எஸ். சுரேஷ்

தாஸ்தாவெஸ்கி எதிரில் வந்தார்

எஸ். சுரேஷ்

கறிகாய் வாங்கச் சந்தைக்குப் போனபோது அங்கு தாஸ்தாவெஸ்கியை பார்ததேன். நீளமான தாடி. தூங்கி வழியும் கண்கள்.

“நேத்தி ராத்திரியும் சூதாட்டமா?'” என்று கேட்டேன்.

“அதிகம் இல்லை. கொஞ்ச நேரம்தான்”

“கைல பணம் இல்லைன்னு பலபேர் கிட்ட கடன் வாங்கியாவது விளையாடணுமா?”

“விடுங்க ஸார். இதெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது”

“உங்க மனைவி பாவம் உங்களுக்காக தினமும் பிரார்த்தனை பண்றாங்க. நீங்க என்ன செஞ்சாலும் குத்தம் சொல்றதில்ல. இது போல் ஒரு மனைவி கிடைப்பது கஷ்டம். அவங்களுக்காகவாவது நீங்க திருந்தலாம். வாழ்க்கையை பற்றி எல்லாம் தெரிஞ்ச உங்களுக்கு நான் அட்வைஸ் பண்ணக்கூடாது”

“மனித வாழ்க்கையைப் பேசத் தெரிஞ்ச அளவு என் வாழ்க்கையைப் புரிஞ்சுக்க முடியல. இதுதான் எழுத்தாளனுக்கு கடவுள் கொடுத்த சாபம். ஒண்ணும் செய்ய முடியாது”

இருவரும் மெளனமாக நடந்தோம்.

2024

எஸ். சுரேஷ்

“ஃபோன் அடிக்கறது கேக்கல? ஃபோன எடு” அம்மாவின் குரல் என்னை அதட்டியது. அம்மா பக்கத்து அறையிலிருந்து பேசவில்லை. ஃபோன்னிலிருந்து பேசினாள்.

நீங்கள் இன்னும் 2016இல் இருப்பதால் உங்களுக்கு நான் இதை விளக்க வேண்டும். நீங்க ஏதோ நான் அம்மாவின் குரலை ரிங்டோன்னாக வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கக்கூடும். அதெல்லாம் உங்கள் காலம். இப்பொழுது காலம் மாறிவிட்டது.

‘Machine Learning’ என்று சொல்வதை வைத்து கூகிள் போன்றவர்கள் முதலில் உங்கள் மெயில் படிக்க ஆரம்பித்தார்கள். நீங்கள் ‘Please find attached’ என்று எழுதி attachment இல்லையென்றால், அட்டாச்மென்ட் எங்கே என்று ஜீமெயில் கேட்க ஆரம்பித்தது. அதே போல் விளம்பரத்துக்காக பலர் அனுப்பும் மெயில்களை தானாகவே ஸ்பாம் என்று குறிப்பிட்டு தள்ளி வைத்தது. இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறது.

மெயிலை படிப்பதுடன் நிற்காமல் இப்பொழுது வந்துள்ள ஒரு ஆப் நாம் ஃபோனில் பிறருடன் பேசுவதை ஒட்டு கேட்கிறது. நம்முடன் பேசுபவர்களின் குரலை அது ஞாபகம் வைத்துக்கொள்கிறது. அவர்களின் குரலை அது reproduce செய்கிறது. அவர்கள் அடிக்கடி பேசும் வார்த்தைகளையும், அவர்கள் உபயோகிக்கும் சொலவடைகளையும் வைத்து அவர்களைப் போலவே அது பேசுகிறது. அம்மாவின் ஃபோன் வந்தால் அம்மாவின் குரலில், அவள் பேசுவது போலவே என்னை அழைக்கிறது. இதை ‘Synthesis of Sound with Machine Learning’ என்கிறார்கள்.

என்னுடன் பணிபுரியும் முருகேசன் எனக்கு இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து தந்தான். அவன் இந்த ஆப்பை அடிக்கடி உபயோகப்படுத்துவான். புதிதாக கல்யாணம் ஆனவன். அவனுக்கு ஃபோன் வந்தால், “டார்லிங். ப்ரீயா இருக்கீங்களா? என்னோட பேச முடியுமா?” என்று அவன் புதுப் பெண்டாட்டி பேசுவாள். அவன் எல்லோரையும் பார்த்து பெருமிதமாகச் சிரிப்பான். அவன் பெண்டாட்டி போல் ஆப்பும் புதியது. இன்னும் பீடா டெஸ்டிங் நிலைமையில் உள்ளது பக்ஸ் இருக்கலாம் ஆனால் பலர் இதை யூஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் ஒரு நாள் அவன் பெண்டாட்டி குரலை என் மொபைலில் ரெகார்ட் செய்து ஆபிசில் அதை ஒலிக்க விட்டேன். முருகேசன் அவசரமாக மொபைலை எடுத்து விழித்தான். ஆபிசில் எல்லோரும் சிரித்தார்கள்.

 

அம்மா என்னை மதுமிதாவுடன் வெள்ளிக்கிழமை முருகன் கோவிலுக்கு வரச்சொன்னாள். நல்ல நாளாம். ஏதோ ஸ்பெஷல் பூஜை செய்கிறார்களாம். நான் சரி என்று சொன்னேன்.

“டேய். வெள்ளிக்கிழமை ஆறு மணிய உன் காலெண்டர்ல குறிச்சி வச்சுக்கோ. என் காலண்டர் ரிக்வெஸ்ட் ஆக்செப்ட் பண்ணு” என்று ஃபோன் அம்மா குரலில் பேசியது. நான் ஒரு நிமிடத்திற்கு எதுவும் செய்யவில்லை என்றால் அதுவே ரிக்வெஸ்ட் அக்செப்ட் செய்துவிடும். நான் ஒன்றும் செய்யவில்லை.

“எப்படி நீங்க வேற ஒருத்தருக்கு வெள்ளிக்கிழமை ஆறு மணிக்கு appointment கொடுக்கலாம். என்னைப் படத்துக்கு அழைத்து போறேன்னு சொல்லியிருக்கீங்க” என்று என் மனைவி மதுமிதாவின் குரலில் ஃபோன் பேசியது.

நான் இதை முழுவதாக மறந்துவிட்டிருந்தேன். அவளுக்கு புதிதாய் வரப்போகும் கமல் படத்தை முதல் நாள் பார்க்கவேண்டும். அவள் என் காலண்டரில் appointment schedule செய்திருந்தாள்.

“என்ன. ஒண்ணுமே பேச்சில்ல? அம்மாவுக்கு என்ன சொல்ல போறீங்க?” மறுபடியும் மதுமிதாவின் குரல்.

அம்மாவுக்கு காலேண்டர் ரிக்வெஸ்ட் ரிஜெக்ட் ஆகிவிடும். அவள் மறுபடியும் கூப்பிடுவாள். கோவிலை விட சினிமா முக்கியமா என்ற கேள்வி வரும். இப்பொழுது என்ன செய்வது என்று நான் தலையை சொறிந்து கொண்டிருக்கும்போது மதுமிதா உள்ளே வந்தாள்.

“படம் செம கலக்கலாம். துபாய்ல என் friend பார்த்துட்டு சொன்னான். I am waiting, I am waiting, I am waiting” என்று துள்ளினாள்.

“டேய். ஏன் என் ரிக்வஸ்ட் ரிஜெக்ட் பண்ண? உன்னோட பேசணும் ஃபோன எடு”. கொய்யால. இந்த machine learning ஆளுங்க ஒரு லெவலுக்கு மேலயே போயிட்டாங்க. அம்மா எதுக்கு ஃபோன் பண்றான்னு இவனுக்கு எப்படி தெரியும்? Machine learning தலையில் கல்லப் போட.

“என்ன ரிக்வெஸ்ட்?” என்றாள் மதுமிதா

“சொல்றேன். சொல்றேன். ஒரு சின்ன confusion”

“என்ன confusion?”

“ஏன்டா ஃபோன் எடுக்க மாட்டேங்கற. நீ இல்லேன்னா உன் பொண்டாட்டி இருப்பாளே? அவளுக்கு என்ன அப்படி உயிர் போற வேல. ஃபோன் எடுக்க முடியாதா அவளால?”

மதுமிதாவுக்கு முகம் சிவந்துவிட்டது. “என்ன? உங்க அம்மா எனக்கு வேலையில்லன்னு நினைக்கறாங்கள? அவங்களுக்கு வேணா நீங்க இன்னும் கைக்குழந்தையா இருக்கலாம். அதுக்காக நானும் உங்கள கைக்குழந்தையா நடத்தணுமா. கழுத போல் வளர்ந்துட்டீங்க. உங்களுக்கு ஃபோன் எடுக்க வராதா?”

“அது அம்மா இல்ல மது. ஃபோன் தானே சொல்லுது. எல்லாம் machine learning”

“அது எப்படி learn பண்ணும். உங்க அம்மா இது போல் அடிக்கடி பேசறாங்க. அது வச்சி ஃபோன் learn பண்ணுது.”

“அப்படி இல்லமா. அந்த ஆப் இப்படி பேசக்கூடும்னு ஒரு மாதிரி ப்ரெடிக்ட் பண்ணுது”

“கரெட்டா தான் பண்ணுது. உங்க அம்மா இப்படி தான் பேசுவாங்க”

நான் பதில் சொல்வதற்குள் ஃபோன் மதுமிதா குரலில் பேசியது, “உங்க அம்மா மறுபடியும் ரிக்வெஸ்ட் அனுப்பியிருக்காங்க. நாம சினிமா போறோம்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அத தடுக்கறதுக்கு இப்படி எதாவது டிராமா பண்ணுவாங்க”

மதுமிதா என்னை முறைத்தாள். “நான் இப்படி தான் பேசுவேனா? நீங்க தான் ஃபோனுக்கு சொல்லிக் கொடுத்தீங்களா?”

