கமல தேவி

பாதாளக்கரண்டி – கமலதேவி சிறுகதை

குப்பைமேனிகளும், வெட்டுக்காயப்பூண்டுகளும் ,தும்பைகளும் சூழ தனித்துக்கிடந்த அந்தக்கிணறு அவர்கள் கவனத்திலிருந்து நழுவியிருந்தது.எப்போதாவது எட்டிப்பார்க்கும் சிறுபிள்ளைகளாலும், பறக்கத்தெரியாமல் பறந்து விழுந்துவிடும் கோழிகளாலும் துணுக்குற்று, “என்ன மண்ணாங்கட்டிக்கு இத திறந்து போட்டுருகானுங்க,”என்று அதன் பக்கத்தில் வருவார்கள்.

செடிகள் அடர்ந்து சிறுபிள்ளைகளும் கிணற்றை மறுதலிக்கும் மழைகாலத்தில் பரவிய காய்ச்சலால் அது மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.ஊரின் தெற்குத்தெருவான கணபதிபாளையத்தின் மையத்து நாற்சந்தியிலிருந்தது அந்தக்கிணறு.

ப்ளீச்சிங் பவுடர் கொட்டப்பட்டு மீண்டும் தனிமையில் அமர்ந்த அதை லட்சுமி அம்மாவின் திடீர் இறப்பு எழுப்பியது.அன்று கூடிய கூட்டத்திற்கு இடம் பற்றாமல் ஆட்கள் கிணற்றின் சுற்றுசுவரிலும் முன்னால் போடப்பட்டிருந்த சிமெண்ட் தளத்திலும், சுற்றுசுவர் மட்டத்திற்கு இடிக்கப்பட்டிருந்த மோட்டார் அறைசுவர்களிலும் அமர்ந்தார்கள்.

ட்ரம்ஸ் அராஜகம் இல்லாமல் ஆட்களை அதிரபதற வைக்காமல் தப்புகள் தாளமிட்டன.சத்தம் தாளமுடியாதவர்களின் சொல்லமெல்ல முடியாத சங்கடமான சொல்கேட்காமல் லட்சுமிஅம்மாள் போகும்நேரத்திலும் உறுத்தாமலிருந்தாள்.

ஆட்களின் சந்தடியால் கிணற்றுள் சலனம். கிணற்றின் உள்சுவரில் ஏறஇறங்க வைக்கப்பட்டிருந்த கால்பிடி குழிகளில் கூடு கட்டியிருந்த சிட்டுகள் ‘விருட்’ என எழும்பவும், மேலிருந்து கீழே ‘சர்’ என பாயவுமாக சலசலத்தன.

அடுத்தவீட்டின் முன்திண்ணையில் அமர்ந்திருந்த வீரய்யன்பாட்டா, “இந்தக்கேணி வெட்டுனப்ப எனக்கு ஐஞ்சாறு வயசிருக்கும்.இங்கனயே பழியாக்கெடப்பம்.எங்கள மூக்கன் விரட்டிக்கிட்டே இருப்பாரு,”என்றார்.

பாட்டாவிற்கு பக்கத்தில் சேகர்,“மூக்கன்னா?”என்று புருவங்களை உயர்த்தி நெற்றியை சுருக்கினான்.வெள்ளைவேட்டியை கொஞ்சம் சுருட்டியபடி திரும்பி அமர்ந்தான்.

“செவப்புகல்லுதோடு கல்ஒட்டரோட முப்பாட்டனாரு,”

“ வம்சந்தொட்டு நம்மளோட தின்னு, தூங்கி, செத்து கூடவே வராங்களோ.அவுங்களும் நம்ம ஊருல பூர்வீகமான ஆளுகளா பாட்டா?”

“ஆமய்யா…அந்தகாலத்தில திருப்பதி வரைக்கு போய் வந்தவரு அவரு ஒருத்தருதான்.இந்தக்கேணி வெட்டறதுக்கு அவரு சாதிசனத்துல சூட்சுமுமான ஆளுகள கூட்டியாந்து வேலைய முடிச்சாரு..”

“முன்னாடிவீட்டுகாரவுங்கதான் இந்த சுத்துசுவரு கட்டி வருசமெழுதி முடிச்சாரு.நம்ம ஊருக்கு வயசு கம்மி.நம்ம காடுதிருத்தினப்பவே அவுங்களும் கூட இருந்தாங்களாம். எங்கப்பாரு சொல்வாரு.நம்மஊருல இங்கருக்கற பழையஆளுக எல்லாரும் பூர்வீகந்தான்.அவங்க தொழில்காரவங்க.நம்ம பாட்டனுங்க நிலத்துலக் கெடந்தாங்க.அப்பெல்லாம் தாயா பிள்ளையா இருந்தோம்,”

“வாய்க்கு வந்தத உலராத பாட்டா..”என்றவன் நிறுத்தியபின் அவனே, “எல்லாருட்டயும் சும்மா மேம்பாக்கு பழக்கம்.அதுனால என்ன ஆகப்போகுது,”என்று சிரித்தான்.

“நீங்க என்ன சொத்தெழுதி தருவீங்களா,”என்ற பாட்டா கேலியாக ஒருசிரிப்புடன் நிறுத்தினார்.

“என்னன்னு சொல்லு பாட்டா..”

“சொன்னா கோவிச்சுக்கப்பிடாது..”

“இல்ல சொல்லு..”

“பொம்பளைக்கு வைக்கிற கெடுபிடிய சாதிசனத்துக்கும் வச்சுப்புட்டீங்களே..”என்றப்பின் வாயிலிருந்த புகையிலையை காறித்துப்பினார்.

வெற்றிலைத்துகள்களை துப்பிவிட்டு முற்றிலும் வெண்மையான தாடிமீசையை தோள்துண்டால் துடைத்தார்.பின்,“அவங்ககுடும்பத்து கஷ்டகாலத்துல ஏகாதேசிக்கு சாமிக்கும்பிட நெல்லு இல்ல. கம்மஞ்சோறாக்கியா சாமி கும்படறது? முன்னாலவீட்டு நாய்க்கரு மனசொடிஞ்சு போனாரு.இந்த பக்கத்திலிருந்தவங்க அரிசி நெல்லு பருப்பு எல்லாத்தையும் கொண்டாந்து அவருவீட்டு வாசல்ல போட்டம்.மொதநாளு அரிசிய திரிச்சி கிண்டிப்போட்டாங்க.வெல்லங்காய்ச்சர பரதன் கரும்புப்பால் கொண்டாந்தான். பானகம் கலக்கி குடுத்தாங்க.ராவுக்கு மாவுவெல்லம் சேத்துத்தின்னுட்டு தண்ணியக் குடிச்சுப்பிட்டு இங்கனதான் ஒக்காந்தோம். நாய்க்கரு ராமாயணக்கதைய சொல்லிக்கிட்டு இருக்கப்பவே பயக முருங்க மரத்தையே ஒடிச்சு கொண்டாந்தானுங்க.இருக்கற காயெல்லாம் போட்டு ஒரு குழம்பு.முறுங்கீர வதக்கி விடியகாத்தால வெளிச்சம் வர நேரத்துக்கு சாமியக்கும்பிட்டாச்சு.வெளிச்சம் துலங்குற நேரத்துல நாய்க்கரு தெருவுல நின்னு தலைக்கு மேல கையெடுத்து கும்பிட்டு சீரங்கம் இருக்கற திக்கைப்பாத்து, “ ரங்கா.. உங்கதவு எங்களுக்கும் தெறந்திருச்சுய்யான்னு,” சொல்லிட்டு எங்களையும் பாத்தாரு .அவரு நின்னக்கோலம் நெஞ்சுக்குள்ள அப்பிடியே இன்னிக்கும் நிக்கிது.இந்தத்தெருவுல விடியகாத்தால வரிசயா இலையப்போட்டு தின்னோம்.குந்தானியில நெல்லப்போட்டு ஆம்பளையும் பொம்பளையுமா குத்திப் புடைச்சோம். இந்தத்தெருவே வேலசெஞ்சம்.நல்லது கெட்டது எல்லாத்துக்கும் இந்தக் கேணி தண்ணிதான்,”என்றபடி கண்கள் வேறுகாலத்திலிருக்க ஆள் இங்கு அமர்ந்திருந்தார்.

“பாட்டா..பாட்டா..”

“அடுத்த ஏகாதேசிக்கு நாங்களும் வீட்ல சாமிகும்பிட தொவங்கி இன்னிக்கு நாப்பதுவருசமாச்சு.உங்க வீதிக்காரவுங்களுக்கு இந்தப்பழக்கமெல்லாம் இல்ல,”

சேகர்,“என்ன பட்டா என்னிய ‘உங்க’ன்னு சொல்லி பிரிச்சுவிட்டுட்ட,”என்று சிரித்தான்.

அவர்கள் பேசியதைக் கேட்டபடி தங்கம்மா முட்டிகால் வலியோடு எழுந்து அசைந்து நடந்துவந்து கிணற்றுக்கு முன்னாலிருந்த சிமெண்ட் தரையில் அமர்ந்தார்.அந்தக்கம்பத்தில் நிறைமாசக்காரியாக தான் கட்டி வைக்கப்பட்டு அடிவாங்கிய வலியோடு கிணற்றைப் பார்த்துக்கிடந்த அந்த ராவை நினைத்துக்கொண்டார்.பூஞ்சோலை யாருக்கும் தெரியாமல் நீச்சுத்தண்ணியில் உப்புப்போட்டு வாயில் ஊற்றியது நெஞ்சிலிருக்கிறது.மெதுவாக அந்தப்பொருளை எடுத்திருக்கூடாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

நீர்மாலைக்காக ஆண்கள் செல்லும்போது கிணற்றை சுற்றியிருந்த ஆண்கள் கலைந்தார்கள்.வசந்தா வந்து அமர்ந்தாள்.பக்கத்திலிருந்த சந்திரா, “ என்னப்புள்ள பழைய நெனப்பா,” என்று ஆட்களுடன் நடந்து செல்லும் ரகுராமனை பார்த்தபடி கேட்டாள்.வசந்தா கால்களை ஆட்டியபடி, “நான் தப்பிச்சேண்டி,”என்று சிரித்தாள்.

“எங்கண்ணனுக்கு என்னவாம்..கொஞ்சம் குண்டாயிருச்சு,”

“ரொம்ப…”

“வசந்தா,”என்றழைத்த சரவணனை பார்த்து தலையாட்டினாள்.

“எங்காளு எப்பிடின்னு பாக்கறல்ல.அங்க அவப்படற பாடுகள கேக்கமுடியல.பயபுள்ள அவளப் போட்டுபடுத்தறான்.எங்கையில கெடச்சிருக்கனும்,”என்று சிரித்தவள் கிணற்றின் கைப்பிடி சுவரைத் தடவி புன்னகைத்தாள்.

விடிந்தும் விடியாத மெல்லிருளில் வாளிகள் கிணற்றினுள் அடிவாங்கும் சத்தமும், இறைக்கும் வேகத்தில் தண்ணீர் சிந்தும் ஒலிகளும், குடத்தில் ஊற்றும் சத்தமும் ,கொலுசொலிகளும்,வளையல் ஓசைகளும்,சலங்கை வைத்த குடங்களின் மெல்லிய கலகல ஒலிகளும்,பசங்க சைக்கிள்களில் குடங்களை வைத்து நகர்த்தும் சத்தமுமாக இருக்கும் கிணறு பின்மதியத்தில் தான் ஓரிரு ஆட்களுடன் அமைதியாவது மனதில் ஓட கிணற்றை எட்டிப்பார்த்தாள்.தன் வாளி எப்போதும் இடிக்கும் அந்தமுடக்கிலிருக்கும் சிறுகல்புடைப்பை பார்த்தாள்.ரகுராமன் அதில் இடிக்காமல் லாவகமாக சட்டென்று கையைநீட்டி வாளித் தண்ணீரை காப்பாற்றிவிடுவான்.

