எழுத்து

உருமாற்றம்

ஹேமந்த் குமார் 

நான் பிச்சையெடுக்காத
தெருக்களே இல்லை
கையில் திருவோடு எடுத்து
கால் வலிக்க நடக்கிறேன்
பசிப்பிணியால் துடிக்கிறேன்
ஹோட்டலுக்கு வெளியே நின்று
காதுகளில் உணவருந்தி
மனதின் வயிற்றை நிரப்புகிறேன்
‘கருவாடு, மீன், கோழி’
என்ற சொற்களை
காதில் கேட்கும் போதெல்லாம்
நான் ஒரு பூனையாக
உருமாறுகிறேன்
என் பற்கள்
கூர்மையடைகின்றன
மூக்கு இரத்த வாடையை
நுகர்கிறது
கண்கள் வெண்மையடைந்து
என் மென்மையான மீசை
முறுக்கு கம்பிகளைப் போல்
நீண்டு நிற்கிறது
வயிற்றில் பசி மட்டுமே
குடியிருக்கிறது
உடலில் ரோமங்கள்
சிலிர்த்துக் கொள்கின்றன
நகங்கள் தோலிலிருந்து
முளைத்து வளர்கின்றன
எனக்கு பிச்சையிடாதவர்களை
கடித்து குதற காத்திருக்கிறேன்
வால் மட்டும்தான் இல்லை
முழுமையடையாத மனிதப்பூனை.

எனும் புத்தர் எனும் மைத்ரேயர்

அர்ஜூன் ராச்

மிக வேட்கையிலுள்ள
என் ஆன்மாவுக்கான சுனை
தொடுவான் வழி ஓதவானக்கோட்டின்
நிலைகொண்டிருப்பதாக கேள்வி

பாதம் பதைக்க, பாதை பற்றிய
எந்த உணர்தலுமற்று நா வறண்டு
நாள்தோறும் அவ்வே தொடர்ந்தேன்

ஒருநாள் சிறு முள்ளேற்றிக் கொண்டதில்
வழிந்த குருதித்துளி கொண்டு
தாகமாற்றிக் கொண்டேன்

பிரிதொரு நாள் பள்ளமொன்றில்
விழுந்தேறிய
மயிர்கூச்செரிதலின் வழிந்த வியர்வையைக் கொண்டு
விடாய் போக்கிக் கொண்டேன்

மற்றொரு நாள் வாகனமொன்று
தாக்குவது போல் உரசிப் போன பயத்தில்
கழிந்த மூத்திரத்தின் ஈரநீர்மை முகர்ந்துகொண்டு
தொடர்ந்து இலக்கின் வழி முன்னேறினேன்

நாள்களில் ஒருநாள் புறப்படும்போது
என் பார்வையில்
எலியொன்றை துரத்தியபடி
பூனையொன்று குறுக்கிட்டுப் பாய்ந்தது
நிச்சயமாக அது அவசகுனமில்லையென
நித்யமாக அவதானித்துக் கொண்டிருந்தேன்
அவை ஒன்றையொன்று
பிடிபடாமலும் பிடிக்க முடியாமலும்
ஓடி களைத்துக் காணாமல் போனதுகள்

கவனம் கலைந்து தொடுவானம் தொடர
முற்படும்போது
பாட்டமாக கார்மேகம் சூல் முனைந்து
இடி இடிக்கத்தொடங்கியது
நாளையென வீட்டுக்கு திரும்பி,

‘வீதி நிறைப் பெய்யும் மழை ‘
ஓய்ந்து ஓய்ந்து வானம் தெளிவதில்
களித்துக் கொண்டிருக்க ‘அ’சாளரத்தின்
கீழ்ச்சட்டக்கோட்டில்
என்னால் அநாதியாக மனமறதியாக்கப்பட்டிருந்த
மீச்சிறு ஆசைகள் முத்து முத்தாக சிரித்துக் கொண்டிருந்தன

அதிலொன்றை மெல்ல விரல்கொடுத்து
தொட்டுப் பார்த்தேன் என் வேட்கைக்கு
அவை குளிர்ப்பாக
நாபிக்கமலம் வரை நனைத்து பாவிடத் தொடங்கின
நானதில் முழுவதுமாய்
மூழ்கி முக்தித்துக் கொண்டிருந்தேன் யாரோ என்னை கூப்பிடுவது போலிருந்தது
நான் செவிமடுக்கவே இல்லை

மேலும் குறியீடாக
சொல்லக் காத்திருந்தது இதுதான்
என் பெயர் ‘மைத்ரேயன் ‘ என்று,
என்னையும் சேர்த்தே நம்பவைக்கப்பட்டு
அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

என் அந்தரங்கப் பதிவேட்டிலிருந்து

குறிஞ்சி மைந்தன் 

என்ன எழுதுவதென்றுத் தெரியாமல்
எதையெதையோ எழுதி எழுதி,
சொல்லமுடியாதவனாய்
உங்கள் முன் நிற்கின்றேன்
நிர்வாணமாய்.

