Author: பதாகை

நிழல் ஒன்று – ஸ்ரீரஞ்சனி சிறுகதை

ஜன்னல் கண்ணாடிக்கூடாக வெளியே வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். மேப்பிள் மரத்தில் ஒரு சில அரும்புகள் துளிர்விட்டுக்கொண்டிருந்தன. அங்கும் இங்குமா சில பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. ஆனால் தெரு மட்டும் வெறிச்சோடிப் போயிருந்தது. தேடிப்பிடித்தால் காணக்கூடியளவில் மிகச் சிலர் ஆளுக்கு ஆள் வெகுதொலைவில் முகமூடிகளுடன் வேகமாக நடந்துகொண்டிருந்தனர். பக்கத்திலிருந்த பூங்காவில் அணில்கள் மட்டும் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தன. குளிரோ, வெய்யிலோ எதுவானாலும் ரிம் ஹோட்டன்ஸ் கோப்பி வாங்குவதற்காகக் காத்திருக்கும் கார்களையும் மனிதர்களையும் அவன் பார்த்து நீண்ட நாட்களாகியிருந்தது.

மேசைமேல் ஏற்றப்பட்டிருந்த கதிரைகளும், கலகலத்திருக்கும் அந்தவிடத்தில் இருந்த மயான அமைதியும் அவனுக்குப் பூதாகரமாகத் தெரிந்தன. இந்த அமைதி, இந்த வேலை, கனடாவுக்கு மனைவி சாந்தியின் வரவு … என அவன் வாழ்வுடன் தொடர்பான அனைத்துமே பதிலற்ற கேள்விகளாக மெதுமெதுவாக விசுவரூபமெடுத்துக் கொண்டிருந்தன.

கெதியிலை புரோமோசனுக்கு அப்பிளை பண்ணோணும். அப்பத்தான் சாந்தி வரேக்கே சிலவுக்குக் கட்டுபடியாகுமெண்டு நினைச்சுக்கொண்டிருக்க, ம்ம், சத்தமில்லாமல் நான் யுத்தம்செய்வன் எண்டு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற இந்தக் கொரோனா வந்து நிலைமையை அடியோடு மாத்திப்போட்டுது, சீ…’

அவன் மனசுக்குள் பொங்கிய விரக்தியை, தொற்று வராமல் இருக்கிறதே பெரியவிஷயமென்ற அறிவு சமாதானப்படுத்த முயன்றபோது, மாற்றக்கூடியவற்றை மாற்றக்கூடிய வல்லமையையும் மாற்றமுடியாதவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனவலிமையையும் வளர்த்துக்கொள் என எங்கோ வாசித்த ஒரு வாசகம் அவன் நினைவுக்கு வந்து அவன் இதயத்தை ஆதரவுடன் தடவிக்கொடுத்தது.

சனியன் பிடிச்ச கொரோனா எண்டு திட்டுறதாலை எனக்கு நானே மனவுளைச்சலை உண்டாக்கிறதைத்தவிர வேறு என்னத்தைச் சாதிக்கப்போறன்,” என்ற அவனின் சிந்தனையை வேலையைப் பொறுப்பேற்க வந்திருந்த டொமினிக்கின் குரல் குலைத்தது.

சரி, நாளைக்குச் சந்திப்பம்.” என பேப்பருக்குள் மூழ்கிப்போயிருந்த மனேஜருக்கு ஆங்கிலத்தில் சொல்லிப்போட்டு வெளியே வந்த சுந்தர் கதவைத் திறக்கவும் பானு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

, பானு! உங்களைச் சந்திப்பன் எண்டு நான் எதிர்பார்க்கவேயில்லை. என்ன இண்டைக்கு நீங்க வெள்ளனத் தொடங்கிறியளா?”

வேலைநேரங்கள் மாற்றப்பட்டிருந்ததால் மூன்று கிழமையாக அவனுக்கு அவளைச் சந்திக்கக்கிடைக்கவில்லை. அவனின் முகம் அவனையறியாமலே மலர்ந்தது.

ரிம் ஹோட்டன்ஸில் அவனுக்கு அவள்தான் வேலைபழக்கினாள். அப்படி ஆரம்பித்த அறிமுகம் நல்லதொரு நட்பாக அவர்களிடையே மலர்ந்திருந்தது.

பானு அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையை மேவியதொரு கலக்கம் அவளின் கண்களில் அவனுக்குத் தெரிந்தது.

இல்லை, சுந்தர். மனேஜர் வந்து சந்திக்கச் சொன்னார். கையும் ஓடேல்லை, காலும் ஓடேல்லை. அதாலை வெள்ளனவே வந்திட்டன்,” சொல்லிக்கொண்டே ஜக்கற்றைக் கழற்றினாள், அவள்.

!”

அவனின் அந்த ‘ஓ’ அவனுக்கே குழப்பத்துடன் ஒலித்தது. நாளைக்குச் சந்திப்பம் என அவன் மனேஜருக்குச் சொல்வதே அடுத்த நாள் வேலை இருக்கிறதென அவனுக்கு அவனே உறுதிப்படுத்திக்கொள்ளத்தான். பானு ஒரு மேற்பார்வையாளர் என்பதால் … அதிகம் பேர் வேலைசெய்யத் தேவையில்லாத நேரத்தில் மேற்பார்வையாளர் ஏனென வேலையை விட்டு அவளை நிற்பாட்டப் போறாரோ … அவனின் மனம் பானுவுக்காகக் கலங்கியது.

ஓடிக்கொண்டிருந்த மெசின் ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டதால், ஆறு மாதத்துக்கு முன்பாக வலது கையின் இரண்டு விரல்களை அவளின் கணவன் இழந்திருந்தான். காலம் அவனின் உடல் காயத்தை ஒருவாறாகத் தேற்றிவிட்டிருந்தாலும்கூட, அவனின் மனக் காயம் நாள் ஆக ஆக கூடிக் கொண்டிருந்ததை சுந்தர் அறிவான். அது பானுவை மிக அதிகமாகப் பாதிப்பதும் சுந்தருக்குத் தெரிந்ததே.

கடைசியாக அவன் அவளைச் சந்தித்தபோது, பிளாஸ்ரர் போடப்பட்டிருந்த அவளின் நெற்றியின் வலது பகுதியில், தழும்பு ஒன்று முன்தள்ளிக்கொண்டு நிற்பது அவளின் முகத்தில் அசைந்தாடிக்கொண்டிருந்த அந்தச் சுருட்டை முடிக்கிடையிலும் தெளிவாகத் தெரிந்தது.

அன்று அந்தக் காயம் பற்றி விசாரித்த அனைவருக்கும் குளியலறையில் விழுந்துபோனேன் என்றே அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். தேநீர் இடைவேளையின்போது, அவள் அருகில் சென்று, “பானு, ஆ யூ ஓகே, என்ன நடந்தது?” என மெல்லிய குரலில் அவன் கேட்டபோது அவள் கண்களைக் கண்ணீர் நிறைத்தது. தலையை இடமும் வலமுமாக ஆட்டியவள், பிறகு சொல்கிறேன் என்பது போல வாயை அசைத்தாள். பின்னர் வேலை முடிந்துபோகும்போது அவள் அவனைப் போனில் அழைத்தாள்.

பானு,” என அவன் சொல்லும்முன்பாக ஓங்கி ஒலித்த அவளின் கேவல் அவன் மனதைக் குடைந்தது. “சனிக்கிழமை களைப்பாயிருக்கு எண்டு இவர் சோபாவிலை படுத்திருந்தவர். இந்தச் சின்னன் ரண்டும் ஒண்டை ஒண்டு கலைச்சுக் கொண்டு ஓடித் திரிஞ்சுதுகள். அந்தச் சத்தத்திலை அவற்ரை நித்திரை போட்டுது. கோவத்திலை அவர் பெரிசாக் கத்தினார், பத்தாததுக்கு சுமிக்கு அடிச்சும்போட்டார்… தேத்தண்ணியோடை போன நான் ஏனப்பா அடிச்சனியள், அதுகள் சின்னப் பிள்ளையள் விளையாடமல் என்ன செய்யுங்கள், நீங்க உள்ளுக்குப்போய்ப் படுக்கிறதுதானே எண்டு சொன்னன். அவ்வளவுதான் … என்னடி நீ எனக்குப் படிப்பிக்கிறியோ எண்டு தேத்தண்ணிக் கோப்பையைப் பறிச்சு எனக்கு வீசினார். வலியிலை நான் கத்த பிள்ளையள் அதை மிஞ்சி அலறிச்சுதுகள்…” கண்ணீரினூடு வந்த அவள் குரலில் இயலாமை ஒலித்தது.

, ஐ ஆம் வெரி சொறி பானு, வெரி சொறி எனக்கென்ன சொல்லுறது எண்டே தெரியேல்லை…” என்று மட்டும்தான் அவனால் சொல்லமுடிந்தது.

அன்றிரவு சாப்பிடவோ, நித்திரைகொள்ளவோ அவனால் முடியவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு உருண்டபடியிருந்தான். அவனின் சிறுபிள்ளைப் பராய நினைவுகள் மாறிமாறி அவனின் நினைவுக்கு வந்து அவனைக் கஷ்டப்படுத்திக்கொண்டிருந்தது.