பார்வதி,“நாப்பது வருஷத்துக்கு முன்ன சரியா மழயில்ல.ராமுழுக்க வாளி சத்தந்தான்..ஊறஊற எறச்சுக்கிட்டே இருக்கறதுதான் வேல.பெய்யற காலத்துல ஒருமுழகயித்துல மொள்றதுக்கு தண்ணி வந்துரும்.போர் போட்டு போட்டுதான் தண்ணி எறங்கிருச்சு,” என்று சற்றுசுவரில் அமர்ந்தாள்.

தலையைத்தூக்கி மூக்கணாங்கயிறு அற்ற அழகுமுகத்துடன், நல்லஉயரத்தில், செவலை நிறத்தில், சற்றுசதைப்பிடிப்பான உடலுடன், நேரேபார்த்து நடந்து வந்து சாமிமாடு கிணற்றடியில் நிற்கும்.

யாராவது வாளியைக் கொண்டு வந்து வைக்கும் வரை இறைப்பவர்களை பார்த்துக் கொண்டிருக்கும்.யாரையும் துரத்தியதோ முட்டியதோ இல்லையென்றாலும் அது வரும்வழியில் தள்ளியே நடந்தார்கள்.பார்வதி இறைக்கும் நேரத்தில் அது வந்ததும்வராததுமாக முதல்ஆளாக,செல்லமாக அதை வைதுகொண்டே, எத்தனை அவசரத்திலும் தண்ணீர் வைப்பாள்.மையிட்டதைப்போன்ற அழகிய பெரிய கண்களை விரித்தும் சுருக்கியும் அது நீர்உறிஞ்சுவதை இடுப்பில் கைவைத்து பார்த்தபடி, “ உன்னப்போல ஒருப்பிள்ளை வேணும்,” என்பவளைப் பார்த்து கேலி செய்யாதவர்கள் இல்லை.

அன்னம் தெருவிளக்கு கம்பத்தை பிடித்துக்கொண்டு நின்றாள்.எதிர்புறம் நின்ற மாணிக்கம் அருகில் வந்து, “இந்த கெணத்துல வச்சிதான் உங்கள கல்யாணமான புதுசில அண்ணின்னு கூப்டேன்,”என்றார்.

அன்னம்,“மாசமா இருக்கயில எனக்கு எவ்வளவு தண்ணி எறச்சி ஊத்தியிருப்பீங்க,”என்றவளின் கண்கள் மின்னின.

மாணிக்கம்,“அதுக்கூட செய்யாம அண்ணின்னு எதுக்கு கூப்படனும்.உங்க மாமியா திட்டுனாலும் எனக்கு வாளிக்கயிறு குடுப்பீங்கள்ல.இப்பெல்லாம் பத்துவாளி சேந்தாப்ல இழுக்க முடியாதுங்கண்ணி,” என்று சிரித்தார்.

வாளி கிணற்றுக்குள் விழுந்த அன்று தாயம்மா அழுது கிணற்றடியில் உட்கார்ந்துவிட்டாள். ராசு வீட்டில் பாதாளக்கரண்டி இருந்தது. ஓடிப்போய் வாங்கி வந்தார்கள்.வாழைப்பழத்தாரில் சீப்புகள் உள்ளதைப்போல மேல்நோக்கி வளைந்த கம்பிகளால் ஆனது அந்தக்கரண்டி.நீர் அலையடங்கியதும் மெதுவாக பாதாளக்கரண்டியில் இரண்டு வாளிக்கயிறுகளை முடிந்து கிணற்றில் விட்டார்கள்.மெதுவாக சுற்றி வந்து தட்டுப்பட்டவைகளை தேடி எடுக்க பழைய வாளி,மாட்டுமணி,கொடுவாள் எல்லாம் சிக்கிக்கொள்ள தாயம்மா வாளி மாட்டவே இல்லை.

பிரபாவதி,“சுத்துசுவர் மேலநின்னு எறச்சி தவறிவிழுந்துட்டேன்.தமிழண்ணன் யோசிக்காம குதிச்சு என் பின்னாடியே கயித்தப்பிடிச்சு ஏறுச்சு.ஒவ்வொரு ஓட்டையிலயும் கால்பதறுச்சு. பின்னாடி காலப்பிடிச்சு வச்சு பேசிக்கிட்டே ஏறினத சாவற வரைக்கும் மறக்கமுடியாது,”என்று கிணற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கிணற்றையே பார்த்துக் கொண்டு,“இத்தன மனுச இருக்கயில.அந்த ஊருல கட்டிக்கிட்டு நாதியத்து கெடக்கறேன்.உங்களையெல்லாம் இப்படி நல்லதுகெட்டதுல பாக்கறதுதான். என்னிய எட்டின கையாக்கிட்டீங்க ,”என்றாள்.

தமிழ்மாறன்,“ தொலைவாயிருகேன்னு கேட்டதுக்கு.. அந்தஊர்ல விதியிருக்க நம்ம என்னப்பண்றதுன்னு உங்கய்யன் சொன்னாரு.இருக்கற எடத்துல இருக்கவங்கதான் நம்ம மனுசங்க,”என்றார்.

தெற்குபக்கச்சுவரில் சாய்ந்து கால்நீட்டியிருந்த ரெங்காயி அப்பாயி, “இந்தக்கேணிக்குக்கு ஒரு மானக்கதயிருக்குள்ள,”என்றுத் துவங்கி எதிராளிகளின் கவனத்திற்காக நிறுத்தி பின்தொடர்ந்தாள்.

“மேற்காலவூட்லதான் முதல்ல குடிதண்ணிக்கேணி வெட்டுனாங்க.அந்தக் கிழவி தண்ணியெடுக்க வரவுங்கள ஏசிட்டே இருப்பா.ஒருநா சண்ட முத்திப்போயி தான் பொதுவுல கெணறு வேணுன்னு வெட்டினது.சந்தானம்ஆசாரியார்தான் பொறுப்பெடுத்து நின்னாரு.அப்பெல்லாம் அவுங்க அம்புட்டு சம்பத்துள்ள ஆளுக,”

மாணிக்கம்,“இன்னைக்கும்தான்,”என்று பெருமூச்சுவிட்டார்.பேச்சு கலைந்து பரவத்தொடங்கியது.

“நம்மூருல பொம்பள விழுந்து செத்து தண்ணிய எறச்சி காலிபண்ணின கேணின்னு இல்லாதது இதுமட்டுந்தான்,”

“சுத்துசுவரு எடுத்த பின்னாடி இங்கன வச்சிதான் ராமயணமகாபாரத கத சொல்றது.தெய்வங்காக்கற கேணி.பாழடஞ்சிப்போயிடும் போலயே..”

“நம்மளால என்ன பண்ணமுடியும் பொதுசொத்து,”

“ஐஞ்சாறுவருஷத்துக்குமுன்ன ஊருக்குள்ள தண்ணியில்லாதப்ப பயலுவலா சேந்து மண்ணிழுத்து தூர்வாரி எடுத்தானுங்க.நமக்கு தண்ணி வேணுங்கறப்ப செய்யமுடிஞ்சுதில்ல,”

“அன்னிக்கு தூர்வாரி எறச்சோம்.கைவேல செய்யறதுன்னா யாரு செய்யலங்கறா.இன்னிக்கி தண்ணி தெளிஞ்சு நிக்குது.மனுஷருக்கு எறைக்க முடியல.மோட்ருக்கு காசு போடனுமில்ல,”

பாட்டா, “புலக்காரத்துல இல்லாத நகைநட்டை பெட்டியில போட்டு பூட்டி வைக்கனும்ய்யா.திருத்தமா இருக்கான்னு பாத்துக்கிடனும்.அத செய்யாம நமக்கு வேணுங்கறன்னிக்கி நகை அதுவா குதிச்சு வருமா?”என்று மூச்சுவாங்கியபடி பேசிவிட்டு மெதுவாக காலெடுத்து வைத்து நடந்தார்.

“விடும்..போதும்,”என்ற குரல் பேச்சின் திசையை மாற்றியது.கிணற்றின் கதைகளுடன் கும்பலும் கலைந்தது.லட்சுமிஅம்மாவின் திடீர் மரணத்துடன் கிணறும் அங்கிருந்தவர்களின் மனதை சுற்றிக்கொண்டு பேசும் பேச்சிலிருந்தது.

அன்று கார்த்திகை தீபம்.பின்வீட்டம்மா கேணியின் வடமேற்கு மூலையில் ஒருஅகலை வைத்துவிட்டு சென்றாள்.மோட்டார் சுவரின் சிறுமறைவில் சுடர் அசையாமல் நின்றிருந்தது.

கையில்அகலுடன் வந்த இளம்பெண் தான் நின்ற இடத்தை குனிந்து பார்த்தாள்.ஒருகை சுடரை காற்றிடமிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தது. சிட்டுக்குருவிகளின் குளம் இருந்த இடம் என்ற எண்ணம் அவள் மனதில் எழுந்தது .காலுன்றி நின்று இறைப்பதற்கான பள்ளங்கள் அவை.அதில் சிட்டுகள் முழுகி தலையை உதறி விருட்டெனப் பறக்கும்.தானும் சிட்டாய் பிறந்திருக்கக் கூடாதா என்று தினமும் நினைப்பாள்.

இருளில் ஒருஅசைவு தெரியவும் திடுக்கிட்டுப் பார்த்தாள்.சுப்பன்ஆசாரி மோட்டார் அறையிலிருந்து நிமிர்ந்து அமர்ந்தார்.கலைந்த தாடிதலைமுடியுடன் கைலியை விடாமல் ஒருகையால் பிடித்துக்கொண்டு அலைபாயும் விழிகளுடன் அவளைப் பார்த்து சிரித்தார்.அவள் அகலை சுற்றுசுவரின் மீது வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று பொறிக்கடலையை சிறுபையில் எடுத்து வந்து தந்தாள்.

வாங்கிக்கொண்டவர், “தாத்தன் கேணி..”என்று நெஞ்சில் கைவைத்துக் காட்டினார்.முழுநிலவின் ஔியில் காற்றில் பறந்துக்கொண்டிருந்த அவரின் முடிக்கற்றைகளும்,விரிந்த கண்களும்,முகமும் சோபை கொண்டன.

அவளும், “ஆமா மாமா….தாத்தா கிணறு,”என்று தேய்ந்த சுற்றுசுவரை தொட்டுக்காட்டினாள்.இரண்டுபேரும் கிணற்றை எட்டிப்பார்த்தார்கள்.அவர் தலையை சாய்த்து வாய்விட்டு சிரித்தார்.உள்ளே கரியநீர் மினுமினுத்துக் கிடந்தது.

கோணங்கள் – கமலதேவி சிறுகதை

திங்கட்கிழமைக்கு உரிய சோர்வால் வெளிப்படும் அதீத உற்சாகத்தோடு இருந்தது கல்லூரி மைதானம்.மைதானத்தை சுற்றி இருந்த புங்கை ,பாதாம் மரங்களுக்கு அடியில் ஆசிரியர்கள் வந்து நின்றிருந்தார்கள்.காலைக்கூட்டத்திற்கு சத்யா வராததால் மாணவத்தலைவன் வரிசையாக நின்று மெதுவாக சலசலத்த மாணவக் கூட்டத்தைக் கண்ணளந்தான்.கண்களை கூசவைக்கும் மழைகாலத்து வெள்ளை வெயிலில் புருவங்களை சுருக்கியபடி நின்றிருந்தார்கள்.

சட்டென்று, “ ப்ரியா..” என்று உரக்க அழைத்தான். மேற்குபார்க்க நின்ற நான்காவது வரிசையில் கண்கண்ணாடியை சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டிருந்தவள் வேகமாக வந்தாள்.

