Author: பதாகை

செக்மேட்

ஹரன் பிரசன்னா

அவனை இறைவன் என்றனர்
அவன் சொர்க்கம் ஒன்றை உருவாக்கினான்
இவனை மனிதன் என்றனர்
இவன் நரகத்தை அமைத்தான்
அவன் நல்லது செய்தான்
இவன் தீயன பழக்கினான்
தெளிந்தது அவன் செய்ய
குழப்பத்தை இவன் செய்தான்
காதல் செய்தான்
காமம் செய்தான்
சிரிப்பு
அழுகை
மகிழ்ச்சி
சோகம்
சாந்தம்
கோபம்
அன்பு
வெறுப்பு
கரு
கொலை
சலித்துப் போன கடவுள்
மனம் மயங்கிய ஒரு தருணத்தில் சாத்தானாக
நான் என்னைக் கடவுள் என்றேன்.

டஜன் வாழைப்பழம்

எஸ். சுரேஷ்

 

கூண்டிற்குள் நிலைகொள்ளாமல் அங்கும் இங்கும்
நடந்து கொண்டிருந்தது பிரும்மாண்டமான மனித குரங்கு
திடீரென்று நின்று கூண்டின் கம்பிகளை கையால் பிடித்து
தலையை கம்பிகள் நடுவில் விட்டு வெளியில் பார்த்தது
மறுபடியும் நடை, மறுபடியும் நின்று பார்ப்பது என்று இருந்தது

வாழைப்பழம் விற்பவன் வண்டியை தள்ளிக்கொண்டு வருவதைக்
கண்ட மனித குரங்கு இரு முறை கூண்டினுள் குதித்தது
பின்னர் கம்பிகளை வேகமாக ஆட்டி, தலையை நடுவில் நீட்டி
வாழைப்பழம் விற்பவனை பார்த்து கத்தியது
“ஒரு டசன் வாழப்பழம் அம்பது ரூபாக்கு வித்தா
நாங்கெல்லாம் எப்படிடா உயிர் வாழறது?”

திடுக்கிட்டவன் வண்டியை வேகமாக தள்ளிக்கொண்டுச் சென்றுவிட்டான்
இடைவிடாமல் கூண்டிற்குள் நடந்துக் கொண்டிருக்கிறது
மனித குரங்கு

நீராம்பல்

ஸ்ரீதர் நாராயணன்

‘ங்க வாடா வெளக்கெண்ண கருப்பா… வெண்ணெவெட்டி சாம்பிராணி… கதயா எளுதற… &*#$(#$% மவனே’ என்று பாலமுருகனின் முடியைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தார் கோவிந்தன். கடைசி வார்த்தை பாலமுருகனின் தந்தையின் ஒழுக்கத்தை சாடும் ஒரு கொச்சை வசவு. அதைக் கேட்டதும் வகுப்பில் விடலை பையன்கள் கிளுகிளுத்து சிரித்தார்கள். அவர்கள் தனித்திருக்கும்போதே சொல்லத் தயங்கும் வசவுச் சொல்லை வாத்தியார் ஒருவர் சரளமாக பயன்படுத்துகிறார் என்றால் கேட்க வேண்டுமா. இன்னும் என்னவெல்லாம் வருமோ என்று பேராவலோடு காத்திருந்தனர்.

கோவிந்தனுக்கு காலையில் எழுந்ததில் இருந்து எரிச்சலாகத்தான் இருந்தது. எரிச்சலென்றால் செண்டு முளை கன்றிப்போய் வெளிக்கிளம்பிய எரிச்சல். உட்காரவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் கால்களை அகட்டி அகட்டி வைத்து பள்ளிக்கூடத்திற்கு நடந்து வந்துகொண்டிருக்கும்போது எவனோ ஒரு கபோதி சைக்கிளில் கைகளை தொங்கவிட்டபடி சிகரெட்டை புகைய விட்டுக்கொண்டே பறந்தடித்துக் கொண்டு போனான். ரோட்டில் தேங்கியிருந்த மழைநீரை வாரியடித்ததில், வலப்பக்க சட்டை முழுவதும் கறையாகிப் போய்விட்டது. கால்மணி நேரம் தாமதமாக பள்ளிக்கூடத்திற்குள் வந்தவரைப் பார்த்ததும் வாசலிலேயே நின்றுகொண்டிருந்த ஹெச் எம், கேட்டார். (more…)