இந்தத் தனிப்படுத்தல் காலத்தில், பிள்ளைகளின் மேலான, பெண்களின் மேலான வன்முறை அதிகரித்திருக்கிறது என்பதை ஊடகங்கள் சொல்லிக்கொள்ளும் பொழுதுகளிலெல்லாம் பானுவின் முகமே அவன் கண் முன் நிழலாடும். மனதில் அச்சமேற்படும். கூடவே, வலியிலேயே வாழ்க்கையை முடித்துக்கொண்ட அவன் அம்மாவின் அழுகைச் சத்தம் அவனுக்குள் பரிதாபமாய் ஒலிக்கும்.

என்ன யோசனை சுந்தர், எல்லாம் ஓகேயா?” அவர்களுக்குள் இருந்த அந்த மௌனத்தைப் பானு உடைத்தாள்.

வாழ்க்கையின் வினோதங்களை நினைச்சுப்பாத்தன் பானு…. எங்கடை நாட்டிலை இருந்தது ஆக ரண்டே ரண்டு மொழியள்தான், இருந்தும் மற்ற மொழியிலை இரண்டு சொல்லுக்கூட எங்களுக்குத் தெரியாது. இப்ப இங்கை இன்னொரு மொழியை அரைகுறையாய்ப் பேசி வாழுறம். அங்கேயே ஒருத்தரின்ரை மொழியை ஒருத்தர் படித்து, ஒருத்தரை ஒருத்தர் விளங்கிக்கொண்டிருந்தால் இனப்பிரச்சினை இப்பிடி உச்சத்துக்குப் போய் இவ்வளவு அழிவு நிகழாமல் தடுத்திருக்கலாமோ, எங்கடை வேலையளைப் பாத்துக்கொண்டு நாங்களும் அங்கேயே நிம்மதியாக இருந்திருக்கலாமோ எண்டெல்லாம் இப்ப என்ரை மனம் தத்துவவிசாரணை செய்யுது, பானு,” என்றான் சுந்தர்.

ம்ம், சரி, அதை விடுங்கோ, குடும்பத்துக்குள்ளை ஒருத்தரை ஒருத்தர் விளங்கி, ஆளுக்கு ஆள் மதிப்புக் கொடுத்து நடக்கிறதே சிலருக்குப் பெரும் பிரச்சினையாயிருக்கு! இப்ப பஸ்சிலை வரேக்கை மனுஷபுத்திரனின்ரை ஒரு கவிதை படிச்சன், கேளுங்கோ…”

ஒருமைபன்மை

எந்தக் கணத்தில்

என்னை அழைப்பதில்

பன்மையிலிருந்து

ஒருமைக்கு மாறினாய்?

பன்மையிலிருந்து

ஒருமைக்கு மாறும்போது

ஆட்டத்தின் ஒரு விதி மாற்றப்படுகிறது

சீட்டுக்கட்டில் ஒரு சீட்டு

ரகசியமாக இடம் மாறுகிறது

ஓசையில்லாமல் ஒரு பூனை

அறைக்குள் நுழைகிறது

கிணற்றுத் தண்ணீரின் சுவை

திடீரென மாற்றமடைகிறது

ஒரு அனுமதிச் சீட்டின்

ஓரத்தில் கிழிக்கப்படுகிறது

உண்மைதான் பானு, உறவு ஒண்டு நெருக்கமா வரேக்கே எவ்வளவு சந்தோஷப்படுறம். மரியாதையை, உரிமையை விட்டுக் கொடுக்கிறதிலைகூட ஒரு மகிழ்ச்சியை அனுபவிக்கிறம் ஆனால் பிறகு மற்ற ஆள் அதைத் துஷ்பிரயோகம் செய்யேக்கைதானே ….,” அவனால் தொடரமுடியவில்லை.

வீட்டுக்குள் 24 மணி நேரமும் பானு அடைந்து கிடக்கவேண்டியிருந்தால் அவன் கண்கள் கலங்கின, இதயம் வலித்தது. அவனது உள்மனம் அம்மா என ஓலமிட்டது.

அவள் மனேஜரிடம் போய்வரும்வரை அங்கேயே காத்திருந்தவனுக்கு அவள் சொன்ன செய்தி ஆச்சரியம் தருவதாக இருக்கவில்லை.

பானு, நான் சொல்லிமுடிக்கும் வரைக்கும் குறுக்கிடாமல் கேட்பீங்களா?” கேட்டவன் பானுவின் கண்களைப் பார்த்தபடி அவன் தீர்மானத்தை உறுதியுடன் கூறினான்.

கொரோனாப் பிரச்சினை இருக்கும்வரைக்கும், இந்த வேலையிலை எனக்குக் கிடைக்கிற காசை அரசாங்கம் தாற காசு ஈடுசெய்யும். இந்தப் பிரச்சினை ஓய்ஞ்சாப் பிறகு திரும்ப இங்கை நான் வரலாம், அல்லது வேறையொரு வேலையைத் தேடலாம். ஆனா… இந்த வேலை உங்களுக்கு எவ்வளவு முக்கியமெண்டது, உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். ஒரு சுப்பவைசராக இருந்திட்டு சும்மா பணியாளராக இருக்கிறது, உங்களுக்குப் பரவாயில்லையா, பானு? நீங்கள் சரியெண்டு சொன்னால் மனேஜரோடை நான் கதைக்கிறன் …”

அவனுக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாத பானு கண்மல்க அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

ரண்டு மீற்றர் இடைவெளியைப் பேணவேணுமெண்டதாலை உங்கடை இந்தக் கும்பீட்டை மன்னிச்சுவிடுறன்,” எனச் சிரித்தபடி மனேஜரிடம் சென்றான் சுந்தர்.

அரபிக்கடலின் கோடியில் – ‘மண்ணும் மனிதரும்’ நாவல் குறித்து கமலதேவி

அரபிக்கடற்கரையில் உள்ள கோடி என்ற கிராமத்தில் வாழும் மனிதர்களின் ,மண்ணின் கதை.அரபிக்கடற்கரையும் அதன்கழிமுகப்பகுதிகளும், அதையொட்டிய தென்னை மற்றும் புன்னை தோப்புகளும், மணற்மேடுகளும், ஏரியும், ஆங்காங்கு தள்ளி அமைந்த வீடுகளும், கோடிகிராமத்தை சுற்றியுள்ள ஐரோடி, மங்களூர், மந்தர்த்தி, ஹெங்காரகட்டே,படுமுன்னூர், உடுப்பி, குந்தாபுரம், மங்களூர்,பெங்களூரு,பம்பாய் மற்றும் மதராஸ் என்று கதைக்களம் விரிகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கதை துவங்குகிறது.பார்வதி மற்றும் ராமஐதாளர் திருமணம் பெருமழைகாலத்தில் நடப்பதிலிருந்து கதை துவங்குகிறது.ஐதாளரின் விதவைதங்கை சரஸ்வதி.பார்வதி சரஸ்வதி இருவரின் உறவானது அன்பும், உழைப்பும்,புரிதலும் இணைந்த தோழமைஉணர்வுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

மழை ,பனி, கோடை காலங்களுக்கு ஏற்ப வாழ்க்கை நடத்த தேவையானவைகளை உழைத்து ஈட்டிக்கொள்ளும் எளிமையான வாழ்வு அவர்களுடையது.அவர்களுக்கு விவசாயத்தில் உதவும் செம்படவர்களுடனான அவர்களின் உறவு கடைசி வரை பிரிக்கமுடியாததாக உள்ளது.கடும் உழைப்பக்கோரும் வேலைகளை ஈடுபாட்டுடன் செய்கிறார்கள்.

ராமஐதாளர் பக்கத்துஊர்களுக்கு நடந்து சென்று புரோகித வேலைகளை செய்கிறார்.போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் என்பதால் மக்கள் எங்கும் நடந்தோ படகிலோ செல்கிறார்கள்.நடக்கும் தூரம் வரை உள்ள இடங்களே அவர்களுக்கு பரிச்சயமாக இருக்கிறது.

ஆண்டிற்கு ஒருமுறை வரும் கோடியின் கோடீஸ்வரர் திருவிழாவிற்கு செல்வது அவர்களுடைய எதிர்பார்ப்பு மிகுந்த நிகழ்வாக இருக்கிறது.சொல்லப்போனால் நிதானமான வாழ்க்கை.நெல், உருளைக்கிழங்கு, கீரைகள், தேங்காய், உளுந்து போன்றவை அவர்களின் முக்கியமான உற்பத்தி பொருட்கள்.

இந்த நாவலில் மூன்றுதிருமணங்கள் விரிவாக சொல்லப்படுகின்றன.வீட்டு முற்றத்தை சீராக்கி, கடலோரத்தில் குறைந்தது ஆயிரம்ஆட்களாவது கலந்து கொள்ளும் திருமணங்கள்.அந்தப்பகுதியின் உணவுப்பழக்கங்கள்,சடங்குகள்,பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் நாவலில் அவர்கள் வாழ்வுடன் பிணைந்து வருகின்றன.