“இல்லமாஆஆ. இது machine..”

“machineஆ மண்ணாங்கட்டியா. சும்மா பொய் சொல்லாதீங்க. நீங்க என்ன ஒரு ராக்ஷஷி மாதிரி பார்கிறீங்க நல்லா தெரியுது”

“அந்த கிழவி ரிக்வெஸ்ட்ட மறுபடியும் ரிஜெக்ட் பண்ணிடறேன்.”, என்றது ஃபோன் மதுமிதா குரலில.

மதுமிதாவிற்கு அப்பொழுதுதான் ஞானோதயம் வந்தது. “என்ன. நீங்க வெள்ளிகிழமை அம்மா கிட்ட வரேன்னு எதாவது சொன்னிங்களா? நீங்க போறதுன்னா போங்க. நான் தனியா சினிமா போறேன். உங்கள நம்பினா ஒரு பிரயோஜனமும் இல்ல”

“அம்மாவிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ்” என்றது ஃபோன் ஏதோ ஒரு அமெரிக்க குரலில். “மெசேஜ் படிக்கட்டுமா?”

“வேண்டாம்” என்று சொல்ல வாயெடுக்கும்முன் மதுமிதா “படி” என்றாள். எங்கள் இருவர் குரலாணைக்கும் தலை வணங்குவார். ஃபோனாண்டவர்.

“வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வரத மறக்காத. உன் பெண்டாட்டி எதாவது படத்துக்கு போகணும்னு அடம் பிடிப்பா. ஒரு நாள் கோவிலுக்கு வந்தா அவ ஒண்ணும் குறைஞ்சு போக மாட்டா. ஏதோ சொத்த சினிமாவுக்கு போகிறத விட கோவிலுக்கு வந்தா புண்ணியம் வரும்” அம்மாவின் குரல் துல்லியமாக கேட்டது.

மதுமிதாவின் பார்வை எப்படி இருந்திருக்கும் என்று நான் உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா? அவள் ஏதோ கோவமாக சொல்ல ஆரம்பித்தபோது அவள் மொபைலில் என் குரல் கேட்டது. “மது உங்க அம்மா ஃபோன்”

அவளுக்கு மொபைலை எடுப்பதை விட என்னை திட்ட வேண்டும் என்ற ஆசை தான் அதிகம் இருந்தது. “நான் என்னிக்கோ ஒரு நாள் சினிமா போகலாம் …” கோவம் அவள் தொண்டையை அடைத்தது. அவள் அழுதுவிடுவாள் போல் இருந்தது. கோவமும் அழுகையும் சேர்ந்தால் எனக்கு சங்கு தான்.

அப்பொழுது அவள் மொபைல் மறுபடியும் என் குரலில் பேசியது. “ஃபோன் எடு மது. இல்லைனா உங்க அம்மா எனக்கு ஃபோன் பண்ணிவிடுவா. சீக்கிரம் எடு” என்றேன்.

நான் மதுமிதாவுடன் இது போல் பேசியிருக்க மாட்டேன் என்று உங்களுக்கு தெரியும். பிறகு ஏன் மொபைல் அப்படி பேசுகிறது?. நான் யாருடன் எல்லாம் பேசுகிறேனோ அதை எல்லாம் analyze செய்து வரும் resultஐ cloud எனப்படும் ஒரு பொது இடத்தில் இந்த ஆப் வைத்துவிடும். யாரெல்லாம் என் பெயரை அவர்கள் மொபைலில் வைக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் இந்த cloud செனட்டரிலிருந்து தான் என் குரலும் நான் பேசும் விதமும் செல்லும்.

“ஓஹோ. ஏன், எங்கம்மா உங்கள கூப்பிட கூடாதா?”

“அப்படி இல்ல மது. நான் என்ன சொல்ல வரேன்னா இது machine..”

“Machine learning. Machine Learning. Machine Learning. இதையே சொல்லிண்டிருங்க.”

“நாம சினிமா போறோம்னு தெரிஞ்சா உங்கம்மாவும் கூட வரேன்னு கழுத்தறுப்பாங்க. சீக்கிரம் ஃபோன் எடு” என் குரலில் ஃபோன் மதுமிதாவிடம் கூறியது

இப்பொழுது அவள் கண்களில் நீர் தேங்க ஆரம்பித்தது. அவள் கோபமாக மொபைல் பட்டனை அழுத்தி “ஹலோ” என்று கூறிக்கொண்டே பெட்ரூம் பக்கம் சென்று கொண்டிருந்தவள் என்ன தோன்றியதோ, “நான் உன்னோட அப்புறம் பேசறேன்” என்று மொபைலை கட் செய்துவிட்டு என்னிடம் வந்தாள். “உங்க சாயம் நல்லா வெளுத்து போச்சு. நீங்க உங்க அம்மாகூட கோவிலுக்கு போங்க. நான் எங்க அம்மாவோட சினிமாவுக்கு போறேன். இப்போ சந்தோஷமா. சந்தோஷமா?” என்று கேட்டுவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் சமையலறைய நோக்கி நடந்தாள்.

அப்பொழுது பளிச் என்று என் மொபைல் ஒளிர்ந்தது. முருகேசன் அழைக்கிறான். “டார்லிங். பிஸியா? என்னோட ரெண்டு நிமிஷம் பேசமுடியுமா?” என்று முருகேசன் பெண்டாட்டி குரலில் ஃபோன் என்னை கேட்டது. சாப்ட்வேர் பக். முருகேசன் குரலுக்கு பதில் அவன் மனைவியின் குரலில் பேசுகிறது மொபைல்! இந்த பக் எவனால் வந்ததோ அவனைக் கண்டுபிடிக்க வேண்டும். பொழச்சி இருந்தா. செத்தடா மவனே நீ.

வேகமாக சமையலறைக்கு சென்றுக்கொண்டிருந்த மதுமிதா சட்டென்று நின்று, நிதானமாக திரும்பி என்னை நோக்கி மெதுவாக நடந்து வந்து கொண்டிருக்கிறாள்..

ஒரே கேள்வி

எஸ். சுரேஷ்

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: ஹ ஹ ஹ ஹ ஹ. காலேஜ் முடிச்சிட்டு உத்தியோகம் கிடைச்சிருக்கற ஸ்டுடென்ட் கிட்ட இந்த மாதிரி கேள்வியா? ஹ ஹ ஹ. இப்போ தான் சார் இந்திய கம்ப்யூட்டர் இண்டஸ்ட்ரி வேகமாக வளரும் போல் இருக்கு. நாங்க வேற டாப் கிளாஸ் காலேஜ்லிருந்து பாஸ் ஆகியிருக்கோம். முன்னாடி நிறைய வாழ்கை இருக்கு சார். இப்போ போயி எதுக்கும் வாழணும்ன்னு கேட்டுண்டு.

ஆனா நீங்க கேக்கறது எனக்கு புரியறது. நான் நிறைய நாவல் படிப்பேன். இந்த விஷயத்தை பத்தி பல ஐரோப்பிய நாவலாசிரியர்கள் பேசியிருக்காங்க. காமு, சார்த்தர், தாஸ்தாவெஸ்கி இப்படின்னு பல பேரு. அங்க நிஹிலிசம்ன்னு ஒரு தத்துவம் இருக்கு தெரியுமா? அந்த தத்துவத்தின்படி நமக்கு இந்த உலகத்துல ஒண்ணும் புரியாது. ஒரு மாதிரி சூன்யம் இந்த உலகம்ன்னு அந்த தத்துவம் சொல்லுதாம். புத்தரும் இதே தத்துவத்த சொன்னாரா அப்படின்னு ஒரு கேள்வி இருக்கு. ஆனா புத்தர் சொன்னது வேற நிஹிலிசம் வேறன்னு சொல்றாங்க. தத்துவம் படிச்சா மண்ட குழம்பிடும். நான் ரிலேடிவிட்டி தியரி படிச்சவன். இந்த தத்துவம்லாம் படிச்சா அதுவே சுலபமா இருக்கும் போல் இருக்கு.

ஆனா ஐரோப்பால நிஹிலிசம் பெரிய பாதிப்பு ஏற்படுத்தினதா சொல்றாங்க. பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் தற்கொல செஞ்சிண்டாங்களாம். இதுக்கு எதிரா காமு ஒரு பெரிய கட்டுரை எழுதினதா என் நண்பன் அசோக் சொல்றான். அவனும் நானும் ஒரே கம்பனில சேரப் போறோம்.

வாழ்க்கைல எவ்வளவோ செய்யணும் ஆனா ஒரு அம்பது வயசுல டக்க்னு போயிடணும். எங்க கொள்ளு தாத்தா பாவம். படுத்த படுக்கையா இருந்து, அவரும் கஷ்டப்பட்டு எல்லோரையும் துன்புறுத்தி போனாரு. அது மாதிரி இல்லாம ஒரு ஹார்ட் அட்டாக்ல போயிடணும். அது ஒண்ணுதான் ஏன் அசை,

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: வாங்க சார் வாங்க. போன முறை நீங்க ஏதோ தமாஷுக்கு சொல்றீங்கன்னு நினைச்சேன். நிஜமாவே வந்துட்டீங்க. உங்க திட்டம் நல்லா இருக்கு. பத்து வருஷத்துக்கு ஒரு முறை இந்த கேள்விய கேக்கறது. என்ன மாற்றம் நிகழ்ந்திருக்குன்னு பார்க்கறது.

