ஆள்மாறாட்டம் – அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர்

 எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். எதுக்கு இவனுங்க தெனிக்கும் என் முன்னாடி வந்து நிக்கறானுங்க. இவனுகளுக்கு வேற வேலையே இல்லியா… ஒரு வேலை நம்பள மாதிரியா… அதுலயும் அதோ நிக்கறானே ஒருத்தன். அவன பாத்தாதான் எனக்கு செம காண்டா ஆவுது.

நான் சொல்றத அப்படியே நல்லா கற்பனை பண்ணிக்கங்க. நல்லா தூங்கினு இருப்பேன். அதுவும் குளுர்காலம். காலங்காத்தால வந்து டக்குனு லைட்ட போடுவான். கஷ்டப்பட்டு கண்ண தொறப்பேன். பாத்தா இவன்தான் நிப்பான். நைட் லேட்டாத்தான் போவான். ஆனா வரும் போது பிரஷ்ஷா வருவான். சரி ஒழிஞ்சி போவட்டும் லைட் இருந்தா இன்னானு கண்ண மூடுனா, டபால்னு இருக்கற ஒரு துண்டையும் உருவி டப்புனு தண்ணிய வாரி தலையில் ஊத்தி வுட்ருவான். அதுவும் அந்த குளுருக்கு அந்த தண்ணி அவ்ளோ ஜில்லுனு இருக்கும். எழுந்து போய் அவன் கழுத்தாப் பட்டையிலயே வக்கலாமானு தோணும். ஒருவேளை நான் எழுந்து வரமாட்டன்னு அவனுக்கு தெரிஞ்சிதான் இதெல்லாம் பண்ணாறானானு தெரில எனக்கு. அப்பறம் இன்னாத்தையோ மேல வாரிக்கொட்டி தெச்சி இருக்கற கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் ஓட்டி விட்ருவான். இதுல இவுரு பாட்டு பாடாம வேலை செய்ய மாட்டாரு. நடுவுல இன்ஸ்ட்ருமெண்ட் மியூஸிக் வேற.

ஒரு வழியா அவன் வேலையெல்லாம் முடிச்சிகினு ஒழிவான்னு கம்முனு இருப்பேன். நம்ம முன்னாடி வகைவகையா பலகாரமா இருக்கும். சரி இவன் போவட்டும் துன்னலாம்னு ஆசையா இருப்பன். எல்லாம் முடிச்சி டபால்னு கதவ தொறந்தா மறுபடியும் நான் மொதல்ல சொன்னல அவனுங்க வந்து என் மூஞ்சியயே உத்து உத்து பாப்பானுங்க. அப்படி இன்னாதான் நம்ம மூஞ்சில இருக்கு தெரில. வரீசையா வந்து வந்து பாத்துட்டு பாத்துட்டு போவானுங்க. அப்பப்ப ஒன்னு ரெண்டு லூசுங்க என் காதுல உழற மாதிரி எதுனா பேசுங்க. அதுங்க மட்டும் தான் நமக்கு இருக்கற ஒரே டைம்பாஸ். இவனுங்கல பாக்க வெச்சிட்டு எப்படி திண்றதுனு ஒரு டீசண்ட்டுக்காக கம்முனு இருப்பன். ஆனா அவனுகளுக்கு அந்த டீசண்ட் சுத்தமா இருக்காது. எல்லாத்தயும் தூக்கினு போய் பங்கு போட்டு திம்பானுங்க. நானும் இப்ப வரைக்கும் கடைசியா மிஞ்சற வாழப்பழத்த தின்னுட்டு காலத்த ஓட்டறன்.

மழை வந்தாதான்பா இந்த இம்சைங்க கிட்டருந்து கொஞ்சம் நிம்மதி. ஃப்ரியா இருக்கலாம். அப்பகூட தனியாலாம் இருக்க முடியாது. எதுனா ஒன்னு வந்து முன்னாடி உக்காந்துகினு நம்ம மூஞ்சியயே பாத்துகினு இருக்கும். திடீர்னு அழுவும். நமக்கும் ரொம்ப பாவமா இருக்கும். அதுக்கு நான் இன்னா பண்ண முடியும் சொல்லுங்க. இப்படியேதான்பா நம்ம லைப் போகும். என்ன மாதிரி ரொம்ப பேர் இருக்காங்கபா. அதுலயும் பணக்கார பசங்களும் இருக்காங்க. அவனுங்க அலும்பலு தாங்க முடியாதுபா.

