Author: பதாகை

சேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு

சேவல் களம்”பாலகுமார் விஜயராமன்.

எல்லோருக்கும் சொல்வதற்கு ஒரு கதையாவது உண்டு. ஆனால் (நல்ல வேளையாக ) எல்லோரும் எழுத்தாளர்களாகிவிடுவதில்லை,” என்று சுஜாதா தன்னுடைய ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார். அண்மையில்கூட ஓவியர் ஜீவா இதே போல ஒரு வரியை சொல்லியிருந்தார். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!!

நம்முடைய வாழ்க்கை அனுபவங்கள் எல்லாமே நமக்கு சுவாரசியமாக, சுவையாகத்தான் தெரியும். ஆனால் அவற்றை பதிவு செய்யும்போது பிறருக்கும் சுவாரசியமாகவும், சுவையாகவும் தோன்ற வேண்டுமென்றால், ஒருவர் அதுவரை எழுத்தில் பதிவாகாத ஒரு மாற்று வாழ்வை விவரிக்க வேண்டும். அல்லதுஏற்கனவே அவ்வாறு அறியப்பட்ட வாழ்வின் ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படியுமில்லாமல், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட கதைக்களமாக இருந்தாலும்கூட, அந்த வாழ்வின் சில பகுதிகளிலாவது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும். இது போன்ற கூறுகள்தான் டயரிக் குறிப்புகளை இலக்கியமாக மாற்றுகின்றன.

அண்மையில், பாலகுமார் விஜயராமன் அவர்கள் எழுதிய சேவல் களம் (சேவற்களம் என்பதுதானே சரி?) நாவலை படித்தபோது, மேலே சொன்ன உணர்வைத்தான் நான் அடைந்தேன். நாவல், மூன்று திரிகளாக பிரித்து சொல்லப்பட்டு இறுதியில் இணைகிறது. ஒன்று, சேவல் சண்டையும் அதன் சித்திரமும். இரண்டு, அதன் நாயகரான ராமர் மற்றும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கை, மூன்றாவதாக ராமரின் தங்கை ஆண்டாள் மற்றும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கை.

முதல் திரி, இதுவரை தமிழ்ப் புனைவின் பரப்பில் அதிகம் சொல்லப்படாத சேவல் கட்டு எனும் ஒரு விஷயத்தை தனது பேசுபொருளாக எடுத்துக் கொண்டதில் ஒரு புதுமை இருக்கிறது.சேவல் சண்டையை,சேவல்களின் பல்வேறு வகைகளை, சண்டைக்கான முன் தயாரிப்புகளை, சண்டைக்கு இடையே சேவல்களுக்கு செய்யப்படும் சிகிச்சை முறைகளை, எழுதியிருப்பது எல்லாம் மிக சுவாரஸ்யமாகவே இருக்கிறது. அதில் இருக்கும் ஒரு சரளத்தன்மை வாசிப்பை லகுவாக்கவும் செய்கிறது. அந்த விளையாட்டின் நுட்பங்களை அறியாத வாசகனுக்கு இது இயல்பாகவே ஒரு நல்ல சுவாரசியமான சித்திரத்தைத் தருகிறது. இந்தத் திரியின் கிளைமாக்ஸ் போல வரும் ராமர் பார்ட்டியின் உள்நாட்டு சாம்பல் வளவி சேவலுக்கும் ஹைதராபாத் பார்ட்டியின், நூரி வெள்ளைச் சேவலுக்குமான போட்டி மிக நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. சேவல்களின் இயல்பான அறிவுக் கூர்மை, ஆபத்திலிருந்து தப்பும் வழிகள், தாக்குதல் முறைகள் எல்லாம் படிக்க சுவாரசியமாக இருக்கின்றன.

ஆனால், இந்த நாவலின் மற்ற இரண்டு திரிகளில் சொல்லப்படும் ராமரின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவரது தங்கையின் குடும்பத்தினர் வாழ்க்கை மிகச் சாதாரணமாக இருக்கிறது. உண்மையில் தீவிர இலக்கிய பரப்பில் இம்மாதிரியான எழுத்துக்கு என்ன இடம் என்றுதான் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லோரும் நல்லவராக விளங்கும் இந்த விக்ரமன் சினிமா பாணி கதையில் ராமரின் இரண்டாவது பிள்ளை கம்ப்யூட்டர் விற்பன்னராக வந்து சில வில்லத்தனங்களை செய்கிறான். அதுவும் அப்படியே விட்டுப்போய்விடுகிறது. இதெல்லாம் அந்தக் கால, ராணி முத்து, மாலை மதி போன்ற புத்தகங்களில் வரும் ஒரு கதை போலத்தான் இருக்கிறது. முன்னுரை எழுதியுள்ள பெருமாள் முருகன் இதையே வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு 200 பக்க நாவலில் பாதிக்குப் பாதி, சேவல் சண்டை பற்றியது என்றால், இந்த குடும்பக் கதை மீதி. அதில் ஆசிரியருக்கு காத்திரமாக சொல்வதற்கு அதிகமில்லை என்பதாலேயே அந்த கடாவெட்டுக்கு ஆடு தேர்ந்தெடுக்கப் போகும் காட்சியும், காதுகுத்து கடா வெட்டு கொடுக்க குல சாமி கோவிலுக்குப் போகும் காட்சியும் அவ்வளவு நீளமாக படித்து சலித்துப் போகும் வண்ணம் எழுதுபட்டுள்ளது தெரிகிறது. பொறுமையையும் சோதித்துவிடுகிறது. அந்தப் பிரதேசத்தை சேர்ந்த வாசகர்களுக்கு வேண்டுமானால், அது அட, நம்ம வூட்ல நடக்கறத அப்டியே எழுதியிருக்காம்பா, என்ற வியப்பையும் மகிழ்ச்சியையும் தரலாம். அவ்வளவுதான். பின் இதில் ஒரு ஆச்சரியமான விஷயம், இந்தப்படைப்பில் எங்கும் சாதி குறிப்பிடப்படாதது. இதுவே இதை ஒரு தொலைகாட்சி தொடராகவோ திரைப்படமாகவோ எடுப்பதற்கு மிகவும் தோதாக மாற்றுகிறது. இன்று தீவிர இலக்கியம் என்ற போர்வையில் வரும் பெரும்பாலான படைப்புகளுக்கு இந்த ஒரு நோக்கம் இருப்பதாக தோன்றுகிறது.

இம்மாதிரியான ஒரு படைப்பு ஒரு வணிகப் படைப்பாக, நான் மேலே சொன்ன மாதாந்திர வெளியீடுகளில் வந்திருக்குமானால், நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. காலச் சுவடு போன்ற தீவிர இலக்கிய படைப்புகளை வெளியிடும் ஒரு பதிப்பகம் வழியாக வரும்போது, பெருத்த ஏமாற்றமே ஏற்படுகிறது. அவர்களது தேர்வில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

மீண்டும் முதலில் சொன்ன விஷயத்துக்கு போவோம். எல்லாரிடமும் சொல்வதற்கு ஒரு கதையாவது உண்டு. பலர் அதை சொல்லவும் சொல்வார்கள். ஆனால் அது எல்லாமே ஒரு நல்ல இலக்கிய படைப்பாகி விடாது.