நான் காலேஜ் விட்டு வெளீல வந்தவுடனே இப்ப தான் வாழ்க்கையே ஆரம்பிக்குதுன்னு நினைச்சேன். ஆனா பத்து வருஷம் கழிச்சி இப்போதான் வாழ்க்கையே ஆரம்பிக்கப் போவுதுன்னு ஒரு உணர்வு இருக்கு. ஏன்னா நான் காதலிக்கும் பெண்ணை அடுத்த மாசம் கல்யாணம் செஞ்சிக்க போறேன்.

நான் வேலைல சேர்ந்த பிறகு ஆபிஸ ஒரு கலக்கு கலக்கிட்டேன். நான் முதல் முறையா கோட் பண்ணத கிளையேன்ட் ரொம்ப பாராட்டினான். வேலைக்கு சேர்ந்த ஆறு மாசத்துல என்னை அமெரிக்காவுக்கு அனுப்பினாங்க. அந்த ப்ராஜெக்ட் சரியா முடிச்சேன். அந்தக் காலம் இப்போ போல் இல்ல. அப்போ எல்லாம் அமெரிக்கா போற கனவே காண முடியாது. நான் போனது பல பேருக்கு அசிடிடி கொடுத்தது. என் நண்பன் அசோக்கும் வயிறு எறிஞ்சான். ரெண்டு வருஷம் அங்க இருந்துவிட்டு திரும்பி வந்தேன்.

என் கதைய விடுங்க. நீங்க கேட்ட கேள்விக்கு என்ன பதில்? இப்போ இது போன்ற கேள்வியெல்லாம் யாரும் கேக்கிறதில்ல. மாணவனா இருந்தபோது நாங்க எல்லோரும் புத்தகம் படிப்போம், விவாதிப்போம். இப்போ புத்தகம் படிக்கிற டைம் இல்ல. படிச்சாலும் விவாதிக்க ஆள் இல்ல. வேலை, வேலை, வேலை. நாமும் முன்னேறுகிறோம். கம்பனியும் முன்னேறுகிறது. காற்றுள்ள போது தூற்றிக்கொள்ள வேண்டும் சார். நின்று நிதானமா யோசிக்கற அளவுக்கு டைம் இல்ல சார். இருக்கவும் கூடாது. அப்ப தான் முன்னேற முடியும்.

எதுக்காக வாழணும்? எதிர்காலத்துக்காகதான். எதிர்காலம் நல்லா இருக்குன்னா வாழ வேண்டியதுதான். நான் ப்ராஜெக்ட் லீட் ஆன பிறகு அவ என் டீம்ல சேர்ந்தா. அன்றைக்கே காதல்வயப்பட்டுட்டேன். அழகியா இல்லையான்னா எனக்கு பதில் சொல்ல தெரியாது. ஆனா எனக்கு அவ தான் பொருத்தமான பெண். இவ கூட வாழ போகிறோம் என்று நினைக்கிற பொழுதே எவ்வளவு வருடங்கள் வேணுமானாலும் இந்த உலகத்துல வாழலாம்ன்னு தோணுது சார். இப்ப இந்த கேள்விக்கு அவசியமே இல்ல.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: கரெக்டா வந்துடிறீங்க சார். பத்து வருஷம் ஆனாலும் எப்படியோ என்ன தேடி கண்டுபிடிச்சிடறீங்க.

இந்த முறை உங்களுக்கு ஸ்ட்ராங்கா பதில் சொல்லலாம். நாம நம்ம குழந்தைகளுக்காக வாழணும். எனக்கு இப்போ ரெண்டு குழந்தைங்க. ஒவ்வொரு நாளும் ஆபிஸ்ல இந்த பாலிடிக்ஸ் எல்லாம் டீல் பண்ணிட்டு வீட்டுக்கு சோர்வா வரும்போது அந்த குழந்தைங்க சிரிப்ப பார்த்தா வரும் ஆனந்தம் வார்த்தைல சொல்ல முடியாது சார். க்ளுகோஸ் குடிச்ச மாதிரி இருக்கும்.

குழந்தைங்க இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். முன்ன மாதிரி இல்ல சார் இப்போ. ஆபிஸ் பூரா பாலிடிக்ஸ். நான் எல்லா வேலையும் பண்ணி கஸ்டமர குஷிப்படுத்தி பிஸ்னெஸ் டெவெலப் பண்ணேன். ஆனா என்ன லாபம்? எனக்கு ப்ரமோஷன் குடுத்தாங்க சரிதான். நானும் அப்போ ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா அடுத்த நாளே அசோக்குக்கும் ப்ரமோஷன் குடுத்தாங்க. அவன அமெரிக்கா அனுப்பினாங்க. என்ன கேட்டாங்க ஆனா மனைவி கர்ப்பமா இருந்தா. என்னால போக முடியல. அவன் என் அளவுக்கு என்ன வேல பண்ணான்? ஏதோ பாஸ் கூட சிரிச்சி சிரிச்சி பேசுவான். எப்படியோ ப்ரமோஷன் வாங்கிட்டான். எல்லோருக்கும் ப்ரோமோஷன் குடுத்தா வேலை செய்யறவனுக்கு என்ன சார் மதிப்பு? சரி விடுங்க. கார்ப்ரட்ல இதெல்லாம் சகஜம்.

இப்போ உங்க கேள்விக்கு வருவோம். நாம நமக்காக வாழணுமா இல்ல நம்ப சார்ந்து இருக்கிறவங்களுக்காக வாழணுமா? என்ன பொருத்த வரையில இது தான் கேள்வியா இருக்க முடியும். இதுக்கு பதில் சொன்னா உங்க கேள்விக்கு பதில் சொன்ன மாதிரி. நான் பைரப்பா எழுதின ‘வம்ச வ்ரிக்ஷா’ படிச்சேன். அதுல ஒரு குழந்தை தாய் தந்தைக்கு மட்டும் சொந்தம் இல்ல. அவங்க வம்சத்துக்கே சொந்தம்னு அதுல வரும் முக்கியமான கதாபாத்திரம் வாதாடுறாரு. என்னால அத ஏற்க முடியல. குழந்தை அதைப் பெற்றவர்களுக்கு தானே சொந்தம்? ஆனா அந்த ஒரு பாய்ண்ட் ஆப் வியூ தப்புன்னு சொல்ல முடியல. இந்த காலத்துக்கு அதெல்லாம் சரி வராது. என் அப்பா அம்மா என் கூட தான் இருக்காங்க. அவங்களுக்கு பேரன் பேத்தி மேல அலாதி ப்ரியம் ஆனா அதுக்குன்னு அவங்களால நம்ம குழந்தைங்க எதிர்காலத்த டிசைட் பண்ண முடியாது இல்லையா?
ஹ ஹ ஹ. ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கிறேன்.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: முதல் முறையா நானே என்னை இந்த கேள்வி கேட்டுக்கொண்டேன். உலகம் ரொம்ப மாறிவிட்டது சார். எதுக்குமே மதிப்பில்லாம போயிடிச்சி. பணம் தான் முக்கியம்னு ஆயிடிச்சி. நான் எவ்வளவு வருஷமா இந்த கம்பெனிக்காக பாடு பட்டிருப்பேன். எவ்வளவு உழைச்சேன். என் உழைப்புனால எவ்வளவு புது கஸ்டமர் கிடைச்சாங்க. ஒரு டவுன்ட்டர்ன் வந்தவுடனே யார தூக்கலாம்னு பாக்கறாங்க. லாயல்டி, உழைப்பு எதுக்குமே மரியாத இல்ல. காக்கா பிடிக்கறவங்க தான் வாழறாங்க. என்ன நேரா கூப்பிட்டு “போடா வெளியிலே”ன்னு சொல்லிருந்தா அது மரியாதையா இருந்திருக்கும். ஆனா இவங்க அப்படி செய்யல. என்னை ஒரு பவர் இல்லாத ரோலுக்கு மாத்தினாங்க. ஏழு வருடமா ப்ரமோஷன் இல்ல. ரெண்டு வருஷம் இன்க்ரிமென்ட் இல்ல. இன்க்ரிமென்ட் குடுத்தாலும் ஏதோ ரெண்டு பர்சென்ட் மூணு பர்சென்ட்ன்னு குடுக்கறாங்க. அதே அசோக்க பாருங்க. நல்லா அமெரிக்கால செட்டில் ஆயிட்டான். கம்பனி அவனுக்கு கிரீன் கார்ட் ஸ்பான்சர் செஞ்சது. அவனுக்கு இந்த அஞ்சு வருஷத்துல ரெண்டு ப்ரமோஷன். என்னால உயிர் வாழ்ந்தவன், காக்கா பிடிக்கிறதா தவிர ஒரு டாலேன்ட் இல்லாதவன். அவனுக்கு எப்படி ஒரு வாழ்வு பாருங்க.