எனக்கென்று உணவுகளில்லை
ஆடைகளில்லை
ஓரிடமில்லை யாசிக்க உடல்களுமில்லை
அட்டையென ஒட்டுகின்றேன்
வருவோர் போவோரிடம்.

வறுமைக்கு மீறிய வாசிப்புகள்
இருந்தன என்னிடம்
இப்போதும் இருக்கின்றன
மிக அதிகமாக.

எனது பற்கள் தேய்ந்தாலும்
நான் முன்வைக்கும் வார்த்தைகள்
தொய்வையோ
தேய்மானத்தையோ
கண்டதில்லை ஒருபோதும்.

நிறைய பேசத் துடிக்கின்றேன்
இக்கணம் முதல் பகிர்ந்துகொள்வதற்குக்
காதுகளில்லை.
தேடித் தேடிச் சென்றாலும்
ஆணி ஏறுகிறது எமது கால்களில்.
அந்த ஆணி தொடர்ந்து குத்துகிறது என்னை
அந்த ஆணியைப் பிடிங்கி எடுக்கின்றேன்
ஒவ்வொரு முறையும்.
எப்படியாவது இரத்தக் கசிவு வந்துவிடுகிறது
மறுமுனையிலிருந்து.

தற்போதைய முழு மனநோயாளி நீயென்று
மனநல மருத்துவர் ஒருவர்
மருந்துகளை எழுதிக் கொடுத்திருந்தார்.
அதிகம் சிந்திக்கக் கூடாதென்றும்,
அதிகம் விவாதிக்கக் கூடாதென்றும்,
அதைவிட அதிகம் படிக்கக் கூடாதென்றும்.

மருந்து கடையில் வேலைச் செய்யும் ஒரு பருவப்பெண்
என்னிடம் சொன்னபடியே சிரித்துக் கொண்டாள்
மருந்துச் சீட்டில் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தபடி.
‘உங்களுக்குத் தர இதுபோன்ற மருந்துகள்
எங்கள் கடையில் இல்லையென்று’ கைவிரித்தப்படியே
ஏளனம் செய்தாள் என்னை உற்றுநோக்கியபடி.

அப்பருவப் பெண்ணிடம்
மருந்துச் சீட்டை வாங்குவதற்குள்
ஒருசில கவிதையாவது எழுதியிருப்பேன்
அல்லது
சில நண்பர்களிடம் என்னைக் குறித்த
கணிப்பைக் கணிசமாகப் பெற்றிருப்பேன்.

வேறொரு கடைக்குச் சென்றபோது,
பருவப் பெண்கள் இருக்கிறார்களா என்று
திட்டவட்டமாக எண்ணி,
மருந்துச் சீட்டைத் தர தயாரானேன்.
இம்முறை ஓர் இளம் கைம்பெண்ணின் வசம்
எனதான மருந்துச் சீட்டுடனே
எனதான அந்தரங்கமும் புலம்பெயர்ந்ததை
என்னுள் எண்ணிக்கொண்டிருக்கும்போதே,
எனக்கு விந்து வெளியேறிவிட்டது
என்னையறியாமல்.

இம்முறையும் ஏமாற்றம் மிகவே,
வீட்டிற்கு வந்து எனதறையில்
படுத்தேன்; உருண்டினேன்
நாற்புற திசையெங்கிலும்
ஓர் உலக்கை உருளுவதுபோல.
தூக்கம் கண்களை விட்டுக் கீழே
இறங்கிப் படுத்துக்கொண்டது.

என் எண்ணம் முழுக்க விந்து வெளியேறியது
ஏன்?
எப்படி?
எதற்காக?
என்றெல்லாம் சிந்தித்தப்படியே இருக்க
அந்தக் கைம்பெண் குறித்து
ஒரு கவிதை எழுதத் துவங்குகிறேன்
எனதான எழுதுகோலும் வெள்ளைக் காகிதமும்
சிதிலமடைகின்றன
எப்போதுமில்லாத அளவிற்கு.