குழந்தை பிறக்காததால் ராமஐதாளர் சத்தியபாமையை இரண்டாம் திருமணம் செய்கிறார்.அவர்களுக்கு லட்சுமிநாராயணன் என்கிற லச்சு,சுப்பம்மாள் என இரு குழந்தைகள்.ஐதாளரின் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் சீனமய்யரின் வீடு இருக்கிறது.இருநண்பர்களும் கடனால் பிரிகிறார்கள்.காலம் முழுதும் இருவரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் சொத்துக்களை வாங்குகிறார்கள்.

பெங்களூரில் சீனமய்யரின் பிள்ளைகள் சாப்பாட்டுக்கடை நடத்தி மிகுந்த வருமானம் ஈட்டுகிறார்கள்.ஐதாளர் தன் பிள்ளையை ஆங்கிலவழிகல்விக்கு அனுப்புகிறார்.ஆனால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாகி பணத்தை விரயமாக்குகிறான்.வீட்டிலும் யாருடனும் ஒட்டுதலின்றி இருக்கிறான்.

நீலவேணியை திருமணம் செய்த பிறகும் அவன் மாறுவதாக இல்லை.தீயசகவாசங்கள் வழி அவனுக்கு ஏற்படும் நோயால் நம்பிக்கை இழக்கும் ஐதாளர் மருமகளுக்கு தன் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைக்கிறார்.பார்வதியும் ஐதாளரும் மறைகிறார்கள்.இது முதல் தலைமுறை.

இரண்டாம் தலைமுறையில் லச்சன் மனைவியை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி அழிக்கிறான்.அவன் மனைவியான நாகவேணிக்கு மூன்றாவதாக பிறக்கும் குழந்தை மட்டும் நிலைக்கிறது.அதற்கு ராமஐதாளரின் பெயரை இடுகிறார்கள்.குடும்பத்தை வறுமை சூழ்கிறது.இரண்டாம் தலைமுறை பெரியவர்களும் காலம் முடிகிறது.

தன் தந்தை வீட்டிலிருந்து நாகவேணி மகனை வளர்க்கிறார்.மீண்டும் பதினைந்து ஆண்டுகள் சென்று கோடிக்கு வருகிறார்.இடையில் வயலின் இசை கற்பது அவருக்கு மனநிம்மதியை தருகிறது.

ராமன் மதராஸில் பி.ஏ படிக்க வருகிறான்.சுதந்திரபோராட்டதில் ஈடுபட்டு பலமாதங்கள் சிறை செல்கிறான்.மீண்டும் ஒருஆண்டு கோடியில் இருந்தபடி சுதந்திரம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுகிறான்.பின்னர் மீண்டும் படிப்பை தொடர்கிறான்.வீட்டில் வயிற்றுக்கும்,துணிக்கும் இல்லாத வறுமை தாண்டவமாடுகிறது.

படித்தப்பின் வேலை கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது.ராமன் இயந்திரத்தனமான வேலையின் மீது பிடிப்பில்லாமல் இருக்கிறான். அதை எதிர்கொண்டு வாழ்வில் தன்குடும்பம் இழந்த சொத்துக்களை, மரியாதையை திரும்பப்பெறுகிறானா என்பது மூன்றாம் தலைமுறைக்கதை.

நாவலில் நிறைய மனிதர்கள் வருகிறார்கள்.லட்சுவின் நண்பரான ஒரட்டய்யர்.இருவரும் தந்தையர் சொத்துக்களை தீயவழிகளில் அழிக்கப்பிறந்தவர்கள்.நாகவேணியின் சிறியதந்தை,செம்படவர்களான சூரன்,அவர் மகன் காளன் அவர் மனைவி சுப்பி,சுப்பராய உபாத்தியாயர்,நரசிம்மய்யர்,நாகவேணியின் குடும்பத்தார்,மதராஸ்குடும்பம்,ராமன் பம்பாயில் ஓவியம் கற்கும் நோவா என்று நாவல் முழுக்க மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் நிரம்பி இருக்கிறது.

கதை நேர்க்கோட்டில் சொல்லப்பட்டிருந்தாலும் கூட அறுநூற்று ஐம்பது பக்கங்கள் உள்ள இந்தநாவல் எந்த இடத்திலும் சோர்வு தட்டுவதில்லை.மனித வாழ்வின், செல்வத்தின் நிலையாமையை நாவல் தன்னுள் நிரப்பி வைத்திருக்கிறது.

நாவலில் வரும் காலநிலை,இட விவரணைகள் மனிதர்களின் வாழ்வுடன் இணைந்துள்ளது.முக்கியமாக கோடியின் ஆளரவம் அற்ற கடற்கரை.தாழை புதர்களும் ,பனைமரங்களும், புன்னைமரங்களும் வளர்ந்திருக்கும் மணல்வெளி.மணல்மேடுகள் ,கடலின் பின் மறையும் சூரியன் போன்றவை நாவலுக்கு உயிர்ப்பை அளிக்கின்றன.

விடுமுறையில் ராமனும் அம்மா நீலவேணியும் இரவெல்லாம் மணற்குன்றுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது வயலின் இசைக்கிறார்கள்.அத்தனை வறுமையான வாழ்வில் இயற்கையுடனான இந்த பந்தம் அவர்களுக்கு மாபெரும் ஆசுவாசத்தை அளிக்கும் இடங்கள் அலாதியானவை.நிலவொளியில் கடற்கரை மணல்குன்றில் தாயும் மகனும் அமர்ந்திருக்கும் சித்திரம் நம் மனதில் பதிந்துவிடுகிறது.

மழைகாலத்திலும், காற்றுகாலத்திலும் மணல்மேடிடும் இடங்களை தொடர்ந்து சீர்செய்து விவசாயம் செய்கிறார்கள்.காய்கறி கீரை என்று தங்களுக்கான உணவை தாங்களே உற்பத்தி செய்கிறார்கள்.மேலும் பால்வற்றிய கறவைகளுக்கு கடைசிவரை உணவும், நீரும், இடமும், அன்பும் அளித்துக்காக்கிறார்கள்.

ஒருநீண்ட வாழ்வை வாழ்ந்த அனுபவத்தை இந்தநாவலை வாசிப்பதனூடாக அடையலாம்.வாழ்வை அதன் போக்கில் சொல்லும் நாவல்.மனிதர்கள் பிறந்து வாழ்ந்து மறைகிறார்கள்.ராமனுடைய வாழ்வில் இவற்றுக்கப்பால் அவனுடைய ஒவியமும் இசையும் எஞ்சுகிறது.

ஒருநாள் அவன் கடல் கொந்தளிப்பான காற்றுகாலத்தில் அரபிக்கடலை வரைகிறான்.அதே கொந்தளிப்பை பம்பாயில் தன் நண்பர்கள் முன் இசையில் கொண்டு வர அவனால் முடிகிறது.அதே கொந்தளிப்பை நாட்டு விடுதலைக்காக பேசும் கூட்டங்களில் தன் பேச்சில் கொண்டுவர முடிகிறது.

அதே சமயம் ராமனிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு அவனையும் சுற்றியுள்ளவர்களையும் சிறிது நேரம் வாழ்க்கைப்பாடுகளில் இருந்து விடுவிக்கிறது.ஏழ்மையான வாழ்விலிருந்து எழும் வைராக்கியம், நேர்மை, தீவிரம் கொண்ட இளைஞனாக அவன் இருக்கிறான்.ராமஐதாளரும் சரஸ்வதியும் கூட உழைப்பில் அவ்வாறு இருந்தவர்கள்.எதோஒரு தீவிரம் இல்லாத வாழ்வு லச்சனுடைய வாழ்வைப் போல வெறும் அலைகழிப்பாக மாறிவிட வாய்ப்புள்ளது.

ராமன் தாயிடம் வளர்ந்த பிள்ளையாதலால் பெண்கள்மேல் வாஞ்சையுடையவனாக, அவர்களுக்கான இன்முகம் கொண்டவனாக ,அவர்கள் பேசுவதற்கு காது கொடுப்பவனாக இருக்கிறான்.அம்மா,அத்தை,சுப்பி,பாட்டி,சித்தி என்று அவனுடனிருக்கும் பெண்கள் மேல் அதிகாரம் செலுத்தாதவனாக இருக்கிறான்.

ஒவ்வொரு மண்ணிற்கும் ஒரு இயல்புண்டு மனிதர்களுக்கும் அவ்வாறே.காலநிலைக்கேற்ப மண் மாற்றம் பெறுகிறது.மனிதர்களும் கூட அவ்வாறே.மாறாத நிலம் பாலை.தனிமனிதனோ மானுடமோ கூட அவ்வாறுதானே.

