கவிதை

மனம், பாதி திறந்த சன்னலுடைய அறை, தாமதத்தின் தெருக்கள் வழியே, திரும்பிப் பார்க்கையில், பிரிவு – ஜெ.ரோஸ்லின் கவிதைகள்

மனம்

இந்த மனதிடம்
நீ இல்லாத எதையோ உற்றுப்பார்க்கும் பூனையைப் போல இருக்கிறாய்
என சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
அது நம்ப மறுக்கிறது.
கைவிளக்குகளோடு
நான் என்னைவிட்டு வெளியேப்போய்
என்னைத் தேடும் போதுதான் கவனித்தேன்
என்னுடைய மனம் தூரத்தில் ஒரு மலையாக அமர்ந்திருப்பதை.
அதன் அடிவாரத்தில் சென்றுபார்த்தேன்.
நினைவுகள் படிக்கட்டுகள் வழியே கீழே இறங்குவதை
பார்த்தபடியே மேலே ஏறிக்கொண்டிருந்தன மறந்தவைகள்

பாதி திறந்த சன்னலுடைய அறை

இரவுகளில் அறைகள்
யுத்தச்சூழலில் நீந்திக்கொண்டிருக்கும் நீர்மூழ்கிகப்பல்களாக
தங்களை கனவு கண்டுகொள்கின்றன

தாமதத்தின் தெருக்கள் வழியே

சிங்கத்தின் தலையுடைய ஒருத்தி பால்கனியில்
தனியே நின்றுகொண்டிருக்கிறாள்.
அம்பாசிடர் கார் ஒன்று
அந்த சாலையில் எதற்கோ காரணம் மாதிரி
நிற்கிறது.
அச்சு அசலாய் என்னைப் போலவே இருக்கும்
ஆயிரம் ஆயிரம் பேர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறேன் தாமதத்தின் தெருக்கள் வழியே.

திரும்பிப் பார்க்கையில்

திரும்பிப் பார்க்கையில்
காலம் ஒரு இடமாக
காட்சியளிக்கிறது என்று நகுலன் எழுதியிருக்கிறார்.
ஆனால் திரும்பி பார்க்கும்போது அல்ல
இந்த சன்னலில் இருந்து
பார்க்கையில்
எனக்கு காலம் ஒரு நபராக தெரிகிறது.
அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள்
எப்போதும் செய்துகொண்டிருப்பதையா?
இல்லை, மெதுவாக நிலவை தணித்துக்கொண்டிக்கிறாள்

பிரிவு

நீ எப்போதும் மூன்று பேருக்கு மத்தியில் இருக்கிறாய்
ஆனால் உன்னை மாத்திரம் தனக்கு விருப்பமான
நீலநிறபொம்மையென
தன் கையில் பொத்திவைத்துக்கொள்கிறது தனிமை
பிறகு யாருக்கும் தெரியாமல்
உன்னை தன்வீட்டிற்கு எடுத்துச்செல்கிறது
நீ மற்ற பொம்மைகளுக்கு அருகில் வைக்கப்படுகிறாய்
உன்னை வைத்து சாவகாசமாய்
இரவும் தனிமையும் விளையாடுகின்றன
இரவு உன்னை தூக்கி எறிகிறது
மறுமுனையில் தனிமை உன்னை பிடித்துக்கொள்கிறது
வீட்டில் மூன்று பேருக்கு மத்தியில்
நின்றுகொண்டிருக்கும் உன் உடலுக்கு
இப்போது தலைவலிக்கத் துவங்குகிறது
நீ உன் அறைக்கு ஓடுகிறாய்
மெதுவாக மூன்று நபராக பிரிகிறாய் நீ

காலச்சுழி, வினோதத் தரை – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்

காலச்சுழி

மதில்மேல் தாவியேறி
விறுவிறுவென நடக்கத் துவங்கியது
புலிவால் பூனையொன்று.
சுவரோ, அடுத்த காலம்வரை நீண்டிருந்தது.
கும்மிருட்டிலும்
வாலை ஒருவாறு தாவிப்பிடித்து மேலேறிவிட்டேன்.
சீறிப்பாயும் நோக்கில்
எனை முறைத்த அதன் விழிகள்
ஒளிரும் கோலிக்குண்டுகளென மினுங்கின.
மதிற்சவாரி
சர்க்கஸ் உயரம்போல் அலாதியெனினும்
கடந்துவந்த காலச்சுழிகளை துழாவியபடி
பின்னோக்கிப் பார்வையைத் திருப்புகிறேன்,
என் வாலைப் பிடித்தபடி
வரிசையில் சாகசிக்கின்றன
புலித்தலையுடன் நான்கு பூனைக்குட்டிகள்.

