குழந்தைகள் தங்கள் கனவுகளைப் பரப்பி வைத்து
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
ஒரு குழந்தையின் கனவு இன்னொரு
குழந்தையினுடையதைப் போல் இல்லை
தன்னிடம் இல்லாத கனவு இன்னொரு குழந்தையிடம்
இருப்பதைக் கண்டு பரவசம் அடைகிறார்கள்
அக்கனவைத் திருடும் எண்ணமில்லை குழந்தைகளிடம்
அக்கனவை பலவேறாக மாற்றி விஸ்தீரித்து
அதன் உரிமையாளரிடமே கொடுத்து விடுகிறார்கள்
தன் கனவு பிரம்மாண்டமாகி பெருகி நிற்பதை
பெரும் பரவசத்துடன் பார்க்கிறது அக்குழந்தை
வளர்ந்தவர்களே அக்கனவுகளைத் திருடுகிறார்கள்
திருடிய கனவுக்கு மாற்றாக எதையுமே வைப்பதில்லை
சில சமயம் குழந்தைகளின் கனவுகளை
எடுத்து நுகர்ந்து பின் அதே இடத்தில்
வைத்து விடுகிறார்கள் வளர்ந்தவர்கள்
நுகரப்பட்ட கனவுகளை புறந்தள்ளி விடுகின்றன குழந்தைகள்
மேஜைக்கு கீழே கிடக்கின்றன அக்கனவுகள்
[மேஜைக்கு கீழே கிடக்கும் அக்கனவுகள்
குழந்தைகள் வளர்வதற்காக காத்திருக்கின்றன]
அவற்றுக்கு இணையாக வேறு கனவுகளை
குழந்தைகளால் தோற்றுவிக்க முடியவில்லை
கனவில்லா வெற்றிடங்களைச் சுற்றி
புதிய கனவுகளைப் பரப்புகிறார்கள்