கவிதை

தனித்தல் – ஜிஃப்ரி ஹாஸன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

வெளிர் மஞ்சள் வெயிலில்
தனித்து நிற்கிறது மரம்
தனித்தல் ஒரு கலை
தனித்தல் ஒரு எழுச்சி
தனித்தல் ஒரு வளர்ச்சி

வெளிர் மஞ்சள் வயலில்
தனித்து நிற்கிறது மரம்

தனித்தல் அதன் சுதந்திரம்
தனித்தல் அதன் கனவு
தனித்தல் அதன் எழுச்சி

வெளிர் மஞ்சள் வெயிலில்
தனித்து நிற்கிறது மரம்

கூட்டத்திலிருந்து
திசைமாறிச் செல்லும் பறவை ஒன்று
அதன் தனிமையை பகிர்ந்து கொள்ளலாம்
பயணக் களைப்பில்
வழிப்போக்கன் ஒருவன்
ஒரு இடைத்தங்கலுக்காய்
அதன் நிழலில் அமரலாம்
அப்போது மரம் ஒரு துணை
மரம் ஒரு இல்லம்
மரம் ஒரு கேண்மை

வெளிர் மஞ்சள் வெயிலில்
தனித்து நிற்கிறது மரம்
திசைதப்பிப் பறக்கும் பறவைகளுக்காகவும்
வழிப்போக்கர்களுக்காகவும்!

சாயல் – ஆகி

ஆகி

மெட்ராசா என்பார் ஐதராபாதிலிருந்து திரும்பினால்
புது தில்லியிலிருந்து திரும்பினாலும் மெட்ராசாதான்
கிட்டத்தட்ட ஓர் நூற்றாண்டைக் கண்டவரானால்
திருச்சிக்கு அந்தப் பக்கம் கண்டதில்லையாதலால்
அவர் இருந்திருந்தால் கொள்ளுப்பேரன் நிலவிலிருந்து
திரும்பியிருந்தால் எப்பப்பு வந்தா மெட்ராசிலிருந்து என்றிருப்பார்
அகமாசா என்றுணர்ந்து கைகளைத் தடவி முகத்தில் ஒத்தியெடுத்து
விரல்கள் உள்ளீடற்று போகிறார்போல் முகர்ந்துகொள்வார்
பிளசர் கார் ஒத்துவராதென்று ஜெயசீலி சித்தி வசிக்கும்
திருச்சிக்கும் சென்றிருக்கவில்லை கடைசி நாட்களில்
படுத்த படுக்கையாயிருந்த நட்சத்திரம் பாட்டிம்மாவை பல மாதங்கள்
மாங்கு மாங்கெனத் தாங்கிக்கொண்டார் ஜெபதங்கம் பெரியம்மா
கர்த்தருக்குள் நித்திரையடைந்தவரின் முகம் கன்னம் வற்றி
எலும்பு துருத்தி சாயலொன்றை கொணர்ந்தது கண்ணாடிப்பெட்டியுள்
பலநாள் பட்டினியில் என்னைக் கண்ணாடியில் நானே முறைத்தால்
காணும் பழந்தின்னி வௌவாலின் சாயல் அதைவிட அச்சு அசலாக
நானிப்போதெல்லாம் வீம்புக்காகவன்றி பட்டினி கிடப்பதில்லை
பழந்தின்னி வௌவால் பறக்கும் நரியென்றுமறியப்படுகிறதாம்
தேரிக்காட்டின் நிலவொளியில் பறக்கும் நரிகள் அருகி வருகின்றன

