கவிதை

களவாடப் பட்ட கொங்கையாடை – பிரோஸ்கான் கவிதை

அது முதல் சந்திப்பை போன்றல்ல
வெட்க கூச்சம் சர்வம் கலையும்
ஆடை போல மெது மெதுவாக
கழற்றி விடும் நெருக்கத்தில்
நீ இட்ட இரகசிய சமிக்ஞை
சாத்தியத்திற்கு உட்பட்ட
ஒரு சம்பிரதாய முத்தத்தை 
தந்துவிடச் சொல்லியே.
நம் பருவத்திலிருந்து ஒரு ஆதி இசை
அவ்வ போது
பச்சை நரம்புகள் வழியே
வந்து வந்து செல்கிறது.
ஆண் உடல் கடும் பாறை
பெண்ணுடலின் மென் சூடு படும் போது
பனியை உண்ணும் சூரியனைப் போல
உறிஞ்சும் நிகழ்வில்
பெண் வெளி முழுதும்
ஈரத் துணியை உலர்த்துவது
வெப்ப மண்டலத்து வலிகள்.
ஒரு செம்பறி ஆட்டின் புல் மேய்தல்
பின் இரவின் நெருக்கத்தின் அர்த்தங்கள்
அள்ளி விசுறும் முன்னே நாம் கேட்ட
ஆதி இசையென
உன் மேனி தழுவி
அதன் நுனியில் இட்ட முத்தம்
முதலானவையல்லயென
நீ நகக் குறி பதிக்கிறாய்
என் நெஞ்சின் மேல்.
பால்கனியை பிழிந்து வெப்பம் பிசுற
சூரியனை அழைத்து
கொங்கையாடைகளை பிழிந்து
காயப் போட்டு முடித்து
உறங்கி எழும்புகிறேன்.
காணாமல் போயிருந்தது அது.
காமம் களவாடிச் சென்றுக்குமோயென்று
அந்த வெப்ப மண்டலத்து நிகழ்வை
முடித்து வைக்க பணிக்கப்பட்டிருக்கிறேன்
நான்.

நெல் – கவியரசு கவிதை

கைவிடப்பட்ட பானையின் உள்ளே
முளை விட்ட நெல்லின் விதை
யாதொரு பயமுமின்றி
வளர ஆரம்பித்திருந்தது

தினமும் அந்த வழியாகச் செல்கிறவள்
தூர்ந்த முலைகளுக்கு உள்ளாக
பால்குடிக்கும் ஒலியைக்  கேட்டு
திடுக்கிட்டு நின்றாள்

பொருள் வழிப் பிரிவுக்கு
முதற்குழந்தையை ஆயத்தப்படுத்துகையில்
வழியில் இருந்த
ஊற்றுகளின் முகங்களில்
பாறைகளை நகர்த்தினாள்.
மலர்களைக் கொய்தெறிந்தாள்.
கிளைகளை வெட்டினாள்.

மூச்சுத்திணறல் காரணமாக
இவளது நாசியிலிருந்து
நெல்லின் இலைகள்
காற்றை எடுத்துக் கொண்ட நேரத்தில்
முதற்குழந்தைக்கு
முத்தம் தந்தாள்

பானையை உடைக்கலாமென்று
முடிவெடுத்த பின் கற்களைத் தேடினாள்
அவள் நகர்த்திய பாறைகள்
பானையைச் சுற்றி வளர்ந்திருந்தன

நெல்லின் வேரைப் பிடுங்குவதற்காக
சுரங்கம் தோண்ட ஆரம்பித்தாள்
ஊற்றுகள் திறந்து கொண்டன

நடுங்கியபடி
மீண்டும் முதற்குழந்தையை அழைத்து
முத்தமிட ஆரம்பித்தாள்.

இன்னுமொரு நாள் – காஸ்மிக் தூசி கவிதை

இன்றைய பொழுதின்
அந்திக்கருக்கலுக்கு முன்னதாக
எழுந்து கொண்டு
உன் நாமத்தை
ஆயிரம் முறை உச்சரித்து
மூச்சுப்பயிற்சியை முடிக்கும்போது,

சற்று தாமதமாய்
விழித்துக்கொள்ளும் கடிகாரம்
உன் பெயரை
பாராயணம் சொல்ல
ஆரம்பிக்கிறது.

