
வாப் சொல்வது உண்மைதான். மிகையுணர்ச்சியின் மிகப்பெரும் குற்றம், “அத்தனையையும் மழுங்கடிக்கச் செய்தல், அத்தனையையும் ஒரு மையத்தை நோக்கி இழுத்துச் செல்லுதல்”- இந்த மையம் இதயத்தை விட்டு வெகு தொலையில் உள்ள இடமாக இருக்கலாம். தன் இலக்கிய நுண்ணுணர்வுகளை கத்தோலிக்க சமயம் கட்டமைத்ததை அவர் உதாரணம் சொல்கிறார்: “என் அத்தனை வழிபாட்டு உணர்வுகளும், ஆனந்தங்களும், தொடர்புறுதல்களும் மிக அதிக சடங்குகள் கொண்ட கத்தோலிக்கம் வாயிலாய் வெளிப்பாடு கண்டன”. ஆனால், அதன் மொழியை அவர் கவிதையில் பயன்படுத்தினால், மிகையுணர்ச்சியுடன் எழுதுகிறார் என்று அடையாளப்படுத்தப்படும் சாத்தியம் இருக்கிறது. மேலும், ஒரு பெண்ணாய், அவர் பேறுகாலம் குறித்தோ தன் குழந்தைகள் குறித்தோ எழுதினாலும், இத்தகைய விமரிசனத்துக்கு ஆளாகலாம். மிகையுணர்ச்சி இலக்கியத்தில் ஒரு குற்றமாக இருக்கலாம், ஆனால் அது பெயர் சுட்டவும் பாலறுக்கவும் உதவும் வழியுமாகிறது.
மேலும் வாசிக்க – http://www.themillions.com/2014/05/reach-the-rafters-on-literary-sentiment.html
மிகையுணர்வு என்பது படைப்பை அதன் மையத்தை நோக்கி நகர்த்தவே அன்றி மையத்தினின்று விலக்கி நுண்மங்களை மட்டுமே முன்னிலைப்படுத்த இருக்கக்கூடாது.அறம் சார்ந்த அழகியல் சார்ந்த எந்த படைப்புமே இயல்பினை மீறியவையே.மிகையுணர்வுகள் மெலோடிராமாக்களாக மாறுகையிலேயே அவற்றின் இலக்கியத்தரம் குறைகிறது.நுட்பங்களும் விவரணைகளும் நமக்கு படைப்பினை அதன் களத்தை உணரச்செய்யவே.உணரச்சிமயமான படைப்பாளிகள் வாசகர்கள் ஒரு படைப்பில் கண்கள் கலங்குவது என்பதும் சில வேளைகளில் நடைமுறையே.அவையனைத்துமே மிகையன்று.ஒரு தீர்க்கமான படைப்பு அழுகையாகவோ,அறச்சீற்றமாகவோ நிச்சயம் பாதிப்பினை உண்டாக்கும்.
பெண்ணெழுத்துகளில் மிகையுணர்வுகள் அதிகம் என்பது அவர்கள் வாழ்வின் தாக்கமே.எனினும் மிகையுணர்வு படைப்பினை பாதை மாற்றக்கூடாது என்பதும் தேவை.மிக ஆழமான கட்டுரை.பயனுனையது.தெளிவான சிந்தனைக்கு வழிநடத்துகிறது.
நன்றி
மோனிகா மாறன்.
பொறுமையா படிச்சதுக்கு நன்றிங்க,
உண்மையில் sentimental என்பதை மிகையுணர்ச்சி என்று மொழிபெயர்ப்பதுகூட சரியில்லை. மதர் செண்டிமெண்ட், பேமிலி செண்டிமெண்ட் என்றெல்லாம் பேசுகிறோம். இங்கு செண்டிமெண்ட் என்பது மிகையுணர்ச்சி என்று பொருள்படுவதில்லை. ஈசியா உணர்ச்சிவசப்பட வைக்கக்கூடிய விஷயம் என்றுதான் பொருள்படுகிறது, இல்லியா? இதை எல்லாம் ஓவரா எக்ஸ்பிளாயிட் பண்ணியதால்தானோ என்னவோ, தாய்மை பற்றியோ குடும்பப் பாசம் பற்றியோ உருக்கமா எழுதும்போது அது செண்டிமெண்டலா தோணுது.ஆனா அதுக்காக அந்த உருக்கம் பொய்யானது என்றோ மடமை என்றோ சொல்லிவிட முடியாது (ஆனா அப்புறம் யோசிச்சுப் பாக்கும்போது, சில சமயம் அந்த மாதிரி தோணலாம்).
இது கொஞ்சம் பிரச்சினையான விஷயம்தான். பொதுவா ஒன்னு சொல்லலாம்- உணர்ச்சிவசப்படச் செய்வது எப்போதும் தவறாக இருக்க வேண்டியதில்லை என்ற அளவில் இந்தக் கட்டுரையை புரிஞ்சுக்கறேன். ஆனா எப்போ எது மிகையுணர்ச்சி ஆகுது என்பது நாமே யோசிச்சு அறிய வேண்டிய விஷயம்னு தோணுது.
நன்றி