Author: பதாகை

முடக்கம், அதோ முகம் – பானுமதி கவிதைகள்

முடக்கம்

சல சலக்கும் கீற்றுகள்
ஒன்று மட்டும் நடுவில்
மடிந்து பூமி நோக்க
அருகிருந்த இலை நிமிர்வுகள்
முணுமுணுத்தும் மரமென்னமோ
மௌனத்தில் தான்.

அதோ முகம்

கழுத்தின் மீது இருக்கிறதா
என்று பார்த்தேன்
அனைவருக்கும் தெரியாது
வான் நோக்கி இருக்கிறதோ
முகம் யாரைக் கேட்க
நீண்டு பின் முதுகுடன்
இணைந்ததை கண்ணாடியும்
காட்டாமல் ஏமாற்றலாம்.

அமாசை – தன்ராஜ் மணி சிறுகதை

“ஏம் பாய் நிறுத்திட்டிங்க,” என்றான் துரை.
“இன்னும் வண்டி சேந்தப்புறம் மொத்தமாதான் கணவாய தாண்டனும்,” என்றார் ஜலீல்.
“பாய் போன ட்ரிப்பு வந்தப்ப இப்படி எல்லாம் நிக்கலயே,” என்றான் குழப்பமாக.
“இன்னிக்கி அமாசடா. அமாசன்னிக்கி எந்த லாரிகாரனும் ராத்திரில தனியா இந்த கணவாய தாண்டமாட்டான்,” என்றுவிட்டு வண்டியை விட்டு இறங்கி முன்னால் நிற்கும் வண்டிக்காரனிடம் பேசுவதற்கு சென்றார்.

வண்டியின் இன்னொரு டிரைவர் மதியண்ணன் அயோத்தியாபட்டணம் தாண்டியவுடன் பெர்த்தை போட்டு படுத்துவிட்டார். அவர் எழுந்திருப்பதாக தெரியவில்லை.
துரை டார்ச் லைட்டை எடுத்து கொண்டு கீழே இறங்கினான். டயர்களை தட்டிப் பார்த்துக் கொண்டு வண்டியை ஒரு சுற்று சுற்றி வந்தான்.

சென்னை செல்லும் தனியார் சொகுசு பேருந்துகள் லாரிகளை சீறிக் கொண்டு கடந்தன. ஒவ்வொரு வண்டி கடக்கும் போதும் துரையின் முகத்தில் காற்றை அள்ளி வீசி அவன் தலையை கலைத்தது. அது அவனுக்கு பிடித்திருந்தது. ஒரு பீடியை பற்ற வைத்துக் கொண்டு, வண்டியின் மேல் சாய்ந்து நின்று அடுத்த வண்டி வந்து தலையை கலைக்க கண்ணை மூடி காத்திருந்தான்.
சற்று நேரத்தில் ஜலீல் வந்தார். “ஏறு,” எனச் சொல்லிக் கொண்டே வண்டிக்குள் ஏறினார்.
துரை வண்டிக்குள் ஏறி கதவோரம் இருந்த மர பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பின்னால் திரும்பி பார்த்தான். அவர்கள் லாரிக்கு பின்னால் இன்னும் ஒரு பத்து லாரிகள் நின்று கொண்டிருந்தன.
லாரிகள் மெதுவாக கணவாயை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.

“பாய் எல்லா பஸ்ஸிகாரனும் சல்லு சல்லுனு போறான். நம்ம மட்டும் எதுக்கு இப்படி கூட்டம் சேத்துகிட்டு போறம்,” என்றான்
ஜலீல் சிரித்தார். “ பஸ்ல நிறைய ஜனம் இருக்குடா, அப்புறம் என்ன பயம். அதுவுமில்லாம பண்ணெண்டு டன்னு வெயிட்ட வெச்சுகிட்டு வரட்டு வரட்டுனு ஏற முடியாமயா ஏறறான் , அவம்பாட்டுக்கு உட்டடிக்கிறான், காடும் இருட்டும் அவன் கண்ல எங்க படும்,” என்றார்.
“ஏம் பாய் அமாவாசைனா பேய் பிசாசெதாவது திரியுமா இந்த காட்ல,” என்றான்.
ஜலீல் எதுவும் சொல்லவில்லை. துரைக்கு இருப்பு கொள்ளவில்லை.
“இந்த காலத்துல கூட இத்தன பேரு பேய் பிசாசெல்லாம் நம்புறிங்களா?” என்றான்

வண்டிகள் நின்றன. ஜலீல் இன்ஜினை ரன்னிங்கில் வைத்துவிட்டு நியூட்ராலாக்கி ஹாண்ட் பிரேக்கை இழுத்துவிட்டார்.
“அந்த எலுமிச்சம் பழத்த எடுத்துகிட்டு எறங்கு,”  என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் இறங்கி விடுவிடுவென்று நடந்தார். துரை டாஷ் போர்டை திறந்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொண்டு இறங்கினான். அத்தனை லாரிகளிலும் இன்ஜின் ஆனில் இருந்தது, லோ பீமில் ஹைட் லைட்டுகள் மஞ்சளாய் எரிந்து கொண்டிருந்தது. அந்த இடம் கார்த்திகை தீபத்தன்று அவன் ஊர் தெருக்களில் நிரம்பி இருப்பது போல் மஞ்சள் ஒளி நிரம்பி அழகாக இருந்தது.
லாரி ட்ரைவர்கள் கூட்டமாக காட்டுக்குள் இறங்கிச் சென்று ஒரு சூலம் நட்டு வைத்திருந்த இடத்திற்கு முன் நின்றனர். அனைவர் முதுகும் தங்க முலாம் பூசியது போல ஜொலித்தது. துரை ஜலீலை பின்னால் இருந்தே அடையாளம் கண்டு கொண்டு, அவருகில் சென்று பழத்தை அவரிடம் கொடுத்தான்.

ஜலீல் இடுப்பில் இருந்த பட்டை பெல்டில் இருந்து ஒரு சிறு பேனா கத்தியை எடுத்து பழத்தை இரண்டாக வெட்டினார். சூலத்திற்கு முன்னால் இறைக்கப்பட்டிருந்த மஞ்சள் குங்கும கலவையில் இரண்டு பாதிகளையும் புரட்டி எடுத்து துரையின் கைகளில் கொடுத்தார்.
ஏற்றப்பட்டிருந்த கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு சற்று தள்ளி இருந்த திருநீறை எடுத்து கழுத்தில் வைத்துக் கொண்டார். துரையிடம் இருந்து பழத்தை வாங்கி கொண்டு, “கும்புடு, “ என்றார். துரை கற்பூரத் தீயில் கையை காட்டிவிட்டு, திருநீறை எடுத்து நெற்றியில் வைத்து கொண்டான்.

ஜலீல் பழத்தை அவனிடம் கொடுத்துவிட்டு, “முன்னாடி டயர்ல  வையி,” என்றார்.
சூலம் நின்ற இடத்தில் ஆட்கள் யாரும் இல்லாமலானவுடன் முதல் லாரி கிளம்பியது.
அத்தனை லாரிகளும் மலையை முக்கி முனகி ஏறி , காடு சூழ்ந்த சரிவில் இறங்கின.  முக்கால் மணி நேரத்தில் லாரிகள் காட்டை விட்டு வெளியே வந்து ஒரு பெரிய நெடுங்சாலையில் இறங்கின.

லாரி ஊத்தங்கரை செல்லும் ரோட்டில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
“ஏம் பாய், சாதாரண ரோடு மாதிரிதான இருந்தது இதுக்கு எதுக்கு நின்னு ஒண்ணா வரனும்,” என்றான்.
“அது சாதாரணமான ரோடா தெரியணும்னுதாண்டா தொர,” என்றார் சிரித்தபடி.
“போ பாய். எங்காளுங்க நம்புனா செரி நீங்க கூட எதுக்கு இதையெல்லாம் நம்புறிங்க?”
“ரெண்டு கண்லயும் பாத்தத நம்பாம எப்டி இருக்கிறது,” என்றார்.
“ பேய பாத்தியா பாய்?“
“ பேயா நினைக்காம நம்மெல்லாம் பேய பாக்க முடியாது. ஆனா பேயடிச்சவன பாத்திருக்கேன். அவன அடிக்கும் போது கூட இருந்திருக்கேன் , இதே கணவாய்ல,” என்றார்.
துரைக்கு வேறு கேள்வி ஏதும் எழவில்லை. ஜலீலையே  வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து, “எப்போ பாய்?” என்றான்.
ஜலீல் சொல்ல ஆரம்பித்தார்.

அது ஒரு அஞ்சாறு வருசமுன்னாடி. அப்பவும் கல்கத்தாதான் ரெகுலரு. எங்கூட செகண்ட் ட்ரைவரு மோகன்னு ஒருத்தன் இருந்தான். அவங்கொஞ்சம் அரிப்பெடுத்த நாயி. வண்டிய நிறுத்தி சோறு திங்கறானோ இல்லயோ , காலு தரையில பட்டதும் எவளயாவது ஏறணும் அவனுக்கு.
படிக்காசுல பாதி இதுக்கே செலவு பண்ணிருவான்.
ரெண்டு வருசமா நாங்க இதே ரூட்டுலதான் போவோம்  ஆனா ஒரு தடவ கூட அமாச அன்னிக்கி க்ராஸ் பண்ணதில்ல, அந்த அமாச நாளு வர வரைக்கும். மோகந்தான் அன்னிக்கு வண்டிய ஓட்டிகிட்டு வந்தான். நான் அயோத்தியாபட்னம் தாண்டுனதும் பெர்த்த போட்டுட்டேன். நல்ல தூக்கம். திடீர்னு தொம்முன்னு ஒரு சத்தம் . நான் ஜெர்க்காகி பெர்த்து சங்கிலில முட்டி எந்திருச்சி ஒக்காந்தேன். வண்டி ஆப் ஆயி நின்னிட்டிருக்கு.
ஹைட் லைட் கூட எரியல. கரி மாதிரி இருட்டு.எங்கைய்யே எங்கண்ணுக்கு தெரியாதளவுக்கு இருட்டு.
நான் பயத்துல “ மோகா” னு கூப்புடுறேன்.
“ஒண்னில்ல பாயி வண்டி ரோட்ல செத்து கெடந்த எது மேலயோ ஏறிரிச்சு, எறங்கி பாக்குறேன்,”னு சொன்னான்.
“எங்க இருக்கோம்,”னு கேட்டேன்.
“கணவா குள்ள” னு சொல்லிட்டு டார்ச்சோட அவனும் கிளீனரும் கீழ எறங்கிப் போனாங்க.
முன்ன பின்ன வண்டி இல்ல இவன் தனியா கணவாகுள்ள ஏறிட்டானு தெரிஞ்சது. எனக்கு உடம்பெல்லாம் வேர்த்து ஊத்துது.
தனியா எதுக்குடா கணவாக்குள்ள ஏறுனேனு லாரிகுள்ள இருந்தே கத்துனேன்.
அதுனால என்னானு வண்டி முன்னால இருந்து அவனும் கத்துனான்.
பேசி ஒன்னும் ஆக போறதில்லனு நாலு கெட்ட வார்த்தைய வாய்க்குள்ள சொல்லிட்டு அவனுங்க வரட்டும்னு உக்காந்திருந்தேன்.
ரெண்டு பேரும் உள்ள வந்தானுங்க.
“வண்டில எதுவும் அடி படல பாயி, பெரிய கல்லு ஏதாவது ரோட்ல இருந்து டயர் பட்டு காட்டுக்குள்ள உருண்டிருக்கும்னு நினைக்கிறேன்,“னு சொல்லிகிட்டே வண்டியெ ஸ்டார்ட் பண்றான், வண்டி செல்பே எடுக்க மாட்டேங்குது.

