பீட்டர் பொங்கல்

இரு குறுங்கதைகள்- லிடியா டேவிஸ்

தலை, இதயம்

இதயம் அழுகிறது.
இதயத்துக்கு உதவ முயற்சி செய்கிறது தலை.
உள்ளதைச் சொல்கிறது தலை, இதயத்திடம் மீண்டும்:
நேசிப்பவர்களை நீ இழக்கவே செய்வாய். அனைவரும் போவார்கள். இந்தப் புவியும்தான் போகும், ஒரு நாள்.
இதயம் ஆசுவாசமடைகிறது, இதன்பின்.
ஆனால் தலையின் சொற்கள் இதயத்தின் செவிகளில் நீண்ட காலம் நீடிப்பதில்லை.
இதற்கெல்லாம் இதயம் ரொம்பப் புதுசு.
அவர்கள் எனக்கு திரும்பவும் வேண்டும், என்கிறது இதயம்.
இதயத்துக்கு இருப்பதெல்லாம் தலைதான்.
உதவி செய், தலையே. இதயத்துக்கு உதவி செய்.

அவளது கடந்த காலத்திலிருந்து வந்தவன்

என் அப்பா அல்லாத ஒருவனுடன் அம்மா சல்லாபித்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன், அவளது கடந்த காலத்திலிருந்து வந்திருக்கிறான் அவன். இந்த “ப்ரான்ஸ்” உடன் அம்மா முறையற்ற உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்லிக் கொள்கிறேன்! “ப்ரான்ஸ்” ஒரு ஐரோப்பியன். அப்பா இல்லாதபோது இவனை அம்மா முறையற்ற வகையில் சந்திக்கக்கூடாது என்று சொல்கிறேன்! ஆனால் நான் பழைய யதார்த்தத்தைப் புதிய யதார்த்தத்துடன் குழப்பிக் கொள்கிறேன்: அப்பா வீடு திரும்ப மாட்டார். அவர் இனி வெர்னான் ஹாலில்தான் இருப்பார். அம்மாவைச் சொல்வதானால், அவள் வயது தொண்ணூற்று-நான்கு. தொண்ணூற்று-நான்கு வயது பெண்ணுக்கு என்ன ஒரு முறையற்ற உறவு இருந்துவிடப் போகிறது? ஆனாலும் என் குழப்பம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்: அவளது உடலுக்கு வயதாகிவிட்டாலும், துரோகம் செய்வதற்கான அவளது ஆற்றல் இன்னும் இளமைத்துடிப்புடன் புதுக் கருக்கு கலையாமல் இருக்கிறது.

நன்றி – Lannon.org 

ஒளிப்பட உதவி – keithcroft.org

அம்மாக்கள், அப்பாக்கள், அனாதைகள்- ஹென்றி ஜேம்ஸ் கதைகளில் குடும்ப அமைப்பு

கல்ம் டோபீன் (Colm Toibin)

 

வாஷிங்க்டன் ஸ்கொயர் என்ற நாவலில் ஹென்றி ஜேம்ஸ் மிகக் கொடுமையாய் மிரட்டும் ஒரு அப்பாவைப் படைத்தார். இந்த அப்பா தன் மகளின் திருமண தேர்வு முட்டாள்தனமானது என்று நினைக்கிறார், அதைத் தடுத்து நிறுத்தி அவளது விதியைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார். மந்தமானவள் என்று தன் மகளைக் குறித்து நினைத்திருந்த டாக்டர் ஸ்டோபர் கவனிக்கத் தவறியதை நாவலின் வாசகர்கள் காணத் துவங்குகின்றனர்- காதரின் ஸ்டோபர் நுண்ணுணர்வுகள் கொண்டவள் மட்டுமல்ல, ஆழமானவள், உணர்ச்சிகரமானவள் என்றும்கூட சொல்லலாம். ஜேம்ஸ் வாழ்விலும் கலையிலும் மிக முக்கியமாகக் கருதிய ஒரு விஷயத்தை இவ்வாறாகவே அந்த நாவல் நாடகீயத்தன்மையுடன் முன்வைக்கிறது- தன் குடும்பத்தினுள் நிகழும் கட்டுப்பாடும் ஆதிக்கமும் அவரைக் கடுமையாய் பாதித்திருந்தன, பின்னர் ஒரு நாவலாசிரியராக நீண்ட காலம் இயங்கிய அவர் கற்பனை செய்யத் துவங்கிய குடும்பங்களுக்கும் அவை முக்கியமாக இருக்கின்றன.

ஹென்றி ஜேம்ஸின் சகோதரர் வில்லியம் இந்த நாவலாசிரியர் குறித்து இப்படி எழுதினார், “அவர் ஜேம்ஸ் குடும்பத்தின் குடிமகன், பிறிதொரு தேசம் இல்லாதவர்”. தம் குழந்தைப்பருவத்திலும் பதின்பருவத்திலும், ஜேம்ஸ் குழந்தைகள் இருப்பு கொள்ளாத பணக்கார தந்தையால் அட்லாண்டிக்குக்கு இருபுறமும் முன்னும் பின்னும் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் பிரான்சையும் இங்கிலாந்தையும் அறிந்து கொண்டனர், ஆனால் அமெரிக்காவில் வீடு திரும்பிய உணர்வு பெற முடிந்ததில்லை. அவர்களது தந்தைக்கு தொழில் எதுவும் இல்லாததால் அவர் ஐந்து குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதிலேயே தன் நேரத்தைச் செலவிட்டார். ஹென்றிக்கு இருபது வயதானபோது எப்படியாவது ஐரோப்பா போனால் போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அவரது துவக்ககால கடிதங்கள் பணமும் வழிகாட்டுதலும் பெற அவர் தன் பெற்றோரை நம்பியிருந்தார் என்பதை உணர்த்துகின்றன. தான் தொலைவில் இருப்பதற்கு தன் உடல்நலமின்மையைப் பயன்படுத்திக்கொண்டார் என்பதையும் அதைக் கொண்டு அவர் இரக்கமும் கவனமும் பெற்றார் என்பதையும் அறிய முடிகிறது. அவர் வாழ்நாளெல்லாம் தன் குடும்ப விவகாரங்களில் மிகுந்த அக்கறை காட்டினார், ஆனால் அவரது புனைவுகள் பலவற்றில் உள்ள உறவுகளைப் போலவே அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இருந்த உறவும் இருவகைப்பட்டதாய் இருந்தது. ஜேம்ஸ் தன் தனிமையையும், தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் மிகவும் கவனமாகப் பாதுகாத்துக் கொள்பவராய் இருந்தார்.

அவர் அநாதைகளைப் பற்றி அருமையாக எழுதினார்; தி போர்ட்ரெய்ட் ஆப் தி லேடி நாவலில் வரும் இசபெல் ஆர்ச்சர் பாத்திரம் மிக அருமையானது- அவளது அத்தை அவளை அல்பேனியில் கண்டெடுத்து ஐரோப்பா கொண்டு சென்று வளர்க்கிறாள்; தி விங்க்ஸ் ஆப் தி டவ் நாவலில் வரும் மில்லி தீலின் குடும்பத்தினர் அனைவரும் இறந்து விடுகின்றனர், அவளைச் செல்வம் நிறைந்தவளாய், ஆனால் நிராதரவாய் விட்டுச் செல்கின்றனர். இந்த இருவருமே வாழ்வில் செறிவான ஏதோ ஒன்றைத் தேடுகின்றனர்; இருவரும் புதிய அனுபவங்களை வரவேற்கின்றனர், இவர்களின் வாழ்வில் குறுக்கிட அம்மாவோ அப்பாவோ இல்லாததும் இதற்கொரு காரணமாகிறது. பெற்றோர் இல்லாததால் தம்மைத் தம் விருப்பத்திற்கேற்ப படைத்துக் கொள்கின்றனர். தனிமை மிகுந்த இவர்களின் வாழ்வு செழிக்கலாம், சிறகடித்துப் பறக்கலாம், அல்லது பிறரால் கட்டுப்படுத்தப்பட்டு தரைதட்டக்கூடும் – இவர்களது குடும்பத்தினரே இதைச் செய்பவர்களாய் இருக்கலாம்; இந்த இரு போக்குகளுக்கும் இடையிலான முரண்பாடு இவரது நாவல்களின் அலங்காரமற்ற, உச்சம் தொடும் நாடகீயத் தருணங்களை அளிக்கிறது.