சேலை முந்தனைய செருகு..”என்றவனை முறைத்தாள்.

பி..டி மேம் உன்னையே பாக்கறாங்க..ஃபைன் குடு.எனக்கென்ன வந்துச்சு.பொன்மொழி இன்னிக்கி நீதான்..”என்றபடி அவள் பதிலை எதிர்பாராமல்,நிமிர்ந்துநின்று உரத்தக்குரலில் மணிவண்ணன், “ கவனம்,” என்று தொடங்கினான்.முதல்வர் வந்து நின்றார்.

அவளுக்கு ஒருமொழியும் மனதிற்கு பிடிபடாமல் இருந்தது. அவனை அறைய வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.காலைவணக்கப்பாடல் முடிந்து பாலு திருக்குறள் சொல்லிக் கொண்டிருந்தான்.

சுந்தரி செய்தி வாசிக்கும்பொழுது ப்ரியாவிற்கு சட்டென்று முகம்பார்க்கும் கண்ணாடி என்ற வார்த்தை மட்டும் மனதில் வந்து சுழன்றது.பின்னாலிருந்து பாலு, “ போ,” என்று தள்ளாத குறையாக அதட்டினான்.சனியன்கள் என்று நினைத்தபடி சுந்தரிக்குப் பின்னால் சென்றாள்.

உலகத்தை புரிந்துகொள்ள உதவும் கண்ணாடியாக இருப்பது புத்தகங்களும் தோழமையும்,” என்றாள்.ப்ரியா திரும்பிச்செல்லும் போது முதல்வர், “வாய்க்கு வந்தத சொல்றது..”என்றார்.வலதுபுறம் நின்ற மணி அவளைப் பார்த்தான்.முறைத்தபடி நகர்ந்தாள். பதமான தரையில் பதிந்த காலடிச்சுவடுகளுடன் மைதானம் அமைதிக்கு திரும்பி வானத்தைப் பார்த்தபடி நின்றது.

கல்லூரி கட்டிடத்தின் முகப்பிலிருந்து முதல்வர்அறை வரை நீண்ட நடைபாதையின் இருபக்க சுவர்களும் நீண்ட அறிவிப்பு பலகைகளாக இருந்தன.வலதுபுறம் கல்வியியல் கல்லூரியின் அறிவிப்புப் பலகை.இடதுபுறம் ஆசிரியப்பயிற்சி பள்ளியின் அறிவிப்புப்பலகை.நீண்ட வழியெங்கும் பிள்ளைகளும்,பசங்களும் நின்று சலசலத்துக் கொண்டிருந்தார்கள்.

விளையாட்டு ஆசிரியர், “சத்தத்தக்குறைங்க,”என்றபடி அவர்களைக் கடந்து முதல்வர் அறைக்குள் நுழைந்தார்.

பாலு, “ கவிதை புரியல ப்ரியா..எதாவது ஆர்டிக்கல் எழுது,”என்றபடி, “உன்னோட ஆர்ட் எங்கடா அழகு,”என்று திரும்பினான்.

பக்கவாட்டிலிருந்து குணா, “ப்ரியாக்கா கவிதை நல்லாருக்கு..”என்று கண்சிமிட்டினாள்.

பார்த்துக்கொண்டிருந்த பாலுவிடம் ப்ரியா புருவத்தை உயர்த்த அவன், “இப்பதான் பனிரெண்டாவது முடிசிட்டு வந்திருக்கற சின்னப்பிள்ள சொல்றத பெரிசா எடுத்துக்காத..”என்று பார்வையை அழகுபக்கம் திருப்பினான்.

கணக்கு வாத்தியாரே… கவிதைக்கு நீங்க குடுக்கற மார்க் மட்டும் கணக்கில்ல..”என்றபடி அவன் பின்னாலிருந்து தோளில் கைவைத்து அழகு வரைந்த ஓவியத்தை எட்டிப்பார்த்தாள்.

சின்னப்பசங்கங்கறது சரியா இருக்கு…வீடு வரஞ்சிருகான்ய்யா,”என்று இடதுபுறத்திற்கு அவர்களை அழைத்தான் மணிவண்ணன்.

வேணுண்ணே இன்னிக்கி என்னய இழுத்து விட்டுட்டான்,”என்று ப்ரியா முகத்தை சுருக்கினாள்.

மணி,“நீ சமாளிச்சிருவன்னுதான்…மத்தபடி வேணுண்ணு பண்ணல..”என்றான்.

எப்பப்பாத்தலும் இப்பிடிதான்…”

இங்கபாரு..அஸ் எ லீடர் சொல்லுவேன்.முடியாதுன்னா ப்ரிஸ்ன்பால் சார்க்கிட்ட சொல்லிடு..எதுக்குமே உன்னய கூப்பிடல ப்ரியா,”

மரியாதையா பேசுடா..”என்றாள்.

இன்னிக்கு காலையிலையே தொடங்கிட்டியா..”என்று பேண்ட்பெல்ட்டை இழுத்துவிட்டபடி ஓடிப் படியேறினான்.திடுதிடுவென்று ஷீகாலோடு ஓடிய ஒலி கேட்டு அங்கு நின்றவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.

மதிஅக்கா,“அவன்ட்ட ஏன் எப்பவுமே ஹார்ஸா பிகேவ் பண்ற..”என்றாள்.

ப்ரியா,“ச்சை.. வந்து சேந்திருக்கான் பாரு…”என்று நெற்றியை சுருக்கினாள்.வகுப்பறைக்கு செல்வதற்கான முதல்மணி ஒலித்தது.

படியேறும் போது அவளுக்கு தன் எரிச்சலான மனநிலை பற்றிய எண்ணம் மனதினுள் ஓடியது.அவன் எத்தனை நட்பானவனாக இருந்தும் தான் குத்திக்கொண்டே இருப்பது மனதிற்கு அசௌகரியமாக இருந்தது.அவள் உள்ளே அவனுக்கென்று ஒருமுள் எந்தநேரமும் கூர்கொண்டிருந்தது.வகுப்பறைக்கான வளைவில் திரும்பி அங்கேயே நின்றாள்.

பாலு, “காலையிலேயே மூஞ்சத்தூக்காத…ஒருபாடமும் மண்டக்குள்ள போகாது..இன்னிக்கு வேற மதியானம் வரைக்கும் சைக்காலஜியாம்.அறிதல் படிநிலைகள்..பியாஜே,புரூணர்..”என்றபடி பையை அவள் கையில் திணித்துவிட்டு கழிவறைக்காக மாடியேறினான்.

கல்லூரியின் இரண்டாம் நாள் இதே இடத்தில் மதியஉணவு வேளையில் பிள்ளைகளுக்காக நின்றிருந்தாள்.

அவளை கடந்து சென்ற மணி பின்னால் வந்து, “பி.எட்..தானே,”என்றான்.

ம்,”

டிகிரியெல்லாம் எந்த காலேஜ்ல..”

இந்த கேம்பஸ்ல இருக்க ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ்,”

இந்த சொம்பு காலேஜ்க்கே இத்தன பந்தாவா..”

நா என்ன செஞ்சேன்..”

பாத்தா பாக்கமாட்டியா…”

எதாவது கேக்கனுன்னா கூப்பிட வேண்டியதுதானே?”என்றவள் சட்டென்று அவன் பார்வையை உணர்ந்து, அவனை நேராகப்பார்த்து, “நீ…பீ.ஜீ பயாலஜி தானேடா?”என்றாள்.

ஆமா..அட நம்மளப்பத்தி தெரிஞ்சிருக்க..”

அதான் நேத்தே கிளாஸ்ரெப்க்கு பேரு குடுத்தியே. நான் எம்..பில்..”

அய்யோ…”என்று உதட்டைப்பிதுக்கியவன் தலையைசாய்த்து, “பாத்தா அப்பிடித் தெரியலயே,”புருவங்களை உயர்த்தி அலட்சியமாக, “அதுகென்ன?”என்றான்.

உன்னப்பாத்தாக்கூடதான் பீ.ஜீ முடிச்சு நாலுவருஷம் ஆனமாதிரி இருக்க.மரியாதையா பேசு,” என்று அவன் கண்களைப் பார்த்தாள்.அவன் படிகளில் இறங்கத் தொடங்கினான்.

அன்று கல்விமேலாண்மை ஆசிரியர் வாசுதேவன், “ஆறுமாசமா நாங்க பாடம் நடத்தி நீங்க கேட்டது போதும்.யார் முதல்ல வகுப்பெடுக்கறீங்க?” என்றார்.முதுநிலை மாணவர்கள் எடுக்கலாம் என்று முடிவானப்பின் அனைவரும் அமைதியாக இருக்க மணிவண்ணனிடம், “ஏம்ப்பா மாணவத்தலைவா நீயாச்சும் சொல்லு..”என்றார்.

சார்…ஆள் குறைவா இருக்கற எக்கனாமிக்ஸ் முதல்ல எடுக்கட்டும்..இந்தவாரத்துக்குள்ள மத்தவங்கள லிஸ்ட் அவுட் பண்ணிக்கலாம் சார்..”என்றான்.பொருளியல் பிரிவில் ப்ரியா மட்டும்தான் இருந்தாள்.

அடுத்த நாள் அவள் வகுப்பெடுக்கும் போது மத்துப்போட்டு கடைவதைப் போல அவளை முன்பின் நகரவிடாமல் அடித்தான்.

கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த வாசுதேவன், “முதல் செமினார் சார்..ஏன் இந்தப்போடு போடுறீங்க,”என்றார்.

ப்ரியா, “சார் கேள்வி கேட்கட்டும்..சாருக்கு மட்டும் புரியல..வாழதண்டு,”என்று அவனை விழித்துப் பார்த்தாள். தலையாட்டியபடி வாசுதேவன் புன்னகைத்தார்.

ஒருநாள் ராகவி படிகளில் தவறிய போது ப்ரியாவிற்கு ரத்தம் என்றால் பதறும் என்று தெரிந்தும் மணி அவளை முதலுதவிக்கு அனுப்பினான்.அத்தனைபேர் மத்தியில் மாட்டேன் என்று சொல்லமுடியாமல் ப்ரியா அன்று முழுவதும் நிலைகொள்ளாமல் இருந்தாள்.

மதிஅக்கா அவனை தனியாக அழைத்து கோபமாக, “சைக்மாதிரி பிகேவ் பண்ணாதடா..அவப் பிரச்சனை உனக்குத் தெரியாதா..”என்றாள்.

தெரியுங்க்கா..”என்று மதியை கோபமாகப்பார்த்தான்.பேசநினைத்து பேசாமல் முழுக்கை கை சட்டையின் கைபட்டனை வேகமாக அவிழ்த்து மாட்டியபடி வேகமாக சென்றான்.

மணி மேசையைத் தட்டும் ஓசை எழுந்து அவளைக் கலைத்தது. பாலுவின் பையை அவன் இடத்தில் வைத்துவிட்டு அமர்ந்தாள்.மதிஅக்கா எதாவது சொல்லமாட்டாளா என்று எதிர்பார்த்தபடி ப்ரியா நோட்புக்கை டெஸ்கில் எடுத்துவைத்தாள்.

மதிஅக்காவிற்கு திருமணப்பேச்சுவார்த்தையும்,மாப்பிள்ளைகளும் வருவதும் போவதும் கல்லூரி அறிந்த செய்தியாக இருந்தது.திங்கட்கிழமை என்றால் தொடக்கத்தில் என்னாச்சு என்று பார்வையில், கண்ணசைவில் கேட்ட அண்ணன்கள் நாளடைவில் எதாவதுன்னா சொல்லட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

சிறியவர்கள்தான், “அக்கா..லேட்டானாலும் லேட்டஸ்ட்டா கல்யாணம் பண்ணுவீங்க..”என்று சிரித்து மதிஅக்காவை தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.