கல்லு வொயர்ல ஏதாவது அடிச்சிருக்குமோனான் பாரு, எனக்கு நெஞ்சு அடிக்குற அடில நெஞ்செலும்பே பிச்சிக்கிட்டு வெளிய உழுந்துரும்னு நினைச்சேன்.
மோகா மூடிகிட்டு எந்திரினு அதட்டி அவன எழுப்பிட்டு நான் ட்ரைவர் சீட்ல உக்காந்தேன்.
சாவிய வெளிய எடுத்து திரும்ப உள்ள போட்டு திருப்பிட்டு,  ஸ்டார்டர மேல இழுத்தேன். வண்டி செல்ப் எடுத்து ஸ்டார்ட் ஆயிருச்சு.
ஹெட் லைட்டை ஆன் பண்ணிட்டு வண்டிய நகத்த போறேன், மோகன் கியர் ராட புடிச்சிகிட்டு “எந்திரி பாயி இது என் டர்னு,” ன்றான்.
“டேய் வெளயாடாத, கணவாய தாண்டிட்டு வண்டிய உன்கிட்ட குடுத்தர்றேன்,” னு சொன்னேன்.
“ஆமா நான் நேத்து லைசென்ஸ் எடுத்துட்டு இன்னிக்கி லைனுக்கு வந்திருக்கேன் நீ எனக்கு காட் ரோட்ல எப்படி ஓட்றதுனு சொல்லி குடுக்கறதுக்கு, எந்திரி மொதல்ல,”னான்.
அங்க உக்காந்து சண்ட போட்டுட்டு இருந்தா சரி வராதுனு வண்டிய அவன்ட்ட குடுத்தேன்.
வண்டிய எடுத்து ஒரு அஞ்சு நிமிசம் ஓட்டியிருப்பான், வண்டி எது மேலயோ ஏறி எறங்கி தொம்முனு சத்தத்தோட நின்னது. இன்ஜின் ஆப் ஆகி, ஹைட் லைட்டும் அதாவே ஆப் ஆயிருச்சு.
இந்த தடவ நானும் கீழ எறங்கிப் பாத்தேன். முன்னாடி ஒன்னுமே இல்ல. வண்டிய சுத்தி சுத்தி பாத்தும் கல்லடியோ, காட்டு மிருகம் அடிபட்ட ரத்த கறையோ ஒன்ணுமே இல்ல.
மோகன் திரும்பவும் வண்டில ஏறி நான் செஞ்ச மாரியே சாவிய எடுத்து போட்டு, ஸ்டார்டர தூக்குனான். வண்டி செல்ப் எடுக்கல.

கோவத்துல ஸ்டேரிங்க போட்டு ஓங்கி ஓங்கி குத்த ஆரம்பிச்சிட்டான்.
“நீயா நானானு பாத்திடுரேண்டி இன்னிக்கி உன்ன,”னுஆங்காரமா ஸ்டார்டர புடிச்சி இழுக்க ஆரம்பிச்சிட்டான். அவன சீட்ட விட்டு கிளப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. திரும்பவும் நான் உக்காந்தேன். ஸ்டார்டர இழுத்ததும் செல்ப் எடுத்துருச்சி. நான் பாட்டுக்கு கியர தட்டி வண்டிய கெளப்பிட்டேன். இந்த தடவ ராட்ல கை வெச்சானா ஓங்கி ஒரு அப்பு அப்பலாம்னு நினைச்சிருந்தேன், அவன் கைய வெக்கல, பேசாம உட்கார்ந்திட்டிருந்தான். அங்க புடிச்சவன் ஊத்தங்கர வந்துதான் வண்டிய நிறுத்துனேன்.

அன்னிக்கு அவன தூங்க சொல்லிட்டு நானே ஓட்டிட்டு, அடுத்த நாள் அவன்ட்ட வண்டிய கொடுத்தேன். அந்த ட்ரிப்பு முழுக்க எப்பவும் போலதான் இருந்தான். நிக்கற இடத்துல எல்லாம் எவளயாவது புடிச்சி போட்டுகிட்டு. சொல்லப் போனா வழக்கத்தவிட அதிகமா ஆடிக்கிட்டு இருந்தான். ஊருக்கு திரும்பி வர ரெண்டு நாள் இருக்கும் போது லைட்டா காய்ச்சலா இருக்குனு படுத்தான். சேலத்துக்குள்ள நுழையும் போது அவன் ஒடம்பு ஓவர் ஹீட்டான ரேடியேட்டர்  மாதிரி கொதிச்சிகிட்டு இருந்துச்சு. அவன ஆஸ்பித்திரில சேத்துட்டுதான் நான் லோடே எறக்க போனேன்.

ஒரு வாரம் ரெஸ்ட் எல்லாம் முடிஞ்சு வண்டியேற வந்தா மோகன காணம். மொதலாளி இன்னும் அவனுக்கு ஒடம்புக்கு முடியல , எயிட்ஸ் ஏதாவுது இருக்குமோனு டெஸ்ட் பண்ண சொல்லி இருக்காங்கன்னு சொன்னாரு. எனக்கு ஒரே கஷ்டமா போச்சு. வண்டி ஏறனும் , போய் பாக்கவும் முடியாது. சரி ட்ரிப் முடிஞ்சு வந்தப்புறம் போய் பாத்துக்கலாம்னு கெளம்பிட்டேன்.
பதினெட்டு நாள் கழிச்சு நான் வண்டி இறங்குறேன் அப்பவும் ஆஸ்பத்திரிலதான் இருக்கானு சொன்னாங்க. ஆனா எயிட்ஸ் இல்ல, வேற ஏதோ சொல்றாங்க, காச்ச மட்டும் கொறய மாட்டேங்குதுனு சொன்னாங்க.

அன்னிக்கு வெள்ளிக்கிழம. வீட்டுக்கு போயி குளிச்சிட்டு தொழுவ கூட போகாம அவன பாக்க பெரியாஸ்பித்திரிக்கு போனேன். அங்க அவன் இருந்த கோலம்.

ஜலீல் சொல்வதை நிறுத்திவிட்டார், சற்று நேரம் இன்ஜினின் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்ததது. தொண்டையை செருமி கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்
அப்படி எல்லாம் யாருக்குமே வர கூடாதுடா தொர. வெறும் எலும்பா கெடந்தான். வெறும் எலும்பு. அவனால எதையும் சாப்பிட முடியல. சாப்டாலும் வாந்தி வந்திருது இல்ல பேதி ஆகுது.
என்ன பாத்ததும் பாயி பாயினு ஒரே அழுக. எனக்கும் கண்ணுல இருந்து தண்ணி ஊத்திகிட்டே இருக்கு. எல்லாம் செரியாயிரும் மோகா எல்லாம் செரியாயிரும்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தேன். எனக்கு வேற என்ன சொல்றதுன்னும் தெரியல.
அவம் பொண்டாட்டிய டீ வாங்கிட்டு வானு அனுப்பி வெச்சுட்டு என் கிட்ட சொன்னான், “எனக்கு செரியாவாது பாயி, அவ மொத்தமா உறிஞ்சி எடுத்துட்டா,” னு சொல்லிட்டு அழுவறான்.

“எவடா, என்னத்த உறிஞ்சினா,”ன்னேன்.

“அமாச அன்னிக்கி கணவாக்குள்ள. கணவாக்கு முன்னால வண்டி எதுவும் வெயிட்டிங்ல இல்ல, நம்ம வண்டிதான் மொதல் வண்டி. கூட்டம் சேத்த நின்னா ஒரு மணி நேரமாவது ஆவும். எனக்கு ஊத்தங்கர போவனும்னு இருந்தது. சீக்கிரமா போனா நல்ல கிராக்கி ஏதாவது மாட்டும் இல்லாட்டி கெழுடுங்கதான் கெடக்கும். நீ நல்லா தூங்கிட்டிருந்த , அப்படியே வண்டிய கணவாகுள்ள உட்டுட்டேன். கொஞ்ச தூரம் கூட போகல தீடீர்னு ஒண்ணுக்கு முட்டிகிட்டு வந்தது. வண்டிய நிறுத்தி இறங்கி ஒண்ணுக்கடிச்சிட்டு திரும்புனா , ஐட்டங்காரி ஒருத்தி பேக்க மாட்டிகிட்டு போய்ட்டு இருந்தா. விசிலடிச்சி கூப்டேன், பக்கத்துல வந்தா. இந்த காட்ல என்ன பண்றனு கேட்டேன். ஒரு லாரிக்காரன் ஏத்திகிட்டு வந்தான், வேல முடிஞ்சு திரும்ப ரோட்டு பக்கம் போறேன்னா. சின்ன வயசுக்காரி , பாக்க வேற அம்சமா இருந்தா. ஒற போட்டானானு கேட்டேன், போட மாட்டேனு சொல்லிட்டான்னா. கழுவ தண்ணி குடுக்கலாம்னா லாரிக்கு வரணும், நீ எந்திரிச்சா சத்தம் போடுவ, விடவும் மனசில்ல. வாய் வெக்கறியானு கேட்டேன். சரின்னா.
முடிஞ்சதும் காச குடுத்துட்டு வந்துட்டேன். வண்டிய கொஞ்ச தூரம் ஓட்டிக்கிட்டு வந்தப்புறம்தான் கவனிச்சேன் எந்திரிச்சது எறங்கவே இல்ல, நெட்டு குத்தலா நிக்குது. தொடய ரெண்டயும் சேத்து அழுத்தி நசுக்குனா எறங்கும்னு அழுத்துனேன், வண்டி எது மேலயோ ஏறி ஆப் ஆயி போச்சு.
அப்புறம் நீ எந்திரிச்ச. திரும்ப நின்னப்பவும் இதே கததான். சரி வண்டிய குடுத்துட்டு தூங்கி எந்திரிச்சா சரி ஆயிரும்னு படுத்தேன்.

அடுத்த நாளும் அப்படியேதான் இருந்தது. ஆனா அதுக்குள்ள எனக்கு இது ஒரு மாதிரி பழகிருச்சி. ஆந்திரால போனன்ல, அவ கையெடுத்து கும்புட்டு கதறிட்டா. எனக்கு சந்தோசம் தாங்கல. எப்பவும் போறதவிட அதிகமா போனேன். ரெண்டு மூணு தாட்டி போனப்புறம்தான் கவனிச்சேன் எனக்கு கஞ்சி வரவே இல்ல, கணவாய்ல தூக்குனது எறங்கவே இல்ல.
ஒரு பத்து நாளைக்கப்புறம் அங்க நரம்பெல்லாம் வலிக்க ஆரம்பிச்சிருச்சி பாயி. வலி கொஞ்சங் கொஞ்சமா அதிகமாயி காய்ச்ச வந்தது. நீ ஆஸ்பத்திரில சேத்தப்புறம் குறையவேயில்ல , அப்படியேதான் இருக்கு”

“இப்ப கீழ எறங்கிருச்சானு,“ கேட்டேன்.
லுங்கிய தூக்கி காட்னான், பனை மரம் மாதிரி நெடுக்கா நின்னுகிட்டிருக்கு. அவன் உடம்புக்கும் அது இருந்த இருப்புக்கும் துளி கூட சம்மந்தமில்லடா தொர.
எனக்கு உடம்பெல்லாம் ஆடி போச்சி.

ரொம்ப வலிச்சா டாக்டரு வந்து அங்க ஊசி போட்டு ரத்தத்த எடுப்பாங்க. அப்ப வடிஞ்சிரும். திரும்ப பெருத்து பெருத்து ரெண்டு நாள்ல இப்ப இருக்க மாரி ஆயிரும். அங்க அடிபட்டா இப்படி ஆவுமாம். ஏதோ வாயில நொலயாத வியாதி பேரு சொன்னாங்க.
இப்படி யாருக்காச்சும் வந்தா நாலைஞ்சு நாள்ல செரியாயிருமாம். எனக்குதான் செரியாவே மாட்டேங்குது . அவங்களும் என்னன்னமோ மாத்திரையும் ஊசியும் போட்றாங்க , குடுக்கும் போது கேக்குது அப்புறம் திரும்ப வந்துருதுன்னான்.

நான் கொஞ்ச நெரம் இருந்துட்டு கெளம்பி வந்துட்டேன். அந்த ரெஸ்ட் வாரம் முழுசும் தெனமும் அவனைப் போய் பாத்தேன். அங்கயே கெடந்தனு வையேன்.  டாக்டருங்க வந்து வந்து பாத்தாங்க, ஆபரெசன் பண்லாம் அது இதுனு பேசுனாங்க. மோகனுக்கு நாங்க பேசற பேச்செல்லாம் காதுல உழுந்த மாரியே தெரில. அவம் பாட்டுக்கு ஒரு ஒலகத்துல இருந்தான்.
நான் அடுத்த ட்ரிப் போய்ட்டு வண்டி எறங்கும்போது அவன் செத்து  நாலு நாள் ஆயிருந்தது.

