நிழல் – மு. வெங்கடேஷ் சிறுகதை

மு வெங்கடேஷ்

 

அன்று வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சூரியன் மறைந்த பின்னும் சூடு தணியாமல் இருந்தது. உடல் முழுவதும் வியர்வை ஊற்றெடுத்து வழிந்து கொண்டிருந்தது. எத்தனை முறை குளித்தாலும் அதே நிலைதான். வெளியே புழுக்கம் அதிகமாக இருந்தது. அதைவிட வீட்டிற்குள்.

கட்டியிருந்த லுங்கியுடன் மேலே ஒரு அரைக்கை சட்டையை மட்டும் எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே நடக்கத் தொடங்கினேன். வீட்டைச் சுற்றியிருந்த மரங்கள் அனைத்தும் வரைந்து வைத்த ஓவியம் போல் காட்சியளித்தன. நெற்றியில் இருந்த வியர்வைத் துளி வடிந்து வாய் அருகே வர, தட்டி விட்டேன். நடக்க நடக்கத் தொடைகள் இரண்டும் உரசி உள்ளே அணிந்திருந்த ஜட்டியும் நனைந்து ஒருவித எரிச்சலை உண்டு பண்ணியது. அந்த ஒன்பது மணி இருட்டிலும் விளக்கை ஏறிய விட்டு வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. தூரத்தில் ஒருவர் சுத்தியலை வைத்து ஏதோ கம்பியை அடித்துக் கொண்டிருந்தார். அவர் அடிப்பது என் தலையில் அடிப்பது போல் இருந்தது. கால்கள் வேகம் எடுத்தன.

நாள் முழுவதும் சிறுவர்கள் விளையாடிவிட்டுச் சென்ற பூங்கா தற்போதுதான் உறங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டு இரண்டு விளக்குகள் மட்டும் எரியவிடப் பட்டிருந்தன. பின் வாசல் அருகே இருந்த விளக்கு மின்னிக் கொண்டிருந்தது. அதன் கீழே நின்று கொண்டிருந்த கருப்பு நிற நாய் ஊளையிட, அது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. பூங்காவின் தென்கிழக்கில் காலையிலிருந்து ஓயாது ஆடிக் கொண்டிருந்த இரண்டு ஊஞ்சல்கள் தற்போது அசையாமல் தொங்கிக் கொண்டிருந்தன. அதன் அருகில் கிடந்த சிமெண்ட் இருக்கையில் போய் அமர்ந்தேன். வலதுபுற பக்கவாட்டில் தலைக்கு மேல் எரிந்து கொண்டிருந்த விளக்கு என் உருவத்தை நிழலாகக் கீழே தரையில் காண்பித்துக் கொண்டிருந்தது. அங்கு என்னையும் என் நிழலையும் தவிர வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

பூங்காவிற்குள் வந்து அரை மணி நேரம் கடந்திருந்தும் புழுக்கம் தணியவில்லை. சட்டையின் மேல் பட்டன் இரண்டையும் கழட்டிவிட்டு, அரித்துக் கொண்டிருந்த ஜட்டியை கையை உள்ளே விட்டு சரி செய்தேன். இடது புறமாகத் தரையில் தெரிந்து கொண்டிருந்த நிழல் ஏதோ விசித்திரமாகத் தெரிய கீழே உற்றுப் பார்த்தேன். தலையில் இரண்டு கொம்புகள். அது ஒரு மிருகம் போன்று காட்சியளித்தது. கோபத்தில் மேலும் கண்களை விரித்துப் பார்க்க, தலையின் இரு புறமும் இருந்த முடி எழும்பி நின்று கொண்டிருந்தன. கைகளைக் கொண்டு தடவிப் பார்த்தேன். குளித்து எண்ணெய் தேய்க்காத முடி மொரமொரப்பாக இருந்தது. முடியைப் பல முறை சரி செய்ய முயன்றும் தோல்வி அடைந்தேன். அருகில் தண்ணீர் குழாய் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் கண்ணில் படவில்லை. கையில் எச்சிலைத் துப்பி தலையை ஈரப்படுத்தி, முடியைப் பணிய வைக்க முயன்றேன். இரண்டு கொம்புகளும் கீழே பணிவதாகத் தெரியவில்லை. அவ்வாறு செய்வது என்னை மேலும் மேலும் எரிச்சலூட்டி கோபமடையச் செய்தது. ஒரு கட்டத்தில் மொத்த முடியையும் பிய்த்து எரிந்து விடலாம் என்று முயற்சிக்கையில் முடிகள் அனைத்தும் மேல் எழும்பி மிருகம் போய் அரக்கன் ஆனது நிழல்.

சற்று நேரம் அமைதியாக இருந்து என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பின் சட்டைப் பையில் இருந்த சிகரட் பாக்கெட்டை எடுத்தேன். காலை வாங்கிய பாக்கெட்டில் மீதம் இருந்தது இரண்டு சிகரெட்டுகள்தான். அது என்னை மேலும் எரிச்சலடையச் செய்தது. அதில் ஒன்றை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்தேன். “ஷ்ஷ்ஷ்ஷ்” என்ற சத்தத்துடன் உள்ளே இழுக்க, அது என் தொண்டை வழியாக வயிறு வரை உள்ளே செல்வதை என்னால் உணர முடிந்தது. இரண்டு நொடி உள்ளே சுழன்ற புகை வாய் வழியாக வெளியே வர, தலையை சற்று மேலே உயர்த்தி  வானத்தை நோக்கி ஊதினேன்.