மண்ணின் இயல்பை மனிதர்கள் பெறுகிறார்கள் என்ற வாக்கியத்தை சிறுவயதில் கேட்கும் பொழுது புரியாது.ஆனால் வளர வளர தெரியும்.வளமான மண்ணில் பிறந்தவர்களில் முக்கால்வாசி ஆட்கள் சுகவாசிகளாக, சாதுவாக இருப்பார்கள்.வளமில்லாத மண்ணில் பிறந்தவர்கள் போராட்டகுணமும்,வலிய உடலும் உள்ளவர்களாக இருப்பார்கள்.மண்ணுடன் கொண்ட உறவால் விளையும் பண்புகள் எனக்கொள்ளலாம்.

ராமஐதாளரின் விவசாய வாழ்க்கை காலகட்டதிலிருந்து ராமனின் தொழில்மையமான காலகட்டம் வரையான அந்தமக்களின் வாழ்வை ,அலைகழிப்பை, கொண்டாட்டங்களை, வறுமையை,இழப்புகளை, கேள்விகளை, பொருளாதாரத்தை, மக்களுக்கிடையேயான உறவைப் பற்றி விரிவான வாழ்பனுபவத்தை இந்த நாவல் நமக்கு தருகிறது.

இந்த வாழ்வும் கலைகளும் எப்பொழுதுமே மண்ணிற்கும் மனிதர்களுக்குமானது தானே.அதை மீண்டும் உணரும் அனுபவமாக ‘மண்ணும் மனிதரும்’ நாவல் வாசிப்பனுபவம் உள்ளது.

நாவல்:மண்ணும் மனிதரும்

ஆசிரியர்:சிவராமகாரந்த்

மொழிபெயர்ப்பு:தி.ப.சித்தலிங்கையா

எரிமலை நகரில் ஒரு நாள் – நந்தாகுமாரன் கவிதை

​என் முதற் கனவின்
மூலப் பிரதி தேடி
அங்கே வர நினைத்த
அப்பொழுதின் மீது
காலத்தின் அதிகாரம்
சொல்லின் அங்கமான
ஆணவத்தையும் மீறிய
செயலின் பங்கமாகப்
பரிணமித்து
எனைப் பரிதவிக்க விட்டது
ஒரு கொதி வந்ததுமே
காற்று தன் ஒட்டுண்ணியாக
எனைத் தேர்தெடுத்தது
வெப்பம்
கூட்டணிக் கட்சியினரைப் புசித்து
சுவாசம் நீர் தரை கூரை
எனத் தன் ஆதிக்க வெறியை
அரங்கேற்றிக் கொண்டாடிக்
களித்துத் தன் இயல்பில்
தானே சிறந்தது என்றது
அப்போது நான்
குளிரூட்டியற்ற ரயிலறையைத்
தேர்ந்திருந்தேன்
இந்தக் காலத்தின் வலியை
அனுபவிக்கவே என்பதில்
உள்ள அபத்தம்
உண்மைக்குச் சமமாகத்
திரண்டு நின்றதும்
தார்ச் சாலை மேலே
தவிக்கும் கானல் நீரே
தவிக்கும் கானல் நீரை
குடிக்கும் ஏழை விழியே
என்ற
வேர்வைப் போர்வையை
விலக்கியது
காவிரிக் குளிர்
விரித்த வாழை இலையின்
பச்சைப் புன்னகையின்
உயிர்நீர்
அது
எனை ஒரு கணம் மீட்டது
ஒரு கணம் தான்
பின் மீண்டும்
அதே
மாயப்புன்னகை
இத்தனைக்கும் பிறகும்
வீடடைந்த என்னை
உயர்ந்த இந்தத் தென்னை
மரத்தின் மேல் இருந்து பார்க்கிறது
கருகிய ஒரு மேகத்தின் பின்னே இருந்து
உருகிய ஒரு நிலா
பிறகு மழையும் பொழிந்தது என்றால்
அது தானே
இக்கவிதையின் மாய எதார்த்தம்

ஆக்ஸ்ட் 7, 2018 – சங்கர் சிறுகதை

அவன் ஏறுவதற்கும் ரயில் கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. கூட்டத்தில் அடித்துப் பிடித்து ஏறும் வழக்கமே குமாருக்கு கிடையாது. அதுவும் அன்றைக்கு ஒட்டுமொத்த மகிந்திரா வேர்ல்ட் சிட்டியும் பரனூர் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டது. எப்போது வேண்டுமானாலும் அறிவித்துவிடுவார்கள் என்று பேசிக்கொண்டார்கள். சிலர் அறிவித்துவிட்டார்களென்றார்கள். இரண்டு ரயில்களை விட்டுவிட்டு மூன்றாவது வரும்வரை அப்படி ஒன்றும் பிரச்சனை வராது என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

குமாருக்கு காலையிலிருந்தே மனது சரியில்லை. ஒற்றைத் தலைவலி உயிரை வாங்கியது. கூட்டம் குறைந்தது மாதிரியே தெரியவில்லை. அடுத்து வந்த ரயிலையும் விட்டால் வீட்டிற்குப்போக நேரம் ஆகிவிடும் என்பதால் எப்படியோ சிரமப்பட்டு ஏறினான். அவன் இருந்தப் பெட்டியில் குறைந்தது நூறு பேராவது ஏறியிருப்பார்கள். ஒருவர்மேல் ஒருவர் உரசிக்கொண்டும், இடித்துக்கொண்டும் வரும் மக்களைப் பார்க்கும்போது குமாருக்கு வளைக்குள் முண்டியடித்துக்கொண்டிருக்கும் எலிகளைப் பார்ப்பதுபோலிருந்தது. பரனூரிலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் வருவதற்குள் பல முறை அவன் பின்னால் நின்றிருந்த மனிதர் அவன் மேல் விழுந்தார். சாதாரன நாட்களில் எல்லோரும் எல்லோரிடமிருந்தும் ஒரு அடி தள்ளிதான் நிற்பார்கள். தெரியாமல் கை கால் பட்டால் கூட விஷத்தைக் கொட்டுவதுபோல் இருக்கும் பேச்சு. இன்று வேறு வழியில்லை என்று அமைதியாக இருந்தான். அசாதாரண சூழ்நிலைகளில் மனிதர்கள் எவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமோ அவ்வளவு நெருக்கமாக இருக்க முயல்கிறார்கள். மற்றவர்களின் கைகளை இறுக்கப் பற்றிக்கொள்கிறார்கள். தனக்குத்தானே சமாதானாம் சொல்லிக்கொண்டான்.

கடந்த ஐந்து வருடங்களாக இந்நாளில் வரும் கனவு இந்த வருடமும் வந்தது என்பதுதான் அவன் தலைவலிக்குக் காரணம். ஊரே பதட்டமாக வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலும் அவன் மனம் முழுவதும் அதுதான் ஓடிக்கொண்டிருந்தது.

முதன் முதலில் கனவு வந்தபோது அம்மாவிடம் சொன்னான். விபூதி போட்டு கையில் ஒரு கயறு கட்டிவிட்டாள். “பயப்படாத, சித்திக்கிட்ட வேண்டிக்க” என்று அவன் சித்தியின் படத்தின் முன் நிறுத்தி வணங்க வைத்தாள். அடுத்தடுத்த வருடங்களில் அவளிடம் என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. சொன்னால் பயந்துபோவாள். வேறு யாரிடம் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.

காலையில் எழுந்ததும் மொபைலில் தேதியைப் பார்த்தான். நினைத்ததுபோலவே ஆகஸ்ட் ஏழு. குமாரின் நினைவடுக்குகளில் மிக ஆழமாக ஊடுருவியிருக்கும் நாள். எட்டு வருடங்களுக்கு முன்பு அவன் சித்தி மண்ணென்னையை ஊற்றி தன்னைத்தானே எரித்துக்கொண்ட நாள்.

*

காயத்ரி சித்தி சாகும்போது அவளுக்கு வயது முப்பத்தி எட்டுதான். வீட்டில் எல்லோருமே நன்றாக தூங்கி எழுந்திருந்த ஒரு அதிகாலையில் குமாரின் சித்தப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது.அவன் அம்மாதான் போனை எடுத்தாள். ஒரு நிமிடம் பேசியிருப்பாள். “ம்ம்.. ம்ம்ம்” என்பதைத் தவிர ஒரு வார்த்தைப் பேசவில்லை. கண்ணீரைத் துடைத்துக்கொண்டே போனை வைத்துவிட்டு குமாரிடமும், அவன் தந்தையிடமும்,”கிளம்புங்க.. காயத்ரி அக்னி ஸ்னானம் பண்ணிட்டா” என்றாள்.

காயத்ரி குமாரின் அம்மாவின் தங்கை. கூடப் பிறந்த ஏழு பேர்களில் கடைக் குட்டி. அவள் பிறந்தபோது இனி குழந்தை வேண்டாம் அதனால் சாவித்ரி என்று பெயர் வைக்கலாம் என்று குமாரின் தாத்தா சொன்னாராம். அந்தக் காயத்ரியைத்தான் இவள் வயிற்றில் இருந்த நாள் முழுவதும் ஜபித்துக்கொண்டிருந்தேன் எனவே காயத்ரிதான் என்று பாட்டி பெயர் இட்டிருக்கிறார். காயத்ரி, பி.எஸ்.சி அக்ரி முடித்தக் கையோடு அரசாங்கத்தில் வேலைக் கிடைத்து; தஞ்சாவூர் போய்விட்டாள். பதிமூன்று வருட அரசாங்க வேலை. கடைசியாக கலைஞர் கொண்டு வந்த உழவர் சந்தையில் அதிகாரியாக வேலைப் பார்த்தாள். வருடத்திற்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருவாள். இடையில் திருமணத்திற்கு கேட்டு வந்த பல இடங்களைச் சொந்த சாதியில் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லி நிராகரித்துவிட்டாள். “எல்லாம் கோழப் பசங்க” என்ற ஒரு வரிதான் எப்போதுமே அவளின் பதிலாக இருக்கும் என்று குமாரின் அம்மா அடிக்கடிச் சொல்லிச் சிரிப்பதைக் கேட்டிருக்கிறான்.