இரானி டீக்கடை- ஒரு கப் சாயுடன்

சிகந்தர்வாசி

உனக்குள் நுழைகிறேன்
தனிமையில், ஒரு கப் சாயுடன்
கோடியில் உட்கார்ந்துகொள்ள

சிகரெட் புகையுடன் கனவும்
கலந்து மிதக்கிறது இங்கே
எல்லோரையும் ருபாபாக பார்க்கும் வெயிட்டர்கள்
முன்பின் பார்த்தறியாதவரிடம்
தன் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்பவர்கள்
ஒரு கப் சாயுடன்

இரானி டீக்கடைக்கே உரிய
ஒஸ்மானியா பிஸ்கட், டை பிஸ்கட், பைன் பிஸ்கட்,
க்ரீம், சோட்டா சமோசா ஷெல்பில் இருக்கின்றன
ஒரு கப் சாயுடன் சாப்பிட

கடையினுள் குரல்களின் ஓசை
வெளியிலிருந்து வரும் வாகனங்களின் அலறலைத் தடுக்கிறது

எப்போதும் அந்த மேஜையில்
அதே ஆறு பேர், எங்கும் செல்லாத கனவுகளை
தினமும் காண்கிறார்கள்
ஒரு கப் சாய் அருந்திக்கொண்டே

அதோ, அங்கு டீ அருந்துபவன்
சாஸரிலிருந்து உற்சாகத்தை உறிகிறான்

சிலருக்கு இரானி டீக்கடை
ஆராமாக இருக்க ஒரு இடம்
சிலருக்கு இரானி டீக்கடை
ஒரு புகல், அன்றாட கஸ்ரத்திலிருந்து
தப்ப ஒரு இடம்.

இவற்றில் எது என்னைப் வசீகரித்து,
தினமும் இங்கு அமரச் செய்கிறது?
ஒரு கப் சாயுடன்​

அர்ஜுனன் காதல்கள் – உத்திரை

– வெ. கணேஷ் –

அப்பா இருந்தார்
அம்மா இருந்தாள்
அண்ணன்மார் இருந்தனர்
நானும் இருந்தேன்…
இருந்தேனா?
கண்ணாடியின் பிம்பத்திடமும்
நிழற்பிரதிமையிடமும்
பேசிக் காலங்கழித்திருந்தேன்.
தென்றலாய் நுழைந்த
பிருகன்னளை என்னுள்
ஆனந்தத்தை வீசினா…..
விகுதிக் குழப்பங்கள்
நெருடவில்லை!

+++++

மிருதுவான கரங்கள்
கடிவாளத்தை எவ்வாறு ஏந்தும்?
அங்கம் அசைத்து
அபிநயம் புரிபவனா குதிரையோட்டி?
பிருகன்னளை ஆடவனாயிருக்கக்கூடுமா?
பயந்தோடிய உத்தரகுமாரனுக்கு
பதிலாக போரிட்டு கௌரவர்களை துரத்தினவன்
அவனே தானா?
சைராந்தரி சொல் கேட்டது பிழையோ?

+++++

உத்திரையின் நித்திரையில்
தோன்றிட்ட கனவுக்குள்
அர்ஜூனனின் கைப்பற்றி
நடமிட்டாள் உத்திரை.

+++++

நனவுலகில்
கைபிடித்ததோ வேறோர் இளங்கரம்
பழைய நண்பனுக்கு புது வேடம்
அர்ஜூன குமாரன் புல்லிய போது
துளிர்த்த நீர்த்திரை மேல் இமைத்திரை
அர்ஜுனனாகிய பிருகன்னளையின்
புன்னகை தழுவிய முகம் மனக்கண்ணில்

++++++

கணவனின் உடலைச் சாம்பலாக்கிய
சிதைத் தீயின் கரங்கள் வாவென்றழைத்தன
வயிற்றுச்சிசுவின் எடை
அழுத்தியது
குலுங்கியழுத அர்ஜுனனை
நோக்கி நின்றாள்
அடுத்த வேடத்துக்குள் நுழைகிறானோ?
அர்ஜுனனின் பார்வையெல்லைக்குள்
புலப்படா வேலியொன்றின் பின்
நிரந்தரமாய் நின்றிருந்தாள் உத்திரை

+++++

“குரு,தோழன், மாமன், தந்தை
மாறும் காலங்கள், மாறும் வேடங்கள்
உன்னுள் மாறாமல் இருக்கும்
என்னை உணர் அர்ஜூனா”
கண்ணன் சிரிக்கிறான்.