வாஷிங்டன் ஸ்கொயருக்கு அடுத்து அவர் எழுதிய தி போர்ட்ரெய்ட் ஆப் எ லேடி நாவலில் ஜேம்ஸ் இரக்கமற்ற, கட்டுப்படுத்தும் தந்தை மற்றும் எளிதில் வசப்படுவது போலிருக்கும் மகள் என்ற கருப்பொருளுக்கு மீண்டும் திரும்புகிறார். பிளாரன்சுக்கு வெளியே தனிமையில் வாழ்கிறான் கில்பர்ட் ஆஸ்மண்ட். இசபெல் ஆர்ச்சரை மணமுடித்துக் கொண்டதும் தன் மகள் பான்சியை மகத்தான இடத்தில் மணமுடிக்க வேண்டும் என்று கனவு காணத் துவங்குகிறான். காதரீன் ஸ்லோபர் போலவே பான்சியும் வெளிப்பார்வைக்கு மந்தமானவளாய்த் தெரிந்தாலும் ஆழமான உணர்ச்சிகள் கொண்டவள் என்பதை நாம் மெல்ல உணர வருகிறோம். வாஷிங்டன் ஸ்கொயரில் டாக்டர் ஸ்லோபர் தன மகளைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இருண்மையாகவும் கொடூரமாகவும் பான்சியின் தந்தை அவளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதில்லை என்றாலும், அவரது பிரயத்தனங்களிலும் அதே இரக்கமின்மை இருக்கிறது, அதே பிடிவாதம் இருக்கிறது. குடும்பத்தினுள் அதிகாரம் பிரயோகிக்கப்படுவதை அதே தீவிரத்தோடு சித்தரிக்கிறார் ஜேம்ஸ்.

ஹென்றி ஜேம்ஸ் தன் அமமாவுக்கு நெருக்கமானவராக இருந்தாலும், அவரைப் பற்றி மென்மையான உணர்வுகளுடன் கடிதங்களில் எழுதினாலும், தன் புனைவுகளில் அவர் அன்னையர் குறித்து அவ்வளவாக எழுதவில்லை. சொல்லப்போனால், அவரது சிறந்த நாவல்களில் பலவற்றில் அம்மாக்களே கிடையாது. அவர்கள் அனாதைகளுக்கு, அல்லது அரை-அனாதைகளுக்கு உகந்த பாதுகாப்பான இடங்கள். வாஷிங்டன் ஸ்கொயரில் அம்மா இறந்திருக்கிறாள், பேசப்படுவதே இல்லை; தி கோல்டன் பௌலில் ஆடம் வெர்ஜரின் மனைவி, மாகியின் அம்மா, இறந்து நெடுங்காலமாகிறது; தி விங்க்ஸ் ஆப் தி லவ் நாவலில் கேட் க்ரோய் மற்றும் மில்லி தீல் இருவரும் தாயற்றவர்கள். தி டர்ன் ஆப் தி ஸ்க்ரூ நாவலில் இரு குழந்தைகளும் அனாதைகள்.

ஜேம்ஸ் அம்மாக்களின் மிகச் சிறந்தவள் தி அம்பாசடர்ஸ் நாவலின் உத்தம அன்னை திருமதி நியூசம். அவள் மகன், சாட், குடும்பச் செல்வத்தின் வாரிசு, அமெரிக்காவைவிட்டு பாரிசுக்குப் போய் விட்டான். அங்கு களியாட்டங்களில் காலம் கழிக்கிறான். திருமதி நியூசம் தன் மகன் சாட்டுக்கு நல்ல புத்தி சொல்ல லாம்பேர்ட் ஸ்ட்ரத்தரை பாரிசுக்கு அனுப்புகிறார். அவருக்கு லாம்பேர்ட்டைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது. ஆனால் ஸ்ட்ரத்தர், ஜேம்ஸ் பாத்திரங்களில் நுண்மையான ஒருவர், அவரும் பாரிசின் வசீகரங்களுக்கு பலியாகிறார். ஜேம்ஸின் தந்தை தன் குழந்தைகளை ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்லும்போது கூறிய காரணங்களில் ஒன்று, அமெரிக்காவில் அவர்களுக்கு, “புலனறிவு” கற்பிக்கப்படுவதில்லை என்ற எண்ணம்தான். இப்போது சாட், ஸ்ட்ரத்தர் இருவருமே அப்படிப்பட்ட ஒரு கல்வியில் திளைக்கின்றனர், பாவப்பட்ட திருமதி நியூசம் மட்டும் ஊரில் தங்கியிருக்கிறாள்.

அவர் நாவலில் வருவதேயில்லை என்பதில்தான் அவரது ஆற்றல் இருக்கிறது. அவர் கடிதங்கள் அனுப்புகிறார், தன் கருத்துகளை வெளிப்படுத்துகிறார், தன் ராட்சசி மகளையும் மருமகனையும்கூட பாரிஸ் அனுப்புகிறாள். ஆனால் அவள் மட்டும், பிடிவாத உறுதியோடு நிழலில் தங்கிவிடுகிறாள். திருமதி நியூசம் போன்ற ஒரு காத்திரமான பெண்ணோடு மோத விருமப் மாட்டீர்கள். ஜேம்ஸ் எழுதிய புனைவுகளில் பலவும் நேரடியாய் சுயசரிதையின் தன்மை கொண்டவையல்ல, ஆனால் அவற்றில் பல அவரது உணர்வுகளின் வடிவமும் அச்சங்களின் சாயலும் பெற்றிருக்கின்றன. அவர் ஐரோப்பாவில் நீண்ட காலம் தங்கியிருந்த காலத்தில் தான் திரும்ப அழைக்கப்படக்கூடும் என்று அஞ்சியிருக்கலாம், அல்லது, “ஜேம்ஸ் குடும்ப குடிமகன்” என்ற நிலைக்குத் திரும்புவது குறித்து நினைத்துப் பார்த்திருக்கலாம். அவரது தாயார் அவருக்கு எழுதிய கடிதங்களில் வீடு திரும்பச் சொல்லும் அழைப்பின் பல வடிவங்களை நம்மால் எளிதில் காண முடிகிறது.

ஜேம்ஸ் தன் தாயை நேசித்தார். அவரை விட்டு விலகிச் செல்லவும் விரும்பினார். ஒரு நாணயத்தின் இரு முகங்களைப் போலவும், ஒன்றையொன்று மெல்ல முட்டி நிற்பது போலவும் இந்த இரு விருப்பங்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று நெருக்கமாய் இருப்பது போலிருக்கிறது. தி அம்பாசடர்ஸ் நாவலில் தன் தாயைப் போன்ற ஒரு பாத்திரத்தைப் படைத்த ஜேம்ஸ், அவரைத் தோன்ற அனுமதிக்காமல் சிறிதாமாவது சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். அதே போல், அவர் தன் மகனைக் கட்டுப்படுத்த விரும்பியதில் ஹென்றி ஜேம்ஸ் சிறிதாவது வலியும் உணர்ந்திருக்க வேண்டும், பிடிவாதமாய்த் தொடர்ந்த அந்த விருப்பம் எப்படியும் நிறைவு கண்டிருக்கக்கூடியதுதான்.

நன்றி – புக்பாரம்

ஒளிப்பட உதவி – Robert Fay.com

மினெ மிஜுமூராவுடன் ஒரு நேர்முகம் – கொரின்னா பிகல்

– கொரின்னா பிகல் (Corinna Pichl) – 

புக்ஸ்லட் என்ற தளத்தில் வெளியான பேட்டியின் தமிழாக்கம் இது.