வெளியே வந்த புகை வானத்தில் பெண் ஒருத்தி உள்ளாடை ஏதும் அணியாமல் வெள்ளை நிற சேலை போன்ற துணியை மட்டும் போர்த்திக் கொண்டு நளினமாக பாலே நடனம் ஆடுவது போன்று காட்சியளித்தது. அதைப் பார்த்த நான் பரவசம் அடைந்தேன். உடல் சிலிர்க்கத் தொடங்கியது.  அடுத்த இழுப்பிற்காக சிகரெட்டை வாயில் வைத்து, ஒரு இழுப்பு இழுத்து,வயிற்றுக்குள் புகையை அனுப்பி ஒரு சுழட்டு சுழற்றி வெளியே விட்டேன். மேலும் ஒரு பெண் அதே போன்று நடனம்  ஆடத் துவங்கினாள். அது என்னுள் உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதல் சிகரட் முடியும்பொழுது ஆறு பெண்கள் நடனமாடிக் காற்றில் கரைந்திருந்தார்கள்.

யாரும் இல்லாத அந்த இருட்டில் பெண்கள் அவ்வாறு நடனமாடியது எனக்குப் பிடித்திருந்தது. அரித்துக் கொண்டிருந்த ஜட்டியைக் கையை உள்ளே விட்டு மீண்டும் சரி செய்து கொண்டேன். இரண்டாவது சிகரெட்டையும் எடுத்து பற்றவைத்து, இழுத்து, ஊதி அதே பெண்களை மீண்டும் நடனமாட விட்டு ரசித்தேன். அது என்னுள் இருந்த மது போதையை விட அதிக போதையைத்  தருவதாக உணர்ந்தேன். நாக்கை வெளியே நீட்டி உதட்டை நனைக்க, உதட்டில் படிந்திருந்த சிகரெட்டின் கசப்பு ருசித்தது.

சிகரட் முடிந்திருந்த நிலையில் சற்று நேரம் கண் அசந்திருந்தது. ஏதோ ஒரு சிந்தனை மட்டும் என்னை ஆட்கொண்டிருந்தது. ஆழ்ந்த சிந்தனையில் இருந்த என்னை அருகில் கேட்கும் சலசலப்பு நிதானத்திற்கு இழுத்து வந்தது. சுதாரித்துக் கொண்ட நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன்.

ஒரு ஆண், ஒரு பெண். கணவன் மனைவியாக இருக்க வேண்டும். அவள் காலில் மெட்டி இருக்கிறதா என்பதை உற்றுப் பார்த்து உறுதி செய்து கொண்டேன். அவன் சாயலில் என்னைப் போலவே இருப்பதாகத் தோன்றியது. பெண் மாநிறம், நல்ல அழகு. அவள் தலை முடிக்குக் கீழ் அணிந்திருந்த சட்டை நனைத்திருந்தது. அப்போது தான் குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும்.

அவர்கள் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை .ஒருவரை ஒருவர் கடிந்து கொண்டிருந்தார்கள். ஆணின் குரலே மேலோங்கி இருந்தது. அவ்வப்போது கண்களை துடைத்தவாறே அவள் அவனுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள். அடுத்தவர்கள் பேசுவதை ஒட்டு கேட்பது தவறுதான், ஆனால் எனக்கு அப்போது வேறு வழி இல்லை. அமர்வதற்கு அந்த இடத்தை விட்டால் வேறு இடம் கிடையாது.

இத்தன வருஷம் ஆகியும் நீங்க என்னப் புரிஞ்சிக்கலேல்ல?

என்ன புரிஞ்சிக்க?

………

அதான் நீ நடக்குற விதமே தெரியுதே.

கோவத்துல என்னனாலும் பேசாதீங்க.

அப்டி என்னத்த பேசிட்டேன்?

நா என்ன வேணும்னேவா வர மாட்டேங்குறேன்?

பெறகு?

இன்னைக்கு முடியாது.

அதான் ஏன்னு கேக்குறேன்?

ஐயோ இன்னைக்கு முடியாது…. புரிஞ்சிக்கோங்களேன்.

சாயந்திரம் கோவிலுக்கு போயிட்டு வந்த?

இப்போ மணி பத்து ஆவுது.

எனக்கு என்னைக்குத் தேவைப்படுதோ அன்னைக்குத்தான் வேணும்… உனக்கு தோண்ற நேரத்துல எல்லாம் முடியாது.

நா என்ன வேணும்னா செய்றேன்? என் வலி எனக்குத்தான தெரியும்,  என்று சொல்ல அழத் தொடங்கினாள். அவன் எதிர்த் திசையில் திரும்பி நின்று சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்துக் கொண்டிருந்தான். அவனைப் புகை சூழ்ந்திருந்தது.

கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசித்து விட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன். கதவு சாத்தியிருந்தது. ஜன்னல் வழியாகக் கையை உள்ளே விட்டு தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் பையில் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்றேன். விளக்குகள் அணைக்கப்பட்டு இருட்டாக இருந்தது. சுவரில் கை வைத்துத் தடவியவாறே சுட்ச்சை அழுத்தினேன். விளக்கு எரிந்தது.

தரையில் கிடந்த பாயில் காலை மடக்கி கேள்விக்குறி போன்று வளைந்து வயிற்றில் கை வைத்து மனைவி படுத்திருந்தாள். அடுக்களை சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து விளக்கை அணைத்து விட்டுப் படுத்தேன். பூசை அறையில் மாலை ஏற்றப்பட்ட குத்து விளக்கு குளிர வைக்கப்படாமல் எரிந்து கொண்டிருந்தது.

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.