போடா கொய்யான்னு ராஜினாமாவ வீசி எறிஞ்சிட்டு வந்துடலாம். ஆனா நம்ப குடும்பத்துக்காக அத செய்யாம இருக்கேன். இப்போ என் கூட வேல செஞ்ச பிஸ்வாஸ்ஸ எடுத்துக்கோங்க. அவனுக்கு ஒரே குழந்தை. அவன் பெண்டாட்டி நல்ல வேலைல இருக்கா. நல்ல சம்பாத்தியம். அவன வேற ரோல் எடுக்க சொன்னாங்க. அவன் உடனே ராஜினாமா செஞ்சிட்டு பெண்டாட்டி பணத்துல சாப்பிட்டுக்கொண்டு ஜாலியா இருக்கான். நமக்கு அப்படி முடியலை. அதுனால பல்ல கடிச்சிண்டு ஓட்டிக்கொண்டிருக்கிறேன். வெளியில வேற என் வயசு ஆளுங்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

இப்போ என்னோட குறிக்கோள் ஒன்றே ஒன்று தான். என் பிள்ளைகள நல்லா படிக்க வச்சு நல்ல future அமைச்சு கொடுக்கணும். அது தான் வாழ்க்கைல முக்கியம். நம்ப வாழ்க்கையே நம்ப குடும்பத்துக்கு தான்.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்- மனசு நெறஞ்சிருக்கு சார். போன வருஷம் என்னுடைய அறுபதாம் பிறந்த நாள ரொம்ப கிராண்டா என் பிள்ளைகள் கொண்டாடினார்கள். எல்லாரும் வந்து பார்டிசிபேட் பண்ணங்க. இவ்வளவு பேர் நம்ம கூட இருக்காங்கன்னு நினைக்கும் பொழுது மகிழ்ச்சியா இருக்கு.

அதே போல் இவ்வளவு வருஷம் நாம உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதே இந்த காலத்துல ஒரு சாதனையா இருக்கு. பாவம் அசோக். நல்லா ப்ரோமோஷன் வந்துது. ஆனா என்ன லாபம். ஒரே ப்ரெஷர். சட்டென்று ஒரு நாள் மாரடைப்புல போயிட்டான். எல்லோருக்கும் ஒரே ஷாக். “நல்ல வேள உங்களுக்கு ப்ரோஷன் வரல. அந்த ப்ரெஷர் உங்களுக்கு இல்ல. ஆள் இல்லாம பணத்த வச்சிண்டு என்ன பண்றது?” என்று என் மனைவி கேட்டாள். அதுவும் உண்மைதான்.

ஒரு விதத்துல வேலைய விட்டதும் நல்லது தான். நல்ல டைமிங்க்ள விட்டேன். பையன் ஒரு மாதிரி அமெரிக்கால வேலைல சேர்ந்த பிறகு நான் இங்க வேலைய விட்டேன். பிறகு ஸ்டார்ட் அப்ல கொஞ்ச நாளு, ஒரு காலேஜ்ல லேக்சுரர்ரா கொஞ்சம் நாளுன்னு வண்டி ஓடிச்சி. அப்புறம் டாட்டர்-இன்-லா பிரேக்னேன்ட் ஆனா. பெண்ணு கல்யாணமாகி ஜெர்மனி போயிட்டா. அதுக்கு பிறகு கொஞ்ச நாள் அமெரிக்கா, கொஞ்ச நாள் ஜெர்மனின்னு வண்டி ஓடுது.

எப்பவுமே நான் உங்க கேள்விக்கு டைரெக்ட்டா பதில் சொல்றதில்ல. ஹ ஹ ஹ. இப்போ நான் வாழறது என் பேர பிள்ளைகளுக்காக தான். இப்போ எங்க உலகமே அவங்கதான்.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: நீங்க புதுசா தம்பி. அவர் வரலையா? ஒ. என் மனைவியும் கான்சர்ல தான் இறந்தா. லங்க் கான்செர். அவ போன பிறகு எதுக்கு வாழணும் தான் இருக்கு. ஏன் வாழணும்னு கேள்வி எழுந்துக்கொண்டே இருக்கு. பதில் தான் தெரியல. பசங்க ரெண்டு பேரும் வேற வேற எடத்துல இருக்காங்க. எனக்கோ அங்க இருக்க பிடிக்கல. இங்க ஒரே தனிமை. என் மனைவி என்ன பாடு பட்டா. உதவிக்கு யாரும் இல்ல. இந்த நகரத்துல எனக்கு பல சொந்தக்காரர்கள். ஆனா எல்லோரும் அவங்க அவங்க வேலைல இருக்காங்க. நம்ம ஒத்தாசைக்கு வேலைக்கார்கள் தான். அவங்கள் நம்பி தான் பல பேர் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கு தம்பி. நம்ப பிள்ளைகள விட வீட்டுக்கு வர நர்சுக்கு தான் நம்மள பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு.

நம்ம பிள்ளைக இங்க இருந்தா நமக்கு ஒரு சந்தோஷம். இப்போ எல்லாம் பேர பிள்ளைகள கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்ல தான் பாக்க முடியறது. எங்க சம்பந்தி கதியும் இதேதான். என் பையனோட மாமியார் தனியா இருக்கா பாவம். மாமனாருக்கு சுகர். கிட்னி கோளறு. ரொம்ப துன்பப்பட்டு இறந்தாரு பாவம். அவர் போனது எல்லோருக்கும் ஒரு ரிலீப்.

இந்த தனிமைல வாழ்க்கையோட அர்த்தம் என்னனு தேடிக்கொண்டிருக்கிறேன். பல புக்ஸ் படிக்கிறேன். ஆனா ஏனோ மனம் அதுல லயிக்க மறுக்கிறது. என் மனைவியோட நினைவு இன்னும் என்னைவிட்டு நீங்கலைன்னு நினைக்கிறேன். எப்போவும் அவ தான் ஞாபகம் வருகிறாள். ஹ்ம்ம். ஏதோ நம்மள யம தர்மன் அழைக்கும் வரை வாழ்ந்துக்கொண்டிருக்க வேண்டும். அது தான் விதி.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: நீங்க வேற ஆளா? அவர் ரிசைன் பண்ணிட்டாரா? இந்த காலம் அப்படி. நாங்க எல்லாம் முப்பது ஆண்டுகள் ஒரே கம்பனில இருந்தவங்க. அந்த வால்யூ சிஸ்டம் இப்போ இல்லை. மாரல்ஸ் மாறி போச்சு. நீ கேட்ட இல்லையா ஒரு கேள்வி, “எதுக்கு உயிர் வாழணும்’ன்னு. இதுக்கு தான் உயிர் வாழணும். அதாவது என்ன போல் பெரியவங்க, இந்த தலைமுறைக்கு ந்யாயம்னா என்ன, தர்மம்ன்னா என்னான்னு எடுத்து சொல்லணும். அதுக்காக நாங்க வாழணும்.

நான் தினமும் கோவிலுக்கு போறேன். தினமும் அங்க அரை மணி லெக்சர் குடுக்கிறேன். பல ஆர்டிகல்ஸ் எழுதுகிறேன். உலகம் பூரா பல பேர் அத படிக்கறா. எனக்கு எவ்வளு மெசஜ், எவ்வளு மெயில் தெரியுமா. என் பொண்ணு இப்போ ஹாலந்த்ல இருக்கா. அவ ஒரு நாள் போன் பண்ணி, “அப்பா இங்க ஒருத்தர் உங்க ஆர்டிகல் படிச்சி ரொம்ப புகழ்ந்தார். ஐ யாம் ப்ரௌட் ஆப் யூ” சொன்னா. போன முறை பையன பாக்க அமெரிக்கா போன போது அவங்க கோவில்ல மூணு நான் அத்வைதம் பத்தி பேசினேன். என்ன ரெஸ்பான்ஸ் தெரியுமா. பேரன், பேத்திக்கெல்லாம் ஒரே ஆச்சரியம், “யூ ராக் தாத்தா”ன்னு சொன்னா என் பேத்தி. இப்போ கோவில்ல நடக்கற எல்லா விசேஷத்துக்கும் நான் இருந்தாகணும். பல ஏழை பசங்களுக்கு படிக்க உதவற டிரஸ்ட் வச்சிருக்கோம். நீங்க கூட எதாவது குடுக்கலாம். டாக்ஸ் exemption உண்டு. நேத்தி சுவாமிஜி வந்தார். என்னோட நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவரும் நாங்க செய்கிறதெல்லாம் மெச்சினார். ஏதோ பகவான் புண்யத்துல நம்மளால முடிஞ்சத செய்யமுடியறது.

ஓம் சத்குருவாய நமஹா.

விலக்கம்

எஸ். சுரேஷ்

இன்று, ஆகஸ்ட் பதினெட்டு, 1998, என்னால் மறக்க முடியாத நாளாகி விட்டது. இதே போல் மறக்க முடியாத இன்னொரு நாள், டிசம்பர் எட்டு 1985. அன்றுதான் விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் ஆட்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். நான் எங்கள் ஜெயநகர் வீட்டின் மொட்டை மாடியில் என் தோழி பத்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது சிலர் உரக்கப் பேசுவது எங்கள் காதில் விழுந்தது. அதில் ஒரு குரல் அப்பாவுடையது.

நானும் பத்மாவும் கீழே இறங்கி வந்தோம். அப்பாவிற்கும் மூன்று ஆட்களுக்கும் வாக்குவாதம் பலமாக நடந்து கொண்டிருந்தது. என்ன பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை. அப்பா ஏதோ உரக்க கத்திக் கொண்டிருந்தார். வந்தவர்களில் ஒருவன் சபாரி சூட்டில் இருந்தான். அவன் பதிலுக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். இவர்கள் சத்தமாகப் பேசுவதைக் கேட்டு ரோட்டில் போகிறவர்கள் எங்கள் கேட் முன் நின்று உள்ளே எட்டிப் பார்த்தார்கள். வந்திருந்த மூவரில் ஒருவன் கேட் பக்கம் சென்று, “ஹோகி ஹோகி’ என்று எல்லோரையும் விரட்ட ஆரம்பித்தான்.

