– மோனிகா மாறன் –
எதற்காக எழுதுகிறேன்? இதற்கு தனிப்பட்ட முறையில் என் பதில்- சிறந்த எழுத்து வாசிப்பவரைத் தொடர்ந்து சிந்திக்கவும் எழுதவும் வைக்கும் என்பதே. ஆக என் வாசிப்புகளின் தொடர்ச்சியே என் எழுத்து. எழுதி எழுதியே நம் தரவுகளை உருவாக்கிக் கொள்ள இயலும். அந்த வகையில் எழுத்து எனக்கு ஆக்கப்பூர்வமான தரவுகளையும் வாழ்வியல் வரைமுறைகளையும் உருவாக்குகிறது.
வேறுபட்ட சிந்தனைகள் கொண்டவர்களை இச்சமூகம் எளிதில் ஏற்பதில்லை. என்னைப் பொருத்தவரையில் மிகச் சிறிய வயதிலிருந்தே வாசிப்புலகிற்கு வந்துவிட்டேன். எனவே நான் வாசித்த மிகப்பெரும் எழுத்தாளுமைகளின் சிந்தனைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றியே என் செயல்கள், பேச்சுகள் இருக்கும். ஆனால் நம் சமூகத்தின் பொதுவெளியில் அப்படிப்பட்ட எதையும் வெளிப்படையாக அவர்களின் காலங்காலமான நம்பிக்கைகளுக்கு எதிராக பேசிவிட இயலாது. அது மதமோ சினிமாவோ இலக்கியமோ அரசியலோ எதுவாக இருந்தாலும் நம் எண்ணங்களை வெளிப்படையாக இயம்புதல் எளிதானதன்று. இவ்விடத்தில் ஒரு பெண்ணாக இதனை நான் தீவிரமாக கூற இயலும்.
பொதுவாக, இதைப் பற்றியெல்லாம் நீ ஏன் பேசுகிறாய் என்ற பாவனையே எனக்கான எதிர்வினையாக இருக்கும். இத்தகைய சூழலில் எழுத்துலகம் எனக்கு முழுமையான வெளியாகவே உள்ளது. என் நினைவுகளை, சிந்தனைகளை மிக உண்மையாய் கட்டுப்பாடுகளற்று வெளிப்படுத்தும் தளம் எழுத்துதான். அத்தகைய விடுதலையை வேண்டியே நான் எழுதுகிறேன்.
தீவிர வாசிப்பும் நுண்மையும் கொண்ட எனக்கு எழுத்து என்பது என் இருத்தலின் ஆகச்சிறந்த உளவியல் வெளிப்பாடு. எழுதுவதால் என் கருத்துகள், கொள்கைகள் மேலும் மேலும் வலுப்பெற்று என்னை உருவாக்குகின்றன. சில வேளைகளில் நான் எழுதும் படைப்புகளை எந்த இதழுக்கும் அனுப்பாமல் அப்படியே விட்டுவிடுவதுண்டு. ஏனெனில் அவை எனக்காக எழுதப்பபட்டவை. உண்மையில் பிரசுரமானவற்றைவிட பிரசுரமாகாத படைப்புகள் என்னிடம் நிறைய உள்ளன.
எந்த இதழுக்கு அனுப்பினாலும் இல்லையென்றாலும் தினமும் எதையாவது எழுதுவது என் இயல்பு.. எப்படி வாசிப்பின்றி என் நாள் நிறைவுறாதோ அதே போன்று ஒரு பக்கமாவது எழுதாமல் முடிவுறுவதில்லை. எத்தனை பணிகள் இருப்பினும் எந்தச் சூழலிலும் என்னால் எழுத இயலும் என்பதை தன்னம்பிக்கையுடன் கூற இயலும்.ம ஏனெனில் இன்று அதிகம் பேர் நேரமில்லை, சூழல் சரியாக இல்லை என்றெல்லாம் காரணங்கள் கூறுகிறார்கள்.