ஆங்கிலம் சர்வதேச மொழியாக இயங்குவது குறித்து, “ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி” என்ற புத்தகத்தில் நாவலாசிரியர் மினெ மிஜுமூரா விவாதிக்கிறார்; பிற மொழிகளின் எதிர்காலம் குறித்து அவர் கேள்வி எழுப்புகிறார்- தங்களுக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ, இருமொழிகள் பேசும் உலகில் வாழப் பழகிக்கொள்ள வேண்டிய நிலையில் பிற மொழியினர் உள்ளனர் என்கிறார். இந்தப் புத்தகத்தில் மிஜுமூரா ஜப்பானிய மொழியின் வேர்களை விவரித்து, அது மிகப்பெரும் இலக்கியங்களை வாசிப்பதற்குரிய எழுத்து மொழியாக உருவானது எப்படி என்பதைப் பேசி, அதன் இன்றைய நசிவை உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளின் நசிவுடன் தொடர்புபடுத்தி எழுதுகிறார்.

2008ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டபோது இந்தப் புத்தகம் விற்பனையில் முதலிடம் பிடித்தது, நாடெங்கும் அதன் விஷயம் குறித்த சர்ச்சைகளுக்குக் காரணமானது. புத்தகத்தின் வர்த்தக வெற்றியில் இந்தச் சர்ச்சைக்கும் பங்குண்டு. அமேரிக்கா, ஜப்பான் ஆகிய இரு தேசங்களிலும் வளர்ந்தவர், பல சர்வதேச இலக்கிய நிகழ்வுகளுக்கு அடிக்கடி அழைக்கப்படுபவர் என்ற வகையில் உலக இலக்கியத்தில் ஆங்கிலத்தின் வளரும் தாக்கம் குறித்து அவர் தனித்துவம் கொண்ட பார்வை கொண்டவராய் உள்ளார். யேல் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு இலக்கியம் படித்து முடித்ததும் ஜப்பான் சென்று, அங்கு ஜப்பானிய மொழியில் எழுதும் நாவலாசிரியராய் உள்ளார். அவரது நான்கு நாவல்களும் ஜப்பானில் இலக்கிய விருதுகள் வென்றுள்ளன, ஆனால் அவற்றில் ஒன்று மட்டுமே, எ ட்ரூ நாவல் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் மொழி பேசும் நான் இருமொழி பழகுகிறேன், அமெரிக்க இலக்கிய இதழில் எழுதுகிறேன், நீங்கள் சொல்வது போலவே ஆங்கிலத்துக்கு நெருக்கமான வேறொரு தாய்மொழி கொண்டிருப்பதன் “கலப்பட வரம்” அளிக்கும் நன்மைகளை நான் உணர்கிறேன். ஜப்பானிய மாணவர்களுக்கும், ஏன், தொலைவில் உள்ள எந்த ஒரு மொழியைச் சேர்ந்தவர்களுக்கும் ஆங்கிலம் பயில்வது மிகக் கடினமாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறீர்கள். ஆனால் நீங்கள் ஆங்கில மொழியைச் சரளமாகப் பேசுகிறீர்கள். நீங்கள் அமேரிக்கா வந்தபோது ஒரு குழந்தையாக ஆங்கிலம் கற்றுக் கொள்வது உங்களுக்கு எப்படி இருந்தது?

முதலில் ஒன்று சொல்லிவிடுகிறேன், நான் சரளமான ஆங்கிலம் பேசுவதில்லை என்றுதான் கருதுகிறேன். ஜப்பானிய மொழி ஆங்கிலத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது, ஜப்பானில் பிறந்து வளர்ந்த எவருமே ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாது. எனக்கு ஆங்கிலம் பேசுவதைவிட வாசிப்பதுதான் வசதியாக இருக்கிறது.

அதைச் சொன்னாலும், நான் மிக மெதுவாக ஆங்கிலம் கற்கக் காரணம், அதை எதிர்த்து துவக்கம் முதல் முடிவு வரை போராடினேன். என்னால் அப்படிச் செய்ய முடிந்தது என்றால் இரு காரணங்கள் இருந்தன. ஒன்று, என் பெற்றோர் அமெரிக்காவுக்குக் குடியேறப் போகவில்லை, எப்படியும் ஒரு நாள் ஜப்பான் திரும்பிவிடுவோம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது. இரண்டாவதாக, தங்கள் பெண்கள் நல்லபடியாக திருமணம் செய்து கொண்டால் போதும் என்று எதிர்பார்த்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என் பெற்றோர். நாங்கள் பள்ளியில் எப்படி படித்தோம் என்பது பற்றி அவர்கள் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை.

ஆனால் ஆங்கிலம் அறியாதிருந்தது என் பள்ளி நாட்களில் மிகவும் கஷ்டமாக இருந்தது- அது வடுக்கள் விட்டுச் செல்லும் வாதையாக இருந்தது என்றுகூட சொல்லலாம். ஜப்பானிய மொழி பேசிக்கொண்டிருக்கும் வீட்டில் இயல்பாக இருந்த நான் வீட்டைவிட்டு வெளியே போனதுமே தனிமையும் நிராதரவாய் இருப்பதாகவும் உணர்ந்தேன். ஆனால் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முயற்சி செய்வதற்கு பதிலாக நான் அதைவிட்டு விலகினேன். இந்த அளவுக்கு நான் ஆங்கிலம் கற்றுக்கொண்டதே அதிசயம்தான்.

நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள மறுக்க காரணம் என்ன?

பல விஷயங்கள் வேறு பாதிரி இருந்திருந்தால் நான் இன்னும் சுலபமாக ஆங்கிலம் கற்றுக் கொண்டிருப்பேன். உதார்ணத்துக்கு நான் ஆசியனாக இல்லாமல் ஐரோப்பியனாக இருந்திருந்தால் சுலபமாக இருந்திருக்கும்- 1960களில் ஈஸ்ட் கோஸ்ட்டில் மிகச் சில ஆசியர்களே இருந்தார்கள், நான் எப்போதும் அந்நியமாகவே உணர்ந்தேன். அல்லது நான் இன்னும் சிறிய வயதில் இங்கு வந்திருக்க வேண்டும், அந்த அளவுக்கு ஆர்வமாக நாவல்களைப் படிப்பவளாய் இருந்திருக்கக் கூடாது. அல்லது, ஜப்பானிய நவீன இலக்கியத்தில் அத்தனை அதிக அளவில் புத்தகங்கள் இருந்திருக்கக் கூடாது, என்னைப் போன்ற ஒரு பெண் தன்னை இழப்பதற்குரிய புத்தகங்கள், மிகவும் மதிக்கப்படும் புத்தகங்கள் ஜப்பானிய மொழியில் அந்த அளவுக்கு அதிகமாக இருந்திருக்கக்கூடாது. அல்லது, ஆங்கில யுகம் பிறந்துவிட்டது என்று உணரும் சாமர்த்தியம் எனக்கு இருந்திருக்கலாம்! ஆனால், நான் எவ்வளவுக்கு எவ்வளவு ஜப்பானிய மொழியில் வாசிதேனோ, அந்த அளவுக்கு அதன் இலக்கியத்தை நேசித்தேன், அந்த அளவுக்கு ஆங்கில வாசிப்பின் வசீகரம் குறைந்தது- ஆங்கில மொழியில் பேசுவது பற்றிச் சொல்லவே வேண்டாம்.

ஆங்கில மொழியில் இல்லாதது எதை ஜப்பானிய மொழியில் கண்டீர்கள் என்று சொல்ல முடியுமா?