இன்னாடா இது லைப் ஒரே போரா இருக்குனு படிக்கற உங்களுக்கே இவ்ளோ காண்டா இருக்குதே. எனக்கு எவ்ளோ காண்டா இருக்கும். ஆனா லைப் எப்பவுமே இப்படியே இருக்காதுபா. ஒருநாள் நம்பளுக்கும் த்திரில்லிங்கா’ எதுனா நடக்கும். நாம அதுக்குலாம் பயந்துக்கக் கூடாது. அதல்லாம் அப்படி அப்படியே எஞ்ஜாய் பண்ணனும். எனக்குகூட இப்டி ஒண்ணு நடந்ததுப்பா. அத்த சொல்லத்தான் வாயெடுத்தன். ஆனா இன்னான்னாவே ஒளரிகினு இருக்கன். சொல்லறன் கேளேன்.

இப்படி ஒருநாள் ராத்திரி அவன் வந்தான். அவந்தான் காலங்காத்தால தலைல தண்ணிய வாரி ஊத்துவானே, அவனேதான். எப்பவுமே தனியாத்தான் வருவான். அன்னிக்கினு பாத்து ஒரு கேங்கோட வந்தான். வந்த எவனும் புது ஆளுங்கலாம் இல்ல. அடிக்கடி வரவனுங்கதான். அதுவும் அதோ நிக்கறானுகளே இரண்டு பேரு. மனசுல பெரிய இதுனு நெனப்பு. எப்ப வந்தாலும் வந்து பக்கத்துலயே நின்னுப்பானுங்க. மத்தவனுங்க மாதிரி தூரமாலாம் நிக்க மாட்டானுங்க. ஆனா வெளியே நிக்கறவனுங்க இவனுங்கள அசிங்க அசிங்கமா திட்டுவானுக. நமக்கு அதுல ஒரு ஆனந்தம். ஆ…………. என்னய டைவர்ட் பண்ணாதிங்க. அப்பறம் கதை ஷார்ப்பா இல்லனு எவனாது கமெண்ட் பன்னுவான். கவனமா கேளுங்க இதுதான் முக்கியமான கட்டம்.
__________________________________________________________________________________________________

மேல இருக்கற கோடு சைலன்ஸ். உங்களுக்கு ஒரு மூட் கிரியேட் பண்ண. இப்போ கதை சரியா?

எங்க உட்டேன். ஆங், கேங்கோட வந்தானா, வரும்போதே ஒரு கோணிப்பைய தூங்கினு வந்தானுங்க. நல்லா கவனிங்க, எந்த லைட்டையும் போட்ல. கைல டார்ச் எடுத்துகினு மெதுவா வரானுங்க. தூரத்துல வேற ரூம்ல இருக்கற நம்ப கூட்டாளி ஒருத்தரு இதப் பாத்துட்டு நமக்கு சிக்னலு கொடுக்கறாரு. கம்முனு இருனு நான் பதில் சிக்னல் கொடுக்கறன். வந்தவனுங்க கையில இருந்த மூட்டைய அப்படியே கீழ வைக்கறானுங்க. மூட்டைய மெதுவா பிரிக்கறான் ஒருத்தன். எனக்கா சஸ்பன்ஸ் தாங்கல. வேகமா பிரிடா கொய்யாலனு கூவலாமானு பாத்தன். மூட்டைய மெதுவா தொறக்கறான். அந்த வெண்ண சும்மா நாள்ளாம் லைட்ட போடுவான். இன்னிக்கு பனை மரம் மாதிரி அசையாம நிக்கறான். மூட்டைய தொறந்ததும் எல்லாரும் ஒரே நேரத்துல அது மேல டார்ச் அடிக்கறானுங்க.

ஆ………………………………………………………………………………………………………………………………………………….

நான் தான் அதிர்ச்சில கத்திட்டன். ஆனா அவனுங்களுக்கு கேக்கல. இப்ப அதுவா முக்கியம். மேட்டருக்கு வருவோம். மூட்டைய தொறந்தா… மூட்டைய தொறந்தா… தொறந்தா… அப்படியே என்ன மாதிரியே ஒருத்தன் நிக்கறான். நான் அவன பாக்க அவன் என்ன பாக்க. மாத்தவனுங்கல்லாம் சிரிச்சிகினு இருக்கானுங்க.

அப்படியே ‘தொடரும்…’ போடலாமானு யோசிக்கற அளவுக்கு எனக்கு படபடப்பா போச்சி. உங்க டைம வேஸ்ட் பண்ன வேணாம்னு கண்டின்யூ பண்றன். நான் அவனப் பாத்து கேக்கறன்,

“டேய் யாருடா நீ”

………………………………….

“சொல்லுடா, எப்புடிடா நீ என்ன மாதிரியே இருக்க…..”

…………………………………………………………………………………………………..