மீண்டும் சற்று நேரம் லாரி இன்ஜின் சத்தம் மட்டும் கேட்டு கொண்டிருந்தது.
தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல, “அந்த பொம்பள மோகினிப் பிசாசா?” என்றான் துரை

“ஒவ்வொரு அமாச அன்னிக்கும் ஒரு மலைல இருந்து இன்னொரு மலைக்கு இந்த கணவா வழியாதான் பேய்ங்க, காத்து கருப்புங்க போவும்னு சொல்றாங்க. அப்படி போவும் போது அதுங்க மனுசங்கள அடிச்சிற கூடாதுனுதான் வெள்ளகோவில் முனிப்பன அங்க நிறுத்தி வெச்சிருக்காங்க. ஆனா எல்லா பேயும் எல்லா நேரமும் முனிப்பன் பேச்ச கேக்கறதில்ல,“
சற்று நிறுத்திவிட்டு தொடர்ந்தார்

“இப்படி க்ராஸ் பண்ணி போற பேயிங்க மனுசனுக்குள்ள ஆட்டம் போட்டுகிட்டு இருக்கற பேய உறிஞ்சு எடுத்துட்டு மனுசன சக்கயா உட்டுட்டு போயிரும்.”

துரை திடுக்கிட்டு கண்கள் விரிய,  “அப்ப அவருக்குள்ள ஒரு பேயி இருந்திச்சா?” என்றான்

“பேயில்லாத மனுசன் ஏதுறா தொர. அதுங்கள ஆட உடறவன் அல்லாடி சாவறான். அடக்கி வெச்சிருக்கவன் அமைதியா சாவறான்,” என்றார் ஜலீல்.

துரைக்கு சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது. பாயை வண்டியை நிறுத்த சொல்லலாமா என நினைத்தான். ரோட்டோரத்தை பார்த்தான், அமாசை இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஊத்தங்கரைகே போய்விடலாம் என்று அடக்கி கொண்டு உட்கார்ந்து விட்டான்.

ராய் மாக்ஸமின் ‘உப்பு வேலி’ நூல் குறித்து அக்களூர் இரவி

காந்தியின் தண்டி யாத்திரை, வேதாரண்யம் உப்பு சத்யாக்கிரகம் பற்றி முகநூலில் தொடர்ச்சியான பதிவுகளும் அவற்றிற்கான பின்னூட்டங்களும் ’உப்பு வேலி’ புத்தகத்தை வாசிக்கத் தூண்டின. நண்பர் எழுத்தாளர் யுவன் அவர்கள் புத்தகம் கொடுத்துதவினார். இந்த மொழிபெயர்ப்பிற்குத் தூண்டுகோலாக எழுத்தாளர் ஜெயமோகன் இருந்திருக்கிறார்.

பழைய புத்தகக்கடை ஒன்றிலிருந்து வாங்கிவந்த புத்தகத்தில் அவர் படித்த அடிக்குறிப்பு ராய் மாக்ஸமின் கவனத்தை ஈர்க்கிறது. அந்தக் குறிப்பு இதுதான்: இந்தியாவில் உப்பு வரியை நீண்ட காலமாக விமர்சனம் செய்துகொண்டிருந்த சர் ஜான் ஸ்ட்ரேச்சி, ‘உப்பு மீதான சுங்கத்தை வசூலிக்க பெரும் பூதாகரமான அமைப்பு உருவாகி வந்தது…நாகரிகமடைந்த எந்த நாட்டிலும் இதற்கு இணையான ஒன்றைக் கண்டுபிடிப்பது இயலாத ஒன்று… முள் மரங்களால் ஆன பெரும் புதர்கள் அந்த வேலியில் முக்கியப் பங்கு வகித்தன’ என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்குப்பின் ராய், ஒரு பெருந்தேடலில் இறங்குகிறார். ’பிரிட்டானிய போலிப் பெருமிதத்தின் விசித்திரமான சாட்சியங்களில்’ ஒன்றைத் தேடி மூன்று முறை அவர் இந்தியாவிற்கு வருகிறார். 1996, 1997, 1998.

ராய் மாக்ஸம் லண்டன் பல்கலைக்கழக நூலகத்தில் காப்பாளராக பணிபுரிந்தவர். குறிப்பில் காணப்பட்ட புதர்வேலிக்கான ஆதார நூல்களை, ஆவணங்களை, வரைபடங்களைத் தேடியலைகிறார். இந்திய ஆவணங்கள் குறித்த அலுவலகம், பிரிட்டிஷ் நூலகம், தனியார் ஆவணக் காப்பகங்கள் என்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வேலி இருந்த பாதையை, பகுதியைக் காட்டும் வரைபடத்தைத் தேடுகிறார்.

கிடைத்த ஆவணங்கள், வரைபடங்களுடன், ஒரு ஜி.பி.எஸ் கருவியும் ஏற்பாடு செய்துகொண்டு இந்தியாவில் புதர்வேலியைத் தேடத் தொடங்குகிறார். இந்திய நண்பர்கள் சிலர் அவருக்கு உதவி செய்கின்றனர். அந்த வேலி இருந்ததாக வரைபடம் சொல்லும் பல இடங்களுக்கு, மின்விளக்குகளோ, டாய்லெட் வசதிகளோ இல்லாத அந்தக் குக்கிராமங்களுக்குs சென்று, அங்கு தங்கி வேலியைத் தேடுகிறார். 1996ல் தொடங்கிய தேடலுக்கு இறுதியில் நவம்பர் 1998ல் விடை கிடைக்கிறது. ’பர்மத் லைன்’ என்ற சுங்கவேலியின் மிச்சத்தைக் கண்டுபிடித்தத் திருப்தியுடன் நாடு திரும்புகிறார்.

வங்காளப் பிரதேசத்தைக் கையகப்படுத்திக் கொள்ளும் கிழக்கிந்திய கம்பெனி, சிறிதுசிறிதாக தன்னைப் பலப்படுத்தி, விரிவாக்கிக் கொள்கிறது. பிளாசி யுத்தத்திற்குப் பின் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுக்கிறது. உப்பு, பாக்கு, நெய், அரிசி, நாணல், மூங்கில், மீன், சணல் ஆகியவற்றை நான்கில் ஒருபங்கு விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கிறது. வங்காளத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சர்க்கரைக்கும் வரி விதிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியும், கிளைவ் தொடங்கி வாரன் ஹேஸ்டிங்ஸ் வரையும் சாதாரண ஆங்கிலேய அலுவலர்களும், அவர்களுக்கு அடிவருடிய முதலாளிகளும் இந்தியர்களைச் சுரண்டிக் கொழுத்தனர்.

. மௌரியப் பேரரசர் சந்திரகுப்தர் காலத்திலிருந்து, பிரிட்டிஷாருக்கு முன் ஆண்ட மொகாலயர்களும் சாதாரண மக்களும் பயன்படுத்தும் உப்பிற்கு வரி விதித்துக் கொண்டுதான் இருந்தனர். அதை ஆங்கிலேயர்களும் விடாமல் தொடர்ந்தனர் ஆனால், அவர்களைப்போல் செலுத்தக் கூடியதாக இல்லாமல், பன்மடங்கு அதிகமாக வரி விதித்தனர். ஆகவே, சாதாரண மக்கள் வேறு வழியின்றி விற்ற விலைக்கு உப்பை வாங்க வேண்டியதாயிற்று. இந்த நிலை தான் நாடு முழுவதும்.

பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் சில பகுதிகளில் குறிப்பாக மேற்கிலும், தெற்கிலும்தான் உப்பு உற்பத்தி இயல்பாக நடந்தது. குறிப்பாக ராஜாக்கள் ஆளும் சுதந்திர பிரதேசங்களில் நடந்தது. அவ்விடங்களில் இருந்துதான் வங்காளப்பகுதிக்கு, ஆங்கிலேயர் ஆண்ட பகுதிக்கு இறக்குமதியானது. இந்தப் பகுதியில் உப்பு உற்பத்தி மிகவும் குறைவு. இந்தப் புவியியல் குறைபாடுதான் இந்தியாவிற்குள் உப்பின் போக்குவரத்தை வேலி போட்டு தடுத்தது. உப்பின் விலை ஏற ஏற, உப்புடன் வேறு சில பொருட்களும் கடத்தப்பட்டு கம்பெனியின் ஆட்சிப்பகுதிக்குள் வர ஆரம்பித்தன. உப்பின்மீது வரி விதித்து வருமானம் பார்த்த ஆங்கிலேய நிர்வாகம், இடைஞ்சலாக இருந்த கடத்தலைத் தடுக்க சுங்கச் சாவடிகளை உருவாக்கியது. கண்காணிப்பையும் தீவிரமாக்கியது. காலப்போக்கில் அது நீண்ட பிரும்மாண்டமான சுங்க வேலியாக மாறியது.

இதன் முக்கிய நோக்கம் உப்புக் கடத்தலை தடுப்பது. அத்துடன் போதைப்பொருட்கள் கடத்தலையும் தடுப்பது.

இமயமலை அடிவாரத்திலிருக்கும் அன்றைய பஞ்சாபின் தர்பேலாவில் அந்த வேலி தொடங்குகிறது. முல்தான், சட்லெஜ் நதி, பசில்கா, பின் தென்கிழக்கில் திரும்பி, டில்லிக்கு மேற்காக சென்று, ஆக்ரா, அங்கிருந்து ஜான்ஸி, சாகர், ஹோசங்காபாத், காந்த்வா, புர்ஹான்பூர், மகாராஷ்ட்ரம்மத்தியப்பிரதேச எல்லையைத் தொட்டு, பின் கிழக்கே திரும்பி, வங்கக் கடல் நோக்கி ஒரிஸ்ஸா வழியாகச் சென்று முடிகிறது. ஏறத்தாழ 2504 மைல்கள் நீளம். சுமார் 4030 கி.மீ. லண்டனுக்கும் இஸ்தான்புல் நகருக்கும் இடையிலான தூரம்.

ஆலன் ஆக்டேவியன் ஹியூம் 1869-70ம் ஆண்டு அறிக்கையில் ”ஹெர்குலிஸ் சுமக்கும் சுமையைப்போல் பெரும் உழைப்பு இது… … பெரும் உழைப்பிலும் பாதுகாப்பதிலும் சீனாவின் பெருஞ்சுவருக்குச் சமம்” என்கிறார். அழிந்துபோகாமல், காப்பாற்றப்பட்டு அப்படியே இருந்திருந்தால், சீனப் பெருஞ்சுவர் மாதிரி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சரித்திர சின்னமாக இருந்திருக்கக் கூடும் என்கிறார் ராய்.

உயிருள்ள செடிகள், காய்ந்த முட்புதர்கள், வேலி அமைக்கமுடியாத இடத்தில் கற்களால் ஆன சுவர் என்பதாக சுங்க வேலி அமைக்கப்பட்டது அந்தந்தப் பிரதேசங்களில் விரைவாக வளரும் முட்செடிகள், கருங்காலி, இலந்தை மரங்கள், கிலாக்காய், சப்பாத்திக் கள்ளி போன்ற பல்வேறு கள்ளிச் செடிகள். இவற்றை ஒன்றாக இணைக்க கழற்சிக்கொடிகள் வளர்க்கப்பட்டன. குறைந்த பட்சம் பத்தடி அகலமும், அதிகபட்சம் இருபதடி உயரமுமாக இந்த சுங்கவேலி அமைந்திருந்தது.

ஏழை மக்களுக்கு அவசியமான பொருள், சுவைகூட்டி, உப்பு. அதன்மீது கம்பெனி மிக அதிகமாக வரிவிதித்தது; உப்பளத்தொழிலை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தது. அத்துடன் முடியவில்லை என்கிறார் ராய் மாக்ஸம். அதாவது 1870களுக்கு முன்னும் பின்னும், அதாவது சுங்கவேலி கைவிடப்பட்ட கடைசி பதினைந்து ஆண்டுகளில் வடமேற்கு மாகாணங்களில் 37,61,420 பட்டினிச்சாவுகள் நடந்தன என்பது அரசாங்க கணக்கு. உண்மையான கணக்கு 50 லட்சமாக இருக்கலாம் என்கிறார் ராய். வெயிலிலும் பட்டினியாலும் வாடிய ஏழைகள் காய்ச்சலிலும் வயிற்றுப்போக்கிலும் இறந்தபோது அவர்களின் சாவை உப்புச் சத்துக் குறைபாடு துரிதப்படுத்தியது என்கிறார் ராய் மாக்ஸம். எவ்வளவு பெரிய கொடூரம்! மனித உடலுக்கு உப்பின் முக்கியத்துவத்தை விளக்க ஒரு அத்தியாயமே அவர் ஒதுக்கியுள்ளார். ஆசிரியரின் இந்தத் தகவல் வேதனைகொள்ள வைக்கிறது. கதிகலங்க செய்கிறது. ஆட்சியாளர்கள் சாதாரண மக்களைப் பற்றி என்றும் கவலை கொண்டதில்லை.