பேசிக்கொண்டிருக்கையில் ஒருநாள் ப்ரியா, “கல்யாணம் மட்டுமாக்கா வாழ்க்கை..அமைஞ்சா பண்ணிக்க..இல்லாட்டா விட்டுத்தொலை,”என்றாள்.

நானும் உன்வயசில அப்பிடிதான் நெனச்சேன்.யாராச்சும் இருப்பாங்கல்ல…”

உனக்கென்னக்கா கம்பீரமா இருக்க..”என்றதும் மதிஅக்கா சிரித்தபடி அவள் தலையில் தட்டினாள்.

அதான் பிரச்சனையே…பிரிஸ்பால் கூட போலீஸ்.. மிலிட்ரிகாரன் வந்தாதான் தப்பிச்சான்னு லீவ் கேட்டப்ப சொன்னார்,”

அவரு ஒரு வெள்ளவாத்து,”என்று நெற்றியை சுருக்கினாள்.

ப்ரியா..ப்ரியா…ப்ரியா..என்ற சங்கரியின் குரல்கேட்டு , “என்ன ?”என்றாள்.

அட்டண்டென்ஸ் கண்ணா..கனவுக்குள்ள வந்து வெத்தலபாக்கு வச்சு அழைக்கனுமோ? நீயும் இங்க நின்னு கத்தனும்..அன்னைக்கு இருக்கு,”என்றபடி பதிவேட்டிலிருந்த தன் ஒற்றைவிரலை கூர்ந்து நோக்கினாள்.

ப்ரியா,“சாரிப்பா,”என்று எழுந்தாள்.

உளவியல்வகுப்பில் மதி இயல்பாக இருந்தாள்.மதியஉணவு இடைவேளையில் மதி ப்ரியாவிடம், “வா..கேண்ட்டினுக்கு போயிட்டுவரலாம்..”என்றாள்.

ஏங்க்கா..எங்கூட சாப்பிடு,”

ச்ச்..கேண்டினுக்குன்னா..கேண்டினுக்கு தானா? வயசுக்கேத்தப் படியில இன்னும் ஏறல,”என்று பக்கத்திருந்த பாலு முறைத்தான்.

மணி,“அதுக்கு என்னத் தெரியும்..”என்று ப்ரியாவைப் பார்த்தான்.

மரியாதையா பேசுடா..”

மதி,“யாருட்ட பேசறதுன்னு தெரியல.மனசில இருக்கறத சொல்ல அம்மா இருக்கனும்,”என்றதும் பாலு, “பிரச்சனைய சொல்லுக்கா,”என்று தோளில் கைவைத்தான்.கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார்கள்.பின்னால் அமர்ந்திருந்த நண்பர்களும் வந்து பக்கத்திலமர்ந்தார்கள்.

நேத்து வந்த மாப்பிள்ளைக்கு என்ன விட வயசு கம்மி..”

சட்டென்று மணி, “நீங்க எந்தகாலத்துல இருக்கீங்கக்கா..”என்றான்.

ப்ரியா,“நீ வாயமூடு..”என்றாள்.

பின்னாலிருந்து சரவணன், “உங்களுக்கு பிடிச்சிருக்கா மதி,”என்றபடி முன்னால் வந்தார்.

ம்.வயசு தெரிஞ்சப்பறம் ஒருமாதிரி இருக்குங்க.அவருக்கு பிரச்சனையில்லைன்னு தோணுது.என்னவிட சின்னபசங்க என்ன நெனப்பீங்க….”

மனோ,“நாங்க என்ன நெனச்சா என்ன?எங்க சொந்தத்திலயும் இந்தமாதிரி ஜோடிகள் இருக்கா.குழப்பிங்காதீங்க..”என்றான்.

இடைவேளை முடிந்ததை அறிவிக்கும் மணி ஒலிக்கவும் பேசியபடி கலைந்தார்கள்.பாலு, “மேமாச ஹாலிடேஸ்ல கல்யாணத்த வைங்க.எங்க பாட்டிதாத்தாவுக்கெல்லாம் வயசே சரியா தெரியாது..”என்று சிரித்தான்.அதற்குப்பிறகு ப்ரியா மெதுவாக மணியுடனான பேச்சிலிருந்து பார்வையிலிருந்து சிரிப்பிலிருந்து கோபத்திலிருந்து விலகிச்சென்றாள்.

மேமாதம் செய்முறை தேர்வுகள் முடிந்த அன்று ப்ரியா கழிவறையில் மயங்கி விழுந்தாள்.மதியுடன் அரசுமருத்துவமனைக்கு சென்ற பொழுது கால்மணிநேரத்திற்கும்மேல் ப்ரியாவிடம் பேசிய அவர் பக்கத்து கட்டிடத்தில் ஆட்களே இல்லாத இன்னொருமருத்துவரிடம் அனுப்பினார்.

மேலும் அரைமணிநேரம் பேசிய அவர் கடைசியாக அவள் கைகளை தன் இருகைகளுக்குள்ளும் பொத்தி வைத்தபடி, “ரத்தம்ன்னா மத்தவங்களுக்கு வலின்னு மட்டும் புரிஞ்சுக்காதீங்க.ரத்தத்த சாவோட கனெக்ட் பண்ணாதீங்க.மென்சுரலை அருவருப்பானதா நெனக்கிறதால உங்களால சாப்பிடமுடியல.வாந்தி,மயக்கம் வருது.அடிபட்டா ரத்தம் வந்திருமோன்னு பயப்படாதீங்க..சிலநேரம் ரத்தம் வந்தாதான் நல்லது..ரத்தத்தக்கண்டு ஹெசிடேட் ஆகாம கண்ணத்திறந்து பாருங்க,”என்றபடி நிமிர்ந்தமர்ந்தார்.

குனிந்தே அமர்ந்திருந்த அவளின் தோளில்தட்டி, “ரத்தம்…பிளட் ங்கற வார்த்தைகள கூச்சமில்லாம சொல்லுங்க.நான் இங்கதான் இருப்பேன்..கொஞ்சநேரம் பேசலாம்..இங்க சிஸ்டர்க்கு ஹெல்ப்பா இருக்கலாம்..ஜீன்ல காலேஜ் திறந்தப்பின்னாடி அடிக்கடி வரனும்.கண்டிப்பா வரனும்,”என்றார்.அவள் தலையாட்டினாள்.

ஜீன்மாதம் யசனையில் மூன்றுநாட்கள் முகாம்வகுப்பு நடக்கவிருந்தது.காலை வெயிலேறும் பொழுதில் யசனை அரசுப்பள்ளி மைதானத்தின் ஓரத்தில் இருந்த செடிகளை அகற்றும்போது சற்று மேட்டுப்பகுதில் நீட்டிக்கொண்டிருந்த கண்ணாடி பாட்டிலின் உடைசல் புகாரியின் காணுக்காலை கிழித்தது.அதை முதலில் பார்த்த ப்ரியா பதறி நண்பர்களை அழைத்தாள்.

கைக்குட்டையில் கைகளைத்துடைத்தபடி நிலைகொள்ளாமலிருந்த அவளிடம் பாலு, “பதறாத சின்ன காயந்தான்.பசங்கன்னாக்கூட பரவாயில்ல.பொம்பளப்பிள்ள ரத்தம் பாத்து பயந்தா எப்படி வாழ்க்கைய ஓட்றது..அந்த டாக்டர்க்கிட்ட போகனும் ப்ரியா,”என்று தோளில் கைப்போட்டான்.

முதலுதவிப்பெட்டி வந்ததும் மணி, “ப்ரியா…”என்றழைத்தான்.பதறும் விழிகளுடன் வந்து நின்றாள்.“பக்கத்தில வா…கிட்டை கையில எடு…”என்றான்.

மதி,“வந்த இடத்தில அவள வம்புக்கிழுக்காத..”என்பதற்குள் , “மத்தவங்க வேலயப்பாருங்க…”என்ற ஆனந்தன்ஐயா குரலால் கலைந்தார்கள்.

உள்ளங்கை வியர்வையை கைக்குட்டையில் துடைத்தாள்.அவளையே பார்த்துக்கொண்டிருந்த புகாரி, “வலிக்குது…எடு சீக்கிரம்,”என்றான்.டெட்டால் பஞ்சை எடுத்து காயத்தில் வைக்கும் முன் அவன் முகத்தைப் பார்த்தாள்.அவன், “எம்மூஞ்சியப்பாக்காத..காயத்த மட்டும் பாரு..”என்றான்.

அவள் கைகளில் நடுக்கமிருந்ததை அவளின் ஒவ்வொரு தொடுகையிலும் உணர்ந்தான்.அவனையும் மீறி ஒரு முறை காலை இழுத்ததும் ப்ரியா கையிலிருந்த மருந்தை கீழே நழுவவிட்டாள்.அவன் மீண்டும், “காயத்த மட்டும் பாரு..”என்றான்.அவனுக்காக வந்த தேநீரை அவளிடம் நீட்டினான்.

நீ குடி..”

எனக்கு மூணுநாளும் நீதான் மருந்து போடனும்…தேங்ஸ்,”என்று புன்னகைத்தான்.

திரும்பிப்பார்த்த பாலு,“கெடா வெட்றத ஒருதரம் பாத்தா சரியா போயிடும்..இந்தவருசம் எங்க கோயிலுக்கு நீ வரனும்,”என்றான்.மணி,“எம்..பில்…”என்று உதட்டைப் பிதுக்கினான்.

அவள் அமைதியாக இருக்கவும், “மூணுநாளும் நீதான் யாருக்கு அடிபட்டாலும் முதலுதவிக்கு போகனும்..ஒரு பத்து விழுப்புண்களை பார்க்கலாம்… ப்ரியா அவர்களே,”என்றான்.மணியோடு அனைவரும் சிரித்தார்கள்.

மதி,“என்னால முடியாதுன்னுட்டு போ,”என்றாள்.

அவன் சரியான ரெப் ..அதனாலதான் இதெல்லாம்…”

மதிஅக்கா,“இவஒருத்திஅவன் பெரிய சீ.எம் பாரு,” என்றதும் அனைவரும் சிரித்தபடி மீண்டும் செடிகளை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள்.

மூன்றாம் நாள் சாயுங்காலம் அரியலூர் பேருந்திற்காக அவர்கள் நால்வரோடு யசனைக்காரர்களும் காத்திருந்தார்கள்.

ப்ரியா,“மணி..இங்க வா,”என்றழைத்தாள்.

என்ன மரியாதை கத்துக்குடுக்க கூப்பிடுதோ என்றபடி ப்ரியாவின் அருகில் வந்தான்.மரத்தில் சாய்ந்து நின்ற அவள் எதிரே நின்றான்.அவள் அவனையே பார்த்தபடியிருந்தாள்.

மணி, “நீ சரியாவே என்னோட பேசறதில்ல..”என்றான்.

டெய்லி நீ எப்பிடி பாக்கற ,பேசற அதுக்கு நான் எப்பிடி ரியாக்ட் பண்றதுன்னு எனக்கு எரிச்சலா இருக்கு.வெளிய போனா சும்மா திரும்பி பாத்தாவே கதை எழுதி மேடையேத்துறாங்கன்னு கடிவாளம் கட்டவேண்டியிருக்கு.காலேஜ்லயும் அதே லட்சணம்,”என்று சலித்துக்கொண்டாள்.

?!”

முதல்ல நீ பேசினது பாத்தது எதுவுமே சரியில்ல..”