கேக்கறதுக்கு எதுனா பதில் சொல்றானா பாரு. சொவுடன் மாதிரியே நிக்கறான். “டேய் நீ செவுடனா, ஊமையாடா” இந்த நேரத்துல இந்த நெலமையில நீங்களா இருந்தா கண்டிப்பா உங்க அப்பா மேல உங்களுக்கு ஒரு டவுட் வரும். ஆனா என்னால அப்படிலாம் நினைக்க முடியாது. ஏன்னா… அதெல்லாம் வேணா வுடுங்க. இவன பாப்போம்.

அவன் இன்னா கேட்டாலும் அப்படியேதான் நிக்கறான். இந்த வெண்ண இப்பதான் ஆராய்ச்சி பண்ணுது. அவனப் பாக்குது, என்னப் பாக்குது, மறுபடியும் அவனப் பாக்குது, என்னப் பாக்குது. இப்படியே ஒரு நாலு வாட்டி பாத்துட்டு மத்த தடிமாடுங்க (மாடுங்கனு திட்டலாமானு தெரிலயே) கிட்ட மண்டைய ஆட்டுது. அவனுங்க அலேக்கா என்ன தூக்கிட்டானுங்க. எனக்கு வந்துச்சி பாரு ஒரு கோவம். உடனே அவனுங்களுக்கு ஒரு சாபம் உட்டேன், “எல்லாரும் சொர்க்கத்துக்கு போங்கடானு”. என் சொர்க்கம்னு கேக்காதீங்க. அத அப்பறம் சொல்றன். த்திரிலிங் போய்டும்.

என்னைய தூக்கி கீழ வெச்சிட்டு அவனத் தூங்கி என் எடுத்துல வச்சிட்டானுங்க. எனக்கு இன்னா பண்றதுனே தெரில. தூரத்துல இருக்கற என் கூட்டாளிய பாக்கறன். அவன் இப்பதான் நல்ல தூங்கற மாதிரி நடிச்சிகினு இருக்கான். எனக்கு இன்னா பன்றதுனே தெரில. ஆமா நம்பலால என்ன பண்ண முடியும் இவனுங்கள. நான் எப்படி ஸ்டைலா உக்காந்துனு இருந்தனோ அப்படியே இப்ப அவன் உங்காந்துனு இருந்தான்.

டேய் டேய் இது உனக்கே அடுக்குமாடா டேய், நாளைக்கு உன்னயும் எவனா வந்து இப்டி தூக்கினு போவல என் பேர மாத்திக்கிறண்டா டேய், சைட் ஆணில கேலண்டர் இருக்குது குறிச்சிக்கடா அங்க பாருடா, அதோ பேசிகினு நிக்கறானே அந்த வெண்ண அவன் உன்ன தூங்கக்கூட உடமாட்டான்டா.

நான் பொலம்பிகினே தான் இருந்தன் எவன் காதுலயும் விழல. எடுத்துகினு வந்த கோணில என்னைய கட்டி தூங்கினு போயிட்டானுங்க. எங்க எடுத்துகினு போறானுங்க. இன்னா பண்ண போறானுங்க ஒன்னும் தெரில நான் இன்னும் கோணிப்பைல தான் இருக்கன். புரியாத பாஷைலாம் கேக்குது. கொஞ்ச நேரம் பறக்கற மாதிரி இருக்குது. கொஞ்ச நேரம் மெதக்கற மாதிரி இருக்குது. மொத்ததுல என் சோலி முடிஞ்சிது.

அப்படியே எங்கயே ஒரு ரூம்ல ஒரு ஓரத்துல என்னய உக்கார வெச்சானுங்க. அதுக்கப்பறம் என்னாவோ பேசனானுங்க. போய் லைட்ட நிறுத்திட்டு போய்ட்டானுங்க. அப்பாடானு இருந்தது. கோணில இருந்து வந்ததுக்கப்பறம் தான் கொஞ்சம் மூச்சே வுட முடிது. டையட்ல நல்ல தூக்கம் வந்ததுனு தூங்கிட்டன். எப்பவுமே நல்ல தூக்கத்துல அந்த வெண்ண லைட்ட போடுமா. நானா எழுந்திருக்கற வரைக்கும் இங்க எவனும் லைட்டே போடல. சரி இங்க டியூட்டி டைம் வேற மாதிரினு வெய்ட் பண்ணேன். எவ்ளோ நேரம்னு கேக்கறீங்களா, சுமார் ஒரு ஆறு மாசம். எவனும் லைட்ட போட வரவேயில்ல. அடேய் பயமா இருக்குதுடா, ஒரு குண்டு பல்ப்பாவது போடுங்கடான்னு கத்தறேன், கேக்க எவன் இருக்கான்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.