இது கடினமான கேள்வி. நான் ஜப்பானிய மொழியில் மட்டும் எதையோ கண்டேன் என்பதால் அதில் எழுத ஆரம்பித்தேன் என்று சொல்ல முடியாது. ஜப்பானிய மொழியில் என்னை மிகவும் வசீகரிக்கும் விஷயம் அது மூன்று வெவ்வேறு வகை குறிகளைத் தன் எழுத்தில் பயன்படுத்துகிறது என்பதுதான்: சீன எழுத்துகள், அவை பெரும்பாலும் வரைவெழுத்துகளாய் (ஐடியோகிராம்களாக) செயல்படுகின்றன, தவிர இரு வெவ்வேறு வகை ஒலியெழுத்துகளை (ஃபோனோகிராம்களை) பயன்படுத்திக கொள்கிறது. இதனால் ஜப்பானிய மொழியின் எழுத்துப்பிரதி மிகச்செறிவாக இருக்கிறது, அதை வேறொரு மொழிக்குக் கொண்டு செல்லவே முடியாது. இதை விளக்க முயற்சி செய்கிறேன், பாருங்கள்.

ஒரு பூந்தோட்டத்தை விவரிக்கும் பக்கம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மலர்களின் பெயர்கள் உங்கள் கண்முன் தோன்றுகின்றன. அவை அனைத்தும் சிக்கலான சீன எழுத்துகளில் இருக்கின்றன, வடிவத்தில் எளிய ஒலியெழுத்துகளிடையே இவை தனித்துத் தெரிகின்றன. வரைவெழுத்துகளில் எழுதப்பட்ட மலர்களின் பெயர்களுக்கு கவித்துவ தொடர்பு உண்டு என்பதால், அந்தப் பக்கத்தைப் பார்க்கும்போதே மணம் நிறைந்த அழகிய மலர்கள் நிறைந்த தோட்டம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு வருகிறது.

ஜப்பானிய மொழியில் எழுதுவதற்கு மாறாக, நடைமுறை காரணங்களுக்காக ஆங்கிலத்தில் எழுதுவது குறித்து நினைத்துப் பார்த்ததுண்டா?

இல்லை. நான் பத்திரிக்கைத்துறையிலோ கல்வித்துறையிலோ இருந்திருந்தால் ஆங்கில மொழியில் எழுதுவதில் அர்த்தம் இருக்கும்- நாம் சொல்வது எத்தனை பேரைச் சென்றடைய முடியுமோ அத்தனை பேரைச் சென்றடையும். அந்த வகையில் “ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி” ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. இந்தப் புத்தகத்தில் நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்பினேன். ஆனால் நாவல்கள் வேறு வகை. நான் என்ன எழுதுகிறேன் என்பதை நான் எப்படி எழுதுகிறேன் என்பதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. யேட்ஸ் சொன்னதுபோல், “நடனமங்கையை நடனத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியுமா?”

நீங்கள் பிரெஞ்சு இலக்கியமும் படித்திருக்கிறீர்கள். பிரெஞ்சு மொழியில் எழுதும் ஆசை ஏற்பட்டிருக்கிறதா?

ஐயோ, இல்லவே இல்லை. எனக்கு அந்த மொழியைப் பிடிக்கும், ஆனால் அப்படி ஒரு ஆசை வரவில்லை. தங்கள் மொழி தவிர வேற்றுமொழியில் எழுதும் எழுத்தாளர்கள் இருக்கவே செய்கின்றனர், நான் பிரெஞ்சு மொழியில் எழுதுவது சாத்தியம் என்று சொல்ல முடியும். ஆனால் அதற்கு நான் இன்னும் நூறு மடங்கு அதிகம் பிரெஞ்சு இலக்கியம் வாசித்திருக்க வேண்டும், பிரான்ஸ் போய் வாழ வேண்டியுமிருக்கலாம். ஆனால் ஜப்பானிய மொழியில் எழுதுவதை மட்டுமே நான் எப்போதும் விரும்பினேன்.

மொழி சார்ந்த மெய்ம்மை கறித்து பேசுகிறீர்கள்- புத்தகம் படிக்க வேண்டும், அதன் சுருக்கத்தைப் படித்து பிரயோசனமில்லை என்பது போன்ற விஷயம் அது என்கிறீர்கள். ஆனால் அப்படிப்பட்ட உண்மைகளை எந்த அளவுக்கு மொழிபெயர்க்க முடியும் என்று சந்தேகமாக இருக்கிறது. நாம் இன்றும் வாசிக்கும் புத்தகங்கள் என்று அரிஸ்டாட்டில் எழுதியதைச் சொல்கிறீர்கள், ஆனால் அவர் பெரும்பாலும் மொழிபெயர்ப்பில்தான் வாசிக்கப்படுகிறார்.

கல்வித்துறையில் எழுதப்படுவதை பாடநூல்களாக மொழிமாற்றம் செய்ய முடியும். ஆனால் ஓர் இலக்கியப் படைப்பை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதை மூல மொழியில்தான் வாசித்தாக வேண்டும். அதில் பலர் எழுதுவதும் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட இயல்பு கொண்டவையாக இருக்கின்றன. அரிஸ்டாட்டில் எழுதியது அப்படிப்பட்டது. அவர் குறித்து பேச, அவர் எழுத்தைப் பேசியாக வேண்டும், ஆனால் கிரேக்க கல்வித்துறையில் இருந்தால்தான் அவரை அந்த மொழியிலேயே வாசிப்பீர்கள். பொதுவாக தம் மொழியில் வாசிப்பதுதான் வழக்கம்.

இங்கும் ஆங்கிலம் சர்வதேச மொழியாக இருப்பதால் அரிஸ்டாட்டிலின் ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கு உயர்மதிப்பு இருக்கிறது. நீங்கள் அரிஸ்டாட்டில் பற்றி எழுத விரும்புகிறீர்கள், அதை எவ்வளவு பேர் படிக்க முடியுமோ அவ்வளவு பேர் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் ஆங்கிலத்தில் எழுதவே வாய்ப்பு அதிகம். நீங்கள் ஆங்கிலத்தில் மேற்கோள் காட்டப்போவதால் அவர் குறித்த ஆங்கில நூல்கள்தான் வாசிப்பீர்கள். துவக்கத்தில் பிற மொழிபெயர்ப்புகளைக் காட்டிலும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் அரிஸ்டாட்டிலின் உண்மையைச் சரியாகச் சொல்லிவிடப் போவதில்லை, ஆனால் காலப்போக்கில் பிறவற்றைவிட ஆங்கில மொழிபெயர்ப்புகளே சிறந்தவையாக வளர்ச்சிபெற வாய்ப்பிருக்கிறது- அதிகமான அளவில் ஆங்கிலத்தில் அரிஸ்டாட்டில் வாசித்து அவரை மேற்கோள் காட்டும்போது மேலும் சிறந்த மொழிபெயர்ப்புகள் அளிப்பதற்கான போட்டியும் அதிகரிக்கிறது. ஒரு நாள் குறிப்பிட்ட ஒரு மொழிபெயர்ப்பு மிகச் சிறந்தது என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுவே உலகெங்கும் வாசிக்கப்பட்டு மேற்கோள் காட்டப்படும் நிலை உருவாகிறது.

சர்வதேச நூலகம் குறித்த உற்சாகத்தை வெளிப்படுத்திய ஒரு கட்டுரையில் உள்ள மடமை குறித்து எழுதியிருந்தீர்கள். எழுதப்பட்ட அத்தனை பிரதிகளையும் கூகுள் நூலகச் செயல்திட்டம் அனைவரும் வாசிக்கக் கொண்டு செல்கிறது என்றாலும் ஆங்கில நூலகங்கள் மட்டும்தான் உலகளாவியதாக இருக்கும், பிற நூலகங்கள் மிகச் சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படும். ஜப்பானிய இலக்கியம் மொழிபெயர்ப்பு வழியாக உலகளாவிய நூலகத்தில் நுழைவது குறித்து உங்களுக்கு ஆறுதலாக இருக்கிறதா?

ஜப்பானிய இலக்கியம் ஆங்கில நூலகத்தினுள் புகுவதைச் சாத்தியப்படுத்தும் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன்- ஆங்கில நூலகம் மட்டுமே உண்மையான ஒரே உலகளாவிய நூலகம். இந்த மொழ்பெயர்ப்புகள் இன்னும் சில காலம் தொடரும் என்ற எண்ணம் ஆறுதலாகவே இருக்கறது, மேலும் சிறந்த மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து வரவிருக்கின்றன.