அப்போதுதான் புரிவதைப் போல வேகமாக தலையசைத்தான்.அவள் கண்களைப்பார்த்து, “இந்த பப்பரக்க கண்ணுதான் உனக்கு ஒரு ஸ்கூல் ஸ்டூடண்ட் லுக் தருது,”என்றான். கண்ணாடிக்குள்ளிருந்த சிறிய கண்களை விரித்தாள்.

வேணுன்னா அக்கான்னு கூப்டா..ச்..”என்று முகத்தை கோணலாக வைத்துக்கொண்டான்.

உம்மனசுதான் இப்ப தெரிஞ்சிருச்சே. இனிமே கூப்டறதுல என்ன இருக்கு.உனக்கு பிடிச்சமாதிரி கூப்பிடு,”என்று நகர்ந்து மேற்கே திரும்பினாள். அந்தப் பெரிய புங்கைமரத்தின் கிளைநீட்டி மறித்திருந்த சாலையை எட்டிப்பார்த்தாள்.

அலைவரிசை, மாற்றுலகம்,அந்தியின் கடைசிப்பறவை – கமலதேவி கவிதைகள்

அலைவரிசை

கானலடிக்கும் வெயில் அலைகளில்
மிதக்கிறது
நிழற்படம் போலவோ,
தொலைப்படம் போலவோ,
அந்தமுகம்.
புறத்தின் எந்தத்தடையும் இன்றி
செவிநரம்புகளை இதமாய் தொடுகிறது
மென்காற்றென ஒருகுரல்,
படக்கருவி அருகினில் காட்டிய கண்கள்,
எப்போதோ புன்னகைத்த இதழ்களை இப்போதெனக் காணும்
யுகத்தில் நீயாரோ ?
பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு அலையில் உன்குரல்,
அதே பிரபஞ்சத்தில் கேட்கும் என் செவிகள்,
அருவக்குரல் சொந்தமில்லையாதலால்
அன்னியமுமில்லை.
வெயிலுக்கு ஒதுங்கிய கூரையிலிருந்து
உன்குரலோடு தெருவில் இறங்கி நடக்கிறேன்.
எனக்கும்….
அந்தத் தகரக்கொட்டகைக்கும்
இடையிலான தொலைவில் தேய்ந்து மறைகிறது
ஒரு புரியாதபுதிர்.

மாற்றுலகம்

இன்னும் மென்மை எய்தாத
இளம்சிறுமியின் குரல் அது,
கண்களை விரித்து இசைக்கு
தலையாட்டியபடி பாடினாள்,
பெரும்பாலும் முகத்தின் உணர்வுகளில்
மாற்றமில்லை…
அவள் காணும் கனவில்
நானுமிருந்தேன்
நிகழ்காலத்தின் மாசில்லாதொரு
பொழுதில்

அந்தியின் கடைசிப்பறவை

மேகங்கள் அற்றவெளியில்
நிலவெழுந்த வானில்….
மென்குரலில் ‘ கீகீகீ.. ’
ஒற்றைப்பறவையின் பதறிய குரல்.
உணவோ… நீரோ..
குறிவைத்தக் கண்ணியோ… உடலோ…
இப்படி எதனால் பிந்தியதோ?
என்னவாயிருந்தால் என்ன?
அதன் வழியில் குறுக்கிட
எந்தப்பறவையும் இல்லை என்பதே
எத்தனை ஆசுவாசம்.

யாவும் அழகே உன்காட்சி – அபிதா நாவல் குறித்து கமலதேவி

சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல்.இன்றும் வாசிக்கையில் அதன் மொழியால் அதே வசீகரத்துடன் இருக்கிறது.மொழி ஒரு பேரழகியாய் இந்த நாவல் முழுக்க தன் ஔியை நிறைத்து வைத்திருக்கிறது.

வயோதிகத்தில் தன் முதல்பெண்ணை சந்திக்கச் செல்லும் அம்பியின் எளிமையான ஒரு திரும்பிப்பார்க்கும் கதை.ஆனால் அதன் மொழியின் கவித்துவத்தால்,வயோதிக அம்பியின் முன்பின் கலங்கிய மனத்தால், தான் பிறன் என்ற கோடழியும் தடுமாற்றத்தால் ,நூற்றிபத்துபக்கங்கள் உள்ள இந்த நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு அழகிய கனவுக்குள் வாழ்ந்துவிட்டு வெளியறியதைப்போல உணரமுடிகிறது.

ஒரே அமர்வில் வாசிக்கமுடிந்தால் அது பேரனுபவம்.அது இன்னொரு வசீகரம்.சிறியநாவல்களின் சிறப்பியல்பு அல்லது அதன் பலம் என்பது ஒரே அமர்வில் வாசிக்கத்தக்கனவாக இருப்பது.நீண்ட ஒற்றைக்கனவு.அப்படி ஒரே அமர்வில் வாசித்தநாவல்களில் அம்மாவந்தாள்,அபிதா இரண்டும் மனதை ஆட்டிவைத்தவை. வாசித்துமுடித்து வேறெதும்வாசிக்காமல் அடுத்தநாளே மீண்டும் வாசித்தவை.

நாவலில் அம்பி சொல்வதைப்போல் உள்ளே ஒரு கோடழியும் அவரின் மனம், அவரின் நடப்பிலும், கனவிலுமாக தவிக்கிறது.நாவலின் நடைமுறை அம்சம் என்பது இளம்வயதின் ஈர்ப்பு அல்லது காதல் அல்லது சினேகம்.அது மனதின் ஆழத்தில் கிடந்து நினைவில், கனவில் எழுந்து கொண்டேயிருக்கிறது.

அதை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை.யாருக்கும் அப்படியான ஒரு பேரன்பு ஒருவர் மேல் இருக்கவே செய்யும்.அதற்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளலாம்.நடைமுறை வாழ்வில் எந்தபயனும் இல்லாதது.அவரவர் மனதிற்கினிய தெய்வத்தைப் போல தான்.உடனிருந்தும் ஒன்றும் பயனில்லை ஆனால் அது உடனில்லாவிடில் வேறெதுமில்லை.

நாவலின் தத்துவத்தளம் என்று நான் உணர்வது இவ்வுலகப்படைப்பின் பேரெழில் மீது எளியமனம் கொண்ட மையல்.வயதாகும் போது இவ்வுலகின் மீது உண்டாகும் பெரும் பிடிப்பு.இந்தப்படைப்பையே பெண்ணுருவாக காணுதல் அல்லது பெண்ணுருவையே படைப்பாக காணுதல். தன்படைப்பு அனைத்திலும் தன்னையே பிரதிபலிக்கும் பிரபஞ்சத்தின் பேரெழில்.

அம்பி தான் இளமை வரை வாழ்ந்த கரடிமலைக்கு,அவரின் மனதின் வலி உடலின் வலியாக மாறியிருக்கும் நேரத்தில் வருகிறார்.அழகு ஆட்சி செய்யும் பசுமையான இடம்.அதுவே ஒரு குறியீட்டுத்தளம்.இளமையை குறிக்கும் தளம்.பசுமை, இளமை, செளந்தர்யம்.ஒருவேளை முதிய மனதின் இளமைக்கான ஏக்கம் அல்லது இளமை பற்றிய கனவுதான் இந்தநாவலாக இருக்கலாம்.நாவலின் மொழியும் கூட இன்றும் அத்தனை வசீகரமானது.கதையின் களம் ,பேசுபொருள் மொழி அனைத்தும் குன்றாத எழில் கொண்டவை.

வாழ்வின் மறுகரையில் வந்து நின்று அந்தக்கரையை பார்க்கும் கனவு.கனவை அதே போன்ற ஒரு உன்மத்த மொழியில் தானே சொல்ல முடியும்.

மல்லாந்த முகத்தின் பனித்த காற்று தான் மீண்ட நினைப்பின் முதல்உணர்வு’

நானின் மாறாத மட்டற்ற மெளனத்தின் தனிமை’

அத்தனையும் உன்:நீ யின் சட்டையுரிப்பு’

அத்தனை பசுமையான கரடிமலையின் உச்சியில் கருவேலங்காட்டில் திருவேலநாதர் வானமே கூரையாக, மழையும், வெயிலும், காற்றும், பனியும், பறவைகளும் அபிஷேகம் செய்ய அமர்ந்திருக்கிறார்.அத்தனை சிறுமுட்கள் சூழ வீற்றிருக்கும் தாதை, அன்னையை மனதில் நிறுத்தி காத்திருக்கும் யோகன்.

மானுடவாழ்வின் முட்களுக்கு எதிரே பசுமையென விரிந்திருப்பது அவர்களின் பதின் வயதுகள் தானா? என்று இந்நாவலை வாசிக்கையில் தோன்றுகிறது.உடலும் மனமும் நடைமுறையில் சிக்காது பறக்க எத்தனிக்கும் காலம்.சுற்றிநடப்பவைகள் எங்கோ எனத் தெரிய தன்கனவில் தான் வாழும் பருவம்.

ஊரில் திருமணங்கள் என்றால் ஒலிபெருக்கியில் சினிமா பாடல்களை ஒலிக்கவிடும் பழக்கம் இன்றும் உண்டு.சிறுவயதில் அப்படி கேட்டு பதிந்தபாடல் ஒன்றின் வரிகள் இந்தநாவல் வாசிப்பின்போது நினைவில் எழுந்தது. ‘ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன்காட்சி’ என்ற பாடலாசிரியர் வாலியின் வரி.முதலில் அது மானுடருக்காக இருந்து படிப்படியாக பிரபஞ்ச அழகை ஆராதிக்கும் நிலையாகிறது. கனவில் தொடங்கும் வாழ்வு இடையில் நடைமுறையில் சிக்கி மீண்டும் கனவை நோக்கி செல்வதுதான் இந்தநாவல் சொல்லும் வாழ்வு.

இந்தநாவலின் கனவுமயமான பகுதிகள் கரடிமலை சூழலில் வருகின்றன.அப்படியான சூழலில் வரும்பாதே அவற்றின் கனவுத்தன்மை என்பது தீவிரமடைகிறது.மலையும் மலையைச்சார்ந்த இடமும்.

அன்பின் பெருங் காவியங்கள் அனைத்தையும் போலவே இதிலும் பிரிவே அந்தஅன்பின் நிறத்தை, சுவையை அடர்வு கொள்ளச்செய்கிறது.அடையபட முடியா நிலையே ஒன்றை பெருமதிப்புடையதாக, பேரழகுடையதாக மாற்றுகிறது.அதுவே எதிர்நிலையில் பெரும் சினமாக ,வெறுப்பாகவும் மாறுகிறது.ஒன்றின் இருநிலைகள்.உளவியல் சார்ந்தும் இதுவே உண்மை.

இந்தநாவலில் அபிதா மீதான அம்பியின் பொசசிவ்னஸ் எனக்கு அதிர்ச்சியளித்தது. தோழிகள் அந்தசொல்லை பயன்படுத்தும் போது ‘நோய்வாய்ப்பட்ட அன்பு’என்று அதற்குபொருள் சொல்வேன். இந்தநாவலில் வாயோதிக அம்பியின் நோய்வாய்ப்பட்ட அன்பாக அதை இணைத்து புரிந்து கொள்ளமுடிகிறது.

வாழ்வில் நம்பால்யத்தின் மனிதர்கள் மீதான அன்பு கள்ளமற்றது,மிகத்தூயது.அந்தவயதுகளில் நம் வாழ்வில் வரும் மனிதர்கள் நம் மனதில் அழியா நித்தியத்துவம் பெறுகிறார்கள்.நாம் எங்கு சென்றாலும் மனதின் ஆழத்தில் அந்தமனிதர்களும்,அந்த இடங்களுமே நம்முடனிருக்கின்றன.