மொய்தீன் – அபராஜிதன் சிறுகதை

சீலையம்பட்டி கம்மாயில் இருந்து சின்னமனூர் 4 கிலோ மீட்டர்தான். கம்மாய் கரையில் நின்று பார்த்தாலே சின்னமனூரின் சிவகாமி அம்மன் கோவில் கோபுரம் தெரியும். தென்னைமரங்களுக்கிடையே அதன் கோபுரம் தலை தூக்கிப் பார்க்கும்.கற்கோபுரத்திற்கு வெளிற் மஞ்சள் சுண்ணாம்பு அடித்திருப்பார்கள். லாரியை கம்மாய்க் கரையில் கொண்டு வந்து நிறுத்தினார் மலைச்சாமி அண்ணன். பச்சை நிற முரட்டுத் தார்ப்பாய் போர்த்திக் கட்டப்பட்ட உருளைக்கிழங்கு லோடு லாரியின் பின்னால் இருந்தது. ஆக்ஸிலேட்டரை இரண்டு முறை அழுத்தி லாரியை உறும விட்டு அணைத்தார். அவர் வண்டியை விட்டு இறங்கியதும் லுங்கியை கழட்டி டிரைவர் சீட்டில் போட்டுவிட்டு காக்கி டவுசருடன் கரையோரம் இருந்த புதர்களுக்குள் வெளிக்குச் செல்ல ஊடுறுவினார்.

லாரியின் க்ளீனர் முத்துவேலும் நானும் லாரியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக கரையில் இறங்கினோம். முத்துவேல் லாரியின் இடையில் தொங்கிக்கொண்டிருந்த இரும்பு வாளியைக் கழட்டி எடுத்துக்கொண்டு கம்மாயை நோக்கிச் சென்றான். ஊருக்கு வந்துவிட்டோம் என்ற உணர்வு எனக்கு ஒரு நிம்மதியை கொடுத்தது.. பரந்து விரிந்த கம்மாய் நிரம்பி வழிந்தது.. பொதுவாக தண்ணீர் திட்டுக்களுடன் தான் இந்த கம்மாயை நான் பார்த்திருக்கிறேன்.. அப்பொழுது கம்மாயில் மீன் பிடிக்க டெண்டர் எடுத்தவர்கள் ஆட்களைக் கொண்டு தண்ணீர் திட்டுகளில் சல்லடை போட்டுக்கொண்டிருப்பார்கள்.அப்பொழுதெல்லாம் சிசைக்கிளின் பின்னே கூடையில் துள்ளிக்கொண்டிருக்கும் அயிரை மீன் சின்னமனூர் தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும்..

முத்துவேல் தண்ணீரைக்கொண்டு வந்து லாரியின் கண்ணாடி முகத்தில் விசிறி அடித்தான். “ஊருக்குப் போயிரலாமே.. இங்கன நிக்கிறோம்” என்றேன். “எழவப் பாத்த வண்டிய அப்டியே கொண்டு போக வேண்டாம்னு மலைச்சாமியண்ணே நெனைக்கிறாப்ல.. அதேன்.. லாரிய லேசா கழுவிவிட்டு நாமளும் குளிச்சிட்டு ஊருக்குள்ள போயிறலாம்.. வெளிய கிளிய போறதுன்னா போய்ட்டு அப்டியே ஒரு முங்கு போட்டு வா.. நீதேன் மொதல்ல குளிக்கனும்” என்றான் முத்துவேல். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. இங்கு எதையும் என்னால் மறுத்து பேச முடியாது என்று தோன்றியது. சட்டை பேண்ட்டை கழட்டி போட்டுவிட்டு கம்மாய் நோக்கி சென்றேன். தண்ணீர் வெதுவெதுவென்றிருந்தது. இறங்கி இரண்டு முறை முங்கினேன். வெறும் கையால் உடலைத் தேய்த்துக்கொண்டேன். மலைச்சாமியண்ணன் தூரத்தில் புதர்களுக்குள் இருந்து வருவது தெரிந்தது. நான் வேகமாக தண்ணீருக்குள் முங்கிவிட்டு கரையேறிக்கொண்டேன். மலைச்சாமியண்ணன் கம்மாயில் இறங்கி கால் கழுவிக்கொண்டு வெளியே வந்தார். சட்டையைக் கழட்டி நீட்ட முத்து வேல் போய் வாங்கிக்கொண்டான். மலைச்சாமியண்னன் தண்ணீருக்குள் இறங்கினார். என் துணிகளை ஒரு ப்ளாஸ்ட்டிக் பையில் வைத்து விட்டு வேறு உடை மாற்றிக்கொண்டேன். குளித்த உடம்பு காற்றை குளிராக உணர்ந்தது. மலைச்சாமியண்னன் ஈரமான உடம்புடன் வந்து டிரைவர் சீட்டில் கிடந்த துண்டை எட்டி எடுத்து உடம்பை துடைக்க தொடங்கினார். “பாடிய சின்னமனூருக்கு கொண்டு வருவாங்களா? என்றேன்.. மலைச்சாமியண்னன் “தெரில மணி.. முஸ்லீம்க சடங்கு என்னான்னு நமக்கு தெரியாதுல.. அந்தாளு சொந்தக்காரவுக எல்லாம் சின்னமனூருதேன்.. இவிங்ய இங்கருந்து மெட்ராசுக்கு போறாங்யலா இல்ல பாடிய இங்க கொண்டு வர்றாங்யளான்னு தெரில.. என்றார்.

சென்னையிலேயே வைத்து எல்லா சடங்கும் செய்யப்பட்டு விட்டது என்பது நாங்கள் சின்னமனூர் லாரி ஆபிஸ் சென்றதும் அறிந்துகொண்டோம். .. “பாடி தாங்காதுன்னு சொல்லி மெட்ராசுலயே வச்சு செஞ்சுட்டாங்யலாம்.. இங்கருந்து ஒறவுக்காரவுங்க யாரும் பெருசா போன மாதிரி தெரியல” என்றார் லாரி ஆபீஸ் கணக்காப்பிள்ளை. லாரியில் இருந்து உருளைக்கிழங்கு லோடுகளை கூலி ஆட்கள் இறக்க ஆரம்பித்தனர். சென்னையில் பாரீஸ் கார்னரில் லோடுகள் ஏற்றிக்கொண்டிருக்கும் போது தான் அவரை நான் பார்த்தேன். லாரியின் பின்பக்கம் நின்று பீடி பிடித்துக்கொண்டிருந்தார்.. தங்கவேல் மாமா என்னை கொண்டு போய் அங்கு இறக்கிவிடும் பொழுது பீடியை கீழே எறிந்துவிட்டு வந்து அவர் மாமாவிடம் பேசினார். வெளுத்துப்போன ஒரு வெள்ளைச்சட்டையில் நீலக்கலரில் லுங்கியும் கட்டியிருந்தார். தலையில் ஒரு அழுக்கேறிய குல்லா அணிந்திருந்தார். பல்லெல்லாம் கரையாய் இருந்தது. நாற்ப்பதைந்து வயதிருக்கும். மாமா பெரிதாக எதுவும் அவரிடம் பேசிக்கொள்ளவில்லை. என்னைக்கொண்டுபோய் மலைச்சாமியண்னனிடம் விட்டார். “பஸ்ஸேத்தி விட வேண்டியதுதான இவன.. லாரில ஒக்காந்துகிட்டேதான வரணும்..” என்றார் மலைச்சாமியண்ணன். ” பொங்கலுக்கு பஸ்ஸேல்லாம் புல்லு.. டிக்கெட்டு எதுவும் இல்ல.. என்னா பண்ண சொல்ற… இவனும் காலேஜ்ல ஆறு நாள் லீவு விட்டங்ய.. ஊருக்கு போயே தீருவேன்னுட்டியான்.. எங்காக்கா போன போட்டு எப்டியாவது அனுப்ச்சி விட்ருன்னுட்டாக… அதேன்..” என்றார் மாமா..