அப்பொழுது ஒரு போலிஸ் ஜீப் கேட்டுக்கு முன் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு இன்ஸ்பெக்டர் இறங்கி கேட்டை திறந்து உள்ளே வந்தார். அங்கு நின்றிருந்தவன் அவருக்கு சல்யூட் அடித்தான். நான் இன்ஸ்பெக்டரைப் பார்த்தவுடன் பயந்து போனேன். அந்த பயம் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். பத்மா என் தோள்களை அணைத்துக் கொண்டாள். “ஒன்றும் ஆகாது, பயப்படாதே”, என்றாள்.

உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டர் சபாரி ஆளைப் பார்த்தார். பிறகு அப்பாவிடம், “உங்களை கைது செய்ய வேண்டும். இதோ ஆர்டர்ஸ்” என்று ஏதோ காகிதத்தை நீட்டினார். நான் ஒன்றும் புரியாமல் அப்பாவைப் பார்த்தேன். இவ்வளவு நேரம் உரக்க பேசிக்கொண்டிருந்த அப்பா மௌனமானார். தலை குனிந்து, ‘சரி’ என்பது போல் ஆட்டினார். பிறகு என்னைப் பார்த்து, “நீ இங்கேயே இரு. மஞ்சுநாத் வருவான். அவன் எல்லாம் பாத்துப்பான்”, என்று சொல்லிவிட்டு, “பன்னி” என்று இன்ஸ்பெக்டரை பார்த்து சொல்லிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்று போலிஸ் ஜீப்பில் ஏறிக்கொண்டார்.

“அப்பா அப்பா. என்ன ஆச்சு? அப்பா, அப்பா…” என்று நான் அவரை பார்த்து கேட்டுக் கொண்டிருக்கையில் ஜீப் கிளம்பியது. “ஏனு இல்லா. நான் சீக்கிரமே வரேன்,” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் ஜீப் ரொம்ப தூரம் சென்று விட்டது.

அழுது கொண்டிருந்த என்னை பக்கத்து வீட்டுக்காரர்கள் வேடிக்கை பார்த்தார்கள். பத்மாவைப் பார்த்து, “ஏனு ஆயித்து?” என்று கேள்வி கேட்டார்கள். எங்களுக்கு வலது புறம் வீட்டில் இருக்கும் சாவித்திரி ஆண்ட்டி ஓடி வந்தாள். “அழாதே. ஒன்னும் ஆகியிருக்காது. சீக்கிரமே அப்பா வந்துடுவார்,” என்று என்னை உள்ளே அழைத்துச் சென்றாள். எதிர் வீட்டில் இருக்கும் லீனா ஆண்ட்டியும் வந்து ஆறுதல் சொன்னாள்.

கால் மணி நேரம் கழித்து மஞ்சுநாத் அங்கிள் வந்தார். எல்லோரும் அவரிடம் விஷயம் என்ன என்று கேட்டார்கள். அவரோ, “ஏதோ ஆபிஸ் விஷயம். நீங்க வீட்டுக்கு போங்க. நாளைக்கு எல்லாம் சரியாகிவிடும்” என்று எல்லோரையும் துரத்தினார். வேண்டா வெறுப்பாக எல்லோரும் வீட்டை விட்டு விலகிப் போனார்கள்.

மஞ்சுநாத் அங்கிள் என்னிடம், “வித்யா, நீ ஒன்றும் கவலைப்படாதே. இது ஆபிஸ் விஷயம். நாளைக்கு நான் போலிஸ் ஸ்டேஷன் போய் அவனை வீட்டுக்குக் கொண்டு வருகிறேன். நீ ஒன்றும் கவலைப்படாதே” என்றார். என்னதான் ஆயிற்று என்று நான் பல முறை கேட்டும் அவர் இதே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு பத்மாவை என்னுடன் இரவு தங்கியிருக்கச் சொல்லிவிட்டு மஞ்சுநாத் அங்கிள் தன் வீட்டிற்கு சென்றார். அவருக்கு அடுத்த நாள் காலை நியூஸ் பேப்பரில் அந்த செய்தி வரும் என்று தெரிந்திருக்கவில்லை.

“ஊழல் வழக்கில் நால்வர் கைது” என்று கொட்டை எழுத்தில், முதல் பக்கத்தில் அந்தச் செய்தி வந்தது. அதைப் படித்துக்கொண்டிருந்த பத்மா என்னைப் பார்த்ததும் பேப்பரை நீட்டினாள். தலைப்புச் செய்தியுடன் கூட அப்பாவின் புகைப்படமும் முதல் பக்கத்தில் இருந்தது. போலிஸ் மற்றும் அந்த சபாரி சூட் ஆள் சூழ அப்பா நடுவில் இருக்கும் புகைப்படம். நடுத்தர உயரம், தடிமனான கருப்பு பிரேம் போட்ட கண்ணாடி. எந்த சலனமும் இல்லாத முகம். அப்பாவைத் தவிர அப்பாவுடன் வேலை செய்யும் மூன்று பேரின் படங்கள் இருந்தன. அதில் சதானந்த் அங்கிள் எனக்கு நன்றாகத் தெரியும். அவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார். இன்னொருவர் அப்பாவுடைய பாஸ்.

செய்தியைப் படித்துவிட்டு நான் அழுவேனோ என்று என் முகத்தை பத்மா உற்று நோக்கிகொண்டிருந்தாள். ஆனால் எனக்கு அழுகை வரவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. இந்த குழப்பம் கோபமாகவும் ஆத்திரமாகவும் மாற இரண்டு மாதங்கள் வேண்டியிருந்தது.

oOo

இன்றைக்கு, ஆகஸ்ட் பதினெட்டு, 1998, இப்பொழுதும் எனக்கு அதே குழப்பம். பத்திரிகையில் ஜிம் பார்சன் புகைப்படம் வந்திருக்கிறது. ஆனால் இது வரும் என்று முதல் நாளே தெரியும். அன்றிரவு என்னிடம் ஜிம், தான் நாளை கைதாகலாம் என்று சொன்னான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஜிம் ஒரு பார்மா கம்பெனியில் வேலை செய்கிறான். அவனை ஏன் போலிஸ் கைது செய்ய வேண்டும்? ‘இன்சைடர் ட்ரேடிங்’ என்றான் ஜிம்.

தன் கம்பெனியில் நடக்கும் சில விஷயங்களை ஸ்டாக் மார்க்கெட்டில் விளையாடும் சிலருக்கு ஜிம் சொல்லியிருக்கிறான். இதனால் அவர்களுக்கு கொள்ளை லாபமாம். ‘நான் செய்வது தவறு என்று நான் உணரவில்லை” என்று கூறி ஒரு குழந்தை போல் அழ ஆரம்பித்தான். இப்பொழுது பத்திரிகையில் ஜிம் பார்சனின் பெயரும் புகைப்படமும் வந்திருக்கிறது. நீல நிறக் கண்கள், பொன்னிற தலைமுடி, சவரம் செய்யப்பட்ட உருண்டை முகம். இதழ்களில் புன்னகை. அவன் காலேஜில் படிக்கும்பொழுது எடுத்த படமாக இருக்கும். ‘Jim Parson involved in insider trading’ என்று கொட்டை எழுத்தில் தலைப்பு.

oOo

நான் மஞ்சுநாத் அங்கிளுக்கு போன் செய்தேன். “பேப்பர் பாத்தேம்மா. உங்கப்பா ஒண்ணும் தப்பு செய்யல்ல. அவன் எப்போவுமே லஞ்சம் வாங்காத நேர்மையான ஆபிசர். அதுனால அவனுக்கு நிறைய எதிரிகள். அதுல எவனோதான் வேணும்னு மாட்டி விட்டிருக்கான்,” என்றார். இதைக் கேட்டு எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

ஆனால் அந்த நிம்மதி காலை பதினொரு மணி வரையில் தான் நீடித்தது. பதினொரு மணியளவில் நான்கு விஜிலன்ஸ் ஆட்கள் கையில் ஏதோ பேப்பருடன் வந்தார்கள். மஞ்சுநாத் அங்கிள் அப்பொழுது வீட்டில் இருந்தார். விஜிலன்ஸ் ஆட்கள் வீடு முழுவதும் தேடினார்கள். கடைசியில் என் முன் கட்டுகட்டாக நூறு ருபாய் நோட்டுக்களை அடுக்கிக் காட்டிவிட்டு என்னிடம் ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னார்கள். அவர்கள் போனபிறகு மஞ்சுநாத் அங்கிளிடம் இதெல்லாம் என்ன என்று கேட்டேன். “பயப்படாதே. உன் அப்பா வந்து எல்லா விஷயமும் சொல்லுவான்” என்று சமாதானம் சொன்னார்.

அப்பா வருவதற்குள் பலர் என்னை விளக்கம் கேட்க ஆரம்பித்தார்கள். பக்கத்தில் இருப்பவர்கள், என் உறவினர்கள், நண்பர்கள், கடையில் வேலை செய்பவர்கள், காய்கறி விற்பவர்கள் என்று சகலரும் என்னை துக்கம் விசாரிப்பது போல் விசாரித்தார்கள். எனக்கு வீட்டை விட்டு வெளியே செல்லவே பிடிக்கவில்லை. அப்பா எப்பொழுது வருவார், எப்பொழுது எனக்கு பதில் சொல்வார், நான் எப்பொழுது வெளியே சென்று, “என் அப்பா ஒரு தவறும் செய்யவில்லை’ என்று கூறுவேன் என்று காத்துக் கிடந்தேன்.