மழைப் பெய்த புதுநிலமாக மனம் இருக்கையில் விழும் விதைகள். புதுமனிதர்களை,புதுஇடங்களை நாம் பால்யத்தின் மனிதர்கள் இடங்களுடனே ஒப்பிட்டுக்கொள்கிறாம்.புறத்தோற்றத்தில்,குணத்தில் என்று இரண்டிலுமே.அவ்வகையில் இந்தநாவலின் புறசூழலும்,அம்பியின் மனஆழமும் அபிதாவாக எழுந்திருக்கிறது. லா..ரா தன் அழகிய கனவை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார்.

இந்தநாவலை என் தோழியிடம் பகிர்ந்த பொழுது அவள் சலித்துக்கொண்டாள்.பெண் சார்ந்த இன்றைய, நேற்றைய, நாளைய பார்வைகள் பற்றி பேசினாள்.என்னால் அவளுக்கு புரியவைக்க இயலவில்லை.அதன் பின்தான் இந்தவாசிப்பனுபவம் பற்றி எழுத நினைத்தேன்.இலக்கியம் என்பது நடைமுறை தளத்திலிருந்து பறப்பது அல்லவா ?அதன் சிறகில் அமரும் நம்மனதின் புழுதிகள் அந்தப்பறவையின் ஜிவ்வென்ற ஒரே எழும்புதலில் பறந்துவிடும்.அந்தப்பறவை பிரபஞ்சத்தை அளப்பது.

பிரபஞ்சத்தின் பேரழகை காணமுடியும்…ஒரு எல்லையில் உணரமுடியும்.ஆனால் ஒருபோதும் உடைமையாக்கமுடியாது.இதில் லா..ரா தொடுகை என்பதேயே உடமையாக்குதல் என்ற பொருளில் சொல்கிறார்.உடமையான எதன் மதிப்பையும் நாம் உணர்வதில்லை.பிரபஞ்சம் தன்னின் ஒருதுளியை நமக்களித்தது…அதை நாம் என்ன செய்துகொண்டிக்கிறோம் என்பது நமக்கே தெரியும்.அதனால்தான் மற்றவைகளை பிரபஞ்சம் நம் முன்னால், கழுதைக்கு முன் கேரட்டைப் போல தொங்கவிட்டுள்ளது.

இந்தநாவலை வாசித்துமுடிக்கையில் கண்எதிரே நீண்டிருக்கும் கொல்லிமலையைப்பார்க்கிறேன்.கோடையில் கருகித்தீய்ந்து உயிர்ப்பிடித்திருக்கிறது.முதல்மழை கண்டுவிட்டது.இன்னும் ஓரிருமழை…மலை சிலிர்த்துக்கொண்டெழும் பேரழகை ஜீன்மாதத்தில் காணலாம்.இந்தநாவல் இயற்கையை காண ,அதன் பேரழகில் மனதை வைத்து தன்னையிழக்கும் சுகத்தை நமக்கு சொல்லித்தருவதையே இதன் பெருமதிப்பாக நான் உணர்கிறேன்.பெண்ணழகிலிருந்து பேரழகிற்கு.என்னால் இந்தநாவலை அப்படிதான் அர்த்தப்படுத்திக்கொள்ளமுடிகிறது.

பிம்பங்கள் அலையும் வெளி – கமலதேவி சிறுகதை

ஒரு சிறு விலக்கம் இத்தனைவிதமாக அர்த்தப்படுமா? என்று சந்தியா மனதை குடைந்தபடி, மிக்சியில் வடைக்கு மசித்த பருப்பை எடுத்து சாந்தாம்மாவிடம், “பெரியம்மா பதம்பாருங்க..”என்று காட்டினாள்.

“போதும் சாமி…வழிச்சிடு…ரொம்ப அரச்சா ருசிக்காது,” என்றார்.வீட்டில் நுழைந்ததும் கதிரின் தோள்களைத் தொட்ட அவள் கைகளிலிருந்து அவன் விலகிக்கொண்டான்.ஏன்? எதாச்சும் இருக்கும்.தணியட்டும் என்று விட்டுவிட்டாள்.என்றாலும் அந்தவிலகல் மனதை சுற்றிசுற்றி வந்து மனதை கலைத்துக்கொண்டிருந்தது.

சுமோவின் சத்தம் வாசலில் கேட்கவும் சாந்தாம்மா, “பத்துநிமிசம் கழிச்சு வரமாட்டான்…இந்த வடையப் போட்டெடுத்துருக்கலாம்.ப்ரிட்ஜில மாவ வச்சுட்டு கையக்கழுவு,”என்றபடி சமையலறையை ஒருநோட்டம்விட்டப்பின்,வெளியே அவசரப்படுத்திக்கொண்டிருந்த சத்தங்களுக்கு விடையாக, “தோ…வந்திட்டோம்,”என்று மருமகளின் தோளைத்தட்டி, “ சீக்கிரம் சுமி,” என்றபடி சிலிண்டர் ரெகுலட்டரை மீண்டும் சரிபார்த்தார்.

கதிர் சந்தியாவிடம்,“துளசி ஏன் வரல?”என்றான்.

“அவனுக்கு இதில நம்பிக்கை இல்ல..”

“எதுலதான் அவனுக்கு நம்பிக்க உண்டு.அம்மாச்சிக்கூடவே ஹாஸ்பிடல்ல இருந்தான்ல..மனசுல இருந்து அதஎடுக்க வேணாம்.சும்மா..டென்சன் டென்சன்னு எல்லாத்தையும் விழுந்து கடிக்கறான்..”

“ஆமா…ஆனா அவனுக்கு நம்பிக்கையில்ல..நீ ஏன் இவ்வளவு கோபமா…”என்று கதிரின் தோளில் கைவைக்கச் சென்றவளை மறுத்து நகர்ந்தான்.இவன்களுக்கு என்னதான் சிக்கல்? என்று அவளுக்கு எரிச்சலாகவந்தது.

மீண்டும்,“சும்மா அதையே சொல்லாத..உனக்கு நம்பிக்க இருக்கா?”என்றான்.

“தெரியல,”என்றவளை உற்றுப்பார்த்து “என்ன பதில் இது?”என்றபடி சுமோவை நோக்கிச்சென்றான்.

நடுஇருக்கையில் பயல்களுடன் அமர்ந்த கதிர் சுமியிடம் “கதவைசாத்து,” என்றான்.பின்னால் நேர்எதிர் இருக்கைகளில் ஒன்றில் சந்தியாஅம்மா,சாந்தாம்மாவும் எதிர் இருக்கையில் சந்தியாவும் நல்லுஅய்யாவும்.

முன்புற இருக்கையிலிருந்தபடி சந்தியாவின் பெரியய்யா, “ஆச்சு..கெளம்புய்யா..”என்று அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த ஓட்டுநரின் கவனத்தை அவன் இருக்கைக்கு கொண்டுவந்தார். கைகளை விரித்து வெட்டவெளியில் அன்னாந்து பார்க்க வைக்கும் எல்லைமாரியம்மனைத் தாண்டி துறையூரினுள் மெல்லப்புகுந்து திருச்சி சாலையில் வேகமெடுத்தது வண்டி.

“எல்லயத்தாண்டிருச்சு ஊரு…முன்னெல்லாம் காவாத்தா கோயில்ன்னா ஆறுமணிக்குமேல நடமாட்டமிருக்காது..இன்னிக்கி பக்கத்திலயே குடியிருக்கறோம்…”என்ற பெரிய்யாவிடம் சந்தியா, “காவாத்தாவுக்கு தனியாயிருந்து சலிச்சிருச்சு..அதான் மக்கள பக்கத்துல வச்சிக்கப்பாக்குது..”என்றாள்.

கதிர் முறைத்தான். “இருக்கும்..இருக்கும்…சாமின்னாலும் நம்மளாட்டம் தானே.எத்தனவருசத்துக்கு தனியா நிக்கும்.அதுக்கையில ஒரு பிள்ளசாமிய வைக்கமாட்டானுங்க..”என்றவரைப் பார்த்து புன்னகைத்து, “ஊரகாப்பத்த போலீஸ் வந்தப்புறம் அதுக்கும் பொழுது போகனுமில்ல..”என்றாள்.

“ய்யா…நீங்க வேற.இவ என்னத்து சொல்றான்று புரியாது.கிண்டல் பண்ணுவா..”

“இல்லல்ல பாப்பா சரியாத்தான் சொல்லுது.வேல வெட்டியில்லாம என்னதுக்கு சாமி.திருவெள்ளரையில பெரியபாறமேல அத்தாம்பெரியக் கோவிலு..என்னத்துக்கு புண்ணியம்..”என்று சலித்துக்கொண்டார்.

தாமரைக்கண்ணனிடம் எதையாச்சும் கேட்டிருப்பாராக இருக்கும் என்று சந்தியா நினைத்துக்கொண்டாள்.

ஓட்டுநர், “அந்தக்கோயிலுக்கு எப்பபோனீங்கய்யா..”என்றான்.

“வெள்ளிகிழம சாயங்காலமா போனேன்,”

“அதான்…வேண்டுதல்லாம் காலையில வைக்கனும்ன்னு எங்கம்மா சொல்லும்,”என்றான்.

அது சரி… கண்விரிய அந்த கொம்பன் நாச்சியாரை பார்த்தபடி நாழி கேட்டான் வாசலில் சர்வாலங்காரபூஜிதனாய் நின்றுகொண்டு, இவரை விட்டுவிட்டான் என்று சந்தியாவின் மனதிற்கு ஓட புன்னகைத்துக் கொண்டாள்.

“அது என்ன? சாமின்னா போற நேரத்துக்கு வழிக்கொடுக்கனுமில்ல…கடங்காரனா காலையில வா, மதியானமா வான்னு…”என்று யதார்த்தத்தை சொன்னார்.ஓட்டுநர், “பின்ன..”என்று வேகமாக தலையாட்டினான்.

சாந்தாம்மா, “எல்லாத்தையும் உங்கக்கட வியாபாரமா பாக்காதீங்க..சாமிட்ட அடங்கிநிக்கனும்..”என்றபடி பெரியய்யாவை முறைத்தார்.

பக்கத்திலிருந்த நல்லுவைப்பார்த்த சந்தியா ,அய்யா…அய்யா என்று நாலுமுறையாவது அழைத்து , அவர்அய்யா என்பதை அவருக்கு நினைவுபடுத்தவேண்டும் என்று நினைத்து, “அய்யா…நல்லா உக்காருங்க,”என்றாள்.அவள்அம்மாவின் சமவயது மாமாமகன் இவர்.

கதிரிடம் நல்லுஅய்யா,“ஏண்டா ஒருபக்கமா ஒக்காந்திருக்க,”என்றார்.

“காலையில எந்திரிக்கையில் தச பெறடிக்கிச்சுய்யா,”என்று திரும்பாமல் சொன்னான்.

சாந்தாம்மா,“எங்கய்யாவுக்கு இப்படிதான் அடிக்கடி ஆவும்…அய்யாவ குப்புற தரயில படுக்கவச்சி அம்மிகுழவிய முதுகுல உருட்டுவாங்க,”என்று பெருமூச்சுவிட்டார்.கோடைவெப்பத்தில் உடல் நசநசக்க சந்தியா பின்னாலிருந்த கண்ணாடி, கதவா? இல்லையா என்று திரும்பிப்பார்த்தாள். பயல்கள் உறங்கவும் வண்டியில் பேச்சுநின்றது.

புலிவலம் காட்டை வண்டி கடந்து கொண்டிருந்தது.காடு சுள்ளிகளை அடையாளமாக நிறுத்தியபடிமுதல்மழைத்துளிக்கு தவமிருந்தது.

“காடு காஞ்சு போகவும்..சிறுத்த நடமாட்டம் தெரியுது,”என்றபடி ஓட்டுநர் வண்டியை முடுக்கினார்.

“ இந்தக்காட்டுல சிறுத்த இருக்குதாய்யா….”