கோழப் பசங்க…முதன் முதலில் கேட்டபோது கோபமாக வந்தது அவனுக்கு. சித்தி எப்படி அப்படிச் சொல்லலாம் என்று முறுக்கிக்கொண்டிருந்தவனை வீட்டில் யாரும் சமாதானப்படுத்த முயலவில்லை. மாறாக “அவகிட்ட கேட்டு வச்சுராதடா.. அதுக்கப்றம் நீதான் ரொம்ப பீல் பண்ணுவ” என்று பயமுறுத்தினார்கள். “அது எப்படிமா அப்படி சொல்லலாம்..ஏன் அப்படி சொன்னா…” “விடுடா.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி… உன் சித்தி ஒரு மாதிரி.. அவ மனசுல எப்படியோ ஒரு எண்ணம் அப்படி வந்துருச்சு… ஒரு காலத்துல எங்கப்பா வெளிய போனா இடுப்புல கத்தி இல்லாம இருக்காது..ஊர்ல ஒரு பெரியவர் கூப்ட்டு.. பொம்பளப் புள்ளைங்கள பெத்து இருக்க.. இதெல்லாம் வேண்டாம்ன்னு” சொல்லிருக்காரு.. அன்னைக்கு மாறுனவரு அதுக்கப்றம் ஒரு சொல் தேவைக்கு அதிகமா வெளியவிட மாட்டாரு.. எல்லாத்துக்குப் பின்னாடியும் காரணங்கள் இருக்கும்.. அதல்லாம் எல்லாருக்கும் புரியவைக்க முடியாது..அவசியமும் இல்ல” அம்மாவின் பேச்சிலிருந்து தாத்தாவிற்கும் சித்திக்கும்தான் ஏதோ பிரச்சனை ஆகியிருக்கிறது என்று நினைத்தான். எப்போதும் பூஜை அறையில் பார்த்த தாத்தாவை கத்தியோடு குமாரால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. அவனுக்குத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்றிருந்தது.

“என்னைக்காவது ஒரு நாள் கேட்க்காம விட மாட்டேன்மா” என்றான். கடைசி வரை அவளிடம் அதைப் பற்றிக்கேட்க்கவில்லை.

*

ரயில் கிளம்பிய பத்தாவது நிமிடத்தில் குமாரின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நபர் மீண்டும் சிரித்தார். பரனூரில் ஏறியதிலிருந்தே அவரைக் கவனித்துக்கொண்டு வந்தான். திடீர் திடீரென சிரித்தார். யாரைப் பார்த்து எதற்கு சிரிக்கிறார் எனத் தெரியாததால் அவரைக் குழப்பத்துடனேயே கவனித்து வந்தான் குமார். “இருக்கும் கூட்டத்தில் எள்ளைப் போட்டால் எண்ணையைக் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது, இந்தாளுக்கு மட்டும் எங்கிருந்துதான் சிரிப்பு வருமோ” என முனகிக்கொண்டே பின் தாங்க முடியாமல். “என்னாச்சு சார்?” எனக் கேட்டான்.

“திரும்பிப் பாருங்க.. அங்க ஒருத்தர் நிக்குறார்ல…” ஒரு ஊரே நின்றுகொண்டிருக்கும் இடத்தில் யாரைச் சொல்கிறாரென பார்த்தவனிடம் “கருப்பு கலர் சட்ட..சொட்ட மண்ட.. போனத் திருடப் பாத்தார்.. ஏறுறப்ப கூட்டமா இருக்கேன்னு போன பாக்கெட்ல போட்ருந்தேன்.. போன் வரவும் எடுப்போம்ன்னு பாக்கெட்ல கையவிடுறேன் இவர் கை உள்ள இருக்கு.. கையப் பிடிச்சுட்டு திரும்புனா விருட்டுன்னு உருவிட்டு படிக்கட்டுப் பக்கம் போய் நிக்குறார்”. என்றார்.

குமார் பயந்துபோய் தன் பாக்கெட்டில் கைவிட்டுப் பார்த்தான். போன் இருந்தது. அவருக்கு ஒரு ஐம்பது வயதேனும் இருக்கும் போலிருந்தது.

“இவங்களுக்கெல்லாம் நேரம் காலமே கிடயாதா சார்.. பத்திரமா வீடு போனா தேவலன்னு அவன் அவன் ஓடிட்டு இருக்கான்.. இப்பக் கூட…”

அவர் அதற்கும் சிரித்தார். பின் தன் கைப்பேசியில் மூழ்கிப்போனார்.

மறைமலை நகர் தாண்டி ரயில் ஓடத்தொடங்கியது.

*

குமாரும் அவன் பெற்றோரும் தஞ்சாவூர் போய் சேர்ந்தபோது காயத்ரியை மருத்துவமனையில் சேர்த்திருந்தார் அவன் சித்தப்பா. சமைத்துக்கொண்டிருக்கும்போது சேலையில் தீப்பற்றிவிட்டது என்று போனில் சொன்னவர் நேரில் பார்த்தபோது ஒரு வார்த்தைப் பேசவில்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாள் காயத்ரி சித்தி. குமாரின் குடும்பம் போனபின்பு அவன் அம்மாதான் உடன் இருந்தாள்.ஐசியூவிற்கு வெளியேயே நின்றான் குமார். கதவுகள் திறக்கும்போதெல்லாம் சித்தி தெரிகிறாளா என்று பார்க்க முயன்றான். நான்காவது நாள் அம்மாவே அவனை அழைத்துக்கொண்டுபோனாள். உள்ளே யாரையோ காட்டி “இதுதான் உன் சித்தி பார்த்துக்கோ” என்றாள்.

பிறந்த மேனியாய்க் கிடந்தாள் காயத்ரி சித்தி. இல்லை… இப்படியா பிறந்திருப்பாள்… கருகிப்போய்.. சதைக் குவியலாய்க் கிடக்கும் இவளா காயத்ரி சித்தி.. எரியாத பாகம் ஏதேனும் இருக்கிறதா.. அதில் சித்தியைக் கண்டுபிடித்துவிட மாட்டோமா என அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவனின் தோளில் தட்டி மீண்டும் வெளியே அழைத்து வந்தாள் அவன் அம்மா.

*

பொத்தேரியில் கூட்டம் சற்று குறைந்தது. இருபது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அதைவிடக் குறைவான வயதிருக்கும் பெண்ணும் ஏறினார்கள். அவர்கள் ஏறியதிலிருந்தே பெட்டியிலிருந்த பலரின் கண்கள் அந்தப் பெண்ணின் மீதுதான் இருந்தன. துக்க வீட்டில் வாய் நிறையப் புன்னகையோடு வரும் குழந்தையைப் பார்க்கும்போது மனதில் தோன்றும் சிறு அமைதியை குமார் அவளைப் பார்க்கையில் உணர்ந்தான். தமிழ்ப் பெண்போல் இல்லை முகம். பால் நிறம். சுருட்டை முடி. கண்களில் லேசான பயம். கூட வந்தனவனின் தோள்களில் தலை சாய்த்துக்கொண்டாள். ஏதோ முணுமுணுத்தாள். அவன் தலையில் தட்டிக்கொடுத்தான். “நான் இருக்கும்போது ஏன் பயப்படுகிறாய்” என்று அவன் சொல்வது குமாருக்கு கேட்டது.

குமாருக்கு அவன் சித்தப்பாவின் முகம் கண் முன்னே வந்துபோனது. ஏறக்குறைய இதையேதான் காயத்ரியை அழைத்துக்கொண்டு முதன் முதலாக வீட்டிற்கு வந்தபோது மகாலிங்கமும் சொன்னார். திருமணமே செய்துகொள்ளப்போவதில்லை என்றிருந்த காயத்ரியை இரண்டு வருடங்கள் துரத்தி, சம்மதிக்க வைத்தது மகாலிங்கத்தின் சாதனைதான். குமாரின் அம்மாவிற்கு தன் தங்கையின் மீது அலாதிப் பிரியமும், மரியாதையும் உண்டு. வீட்டில் அதிகம் படித்தவள் என்பதோடு இத்தனை வருடங்கள் தனியாக எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொண்ட அவளின் மன தைரியத்தைப் பாராட்டாமல் இருந்த நாளே இல்லை. நிச்சயம் நல்லவனைத்தான் தேர்ந்தெடுத்திருப்பாள் என்று நம்பினாள். ஆனாலும் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. வீட்டுப் பெரியவர்களையெல்லாம் விட்டுவிட்டு தன்னிடம் வந்து நிற்கும் தங்கைக்கு சம்மதம் சொல்லும் அளவிற்கு அவள் நம்பிக்கை பெரியதாய் இல்லை.

