அதிகாரநந்தி

பெரும்பாய்ச்சல்

புதிதாக குடியேறிய வீட்டில்
எங்கள் கண்கள்
ஒன்றோடு ஒன்று உறைந்த
முதல் நொடி

தத்தியாக நான் நின்றுகொண்டிருக்க
தீர்க்கமான ஒரு முறைப்பு
வாழ்நாள் முழுமைக்குமான பகை

***********************************************

மாடிப்படியின் கைப்பிடிச் சுவற்றில்
மேலே பார்த்துக் கொண்டு
பிசிரற்ற கவனத்தோடு
எதற்கோ தயாராகிக் கொண்டிருக்கிறது

ஐந்தடிக்கு அப்பால்
தான் சாத்தியப்படுத்தும் உண்மை
தெரியுமா  அந்தப் பூனைக்கு

**********************************************

என்ன சத்தம்
பூனையா பறவையா
பூனையின் பிரசவமா
அல்லது அதன் பயமா
கூடுவதற்கான சமிக்ஞையா
இந்த நள்ளிரவிலா

என்ன லட்சியம் ஒழிந்து
போய்விட்டதென்று இந்தக் கதறல்

விளக்கிட்டுத் தேடினால்
பூனையும் இல்லை
கதறலும் இல்ல

                                                                  –  அதிகாரநந்தி

விளி

இந்தப் பயணம் இன்னும்
எவ்வளவு காலம்
எவ்வளவு தூரம்

இதோ வந்துவிட்டது வெளிச்சம்
இதோ வந்துவிட்டது முடிவு

எல்லாம் தற்காலிக வெளிச்சக் கீற்றுகள்
எல்லாம் தற்காலிக நிறுத்தங்கள்

நிரந்தர முடிவொன்று வரும்போது
’ஐயோ!’ என்று விளிக்காத
உறுதிக்குத்தானா இத்தனை பாடு

– அதிகாரநந்தி

ஆடு அறியாதது

நீங்கள் வெறும் ஆடு
சிங்கமோ புலியோ இல்லை
வெறும் ஆடு
கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு ஆடு
கயிற்றின் நீளம் வரை போய்வரலாம்
இருந்த இடத்திலேயே குதிக்கலாம்
குரல்வளை நோகக் கூச்சல் போடலாம்
அதற்கு மேல் அனுமதியில்லை
வேறு வாழ்க்கை உமக்கு விதிக்கப்படவில்லை

                                                                         – அதிகாரநந்தி

பிப்ரவரி 14

நெருக்கமாக க்ஷவரம் செய்யப்பட்ட முகம்
ஏதேதோ செய்து திருத்தப்பட்ட முகம்
காற்றில் அலையும் கேசம்
புதிய வாசனை
கண்களை இம்சிக்கும் நிறத்தில்
இறுக்கமான உடை
இரண்டு வருடங்களையாவது
குறைத்துக் காண்பிக்க வேண்டிய நிர்பந்தம்
எதற்கென்றே தெரியாதொரு அசட்டுப் புன்னகை
பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது
ஆனால் இத்தனை பேரும் என்ன,
போருக்கா போகிறார்கள்?

ஏதோ, ஐம்பது  பேராவது வீழ்ந்தால் சரி.

– அதிகாரநந்தி

கிணற்றுப் பிரசங்கி

அந்தக் கிணற்றில் ஒரு தவளை இருக்கிறது

இலக்கியம் என்கிறது இசை என்கிறது
ரசனை என்கிறது கலை என்கிறது
அரசியல்கூடப் பேசுகிறது
லோகக்ஷேமத்தைப் பற்றிக்கூடச் சிந்தித்திருக்கிறது
வறுமையை ஓடஓட விரட்டுவேன் என்கிறது

எந்தப் பிரச்சனை குறித்தும் பேசும் தவ
வலிமையை அடைந்து விட்டிருக்கிறது
முந்தாநாள் நடந்த பிரசங்கத்தில்கூட
கிணற்றுள்ள தவளைகளெல்லாம் ஆச்சரியப்பட்டுப் போயின
எவ்வனொரு சிந்தனைச் செறிவென்று கொண்டாடின.

 

– அதிகாரநந்தி