“நீங்க வேற.. பாக்கற வரைக்கும் நானும் நம்பல…”என்று சிரித்தான்.

சுமி, “முதுகுபிடிப்புன்னா.. முதுகுல குத்தனுன்னா சொன்னீங்க…எத்தன தடவ குத்தனும்,”என்று கதிரை பார்த்தபடி கேட்டாள்.

சாந்தாம்மா,“நீ பரவாயில்லயே.. விட்டா குத்தி எடுத்து முறத்துல போட்டு புடச்சிருவியாட்டுக்கே..”என்று சிரித்தார்.

கதிர்,“முதல்ல கோயம்புத்தூர்காரனுக்கு நாலுகுத்துகுத்தி பாத்து தெரிஞ்சுக்கிட்டு இங்க வா,”என்றான்.

“எங்கண்ணன்னா முதுகு வலிக்குதுன்னு சொன்னுச்சு..எப்படின்னு தெரிஞ்சுகிட்டா அவசரத்துக்கு யூஸ்ஆகுன்னு கேட்டேன்,”என்றாள்.

வண்டி காட்டை உதறிவிட்டது போல வேகத்தைக்குறைத்தது.இவ்வளவு வேகமாக வந்தது அதற்குத்தானே என்று சந்தியாவிற்கு தோன்றியது.சாந்தாம்மா கால்வலியில் முனகியபடி இருந்தார்.

நல்லுஅய்யா, “தினமும் கொஞ்சநேரம் கைகால் பயிற்சி பண்ணனும்..வயசு ஐம்பத்தஞ்ச தாண்டுதுல்ல…நம்ம உடம்பையும் பாக்கனுமில்ல..”என்றார்.

“என்னபண்றது..வேலவேலன்னு வீட்ல கடயவச்சுக்கிட்டு எங்க முடியுது,”

“வேல இருக்கதான் செய்யும்,”

“உன்னமாதிரி தனியாளா? இல்ல போனமா வந்தமா வேலயா..”என்றதும் சந்தியாவிற்கு சுருக்கென்றது. பக்கவாட்டில் நல்லுஅய்யா புன்னகைத்தபடி, “செய்யனும் …”என்று சொல்லிவிட்டு அமைதியானார்.

தனியாளாக சமைத்து ,பள்ளிவாகனத்தின் ஓட்டுநராக,பள்ளி மைதானத்தின் துப்புரவாளராக, பள்ளியின் தலையாசியராக, ஆசிரியராக இருப்பவர். மெதுவாக, “ய்யா…எல்லா பள்ளிக்கூட வேலயயும் இப்படிதான் நெனக்கிறாங்களா…”என்றாள்.

“எல்லாரும் இந்தமாதிரிதானே..தன்வேலதான் கஷ்ட்டங்கற எண்ணம். சம்பதிக்கமுடியலன்னா வேலய மாத்தலாம்…கனவ மாத்தமுடியுமா?,”என்று சாலையைப்பார்த்தார்.இவர் ஏன் அந்தகாலத்திலேயே கல்யாணத்தை உதறினார் என்று கேட்க நினைத்தவள் தன்மீதே திரும்பும் வம்பெதற்கு என்று விட்டுவிட்டாள்.

வெயிலேறிய பொழுதில் திருவரங்கத்தினுள் வண்டிநுழைந்தது.மேற்குதிசையில் சென்ற வண்டி மெதுவாக தெற்குபக்கம் வளைந்து திரும்புகையில் சந்தியாவின் கழுத்து கீழிருந்து மெல்ல அன்னாந்து நோக்கியது.சட்டென்று யாரோ ஒருஅழகன் பேருரு எடுத்து கைகளை இடையில் ஊன்றி நிமிர்ந்து பார்ப்பதைப்போல ராஜகோபுரம் எழுந்தது.சந்தியா உள்ளே சயனித்திருக்கும் அவன் தான் என்று புன்னகைத்தாள்.

வண்டி தெற்கு நோக்கி மேடான சாலையில் பயணித்தது.கண்கள் காண்கையிலேயே கோபுரம் மெல்லசிறுத்து காரின் பின்கண்ணாடியில் அடங்கியது.

“டக்குன்று இறங்கனும்…ரெண்டுநிமிஷதுக்கு மேல இங்க வண்டிநிக்கக்கூடாது..”என்று பெரியய்யா அவசரப்படுத்தினார்.இறங்கி இரண்டு கைகளில் இரண்டுபயல்களைப்பிடித்தபடி ஓடிவந்து அம்மாமண்டபத்தின் முன் நின்று சந்தியா, “அவங்களுக்கு முன்ன வந்துட்டம்ல..”என்று பயல்களைப்பார்த்து சிரித்தாள்.

பெரியவன்,“அத்த..அவங்கல்லாம் இன்னும் வரல,”என்று வாய்பொத்தி சிரித்தான்.சின்னவன் மொழியால் சொல்லத்தெரியாத உவகையால் கை, கால்களை ஆட்டிக்குதித்தான்.

பெரணி விஸ்வரூபம் எடுத்ததைப் போன்ற முகப்புத்தூண் சிற்பத்தை வெண்சுண்ணத்தால் மெழுகி வைத்திருந்தார்கள்.இதன்சிற்பி அதிகாலையில் நீராடலில், கிணற்றில் அமர்ந்திருகையில் மனதில் எழுந்ததோ என்று நினைத்துக்கொண்டாள்.அவரின் கண்களில் பட்டு நான் நான் என்று தான் இலைக்கைகளை நீட்டி சொல்லியிருக்குமா? சந்தியாவின்அம்மாச்சி பெரணிச்செடியை, “ இந்தக்கழுத தவங்கெடந்து பிறவியெடுக்கும்,”என்று கிணற்றைப்பார்த்துக்கொண்டிருக்கையில் சொல்வார்.

“என்ன நெனப்பில இருப்ப..கையில பிள்ளங்கள பிடிச்சுக்கிட்டு வழியிலயே நிக்கற. உள்ளப்போகவேண்டியது தானே..”என்ற பெரியய்யாவின் குரலால் கலைந்து மண்டபத்தின் உள்ளே சென்றாள்.சட்டென்று மெல்லிய தண்மையான இருள் வந்து அனைத்துப்புலன்களையும் தொட்டு ஆறுதல்படுத்தியது.

சின்னவன், “ஜாலி…ஜாலி..இங்க நல்லாருக்கு,”என்று குதித்தான். “இவன மேய்க்கமுடியாது,”என்றபடி கதிர் சின்னவனின் கையைபிடித்தபடி முன்னே செல்ல ,அவன் கையைவெடுக்கென்று இழுத்து உதறினான்.கதிர் அவன்முதுகில் ஒன்று வைக்கவும் கத்தியபடி கீழே அமர்ந்து கொண்டான்.

இருபுறமும் நெடுகதூண்கள் .அடுத்த நிறைதூண்களை பலகைகற்களை அடுக்கி சுவராக்கியிருந்தனர்.குகைகளில் வாழ்ந்த நினைப்பில்தான் இந்தமாதிரி கல்லால் ஆன இடங்களை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் நாமும் இன்று இதை இத்தனை விருப்புகிறோமா? என்று சந்தியா நினைத்துமுடிப்பதற்குள் முக்கால்வாசி மண்டபத்தை கடந்திருந்தார்கள்.சட்டென்று ஔி.இருபுறமும் சுவர்அடைப்பில்லாத தூண்கள் .

இடப்பக்கம் இருந்த திறப்பிற்கு அருகில் புரோகிதருக்காக காத்திருக்கையில் தூயவெண்ணிறத்தில் இளம்பசு அல்லது வளர்ந்த கன்று குறைந்த உயரத்தில் கொழுக்கட்டையென அழகுவழிய நின்றிருந்தது.சட்டென்று பெரியவனை கண்கள் தேடியது.அவன் முன்பே கண்களைவிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒவ்வொருவரிடமாகக் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

“இவங்கண்ணுல எங்கருந்தாலும் மாடுதப்பமுடியாது..பேசாம இருடா”என்ற சுமி தூணில் சாய்ந்துகொண்டாள்.

சாந்தாம்மா,“தவமா கெடக்கறான்..மாட்டக்கண்டா என்னமா இருக்குமா? நேரம்போறது தெரியாம நின்னுகிட்டிருப்பான்…டேய் அடம்பண்ணாத…அப்பறம் கூட்டிட்டு போறேன்..”என்றார்.

அவன் கைகால்கள் ஓரிடத்தில் நிற்காமல் சுழன்று பார்த்தபடி சந்தியாவை தேர்வுசெய்தான்.

“அத்த..அத்த வாங்க கோமாதா பாக்கப்போலாம்…ப்ளீஸ் அத்த,”

கூம்பிய சிறுமுகமும், இன்னும் கூம்பிய உதடுகளும் ,விரிந்தகண்களையும் மறுக்க அவளால் முடியவில்லை.அவன் கன்னத்தில் வழிந்த வியர்வையை தன்கைக்குட்டையால் துடைத்தபடி , “மாடு பாக்க போலான்னு சொல்லு..போலாம்,”என்றாள்.

“நல்லபிள்ளயையும் கெடுப்ப நீ…”என்ற அம்மாவை கவனிக்காமல் அவனைப்பார்த்தாள்.உதடுகள் விரிய சிணுக்கத்துடன், “மாடும்மா பாக்கப்போலாம்…”என்றான்.சந்தியா வேகமாக சரித்தபடி அவனை தன்னோடு இழுத்துக்கொண்டாள்.

அகத்திஇலைகள் தன்குழம்புகளில் மிதிபட, மைவிழிகளில் புது மனிதரைக்காணும் எந்தபதட்டமும் இன்றி இளம்பசு பார்த்தது.சந்தியா அவனை கையில் பிடித்தபடி, “ இங்கயே நில்லுடா,” என்றாள்.

அவன் அவள்கையை வேகமாக உதறி பசுவை சுற்றிசுற்றி வந்தான்.அப்படிஎன்ன இந்தப்பயலுக்கு? என்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அத்த ….எங்க மடியவே காணோம்,”என்றாள்.

எப்பவும் கேட்பதுதான் என்பதால், “ இங்க வா,” என்றழைத்து அங்கப்பாரு..”என்றாள்.

“பாப்பாத்த..”

“இதெல்லாம் எங்கடா கத்துக்கற…”என்றவளை கவனிக்காமல் கீழே குவிந்தும், இறைந்தும் கிடந்த அகத்திஇலைகளை எடுத்து நீட்டினான்.பசு அலட்சியமாக திரும்பிக்கொண்டது.இவன் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று அலைபாய்ந்தான்.

“ஏந்த்த..என்னிய பிடிக்கலாயா இதுக்கு..”

“ஒரே தீனிய நீ திம்பியா..அதுக்கும் அப்படிதானே…இந்த எலப்பிடிக்கல..”

“ஏன் இத குடுக்கறாங்க..அதுக்குப்பிடிச்சத குடுக்கல..”

அதுவிதி என்று நினைத்து சொல்லாமல் அந்தப்பசுவைப் பார்த்தாள்.என்ன மாதிரி உடல்..இதுவரைக்கும் பார்க்காத அழகு..இங்கருக்கற செல மாதிரி.. என்று நினைக்கும்போதே… இந்தஅங்கலட்சணம் தான் இத இங்க கொண்டுவந்து தள்ளியிருக்கு என்று நினைத்து திரும்பிக்கொண்டாள்.சேவல்கள் ,கோழிகள் என்று அவன் அவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தான்.

“ந்தா..வரமாட்டிங்க.ஆத்துக்குபோயிட்டுவரனும்..”என்ற குரலால் இருவரும் சுதாரித்து மண்டபத்திற்குள் நுழைந்தார்கள்.புராகிதர் தன் அம்பு சேனையுடன் அமர்ந்திருந்தார்.