மகாலிங்கமும் சிரிக்கச் சிரிக்கப் பேசினார். “உங்கள் தங்கையைப் போன்ற தைரியசாலிப் பெண்ணிற்குத்தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன்” என்றார். உண்மைதான். அசாத்தியமான நெஞ்சுரம் கொண்டவள் காயத்ரி சித்தி. இல்லையென்றால் நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டப் பின் சிலையைப்போல் இரண்டு நிமிடங்கள் அப்படியே நின்றிருப்பாளா…

*

காயத்ரி ஏழு நாட்கள் மரணத்தோடு போராடிவிட்டு இறந்துபோனாள். முதல் நாளே “சிக்ஸ்டி பெர்சன்ட் பர்ன், பிழைக்க வாய்ப்பில்லை” என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். “உன் கூட வந்தர்றேன்க்கா.. என்னக் கூட்டிட்டுப் போயிடு.. இனி நீ தான் என்னப் பாத்துக்கனும்..இப்படி ஆகிருச்சு.. என்னால எதுவும் செய்ய முடியாது இனிமே” என்று உயிர் பிரியும் கடைசி நொடி வரை சொல்லிக்கொண்டே இருந்தாள் என அம்மா சொன்னபோது குமார் உடைந்து அழுதான். யாரின் துணையும் தேவையில்லை என்று இருபது வயதிலிருந்தே வாழ்ந்து வந்தவள் முடிவில் இப்படியா பேசவேண்டும் என்று புலம்பியவனைத் தேற்ற முடியாமல் அவன் குடும்பம் தவித்தது. குமாருக்கு காயத்ரி சித்தி என்றால் தனிப் பிரியம். “எப்போ ஊருக்கு வந்தாலும் அவ மடி மீது ஏறிக்கிட்டு இறங்கவே மாட்ட.. திரும்பக் கிளம்பும்போது பஸ்ல ஏறி உக்காந்துட்டு உன்ன ஜன்னல் வழியா தூக்கிப் போடுவா” எத்தனை முறை அம்மா சொன்னாலும் ஒவ்வொருமுறையும் புதிதாய்க் கேட்பதுபோலவே கேட்பான். சிறிது காலம் அவள் சொல்லாமல் இருந்தால் இவனே, “அப்போ சித்தி அடிக்கடி என்னப் பாக்க வருவாளாமா” என எடுத்துக்கொடுப்பான். ஆறேழு வயதில் “மயில் மாதிரி இருக்காமா சித்தி” என அவளைக் கொஞ்சுவான். ஒரு நாள் அவள் குரல் மயிலின் குரல் போலவே மாறிப்போகுமென்பது தெரியாமல்…

“கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு உன்ட்ட சொல்லிட்டுத்தானமா பண்ணிக்கிட்டா.. ஒரு வார்த்த நம்மள்ட்ட சொல்லிருந்தா நாம விட்ருப்போமா” “சுடு சொல்க்காரிடா.. அவ வாக்குதான் அவள வாழவும் வச்சது.. இப்போ சாகவும் அடிச்சிருச்சு.. யாருமே வரலனாலும் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன்னு சொல்லிட்டுப்போனா..எப்படி நம்ம கிட்ட வருவா… கொள்ளி கூட அவளே வச்சுக்கிட்டா.. பாவி” குமாரின் அம்மாவிற்கு எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. சிறுவயதிலிருந்தே அவளின் துடுக்குத்தனத்தையும், முன் கோபத்தையும் அவர்கள் வீட்டிலிருந்த எல்லாரையும் விட அவள் நன்றாக புரிந்துவைத்திருந்தாள். காயத்ரியும் அதனலாதான் “யாரும் வரலன்னாலும் பரவால்ல நீ என்ன சொல்ற” என்று மகாலிங்கத்தைக் கூட்டிக்கொண்டு அவளிடம் வந்து நின்றாள். மரண வாக்கு மூலம் வாங்க வந்த பெண் நீதிபதியிடம் சமையல் செய்யும்போதுதான் சேலையில் நெருப்பு பிடித்தது என்று அவள் சொன்னபோது “நானே உன்ன கழுத்த நெறிச்சுக் கொன்றுவேண்டி” என்று ஆத்திரப்பட்டுக் கத்தினாள். காயத்ரியின் உதடுகள் பிரிந்து மூடின. அவள் எதையோ சொல்ல முயன்றாள். பின் முடியாமல் அமைதியாகிவிட்டாள்.

சாகப்போகும்போது கூட கணவனைப் பற்றி ஒரு வாய்த் திறக்காத அவளை நினைத்து அவளின் குடும்பம் நொந்துபோனது.

*

குமாரின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துக்கொண்டே இருந்தது. காயத்ரி எரிந்தபோது அவன் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அந்த ஒரு வேளையோடு போயிருக்கும். இப்படிக் கனவில் ஏன் வந்து தீயாய் நிற்கிறாள் என்று அவனுக்குத் தெரியவில்லை. சாவை வலியத் தேடிப்போகும் பெண்கள் ஏன் தங்களின் உடலை தாங்களே அழித்துவிட்டுப் போகிறார்கள். தீக்குளிப்பவர்களின் கணக்கெடுத்தால் பெண்கள்தான் அதில் அதிகம் இருப்பர்..

*

ரயில் தாம்பரத்தை நெருங்கியது. “பயந்து சாவுறானுங்க.. இப்போ என்னா ஆச்சு.. எல்லாரும் அமைதியாத்தான் நடக்குது.. இந்த மீடியாக்காரனுங்க சும்மாவே மக்கள பயமுறுத்துறாங்க..” குமாரின் நினைவலைகளை அறுத்தது ஒரு குரல். தலைமுடிகள் நரைக்கத் தொடங்கியிருந்த மனிதர் ஒருவர் போனில் திட்டிக்கொண்டிருந்தார். போனை வைத்தப்பின்பும் திட்டுவதை நிறுத்தவில்லை.

“முன்ன மாதிரிலாம் இல்லங்க.. எல்லாருமே மாறிருக்காங்க..எதுக்குப் பயப்படனும்.. நாம பயந்தாதான் அத வச்சுக்கிட்டு எவனாவது எதாவது பண்ணுவான்..” அவர் பேசிக்கொண்டே போனார். “பயம்.. பயந்தாகொள்ளிங்க…” குமாருக்குத் தன் கனவின் அர்த்தம் விளங்கத் தொடங்கியது.

இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் காயத்ரி குமாரின் அம்மாவிடம் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டுப் போய்விடும்படி சொன்னாளாம். “இத மட்டும் எனக்காக செஞ்சுருக்கா.. உன்ட்ட வேற இனிமே எதுவும் கேக்கல… இனி எங்க கேக்குறது…”

“அதச் சொன்னப்ப அவ கண்ணோரம் கண்ணீர் வழிஞ்சதுடா… கடைசியா ஒருவாட்டி அழுதா.. நாம் சாகுற வர இனி அழனும்”

காயத்ரி மரணப் படுக்கையில் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் அவள் இல்லாதுபோன இத்தனை வருடத்தில் திரும்பத் திரும்பச் சொல்லி அவளை நினைவில் நிறுத்திக்கொண்டது குமாரின் குடும்பம். குழந்தைகள்தான் பாவம் என்று இரண்டு வருடங்கள் முன் வரைக்கும் கூட வருத்தப்பட்டனர். ஒருவகையில் கையாலாகாதத்தனத்தை, குற்றவுணர்ச்சியை மறைக்க மீள மீள அவளைப் பற்றி பேசுகிறோமா என்று அவ்வபோது குமாருக்கும் தோன்றும். அப்படி எண்ணம் வரும்போதெல்லாம் தனக்காக கடுமையாக வாதாடிக்கொள்வான். அப்போது இருந்த குடும்ப சூழ்நிலையில் எப்படிச் சாத்தியம்.. மகாலிங்கம் பிரச்சனை வரலாம் என்று எதிர்பார்த்து ஆட்களை வரச் சொல்லியிருந்தான். அவர்களையெல்லாம் மீறி என்ன செய்திருக்க முடியும்.. அவன் என்ன சமாதானம் சொல்லிக்கொண்டாலும் “எங்கள விட்டுட்டுப் போகாத பெரிம்மா” என்று அழுத அந்தக் குழந்தைகளின் முகங்கள் அவன் நிம்மதியை அவ்வபோது வந்து கலைத்துப்போட்டுக்கொண்டே இருந்தன. “என் பிள்ளைய விட்டுட்டீங்கள்ல” என்று தீப்பிழம்பாக காயத்ரி கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

*

தாம்பரம் சானடோரியமில் இறங்கினான் குமார். உடலளவிலும் மனதலளவிலும் சோர்ந்துபோயிருந்தான். நடைமேடை முழுவதும் ஓட்டமும், நடையுமாக மக்கள் போய்க்கொண்டிருந்தனர். சட்டென்று அவனுக்கும் அந்தப் பதட்டம் தொற்றிக்கொண்டது. அடுத்த நொடியே ரயிலில் அந்த மனிதர் சொன்னதுபோதுபோல் தேவையில்லாமல் பயப்படுகிறோமோ என்றும் நினைத்தான். இருந்தும் அவனால் தைரியத்தை வரவைத்துக்கொள்ள இயலவில்லை.பைக்கை மறுநாள் வந்து எடுத்துக்கொள்ளலாமா, ஆட்டோ எடுப்போமோ என யோசித்துக்கொண்டே வெளியே வந்தவனுக்கு பத்தடியில் ஒரு கூட்டம் கைகளில் கொடியுடன் வருவதைப் பார்த்தாபோது வியர்க்கத் தொடங்கியது. அவர்கள் கடந்துபோகும் வரை அமைதியாக நின்றான். கூட்டம் அமைதியாகத்தான் போனது. இருந்தும் குமாருக்கு அவர்கள் தலைகள் மறைந்தபின்தான் மூச்சே வந்தது.