லாரியின் க்ளீனர் முத்துவேல் என்னுடன் சின்னமனூர் ஹைஸ்கூலில் படித்தவன்.. என்னைப்பார்த்ததும் மாப்ள என்று கட்டிக்கொண்டான்.. ஊர் போய் சேரும் வரை அவனுடன் பள்ளிக்கதைகள் பேசலாம்.. நான் லாரியில் ஏறி என் பையை கால் மாட்டில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.. முத்துவேல் இன்னும் பத்து நிமிடத்தில் கிளம்பி விடலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றான். நிறைய முறை இது போல் சின்னமனூருக்கும் சென்னைக்கும் லாரியில் போய் வந்திருக்கிறேன்.. மூன்று பேர் லாரியில் சென்றால் இடம் தாராளமாக இருக்கும். சில நேரம் க்ளீனருக்கு பின்னால் கால் நீட்டி படுத்துக்கொண்டும் செல்லலாம்.. ஆனால் அன்று லாரி கிளம்பும் போது அந்த முஸ்லீம்காரர் வந்து வண்டியில் ஏறிக்கொண்டார். கொஞ்சம் நெருக்கி உட்கார்ந்தோம்.. இப்படியே ஐநூரு கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்தபோது ச்செய் என்று இருந்தது.. இன்றைக்கு என எங்கிருந்து இந்தாள் வந்தார் என எரிச்சல் வந்தது. அவர் உடலில் லேசாக ஏதோ வாடை வந்தது என்னை மேலும் எரிச்சல் படுத்தியது.. மனதிற்குள் ஒரு கெட்ட வார்த்தை சொல்லி அந்தளை திட்டிக்கொண்டேன்.. அவர் அடிக்கடி என்னைப்பார்த்து சிரித்தார்.. கரையோடிய பல்லும் அவர் உடலில் அடித்த வாடையும் எனக்கு குமட்டியது.. “யாரு மகென்? என்று கேட்டார்.. நான் பதில் சொல்லாமல் ரோட்டை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.. என் தோளில் தட்டி “யாரு மகென்பா நீயீ? என்றார்.. “சின்னமனூர் தேங்கா ஏவாரி அய்யப்பன் மகென்” என்று முனங்கினேன்.. லாரியின் முறுமல் சத்தத்திலவருக்கு சரியாக கேட்கவில்லை. மேலும் தன் முகத்தை என் முகத்தருகேகொண்டு வந்து “என்னாது?” என்றார்..  அவர் வாயிலிருந்து கடுந்துர்நாற்றமாக பீடி வாடை அடிக்கஎனக்கு அழுகையே வந்துவிடும் போலஅடிக்க இருந்தது.. நான் முத்துவேல் பக்கமாக முகத்தை திருப்பிக்கொண்டேன்.. அவன் ரோட்டை பார்த்தபடி வந்தான்..

சென்னை நெருக்கடியில் லாரி அணத்தியபடி சென்றது. தாம்பரம் தாண்டுவரை கஸ்ட்டம்தான்.. டீசல் புகை வண்டிக்குள் சன்னமாக அடித்தது.. லாரி தாம்பரம் வந்தடையம் போது இரவு பத்துமணி.. வண்டியை மெயின் ரோட்டில் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு மலைச்சாமியண்ணனும் முத்துவேலும் அருகில் உள்ள ஒரு வாழை மண்டிக்கு பணம் வாங்கச் சென்றனர். முஸ்லீம் ஆள் வண்டியை விட்டு இறங்கி கொஞ்சம் முன்னாள் சென்று பீடியை பற்றவைத்துக்கொண்டார். நான் வண்டிக்குள் அமர்ந்தபடியே அவரை பார்த்தேன்.. அவர் கைலியை மடித்துவிட்டுக்கொண்டு பீடியை ஆழ இழுத்தார். அவருடைய பீடி வாடையுடன் சின்னமனூர் வரை செல்ல வேண்டும் என்பதை நினைக்கவே எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது.. பீடியை கீழே போட்டு விட்டு சாலையின் ஓரத்தில் வண்டியின் முன்பாக குத்த வைத்து அமர்ந்தார். அப்படியே வாந்தி எடுத்தார். லேசாக தள்ளாடியவர் தரையில் கையை ஊன்றி மீண்டும் வாந்தி எடுத்தார். எனக்கு லாரியை விட்டு இறங்கி மாமா வீட்டிற்கே சென்றுவிடலாமா என்றிருந்தது.. இல்லையென்றால் மலைச்சாமியண்னன் வந்ததும் எதாவது சொல்லி இவரை தாம்பரத்திலேயே விட்டு விட்டு செல்ல முடியுமா என்றும் யோசித்தேன். குத்த வைத்து அமர்ந்திருந்தவர் எழுந்து நிற்க முயற்சிக்கையில் தடுமாறி அப்படியே பின்னால் சரிந்தார்.. பின் இரண்டு முறை உடலை உலுக்கிக்கொண்டார். அதன்பின் அவர் உடலில் அசைவுகள் எதுவுமில்லை. நான் லாரியில் அமர்ந்தபடி அவரையே பார்த்தேன்.. பின் ஜன்னல் வழியாக மலைச்சாமியண்னனும் முத்துவேலும் வருகிறார்களா என்று பார்த்தேன்.. அவர்கள் எங்கும் தென்படவில்லை..

எனக்கு வண்டிக்கு உள்ளே அமர்ந்திருப்பது கசகசப்பாக இருந்தது. வண்டியை விட்டு இறங்கி வெளியில் நின்று கொண்டேன். விழுந்து கிடந்தவரின் உடலில் எந்த அசைவும் இல்லை. வயிறு ஏறி இறங்கவில்லை என்பதை உணர்ந்தபின்புதான் எனக்கு உறைத்தது. அவர் அருகில் சென்று அண்ணே அண்ணே என்று அழைத்தேன்.. அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லை.. கைகளை தொட்டு அழைத்தேன்.. கைகள் குளிர்ந்து விரைத்திருந்தன. அவரின் கழுத்துக்கு கீழே தொண்டைப்பகுதியில் விரலை வைத்துப் பார்த்தேன்.. இதயத்துடிப்பு இல்லை.. அவர் இறந்துகிடக்கிறார் என்று புரிந்தது. சாலையில் வேகமாக விரையும் வண்டிகளைத்தவிர நடந்து போகிறவர்கள் யாரும் இல்லை.. அவர் தலை புழுதியில் கிடந்தது. தரையில் உட்கார்ந்து அவர் தலையை எடுத்து என் மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் மூக்கின் அருகில் கை வைத்து பார்த்தேன்.. அவர் இறந்து விட்டார் என் உறுதியாக தெரிந்தது.. ஆனால் எனக்குள் எந்த பய உணர்ச்சியும் எழவில்லை.. மனம் அமைதியாக இருந்தது. எதையும் யோசிக்க முடியவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தேன்..

சாலையின் மறுபக்கத்தில் இருந்து மலைச்சாமியண்ணனும் முத்துவேலுன் சாலையை கடந்து வருவது தெரிந்தது. அவர்கள் அங்கிருந்தே நான் அந்த ஆளை மடியில் கிடத்தி சாலை ஓரத்தில் அமர்ந்திருப்பதை கவனித்திருப்பார்கள்.. “சரக்கப்போட்டு சாஞ்சிட்டாப்லையா?” என்றவாறு மயில்சாமி அண்ணன் அருகில் வந்தார். “இல்லண்ணே செத்துபோயிட்டாப்ல” என்றேன். மலைச்சாமி அண்ணனுக்கு நான் சொன்னது உடனே புரியவில்லை.. என்னாது என்றார்.. ” வண்டிய விட்டு எறங்கி வாந்தி எடுத்தாப்ல… அப்டியே மட்ட மல்லாக்க விழுந்தாப்ல.. வந்து பாத்த ஆள் செத்துப்போயிட்டாப்லண்ணே” என்றேன்.. மலைச்சாமியண்னன் குனிந்து அவரை சோதித்துப்பார்த்து நான் சொன்னதை உறுதி படுத்திக்கொண்டார். உடல் இறுக என் அருகில் வந்து அமர்ந்தார். முத்து வேலிடம் “லேய் வண்டி லோடோட நிக்குதுடா.. என்னடா பண்ண? என்றார்.

