மெட்ராசா என்பார் ஐதராபாதிலிருந்து திரும்பினால்
புது தில்லியிலிருந்து திரும்பினாலும் மெட்ராசாதான்
கிட்டத்தட்ட ஓர் நூற்றாண்டைக் கண்டவரானால்
திருச்சிக்கு அந்தப் பக்கம் கண்டதில்லையாதலால்
அவர் இருந்திருந்தால் கொள்ளுப்பேரன் நிலவிலிருந்து
திரும்பியிருந்தால் எப்பப்பு வந்தா மெட்ராசிலிருந்து என்றிருப்பார்
அகமாசா என்றுணர்ந்து கைகளைத் தடவி முகத்தில் ஒத்தியெடுத்து
விரல்கள் உள்ளீடற்று போகிறார்போல் முகர்ந்துகொள்வார்
பிளசர் கார் ஒத்துவராதென்று ஜெயசீலி சித்தி வசிக்கும்
திருச்சிக்கும் சென்றிருக்கவில்லை கடைசி நாட்களில்
படுத்த படுக்கையாயிருந்த நட்சத்திரம் பாட்டிம்மாவை பல மாதங்கள்
மாங்கு மாங்கெனத் தாங்கிக்கொண்டார் ஜெபதங்கம் பெரியம்மா
கர்த்தருக்குள் நித்திரையடைந்தவரின் முகம் கன்னம் வற்றி
எலும்பு துருத்தி சாயலொன்றை கொணர்ந்தது கண்ணாடிப்பெட்டியுள்
பலநாள் பட்டினியில் என்னைக் கண்ணாடியில் நானே முறைத்தால்
காணும் பழந்தின்னி வௌவாலின் சாயல் அதைவிட அச்சு அசலாக
நானிப்போதெல்லாம் வீம்புக்காகவன்றி பட்டினி கிடப்பதில்லை
பழந்தின்னி வௌவால் பறக்கும் நரியென்றுமறியப்படுகிறதாம்
தேரிக்காட்டின் நிலவொளியில் பறக்கும் நரிகள் அருகி வருகின்றன