பைக்கைக் கிளப்பியதிலிருந்து எதிரில் போவோர் வருவோர்களைப் பார்த்துக்கொண்டே ஓட்டினான். இரண்டு வண்டிகளுக்கு மேல் சேர்ந்தார்போல் எதிரில் வந்தால் ஓரமாக நிறுத்தி அவர்கள்போனபின் கிளம்பினான். எப்போதும் எஞ்சின் மேல் வைக்கும் ஹெல்மெட்டை ஸ்டாண்டிலியே போட்டுக்கொண்டான். ஐந்து நிமிடத்தில் வரும் வீடு ஏன் இன்னும் வரவில்லை என வாய்விட்டுப் புலம்பினான். அவனை யாரேனும் பார்த்தால் எங்கேயாவது திருடிவிட்டு வருகிறாயா என்று கேட்ப்பார்கள். ஒருவழியாய் வீட்டை அடைந்தவுடன் ஹெல்மெட்டைக் கழட்டி வண்டியிலேயே வைத்துவிட்டு கதைவைத் தள்ளிக்கொண்டு உள்ளே ஓடினான். தன் அறைக்குள் நுழந்தவுடன் பையைத் தூக்கி ஒரு மூலையில் எறிந்துவிட்டு பெட்டில் விழுந்தான். சிறிது நேரம் அப்படியே கிடந்தான். தலைவலிவிட்டதுபோல் இருந்தது. காலையிலிருந்து உணர்ந்த அழுத்தம்போய் அவன் மனம் சற்று ஆசுவாசமாய் உணர்ந்தது.

அப்போது அவனுக்கொரு குரல் கேட்டது. சரியாகக் காதில் விழவில்லை. சட்டென்று எழுந்துகொண்டான். அசையாமல் அப்படியே நின்றான். நிச்சயம் பரிச்சியமான குரல்தான். அவன் காதில் விழுந்தது கூட ஏற்கனவே கேட்ட விசயம் மாதிரிதான் இருந்தது. இரண்டாம் முறை அந்தக் குரல் கேட்டது. இம்முறைத் தெளிவாகக் கேட்டது.

“எல்லாம் கோழப் பசங்க…..”

வெள்ளைக் கூகைகளின் அடக்கஸ்தலம். – சோ.தர்மனின் ‘பதிமூணாவது மையவாடி’ நாவல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் சமீபத்திய நாவல், “ பதிமூணாவது மையவாடி”. அட்டைப்படத்தை சற்று நேரம் உற்றுப் பார்த்தாலே, நாவலின் உள்ளடக்கம் புரிந்து விடுவது போல இருக்கிறது. ஒரு கிராமத்து பாலகன், சிறுவனாக தன் கிராமத்தை விட்டு, படிப்பதற்காக வெளியூருக்குச் செல்கிறான். கருத்தமுத்து என்ற அந்தப் பையன் வழியாக ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த சில நிறுவனத் தில்லுமுல்லுகளை எவ்வித ஒளிவு மறைவுமில்லாமல் தர்மன் எடுத்து வைக்கிறார்.

கிறித்தவ மதம் நம் நாட்டில் பரவத் தொடங்கியது கல்வி வழியாகவும், வயிற்றுப் பசி போக்கும் உணவு வழியாகவும் என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும், தெரிந்த விஷயம். பள்ளிகளுக்கு ஃபாதர் ஸ்கூல், “சிஸ்டர் ஸ்கூல்” என்றே பெயர் வைத்து பாமர மக்களால் அழைக்கப்பட்டது. ஆனால், இவற்றின் வழியே அந்த மதமும் பரப்பப் பட்டது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் ஒழுக்கமானவர்களாக இருப்பார்கள் என இன்றளவும் நம்பப்படுகிறது. இதற்குக் காரணம், துறவு பூண்டு, வெள்ளை உடை அணிந்து, இறைவனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இந்த ஃபாதர்களும், சிஸ்டர்களும் என்ற எண்ணம், பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. கிறித்துவத் துறவறம் என்றால் வெண்மையும், இந்துத் துறவறம் என்றால் காவியும் என்று காலம் காலமாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. அன்பும், கருணையும், நேர்மையும், உண்மையும், சத்தியமும் குடிகொண்டிருக்க வேண்டிய, இந்த உடைகளுக்குள் தம்மை ஒப்புக்கொடுத்தவர்களில் ஒரு பகுதியினர் உண்மையில் அப்படியில்லை என்பதை தர்மன் இந்த நாவலின் மூலம் சொல்கிறார்.

முக்கியமாக துறவறம் மேற்கொண்டவர்கள் வெல்ல வேண்டிய காமத்தை வெல்ல முடியாமல், ஆனால், வெளியில் முற்றும் துறந்தவர்கள் போலவும், புனிதர்களாகவும் காட்டிக் கொள்வதில் போலிப் பெருமையைக் கொண்டார்களாக இருக்கிறார்கள். கடவுளுக்கு நெருக்கமானவர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டு நம்ப வைக்கிறார்கள். இந்த நாவலில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை எடுத்துக் கொண்டு பேசியிருந்தாலும், இது மதங்களையும், அவற்றைப் போற்றுவதையும் கார்ப்போரேட் நிறுவனங்களாக ஆக்கிகியிருக்கும் எல்லா சாமியார்களுக்கும் பொதுவானது என்றே சொல்லலாம். எதன் மேலும் ஆசையற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டே மண், பெண், பொன் என்ற எந்த ஆசையையுமே துறவாமல் எல்லா சுகங்களையும் அனுபவித்துக் கொண்டே, ஊருக்கு உபதேசம் செய்பவர்களாக மாறிப் போயிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

காமம் துறப்பது துறவறம் எனப்படுகிறது. இந்த இடத்தில் காமம் என்பது வெறும் உடற்பசி என்றுதான் பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால், காமத்தைத் துறத்தல் என்பது எல்லாப் பற்றுக்களின் மீதுமான ஆசையைத் துறப்பதுதான். உணவின் மீதான விருப்புக்களைக் கூடத் துறக்க முடியாதவர்களால் எப்படி மற்ற காமங்களிலிருந்து விடுபட முடியும்? நாவலில், துறவறம் பூண்டு கன்னியாஸ்திரிகளாக இருப்பவர்களால் வித விதமாகச் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. பசி, தாகம் போன்றே உடற்பசியும் ஒரு மனிதத் தேவைதான். ஆனால், இதைத் துறந்து விட்டேன் என்று கூறிக் கொண்டு, கள்ளத்தனமாகவும், மூடி மறைத்தும் உறவு கொள்வதும், வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும் நாவல் நெடுகிலும் விரவிக் கிடக்கிறது.

இன்று பல மடங்கள், பீடங்கள் சம்பந்தமாக செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. யாரோ உண்மையாய் இருக்க விரும்பும் ஒருவர் மூலம், உள்ளே நடக்கின்ற தில்லு முல்லுகள், தவறான செயல்முறைகள், ஒழுக்கச் சீர்கேடுகள் எல்லாம் வெளியே வருகின்றன. ஆனால், அதன் பிறகு, அப்படி வெளிக் கொணர்பவர்களின் கதி என்ன ஆகிறது என்று பார்க்கிறோம். இந்த உண்மையை, நாவல் பேசுகிறது. ரேஷ்மா சிஸ்டர், ரீட்டா சிஸ்டரின் வாழ்க்கை உண்மையை, அவர் குழந்தை பெற்று விட்டுத்தான், சிஸ்டராக வலம் வருகிறாள் என்பதைச் சொல்ல வருகிறாள் என்றவுடனே, பைத்தியமாக சித்தரிக்கப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டு, சாவை எட்டும்படியே செய்யப்படுகிறாள். அது போல், மடத்தின் கணக்கு வழக்குகளைத் தட்டிக் கேட்கும் ஃபாதரும், பெண் சகவாசம் வைத்துக் கொண்டிருக்கும் ஃபாதர் பற்றிய உண்மையை வெளியே சொல்ல வரும் ஃபாதரும் கொல்லப்படுகிறார்கள். துறவறம் பூணுகிறவர்கள், தாங்கள் இறைவனுக்கு மிக நெருக்கமானவர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்புவதோடு, தாங்கள் காமத்திலிருந்து விலகியவர்கள் என்றும் இந்த உலகத்தின் முன் காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள்.