“போய்..காவிரியில முழுகிண்டு வாங்கோ..இங்க தாயாரா இருக்கும்..துண்ட விட்டுட்டு வாங்கா,”என்று பெரியய்யாவைப் பார்த்து சொன்னார்.

முகப்புமண்டபத்தில் திருநங்கைகள் பணம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.சந்தியா, “அக்கா..அவங்களோட வந்தோம்..”என்றதும் அவள் சிரித்தபடி, “போ,”என்று நடந்தாள்.

முகமண்டபத்திலிருந்து இறங்கி பிள்ளையார் சன்னிதிக்கு அருகிலிருந்த வேம்பைக்கடந்து அரசமர நிழலில் நடந்தார்கள்.வழியெங்கும் சிமெண்ட் பரப்பில் நாற்களங்கள் கோலமாவினால் வரையப்பட்டிருந்தன.நான்குபக்கங்களின் மையத்தில் வாசல்கள்.ஒவ்வொரு மடிப்பிலும் கலயங்கள்.வினைமுடித்தக்கலயங்கள் மக்களின் கால்களால் இலக்கில்லாமல் உருண்டுகொண்டிருந்தன.நாய் ஒன்று நாற்களத்தின் நடுவில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது.

மேட்டிலிருந்து ஆற்றில் இறங்கும்போதே, “காவிரி என்ன சாக்கடையாட்டம் இருக்கு,”என்று சந்தியா முகம் சுளித்தாள்.

பின்னால் வந்தவர், “தண்ணியப்பழிச்சா கடசியில ஒருவா தண்ணிக்கு அலையனும்,”என்றபடி ஆற்றில் கால்வைக்கத்தயங்கிய சிறுமியை கைபிடித்து அழைத்துக்கொண்டிருந்தார்.

கால்களை மணலிலும் நீரிலும் கிடந்த துண்டுகள், வேட்டிகள் தடுக்க சின்னவன் கதிரை தூக்குமானு அழுது காரியம் சாதித்தான்.

கால்கள் சுடு மணலில் புதைய நடுவில் ஓடிக்கொண்டிருந்த காவிரியின் ஒற்றைவிரலை நோக்கிச்சென்றார்கள்.ஆழமான இடம்..தயங்கி தயங்கி நகரும் காவிரி ‘நான் இருக்கறனில்லே’என்றபடி சூரியக்கதிர்கள் மினுமினுக்கும் குளிர்ந்த சிற்றலைகளால் கால்களைத் தடவினாள்.

காவிரியின் ஆழத்திற்கு நடந்து“அப்பாடா..சொகமா இருக்கு..”என்றபடி பெரியய்யா சட்டையைக்கழட்டினார்.தண்ணீரைக்கண்டது பயல்கள் அவர் பின்னாலேயே ஓடினார்கள்.

காவிரியில் நனைந்து எழுந்து ,எதிரே தும்பிக்கையை மடித்து வாயில் விட்டபடி படுத்திருக்கும் பெரும்யானை என தன்னைக்காட்டிய மலைக்கோட்டையை கும்பிட்டபடி சாந்தாம்மா , “எங்கய்யாவ மாதிரி எங்கம்மாவையும் உங்காலடியில சேத்துக்க பிள்ளையாரப்பா,”என்று வேகமாக சொன்னார்.

சந்தியா மலைக்கோட்டையைப் பார்த்தபடி முழங்கால்அளவு தண்ணீரில் நின்றிருந்தாள்.தலைக்குமேலே காயும் சூரியன்..அதற்கும் கீழே கலைந்துவிரிந்த கூந்தலென மேகப்போதி அம்மாச்சியின் சேலைமுந்தானையாகக் கடக்க , நின்ற சந்தியாவின் முதுகில் அண்ணி தட்டியதை உணர்ந்து திரும்பினாள்.

மணலில் நடக்கும் போது காலில் குத்திய ஊக்கை எடுத்தபடி நிமிர்ந்து கதிரைப்பார்த்தாள்.ஒருகணம் விழிகள் நிலைத்து பின் முன்னே நடந்தான். இருபயல்களின் மீன்கள் பற்றிய கதைகளை கேட்டபடி நடந்தார்கள்.

“அந்த மீன் என்ட்ட சொன்னிச்சு..”

“இல்ல..நீ பொய் சொல்ற..”என்றபடி இருவரும் முடியைப்பிடித்துக்கொண்டார்கள்.சுமி முதுகில் இரண்டு வைத்து இரண்டையும் பிரித்து விரட்டிவிட்டாள்.

சாந்தாம்மா தன்தங்கையிடம், “அந்த சிவப்பு புடவை கட்டியிருக்கற அம்மா நம்மஅம்மா மாதிரியில்லம்மா..”என்று காட்டியபடி கால்வலியால் தங்கையின் தோளைப்பிடித்துக்கொண்டு நடந்தார்.

சுமி, “அவ்வா நெனப்பு ஒருவிருஷமா நம்மள சுத்துது…அதுக்குதான் இதெல்லாம் செய்யறது..”என்றாள்.சூடான மென்மணல்பரப்பில் கால்கள் நன்கு புதைந்தன.வெப்பமான மணல்.சந்தியா குனிந்து மணலை அள்ளி கையில் எடுத்து பாலை என்று தோன்ற, பின்னால் திரும்பி ஆறு தன்உள்ளங்கையில் பிடித்துவைத்து ஒழுகவிட்ட நீரைப்பார்த்தாள்.மாறி மாறி இரண்டையும் பார்த்தபடி நடந்தாள்.

அம்மா மண்டபத்தினுள் புகை மறைத்த வழிகளால் பெரியய்யாவைக்காண அழகாய் இருந்தார். வெள்ளை வேட்டியில் சட்டையில்லாமல் தோய்ந்த தோள்களுடன் சிறுதொப்பையுடன் தளர்ந்து பலகையில் அமர்ந்து சிறுபிள்ளை போல புரோகிதரை  விழித்துப்பார்த்து  அவர் சொல்வதை செய்து கொண்டிருந்தார்.

முன்னோர் வரிசையைக்கேட்கும் போது அம்மா பெரியம்மா பக்கம் திரும்பி பிட்டடித்து சொல்லிக்கொண்டிருந்தார்.அம்மாச்சியின் பாட்டி பெயருக்காக விழிக்கையில் சந்தியா, “காவரியம்மாள்,”என்றாள்.

“சமத்து…தெரியாதுன்னா இவளதான் சொல்லனும்.கங்காதேவின்னு சொல்லலாம்.ஆனா..கொஞ்சம் ஒட்டுதல் வாரது பாருங்கோ..”என்று காவிரியை உரிமை கொண்டாடியபடி தன்மூட்டையைக் கட்டிகொண்டு, “பிண்டத்தைக்கரச்சுட்டு… கரையில இருக்கற காசிவிஸ்வநாதர, காவரித்தாய, பி்ள்ளயாரை சேவிச்சுட்டு நமக்கு முன்னாடி அங்க இருக்கற ஆஞ்சநேயர சேவிச்சிட்டு கிளம்புங்கோ. உங்க சேமத்த பாத்துண்டு குழந்தைகளோட நன்னாருங்கோ,”என்று கைதூக்கி வாழ்த்தி கும்பிட்டு நடந்தார்.

மலர்களுடன் எள்ளுடன் இருந்த மாவுஉருண்டைகள் நீரில் கரைந்து பால் எனமாறி பின் நீரென்றாகியது. வணங்கியப்பின் சந்தியா காவிரியை நோக்கிய முகப்புமண்டபத்தில் நின்றாள்.எதிரே மலைக்கோட்டையில், காவிரியில்,கரையிலிருந்த தென்னந்தோப்புகளில் நிலைத்திருந்தன அவளின் விழிகள்.இதுதான் இருகுடும்பங்களுக்கும் பொதுவான கடைசிசடங்கா ? என்று மனது தேடியது.எத்தனை கண்ணுக்குத்தெரியாத அலைகள் என்று காவிரியைப்பார்த்துக்கொண்டிருக்கும் போது அவளுக்குத்தோன்றியது.

அனைவரும் அமைதியாக நிற்க, படிகளில் ஏறி அவள் அருகில் நின்ற பெரியய்யா, “உங்கம்மாவுக்கு செய்யவண்டியதெல்லாம் செஞ்சாச்சு.போதுமாத்தா,”என்று பெரியம்மாவையும் அம்மாவையும் பார்த்தார்.இருவரும் அமைதியாக தலையாட்டினார்கள்.

சந்தியாஅம்மா முன்னால் நகர பெரியய்யா சாந்தாம்மாவைப்பார்த்து , “இனிமே புலம்பாம பிள்ளைங்களைப் பாக்கனும்,”என்று நடந்து கொழுந்தியாளிடம், “உனக்குதாஞ் சொல்றேன்.இனிமே நமக்கெந்த பெறந்தஎடன்னு நெனக்காத…நீ எந்தக்கொறையும் சொல்லி கேக்க நாங்க இருக்கோம்.உனக்கு மாமன் மவந்தானே நான்.ஒங்கம்மா வழிதானே..ம்..”என்று சொல்லிவிட்டு அவர் தம்பியிடம் பேசியபடி நடந்தார்.

சந்தியா கதிரிடம், “அங்கபாரு..தென்னைதோப்புக்கு நடுவுல நிக்கறது ஜோசப்சர்ச்..ஆத்துமேட்டுல ஏறி நேராநடந்தா சர்ச் பக்கமாதான் இருக்கனும்..நம்மதான் ரோடு போட்டு தூரமாக்கிட்டோம் போல ”என்றாள்.

கதிர் உற்றுபார்த்தபடி, “சர்ச்சா..? தென்னமரம்மாதிரி தெரியுது..”என்றான்.பயல்கள் “அத்த என்ன காட்றாங்க…எனக்கும்.. எனக்கும்,” என்று எம்பினார்கள்.

பெரியய்யா தன்தம்பியுடன் மண்பத்திற்குள் நடந்தார்.ஏற்றிக்கடிய தூயவெள்ளை வேட்டியின் கீழ் காணுகால்களிலிருந்து பாதம் தெரிந்தது.மண்டபதில் மெல்லிய இருள் பரவிநிற்க நடுவில் அவர் நடந்து கொண்டிருந்தார்.

சந்தியா சுற்றிலும் பார்த்தாள்.யாரோ யாருடனோ..யார்களோ யார்களுடனோ..பேசியபடி, சிரித்தபடி, பிணங்கியபடி ,கத்தியபடி இருந்தார்கள்.யார் இவர்கள் எல்லாம்? என்ற தோன்ற துணுக்குற்று எண்ணத்தை மாற்றிநடந்தாள்.

மண்டபத்தின் வெளியே வண்டிக்காக காத்துநின்றார்கள்.சந்தியா மேலே அனந்தசயனனின் சிலையைப்பார்த்தாள்.அதற்கு மேல கதிரவன்.அதற்கு மேல வெளி…கண்கள் கூசி கண்ணீர் வழிய கீழே குனிந்தாள்.குடிநீர்குழாய் வழிந்து தேங்கிய பள்ளத்தின் நீர், தன்மீது விழுந்த அகாயத்தை பரதிபலித்த ஔியால் மீண்டும் கண்களை சுருக்கினாள்.வந்து நின்ற வண்டியின் கண்ணாடியில் மீண்டும் அதே ஔியின் கூச்சம்.வண்டிக்குள் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

கதிர் பின்னால் திரும்பி , “ஏறுன சூரியன எதுத்துப்பாக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க…வானத்தப்பாக்காத..”என்றபடி அவளின் தலையில் கைவைத்தான்.

அரங்கத்தின் போக்குவரத்து அலைகளில் தானும் ஒருஅலையென நகர்ந்தது அவர்களின் வாகனம்.