பிரிட்டிஷாரின் திமிர்த்தனமான போக்காலும் நடவடிக்கைகளாலும் தவிர்க்கமுடியாமல் அரங்கேறிய 1857ம் ஆண்டு சிப்பாய் புரட்சிக்குப்பின், கம்பெனி ஆட்சி விலக்கப்பட்டு, மகாராணியின் நேரடி ஆட்சி கொண்டுவரப்பட்டது. . கல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய பிரிட்டிஷ் அரசாங்கம் 1869ல் துண்டு துண்டாக இருந்த சுங்க வேலியை ஒன்றாக இணைக்கும்படி உத்தரவிட்டது. அதிக பட்சம் 14,000 காவலாளிகள் இந்த சுங்க வேலியை காவல் காத்திருக்கிறார்கள். நான்கு கி.மீக்கு ஒன்றாக ’சோக்கி’ எனப்படும் சுங்கச் சாவடி; பிரிட்டிஷ் வாரண்ட் ஆபிஸருக்கு இணையான ஒரு இந்தியர், ஜமேதார் பொறுப்பில். அவருக்கு கீழே பத்து பேர். அரைமைல் தூர ரோந்துக்கு ஒரு ஆள். சுங்கக்காவலாளிகளின் முக்கியப் பணி உப்புக் கடத்தப்படுவதை எக்காரணம் கொண்டு தடுப்பது. ஆனால், 1870ல் சுங்கவேலி கைவிடப்படுகிறது.

புத்தகத்திலிருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள்:

  • ஒரு சாதாரண இந்தியக் கூலியின் குடும்பத்திற்கு அரை ’மாண்ட்’ உப்பு தேவைப்பட்டது. 1788ல் இதன் விலை இரண்டு ரூபாய். அவனது இரண்டு மாத சம்பளம்

  • ஆங்கிலேயர் வரும்வரை உப்பின்மீதான வரி குறைவு.

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் உப்பின் விலை அரிசியின் விலைக்குச் சமமாக இருந்தது.

  • வங்காள மாகாணத்தில் 1781-82இல் உப்பு மூலம் வருவாய் ரூ.29,60,130. வரி உயர்த்தியதும், 1784-85ல் வருவாய் ரூ.62,57,470.

  • 1869-70ல் சுங்க எல்லையில் மொத்த வரி வசூல் ரூ.4,35,00,000. பராமரிப்புச் செலவு ரூ.16,20,000.

  • 1876-78 பஞ்சத்தில் பிரிட்டிஷார் ஆண்ட பிரதேசத்தில் மட்டும் குறைந்தது 6,50,000 பட்டினி சாவு.

  • ஆக்டேவியன் ஹியூம் கூறுகிறார்: “எங்கள் பணியாளர்கள் 3,50,000 மைல்கள் ரோந்து போயிருக்கிறார்கள். ஞாயிறு ஓய்வே கிடையாது உலகில் இப்போது இதுபோன்று ஆட்சி நடக்கும் எந்த நாட்டிலும் இந்த ஊதியத்திற்கு வேறெந்த நிர்வாகமும் இவ்வளவு கடின உழைப்பை வாங்கியிருக்காது.

  • கடத்தல்காரர்கள் எல்லா சாதிகளையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும்.

  • ஒரு கட்டத்திற்குப் பின், இந்தியாவில் பல பகுதிகளில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு இங்கிலாந்திலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டது.

சம்பல் பள்ளத்தாக்கின் சகநகர் என்ற இடத்தில் நாபல் சிங் என்ற பெரியவர் மூலம் சுங்கவேலி (’பர்மத் லைன்’) இருந்ததை உறுதிசெய்யும் ராய் மாக்ஸம், மனது கேளாமல் மறு நாளும் சகநகர் வருகிறார். ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரின் துணையோடு மிச்சமிருந்த பர்மத் லைனை, இருபது அடி அகலமுள்ள வேலியின் மிச்சங்களைக் கண்டுபிடிக்கிறார். ‘ஒருவர் குரல் கொடுத்தால் கேட்கும் தொலைவில்தான் அடுத்த ஆள் இருப்பான். ஏதாவது செய்தி யாருக்காவது சொல்லவேண்டும் என்றால், இப்படியே குரல் கொடுத்தே சொல்லிவிடலாம். ஆக்ராவுக்குக் கூட, ஏன் டில்லிக்கும் கூட’ என்று மூதாதையர் சொல்லக் கேள்வி என்கிறார் அந்த பேராசிரியர். வேலியைப் பாதுகாக்க பிரிட்டிஷார் செய்திருந்த ஏற்பாடு பிரமிப்பைத் தருகிறது.

ஒரு சாகசத் தேடலைப் போல விறுவிறுப்பாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ராய். சுவாரஸ்யம் குன்றாத, எளிய நடையிலான மொழிபெயர்ப்பு நம்மையும் அந்தத் தேடலில் ஈடுபடுத்துகிறது.

ஒரு பெரும்பணியை ராய் செய்துள்ளார் என்கிறார் முன்னுரையில் திரு.ஜெயமோகன். இந்திய மக்களின் இரத்தம் உறிஞ்சப்பட்டு இந்தியா கொள்ளையடிக்கப்பட்டு அதன் செல்வ வளம் பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்படுவதை ‘drain of wealth theory’ மூலம் 1867ல் திரு.தாதாபாய் நவ்ரோஜி ஆவேசமாக எடுத்துரைத்தார். ராய் மாக்ஸம் இந்த நூலில், உப்பு வரி, சர்க்கரை வரி மூலம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியாளர்களாக இருந்த கிளைவ் தொடங்கி வாரன் ஹேஸ்டிங்கஸ், ஆக்டேவியன் ஹ்யூம் வரையிலும் கோடிகளைக் கொண்டுசென்றதை ஆதாரங்களுடன் விவரிக்கிறார்.

இந்திய மண்ணின் பண்பாட்டுக் கூறுகளை, உணவோ, பழகுவதோ, போக்குவரத்தோ, டிக்கெட் ரிசர்வேஷனோ, ரயில் பயணமோ, குதிரை வண்டியோ, டோங்கா, ஷேர் ஆட்டோ பயணமோ, கோவிலோ, பழங்கால கட்டிடங்களை தங்குமிடங்களாக பயன்படுத்துவதோ, கிராமங்களின் பெருசுகள் அன்போடு நடந்துகொள்ளும் முறையோ, உபசரிப்பதோ இவற்றையெலாம் ஆங்காங்கே சிரிப்போடும், ஆதங்கத்தோடும், வருத்தப்பட்டும், பாராட்டியும் ராய் பேசுவது, ’எப்படியாவது இன்று புதர் வேலியைக் காட்டிவிடு’ என்று கடவுளிடம் அவர் வேண்டுவது உட்பட நூலிற்குச் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.

காந்தி உப்பு வரிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியபோது, அவருடன் இயக்கத்திலிருந்தவர்கள் இந்த முன்மொழிவைக் கேட்டு வியப்புற்றதாகப் படித்திருக்கிறோம். காந்திக்கு, ‘காற்றுக்கும் நீருக்கும் அடுத்து உப்புதான் அதிமுக்கியமானது. அது ஏழைகளுக்கான ஒரே சுவையூட்டி…. இது சூழ்ச்சித் திறன் கொண்ட மனிதன் சுமத்தும் உச்சபட்ச மனிதத் தன்மையற்ற வரி.’

1931 காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் போது, இந்தப் போராட்டம் குறித்துப் பேசப்பட்டது. உப்பின் மீதான வரி விலக்கப்படும் என்று காந்தி நம்பினார். 1946 செப்டம்பரில் அமைந்த இடைக்கால அரசிடம் இது பற்றி குறிப்பு ஒன்றையும் காந்தி கொடுத்தார். ஆங்கிலேயர்கள் 1947, பிப்ரவரி 28ல் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு ஆறுமாதங்களுக்குமுன் இந்த வரி விலக்கப்பட்டது. சந்திரகுப்தர் காலத்திலிருந்து ஏழைகளைத் துரத்திய உப்புவரி ஒரேயடியாகத் தொலைந்துபோனது.

துணைக்கண்டத்தின் குறுக்காக இப்படி ஒரு வேலி அமைத்தது, பிரிட்டானியரின் பெரும் சாதனையே: ஆனால் பஞ்சத்தால் வாடியவர்கள் உப்புக்காக எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள்.”

ஒரு ஆங்கிலேய மடமையின் ஆதாரமாகத்தான் வேலியை நினைத்திருந்தேன்; உண்மையில் ஆங்கிலேய அடக்குமுறையின் அசுர முகமாக அதைக் கண்டடைந்தேன்; அதிர்ச்சியுற்றேன்” –ராய் மாக்ஸம்.

இந்தியா குறித்த ஒரு முக்கிய ஆவணம் இந்தப் புத்தகம்.

நாதோபாசனை எனும் தவம் -ந.சிதம்பர சுப்ரமண்யன் அவர்களின் இதயநாதம் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் தலையானவரும், தன்னுடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெலுங்குக் கீர்த்தனைகளினால், ராம பக்தி ஒன்றையே தன் வாழ்வாகக் கொண்டிருந்தவர் தியாகராஜ சுவாமிகள் அவர்கள். நூற்றாண்டுகளாக இன்றளவும் அவர் தெய்வத்திற்கு சமமாகப் போற்றப்படுபவர். வருடந்தோறும், அவர் இறைவனின் திருவடிகளை அடைந்த பகுள பஞ்சமி அவருடைய ஆராதனை விழாவாகக் கொண்டாடப் படுகிறது. ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த இசை விழாவில் பங்கேற்க அகில உலகத்திலிருந்தும் கர்நாடக இசைக் கலைஞர்கள், இசை விற்பன்னர்கள், தங்கள் கற்றுக் கொண்ட இசையின் வடிவை, குரல்வழியாகவோ, இசைக் கருவிகள் வழியாகவோ இவர் சன்னதியில் வந்து சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வருடந்தோறும் இந்த சமர்ப்பணத்தைத் தங்கள் கடமையாகவே கருதுகிறார்கள். இந்த விழாவில் கலந்து கொண்டு இரண்டு கீர்த்தனைகளாவது பாடி விட வேண்டும் என நினைக்கிறார்கள். பரத நாட்டியக் கலைஞர்கள், சிதம்பரம் நடராஜர் சன்னதியில் அரங்கேற்றம் செய்து விட வேண்டும் என நினைப்பது போல, நாட்டியாஞ்சாலியில் பங்கேற்று விட வேண்டும் என ஆசைப்படுவது போல கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்பவர்கள், தியாகராஜ ஆராதனை விழாவில் ஒரே ஒரு கீர்த்தனையாவது பாடி விட வாய்ப்பு பெற்று விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். பகுள பஞ்சமி அன்று பாடப்படும் அவரது பஞ்சரத்ன கீர்த்தனைக் குழுவில் இடம் பெற்றோ, இடம் பெறாமல், பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கொண்டோ பாடுவதை அந்த மகானுக்கு செலுத்தும் அஞ்சலியாக நினைக்கிறார்கள். இதன் மூலம், அவர்கள் சங்கீதத்தோடு, அதையே தன் வாழ்க்கை முறையாகக் கொண்ட தியாகராஜ சுவாமிகளை வணங்குவதாக நிம்மதியடைகிறார்கள். தியாகராஜர் இப்படி வணங்கப்படுவதற்கான காரணம் அவர் தன் வாணாள் முழுவதும், சங்கீதத்தின் மூலம் தன்னுடைய ராம பக்தியைச் செலுத்தி வந்தார். அவருக்கு அதைத் தவிர வேறொன்றும் நினைவில்லை இந்த வாழ்வில். ராம பக்தியையே தன் மூச்சாகக் கொண்டிருந்தார். அவருடைய ஆத்ம விசாரங்கள் முழுவதும் ராமனை நோக்கியே கீர்த்தனைகளாக வெளிப்பட்டன.