காமம் என்பதுதான் மனிதனை ஆட்டி வைக்கும் பெரிய பேய். இதை மிகச் சாதாரணமாக, இது ஒரு விதத் தேவை என எடுத்துக் கொள்ளும்போது பெரிய விஷயமாகத் தோன்றுவதேயில்லை. தாகமெடுக்கும்போது தண்ணீர் அருந்துகிறோம். பசிக்கு உணவு உட்கொள்கிறோம். உடம்புக்குத் தேவையான காமமும் அப்படி ஒன்றே என்பதைத் துறவறம் ஊணாமாலே சாதாரண மனிதர்களால் உணர முடிகிறது. இதற்கும் நாவலில் சில பாத்திரங்களை உலவ விட்டிருக்கிறார் தர்மன். அரியான் சுடுகாட்டில் பிணங்களை எரிப்பவனாக இருந்தாலும், மனித நேயத்தோடு செயல்படுகிறான். மஞ்சக்குருவி என்ற பொதுமகளை அங்கு தன் விருப்பத்திற்கு துய்ப்பவர்களை அவன் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறான். ஆனால், அதே சமயம், ஒரு இளைஞர் கும்பல், ஒரு இளம்பெண்ணை வற்புறுத்தி கல்லறை மையத்தில் வைத்து வண்புணர முயலும்போது போராடி அதைத் தடுக்கிறான்.

அதே போல, நாவலில் ஜெஸ்ஸியின் காமம், கருத்தமுத்துவிடம் அவள் நடந்து கொள்ளும் விதம் மிக ஆச்சர்யத்துக்குரியது. அவள் ஏற்கனவே ஒரு ஆடவனுடன் உடன்போகி ஏமாந்து திரும்பி வந்தவள். பெருகுகின்ற அவளுடைய காமம், கருத்தமுத்துவை, அவனுக்கு விபரம் தெரியாத பதின்பருவத்திலிருந்து உபயோகப்படுத்திக் கொள்கிறது. அதன் பிறகு அவளுக்குத் திருமணம் ஆன பிறகும் கூட அவள் கருத்தமுத்துவிடம் ஆசையுடன் கூடிய காமத்தை வெளிப்படுத்துகிறாள். ஆனால், இதில் அவளுக்குத் தயக்கமும் இல்லை; குற்ற உணர்வும் இல்லை. அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள். கருத்தமுத்துவும் இந்த காமத்தால் பீடிக்கப்பட்டவனாக இல்லை. அப்படியே அதற்கு அலைபவனாகவும் இல்லை. முரணாக, அவனுக்கு ஏஞ்சல் சிஸ்டரைப் பிடிக்கிறது. அவளும் தன் மனம் கருத்தமுத்துவிடம் ஈடுபடுவதை உணர்ந்து தன் துறவு நிலையிலிருந்து சாதாரணப் பெண்ணாக வந்து இணைகிறாள். காமம் மறைத்து ஒளித்து வைக்கப்படும்போது அது மேலும் மேலும் பொய்களுக்கும், ஏமாற்றுகளுக்கும் இட்டுச் செல்கிறது. அதனாலேயே, காமத்தை மனதிற்குள் பெரிய பாரமாக எடுத்துக் கொள்ளாத ஜெஸ்ஸிக்கு, தன் தாய், தந்தையை விடுத்து, மடத்து ஃபாதருடன் உறவு வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாவலின் கடைசியில் கடற்கரை ஓரத்தில் ஒரு பறவை வருகிறது. ஏஞ்சல் சிஸ்டர்தான் அதனை வெள்ளைக் கூகை என்று அடையாளம் கண்டு சொல்கிறாள். அவள் அந்தப் பறவை பற்றிச் சொல்லும் வார்த்தைகள்: “அத ஒண்ணும் செய்ய வேண்டாம்னு சொல்லுடா, ராத்திரியானாத்தான் அதால பறக்க முடியும். இப்ப வெளில வந்தா பறக்க முடியாது, எதுலயாவது மோதிச்செத்திடும், இல்லனா மத்த பறவைங்க எல்லாம் சேர்ந்து கொத்திக் கொன்னுடும்”

இது ஒரு விதத்தில் வெள்ளை உடை அணிந்து பகலில் பைபிளும் கையுமாய் அலைந்து கொண்டு, எப்போதும் பரம மண்டல பிதாவையே நினைத்துக் கொண்டிருப்பது போல் நடித்துக் கொண்டு மற்றவர்களோடு சாதாரணமாக ஒட்டி விடாமல் கண்ணையும் கருத்தையும் காமத்தையும் மறைத்துக் கொண்டு இரவுப் பறவைகளாய் அலையும் கன்னியாஸ்தீரிகளுக்கும், ஃபாதர் எனப்படும் சாமியார்களுக்கும் பொருத்தமாகவே உள்ளது.

நாவல் நடைபெறும் முக்கிய இடம், இடுகாடுகளின் வரிசை பனிரெண்டு முடிந்து பதிமூணாவதாக பாலிடெக்னிக் கல்லூரியுடன் இணைந்த ஃபாதர்கள் மடமாக இருக்கிறது. அதிலிருந்து தனியே கன்னியாஸ்திரிகள் மடம் உள்ளது. ஆசை பாசங்கள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு வாழ்வது கூட பிணத்திற்குச் சமம் என்பதாலோ அல்லது இந்த மடங்களே கூட தங்கள் பொய்மைகளுக்கு ஒத்து வராத சிஸ்டர், ஃபாதர்களை ஒழித்துக் கட்டி சமாதி கட்டுவதாலோ இந்த நாவலுக்கு பதிமூணாவது மைய வாடி என்பது மிகப் பொருத்தமாகவே அமைந்துள்ளது.

கிறித்தவ மதத்தில் பதிமூன்று என்ற எண் ஒரு ராசியற்ற எண் என்று கருதப்படுகிறது. ஏசு கிறிஸ்துவை அவருடைய கடைசி உணவு மேசையில் காட்டிக் கொடுத்த யூதாஸ், அவருடைய பனிரெண்டு முக்கிய சீடர்களோடு, பதின்மூன்றாவதாக சேர்ந்து கொண்டவன். தூக்குக் கயிற்றில் பதின்மூன்று சுருக்குக் கண்ணிகள் இருக்கும் என்பது கூட இந்த நாவலின் தலைப்புக்குப் பொருந்துவதாக இருக்கிறது. மதத்தின் அடையாளங்களோடு, அதனைத் தாங்கிப் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு தூக்கித் தோளில் சுமப்பவருக்கு அதுவே சுருக்குக் கயிறாகவும் மாறும் என்பதனை நாவல் உணர்த்துவதாகவே சொல்லலாம்.

திடீரென முளைத்து பிரபலமாகும் ஆலயம் பற்றிப் பேசுகிறது. அதில் திரளும் மக்கள் கூட்டத்தோடு, புரளும் பணம் பற்றி பேசுகிறது. இது பொதுவாக எல்லா மததிற்கும் பொருத்திப் பார்க்கலாம். அதனால், அந்த கோவிலை நிர்வகிப்பவருக்குள்ளும் எழும் மனக் கசப்புகள் இவை எல்லாம் ஒரு பொதுவான ”தெய்வப் பெயர் சொல்லி கார்ப்பொரேட்டுகள்” என்ற வகையில் அடங்கும். சில நல்லவர்களும் இருப்பதை ஆங்காங்கே காட்டிச் செல்லும் நாவல் நடு நடுவே சலிப்புத் தட்டத்தான் செய்கிறது. கதையோட்டத்தோடு இல்லாமல், வலிந்து மரக்கால் பாண்டியன் என்ற பாத்திரம் திணிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் பற்றி பேச வைக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய விவாதங்கள் தேவையில்லாமல், பாத்திரம் பேசாமல், ஆசிரியர் இடைப் புகுந்து பேசுவது போல் இருக்கிறது. கருத்தமுத்து கிராமத்திலிருந்து வந்த பிறகு, அவனுடைய பெற்றோருக்கும் அவனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியோ, அவனுடைய ஆருயிர் நண்பணுடனான உறவு பற்றியோ பேசவேயில்லை.

கொஞ்சம் சலிப்பூட்டினாலும், அடைபட்டிருக்கும் ஒரு பகுதியினரின் வெளியில் தெரியாத மற்றொரு வாழ்க்கை பற்றிய சித்திரத்தைத் தீட்டிக் காட்டுவதில் நாவல் வெற்றி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். அதற்காக நாவலாசிரியரைப் பாராட்டலாம். சிறந்த முறையில் அச்சிட்டிருக்கும் அடையாளம் பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்.

(பதிமூனாவது மையவாடி, நாவல்,சோ.தர்மன், விலை:ரூ.320/- அடையாளம் பதிப்பகம்)