ஆனால் என்னைப் போன்ற ஒருத்திக்கு, ஜப்பானிய இலக்கியம், புதியதும் பழையதும், அனைத்துமே என்றாவது ஒரு நாள் இணையத்தில் பாதுகாக்கப்படும் என்ற எண்ணமே அதைவிட அதிக ஆறுதலாய் இருக்கிறது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்த, மகிழ்ச்சியளிக்கும் புத்தகங்கள் ஜப்பானிய மொழி வாசிப்பவர்களுக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும், அவர்கள் எண்ணிக்கையளவில் எவ்வளவு குறைவாய் இருப்பினும். ஒருவேளை ஜப்பானிய தீவுகள் அனைத்தும் ஓர் எரிமலைக் குமுறலில் உடைந்து சிதறினாலும் மானுட இனம் ஜப்பானிய மொழியில் வாசிக்க இவை கிடைக்கும், எப்போதும் யாரோ ஒரு சில கிறுக்கர்கள் அவற்றால் வசீகரிக்கப்பட்டு அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டுதான் இருப்பார்கள். எனக்கு நன்னம்பிக்கை அதிகம் கிடையாது, ஆனால் மனிதர்களின் கிறுக்குத்தனத்தில் நம்பிக்கை இருக்கிறது!

ஆங்கில வாக்கியங்களுக்கு எழுவாய் (சப்ஜெக்ட்) தேவையில்லை என்று நீங்கள் சொன்னது சுவையாக இருந்தது. ஜப்பானிய மக்கள் ஒருவரோடொருவர் உறவாடுவதிலும் பாலினம் குறித்து உணர்வதிலும் இதனால் மிகுந்த தாக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆமாம், ஜப்பானிய வாக்கியங்களின் இலக்கண அமைப்பில் எழுவாய் தேவையில்லை; சூழமைவைக் கொண்டே எழுவாய் என்ன என்று ஊகித்துவிடலாம். மனநிலையை வெளிப்படுத்த எழுவாய் இல்லாத வாக்கியங்கள் உதவுகின்றன. ஆனந்தம் என்ற சொல்லின் எழுவாய் குறிப்பாய்ச் சொல்லப்படலாம் அல்லது பொதுவாய்ச் சொல்லப்படலாம், அது அந்தச் சொல் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொருத்தது. யார் ஆனந்தமாய் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, உன்னைச் சுற்றியுள்ள எல்லாம் ஆனந்தமாய் இருப்பதாய் தெரிகின்றன என்றால், “ஆனந்தம்” என்று மட்டும் எழுதினால் போதும். ஆங்கிலத்திலும் இதைச் செய்யும் சுதந்திரம் எடுத்துக் கொள்கிறோம், ஆனால் ஜப்பானிய மொழியில் இது பிழையற்ற முழுமையான வாக்கியம்.

அதேபோல் பொதுவாக ஜப்பானிய மொழி ‘நான்’ என்ற சொல்லையும் தவிர்க்கிறது. ஆனால் இதில் சுவாரசியமான் விஷயம் என்னவென்றால் நீ யாரைப் பார்த்து பேசுகிறாயோ, நீ எப்படிப்பட்ட உறவு பூண விரும்புகிறாயோ, அதற்குத் தகுந்தாற்போல் உன்னை நீ எப்படி விவரித்துக் கொள்கிறாய் என்பது மாறுகிறது சகஜமாகப் பேசும்போதும், நீ ஆணா பெண்ணா என்பதைப் பொருத்தும் இந்த ‘நான்’ மாறுகிறது. இதனால்தான் ஜப்பானிய நாவல்களில் சொன்னான், சொன்னாள் என்ற அடையாளம் இருப்பதில்லை. நான் என்ற சொல்லுக்கு இணையான பத்து பன்னிரெண்டு சொற்களை எளிதாகச் சொல்ல முடியும். அதே போல்தான் நீ என்ற சொல்லும். இவையெல்லாம் மேற்கத்திய மொழி பேசுபவர்களுக்கு குழப்பமாக இருக்கும்.

வெவ்வேறு மொழிகளுக்கு வெவ்வேறு இயல்புகள் இருப்பதாகச் சொல்லப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உதாரணமாக, தத்துவம் பேசச் சிறந்த மொழி என்று ஜெர்மன் மொழி சொல்லப்படுகிறது, அது தர்க்கம் மற்றும் பகுப்பாய்வுக்கான கட்டமைப்பு கொண்டிருக்கிறது. மொழி சார்ந்த உண்மைகள் என்று நீங்கள் சொல்வது இது போன்ற ஒன்றா?

ஆமாம், நிச்சயம் அது போன்றுதான் நினைக்கிறேன். இது பயங்கரமான பொதுமைப்படுத்தல் போல் தெரியும், மனிதன் இந்த உலகை எப்படி புரிந்து கொள்கிறான் என்பது மேற்கத்திய மொழிகளில் உள்ளது போல் அவ்வளவு தீர்மானமாக- அவ்வளவு தர்க்கப்பூர்வமான தீர்மானத்தன்மையுடன்- வெளிப்பட வேண்டிய தேவையில்லை என்பதை ஜப்பானிய மொழி எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. ஜப்பானிய மொழியிலும் அத்தகைய தர்க்கத்துக்கும் பகுப்பாய்வுக்கும் இடமிருக்கிறது, ஆனால் அப்படியிருக்க வேண்டிய பிழைப்பு அதற்கில்லை என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம், நாம் இன்று புழங்கும் ஜப்பானிய மொழி அப்படியில்லை என்றாவது சொல்லலாம். இங்கு நிகழ் காலத்தைக் கடந்த காலத்துடன் இணைக்க முடியும். ஒன்று ஒருமையா பன்மையா என்று சொல்ல வேண்டியதில்லை. வாக்கியங்கள் அடுத்தடுத்து ஆனால், மேலும், ஆகவே என்று தொடர்பு சேர்த்துக் கொண்டு ஒன்றையொன்று தொடர வேண்டியதில்லை. அது போன்ற இணைப்புச் சொற்கள் முக்கியமில்லை. பகுத்தறிவுச் சிந்தனையைத் தடை செய்கிறது என்று பல ஜப்பானியர்கள் தங்கள் மொழி குறித்து குறைபட்டுக் கொள்வதுண்டு. நாம் பயன்படுத்தும் மொழிக்கு ஏற்ப உலகைப் பல வகைகளில் புரிந்து கொள்ள முடியும் என்று நான் உணர்ந்ததும் எனக்கு அது ஒரு பெரிய விடுதலை உணர்வு அளித்தது. நல்ல வழி, தவறான வழி என்றெல்லாம் கிடையாது.

மேலை நாடுகளுக்கு வெளியே உள்ள மொழிகளைப் பேசுபவர்கள் ஆங்கிலம் கற்கச் சிரமப்படுவது அவர்கள் மொழிகளை மிகையான ஆங்கில தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது என்று நினைக்கிறேன். ஜப்பானிய மொழி பேசும் ஒருவர் ஆங்கிலத்தைச் சரளமாய் பேசுவது மிகக் கடினம் என்று நீங்களே சொன்னீர்கள். ஜப்பானிய மொழிக்கு இறக்குமதி செய்யப்படும் அதிக எண்ணிக்கையிலான ஆங்கிலச் சொற்கள் பற்றி சொன்னீர்கள். அதிலும் குறிப்பாக விளம்பரத் துறையும் தொலைகாட்சிகளும் இதைச் செய்வதாய் குறிப்பிட்டீர்கள். உண்மையில் ஆங்காங்கே ஒரு சில ஆங்கிலச் சொற்கள் ஒரு மொழியில் புழக்கத்தில் இருக்கிறது என்பது அந்த மொழியை எந்த அளவுக்கு பாதித்துவிட முடியும் என்று சந்தேகமாக இருக்கிறது.