பக்தியை, அதன் வெளிப்பாட்டை சங்கீதத்தின் மூலம் ஓர் உபாசனையாகச் செய்தவர். அவருடைய “ சங்கீத ஞானமு பக்தி விநா “ என்ற கீர்த்தனையில், சமர்ப்பணமற்ற வெறும் சங்கீத அறிவால் மட்டும் இறைவன் சரணத்தை அடைய முடியுமா மனமே என்று தன் மனதைக் கேட்டுக் கொள்கிறார். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் எனும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் ஆறு உட்பகைவர்களை வெல்வதற்கு இந்த சங்கீத சமர்ப்பணத்தைத் தவிர தனக்கு வேறு ஒன்றும் உபாயம் தோன்றவில்லை என ராமனிடம் முறையிடுகிறார். அவரது நாடி நரம்புகள் முழுவதுமே ராம பக்தியும், சமர்ப்பண உணர்வுமே நிறைந்திருந்தது.

இராமாயணத்தில் வரும் சபரி, ராமனுக்காகக் காத்திருப்பதையே தன் தவமாக மேற்கொண்டவள். வெறும் காட்டுவாசிப் பெண்ணாக சரியாகப் பேசவும் அறியாமல் இருந்தவள், மதங்க முனிவருக்கு சிறிய கைங்கர்யங்கள் செய்ததால், அவரிடமிருந்து ராம நாமத்தை உபதேசமாகப் பெற்றவள், பனிரெண்டு ஆண்டுகள் ராம நாமத்தை மட்டுமே உபாசித்தவள். ராமனின் தரிசனம் பெற்ற பிறகு, அவள் முக்தியடைவதற்காக குடிலில் அமர்ந்து கொள்கிறாள். அவள் உடல் உருக்குலைந்து வெறும் எலும்புக்கூடு மட்டும் இருக்கிறது. அந்தக் கூட்டினை எங்கு தொட்டாலும், அது ராம நாமத்தை ஒலித்தது என்று புராணங்கள் சொல்கின்றன. சபரியின் இந்த ராம பக்தியும், தியாகராஜரின் ராம பக்தியும் ஒன்றேதான். சபரியுடையது ராம ஜெபம்; தியாகராஜருடையது ராம கீர்த்தனைகள். இரண்டிலும் இருந்தது உபாசனை.

சங்கீதத்தை ஒரு யோகம் போல, உபாசனையாக ஏற்றுக் கொண்டு, எவ்வித சமரசமும் அற்று தன் வாழ்வையே சங்கீதத்திற்கு அர்ப்பணம் செய்து கொண்ட ஒரு வித்வான் பற்றிய நாவலாக, 1952 ல் ந. சிதம்பர சுப்ரமண்யன் அவர்களால் எழுதப்பட்டது “ இதயநாதம் “ . கிட்டுவுக்கு சங்கீதப் பித்து. ஆனால், அவன் தந்தை இதே சங்கீதப்பித்தாக இருந்ததால், வாழ்க்கையையே தொலைத்ததால், தாய்க்கு இவனுடைய சங்கீத ஆர்வம் எரிச்சல்படுத்துகிறது. கணவன் போலவே இவனும் வாழ்க்கை இழந்து விடுவான் என அச்சம் கொள்கிறாள். அவனை வேதம் பயில அனுப்ப முடிவு செய்கிறாள். இதை அறிந்த கொண்ட கிட்டு வீட்டை விட்டு அம்மாவுக்குத் தெரியாமல் வெளியேறி விடுகிறான். பதின்வயது தொடக்கத்தில் இருக்கும் அவன், எப்படியோ கணேச சாஸ்திரிகள் கையில் அகப்படுகிறான். அவனுடைய பிறவி சங்கீத ஞானம் அவரைக் கவர்கிறது. அவனை சபேசய்யர் என்கிற மகா வித்வானிடம் கொண்டு போய் விடுகிறார். குருகுல வாசம் போன்று அவன் அவர் விட்டீலேயே தங்கி சங்கீதம் பயில்கிறான். அவருடைய மகன் மாகாதேவனும் அவன் கூடவே சங்கீதம் கற்றுக் கொள்கிறான். ஆனாலும், கிட்டுவின் ஞானத்தை அவனால் எட்ட முடியவில்லை. சபேசய்யரின் மனைவியும் கிட்டுவிடம் தன் மகனிடம் காட்டும் வாஞ்சையைக் காட்டுகிறாள். இருவருக்கும் அவர்களே பூணூல்கல்யாணம் செய்து வைக்கிறார்கள். சபேசய்யர் தன் இறுதிக் காலத்தில், கிட்டுவையே தன்னுடைய இசை வாரிசாக அறிவிக்கிறார். கிட்டு, குருகுலத்தில், இசையோடு, வாழ்க்கைக் கல்வியையும் பயில்கின்றான். எந்த நிலையிலும், சங்கீதத்தை உபாசனையாக மட்டுமே செய்ய வேண்டும் என்பதையும், வாழ்க்கை ஒழுக்கங்களையும் தன் குருவிடமிருந்தே சுவீகரித்துக் கொள்கிறான்.

கிட்டு வளர்ந்து, நீலாவைக் கரம் பிடித்து, கிருஷ்ண பாகவதராக இசையுலக ஜாம்பவனாகக் கொடி கட்டிப் பறக்கிறார். அப்போது கூட, கச்சேரிக்குப் பணம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தன் சங்கீதத்தை ஒரு நாதோபசனையாகக் கடைப்பிடிக்கிறார். தாயைத் தேடித் தன் சொந்த ஊருக்குப் போகிறார். தாய் இறந்த செய்தி கிடைக்கிறது. கரம் பிடித்த மனைவியோ சங்கீத ரசனையற்று, பொருள் வயப் பட்ட வாழ்க்கையை எதிர்பர்க்கிறாள். அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. சங்கீதத்தைத் தன்னை மாதிரியே உபாசிக்கும் பண்பு உள்ளவர்க்கே பயிற்றுவிக்கிறார். அப்படி, அவரிடம்தான் சங்கீதம் பயில வேண்டும் என்ற பெருவிருப்பத்துடன் அவரை அணுகும் பொதுமகள் குலத்து பாலாம்பாள் அவரிடம் வந்து சேர்கிறாள். அவளுடைய அபார சங்கீதத் திறமை அவரை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. மாறி மாறி அவள் இவர் வீட்டுக்கு வருவதும், அவள் இவர் வீட்டுக்கு வருவதுமாக சங்கீதம் வளர்கிறது. ஊரில் பலர் தவறாகப் பேசினாலும், கிருஷ்ண பாகவதர் கலங்கவில்லை. பாலாம்பாள் ஒரு நாள் தன் மனநிலை தடுமாறி, அவர் மேல் தனக்கு இருக்கும் ஈர்ப்பை வெளிப்படுத்துகிறாள். அதில் சிக்கிக் கொள்ளாமல் வெளி வருகிறார் கிருஷ்ண பாகவதர். அவரைச் சரியாகப் புரிந்து கொண்டது கந்தசாமி பாகவதர் மட்டும்தான். அவர், கிருஷ்ண பாகவதரை அந்த அதிர்ச்சியான மன நிலையிலிருந்து மீட்டு ஆற்றுப் படுத்துகிறார்.

அந்த ஊரின் பஜனை மடக் கட்டடத்தைச் சரி செய்வதற்காக, நிதி திரட்டுவதற்கு தன் கச்சேரி பயன்படட்டும் என்று கிருஷ்ணனேதான் உபாயம் சொல்கிறார், ஆனால், அந்தக் கச்சேரியைச் செய்ய முடியாமல், அவருக்கு, காய்ச்சல் வந்து தொண்டை கட்டிப் போகிறது. தான் பொருளுக்காக கச்சேரி செய்ய எத்தனித்ததால்தான், தனக்கு இப்படி ஆகி விட்டது என்று மனம் வருந்துகிறார். அப்போது, கந்தசாமி பாகவதர் அவரை சமாதானப்படுத்தி

இசை என்பது வெறும் காதுகளிலும், குரலிலும் மட்டுமில்லை. மௌனத்தின் வழியே இறைவனை நினைந்து இதயத்திலிருந்து எழும் நாதம் கொண்டு உபாசனை செய்யலாம் என்று சொல்கிறார். கிருஷ்ண பாகவதர் தன் இதய நாதத்தில் அமிழ்ந்து லயிக்க ஆரம்பிக்கிறார்.

நாவல் ஒரு சிறிய நீரோடை போல தெளிவாக அமைதியாக ஓடுகிறது. சங்கீதம் என்றில்லை, ஒருவர் வாழ்க்கையில் தன்னுடைய விருப்பம், அல்லது நோக்கம் அல்லது லட்சியம் என்று எதுவோ ஒன்றைப் பயணமாக ஏற்றுக் கொண்டால், அந்தப் பயணத்தின் இலக்கை அடைவதில் உறுதி வேண்டும். தடங்கல்கள் வந்தால் அவற்றை எதிர்கொண்டு, சமாளித்து, வெற்றி கொண்டு முன்னேற வேண்டும். கிருஷ்ண பாகவதர் கிட்டுவாக, தன் தாயையே துறக்கிறான். அடுத்தது, நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அதையும் துறக்கிறான்; பண ஆசையும் துறக்கிறான். பெண்ணாசை அவரை உலுக்க பாலாம்பாள் எனும் வடிவெடுத்து வருகிறது. அதையும் வெற்றி கொள்கிறார். இத்தனை தடைகளையும் கடந்ததால்தான், கிருஷ்ண பாகவதரால், மௌனத்தின் மொழி கொண்டும். தன் இதயத்துள்ளே இருக்கும் இசை என்னும் இறைவனை உபாசனை செய்ய முடிகிறது.

இராமாயணத்தில், சுந்தரகாண்டத்தில், ஆஞ்சநேயர், சமுத்திரத்தைத் தாண்டி, இலங்கையில் சென்று சீதாதேவியைப் பார்ப்பதற்கு வரும் தடைகளை அவர் எதிர்கொள்வதை, இதிகாசத்தின் பகுதியாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், இது ஒவ்வொருவர் அவருடைய இலட்சியத்தை அடைய வரும் தடைகளை, இடைஞ்சல்களை வெல்லும் ஒரு செயல் என எடுத்துக் கொண்டால், அதன் தளம், அதையும் தாண்டி விரிவடைகிறது.

இதயநாதம் நாவலையும், ந. சிதம்பர சுப்ரமண்யன் நாம் இப்படி விரித்துப் பார்க்க முடிகிற விதத்தில் படைத்திருக்கிறார். பணம் புகழ் ஆசைகளையும், உணர்வுப் போராட்டங்களையும் வெற்றி கொண்டு நிற்கும்போதுதான் கலைஞன் அதில் முழுமையடைகிறான். முழுமையின் வடிவம் மௌனத்தில் வந்து நிற்கிறது. மௌனம் ஞானத்தின் உச்சம். இந்த உச்சமே உள்ளத்தின் உபாசனையாகிறது. இந்த நிலையை அடைவதற்கு ஒருவர் மேற்கொள்ள வேண்டிய நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கை ஒரு முனிவரின் தவத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லை. அத்தகைய வாழ்க்கைக்கு, சபேசய்யர் போல ஒரு குருவும், கந்தசாமிபாகவதர் போல ஒரு ஆத்மார்த்தமான ஒரு நண்பரும் கிடைத்து விட்டால் இலட்சியவாதிகளின் உபாசனைகள், தவங்கள் எல்லாம் நிச்சயம் கைகூடும்.