 

வினோதத் தரை

நழுவி, கீழே விழும் யாவற்றையும்
மலைப்பாம்பென விழுங்கித் தீர்க்கிறது
வீட்டின் வினோதத் தரை.
சமீபத்தில், உளுந்து டப்பாவிலிருந்து உருண்டோடிய கறுப்புளுந்துகள்.
பழைய மாயாஜாலப் படம்போல் சுவாரஸ்யமாய் இருக்கவே,
இருப்பின் மொத்த தானியங்களை சிதறவிடுகையில்
நொடியில் மாயமாயின அவ்வளவும்.
அப்போதுகூட சிமெண்ட் தரை
கிட்டத்தட்ட மொசைக் தரை போலிருந்தது.
நம்புங்கள்
இப்போதில்லாவிட்டாலும்
பிரம்மாண்ட வாய்பிளந்து
எனையும் விழுங்கி ஏப்பமிடும் அதிசயநாளில்
இவ்வளவும் உண்மையென
நிச்சயம் புரிந்துவிடும் உங்களுக்கு.

​கதவுகள் இல்லாத வீடு – கவியரசு கவிதை

நகர்ந்து செல்லும் வீட்டிற்குள்
உள்பக்கமாகப் பூட்டியிருக்கும் கதவுக்கு
சுவற்றின் வண்ணத்தைப்​​ பூசியிருக்கிறார்கள்.
குட்டிக் கதவுகளை சுவர் முழுவதும் வரைந்து
கண்ணாம்பொத்தி ஆடும் குழந்தை
வெளியில் ஒளிந்திருக்கும்
குழந்தையின் தலையைக்
கால்களால் தொடும் ரகசியக் கணத்தில்
சுவரில் வரைந்த குட்டிக்கதவுகள்
பட்டாம்பூச்சிகளாக மாற
இருபுறமும் பறக்கின்றனர்.
வெளியிலிருக்கும் வீடு
இப்படித்தான்
உள்ளே இருக்கும் வீட்டை
நள்ளிரவில் கொஞ்ச ஆரம்பிக்கும்.
நச்சரிப்பு தாளாமல் தள்ளிப்படுக்கும் உள் வீடு
“காணாத சூரிய சந்திர மழைக் கதைகளை
எழுதி எழுதி ஒப்பிக்காதே !
அறைக்கதவுகள்
உடையும்படித் தளும்புகின்றன.
இனி ஒரு போதும்
கதவுகளை அடைக்காமல்
வீட்டை நகர்த்து”
என்கிறது.

நாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள்- காஸ்மிக் தூசி கவிதை

அழுக்கு வெள்ளையில்
அம்மை கண்டது போல்
உடல் எங்கும்
கரும் புள்ளிகள்.
இளச்சிவப்பு
உள் தெரியும்
பெரிய காதுகள்.

கால் முதல்
தலை வரை ஒன்றாய் தைத்து
வெள்ளாடு போல்
வால் வைத்து,
இழுத்து மூடும்
ஆடையில்
நாய் வேடமிட்டு வந்த கடவுள்

நகைக்கடைத் தெருவின்
நடைபாதையில் இறங்கி
சாலையின் குறுக்கே
நடந்து செல்கிறார்,
ஒரு
குல டால்மேஷன்
நாயைப்போல.

மின்கம்பத்தின்
அருகில்
நிதானித்து
பின்னங்காலை
பக்கவாட்டில் தூக்கியதும்
உரக்க சிரிக்கிறான்
ஒரு சிறுவன்

வலது புறம் கிடந்த
வாழைப்பழத் தோலை
முகர்ந்து
இடது
பின்னங்கால் கொண்டு
பிடரியில் சொறிந்து

காற்றடிக்கும்
நாற்றாங்கால் போல
முதுகை சிலிர்த்துவிட்டு
நடக்கையில்,

தனக்கு முன்
சென்ற திரளில்
சும்மா கேட்டுக்கொண்டு
சென்றவனிடம்
இடைவெளிவிடாமல்
பேசிக்கொண்டு சென்ற
குறுந்தாடிக்காரனை
இடை மறித்து
விளக்கிச் சொல்ல
எத்தனையோ விஷயம் இருந்தது
அவரிடம்.

இருந்தும்,
பேசுபவனை பார்த்து நின்று
லொள், லொள் என
தோராயமாக
குரைத்த பிறகு
நிதானமாய் நடந்து செல்கிறார்,
நான்கு கால்களால்.
நாய் வேடமிட்ட
கடவுள்.

மனிதபாஷையில்
மனிதர்களிடம்
விளக்கிச்சொல்ல ஆயிரம்
விஷயம் இருந்தும்,
நாய் வேடமிட்டிருக்கையில்
நாய்போல குரைப்பதன்றி
வேறெதைத்தான் கூற முடியும்?
கடவுளாகவே இருந்தாலும்?

​காத்திருத்தல் – சரவணன் அபி கவிதை

சுருக்கங்கள் நிறைந்த கரங்கள்
வித்வம் நிறைந்தவை
புகைத்துக் கொண்டிருக்கின்றன
காலை நடைபயிலும் கால்கள்
சந்தைவந்த சிறார்
முகர்ந்தலையும் குட்டிநாய்கள்​​
நடுவே இரு நாற்காலிகளில்
ஒன்றில் அக்கரங்களின் தலைவன்
இன்னொன்றில்
நசுங்கிய ஆயினும் அழகிய குவளை
அருகில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது
வாழ்வைப்போல் அதிர்வுதளர்ந்த
தந்திகள் துவளினும்
எதை வேண்டுமென்றாலும்
இசைக்கக் காத்திருக்கும்
கிதார்