முத்துவேல் எஸ்.டி.டி பூத்திற்கு சென்று யார் யாருக்கோ போன் போட்டு இறந்தவரின் சொந்தங்களை தொடர்பு கொண்டு செய்தியை சொன்னான். நான் அவரின் உடலை மடியில் வைத்தபடியே சாலையில் உட்கார்ந்திருந்தேன்.. வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.. அவர் வண்டியை விட்டு இறங்கியதிலிருந்து ஒவ்வொரு விநாடியையும் திரும்ப திரும்ப நினைத்துக்கொண்டிருந்தேன்.. கண் முன் ஒரு மரணத்தை முதன் முதலாக கண்டிருக்கிறேன்.. அவர் இறந்ததை முதன் முதலாக அறிந்தவன் நான். நாளை

முத்துவேல் சாலையை கடந்து அருகில் வந்தான். “ஓனருக்கு போன் போட்டேண்ணே.. லோடபத்தி கவலப்படாம எல்லாத்தையும் இருந்து பாத்து முடிச்சு விட்டு கிளம்பி வாங்கண்ணாப்ல” என்றான். மலைச்சாமியண்ணன் உடலில் இருந்த இறுக்கம் மெல்ல தளர்ந்தது.. பெரு மூச்சு விட்டபடி ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக்கொண்டார். இரவு இரண்டு மணி அளவில் ஒரு வெள்ளை மாருதி வேனில் சில முஸ்லீம் ஆட்கள் வந்து இறங்கினார்கள்… எல்லாரும் தலையில் குல்லா போட்டிருந்தனர். எவரும் அவரை பார்த்தவுடன் அழவில்லை.. ஆனால் அவர்கள் அனைவர் முகத்திலும் வேதனை தெரிந்தது. மலைச்சாமி அண்ணன் அவர்களிடம் நடந்ததை மெல்லிய குரலில் விளக்கி சொன்னார். அவர்கள் தங்களுக்கும் நிறைய பேசிக்கொண்டார்கள். இரண்டு பேர் சாலையை கடந்து எஸ்.டி.டி பூத்திற்குள் சென்றார்கள். என் மரத்துப்போன கால்கள் வலிக்க ஆரம்பித்தன. மெல்ல அவரின் தலையை நகர்த்தி தரையில் வைத்துவிட்டு கையூன்றி எழுந்து கொண்டேன். ரத்தம் கீழ் நோக்கிப் பாய கால்கள் கூசி தடுமாறினேன். அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து முஸ்லீம் ஆளை எடுத்துச்செல்ல மேலும் இரண்டு மணிநேரம் ஆனது.

தாராளமான இடவசதியுடன் அமர்ந்து சின்னமனூரை நோக்கி நான் பயணப்பட்டேன்.. முத்துவேலிடம் பள்ளிக்கதைகள் எதுவும் பேசவில்லை. திண்டிவனம் தாண்டியதும் இருக்கும் இடத்தில் ஒரு மாதிரி உடலை கொடுத்து படுத்துக்கொண்டேன். சரியாக தூங்க முடியவில்லை.. களைப்பு இருந்தாலும் மனது அலைபாய்ந்து கொண்டே இருந்தது.. வீட்டிற்கு வந்து மீண்டும் ஒரு முறை ஷாம்பு சோப்பு எல்லாம் போட்டு சுடுதண்ணீரில் குளித்து சாப்பிட்டு விட்டு படுத்த பின்புதான் நல்லுறக்கம் வாய்த்தது. தூங்கி எழுந்து மறுநாள் காலையில் நான் மாடியில் இருந்து கீழே வரும் பொழுது கூடத்தில் சில ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். நடுத்தர வயதில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் அம்ர்ந்திருந்தனர். கீழ வீதியை சேர்ந்த முஸ்லீம் ஆட்கள் என்று தெரிந்தது.. சின்னமனூரில் கீழ வீதியில் மட்டுமே முஸ்லீம்கள் இருந்தனர். அறுபது குடும்பங்கள் வரை இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அம்மா போட்டுத்தந்த காபியை உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள். நான் கூடத்திற்குள் வந்ததும் அம்மா என்னை அறிமுகம் செய்து வைத்தாள். அவர்கள் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு அமைதியாக இருந்தனர். நானும் என்ன சொல்லுவதென்று தெரியாமல் அமைதியாக நின்றிருந்தேன்..

அம்மா “இவென் என்னமோ ஏதோனு ஓடிப்போயி பாக்குறதுக்குள்ள இறந்துட்டாராம்.. என்ன செய்றதுன்னு தெரியாம அவர மடிலயே போட்டு ரோட்ல உக்காந்திட்டு இருந்திருக்கியான்” என்றாள். நான் தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தேன்.. மேலும் சில விநாடிகள் அமைதியாக கழிந்தது. அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் மெல்ல அங்கிருந்து நகர்ந்து உள் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டேன்.. அவர்கள் கிளம்பும் ஓசை கேட்டது.. அவர்கள் முனங்களாக அம்மாவிடம் ஏதோ சொல்லிவிட்டு சென்றார்கள். அம்மா என்னைதேடி அறைக்குள் வந்தாள். “அவங்க என்ன ஏதுன்னு தெரிஞசுக்கத்தான வந்து ஒக்காந்திருக்காங்க.. என்னாச்சுன்னு சொல்ல வேண்டியதுதான.. ” என்றாள். “நான் என்ன சொல்றது.. அதேன் நீ சொன்னில்ல.. அதான் நடந்துச்சு.. அத நான் சொன்னா என்ன நீ சொன்னா என்ன? என்றேன்.. “நீதேன் சொல்லனும்.. வெலாவரியா சொல்லனும்.. அப்பத்தான அவங்களுக்கு புரியும்.. தீடீர்னு செத்து போயிட்டார்னா அவங்களுக்கு எப்டி இருக்கும்” என்றாள்.  நான் எழுந்து கழிவறைக்குள் சென்றேன்..

அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஒரு கும்பல் வந்தது.. பல வயதினர் கலந்த கும்பல். சிறு பிள்ளைகள் வேறு இருந்தனர். அவர்கள் கூடத்தை நிறைத்து அமர்ந்திருந்தனர். “என்னாச்சுன்னு தெரிலங்க.. குத்த வச்சு உக்காந்து வாந்தி எடுத்தாரு.. நான் என்ன ஏதுன்னு ஓடிப்போய் பாக்குறதுக்குள்ள அப்டியே சரிஞ்சு விழுந்துட்டாரு.. பக்கத்தில யாரும் இல்ல.. என்ன பண்றதுன்னு எனக்கு புரியல.. நெஞ்ச தேச்சு விட்டேன்.. அப்டியே உடம்ப ரெண்டு தடவ உலுக்கினாரு.. ஓடிப்போய் லாரில இருந்து தண்ணிய எடுத்துவந்து வாயில விட்டேன்.. ஆனா அத குடிக்கிறதுக்குள்ள உயிர் போய்டுச்சு” என்றேன். கூட்டத்தில் சில விசும்பல் குரல்கள் எழுந்தன.. பிள்ளைகள் கூட்டத்திற்குள் அங்குமிங்கும் பெண்களிடம் தாவி குதித்து விளையாடின. ஒருவர் பிள்ளைகளை அதட்டினார்.