எனில் எப்படி என்னால் எழுத இயலுகிறது? தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், இணையம் என்று பொழுதுபோக்கு கொண்டாட்டங்கள் நிறைந்த இக்காலகட்டத்தில் இலக்கியம், தீவிர வாசிப்பு என்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. மேலோட்டமாக அதிகபட்ச கவன ஈர்ப்பாக பதினைந்து நிமிடங்களுக்கு மேல் எதையும் கூர்ந்து நோக்குவதற்கு நிறைய பேருக்கு விருப்பமில்லை. இவையெல்லாம் தெரிந்தும் எதற்காக எழுதுகிறேன்? எழுத்து என் சிந்தனைகளை வெளிப்படுத்தும் வழி மட்டுமன்று. அது என் வாழ்வின் அனைத்து செயல்களிலும் உள்ளது என்றே கூறுவேன். நான் எழுதுவதாலேயே பிறருடன் என் உறவுகள் மிகச்சீராக உள்ளன. அந்த புரிதலை உண்டாக்குவது என் எழுத்தே. நம்மைச் சுற்றி உள்ளவர்களின் உண்மையான இயல்பு பிறர் நடத்தும் பாவனைகள், மெலோடிராமாக்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள அடிப்படை நான் எழுதுவதே.
பொதுவாக நான் மிக இயல்பாக, எளிதாக அனைவரிடமும் பழகும் இயல்புடையவள். என் நட்பு வட்டம் மிகப்பெரியது. என் கருத்துகளுடன் முரண்பட்டாலும் என்னுடன் பழக மிக விருப்பத்துடன் உள்ள நண்பர்களே அதிகம். நிறைய பேர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். அனைவரும் விருப்பத்துடன் கேட்கும் வகையில் உண்மையுடன், கூரிய தரவுகளுடன், நண்பர்களிடமும் உறவுகளிடமும் சுவாரசியமாக பேசும் உற்சாக மனநிலை என் எழுத்தின் வாயிலாக நான் அடைந்ததே. எவரிடமும் பொய் முகம் காண்பிக்காமல் உண்மையாய் இருப்பது எத்தனை கடினமானது என்பது அனைவருக்கும் தெரியும்.
இத்தகைய சூழலில் பூச்சுகளற்று உண்மையுடன் வாழ எனக்கு அடிப்படையாக உள்ளது என் எழுத்தே. அந்த உண்மைத்தன்மையை, நட்புணர்வை, எவரையும் நேசிக்கும் பண்பட்ட மனதை எனக்களித்தது என் எழுத்தே என்று நான் உணர்ந்திருக்கிறேன். சமூகம், உறவுகள் சார்ந்த என் உள எழுச்சிகளை, கோபங்களை நான் எவரிடமாவது நேரடியாகக் கூறியிருந்தால் இன்று நிச்சயம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்தான் இருந்திருப்பேன். மனச்சீற்றங்களை என் எழுத்தில் கொட்டித் தீர்ப்பது என்னளவில் மிக இயல்பான மன நிறைவு என்பேன்.
எழுத்தின் வாயிலாக நான் உணரும் மனித மனங்களின் நுண்ணுணர்வுகள் வாழ்வில் அவர்களுடன் பழக எளிதாக உள்ளது. சோர்வுகளற்று, புலம்பல்களற்று, முணுமுணுப்புகளற்று, பேராசைகளின்றி வாழ்வின் எளிய மகிழ்வுகளையும் உன்னத அனுபவங்களையும் உற்சாகமாய் எதிர்கொண்டு பிறருக்கும் அந்த மனநிலையைக் கடத்தும் அளவிற்கு என்னை வைத்திருப்பது என் எழுத்தே. பிறரிடம் எனக்கான இடத்தை அளித்ததும் எழுத்துதான் என மகிழ்வுடன் பகிர்கிறேன்..
oOo
(மோனிகா மாறனின் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் இணைய இதழ்களிலும் அச்சிதழ்களிலும் வெளிவந்துள்ளன. கவிதைகள் மற்றும் சில கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. இவரது நாவல் ஒன்று எழுதி முடிக்கப்பட்டு வெளியாக உள்ளது. செவ்வியல் மற்றும் தீவிர இலக்கிய வாசிப்பில் அதிக நாட்டம் கொண்ட இவர் தமிழ் இலக்கியத்தின் பல முக்கிய புத்தகங்களுக்கு விமர்சனங்கள் எழுதியுள்ளார். வேலூரில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்).