ஆனால் அப்பா ஒன்றும் சொல்லவில்லை. ஒரு வாரம் கழித்து அப்பா பெயில் கிடைத்து வீட்டிற்கு வந்தார். ஒன்றுமே ஆகாதது போல் நடந்து கொண்டார். நான் பல முறை அவரிடம், “என்ன நடந்தது, உண்மை என்ன?” என்று கேட்டேன். ஆனால் அவரோ “ஏனில்ல”, என்று ஒரே வார்த்தையில் என் கேள்விகளைக் கடந்து சென்றார். நான் பல முறை அவர் முன் அழுது கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் எந்த பதிலும் சொன்னதில்லை.

oOo

ஜிம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தான், ஆனால் அவன் என்ன பேசுகிறான் என்று எனக்கு உரைக்கவில்லை. என் மனம் முழுதும் அந்தப் பத்திரிகையில் உள்ள ஜிம் மேல் தான் இருந்தது. “இவன் என்னை ஏமாற்றமாட்டான் என்றுதானே திருமணம் செய்து கொண்டேன். இப்பொழுது இப்படிச் செய்துவிட்டு வந்து நிற்கிறானே துரோகி,” என்றது என் மனம். நான் சட்டென்று பத்திரிகையை வீசிவிட்டு பெட்ரூம் போனேன். ஜிம் என்னுடன் உள்ளே வர பார்த்தான். ‘ப்ளீஸ் லீவ் மீ அலோன்’ என்று சொன்னவுடன் வெளியே நின்றுவிட்டான். நான் படுக்கையில் விழுந்தேன்.

oOo

ஒரு நாள் மாலை அப்பாவின் நண்பர்கள் வீட்டிற்கு வந்தார்கள். எல்லோரும் சேர்ந்து மது அருந்த ஆரம்பித்தார்கள். நான் என் அறையில் இருந்தேன். அப்பா மது அருந்துவது சகஜம். அவர் நண்பர்களும் அடிக்கடி வருவார்கள். எல்லோரும் மது அருந்திவிட்டு செல்வார்கள். எல்லாமே மிதமாகதான் இருக்கும். சிரிப்பொலி இருக்குமே தவிர கூச்சல் கலாட்டா என்று பலர் நினைப்பது போல் எதுவும் இருக்காது. எல்லோரும் தெளிவாகவே இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு குரல்கள் அவ்வப்போது உயர்ந்தன. “நம்ப மாத்திரமா லஞ்சம் வாங்கினோம்? பூரா டிபார்ட்மெண்ட் வாங்குது. தேவடியா மகன் நம்பள மட்டும் என் அரெஸ்ட் பண்ணனும்?”, என்று சதானந்த் அங்கிள் புலம்பினார். “நீ ஏன்டா வீட்ல பணத்த வச்ச. இப்போ பணமும் போச்சு அவங்க கேஸ் ஸ்ட்ராங் ஆயிடிச்சி” என்று இன்னொரு குரல் கேட்டது. அவர்கள் எல்லோரும் வீட்டுக்குச் செல்வதற்குள் அப்பா லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்று எனக்கு சந்தேகமில்லாமல் தெரிந்துவிட்டது.

அடுத்த நாள் காலை எனக்கு அப்பாவை பார்க்கவே பிடிக்கவில்லை. எங்களிடையே பேச்சு குறைய ஆரம்பித்தது. நான் அவருடன் வெளியே செல்வதைத் தவிர்த்தேன். ஆனால் அவர் செய்த செயல் என்னை சுட்டது. கல்லூரியில் என்னுடன் படிக்கும் ஒருவன், நான் அவனுக்கு விடைத்தாள் காட்டவில்லை என்பதற்காக, “அப்பனப் போல இருக்கா. லஞ்சம் குடுத்தா தான் ஆன்சர் காமிப்பா” என்று சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள். பக்கத்து வீட்டு மாமி ஒரு நாள் என்னைப் பார்த்து, “உங்க வீட்டுக்கு மாடி போர்ஷன் கட்டலாமே. உங்களுக்கு பணத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லையே,” என்றாள். எந்த நிமிடமும் காதலனாக மாறக்கூடிய நெருங்கிய சிநேகிதன் ஸ்ரீகாந்த் என்னை விட்டு மெல்ல விலகிச் சென்றான். எனக்கு அடி மேல் அடி விழுவது போல் இருந்தது.

அப்பா குடியில் மூழ்கலானார். “ஏன்டா இப்படி பண்ற. உனக்கு ஒரு பெண் இருக்கா. இன்னும் ஒரு வருஷத்துல ரிடைர் ஆகப் போற. எதுக்கு இப்படி குடிக்கற?” என்று மஞ்சுநாத் அங்கிள் எவ்வளவு சொல்லியும் அப்பா குடியை நிறுத்தவில்லை. ஒரு நாள் என் நண்பர்களுடன் நான் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் இருக்கும்பொழுது அப்பா அங்கே போதையில் எங்கள் முன் மயங்கி விழுந்தார். எனக்கு அவமானம் தாளவில்லை. இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

oOo

பத்திரிகையில் செய்தி வந்த மாலை, கிரேக் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஜிம் செல்லும் சர்ச்சில் கிரேக்தான் பாதிரியார். கிரேக் என்னிடம் ஒரு மணி நேரம் பேசினார். ஜிம் மனம் திருந்திவிட்டதாகவும், தான் செய்த தவறை சொல்லி பாவ மன்னிப்பு கேட்டதாகவும், அவன் அப்ரூவராக மாறப் போவதாகவும், நான் அவனை மன்னித்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அன்று இரவு ஜிம் என் கையைப் பிடித்துக்கொண்டு, நான் இனி இது போல் எதுவும் செய்ய மாட்டேன், என்று சத்தியம் செய்தான். நான் ஒன்றும் சொல்லாததால் அழ ஆரம்பித்தான். என்னால் அதை தாங்க முடியவில்லை. அவனை இறுகக் கட்டிக்கொண்டு “இட்ஸ் ஓகே, இட்ஸ் ஓகே”, என்று சமாதானப்படுத்தினேன்.

oOo

எங்கள் உறவுக்காரர்கள் வருவதை நிறுத்திவிட்டிருந்தார்கள். அப்பாவிற்கு சொந்த சகோதர சகோதரிகள் கிடையாது. எல்லோரும் தூரத்து சொந்தம்தான். அம்மா பக்கத்து உறவினர்கள் சிலர் வந்தார்கள். அப்பா இருக்கும் நிலைமையை பார்த்துவிட்டு என்னை சோகக் கண்களுடம் பார்த்தவிட்டு, “எல்லாம் விதி” என்று கூறிவிட்டு சென்றார்கள். என் பெரியம்மா தில்லியில் இருந்தார். எப்பொழுதாவது போன் செய்வார். அப்பா மீது அவருக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை. மஞ்சுநாத் அங்கிள் மட்டும் தினமும் வந்து அப்பாவைத் திட்டிவிட்டு செல்வார்.

எனக்கு முதலில் அமெரிக்கா போகவேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. ஆனால் அங்கு பல இந்தியர்கள் வருவார்கள். நம்மவர்கள் நம் குடும்பத்தை பற்றி கேட்காமல் இருக்க மாட்டார்கள். அதனால் ஐரோப்பாவில் எங்காவது செல்ல நினைத்தேன். பின்லாந்தில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. நான் படிக்க ஊரைவிட்டு செல்கிறேன் என்று சொன்னபொழுது அப்பா வெறும் ‘உம்’ என்றார்.

நான் ஊரைவிட்டு கிளம்பும்பொழுது அவர் குடிபோதையில் மயங்கிக் கிடந்தார். மஞ்சுநாத் அங்கிள்தான் என்னை ஏர்போர்ட்டில் டிராப் செய்தார்.

oOo

ஜிம் மாறிக்கொண்டிருந்தான். அப்ரூவராக மாறிய பிறகு சோஷல் சர்வீஸில் ஈடுபட்டான். நான் அவனை நான்கு ஆண்டுகளுக்கு முன் மணந்திருந்தேன். பின்லாந்தில் படித்துவிட்டு, ஜெர்மனியில் வேலைக்கு சேர்ந்து, அமெரிக்கனான ஜிம்மைச் சந்தித்து, எங்களுக்குள் காதல் மலர்ந்து, அவனை திருமணம் செய்து கொண்டேன். நான் என் பழைய வாழ்க்கையை பற்றி அவனுக்கு சொல்லவில்லை. சில முறை கேட்டு பார்த்தான். ஆனால் எனக்கு அதை பற்றி பேச பிடிக்கவில்லை என்பதை அவன் உணர்ந்து கொண்டான். பிறகு அதை பற்றி அவனும் பேசுவதில்லை, நானும் பேசியதில்லை.