சங்கீதக் காரர்கள் என்றாலே வெற்றிலை, பாக்கு, ஜவ்வாது, மது, பெண்கள் தொடர்பு என்று இருந்த காலக் கட்டத்தில் இலட்சியத்திற்காக வாழ்ந்த ஒரு இசைக் கலைஞரின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டியிருக்கிறார் ந.சிதம்பர சுப்ரமண்யன் அவர்கள். அவரே முன்னுரையில், சங்கீதப் பரம்பரையில் வந்தாலும், அவர் சங்கீதம் கற்றவரில்லை; வாசனை மட்டுமே தெரிந்தவர் என்று குறிப்பிடுகிறார். அதனால்தானோ என்னவோ, அவர், வாழ்க்கையை மட்டுமே எழுதியிருக்கிறார். சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட நாவலாக இருந்தாலும், பாடல்கள் பற்றிய விவரணைகள் எதுவும் இல்லை. ஆனாலும், நாவலை வாசிக்கும்போது, கிருஷ்ண பாகவதருடைய தம்பூராவின் நாதம் வாசிப்பவர் மனதிலும் ஒலிக்கத் துவங்குகிறது,

ந.சிதம்பர சுப்ரமண்யன் அவர்களின் நூற்றாண்டு வெளியீடாக 2012 ல் சந்தியா பதிபகத்தார் இந்த நாவலை பதிப்புத்துள்ளனர். கோவை சிறுவாணி வாசகர் மையத்தினர் இதனை வெளியுட்டுள்ளனர், சிறந்த அச்சாக்கம், நாவலை தடையின்றி வாசிக்கத் தூண்டுகிறது.

மரியாளின் சிலுவைப்பாதை – அ.மலைச்சாமி சிறுகதை

கல்லறைத் திருநாளான நேற்று அந்த கல்லறையில் அவ்வா காறித் துப்பியதை நான் பார்த்து விட்டேன். மேற்கு வானில் சூரியன் ஆழச் சரிந்து, நூறு கிழவிகள் சேர்ந்து துப்பிய வெற்றிலை எச்சில் போல, ஒரு கொடங்கையளவு மேகம் செங்காறையாயிருந்த நேரம். ஏழுமணி திருப்பலி பூசைக்காக புனித அந்தோணியார் கோயிலில் உபதேசியார், ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்ற ஜெபத்தை மைக்கில் செபித்துக் கொண்டிருந்தார்.

இருள், மனிதமுகங்களின் அடையாளங்களை மறைத்திருந்த அந்தநேரத்தில் எங்கள் அவ்வா தடியை ஊன்றிக் கொண்டு ஊரின் வடக்குதிசை நோக்கி நடந்தாள். எங்கு போகிறாய் என்று நான் கேட்டதற்கு, நடுச்சிலுவைத் திண்ணைக்கு அருகிலிருக்கும் ஜோசப் வீட்டிற்கு துவரை புடைக்க போவதாக சொன்னாள். அவ்வாவிற்கு பின்னால் போனால் வடை, காப்பி என எதற்காவது கண்டிப்பாக உத்தரவாதமுண்டு. மேலும் அவ்வா துவரை புடைக்கும் வரை அவர்கள் வீட்டில் உட்கார்ந்து ‘அம்லு’ நாடகம் பார்க்கலாம்.
அவ்வா நடுச்சிலுவைத் திண்ணையைக் கடந்து மேலும் வடக்கில் நடந்தாள். அவ்வா வேறேதோ வேலையாக போகிறாள் என்பது எனக்கு உறுதியானது. நல்ல பிராயமான பனைமரத்தின் உயரம் அளவுக்கு இடைவெளி விட்டு நான் பின்தொடர்ந்தேன். கிறித்தவர்கள் வசிக்கும் பகுதியைக் கடந்து இந்துக்கள் வசிப்பிடமருகில் சென்று கொண்டிருந்தாள். ஊரின் வடக்கு எல்லையான சம்மனசு சிலுவைத் திண்ணையையும் தாண்டி நடந்தாள். பொழுது விழுந்த பின் அந்த சிலுவைத் திண்ணையைத் தாண்டி போவது ஊரில் யாருக்கும் வழக்கமில்லை. ஊரின் பெரிய திருவிழாவின் போது, ஊர்க்காவலரான புனித வனத்துஅந்தோணியார் கூட அந்த இடத்தில் சம்மனசு மாலை போட்ட பின் தெற்கு நோக்கி திரும்பி விடுவார். சின்ன வயதில் பகலில் நான் அந்தப் பக்கமாக போனது தெரிந்தாலே அம்மா எனக்கு டின்னு கட்டுவாள். அவ்வா அந்த இடத்தையும் தாண்டி நடந்து கொணடிருந்தாள்.

அந்த மெட்டல் ரஸ்தாவின் இரு மருங்கும் ஆடாதொடை, காட்டு நொச்சி, தங்கரளி போன்ற கைப்புச்சுவைத் தாவரங்கள் ஆளுயரத்திற்கு மேல் வளர்ந்திருந்தன. ஐப்பசி மாதத்து வாடையை எதிர்த்து அவ்வா போய்க் கொண்டிருக்கிறாள். அதற்கு மேல் நடக்க எனக்கு பெரும் பயமாக இருந்தது. ஆனாலும் ஏதோ ஒரு மர்மத்தை அறியும் ஆவலாதியில் அவ்வாவின் பின்னேயே நடந்துகொண்டிருந்தேன். எதும் பிரச்சினை வந்தால் அவ்வாவை கூப்பிட்டுவிடலாம் என்ற தைரியமிருந்தது.

உபதேசியார் செபித்துக் கொண்டிருக்கும் மைக்கின் ஒலி தேய்ந்திருந்ததால், தடக் தடக் என்ற அவ்வாவின் கைத்தடி ஓசை என் காதில் வலுத்தது. அந்த ஓசை அவ்வா நடக்கும் வேகத்தை துல்லியமாக உணர்த்தியது. அது அவ்வாவின் சராசரியான நடையல்ல. வாழ்க்கையை துச்சமாக கருதித் துணிபவனின் வேகம் அது. அவ்வாவின் நடைவேகமும், அவ்வேகத்தால் அவளின் ஊன்றுகோல் எழுப்பும் ஓசையும், அமைதியான அந்த சூழலுக்கு ஒரு அலைக்கழிப்பான திகிலை அளித்திருந்தது. தனக்குப் பின்னால் ஒரு பெரிய ஊர் இருக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாதது போல் அவ்வா திரும்பி பார்க்காமல் நடந்தாள். அவள் ஊருக்கு திரும்புவாளா என்று கூட என்னால் அப்போது நம்பமுடியவில்லை.

சாலையின் கிழக்கே ஊரின் சிறுபான்மையினரான புராட்டஸ்டன்ட் கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டமிருந்தது. சுற்றுச்சுவருக்கு உள்ளே சிறு சிறு வெளிச்சங்கள் தெரிந்தன. கல்லறையில் ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்திகளின் ஒளி, அங்கு ஊன்றப்பட்டிருக்கும் சிலுவைகளின் நிறங்களையும், அதில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களையும் அறிவதற்கு போதுமானதாக இல்லை. செண்டுமல்லிப்பூ மாலையுடன் மெழுகுவர்த்தியின் திரி கருகி மெழுகுருகும் வாசனை.
தடியுடனானஅவ்வாவின் நடை, சிலுவையுடன் கல்வாரிக்கு போன இயேசுவின் நடையைப்போல தளர்ந்திருந்தது. கிறிஸ்து கைதான வழக்கில், மரியாளே முதன்மை குற்றவாளி என பிலாத்து ராஜா தீர்ப்பு வழங்கியிருந்தால், அவளும் முள்முடி தரித்தவாறு உலகின் பாரமான சிலுவையைச் சுமந்து அதே கல்வாரிக்கு நடந்திருப்பாளா தெரியவில்லை.

புராட்டஸ்டன்ட்கள் கல்லறைத்தோட்டத்தைத் தாண்டி மெட்டல் ரஸ்தாவிற்கு மேற்கே இருக்கும் கத்தோலிக்க கிறித்தவர்களின் கல்லறைத்தோட்டத்தை அடைந்தாள். சாலையோரமிருந்த கல்லறைத் தோட்டத்து சாவடியில் வேக வைத்த பயறு பச்சைகள் சிதறிக் கிடந்தன. சாவடியையொட்டி அமரர் தேர் நின்று கொண்டிருந்தது. எல்லா கல்லறைகளும் செடி செத்தையில்லாமல் செதுக்கப்பட்டு அனைத்து சிலுவைகளிலும் மாலைகள் சாத்தப்பட்டிருந்தன. செவ்வந்தி, சம்பங்கி, ரோஜா, செண்டுமல்லி .
காமராசர், எம் ஜியார், ராஜீவ் காந்தி போன்ற தலைவர்கள் இறந்த போது, ஊரே அவர்களுக்காக ஒப்பாரி வைத்து, அவர்களின் உருவபொம்மையை அந்த கல்லறைத் தோட்டத்தில் புதைத்திருந்தார்கள். சில கல்லறைகளுக்கு உடல்களும் அனாவசியம்தான் போலும். அவர்கள் கல்லறையிலும் சிலுவைகள் நடப்பட்டிருந்தன. அவற்றில் ரோஜாப்பூ மாலைகள் தொங்கிக் கொண்டிருந்தன.

தலைவர்கள் கல்லறைகளுக்கு நேர் வடக்கில் ஊர் தோட்டிகளான பறையர், வண்ணார், சக்கிலியர் கல்லறைகளிருந்தன. அவற்றுள் சிலவற்றில் சிலுவைகளிருந்தன. கிழக்கு மேற்காக போகும் பாதை, கல்லறையிலும் சமரசத்தை வெட்டி விலக்கியிருந்தது.

அந்தப் பாதையிலேயே ஒரு பெரிய புளியமரம். அந்த மரத்தின் காய்ப்பை உள்ளூர்க்காரர்கள் யாரும் ஏலமெடுப்பதில்லை. அவ்வா ஒருநாள் எங்கோ கலம் புடைத்துவிட்டு கல்லறைப் பாதை வழியாக திரும்பி வந்தபோது, இந்த புளிய மரத்தில் உட்கார்ந்திருந்த ஆந்தை அலறியதாம். அடுத்த நாள் காலையில் சொட்டையன் சித்தப்பாவை பெரியாஸ்பத்திரியில் வைத்திருப்பதாக தாக்கல் வந்தது. லாரி ஓட்டிப்பழகுவதற்காக கிளீனராக போய்க் கொண்டிருந்த சொட்டையன் சித்தப்பா சாலை விபத்தில் சிக்கியிருந்தார். ஒரு வயது பயலாக இருந்த என்னை இடுப்பில் தூக்கி கொண்டு போன போது, பெரியாஸ்பாத்திரி பிணவறைக்குத்தான் போகச் சொன்னார்களாம். அந்த புளிய மரத்திற்கு அருகில்தான் சொட்டையன் சித்தப்பாவை புதைத்தது. அந்த புளியமரத்தையும், தன் மகன் புதைக்கப்பட்ட இடத்தையும் கூட அவ்வா கண்டு கொண்டதாக தெரியவில்லை. நான் புளிய மரத்தில் மறைந்து நின்றவாறு அவ்வாவை கவனித்துக் கொண்டிருந்தேன். தொடும் இடமெல்லாம் ஆணிகளும், அதனில் சிக்கிய மயிர்களுமாயிருந்தன. பேய் பிடித்தவர்களின் தலைமயிர்களை பிடுங்கி அதனை அந்த புளிய மரத்தில்தான் ஆணியால் அறைவார்கள். பேயாடுபவர்கள் எல்லோரும் அந்த கல்லறையில் புதைக்கப்பட்டவர்களின் பெயர்களையே தங்கள் பெயர்களாக சொல்வார்கள். அவர்கள்தான் பேய்கள் என்று ஊரில் சொல்வார்கள். பேய்களின் கல்லறைகளிலும் சிலுவைகளைத்தான் நடுகிறார்கள். வாடைக்காற்றிலும் எனக்கு வியர்த்தது. இந்தப் புளிய மரத்தில் பேயரசாள்கிறதோ என்று நான் எண்ணியதால், ஜன்னி வரும் அளவுக்கு உடல் வெடவெடத்தது. ஆனால் எந்த தயக்கமும் இல்லாமல் ஆயிரக்கணக்கான சிலுவைகளுக்குள் அவ்வா மெதுவாக நடந்து போகிறாள். மொச்சை, தட்டைப் பயிறு, பாசிப்பயறு, கொள்ளு, கல்லுப்பயறு, வெல்லம் அல்லது சீனி கலந்த ஊறிய பச்சரிசி போன்றவற்றுடன் பீடி, சிகரெட், சுருட்டு, புகையிலை, கஞ்சா,மது என்று பல்வேறு பாவங்களும் அவரவர் வசதி, விருப்பங்களுக்கு தக்கபடி அவரவர் கல்லறைகளில் அவரவர் வாரிசுகளால் பரிமாறப்பட்டிருந்தன. ஊன்றுகோலை தரையில் அழுத்தி பல பாவங்களை மிதித்து, பல பாவங்களைக் கடந்து சிமெண்டால் கட்டப்பட்ட அந்த உயர்ந்த கல்லறை முன்பு போய் அவ்வா நின்றாள். அந்த கல்லறையில் நிறைய மாலைகள் இருந்தன. புதைக்கப்பட்டவரின் பெயர் படத்துடன் அவரின் தோற்றமும் மறைவும் மார்பிள் கல்லில் செதுக்கப்பட்டிருந்தது. ஆனால் யார் கல்லறை என்று எனக்குத் தெரியவில்லை. ‘க்ர்ர்’ என்று அடிவயிற்றிலிருந்து ஜீவனைத் திரட்டி நாவுக்கு கொண்டு வந்து உக்கிரத்துடன் ஓங்கித் துப்பினாள் அவ்வா.