கடந்த காலத்தில் ஜப்பானிய மொழி தாராளமாக சீன மொழிச் சொற்களைக் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது. சீன எழுத்துகள் வடிவ உருவங்களாக (ஐடியோகிராம்) வேலை செய்வதால் இது அருமையாக பயன்பட்டது. இன்னும் துல்லியமாகச் சொன்னால் ஜப்பானியர்கள் தங்களுக்கே உரிய ஒலி எழுத்துகளை வடிவமைத்துக் கொண்டதும் சீன மொழி எழுத்துகள் அவ்வாறு இயங்கின. ஒவ்வொரு சீன எழுத்துக்கும் ஒரு அர்த்தம் உண்டு, அந்த எழுத்துகளின் அர்த்தம் என்ன என்று உங்களுக்கு புரிந்து விட்டது என்றால் சீன மொழியில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம், மக்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆனால் ஐரோப்பிய சொற்களைக் கடன் பெறும்போது அப்படி நடப்பதில்லை. இன்று ஜப்பானிய மக்கள் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையில் ஆங்கிலச் சொற்களைப் புழக்கத்துக்கு எடுத்துக் கொள்கிறார்கள், நேரடியாகவே அவற்றை ஜப்பானிய மொழி வாக்கியங்களில் இணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்கள் அகரமுதலி பயன்படுத்துவது போல் அல்லாமல் ஜப்பானியர்கள் ஒலி எழுத்துகள் (போனோகிராம்) பயன்படுத்துகின்றனர். எனவே ஆங்கிலச் சொற்களின் ஒலியை எழுத குத்துமதிப்பான உபயோகத்துக்கு தம் மொழியைக் கொண்டு செல்லவேண்டும். இந்தச் சொற்களின் அர்த்தம் என்னவென்றுகூட பலருக்குத் தெரிவதில்லை. ஐடி துறையில் ஆங்கிலச் சொற்களை இரவல் வாங்குவது பயனளிக்கிறது ஏறனு நினைக்கிறேன், அங்கு எல்லாரும் இருமொழி தெரிந்தவர்களாக இருக்கின்றனர். மற்றபடி இதுவெல்லாம் மூடத்தனம், நம்மைக் கேவலப்படுத்தும் விஷயம்.

தங்கள் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களைவிட ஆங்கிலம் பேசும் உலகிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு கூடுதல் மதிப்பு அளிக்கும்போது, அதாவது, தம் கலாச்சாரத்தைவிட ஆங்கிலம் வழி இறக்குமதியாகும் கலாச்சாரத்தை மதிக்கத் துவங்கும்போது மொழியின் வீழ்ச்சி துவங்குகிறது என்று சொல்கிறீர்கள். முன்னர் காலனிய காலகட்டத்தில் இருந்தது போல், அனுபவத்தில் தம் பண்பாட்டைத் தாழ்ந்ததாகக் கருதி அதைக் கைவிடுதல் நிகழ்கிறது. நீங்களே உங்கள் வளர்பருவத்தில் ஆங்கிலத்தில் உள்ள அனைத்துக்கும் எதிராகப் போராடியிருக்கிறீர்கள். ஜப்பானில் அதுபோல் ஆங்கிலத்தை எதிர்க்கக்கூடியவர்கள் இருக்கிறார்களா? ஆங்கிலத்தின் மேலாதிக்கத்துக்கு எதிராக ஒரு கலாசார நகர்வு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?

தெரியவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜப்பானிய மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்வதே பிற்போக்குத்தன, தேசியவாதச் செயலாகி விட்டது. ஆனால் இந்தப் போக்கில் மெல்ல ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்று உணர்கிறேன். பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வு வந்திருப்பதையும், தங்கள் மொழியை புதிதாய் பார்க்க வேண்டும் என்றும் அதை இன்னும் கொஞ்சம் மதிக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைப்பதைக் காண முடிகிறது. இங்கிருந்து எங்கே போகிறோம் என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லைதான்.

இன்றுள்ள பல்வேறு மொழிகளைக் காக்க உலக அளவில் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஜப்பானிய மொழி பற்றி பேசுகிறீர்கள், தேசிய மொழியாகும் அதிர்ஷ்டம் அதற்கு இருக்கிறது. ஆனால் சிறிய மொழிகள், வலுவான தேசிய அமைப்புடன் தொடர்புபடுத்தப்படாத மொழிகள் என்ன செய்ய முடியும்?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது கடினம். பன்மொழிப் பண்பாட்டைக் காப்பாற்ற ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் எடுத்துள்ள நிறுவன நடவடிக்கைகள் முக்கியமான முன்னுதாரணமாய் இருக்கின்றன, நடைமுறையில் ஆங்கிலம் பொதுமொழியாய் இருப்பினும் அது போன்ற நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். 430,000 பேர் பேசும் மால்டீஸ் மொழியும் 130,000 பேர் பேசும் ஐரிஷ் மொழியும் அங்கு பிரதிநிதித்துவம் கொண்டிருக்கின்றன. ஆனால் வலுவான தேச அமைப்பு சாராத சிறு மொழிகள் பிழைப்பது கடினம்தான். பலவும் விழுந்து அழியும், அதிலும் குறிப்பாக எழுத்து வடிவம் இல்லாத மொழிகள் விரைவில் அழியக்கூடும். ஆனால் பாஸ்க் போன்ற ஒரு மொழியைப் பாருங்கள், அந்த மொழி பேசுபவர்கள் அதிகமில்லை, 720,000 பேர்தான், அது ஒரு சுதந்திர தேசத்தின் மொழியாக இருக்கும் வாய்ப்பே இல்லாமல் போகலாம், ஆனால் அது உயிர்ப்புள்ள மொழியாகவே இருக்கும், ஏனெனில் அதன் மக்கள் அதில் அவ்வளவு ஈடுபாடு கொண்டிருக்கின்றனர்.

உங்கள் புத்தகம் சுவாரசியமாக இருக்கக் காரணம் ஆங்கிலம் என் மொழியின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றி என்னைச் சிந்திக்கச் செய்தது. உங்கள் புத்தகம் ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு அளிக்கும் செய்தி என்ன?

ஆங்கிலத்தை தாய் மொழியாய் கொண்டவர்கள், தங்கள் மொழியைப் பயன்படுத்தும்போது அவர்கள் உலகப் பொதுமொழியைப் பயன்படுத்துகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமே உரிய பெருமை. இந்தப் பெருமையில் உள்ள பேதைமை கொஞ்சம் நீங்கினாலும், இந்தப் புத்தகத்தின் நோக்கம் நிறைவேற்றப்பட்டதாகும்.

நன்றி – Bookslut

ஒளிப்பட உதவி – Pagina12

போதுமான விபரங்கள் தெரியவில்லை – பாட்ஜட் பவல்

– பாட்ஜட் பவல் (Padgett Powell) – 

நாம் அறிந்து கொள்ள விரும்பும் சிலர் இருக்கின்றனர், அறிந்து கொள்ள விரும்பாத சிலர் இருக்கின்றனர், அறிந்துகொள்ள விரும்பக்கூடிய சிலர் இருக்கின்றனர், நாம் ஒரு வேளை சந்திக்க நேர்ந்தால் அறிந்து கொள்ள விரும்பாத சிலரும் இருக்கின்றனர். சிலருக்கு பலரைத் தெரிந்திருக்கிறது, பலருக்குச் சிலரைத் தெரிந்திருக்கிறது, சிலருக்கு சிலரே தெரிந்திருக்கிறது. கடைசியில் பார்த்தால், எல்லாரையும் தெரிந்து கொள்ளும் விருப்பம் இருக்கிறதா அல்லது யாரையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் விருப்பம் இருக்கிறதா என்ற உந்துதலில்தான் வந்து முடிகிறது. இதை ஒரு கொதிவடி நெடுங்களன் என்று சொல்லலாம். மேற்பரப்பில் எல்லாரையும் அறிந்திருக்கும் உற்சாகிகள் இருக்கின்றனர், அடியில் தனிமை விரும்பிகள் இருக்கின்றனர். மேற்பரப்பில் புனிதர்கள், அடியில் கொலைகாரர்கள். சில கொலைகாரர்களுக்கு ஒரு கொலை செய்தாலே போதுமானதாக இருக்கும், சிலர் நூற்றுக்கணக்கில் அல்லது ஆயிரக்கணக்கில் கொல்ல விரும்புகிறார்கள். அனைத்துக்கும் அடிமட்டத்தில் தன்னைத் தவிர வேறு யாரையும் அறியாதவன் இருக்கிறான், அவன் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறான்.

