அப்போது விடிந்து
கொண்டிருந்தது
நீண்ட இரவானதால் வரும் பகலை
வெகுவாக ஏங்கினாள்
அஞ்சி நடுங்க வேண்டியதில்லை இனி
கழிவறைக்குள் மௌனமாக கதறியழ இருக்காது
போலிப் பாவனைகளை
விரும்பி அணியும் அசிங்கமில்லை
ஒவ்வொரு இரவும் ஒரு பயங்கரமாகும்
விபத்தை தவிர்த்துவிடலாம்
சொற்களின் வெக்கையில் வாடி
துவண்டு போகும் கொடுங்கணங்கள்
வரவே வராது
இளங்காலைகளை விரும்பிய வண்ணம்
போர்வைக்குள் களிக்கலாம்
வரும் பகல்களை பதற்றமின்றி
கைகுலுக்கி அனுப்பிவைக்கலாம்
வீடடைந்தவளை வரவேற்றது
இருள் உறைந்த அம்மாவின் முகம்
நித்ய சைதன்யா
‘அந்தத் தேரும் வீதியும் நிறைய மாறியிருக்கின்றன’- நித்ய சைதன்யா
பதின்பருவத்தில் பித்தேறி அலைந்த அந்நாட்களைத் தேடி சொந்த ஊருக்குச் சென்றால் பதினைந்து ஆண்டு இடைவெளியில் நான் வாழ்ந்த எதுவும் இல்லை, அல்லது அவையெல்லாம் உருமாறியிருந்தன. சொந்த ஊரும் தாமிரபரணியின் தண்ணென்ற நீரும் எனக்கு அவளாக மட்டுமே தெரிந்தது. என் பயணமே அவளின் நினைவுகளை மீட்டு எடுத்துவிடும் நோக்கம் கொண்டதே. இன்று முதிரா காதல் என்றும் சிறுபிள்ளை விளையாட்டு என்றும் கருதினாலும் அக்காலத்தில் அது அப்படியல்ல. ஆறு மணிக்கு அவள் குளிக்கவருவாள் என்கிற உணர்வோடு ஒவ்வொரு இரவும் திரைவிலகத் துடித்தலையும். அதிகாலையில் குளிர்நடுங்க ஆற்றின் நீரோட்ட சலம்பலில் நானும் காதுகொடுத்து அமர்ந்திருப்பேன். நல்லரவும் சாரையும் சிலசமயம் எனை அஞ்சி விலகிச்செல்லும்.
வெகு தொலைவில் ஒரு ஊதா நிறப்புள்ளியாக அவள் வருகை தென்படும். உள்ளம் ஆனந்தக் கூத்தாடும். கைவிரல்களில் காற்றில் அலையும் ஒரு பதற்றம் தொற்றும். ஊரே என்னை உற்று நோக்கும் மனபாவனையும் இளம் இருளுக்குள் கண்காணிக்கும் விழிகள் குறித்தும் பயம் தோன்றும். அருகில் நெருங்கி வர இதயம் வாய்க்குள் வந்து நிற்கும் திகைப்பு. அவள் என்னை எப்போதும் போல ஒரு பெண்பார்வை பார்த்துச் செல்வாள். அவள் தோழிகளிடம் ஏதோ சொல்லிச் சிரிப்பாள். நதிக்கரைக்கு அவளின் வருகைக்குப்பின் சங்கீத ஞானம் சற்று கூடுதலாகத் துவங்கும். மரக்கிளைகளில் அமர்ந்துள்ள கிளிகள் உள்பட பறவைகளும் என்னுடன் பறந்தமர்ந்து பறந்து செல்லும்.
அவள் வாழ்ந்து சென்ற வீடு இன்று மல்டிலெவல் காம்பளெக்ஸாகி பளபளக்கிறது. நான்கு ரத வீதிகளில் தினமும் காலை மாலை என இரண்டு முறையும் வலம் வருவேன். மிகுதியும் காலத்தை சுமந்து நிற்கும் தேருக்குப் பின் அமர்ந்து அவள் வரும் கணங்களுக்காக காத்திருப்பேன். இன்று அந்தத் தேரும் வீதியும் நிறைய மாறியிருக்கின்றன. எனக்குள் பதிந்திருந்த தெருவும் ஊரும் எங்கு சென்றன?