நான் வெளியே நண்பர்களை பார்க்க சென்றேன். முருகேசனுடன் சேர்ந்து மஹாராஜா கடைக்கு சென்றேன். பொங்கலுக்கு சென்னையிலேயே துணி எடுத்திருக்கலாம். சோம்பேரித்தனம். ஆனால் துணிகள் மஹாராஜாவில் பரவாயில்லை என்றிருந்தது. இரண்டு செட் உடைகள் எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். தர்பார் டீக்கடைக்குள் சென்று அமர்ந்து டீ சொன்னோம். கல்லாவில் நின்றிருப்பவர் மெல்ல அருகில் வந்து உட்கார்ந்து மொய்தீனு உங்க கூட வரும் போதுதேன் மையத்து ஆனாப்லன்னு சொன்னாங்க.. என்னப்பா ஆச்சுங்க” என்றார். நான் மேலோட்டமாக நடந்ததை சொன்னேன்.. “நல்லஆளுதேன்.. ஆனா ஒரு எடத்தில நின்னு வேல பாக்குறது கெடையாது.. ஒண்ணுக்கு ரெண்டு பிள்ளைக.. வளந்து வருதுகடா என்னத்தையாவது பண்ணுன்னு சொல்லிச் சொல்லி மெட்ராசுக்கு தெரிஞ்சவங்க கிட்ட வேலைக்கு அனுப்பி வச்சோம்..இப்ப இப்டி ஆகிபோச்சு” என்று சொல்லிவிட்டு கல்லாவை நோக்கி சென்றார்..

மாலை வீட்டிற்கு வரும் பொழுது ஒரு நூறு பேர் வாசலில் தெருவை அடைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள். என்னை அடையாளம் கண்டு கொண்டு எல்லோரும் என்னை பார்த்தார்கள். என் கால்கள் உறைந்து போனது போல் அப்படியே நின்றது.. வாழ்வில் முதல் முறையாக இத்தனை கண்கள் என்னை மட்டுமே நோக்குவதை உணர்ந்து தடுமாறினேன்.. மிக கூச்சமாக உணர்ந்த போதே நான் இன்று இவர்களுக்கு முக்கியமானவன் என்ற எண்ணம் வந்தது. ஆட்கள் நான் வீட்டிற்குள் செல்வதற்காக வழி விட்டார்கள். நான் கடந்து சென்றதும் மெல்ல சத்தமில்லாமல் என்னை தொடர்ந்து வந்தார்கள். கூடத்திலும் ஆட்கள் நிறைந்திருந்தார்கள். கீழவீதி முழுக்கவே வந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.. நான் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களை மிதிக்கமால் கால்களை எட்டி வைத்து நடந்து உள்ளறைக்கு சென்றேன்.

அம்மா பின்னாடியே வந்தாள். “ஓடிப்போய் பாத்தேன்.. வாந்தி எடுத்தாரு.. அப்டியே விழுந்து செத்தாருன்னு சொல்லாத.. அத கேக்க அவங்க வரல” என்று முனங்கி விட்டு வெளியே சென்றாள். நான் என்னை நிதானப்படுத்திக்கொண்டேன். ஆழமாக முச்சை இழுத்துவிட்டுக்கொண்டு மீண்டும் கூடத்திற்கு வந்தேன்.. எல்லோரும் என்னை நிமிர்ந்து பார்த்தார்கள். தெருவில் இருந்தோர் வாசலை அடைத்துக்கொண்டும் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டும் நின்றார்கள். ஒரு குழந்தை அழுதது.. அதை ஒரு பெண் தோதோவென சொல்லி சமாதானப்படுத்த முயற்ச்சித்தாள். “மொய்தீன் அண்ணே என்கூடத்தான் லாரில வந்தாரு… எங்கூட பேசிகிட்டேதான் வந்தாரு.. நான் என்ன படிக்கிறேன் எல்லாம் கேட்டாரு.. ” கூட்டத்தில் மூச்சு விடும் சப்தம் தவிர எதுவும் கேட்கவில்லை. அம்மா கண்கள் விரிய என்னை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். ” ரொம்ப கஸ்ட்டபட்டுட்டேன் தம்பி.. இப்பதான் எல்லாம் சரியா போய்ட்டு இருக்குன்னு சொன்னாரு.. பிள்ளைகள பெருசாகிட்டாங்க.. அவுங்களுக்கு செய்ய வேண்டியத செய்யனும்னாரு.. இனி எல்லாத்தையும் மாத்தி நல்லபடியா ஆக்கிடுவேன்னு நம்பிக்கை வந்திருச்சுன்னாரு.. பிள்ளைக மேல உசுரா இருக்கார்னு தெரிஞ்சுது.. படிச்சா பத்தாது.. நம்மள சுத்தி இருக்கவங்கள நல்லா வச்சிக்கனும் தம்பின்னாரு.. நான் ஆமாம்ணேன்னு சொன்னேன்.. ரொம்ப நாள் கூடப்பழகுனவரு மாதிரி சிரிக்க சிரிக்க பேசிட்டு வந்தாரு.. தாமபரத்தில வண்டி நின்னதும் டீ வாங்கித்தர்றேன் வாப்பான்னு கைய பிடிச்சு இழுத்தாரு.. சரிங்கண்னேன்னு சொன்னேன்.. அவருதான் முதல்ல வண்டில இருந்து இறங்கினாரு..” அழுதுகொண்டிருந்த குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு என்னையையே பார்ப்பதை உணர்ந்தேன்.. ஒருகணம் சொல்வதை நிறுத்திவிட்டு பின் மீண்டும் சொல்ல ஆரம்பித்தேன்

கூடடைதல் – லோகேஷ் சிறுகதை

நான் தங்கியிருந்த தனியறையின் பக்கவாட்டு சுவரில் சுவற்றுப் பல்லியைப் போல் ஒட்டிக்கொண்டு அந்த சத்தத்தை தினமும் கேட்டுக்கொண்டிருப்பேன். சுவரின் அந்த பக்கத்தில் ஒரு சிறு பொந்து இருக்கிறது. அந்த பொந்திற்கு அவ்வப்போது ஒரு புறா வந்துகொண்டிருக்கும். அறைக்கு பின்பக்கத்தில் கண்ணுக்கு மறைவாக அந்த பொந்து இருந்தது. ஆகவே புறாவை பார்க்க முடியாது. அதன் ஓசையை வைத்துக்கொண்டு தான் அதனை அறிய முடியும். அது எழுப்பும் குறுகல் ஒலிக்காக தான் நான் காதை சுவரோடு ஒட்டி அப்படி கேட்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன். முதலில் கேட்ட போது அந்த குறுகல் ஒலி எனக்கு எங்கள் ஊரின் மகமாயி கோயிலின் மாடப்புறாவைத் தான் ஞாபகப்படுத்தியது. சரியாக காலை விடியும் வேளையில் அந்த குறுகல் ஓசை எழும். அதில் அந்த சுவரே முனகுவது போல இருக்கும். அந்த முனகலில் தான் என் கண் விழிப்பு. பின்னர் மாலை அந்தி வேளையில் நான் வேலை முடிந்து திரும்பி வந்ததும் மீண்டும் ஒருமுறை காதை வைத்து கேட்பேன். சுவரே சடசடக்கும். புறா அதன் சிறகு அதிர புறப்பட துடித்துக்கொண்டிருக்கும். கூடடைவதற்கான தன் புறப்பாடை அதன் சிறகுகளைக் கொண்டு அதிர்த்தி தெரிவிப்பது போல. அது சென்ற பிறகும் அந்த சடசடப்பு அந்த சுவற்றில் எஞ்சும்.

நான் எனக்கான சிறகுகளை எப்போது பெறப் போகிறேன்? ஒவ்வொரு நாளும் அந்த சிறகடிப்பின் சடசடப்பில் புறாவோடு புறாவாக அந்த சுவரும், அந்த சுவரோடு ஒட்டிய நானும் பறந்துவிடலாகாதா என்ன?

