மொழியாக்கம்

குழந்தை வளரவேயில்லை – – லவல் மிக் வைட்

நாங்கள் வீட்டுக்கு வெளியே போர்ச்சில் இருந்தோம், கிராஸ்ஸி ரன்னில் வளர்வது பற்றி பாட்டி பேசிக்கொண்டிருந்தாள். அங்கு வாழ்ந்தவர்கள் அனைவரும் இப்போது இறந்து விட்டார்கள், நான் அவர்கள் யாரையும் அறிந்திருக்கவில்லை  பெயர்களன்றி அவர்கள் எனக்கு வேறெதுவுமில்லை. ஊஞ்சலாடிக் கொண்டே காட்ச்-22 படித்துக் கொண்டிருந்தேன், அது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. படிப்பதை நிறுத்தும் அளவுக்கு பிடிக்கவில்லை என்பதில்லை, அட்டையில் இருந்த ப்ளர்புகள் சொன்ன அளவுக்கு அது அவ்வளவு தமாஷாக இருக்கவில்லை. எனக்கு அது புரியவில்லை. எனக்குப் புரியவில்லை என்பதால் அதிகரிக்கும் அதிருப்தியுடன் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருந்தேன். செத்துப் போனவர்களைப் பற்றி பாட்டி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்- ராம்சேக்கள், ஸ்லீத்கள், ப்ராஸ்ட்கள். எல்லாம் வெறும் பெயர்கள். அப்புறம் அவள் செத்த குழந்தை என்று என்னவோ சொன்னாள். யாருக்கோ செத்த குழந்தை இருந்தது. அது வளரவில்லை. என்ன?

“ஹ?” என்று கேட்டேன்.

“என்ன?” என்று பதிலுக்கு கேட்டாள் பாட்டி.

“குழந்தைப் பற்றிதான்,” என்றேன். “என்ன ஆயிற்று?”

“ஓ,” என்றாள் பாட்டி. “மிசஸ் பிஷர், பெக் பிஷர், அவள் மாட் பிஷரைக் கல்யாணம் செய்து கொள்ளும்வரை பிராஸ்டாக இருந்தாள். அப்புறம் அவளுக்கு இந்தக் குழந்தை பிறந்தது, அது வளரவேயில்லை” (more…)

வெல்ஸ் டவருடன் ஒரு உரையாடல் – தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.

 
நன்றி என்பிஆர் – 
 
உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்பு, இதற்கு கிடைத்திருக்கும் இப்படிப்பட்ட வரவேற்பு. இது எப்படியிருக்கிறது?
 
சுவாரசியமான விஷயம்தான். என்னால் இதை நினைத்தே பார்க்க முடியவில்லை. பொதுவாக, அமெரிக்காவில் சிறுகதை தொகுப்புகளுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பற்றி நான் அறிந்து கொண்ட அளவில், உண்மையில் என் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அது எவராலும் கவனிக்கப்படாது, விமரிசகர்களால் கடுமையாகக் கண்டனம் செய்யப்படாமல் மறைந்தால் நல்லது என்பதாகதான் இருந்தது. அவர்கள் இதை விரும்புகிறார்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. என்னை ஊக்குவிப்பதாக இருக்கிறது. பிரமாதமாக இருக்கிறது.

(more…)

திரும்பப்பெறுதல்

Frigyes Karinthy

ஃப்ரிக்ஸ் கேரிந்தி (Frigyes Karinthy) ஹங்கேரிய எழுத்தாளர். ஜோனதான் ஸ்விஃப்ட், ஹெய்ன்ரிச் ஹெய்ன் மற்றும் மார்க் ட்வைன் போன்றோரின் எழுத்துகளை நவீன ஹங்கேரிக்கு மொழிமாற்றம் செய்ததன் மூலமாக அங்கதத்தை ஹங்கேரிக்கு கொண்டு வந்தவர். எல்லா தரப்பு வாசகர்களுக்குமான எழுத்தை கொண்டவர்.

Refund (கல்விக்கட்டணத்தை திருப்புதல்) அங்கத ஓரங்க நாடகம். பழைய மாணவனொருவன் தான் பயின்ற பள்ளிக்கூடத்திற்கு திரும்பி வந்து நிகழ்த்தும் கூத்துகளும், அதற்கு பதிலடியாக ஆசிரியர்களின் திட்டங்களுமாக, முடிவில் எவர் வென்றார் என்று ஆவலுடன் எதிர்நோக்க வைக்கும் நாடகம்.

(தமிழாக்கம்: ஸ்ரீதர் நாராயணன்)

ஒரு மேல்நிலைப் பள்ளியில், முதல்வர் (Principal) தன்னுடைய அலுவலகத்தில் தட்டையான மேஜை முன் அமர்ந்திருக்கிறார். ஒரு பணியாள் நுழைகிறார்.

முத:- என்ன விஷயம்?

பணி:- வெளியே ஓராள் ஐயா. உங்களைப் பார்க்க வேண்டுமாம்.

முத [பின்னால் சாய்ந்ந்துகொண்டு நெட்டி முறித்தவாறு]:- நான் அலுவலக நேரத்தில் மட்டுமே பெற்றோர்களை பார்ப்பேன். அந்த குறிப்பிட்ட அலுவல் நேரம் அறிவிப்பு பலகையில் போட்டிருக்கிறது. அவரிடம் அதை சொல்லு.

பணி:- ஆமாம் ஐயா. ஆமாம் ஐயா. ஆனால் இவர் பெற்றோர் இல்லை ஐயா.

முத:- மாணவரா?

பணி:- அப்படியில்லை என்று நினைக்கிறேன். அவருக்கு தாடியெல்லாம் இருக்கிறது. (more…)

ஏழ்மை அனைத்தையும் மின்னச் செய்கிறது – பிராங்க் மக்கோர்ட் நேர்முகம்.

“ஒரு சாதாரண வாழ்கையை வாழ்ந்த சாதாரணர் இவர் என்று தோன்றுகிறது இல்லையா?” என்று பிராங்க் மக்கோர்ட் பற்றி கேட்கிறார் அஜய், “60 வயது வரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்த மக்கோர்ட் தன் நூல்களின் வெற்றியால் பிரபலமாகிவிட்டார். வாழ்க்கை அனுபவங்களா, அவற்றைச் சொல்லும் முறையா அல்லது அவற்றை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமா, எது ஒருவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது அல்லது அவர்களுடன் ஒன்ற வைக்கிறது?” .  அவரது கட்டுரையைப் படிக்கும்போது மக்கோர்ட்டின் பால்யகால ஏழ்மையும் அவரது தாயின் போராட்டங்களும்தான் முக்கியமாகத் தெரிகின்றன. சமூக, பொருளாதார சீர்கேடுகளால் பாதிக்கப்படும் அம்மாக்களும் பிள்ளைகளும் உலகெங்கும் ஒன்று போலவே இருக்கின்றனர்.

பிராங்க் மக்கோர்ட் Academy of Achievement என்ற தளத்தில் அளித்த நேர்முகத்தில் அவர் தன் இளம் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட பகுதிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழாக்கம் இது:

உங்கள் குழந்தைப்பருவம் எப்படிப்பட்டதாக இருந்தது?

ஒரு வகையில் செறிவானதாக இருந்தது. நாங்கள் மிகக் கடுமையான ஏழ்மை நிலையில் இருந்தோம். பொருளாதார தளத்தில் மிகத் தாழ்ந்த நிலைக்கும் கீழிருந்தாலும், நாங்கள் எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருந்தோம். எதிர்பார்ப்பதற்கு நிறைய இருந்தது, நம்பிக்கை வைப்பதற்கு நிறைய இருந்தது, அடைவதற்கு நிறைய இருந்தது, கனவுகாண நிறைய இருந்தது என்ற பொருளில் எங்கள் குழந்தைப்பருவம் மிகச் செறிவாக இருந்தது, ஆனால் பொருளாதாரச் சூழல் மிக மோசமாக இருந்தது. மழைக்கால கல்கத்தா என்று சொல்லலாம். கல்கத்தாவிலாவது வெம்மை இருக்கிறது. (more…)

எஸ்தரும் காவேரியும்

-ஷாந்தேரி மல்லையா-  

இரு பெண்கள். நிம்மதியற்ற இணை வாழ்வுகள். நெகிழ்வற்ற சமூக அமைப்புக்கு எதிராய்க் குமுறிப் போராடி உடையும் உயிர்கள். எஸ்தரும் காவேரியும்.

சில்வியா ப்ளாத்தின் பெருமையை எனக்கு உணர்த்திய நண்பருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவரது துயர வாழ்வையும் முடிவையும் வாசித்தபோதுதான் ப்ளாத்தின் பெயரையே முதன்முறை கேள்விப்படுகிறேன். எழுத்தாளர் டெட் ஹ்யூஸுடன் அமைதியில்லாத மணவாழ்வு. ப்ளாத்தை அறியும் பயணம் இறுதியில் அவரது கிளாசிக் படைப்பான பெல் ஜாருக்கு என்னை இட்டுச் சென்றது (The Bell Jar). மேதைமையின் என்னவொரு அற்புதப் படைப்பு. அமைதியற்ற தன் உள்ளத்தின் இருண்ட பகுதிகளிலிருந்து அவர் எஸ்தர் கிரீன்வுட்டை உருவாக்கினார். எஸ்தரைப் பற்றி படிப்பதற்கு முன்பே எனக்கு அவளைத் தெரியும் என்ற உணர்வு ஏன் தொடர்ந்து இருந்து வந்தது? இந்த அனுபவம் எனக்கு முன்னரே ஏற்பட்டிருக்கிறது, இந்தப் பக்கங்களை நான் முன்னரே வாசித்திருக்கிறேன் என்ற ஆழ்ந்த உணர்வு ஏன் ஏற்பட்டது? பின்னர்தான் காவேரியின் சாயல்களைக் கொண்டவள் எஸ்தர் என்ற உண்மை புலப்பட்டது. (more…)