அவனிடம் ஒரு ஜோடி காலணிகள் இருக்கின்றன, ஒரு காலத்தில் நாய் இருந்தது. அந்த நாய் கிண்ணியில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை விரும்பியது, அப்பழுக்கற்ற வகையில் அது வீட்டினுள் நடந்து கொண்டதும் தன்னைச் சுகாதாரமாக வைத்துக் கொண்டதும் ஒரு கார் அதை அடித்தபின் சீர்குலைந்துப் போயிற்று. அதன்பின் அது வெயிலில் இருந்த காரில் ஒரு விபத்தாய் பூட்டி வைக்கப்பட்டபின் சூடு தாங்க முடியாமல் செத்துப் போனதும் ஒரு ஆள் கார் சீட்டுக்கடியில் இருந்த சீட் ஸ்ப்ரிங்குகளில் அசாத்தியமான வகையில் கழுத்துப்பட்டை சிக்கிக் கொண்டிருந்த அந்த நாயைக் கண்டெடுத்தான். அவனது வயது பன்னிரெண்டு இருக்கலாம். அந்த நாய், வழமையாய்ச் சொல்லப்படுவதுபோல், கதகதப்பாய் இல்லை; அது அபாரமாய் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஆள், அல்லது அந்தப் பையன், சீட்டுக்கடியிலிருந்து அதை விடுவித்தபின் கழுத்துப்பட்டையைப் பிடித்து வெளியே இழுத்து பசுமையாய் இருந்த புல்வெளியில் குளிரப் போட்டான். அவன் உள்ளே போய் அம்மாவிடமும் அப்பாவிடமும் மேக் செத்துப் போய் விட்டான் என்று சொன்னான்.

மேக் நூல் நூலாய் நீண்டிருந்த முடி கொண்ட டெர்ரியர், புல்லில் குளிரப் போடப்பட்டிருந்தவன் பார்க்க அழகாயிருந்தான். விபத்துக்குப்பின் அவனது வாழ்க்கை கடினமாக இருந்திருந்தது: இடுப்பில் பின் வைத்திருந்தார்கள்; வராந்தாவில் பேண்டு விடுவான்; கிண்ணியில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதில் முன்போல் அவனுக்குக் களிப்பில்லை. புழக்கடையில் நிலத்தடி கோட்டை ஒன்று கட்டும் முனைப்பில் அந்தப் பையன் தோண்டத் துவங்கியிருந்த குழியைப் புதுப்பித்து அப்பா மேக்கை அதில் புதைத்தார். பின்னர் புத்தகம் படிப்பதற்கான கண்ணாடி காணாமல் போனதும் அது அவரது பாக்கெட்டிலிருந்து நழுவி மேக்கின் கல்லறையில் விழுந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கப்பட்டு, மேக்கைத் தோண்டியெடுத்து கண்ணாடியைத் தேடும்படி அந்தப் பையனிடம் அவனது அம்மா சொன்னதும். என்ன? என்று அந்தப் பையன் கேட்டபின், என்ன இருந்தாலும் அது அவ்வளவு சரியான ஐடியாவாக இல்லை போல என்று பரிந்துரைத்த அம்மா அவன் கேட்பதற்கு முன்னதாகவே நாயை மீண்டும் அந்தப் பையன் தோண்டியெடுக்க வேண்டும் என்ற தன் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டாள்; பின்னர் அந்தப் பையன் நிச்சயம் தான் இப்படிக் கேட்டிருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டான்- ஏன் அப்பாவுக்கு பதில் நான் அதைச் செய்ய வேண்டும்- அவர் மட்டுமே நாயைப் புதைத்திருந்தார், அவர் மட்டுமே கைவிடப்பட்ட அந்தப் பையனின் கோட்டை விட்டு வைத்திருந்த குழியைத் தேர்ந்தெடுத்தார்- ஏன் அப்பாவல்ல, அவன்தான் நாயைத் தோண்டியெடுக்க வேண்டும், அதுவும் அவனுடையதல்ல, அப்பாவின் கண்ணாடியைத் தேட. சால்மன் மீன் வண்ணம் கொண்ட ரெனால்ட் காரில் சிக்கிக் கொண்டு செத்திருந்தது அந்த நாய். அதை உள்ளே வைத்து பூட்டியது யார் என்று தெரியவில்லை.

பிற விபரங்களும் போதுமான அளவில் தெரியவில்லை. வயதாக வயதாக, குறைவதற்கு மாறாய், நம் அச்சம் அல்லது துயரம், ஏன் கூடுகிறது என்பதும் தெரியவில்லை.

நன்றி – Okey Panky

மொழிகளை மாற்றிக் கொள்ளுதல் – ஐடன் டாய்ல்

 – ஐடன்  டாய்ல் (Aidan Doyle) – 

ஐடன் டாயல் blog.oup.com என்ற தளத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

மொழிமரணத்தைப் பற்றியும் மொழியின் புனரமைப்பைப் பற்றியும் பேசும்போது மீண்டும் மீண்டும் இரு மொழிகள் குறிப்பிடப்படுகின்றன- ஐரிஷ் மற்றும் ஹீப்ரூ மொழிகள். ஐரிஷ் மொழி பற்றிய விமரிசனங்களில் கண்டனத்தின் மெல்லிய காட்டம் சேர்ந்து கொள்கிறது. ஆங்கிலத்துக்கு ஆதரவாக அண்மையில்தான் அது ஐரிஷ் மக்களில் பெரும்பாலானோரால் கைவிடப்பட்டது- எனவே தங்கள் பாரம்பரியத்தை நிராகரித்த மக்களுக்கு உதாரணமாக ஐரிஷ் மொழி சுட்டப்படுகிறது. மாறாய், மொழியுணர்வின் நன்னடத்தைக்கு முன்னுதாரணமாய் ஹீப்ரூ மொழி சுட்டப்படுகிறது. அதன் மக்கள் அதை நிராகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இறந்து கிடந்த மொழி புத்துயிர்ப்பு பெற்று இன்று செழித்துக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் முன்னுதாரணம் காட்டப்படும்போது ஐரிஷ் மக்கள் தங்களைச் சற்றே கையாலாகாதவர்கள் போல் உணர்கின்றனர். “நீங்கள் ஏன் இஸ்ரேலியர்கள் போலிருக்கக் கூடாது?” என்று எங்களை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள், பிடிவாதக்கார குழந்தையைப் பார்த்து வெறுத்துப்போன பெற்றோர் கேட்பதுபோல். 800 ஆண்டுகால காலனியாதிக்கம் என்று எதையோ முனகியபடி தலையைத் தொங்கப் போட்டுக் கொள்வதுதான் பொதுவாக எங்கள் வழக்கம், அல்லது ஜேம்ஸ் ஜாய்சம் யூடூவும் பாதி ஐரிஷ்காரர்கள் என்று நினைவுபடுத்துகிறோம். இப்போது நான் வேறொரு பதில் அளிக்க முயற்சி செய்யப் போகிறேன்.

வாழ்க்கையைப் போல் மொழியிலும் குறிப்பிட்ட ஒரு நெறி காலாவதியாக நேர்கிறது. இப்படிச் சொல்லும்போது மொழிக்கு நடைமுறைப் பயன்பாடு இல்லை என்று சொல்லவில்லை. முழுமையாய் மொழி சார்ந்து பார்த்தால் எந்த மொழியும் வேறொன்றைவிட கூடுதலாகவோ குறைவாகவோ பயன்பாடு கொண்டதல்ல. லத்தின் மொழி எண்களை எழுதுவது நமக்குச் சிக்கலாக இருப்பது போல் தெரிகிறது, ஆனால் ஐரோப்பாவின் பாதியை வென்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது போதுமானதாக இருந்தது.