திருமணம் ஆன இரண்டு வருடங்கள் கழித்து நாங்கள் அமெரிக்கா வந்தோம். அப்பொழுதெல்லாம் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்த ஜிம் இப்பொழுது ஒரு பொறுப்புள்ள குடிமகன் போல் மாறிவிட்டான்.

oOo

நான் பின்லாந்த் வந்து சேர்ந்தவுடன் மஞ்சுநாத் அங்கிளுக்குதான் கடிதம் எழுதினேன். அப்பாவிற்கு எழுதவில்லை. மஞ்சுநாத் அங்கிள் அப்பாவைப் பற்றிதான் கவலைப்படுவதாக பதில் எழுதினார். ஒரு வருடம் கழித்து அப்பாவிற்கு ஒரு வருட சிறை தண்டனை கிடைத்ததை பற்றி மிகுந்த வருத்தத்துடன் எழுதினார். இனி இந்தியா பக்கமே போகக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

oOo

ஒரு வருடம் கழித்து தீர்ப்பு வந்தது. அன்று நானும் ஜிம்முடன் கோர்ட்டுக்கு சென்றிருந்தேன். பலருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. ஜிம்மின் வாக்குமூலம் இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. கோர்ட்டை விட்டு வெளியே வரும் பொழுது பலர் ஜிம்மின் கையை குலுக்கினார்கள். என்னையும் எல்லோரும் பாராட்டினார்கள். “யூ நெவெர் கேவ் அப். ஜிம்முக்கு பலமே நீ தான்” என்று புகழ்ந்தார்கள். அடுத்த நாள் பத்திரிகையில் எங்கள் இருவர் படமும் வந்தது. ஜிம் எப்படி ஒரு கண்ணியமான குடிமகனாக மாறி இருக்கிறான் என்பதை சிலாகித்து எழுதியிருந்தார்கள். எனக்கு அதைப் படித்தவுடன், அப்பாவை பார்க்க வேண்டும் என்று முதல்முறையாக தோன்றியது.

ஜிம்மிடம் நான் இந்தியா போக வேண்டும் என்றேன். புருவங்களை உயர்த்தி “இந்தியா?” என்றான். “எஸ்” என்றேன். “நானும் கூட வரவேண்டுமா?” என்றான். “இல்லை. நான் தனியாக செல்ல வேண்டும்” என்றேன். “நீ என்னை கைவிட மாட்டாய் அல்லவா” என்றான். “இல்லை. இது நீ சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. சீக்கிரம் திரும்பிவிடுவேன்” என்று சொன்ன பிறகு தான் அவனுக்கு ஆறுதலாக இருந்தது.

பெங்களூருக்கு வந்து எம்.ஜி. ரோட்டில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கினேன். ஒரு வாரம் கழித்து ரிடர்ன் டிக்கெட். ஒவ்வொரு நாளும் கிளம்ப வேண்டும் என்று நினைக்கும்பொழுது எனக்கு தைரியம் வராது. பயம் கவ்விக் கொள்ளும். ஹோட்டலிலேயே தங்கி விடுவேன்.

இப்படியே ஒரு வாரம் ஓடி விட்டது. நான் மறுபடியும் அமெரிக்காவிற்கு கிளம்ப வேண்டிய நாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு கார் ஏற்பாடு செய்து ஜெயநகர் நோக்கி புறப்பட்டேன். அப்பாவைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நேரே ஏர்போர்ட் செல்ல ப்ளான் செய்திருந்தேன்.

அப்பா அந்த வீட்டில்தான் இருப்பாரா? இப்பொழுது எப்படி இருக்கிறாரோ?  அப்பாவுடன் இருந்த ஒரே தொடர்பான மஞ்சுநாத் அங்கிள் மூன்று வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். எனக்கு அதை நினைக்கும்பொழுது மிகுந்த பயமாக இருந்தது. கார் மெதுவாக எங்கள் வீதிக்குள் நுழைந்தது. என் பயம் அதிகரித்தது. வேர்வையை துடைத்துக்கொண்டு வெளியே எட்டி பார்த்தேன்.

பக்கத்தில் இருந்த வீடுகள் எல்லாம் காம்ப்ளெக்ஸாக மாறிவிட்டிருந்தன. எங்கள் வீடு மட்டும் அப்படியே இருந்தது. அப்படியே அல்ல. சற்று அழுது வடிந்து கொண்டிருந்தது. நான் விட்டுச் சென்ற பிறகு பெயிண்ட் அடிக்கவில்லை போலிருந்தது. சில இடங்களில் பெயிண்ட் காணாமல் போய் செங்கல் பல்லை இளித்தது. காம்பவுண்ட் அருகில் எப்பொழுதும் பூத்திருக்கும் செடிகள் இப்பொழுது இல்லை.

வீட்டைத் தாண்டி டிரைவர் காரை நிறுத்தினான். நான் மெதுவாக நடந்து கேட் அருகில் வந்தேன். நடப்பதே கடினமாக இருந்தது. அப்பா இப்பொழுது எந்த நிலையில் இருப்பாரோ?

கேட் அருகே வந்தவுடன் அவரை பார்த்தேன். இன்னும் மாலை மங்கவில்லை. அவர் எனக்கு முதுகைக் காட்டி நின்றுக்கொண்டிருந்தார். தலை மயிர் நரைத்திருந்தது, ஆனால் அவர் உடல் வாகு அப்படியே தான் இருந்தது. நான் கேட் திறக்கும் சப்தம் கேட்டு அவர் திரும்பினார். என்னை அறியாமல் நான் ஸ்தம்பித்து நின்றேன். அவர் என்னை உற்று பார்த்தார். நான் மிகவும் மாறியிருந்தேன். பாப் கட், ஜீன்ஸ் மற்றும் மேக்கப் போட்டிருந்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா? இல்லை அவரால் நான் திரும்பி வந்தேன் என்பதை நம்ப முடியவில்லையா?

உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர் சட்டேன்று சிரித்தார். நான் என் இள வயதில் பார்த்த அப்பாவாக மாறினார். பழைய நினைவுகள் என்னைத் தாக்கி விழியோரம் நீர் கோர்த்துக்கொண்டது. சிரித்துக்கொண்டே என்னை நோக்கி நடந்து வந்தார். “குருபிரசாத் நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட் குடுத்து அனுப்பினானா? எங்க சர்டிபிகேட் காமி” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்பொழுது வீட்டுக்குளிருந்து ஒரு பெண்மணி வெளியே வந்தார். “இங்க இருக்கீங்களா. உள்ள வாங்க காபி தரேன்” என்றார். “ஒரு நிமிஷம் இரு. குரு பிரசாத் இவங்கள அனுபியிருக்கான். நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட் இருந்தா வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் மாத்திடலாம்” என்றார். அந்தப் பெண்மணி தலையில் அடித்துக்கொண்டு, “இவங்கள யாரும் அனுப்பல. ஏதோ அட்ரஸ் கேட்டு வந்திருக்காங்க” என்றாள்.

அவர் மறுபடியும் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, அந்த பெண்மணி பக்கம் திரும்பி, “நீ ஏன் எனக்கு இன்னும் லஞ்ச் போடல. ஒரே பசிக்கறது” என்றார். “லஞ்ச் எப்போவோ சாப்பிட்டு டிபனும் ஆச்சு. இப்போ காபி குடிக்க வாங்க” என்று கூறி அவர் கையைப் பிடித்து மெதுவாக அழைத்துச் செல்கையில் என்னை பார்த்து, “நான் வந்து அட்ரஸ் சொல்றேன்” என்றார்.

அதற்கு பிறகு என்ன நடந்தது என்று இன்று வரை எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. அந்தப் பெண்மணி அப்பாவை கையை பிடித்து உள்ளே அழைத்து போவதைப் பார்க்கிறேன். அதற்கு பிறகு பெங்களுரு விட்டு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். டாக்ஸி ஏர்போர்ட் நோக்கி விரைந்துக் கொண்டிருந்ததுதான் நினைவிருக்கிறது.

கவியின் கண்- முதியோர் இல்லம்

எஸ். சுரேஷ்

முதியோர் இல்லம்
– விஸ்லாவா சிம்போர்ஸ்கா

இதோ வந்துவிட்டார் மகாராணி-
நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும்.
ராங்கிக்காரி நம் ஹெலன்,
முதலில் அவளை யார் ராணியாக்கியது!
உதட்டுச்சாயமும் சவுரி முடியுமாய் வந்து விட்டாள்,
நமக்கென்ன அவளைப் பற்றி அக்கறை,
அல்லது சுவர்க்கத்தில் இருக்கும் மூன்று மகன்களும்தான்
அங்கிருந்து அவளைப் பார்க்கப் போகிறார்களா!

“அவர்கள் போரில் சாகாதிருந்தால்
நான் இங்கிருக்க மாட்டேன்.
குளிர்காலத்தில் ஒரு பிள்ளையிடம் இருப்பேன்,
கோடையில் இன்னொருவனிடம் இருப்பேன்.”
அவள் எப்படி இவ்வளவு நிச்சயமாய்ச் சொல்கிறாள்?
நானும்தான் செத்திருப்பேன்,
அவள் என் அம்மாவாய் இருந்தால்.

அவளது கேள்விகளுக்கு முடிவேயில்லை
(“உன் விவகாரங்களில் மூக்கை நுழைக்கவில்லை”),
உயிரோடுதானே இருக்கிறார்கள், ஆனால்,
ஏன் உன் பிள்ளைகளும் பெண்களும்
உன்னை ஒரு வார்த்தைகூட விசாரிப்பதில்லை,
“என் பிள்ளைகள் உயிரோடு இருந்தால்,
என் விடுமுறைக் காலங்கள் முழுதும்
மூன்றாம் பிள்ளையுடன் இருப்பேன்”.

ஆமாம், அவன் தன் தங்க ரதத்தில்
இவளைக் கூட்டிப் போக வருவான்.
அதை ஒரு அன்னப் பறவை இழுத்துவரும்,
அல்லது அல்லி மலர் வெண்புறா,
அவளை அவன் மறக்கவேயில்லை
என்று எங்களுக்குக் காட்ட வரப்போகிறான்,
அவன் தன் தாய்ப்பாசத்துக்கு எவ்வளவு
கடன்பட்டிருக்கிறான் என்று காட்டப்போகிறான்.