எனக்கான சிறகுகளைப் பெற்று என கூடடைய எழுந்திருக்கிறேன் இப்போது. எனக்கு வயது முப்பத்தி இரண்டு. இருவதாவது அகவைகளை அரை பாக்கெட் சிகரெட்டிலும், வெட்டப்படாத தாடியிலும், பன்னிரெண்டு மணி நேர உறக்கத்திலும், ஆற்றங்கரை ஒரத்திலுள்ள பாழடைந்த மண்டபத்திலும் கழித்து பொறுப்பின் சலனம் இல்லாத இளைஞர்களுள் நானும் ஒருவன். ஆனால் இன்று அப்படி இல்லை. இன்றோ மாதம் எட்டாயிரம் ரூபாய் வருவாய். சொந்த ஊரை விட்டு வெகு தொலைவில் ஒரு ரசாயன தொழிற்சாலையில் வேலை. ஆறு மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊர் செல்ல அனுமதி. அங்கே ஆயிரம் மைல்களுக்கு அப்பால்… என் வீடு… அப்பா… மனைவி… தங்கை… அவர்களது காலைகள்.

கொல்லைபக்கம் தோட்டத்தில் விழுந்து இறைந்து கிடக்கும் தன் மனைவி வளர்த்த பவழமல்லி செடியின் பூக்களை தன் அரைப் பார்வைக்கொண்டு நேற்றைய பூ எது இன்றைய பூ எது என்று பகுத்து அன்றைய பூக்களை மட்டும் பொறுக்கி எடுத்து வந்து சாமி அலமாரிக்கு முன் தன் மகள் போட்ட அரசி மாவு கோலத்திற்கு மேல் அலங்கரிப்பார் அப்பா. மீதியிருக்கும் பூக்களை பூக்கூடையிலேயே விட்டுவைப்பார். அதனை என் மனைவி எடுத்து பவழமல்லியின் செந்தூரக்காம்புகளில் ஊசியை நுழைத்து கோர்த்து தொடுத்து சரமாக்கி என் அம்மா படத்திற்கும் ஏனைய சாமி படங்களுக்கும் சாத்துவாள். மீதியிருக்கும் அரை முழம் பவழ மல்லி சரத்தை தங்கை பள்ளிக்குச் செல்லும் போது அவளது தலையில் வைத்துவிடுவாள். இந்த பவழமல்லி கதையை எனக்கு எழுதும் கடிதத்தில் அடிக்கடி குறிப்பிடுவார் அப்பா. ஒவ்வொரு நாளும் எப்படி அந்த பவழ மல்லிச் செடி ஓரே எண்ணிக்கையில் பூக்களைத் தருகின்றன என்று அவரது வியப்பு அந்த கடிதத்தில் கலந்து இருக்கும். அங்கிருந்த வரை அவர்களது காலைகளில் எனக்கு பெரிதாக இடம் ஏதும் இருந்தது இல்லை. இன்று அவர்களுடன் என் பிள்ளையும். பிறந்த முதல் இன்று வரை தனது தந்தையவனின் முகம் கூட நுகரா பால் வண்ணம் மாறா ஆறு மாத கைக்குழந்தை. இங்கு இரை தேடி வந்து வீடு திரும்பும் பறவையாய் நான். ஊரிலிருந்து வேலைக்கு சேர்ந்து எட்டு மாதம் ஆகிவிட்டது. இதுவே என் முதல் வீடு திரும்பல். இங்கிருந்து ஊருக்கு எழு நூறு மைல் வரை தொடர்வண்டியில் சென்ற பின் மலைப்பாதை கடந்து சாலை மார்க்கமாய் இரண்டரை நாட்களில் சென்றடையலாம்.

ஒன்றரை நாள் ஆகிவிட்டது. நான் வந்த தொடர்வண்டி மழை காரணமாய் நடுவிலே நிறுத்தப்பட்டது. என்ன செய்வதென்று அறியாது முழித்தேன். மொத்தம் ஏழு நாள் தான் விடுமுறை. ஐந்து நாள் போக வர பயணத்திற்கே சரியாக இருக்கும். மீதி இரண்டு நாட்கள் தான். இந்த எட்டு மாதங்களாய் என் உயிரை ஓட்டி கொண்டிருந்தது இந்த இரண்டு நாட்கள் தான். இரவு பதினோரு மணி. ரயிலை விட்டு இறங்க முடிவு செய்தேன். இன்னும் மூன்று மணி நேரம் பயணம் செய்தால் அருகில் உள்ள பேருந்துகள் இயங்கப்பெறும் ஊருக்கு சென்றடையலாம். அங்கிருந்து என் ஊருக்கு ஐந்து மணி நேரம் தான் என்ற நம்பிக்கையில் நடந்தேன். நிலா வெளிச்சம் நிறையப் பெற்று இருந்தது வழியெல்லாம். மனித நடமாட்டமாய் எதையும் அறிய முடியவில்லை. ஆந்தையின் அலறல். மழை மேகங்கள் மழையை பனியாய் மாற்றிப் பொழியும் குளிரை தாக்குப்பிடிக்க முடியவில்லை.வேலைக்கு செல்வதற்கு முன் என் மனைவி கொடுத்தனுப்பிய ஸ்வெட்டர் நினைவுக்கு வந்தது. பெட்டியில் இருந்து எடுத்து அணிந்துகொண்டேன். கூடவே அவள் சம்பந்தப்பட்ட நினைவுகளும் எழுந்து என்னை அணைந்துகொண்டன.

அன்று என்னையும் என் இயலாமை தெரிந்தும் என்னை ஏற்றுகொண்டு என்னோடு வாழ வந்தவள் தான் என் மனைவி. அவளது மெளனங்களை என் வாழ்க்கை தராசில் நிறுத்தினால் என்னால் ஈடு செய்ய முடியாது. நான் பொறுப்பில்லாமல் இருந்த காலங்களில் அவள் எந்த நம்பிக்கையில் என்னை ஏற்றுகொண்டாள் என்று நான் இன்று வரை அவளிடம் கேட்டதில்லை. திருமணத்திற்கு பின்னான நாட்களில் இரவு படுக்கைக்கு முன் அரைப் பாக்கெட் சிகரெட்டையும் காலி செய்து நெஞ்சு நிறைந்த புகையை தேக்கி வெளியில் விடாமல் அந்த போதையிலேயே திளைப்பேன். ஆரம்ப காலத்திலிருந்தே சிகரெட் புகையை நெஞ்சில் தேக்கி மூச்சை அடக்கும் இந்த பழக்கம் என் நட்பு வட்டத்தின் மூலம் நன்கு பரிச்சயமாகியிருந்தது. கண்கள் சிவந்து பொங்கியெழ வந்து அவள் அருகில் படுப்பேன். படுத்து உறங்கிய சிறிது நேரத்திலேயே அந்த நெஞ்சுப்புகை என் கண்களிலும் காதுகளிலும் மூச்சிலுமாக வெளியே கசியும் ஒரு நிலக்கரி இன்ஜினைப்போல. அருகில் படுப்பவர்களுக்கு குடலையே உமிழும் அளவிற்கு நாற்றம் பிறட்டும். அத்தனையும் தாங்கிக் கொண்டு தன் சேலை முந்தானையால் தன் முகத்தினை மூடிக்கொண்டு சற்று கமறி படுத்துக்கொள்வாள். அவ்வளவுதான். என்னிடம் எந்த புகாரும் அவளுக்கு இருந்ததில்லையா என்ன? இத்தனையும் எதற்கு ஒருத்தி தாங்கிகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்று வரை கூட இருக்கிறது. அதற்கும் அவள் மெளனத்தையே பதிலாய் உரைப்பாள். அவளது மெளனங்களால் என்னை அலட்சியப் படுத்துகிறாளா என்று கூட தோன்றும்.