__________________________________________________________________

முகவரியற்ற புன்னகை

சிவகுமார்

பழுத்தோலை
குருத்தோலைக்கு
உயிர்(வளி) தந்து
உயிர்ப்பித்து
உதிர்கின்றது
முதிர் புன்னகையுடன்

பேரிடர் காலத்தில்
புகலிடமாகின்றன
கோவில்கள், தேவாலயங்கள்,
மசூதிகள்
அடைக்கலம் அளித்தவர்களின்
முகங்களில் பூத்திருக்கும் சமயமற்ற
சகோதரத்துவப் புன்னகை

இரத்த சம்பந்தங்களின்
அறுவை சிகிச்சைக்கு
இரத்தத்திற்கு அல்லாடுகையில்
இரத்த சம்பந்தமே
இல்லாதவர் உவந்தளிக்கும்
இரத்தத்தில் பூத்திருக்கும்
மரணிக்காத
மனிதப் புன்னகை

இன்னா செய்தாரை அவர் நாண
நன்னயம் செய்வதில்
மறைந்திருக்கும்
வெற்றிப் புன்னகை

ஈருருளியில் விரைகையில்
அண்ணா! சைட் ஸ்டாண்ட்
என எச்சரிக்கும்
முகமறியா
நலன் விரும்பியை
நினைத்து மனதில் பூக்கும்
முகவரியற்ற
நன்றிப் புன்னகை

குழந்தைகளை
பாலூட்டி சோறூட்டி
சீராட்டி வளர்த்து
ஆளாக்கி
சமுதாயவீதியில் கம்பீரமாக
உலவுவதை வாசற்படியில்
நின்று இரசிக்கும்
அன்னைகளிடம் தஞ்சமடைந்திருக்கின்றன
முகவரியற்ற
தியாகப் புன்னகைகள்

கலி முற்றினும்
எத்தனையோ
முகவரியற்ற புன்னகைகளால் தான்
இன்றும் நிற்காமல்
சுற்றிக் கொண்டிருக்கிறது
பூமி
கொஞ்சம் கண்துஞ்சி ஓய்வெடுக்கிறார்
சாமி

பித்து வெடிப்புக் கோட்பாடு

இரா. கவியரசு 

மிகப்பிரம்மாண்டமான
மஞ்சள் மலரின் இதழ்கள்
விரிந்து பரவும் திசையெங்கும்
சூம்பியிருக்கும் குட்டிச் சூரியர்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள்

மருத்துவமனையில் நிற்கும் என்னிடம்
நலம் விசாரிக்கும் விதைப்பாளன்
சமன்குலையும் தராசுத் தட்டுகளை
இறைச்சிக் கடையில்
பார்த்தாயா என்கிறான்

கல்லீரலில் ததும்பும் மஞ்சளைத்தான்
மாபெரும் மலருக்கு பூசியதாகச் சொல்லும் வான்கோ
தாமதமாகவே மருத்துவர் வருவார் என கூட்டத்தைப் பார்த்து விசிலடிக்கிறான்

விதைகள் வெடிக்கும் முன்பே
கொத்திச் செல்லும் பறவைகள்
பித்தை வெடிக்க விடாதீர்கள்
விதைப்புக் காலத்தில் நிறமொழுகுவது
நிலத்துக்கு நல்லதல்ல என்கின்றன

“டோக்கன் நம்பர் 24 ” அழைக்கிறது

மலர்களை மலர்களாகப் பாருங்களேன்
அதில் உங்களுக்கென்ன பிரச்சினை
அதீத காமத்தில் நிறங்களாக உளறுவது கலைக்கு நல்லதல்ல என்கிறார்

மாத்திரைகளுடன் வெளியே வந்தால்
இதோ பாருங்கள் மொக்குகள்
குழந்தைகள் சூடியவுடன்
சப்தமிடாமல் வெடிப்பவை
துய்ய வெள்ளையெனக்
குதூகலிக்கும் தலைவி
மஞ்சளைப் பூசிக்கொள்வது
ஆண்களுக்கு நல்லதல்ல என்கிறாள்

மொட்டை மாடியில் நின்று பார்க்கிறேன்
தூரிகையால் குழி தோண்டும் வான்கோ
“தீவிரமாக இறங்குகிறேன்
பாதியில் காப்பாற்றிவிடாதே !”
அழியாத மலரின் நறுமணமே வாழ்வென்கிறான்

தீராத இடைஞ்சல்களுக்கிடையே
இளஞ்சிவப்பாகவே
சிரித்துக் கொண்டிருக்கும்
கிருஸ்துமஸ் விண்மீன்
மஞ்சளை அவிழ்த்துப்
பிரவாகமாக்குங்கள் தந்தையே !
பிடித்த கவிதையை
பாடாதிருப்பது
உயிருக்கு நல்லதல்ல என்கிறது.

Vincent van Gogh, Public domain, via Wikimedia Commons