வீட்டுடை விட்டு படியிறங்கி
தெருவில் வரும்போது
பெயர் தெரியாத பறவை ஒன்று
உன் பெயர் சொல்லிக் கூவியபடி
வானத்தின் குறுக்கே
கடந்து செல்கிறது.

ஆற்றங்கரையை அடைந்து
படித்துறையில் இறங்கி
கால் வைக்கும்போது
அலையடித்து ததும்பி
பாதம் நனைக்கிறது,
பெருகி நிறையும்
கருணையின் பெருக்கு.

உன் பெண்மையை
நினைத்துக்கொண்டு
நீருக்குள் முங்கி எழுகையில்,
உன் நாமத்தை ஜெபித்தபடி
சலசலத்து செல்கிறது
ஆற்றின் ஒழுக்கு.

உன் நினைவுகளுள்
கரைந்து அமிழ்ந்து
குளித்துக் கரையேறி
துவட்டிக்கொண்டு
நிமிரும்போது
மேனியெங்கும்
சில்லென்னப் படிகிறது
வெறி கொண்ட
உன் உன்மத்தம்

நீ வாழும் அதே கோளத்தில்
நானும் வாழக்கிடைத்த
கொடையில் நெகிழ்ந்து
விழி துளிர்க்கையில்,

உன் காதலுடன்
ஒப்பிடத்தக்க பொருள் ஒன்று
நெருப்பு பந்தாகி
அடிவானத்தின் கீழ்
எழும்பி வருகிறது.

இதோ,
உன் நினைவின்
ஒட்டுமொத்தத்தையும் சான்றாக்கி
உருவாக ஆரம்பிக்கிறது,

இன்னுமொரு நாள்.

பழைமையின் நினைவு – கா.சிவா கவிதை

இலையையுதிர்க்கும் மரமென
வாழ்ந்த மனிதர்களை
உதிர்த்துக் கொண்டேயிருக்கிறது ஊர்

கைவிடப்பட்ட தேன்கூடென
காற்றால் உலைந்துகொண்டிருக்கும் ஊரை
நிறைதேரலை நினைந்து சுற்றும் தேனீயென
சுற்றியபடி திகைக்கிறது இளமையை கடக்கவியலா மனம்

இன்றைய நாளின் பேரதிசயம்- காஸ்மிக் தூசி கவிதை

காஸ்மிக் தூசி

 

இன்று காலை
அலுவலகத்துக்குச் செல்லும் வழியில்
ஒரு பேரதிசயம்.

அது என்ன என்று
என்னால் விளக்கமாகச் சொல்ல இயலாது
அதை நான் ஏன் கண்டேன்,
அதை ஏன் அதிசயம் என்கிறேன்,
அதற்கான வாய்ப்பு
எப்படி ஏற்பட்டது எனக்கு,
இவை எதுவுமே பொருட்டல்ல

ஒரு இமைப்பொழுதில்
எங்கிருந்தோ வந்து
கண்முன் பெருகி நிறைந்து விட்ட
கடல் போல,
ஒரு சிறு மணிக்கூறு
படபடத்து நின்றிருந்தது வானம்.
என் கைகளில்

அதன் உடலில்
சிக்கியிருந்த முள்புதரை
விலக்கி எடுத்தபின்,
என்னைக் கூர்ந்துநோக்கி,
புராண உலகிலிருந்து
தோன்றிய தூதனைப் போல
என் உள்ளங்கையில் வீற்றிருந்தது

கிடைத்தற்கரிய கொடுப்பினை ஒன்று
சிறு பனிக்கட்டியைப் போல
உறைந்திருந்தது
என் கைகளில்.

அந்த அதிசயத்தை
என் கண்களால் அருந்தினேன்
கைகளால் ஏந்தி
விரல்களால் நுகர்ந்தேன்

பிறகு,
ஒரு நொடிப்பொழுதில்
திடீரென வெடித்துக் கிளம்பியது
அதன் சிறகுகளில்
சிக்கியிருந்த வானம்.

அதோ,
என் பிடியை விட்டு
பறந்து சென்று மறைந்தது
பெயர் தெரியாத
ஒரு பறவை.