வேலைக்குப் போக வேண்டிய நெருக்கடி என்னைச் சூழ்ந்த போது என் சொந்த ஊரே என்னை விரட்டியடித்தது. நான் நின்று கொண்டிருக்கிற நிலமே கூசுவது போல் இருந்தது. அப்போது அவள் மட்டும் மெளனம் காத்தாள். அவளது அந்த மெளனத்தை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. “எல்லாரும் என்ன திட்டி தீக்குறாங்க, நீ மட்டும் ஏன் இன்னும் மிச்சம் வச்சுருக்க? ஏதாவது சொல்லு” என்று அவளை உலுக்காத குறையாக கேட்டேன். ‘இல்ல எனக்கு என்ன சொல்றதுனு தெரியல’ என்றாள். நான் அவளது தயக்க எல்லையை கடக்க முற்பட்டு, “என்ன தயங்குற. சொல்றதுகென்ன.” என்றேன்.

“தயக்கம்லாம் இல்ல உண்மையாவே அவ்ளோ தான்” என்றாள்.

இப்படித்தான் தயக்கத்திலேயே முழுமையாய் முடிந்துவிடுவாள் அவள். பின்னர் எதுவென்றோ ஆனவனாகி,

கனத்த குரலில் ‘நீ ஏன் இப்படி இருக்க? எதுவுமே பேசமாட்டேங்குற. என்கிட்ட பேசுறதுக்கு உனக்கு வார்த்தையே இல்லையா?

உனக்கு எம்மேல கொஞ்ச நஞ்ச உரிமைக்கூட இல்லையா என்ன?’

‘ஒருத்தங்கள அப்படியே ஏத்துக்கறதுல உரிமையில்லாம ஆய்டுமா என்ன?’ என்றாள்.

அவளிடம் மேற்கொண்டு சொல்ல என்னிடம் எதுவும் இல்லை. அவ்வார்த்தை என்னை நிறைத்ததா? இல்லை முழுதும் இறைத்ததா? தெரியவில்லை. இலை தளத்தில் நழுவும் பனி நீர் சுடுமணலில் விழுவதைப் போல அவ்வார்த்தையை அப்படியே உறிந்துகொண்டேன். அதிலிருந்த தண்மையும் உயிரோட்டமும் எனக்கு மட்டுமே அணுக்கமானது என்று பின்னர் பல தடவை நினைவு கூறி ஊர்ஜிதபடுத்திக்கொண்டேன். அதன் பின் அவளது மெளனங்களை அளக்க நான் முற்பட்டதில்லை. அதை சார்ந்த எந்த ஐயங்களும் இல்லை. எழுந்தாலும் அவளிடம் கேட்க போவதுமில்லை. அவளது மெளனங்களே எனக்கு காப்பாகவும் மாறியிருந்ததை சில சமயங்களில் உணரமுடிந்தது. அவளது வார்த்தைகளும் புளியமரத்தை உலுக்கி பொறுக்கி எடுக்கப்படும் புளியம்பழங்களைப் போல தான். அடி நாக்கில் எஞ்சும் அந்த இனிப்பு தாண்டிய புளிப்பைப் போல அவள் உகுக்கும் வார்த்தைகளின் சாரத்தை நான் சேகரம் செய்து கொள்வேன். நான் கிளம்பும்போது என்னை அணைத்து “இனிமேல் என் வேலையை இது செய்யும்” என்று கொடுத்தனுப்பிய ஸ்வெட்டர் தான் இது.

இறுகி அணைத்தபடியே நடந்தேன். ஒரு ஐந்தாறு கிலோமீட்டர் நடந்திருப்பேன். சாலையை அடைந்துவிட்டேன். எதேனும் பஸ்ஸோ லாரியோ வருகிறதா என்று பார்த்து கொண்டே நின்றிருந்தேன். எதும் தென்படவில்லை. மணி ஒன்று இருக்கும். கால் கடுக்க நின்றிருந்தேன். தொலைதூரத்தில் ஒரு வெளிச்சம். அருகில் வர வரக் கூடிற்று. ஒரு ஆம்னி வேன் வந்துகொண்டிருந்தது. அதை நிறுத்த கை நீட்டினேன். ட்ரைவர் சற்று தூரம் போய் நிறுத்தினார். என் பெட்டியை எடுத்துக்கொண்டு வண்டியின் அருகில் சென்றேன். ட்ரைவரிடம் நடந்ததை கூறி விவரித்தேன். உள்ளிருந்து கணத்த இருமல் சத்தம் கேட்டது. ஒரு அறுவது வயது அம்மாவும் முப்பது முப்பத்திரண்டு வயது மகளும் இருந்தார்கள். அந்தப் பெண் சால்வையை மூடிக்கொண்டு தொடர்ந்து கத்திக்கொண்டும் இரும்பிக்கொண்டும் இருந்தாள். அம்மா அவளை தடவி கொடுத்து சமாதான படுத்தியவாறே இருந்தாள். ட்ரைவர் என்னை ‘ஏறுங்க சார்’ என்றார். அந்த மகளுக்கு என்ன தோனியதோ தெரியவில்லை என்னை பார்த்து அனத்திக்கொண்டே வந்தாள். “இந்த ஆளும் முகரயுமே சரி இல்ல…ஏன் இந்த ஆள வண்டில ஏத்துனீங்க ..?” என்று அம்மாவிடமும் ட்ரைவரிடமும் அனத்திக்கொண்டே வந்தாள். ஆம், என் முகமும் அப்படித்தான் இருக்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் என் விஷயத்தில் அது தப்பி விட்டது. திருடனும் எளிதாய் கைக்காட்டி திருட்டு பழியை சுமத்தி விட்டு தப்பிவிடுவான். அப்படிப்பட்ட முக அம்சம் பொருந்தியவன் நான். என்னை முதலில் பார்பவர்களுக்கு நான் சந்தேகப்படும்படியாகவும் இழிவாகவும் தெரிவதை நான் பல சமயங்களில் ஊகித்திருக்கிறேன். ஒருவரைத் தவிர – அவள் தான் என் மனைவி. போக போக அந்த பெண்ணின் அனத்தல் உச்சத்தை தொட்டது. இரைச்சலாய் மாறியது. அந்த வேனின் ஓரக்கண்ணாடியில் என் முகத்தை பார்த்தவாறே புழுவினும் இழிந்த நிலையை எண்ணினேன். வாழ்க்கையே இழிவாய் மாறிய தருணம் அது.

போக வேற்று வழி இல்லாமல் என் உணர்ச்சிகளை கண்ணீராய் பதிவு செய்த தருணமும் அது தான். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் நிலைமை மோசமாக உரத்தக் குரலில் கத்தினாள். “ட்ரைவர், வண்டிய நிப்பாட்டுங்க, இந்த ஆள எறங்க சொல்லுங்க” என்று சத்தம் போட்டாள். அவள் அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவள் கேட்கவில்லை. ட்ரைவரும், “பக்கத்து ஊர்ல இவர் எறங்கிருவாருமா அது வரை அட்ஜஸ் பண்ணிகோங்க” என்றார். ஆனாலும் அவள் மூச்சுத் திணற திணற சத்தம் போட்டாள். அவள் அம்மா “தயவு செஞ்சு அவர எறக்கி விடுங்க” என்று கேட்டுக்கொண்டபடியே தண்ணீர் பாட்டிலை எடுத்து மகளிடம் தந்து மாத்திரை கொடுத்தாள். ட்ரைவரும் வேறு வழி இல்லாமல் வண்டியை நிறுத்தி என்னை தனியே இழுத்து சென்று, “சார் தப்பா நெனைக்காதீங்க. அந்த பொண்ணுக்கு ஹிஸ்டீரியா கம்ப்ளைண்ட், டிபி வேற அதான் இப்டி நடந்துக்குறாங்க. நீங்க வேற பஸ் லாரி புடிச்சு போய்க்கோங்க” என்று சொல்லி விட்டு சென்றார்.