பால்மயக்கம்- சரவணன் அபி

சரவணன் அபி

இறுக்கம்கூடிய
திரைகளையும் திறந்துவிடும்
நுட்பமறிந்தோர் மட்டுமே
நிறைந்ததோர் உலகம்
வண்ணம் வழியும் வீதியின்
இருமருங்கும் இடப்பட்டிருக்கும்
உணவு மேசைகளினின்று
ஏந்த யாருமின்றி
சிந்துகின்றன சுவைமிகுந்த மதுக்கள்
அங்கே நடனமாடுவதுபோல் நடிப்பதற்கும்
நடப்பதுபோல் கிடப்பதற்கும்
ஊக்கம் தரும் மிகச் சிறந்த லாகிரிகள்
அவை மட்டுமல்ல
நடைபாதையின் மேலேறி
உதட்டினருகே குவளையைக்
கொணர்கிறாள்
மிக மிக சிவந்த இதழ்ச்சாயம்வழி
ஒன்றையே குறிப்புணர்த்தும்
வியட்நாமிய இளம்பெண்
பர்மிய இசைபொழியும்
மதுக்கடையின் அடுத்து
தாய் உணவகம்
இசை என்று பிரித்தறிய முடியா ஒலிகள்
இன்ன நிறம் என்று பகுத்தறிவியலா ஒளிகள்
இவ்வினம் இது
இச்சுவை அது
எதுவும் கூடும்
விரித்துக் கிடக்குமிந்த பாங்காக் நகரத்து
சுகும்வித் வீதியில்
ஆணோவென்னும் பெண்ணும்
பெண்ணோ எனும் ஆணும்
ஏன் உணர வேண்டும்
இதுவென்ன மயக்கமென

பெருங்கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

பெரியண்ணன்களுக்குத்தான் எத்தனை தலைச்சுமை.
எதையுமே பெரியதாகவே சிந்திக்க வேண்டியிருக்கிறது.
பெரிய வீடுகள். பெரும் கூட்டங்கள். பெரும் போர்கள்.
பெரியதாக செயல்பட பெரிய வழிவகைகளை உருவாக்க வேண்டியிருக்கிறது.

பெருங்குரலற்ற உதிரிகளை வெட்டி வீழ்த்தி
புதைத்த குழிகளை எருவாக்கி
துரத்தும் ஆவிகளுக்கு பரிகாரம் செய்து
குறுக்கிடும் சாலைகளை நிர்மூலமாக்கி
பெரிய பாதைகளை சமைக்க வேண்டியிருக்கிறது.

பெரியண்ணன்கள் உமிழ்ந்துவிட்டுப் போகும்
விஷங்களை உண்டு வலிகொண்டு எழுபவர்கள்
உண்டாக்குகிறார்கள் இன்னுமொரு பெரும்பாதையை.

இப்புவி முழுவதும் ஒற்றைப்
பெரும்பாதையாக்கி விடத்தான்
ஓயாமல் உழைக்கிறார்கள்.

காலடித்தடம் காணாது போன
ஒற்றையடிப் பாதைகளில்
கொய்யப்படாத மலர்கள்-

பெருஞ்சாலைகளில் நிற்காமல் ஓடும்
சகடங்களின் பேரதிர்வின் ஊடே
சின்னதாக பூத்துவிட்டு சாம்புகிறது.

இன்று

நரோபா

உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது
சக்தி வாய்ந்த இரு அதிபர்கள் கைகுலுக்கிக் கொண்டார்கள்
தீவிரவாத தாக்குதலில் முப்பது பேர் மரணமடைந்தார்கள்
புறநகர்ச் சாலையில் ஒரு பேருந்து கவிழ்ந்துவிட்டது
எங்கள் தெரு பிள்ளையார் கோவிலுக்கு குடமுழுக்கு
விராட் கோலி சதமடித்தார்
ஒன்றுவிட்ட பெரியப்பா இறைவனடி சேர்ந்தார்
குட்டிப் பயலுக்கு வயிற்றுப்போக்கு
ஒரு கதையையும் எழுதினேன்
அதுபாட்டுக்கும் எதன் மேலும் விழாமல்
நடந்து சென்று அடுப்பு சாம்பலில் சுருண்டு படுத்து கொண்டது.