திரும்பி வேகமாக நடந்தாள் அவ்வா. அவளைப் பார்க்க எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. ஊருக்குள்ளிருந்து வருகையில் எனக்கு பின்னால் ஊரிருந்தது. அவ்வா எனக்கு முன்னாலிருந்தாள். இப்போது அவ்வாவுக்கு முன் ஊரும் எனக்குப் பின் கல்லறையும் இருப்பது அச்சமூட்டுவதாக இருந்தது. ஆகவே வேகமாக ஓடி அவ்வாவின் கையைப் பிடித்தேன். அவ்வா எந்த அதிர்ச்சியும் காட்டாமல் என்னை வீட்டுக்கு கூட்டிப்போனாள்.

அன்று வரும்படி சற்றே கூடுதல் என்பதால் அப்பா என் கால்ப்பாத அளவு நீளமான சப்பட்டை பாட்டில் பிராந்தி வாங்கியிருந்தார். எங்கள் வாதரகாச்சி மரத்தடியில் உட்கார்ந்து தண்ணீர் கலந்து பிராந்தியை குடித்துக் கொண்டிருந்தார். அப்பாவை பார்த்து ‘எனக்கிம்புட்டு குடுறா’ என்றாள் அவ்வா. முக்கா கிளாஸ் பிராந்திக்கு கால் கிளாஸ் தண்ணீர் கலந்து கொடுத்தார் அப்பா. கிளாஸை வாங்கி கண்களை சுருக்கி மூடி ஒரே வீச்சில் குடித்தாள் அவ்வா. சிறு செருமலுடன் வீட்டு பட்டாசாலில் சாக்கை விரித்து படுத்துக் கொண்டாள்.

புனித அந்தோணியார் கோயிலில் திருப்பலி பூசை தொடங்கியிருந்தது. அன்று கல்லறைத் திருநாளாதலால் ‘ஜீவனுள்ள வாழ்வை வாழ்ந்து மரித்தோர் யாவரும் கிறிஸ்துவுக்குள் நித்ய இளைப்பாற்றியை அடைவதாக’ என்று சொல்லிவிட்டு தன் பிரசங்கத்தை தொடங்கினார் பாதிரியார்.

எல்லோரும் உறங்க போயிருந்தார்கள். நான் வெளித் திண்ணையில் அவ்வாவருகே படுத்திருந்தேன்.அவ்வா உறக்கமின்றி புரண்டு கொண்டேயிருந்தாள்.
‘எதுக்குவ்வா அந்த கல்லறய காரித்துப்புன’ என அவ்வாவுக்கு மட்டும் கேட்கும் அளவில் என் தொண்டையின் ஒலியை பிரயோகித்தேன்.தூங்கும் பிள்ளையை தோளில் தூக்கிக் கொண்டு நெடுந்தூரம் நடந்து வந்த தாயொருத்தி, அப்பிள்ளையை தூளியில் பதுவிசாக கிடத்துவது மாதிரி பிணைப்பும், விலகலுமாய் அவ்வா பேச ஆரம்பித்தாள்.
‘சொட்டையனோட சாவ, போலிஸ் பிராதாக்கி குடுத்தா, வண்டி பேருல இருக்க இன்சூரன்ஸ வச்சு ரூவா வாங்கி குடுக்கிறதா லாரி ஓனர் சொன்னாரு. பிராது குடுக்கறதுக்காக அந்த போலிஸ் ஸ்டேசனுக்கு போயிருந்தோம். அங்க நாங்களும் எங்களமாதிரி பிராது குடுக்க வந்தவுகளும் ஸ்டேசன் வாசல்ல இருந்த மரத்தடியில அங்கங்க கூட்டமா ஒக்காந்திருந்தாக . எல்லா கூட்டத்திலயும் ஆணும் பொண்ணுமா அழுகுறவுக இருந்தாக . மேனாமிக்கி பொம்பளகளும், ஆம்பளகளும் டேசனுக்குள்ள போறதும் வாரதுமா இருந்தாக . கூட்டத்துல இருந்தவுக ‘இவ அந்தூரு அவிசாரி. இவன் அந்தூரு திருட்டுப்பய. இந்தா இவன் கஞ்சா விக்கிறவன்’ அப்படின்னு அங்க வந்தவுக போனவுகளுக்கு அடையாளஞ் சொல்லிக்கிட்டிருந்தாக. மாமூல் குடுக்க வாரதா பேசிக்கிட்டாக. திருட்டு குடுத்தவுக, அவிசாரித்தனம் பண்ணுனவுக, கஞ்சா வாங்கி குடிச்சவங்கன்னு எல்லாரும் அந்த டேசன் மரத்தடியில கூடியிருந்தாங்ய போல’.

‘அங்கதே அந்த பொண்ணமூஞ்சிப்பய இன்ஸ்பெட்ரா வேல செஞ்சான். “பிள்ளய சாக குடுத்திருக்க. ஒங்கிட்ட நாங்க காசு வாங்கமாட்டம். ஆனா பிரேத பரிசோதன செய்யுறவக சும்மா செய்ய மாட்டாக. ஐநூறு ரூவா கேப்பாக. குடுத்திட்டா இன்னிக்கே சாயங்காலத்துக்குள்ள பண்ணிருவாக” அப்படின்னான். நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லலாம்லேன்னு ஒங்க தாத்தா சொன்னாரு. “அங்க எம்பேச்சு செல்லாது”ன்னு இவஞ்சொன்னான். கூலிக்கு குப்ப சொமக்குற எங்ககிட்ட ஏது காசு? லாரி ஓனர் அத ஏத்துக்கிட்டாரு.

“நீங்க பிராத குடுத்திட்டு நகல் வாங்கிட்டு வாங்க. நான் போயி காச கட்டிட்டு ஆகறத பாக்குறேன்னு” சொல்லிட்டு லாரிஓனர் போயிட்டாரு.
பிள்ளய சாக குடுத்தவுக படுறதுக்கும், ஆண்டவன் கொஞ்சூண்டு ஆசுவாசத்த வச்சிருந்தான் போல்ருக்கு.
காலச்சூட்டில் சுண்டிப்போன உணர்வின் அடர் ஈரத்தில் அவ்வா பேசினாள்.
“நீங்க ஒரு உதவி செய்யணும். எங்க சரகத்து எல்லையில போனமாசம் ஒரு பிச்சக்காரி செத்துப் போயிட்டா. விளம்பரப்படுத்தியும் பொணத்த கேட்டு யாருமே வரல. அந்த பிரேதத்த போஸ்ட்மார்டம் பண்ணுறதுக்கு மார்ச்சுவரியில நீங்க காசு கட்டணும். ஒங்களுக்கும் அது புண்ணியமா இருக்கும். எங்களுக்கு ஒரு காசு கூட வேணாம். துக்க வீட்டுக்கு நாங்க கேடு செஞ்சிர மாட்டம்”. அப்படின்னு இந்த இன்ஸ்பெட்டரு சொன்னான். ஒங்க அம்மா காதுல கெடந்தத அடகு வெச்சிட்டு, பத்தும் பத்தாததுக்கு வீட்டுல இருந்த தெவசத்த வித்துட்டு ஒங்கப்பந்தே பெரியாஸ்பத்திரிக்கி காசு கொண்டுக்கிட்டு வந்தான்.
கண்ணீரும் கம்பலையுமா பொணத்த வாங்கறதுக்கு பெரியாஸ்பத்திரியில நிக்கிறோம். அழுதழுது அஞ்சாறுவிட்டம் சொரணையில்லாம நானு விழுந்திட்டனாம். சப்பு சப்புன்னு கன்னத்துல அடிச்சு எழுப்புனதா ஒங்கப்பன் சொன்னான்.

வெள்ளத்துணியில மூஞ்சி மட்டும் தெரியிற மாதிரி சுத்தி சொட்டையன குடுத்தாக. அங்க இருந்த புஸ்தகத்தில ஒங்க தாத்தன் கைநாட்டு வச்சிட்டு இருக்கும் போது அந்த அனாதப் பொணத்தையும் வெளில கொண்டுக்கிட்டு வந்தாக. அதுக்கு போலிஸ்காரனொருத்தன் கையெழுத்து போட்டான். சொட்டையன வண்டியில ஏத்தும் போது அந்த அனாதப் பொணத்த பாத்தேன். எனக்கு தெரிஞ்ச மொகம் மாதிரி இருந்துச்சு.

அவ்வாவின் மூச்சு அப்போது வேகப்படுவது போலிருந்தது. பிராந்தியால் ஊறிய எச்சிலை புளிச்சென்று துப்பினாள்.

நம்மூரு ரயிலடி பக்கத்தில கஞ்சா வித்த ஊமையவ. காதும் மந்தம். சொல்லவோ எழுதவோ ஏலாத அவ எந்தூரு, என்ன பேருன்னு யாருக்கும் தெரியாது. பத்து பதினஞ்சு வருஷமா அவள நா பாத்திருக்கேன். ஊரும் பேரும் தெரியாதவள காமாட்சின்னு கூப்புட்டா என்ன? மீனாட்சின்னு கூப்புட்டா என்ன? அவளுக்கு கேக்காதுங்குறதால எல்லாரும் அவள ஊமன்னுதே சொல்லுவாக. அதுமட்டும் அவளுக்கு கேட்டுருமா?
அவ்வா தொண்டையைக் கனைத்து செருமித் துப்பினாள். நாக்கில் என்னதான் ஊறுமோ தெரியவில்லை.

மீண்டும் பேச ஆரம்பித்தாள். ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நா சிறுமலைக்கி கல்லொடைக்க போயிட்டு வந்துக்கிட்டிருந்தேன். பொழுது மசமசன்னு இருட்டிகிட்டு வருது. அப்ப ரோட்டுக்கு தெக்க இருட்டுக்குள்ள ஒருத்தன் இவ கூட மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தான். நானு கிட்டத்துல போக விட்டியும் இவள விட்டுட்டு அவன் ஓடிட்டான். அதிலயிருந்து என்னய பாத்தா இவ சிரிப்பா. அவ சிரிப்பு மதுர மீனாட்சி சிரிப்பு மாதிரி அம்புட்டு அம்சமா இருக்கும். அவகிட்ட கஞ்சா வாங்குனதா ஒங்களுக்கு ஜாதகம் எழுதுன வள்ளுவரு சொல்லுவாரு. சிலருக்கு கடனா கூட கஞ்சாவ விப்பாளாம். சொந்தம், சுருத்துன்னு யாரும் இல்லாததால இவ சாப்பாட்டு அளவுக்கு காச குடுத்திட்டு, மிச்சத்த போலிஸ்காரங்ய புடுங்கிக்குவாய்ங்கலாம். எங்கியாச்சும் ரெய்டு போறதுல கெடக்கிறதயும் இவகிட்ட குடுத்து விக்க சொல்வாய்ங்கலாம். இவ கஞ்சா வித்தா இவிங்யளுக்கு ஆதாயம் ஜாஸ்திதானே! ரெண்டு மாசத்துக்கொருதரம் டேசனுக்கும், கோர்ட்டுக்கும் இவள கூட்டிக்கிட்டு போவாகளாம். அந்த ரயிலடி பக்கத்துல இருக்குற டேசன்ல வேல பாத்த இந்த வாக்காலங்கெட்ட இன்ஸ்பெட்டரு கடிக்கி, இவள டேசனுக்கு கூட்டிட்டு போறத நானொருதரம் பாத்திருக்கேன். அவள அனாதப் பொணமா பாக்க எனக்கு ஈரக்கொலயே நடுங்கிருச்சு’.