தன் பழைய பல்லவியை ஹெலன்
மீண்டும் பாடத்துவங்கும்போது,
இங்கு தாதியாய் இருக்கும் ஜேன்,
அவளாலும் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடிவதில்லை-
இத்தனைக்கும் ஜேனின் வேலை
எங்களுக்கு ஆறுதலாய் இருப்பது-
திங்கள் முதல் வெள்ளி வரை,
இரு வார விடுப்புடன்.

oOo
விஸ்லாவா மிகவும் சிக்கலான விஷயங்களையும் உரையாடுவது போல் எளிமையாகவும், அப்பழுக்கில்லாத தெளிவுடனும் பேசுவதை நாம் இந்த தொடரில் பார்த்தோம். இதுவரை நாம் பார்த்த கவிதைகளே திகைக்க வைக்கின்றன, அவற்றில் இன்னொன்று.

முதுமையையும் அதனுடன் தொடரும் பிரச்சினைகளையும் நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம். இந்தக் கவிதை எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க சிறுகதை போலிருக்கிறது. இதில் விஸ்லாவா முதுமையடைந்தவர்களின் மனதையும், அவர்களைப் பார்த்துக் கொள்பவர்களின் மனதையும் ஒரே சமயத்தில் புரிந்து கொள்கிறார்.

எப்படிப்பட்ட சமூகமாக இருந்தாலும் பிள்ளைகள் தம் பெற்றோரை வயதான காலத்தில் இப்படி நடந்த வேண்டும் என்று சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. நம் சமூகத்தில் வயதான பெற்றோர் தம் பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது, அவர்களைப் பார்த்துக் கொள்ளும் கடமை இளைய தலைமுறைக்கு உரியது. ஆனால் மேற்கத்திய சமூகங்களில் முதுமை இல்லங்களுக்கு அவ்வப்போது சென்று அங்கிருக்கும் பெற்றோரை அவர்களின் பிள்ளைகள் பார்த்து வர வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அது முடியாதபோது போனில் அழைத்தாவது பேச வேண்டும். எதிர்பார்ப்புகள் வெவ்வேறானவை என்றாலும், பிள்ளைகள் தம் அன்பை பெற்றோருக்கு ஒரு அக்கறையாக வெளிப்படுத்துவது மிக முக்கியமாக இருக்கிறது.

இந்தக் கவிதையில் நாம் ஹெலனைப் பார்க்கிறோம். அவர் ஒரு மகாராணி, அவர் தன்னையே அந்தப் பதவியில் நியமித்துக் கொண்டிருக்கலாம். அவர் பிறர் விவகாரங்களில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். மற்றவர்களின் பிள்ளைகள் ஏன் அடிக்கடி வந்து பார்ப்பதில்லை என்று கேட்கிறார். அவரது மகன்கள் மூவரும் போரில் இறந்து விட்டார்கள். இந்த இடத்தில் விஸ்லாவா முதியோர் இல்லம் போன்ற இடத்தல் நிலவும் சிக்கலான உறவுகளைப் பேசுகிறார். அதே சமயம் சமூக எதிர்பார்ப்புகளையும் குறிப்பிடத் தவறுவதில்லை. அவளது மகன்கள் இறந்து போனது, ஹெலனுக்கு சுதந்திரம் தந்திருக்கிறது. இப்போது அவர் தான் விருப்பப்பட்ட கனவில் நம்பிக்கை வைக்க முடிகிறது- என் மகன்கள் என்னை எப்படியெல்லாம் நேசித்திருப்பார்கள், அவர்களுடன் எப்படியெல்லாம் பொழுதைக் கழித்திருக்க முடியும் என்று பல கற்பனைகளை மெய் போல் நம்புகிறார். அவர்களது இல்லாமை பிறரின் கதியிலிருந்து அவரைக் காப்பாற்றி ஒரு ராணியின் இடத்தில் உட்கார வைத்திருக்கிறது. யாருக்கும் அவரைக் கேள்வி கேட்கும் துணிச்சல் இல்லை. ஏன், அங்கு கேள்விக்கே இடமில்லை.

முதியோர் இல்லத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு இது எரிச்சலாக இருக்கிறது, காரணம், அவர்களை யாராவது கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஏனெனில், பெற்றோர்கள் பிள்ளைகளிடம் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு கொண்டவர்களாய் இருக்க வேண்டும் என்ற ஒரு சமூக கட்டமைப்பு இருக்கிறது. பிள்ளைகள் தம் கடமையை நிறைவேற்ற வேண்டும். அதைச் செய்யத் தவறினால் அதற்கு ஏதோ ஒரு வகையில் பெற்றோர் கார்ணமாகின்றனர். இது முதியவர்களைக் காயப்படுத்துகிறது என்று நினைக்கிறேன். இங்கே ஹெலன் அது போன்ற கேள்விகளிலிருந்து தப்பித்து விட்டதால் அவர் பிறரது கோபத்துக்கும் பொறாமைக்கும் பாத்திரமாகிறார்.

பொதுவாக நாம், வயது ஏற ஏற மனமுதிர்ச்சி ஏற்படும், வாழ்க்கையைப் புரிந்து கொள்வோம், அமைதியானவர்கள் ஆகி, வாழ்வை அதன் குறை நிறைகளோடு ஏற்றுக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் துரதிருஷ்டம் என்னவென்றால், இதெல்லாம் ஒரு லட்சியமாகத்தான் இருக்கிறது. செயலில் எதுவும் நடக்கக் காணோம். அனுபவத்தால் பழுத்தவர்கள் இருக்கின்றார்கள் என்றாலும் பொதுவாக வயதானவர்கள் கசப்பானவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை, சீக்கிரம் கோபப்படுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன- குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நாம் தேவையில்லை என்ற உணர்வு, தம் உடலால் கைவிடப்பட்ட இயலாமை ஆத்திரமாகிறது, பல முனைகளில் சந்தித்த தோல்வி, தம் வயதினரின் வெற்றி (அது ஒரு அநியாயம் என்று நினைக்கிறார்கள்).

இந்தியாவில் முன்னெல்லாம் பல குடும்பங்களில் வயதானவர்கள் எவ்வளவு முதியவர்களாக இருந்தாலும் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அந்தக் காலத்திலும்கூட முதியவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம். ஆனால் நவீன நகர வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இங்கு, பணம் சம்பாதிப்பவர்கள்தான் முடிவு எடுக்கிறார்கள். முதியவர்கள் பேரன் பேத்தியைப் பார்த்துக் கொள்வதில் ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. வயதான காலத்தில் இது ஏதோ ஒரு வகையில் அவர்களை முக்கியமானவர்களாக வைத்திருக்கிறது. அவர்களையும் நாம் சகித்துக் கொள்கிறோம், கேள்வி கேட்டு தொல்லை செய்வதில்லை. பொதுவாக கேள்வி கேட்பதுதான் முதியவர்களை தொய்வடையச் செய்கிறது, நாமும் கேள்விகளை நிறுத்திக் கொள்வதாயில்லை.

விஸ்லாவா மிகக் சில சொற்களிலேயே முதிவர்களைப் பார்த்துக் கொள்பவர்களின் வாழ்கையைச் சொல்லிவிடுகிறார். என் தந்தையின் நண்பர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது நான் அவருடன் மருத்துவமனைக்கு ஒருமுறை போக வேண்டியிருந்தது. அவரது சகா ஒருவர் என்னிடம், “புற்றுநோய் மருத்துவர்களைப் பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பார். அவர்கள் எப்போதும் தோற்றுப் போகிறார்கள், ஆனால்கூட அவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தாக வேண்டும்,” என்று சொன்னார். இது ஒரு முக்கியமான விஷயம். இவர்கள்தான் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தபின்னும் தொடர்ந்து போராடுகிறார்கள்.

முதியவர்களைப் பார்த்துக் கொள்பவர்களும் அப்படிதான். அது குடும்ப உறுப்பினராக இருக்கலாம், அல்லது நர்ஸாக வேலை செய்பவராக இருக்கலாம். அவர்கள் வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதே கஷ்டமாக இருக்கிறது. மரணம் வரை ஒரு முதியவரை கவனித்துவிட்டு அடுத்து இன்னொருவரிடம் அன்பு செலுத்தியாக வேண்டும். இந்தச் சுழலுக்கு முடிவே இல்லை. மகத்தான கவிஞர் மட்டுமே கவனிக்கக்கூடிய விஷயத்தை விஸ்லாவா மிகச் சாதாரணமாகச் சொல்கிறார், “பார்த்துக்கொள்ள வேண்டிய ஜேன்கூட சிரிக்காமல் இருக்க முடியவில்லை”. இப்போது ஜேன் உயிர்ப்பு கொண்ட மனிதராகிறார்.

அந்த ஒரு வாக்கியம் ஜேன் ஒவ்வொரு நாளும் நிகழ்த்தும் போராட்டத்தை உணர்த்துகிறது. அவருக்காக நாம் வருந்துகிறோம், அவரது வேலை பிறருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்பதுதான். இங்கு விஸ்லாவா மிகச் சாதாரணமாக ஒரு உண்மையைச் சொல்கிறார், பிறரைக் கவனித்துக் கொள்பவர்கள் விஷயத்தில் நாம் அக்கறையில்லாதவர்களாக இருக்கிறோம்.

இதுதான் இன்றைய யதார்த்தம். அது மட்டுமல்ல, நம் நாளைய யதார்த்தமும் இதுவாக இருக்கப் போகிறது.