ஐரிஷ் மொழி கற்பிப்பவன், ஐரிஷ் மொழியில் ஆய்வு செய்பவன் என்ற வகையில், ஆங்கிலம் தர்க்கப்பூர்வமான மொழி என்றும் ஐரிஷ் மொழிக்கு பெண்மைத்தன்மை இருக்கிறது என்றும் ஐரிஷ் மொழி ஆங்கிலத்தைவிட ஆன்மீக மொழி என்றும் சந்தேகத்துக்கே இடமில்லை என்பது போன்ற ஒரு அதிகாரபூர்வ தொனியில் சொல்பவர்களிடம் பேசி களைத்து விட்டேன். நாம் வாழும் உலகில் ஆங்கிலம் கணிப்பொறி நிரலிகளின் மொழியாக இருக்கிறது, நம்மில் பலரும் ஐரிஷ் மொழியை நாட்டுப்புறத் திருவிழாக்களில் மட்டும்தான் காணகிறோம், அல்லது அட்லாண்டிக் கடற்கரையின் அழகிய சூழலில் அதை அறிகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இது வரலாற்றின் விபத்து, மொழிகளுக்கு உள்ளார்ந்த ஒழுங்கு என்று எதுவும் இல்லை, மொழிகள் தன்னிச்சையாய்த் தோன்றும் ஒலிகளின் வரிசைகள்தான்.

அப்படியானால் காலாவதியான நெறி என்று நான் எதைச் சொல்கிறேன்? ஒரு சமூகத்துக்கும் கலாசாரத்துக்கும் தொடர்பின்றி எந்த மொழியும் சுதந்திரமாய் வாழ்வதில்லை. வேறொரு சமூகத்தின் தீவிர அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது எந்த ஒரு சமூகமும் தன்னை மாற்றிக்கொண்டுதான் தொடர முடியும். இது தொழில்நுட்பத்தை மாற்றிக் கொள்வதாய் இருக்கலாம், அல்லது மதமாற்றத்தை ஏற்றுக் கொள்வதாய் இருக்கலாம், அல்லது தன் மொழியை மாற்றிக் கொள்வதாய் இருக்கலாம்.

அயர்லாந்து விஷயத்தில் பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் கெயிலிக் மக்கள் அத்தகைய அழுத்தத்தை எதிர்கொண்டனர். ஐரிஷ் மொழி தன்னைப் பேசுபவர்களை மோசம் செய்யவில்லை. ஆனால் ஐரிஷ் மொழிக்குச் சாத்தியப்படாத வாய்ப்புகளை ஆங்கில மொழி அளித்தது, அதனோடு இது போட்டி போட முடியவில்லை. நான் வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து போன்ற லௌகீக நன்மைகளை மட்டும் சொல்லவில்லை. அச்சில் இருக்கும் உலகுக்கு ஒரு வாசலை ஆங்கிலம் திறந்து கொடுத்தது, அதனால் வரும் அத்தனை வாய்ப்புகளுக்கும் வாசல் திறந்தது- கலாசார, அரசியல், இலக்கிய வெளிப்பாடுகளின் புதிய வடிவங்களை ஆங்கிலம் வழி அடைய முடிந்தது. அந்நாளைய ஐரிஷ் மொழியில் இத்தகைய வெளிப்பாட்டு சாத்தியம் இருக்கவில்லை. பெரும் பஞ்சத்துக்குப்பின் புலம் பெயர்ந்த ஐரிஷ் மக்களுக்கு ஆங்கலம் தப்பிச் செல்லும் வழியாகவும் இருந்திருக்கலாம். சிலசமயம், சரித்திரத்தைப் போலவே, மொழியும் ஒரு சுமையாகிறது.

“அது சரி,” என்று நீங்கள் சொல்லலாம், “ஹீப்ரூ மொழியை உயிர்ப்பித்த யூதர்கள் பற்றி என்ன சொல்லப் போகிறாய்? அவர்கள் புதுவகை வெளிப்பாடுகளைத் தேடிப் போகவில்லை. அவர்கள் கடந்த காலத்தின் சங்கிலிகளைக் உடைத்தெறியவில்லை”. உண்மையில், அவர்கள் அதைச் செய்தார்கள். இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தவர்களில் பலரும் யிட்டிஷ் மொழியைத் தாய்மொழியாய் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் தாய்மொழியை ஹீப்ரூ மொழிக்காக மாற்றிக் கொண்டார்கள். புதிதாய் வந்தவர்களின் அசௌகரியத்தைத் தவிர, இதில் மிகப்பெரிய கலாசார இழப்பும் உணர்வுபூர்வ இழப்பும் இருந்தது.

ஐரோப்பாவில் உள்ள யூதச் சமூகங்கள் பல நூற்றாண்டுகளாய் யிட்டிஷ் மொழி பேசிக் கொண்டிருந்தன. அதற்கென்று செழிப்பான இலக்கியமும் நாட்டார் வழக்கும் உண்டு. அது அத்தனையும் நவீன இஸ்ரேலின் ஹீப்ரூ பேசும் புதிய சமூகத்தில் இழக்கப்பட்டுவிட்டது. ஒரு மொழியைக் கைவிட்டு இன்னொன்றை ஏற்றுக்கொள்ளப் பொருத்தமான காரணங்கள் இருந்தன, அதை நான் கேள்வி கேட்கவில்லை. யிட்டிஷ் மொழியில் இல்லாத புதிய வெளிப்பாடுகள் ஹீப்ரூ மொழியில் உண்டு. கிழக்கு ஐரோப்பாவில் ஒடுக்கப்பட்டு வாழ்ந்த சரித்திரத்தின் எதிர்மறை தொடர்புகள் யிட்டிஷ் மொழிக்கு உண்டு, ஹீப்ரூவுக்கு அது போன்ற வரலாறு கிடையாது. ஆனால் இதில் மிகக்பெரிய இழப்பும் இருந்தது. நோபல் பரிசு பெற்ற ஐசாக் பசெவிஷ் சிங்கரின் எழுத்தை மொழிபெயர்ப்பில்தான் பெரும்பாலான இளம் இஸ்ரேலியர்கள் வாசிக்க முடியும் என்று நினைக்கிறேன். ஐரிஷ் மக்களுக்காவது டபிள்யூ பி யேட்ஸும் ஷாமுஸ் ஹீனியும் மூல மொழியில் வாசிக்கக் கிடைக்கிறார்கள்.

இறுதியில் இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு மொழியியலாளராக இருந்தாலும்கூட, வாழ்வில் மொழிக்கு அப்பால் ஏராளம் உண்டு என்பதையும் ஒரு மொழியிலிருந்து இன்னொன்றுக்கு நிறைய கொண்டு செல்ல முடியும் எனபதையும் மறக்கக்கூடாது. கடந்த காலத்தின் கேலிக் பாடல்கள் இன்று மகரோனிக் வடிவில் இருக்கின்றன, அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பில் இருக்கின்றன. மொழிக்கலப்பில் உருவான ஹைபர்னோ இங்கிலீஷ், அதன் உச்சத்தில் அற்புதமான இலக்கியம் படைத்தது. இப்போது அதுவும் அழிவின் விளிம்பில் இருக்கிறது, அதன் இடத்தை புதிய, அமெரிக்கப்படுத்தப்பட்ட க்ளோபல் பேச்சுவழக்கொன்று பிடித்துக் கொள்ளத் துவங்கியிருக்கிறது. மாற்றம் மொழியின் அங்கம்- நீங்கள் அதைத் தழுவலாம், அல்லது எதிர்க்கலாம், ஆனால் தப்பிக்க முடியாது.

நன்றி – blog.oup.com

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா