பெரியண்ணன்களுக்குத்தான் எத்தனை தலைச்சுமை.
எதையுமே பெரியதாகவே சிந்திக்க வேண்டியிருக்கிறது.
பெரிய வீடுகள். பெரும் கூட்டங்கள். பெரும் போர்கள்.
பெரியதாக செயல்பட பெரிய வழிவகைகளை உருவாக்க வேண்டியிருக்கிறது.
பெருங்குரலற்ற உதிரிகளை வெட்டி வீழ்த்தி
புதைத்த குழிகளை எருவாக்கி
துரத்தும் ஆவிகளுக்கு பரிகாரம் செய்து
குறுக்கிடும் சாலைகளை நிர்மூலமாக்கி
பெரிய பாதைகளை சமைக்க வேண்டியிருக்கிறது.
பெரியண்ணன்கள் உமிழ்ந்துவிட்டுப் போகும்
விஷங்களை உண்டு வலிகொண்டு எழுபவர்கள்
உண்டாக்குகிறார்கள் இன்னுமொரு பெரும்பாதையை.
இப்புவி முழுவதும் ஒற்றைப்
பெரும்பாதையாக்கி விடத்தான்
ஓயாமல் உழைக்கிறார்கள்.
காலடித்தடம் காணாது போன
ஒற்றையடிப் பாதைகளில்
கொய்யப்படாத மலர்கள்-
பெருஞ்சாலைகளில் நிற்காமல் ஓடும்
சகடங்களின் பேரதிர்வின் ஊடே
சின்னதாக பூத்துவிட்டு சாம்புகிறது.