மறுபடியும் தொலைந்து போனேன். ஒரு கண்ணில் என் குடும்பம். ஒரு கண்ணில் அந்த பெண்ணின் வசை மொழிகள் கணம் கணம் தோன்றி மறைந்தன. கொஞ்ச தூரத்தில் ஒரு லாரி வந்தது தெரிந்தது. மூன்று மணி இருக்கும். கையை நீட்டினேன். வண்டி வேகம் குறைந்து நின்றது. ட்ரைவர் ஒத்துக்கொண்டார். நடந்ததை மனதில் வைத்துகொள்ளாமல் குடும்பத்தை எண்ணியவாறே கண் அயர்ந்தேன். விடிந்தது. கண் முழித்துப்பார்த்தேன். தூரத்தில் ஒரு பெரும் மக்கள் கூட்டம். சாலையை ஆக்கிரமித்துக்கொண்டு நின்று இருந்தது. போலீஸ் ஜீப்பும் அருகில் நின்றது. விபத்து நிகழ்ந்ததற்கான எல்லா அறிகுறிகளும் தெரிந்தது. லாரி ட்ரைவர் வண்டியை நிறுத்தி இறங்க முற்பட்டார். அதற்குள் ஒரு போலீசுகாரர் அவரை தடுத்து “வண்டியலாம் இப்டி தேவ இல்லாம ஓரங்கட்டாத…கெளம்பு…கெளம்பு” என்றார் “என்ன சார் ஆச்சு?” என்று லாரி ட்ரைவெர் அவரை வினவ, ” ஒரு அம்மாவும் பொண்ணும் வந்துருக்கராங்கையா….ட்ரைவர் பனில வண்டி ஓட்டத் தெரியாம தடுமாறி இருக்கான். வளைவுல கல்’ல மோதி ஆக்சிடென்டு. அதுல அம்மாவும் மகளும் ஸ்பாட் ஔட். ட்ரைவெர் அடிப்பட்டு கெடக்குறான்யா” என்று வழியை சரி செய்து அனுப்பினார். இதை கேட்ட எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. லாரி ட்ரைவர் “யாரு செஞ்ச பாவமோ? இப்டி ரத்தம் பட்டு கெடக்குதுங்க” என்று புலம்பினார் என்னிடம். என்னை வண்டியிலிருந்து இறக்கி விட்டதனால் தான் அவர்களுக்கு இந்த கதியா என்ன? என்ற எண்ணம் எழாமலில்லை. ச்ச, என்ன அபத்தம் இது? ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறேன் நான்? லாரியின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியை நானே தேடி ஒருமுறை பார்த்துக்கொண்டேன். இது மாதிரி தருணங்களில் தான் ஒரு கண்ணாடியின் தேவையை நான் மிகவும் உணருகிறேனோ?

இப்படி பலவித எண்ணப்பரிமாற்றங்களுடன் அந்த ஊர் வந்து சேர்ந்தேன். லாரி ட்ரைவர் “இதான் சார் பஸ் ஸ்டாண்ட். இங்கேந்து உங்க ஊருக்கு பஸ் கெடைக்கும். பாத்து கேட்டு போய்டு வாங்க” என்றார். வண்டியை விட்டு இறங்கிய பின் ட்ரைவரிடம் “இந்தாங்க இத வச்சுகோங்க” என்றேன். ட்ரைவர் “அதலாம் வேணாம். ஒதவி செஞ்சு ஒருத்தன் அடையற விசாலத்த இப்படி பணங்கொடுத்து குறுக்கப் பாக்கறீங்களே சார். நாட்டுல எல்லாத்துக்கு மாத்தா இது இருக்கு. மனுசன் மனசுக்கு மட்டும் வேணாமே. என்ன சொல்றீங்க? ஓயாம லாரி ஓட்டுறவன் நான். எதோ என்னால முடிஞ்சது.” என்று புன்னகையுடன் மறுதலித்தார். “எல்லாரும் இப்படி பண்ணமாட்டாங்கள்ள ணா. அதனால தான்…” என்றேன். “அவங்கள வுடுங்க சார்” என்று லாரியின் கியரை மாற்றினார்.

மணி ஆறு முப்பதுக்கெல்லாம் என் ஊருக்கு பஸ் ஏறிவிட்டேன். அரசங்கொல்லை என் ஊர். மீண்டும் எண்ண ஓட்டங்கள். அந்தப் பெண்ணின் அரற்றல். அந்த வேன் ட்ரைவரின் மன்றாடல். அந்த லாரி ட்ரைவர் புன்முறுவல் என்று மாறி மாறி. ஒரு வழியாக ஊர் வந்து சேர்தல் ஆயிற்று. வீட்டுக்கதவை தட்டியவுடன் அப்பா கதவு திறந்தார். புத்தகத்தை கீழே போட்டு விட்டு ஓடி வந்து தன் கண்ணாடி வலையல்கள் நொறுங்க கட்டி அணைத்தாள் தங்கை, சமையல் வேலையைப் போட்டது போட்டபடி விட்டு வேகமாய் வந்து, தொட்டிலில் இருந்த குழந்தையை எடுத்து வந்து கையில் கொடுத்து என் தோளில் மெளனச் சாய்வு சாய்ந்தாள் மனைவி. “என்னடா பையன், அசப்புல உன்ன போலயே மூக்கும் முழியுமா இருக்கான் பாரு” என்றார் அப்பா. கையில் இருந்த என் மகன் மெலிதாய் சிரித்தான். நானோ அழுதேன். ஆம் என் முகத்தை தான் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் எந்த கண்ணாடியும் என் எதிரில் இல்லை இப்போது.

விழித்த என் கண்களின் ஈரத்தை வற்றச்செய்தது பேருந்தின் ஜன்னல் ஓரம் வீசும் எதிர்காற்று. இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் வேலைக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். என் உடலில் முளைத்த சிறகுகளை எவரோ பிடுங்கி எறிவதைப் போல ஒரு வலி மிஞ்சியிருந்தது. அறைக்கதவைத் திறந்தபோது, தள்ளிய வேகத்தில் இருந்த காற்றழுத்த வேறுபாட்டினால், திறந்திருந்த ஜன்னலின் அடித்தளத்தில் இருந்து ஒரு இறகு அசைவுற்று கதவின் பின்புறம் வந்து விழுந்தது.

கள்ளம் – பானுமதி கவிதை

சுற்றிலும் மதில் எனும்
பெருஞ்சுவர் கூர் அலகுகள்
கண்ணாடிச் சிதறல்கள்
சில்லறைகளைத்
தடுக்கவோ,மரணத்தை
ஓட்டவோ தேக்குக் கதவுகள்
பறவை விதைத்ததில்
எப்படியோ ஒரு செடி
கள்ளத்தனமாய் வளர்ந்து
பூத்தும் விட்டது.
இபிகோவின் எந்தப்
பிரிவிலிதை வதைப்பது
அல்ல
துப்புரவாக
அப்புறப்படுத்தலாம்
எதையேனும் செய்
என்னைக் கேட்காதே
நான் ஒரு முக்குரங்கு.

இரவு – மதிபாலா கவிதை

நிறங்களின்
கூட்டுக் கலவையில்
துளிர்த்து கடகடவென
நம் அறையில்
உள் நுழைகிறது
இரவு.

நிறப்பிரிகையில்
இழை இழையாய்
பிரிந்து காற்றில் அலைந்து
இலவம் பஞ்சாய் சுழன்று
ஒளிந்திருக்கும் முகங்களை
மூடி மூடித் திறக்கிறது.

ஔிந்திருந்த வண்ணங்கள்
குழையக் குழைய
புதுப்புது குணங்கள் வெளியாகி
உருமாற்றங்கள் 
கண்ணெதிரே

உள்ளொளிந்த 
பக்கங்களில் 
எழுதிக் குவித்தவை 
எழுத்துகளாக

மௌனம் 
வாசிக்க.