நதியின் நளினத்தை வெறித்து நின்றபோது யதேச்சையாக காண நேர்ந்த மல்லிகைச் சரம் சூரியக்கதிரில் சுடர்ந்து மனதிற்குள் ஒரு திடுக்கிடலுடன் மிதந்து சென்றது. காணும் மலரெல்லாம் அவள் சூடியதன்றி வேறென்ன?
திரிதலின்பம் – நித்ய சைதன்யா
யாரிடம் என்றில்லாமல்
சதா
கதையாடி மகிழும்
நதிக்கரையோர நாணல்கள்
இரவுகளை பகைத்தஞ்சி
விடியல்களை ஏங்கி
காத்திருந்த
நீர்மையின் நடுக்கத்தில்
அன்றைய எனதின்பங்கள்
தெருக்களில் இல்லை
தேரடி வீதியில் இல்லை
கண்களால் பேசிக்களித்த
படித்துறையிலும் இல்லை
நதிக்கரையில் தேடியலைகிறேன்
நட்பிலமர்ந்த அந்நாட்களின் சுவடுகளை
நதியில் மிதந்துசெல்கின்றன
நீ சூடிய
பொன்னிற மலர்கள்
“சொல் விளையாட்டே என் கவிதை முயற்சிகள்” – நித்ய சைதன்யா
![]()
பொதுவாகச் சொல்வதென்றால் சொல் விளையாட்டே என் கவிதை முயற்சிகள். தினமும் நினைப்பேன் இன்று எப்படியாவது ஒரு சிறுகதை எழுதிவிட வேண்டும் என்று. ஆனால் எழுத பயமும் சோம்பலும் சேர்ந்து அத்துணிவை உடனே அழிக்கும். நல்ல வாசகனான என்னால் மோசமான சிறுகதையைத்தான் எழுத முடிகிறது என்கிற நடுக்கத்தினால் கவிதை போன்று ஏதாவது எழுதி்ப் பார்ப்போம் என்று முயற்சிப்பேன். பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் தடதடவென எழுதிய உடன் எதையாவது படிப்போம் என்று சோர்வு தட்டும்.
கவிதை எழுதுவதற்கான முன் தயாரிப்பென்றால் ஒரு வார்த்தை அல்லது ஒரு சொற்றொடர் கிடைத்தால் போதும். ஜெயமோகன் சொல்வதைப்போன்றுதான் என்று சொல்லத் துணிவேன். அந்த ஒரு சொற்றொடர் அளிக்கும் உத்வேகத்தில் எழுதி முடிப்பேன். வரிகளின் சந்தங்கள் மற்றும் சொற் சிக்கனம் குறித்து மட்டுமே கவனம் இருக்கும்.
பொருளின்மையின் குதுாகலமாக என் வரிகள் இருக்கவேண்டும் என்பதுதான் என் கவிதை விருப்பம். எதிர்காலத்தில் எழுதப்போகும் சிறந்த கவிதைகளுக்கான வீட்டுப்பாடம் இவை என்றும் எண்ணிக் கொள்கிறேன்.
சொல் விழுந்த வனம்
![]()
கரிய சொல் ஒன்றிலிருந்து
கிளைத்துப் பரவும் வனத்தில்
இளைப்பாறும் பறவைகளுக்கு
உண்ணத்தருகிறாய்
கனவின் ருசிதிகட்டும் கனிகளை
ஆசுவாசம் மிகுந்து
உனதன்பில் சிக்குண்டு
பறத்தலை மறந்த அச்சிறிய
உயிர்களில் நானும் ஒருவன்
அலகிலா உனது லீலைகள்
இடையறா உற்சவ தினங்களாக
நிகழ்ந்தேறி
உன்மத்தம் கொண்டலைகிறேன்
உனதன்பில் ஒளிர்ந்த
ஒற்றைச்சொல்லை கையிலேந்தி
உந்தும் கணத்தில்
உடன் வருகின்றன
உனை விழைந்த ஓராயிரம் சிறகுகள்
oOo
ஒளிப்பட உதவி – Jacob Scriftman