‘யாருமில்லாதவ அனாததானவ்வா?’ என்றேன்.

முறைப்பது போல என்னைக் கூர்ந்து பார்த்தாள் அவ்வா.

‘பிள்ள பெத்ததுல சரிஞ்ச வயிறுடா அவளுக்கு. எத்தன பெத்தாளோ? யாருக்கெல்லாம் பெத்தாளோ? எங்கல்லாம் பெத்தாளோ?’ என்று நெடுமூச்செரிந்தாள் அவ்வா.

‘ஒரு மாசமா பிரேதத்த கேட்டு யாரும், எங்கிருந்தும் வரலைல’ என்றேன். அடிவயிற்றிலிருந்து ஜீவனைத் திரட்டுவது மாதிரி ஓங்கரித்து காரி எக்கித் துப்பினாள் அவ்வா. காற்றின் வீச்சுவாக்கில் என் முகத்திலும் எச்சில் தெறித்தது.

‘எத்தன பேரு போதக்கும், தினவுக்கும் அவ நாதி தேவையாயிருந்துச்சு. அவகிட்ட வாங்கி தின்டவன், மென்டவன் எல்லாருக்குமா அவ அனாத? இந்த பலவட்ற இன்ஸ்பெட்டரு கடிக்கி எம்புட்டு வாங்கித் தின்டுருப்பான்? அவ பொணத்த அனாதப் பொணமாக்க இவனுக்கு எப்புடி மனசு வந்திச்சு?’ அவ்வாவுக்கு வந்த ஆவேசத்தில் அவள் வார்த்தைகள் திக்கித் தேம்புவது போலிருந்தது.

‘தின்டவனும் மென்டவனும் எம்புட்டோ பேர் இருக்க இந்த இன்ஸ்பெக்டர மட்டும் எதுக்கு காரித்துப்புற?’ என்றேன்.

‘இன்னிக்கும் கஞ்சா கெடக்கத்தான் செய்யிது. அவ கஞ்சா வித்ததுல யாருக்கெல்லாம் ஆதாயமோ தெரியாது. ஆனா கஞ்சா விக்கிறவனையும் வாங்குறவனையும் அடக்கி, ஊர யோக்கியமா வச்சிக்கறதுக்காக சம்பளம் வாங்குனவன் இவன். அதயே அச்சாரமா வச்சிக்கிட்டு இவ யோக்கியத்த கெடுத்த நாதாரிப்பயல் இந்த இன்ஸ்பெட்டரு’
அவ்வாவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

‘வாய் செத்த அவள இவன் எதாவது கோயில் கொளத்தில பிச்சக்காரியாவே ஆக்கியிருக்கலாம். பிச்சக்காரக சங்கத்திலயிருந்து நாலு பிச்சக்காரங்ய அவளுக்காக வந்திருப்பாய்ங்க. இந்த சின்னப்பட்ட வேலைக்குள்ள அவள தள்ளி, அந்த அப்புராணிய அநாதையாக்கிட்டானே பாவி. அவ பொழப்ப கன்னாசனம் காசநாசம் பண்ணிட்டு எந்த
உறுத்தலும் இல்லாம அவள காணாப்பொணமாக்கி அந்த சவங்களுக்குள்ள ‘ஒரு மாசம்’ நாறவச்சிட்டாய்ங்களே’. அந்த ஒரு மாசமென்பது யுகங்களுக்கான எடையை சுமந்த அழுத்தத்துடன் அவ்வாவின் வாயிலிருந்து வந்தது. மீண்டும் ஒருமுறை காரித்துப்பினாள் அவ்வா.

‘இவகிட்ட வாங்கி தின்டவனும் மென்டவனும் இப்ப உசுரோட இருக்காய்ங்களா போயிட்டாய்ங்களான்னு எனக்கு தெரியாது. ஆனா தெய்வம் இவன போட்டுப் பாத்திருச்சு. சொட்டையன் செத்த மறு வருஷம் நெஞ்சு வலியில இவன் செத்துப் போயிட்டான்.
அப்பத்தே எனக்கு கொஞ்சம் மனசாருச்சு.’
‘ஆனா இந்த சர்க்காரு இவன் குடும்பத்துக்கு ரூவாயும், இவம்புள்ளக்கி உத்தியோகமும் கொடுத்திச்சு. பாவிகள செவக்கி வக்கவா சர்க்காரு? கை, கால்ல வெறப்பு இல்லேண்டாலும், நெஞ்சுக்குள்ள ஆத்திரம் கெடக்குதே!’

‘அந்த இன்ஸ்பெக்டர அவமானப்படுத்தறதுக்கு எம்புட்டோ வழியிருக்கும் போது எதுனால காரித்துப்பணும்னு முடிவு செஞ்ச?’ என்றேன்.

‘பேச வாயில்லாம இவிங்யளால கெட்டழிஞ்சு போன அவளுக்கு அவட்டம் இருந்து, இந்த சீன்றம் புடிச்ச பயகள என்னமாச்சும் செய்யணும்னு நெனச்சா, அவளால காரித்துப்பத்தான முடியும்?’

‘எதுக்கு கல்லற திருநா அன்னக்கி துப்புற?’ என்றேன்.

‘பாவிகள் அழிஞ்சு போனாலும் அவுகவுக செஞ்ச பாவங்கள் நெனப்புகள்ல சுத்திக்கிட்டுத்தே இருக்கு. செத்தவுக அவுகவுக இரத்த வழிகளாலே நெனக்கப்படுற நாள்ல அவன் பாவங்களும் நெனக்கப்படணும்ல. அப்பறம் நியாயத் தீர்ப்புக்கு என்ன அர்த்தம்?’ என்றாள் அவ்வா. சிறிது நேரத்தில் அவ்வா உறங்கியது மாதிரி இருந்தது. உறக்கத்தால் அன்று நான் ஆசிர்வதிக்கப்படவில்லை.

நினைக்கப்பட வேண்டிய இறந்தோர் செய்கைகள் நினைவில் எழுந்து கொண்டேயிருந்தன. எவையெல்லாம் நினைக்கப்பட வேண்டும், எவையெல்லாம் நினைக்கப்பட தேவையில்லை என்பதற்கான பட்டியலும், அதனை யாருக்கு எவ்வளவில் எப்போது பரிமாற வேண்டும் என்பவற்றையெல்லாம் யார் நிர்வகிக்கிறார்கள்? மனதின் இசைவையும், இசைவின்மையையும் மனித விருப்பங்களால், முயற்சிகளால் மீற முடியாதபடிதான் இங்கு வாழ்க்கைகள் வாழப்படுகின்றன.எனக்கு இரத்த உறவுடைய அவ்வாவையே நான் பின்தொடர்ந்தேன். நான் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றதும், அந்த இன்ஸ்பெக்டர் மற்றும் ஊமைத்தாயைப் பற்றி நான் அறிந்து கொண்டது என் விருப்பமோ அல்லது என் அவ்வாவின் விருப்பமோ முயற்சியோ அல்ல. ஊமைத்தாய், அந்த இன்ஸ்பெக்டரும் என்னால் நினைக்கப்பட வேண்டிய நிர்பந்தத்தை அல்லது வாய்ப்பை விதி உருவாக்கி தந்திருக்கிறது. ஊமைத்தாயை எங்கு புதைத்தார்கள் என்று அவ்வாவுக்கு தெரியாது. அதனால் எனக்கும் தெரியாது. எனக்கு அறிவிக்கப்பட்ட செய்திக்குரிய, நான் அறிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கக்கூடிய அந்த நபரை அறிய விரும்பினேன்.

பூமியில் ஒளி பரவ, இருள் தன் அனுமதியை மெல்ல வழங்கிக் கொண்டிருந்த காலை. ஊர்க்காரர்கள் காடு கரைகளை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். நான் கல்லறைத் தோட்டத்தை நோக்கி நடந்தேன். கத்தோலிக்க திருச்சபையினரின் கல்லறைத் தோட்ட முகப்பில் நின்றவாறு கல்லறைகளைப் பார்த்தேன்.

ஆயிரக்கணக்கில் சிலுவைகள். தேவகுமாரன் சுமந்தது போன்ற பாரமான சிலுவையை பிரதி அல்லது போலி செய்த சிலுவைகள். அந்த சிலுவைகளுக்கடியில் எத்தனை எத்தனை உடல்களோ!
இறந்தவர்கள் வாழுங்காலத்தில் அவர்களை கருவிகளாய்க் கொண்டு தங்கள் ஜீவன்களை ஈன்று கொண்டவர்களால் சுமக்கப்பட்டு நடப்பட்ட சிலுவைகள். கல்லறைகளுக்குள் நடந்தேன்.

கிழக்குச்சூரியன் மேற்கு நோக்கி ஒளி வீசியதால் கிழக்கு நோக்கிய சிலுவைகளும், அதில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்களும் துலக்கமுற்றிருந்தன. கல்லறைப்பாதைக்கு வடக்கேயிருந்த ஊர்த்தோட்டிகளின் புதைப்பிடங்களில் துளசியும், பிரண்டையும் நடப்பட்டிருந்தன. அவற்றில் சில வளர்ந்திருந்தன. சில நறுங்கியிருந்தன.

பெருந்தலைவர் காமராசரின் கல்லறைதான் சிலுவை நடப்பட்ட கல்லறைகளில் முதலாவதாக இருந்தது. அவர் பெயரையே அவரால்தான் நான் வாசிக்கிறேன். அவ்வா நடந்தது போல வேகமாக நடக்க முடியவில்லை. கல்லறைகள் முழுக்க சிலுவைகள். சிலுவைகள் முழுக்க பெயர்கள் . அதனடியில் புதைக்கப்பட்டவர்களுக்காக போடப்பட்டிருந்த படையல்கள். எல்லாவற்றிலும் மாலை, மெழுகுவர்த்தி, பயறு என சில பொதுப்பொருள்கள் படையலில் இருந்தன. ஆனால் ஒன்றைப் போல் மற்றொன்று இல்லாதவாறு பிரத்யேகப் பொருள்களும் நிறைந்தே இருந்தன.

இரண்டாம் வரிசையில் என் வகுப்புத் தோழி யொருத்தியின் கல்லறையொன்றிருந்தது. வகுப்பிலேயே மிக அழகானவள். ஏதோ விசித்திர நோயில் இறந்து போனவள். அடுத்த வரிசையில் எனக்கு சைக்கிள் ஓட்ட பழக்கிவிட்ட நண்பனொருவனின் கல்லறை. கொஞ்சம் தள்ளி ‘சக்கிலியப்பயலுக்கு முதல்ல சோறு போட்டா, மற்ற பிள்ளக எப்பிடி சாப்புடுவாக’ என்று சொல்லி முதலில் எனக்கு சோறு போட மறுத்த பள்ளிக்கூட ஆயாவின் கல்லறை இருந்தது. அடுத்த வரிசையில் எனக்கு ஐந்தாம் வகுப்பில் நன்னெறிப் பாடம் நடத்திய ஆசிரியையின் கல்லறையை அடையாளம் கண்டு சில வினாடிகள் நின்றேன். அவர்தான் “ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணமென்று பெயரிட்டு
சூரையங்காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிவார்கள்” என்ற திருமூலர் பாட்டை நடத்தினார்.

அவ்வா காறித்துப்பிய கல்லறை இருந்த வரிசையில் போய்க் கொண்டிருந்தேன். ஒரு கல்லறையில் மாலைகள் மெழுகுவர்த்திகளுடன், ஒரு பித்தளைச்சங்கும், பால் நிரப்பிய பால் புட்டியையும் பார்த்தேன். இரண்டு மாதம் முன்பு போர்வெல் குழியில் விழுந்து இறந்து போன ஒன்றரை வயது குழந்தையின் கல்லறை அது.

அவ்வா காறித்துப்பிய கல்லறையை அடைந்தேன். அது அந்த போலிஸ் இன்ஸ்பெக்டரின் கல்லறையல்ல. அது நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அந்த இன்ஸ்பெக்டரினுடைய தந்தையை அடக்கம் செய்த கல்லறை. அவ்வா தவறு செய்து விட்டாளா என்று எனக்கு புரியவில்லை. ஆயினும் எனக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. எங்கு பெய்வது என்பதில்தான் குழப்பமாயிருந்தது.