விமரிசனம்

மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என். செந்தில்: சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடன மங்கை’

 கே. என். செந்தில்

”அர்த்தங்கள் சார்ந்த புதிய கோணங்களையும் அவற்றுடன் இணைந்த வெளிப்பாட்டு முறையையுமே நான் எப்போதும் விரும்பிக் கொண்டிருக்கிறேன்”
-’மறைந்து திரியும் கிழவன்’ தொகுப்பின் முன்னுரையில்.

Image result for k.n senthil

வர்ணணைகளையும் அலங்காரங்களையும் தவிர்த்துவிட்டு நேரடியான சித்தரிப்புகளின் வழி உருக்கொள்ளும் காட்சிகளிலிருந்து விரிபவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள். அந்தக் காட்சிகளிலிருந்து திரண்டு வரும் ஏதேனுமொன்று (அது சேதனமாகவோ அசேதனமாகவோ இருக்கலாம்) படிமமாக ஆகி அந்த மொத்தக் கதையையும் குவியாடி போல பிரதிபலிக்கச் செய்கின்றது. அவரது புகழ்பெற்ற ‘விரிந்த கூந்தல்’ முதல் இத்தொகுதியிலுள்ள ‘நடன மங்கை’ வரை இதைக் காணலாம். பொறுக்கியெடுத்த அளவான சொற்களால் எதையும் கூடுதலாகச் சொல்லி விடக்கூடாது எனும் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட ஆக்கங்கள் இவருடையவை. இந்த பிரக்ஞையே, தான் அதிகம் எழுத முடியாததற்கு, பெரிய வடிவமாக யோசிக்க முடியாததற்கான காரணியென நேர்காணலொன்றில் சுரேஷ் சொல்கிறார். அவர் சொல்லும் அந்த பிரக்ஞையை ‘இறுகிய’ பிரக்ஞை என அர்த்தப்படுத்திக் கொண்டேன்.

மெளனியும் சா. கந்தசாமியும் இணையும் புள்ளி என இவ்வுலகை தோராயமாக வரையறுக்கத் தோன்றுகிறது. ஏன் ‘தோராயமாக’ என்றால் அதிலிருந்து விலகி கிளை பிரிந்து தன் பிரத்யேக கூறுமுறை நோக்கிச் சுரேஷ் சென்றுவிடுவதே காரணம். ஏனெனில் அகச்சலனங்களை, ஓரிடத்திலிருக்கும்போதே வேறிடத்துக்கு கற்பனையின் துணையால் சட்டென்று போய் அமர்ந்து கொள்வதை, அங்கு ஒரு முழு வாழ்க்கையையே சில நிமிடங்களில் வாழ்ந்து விட்டு திரும்பி வரும் வினோதங்களை, நோக்கிச் செல்பவராக இருக்கிறார் என்பதே. இவர் கூறுமுறையின் தொடர்ச்சியும் அதன் சில சாயைகளும் அடுத்தடுத்த தலைமுறைகளில் எழுத வந்த குலசேகரன், எஸ்.செந்தில்குமார் (எஸ்.ரா-வின் பாதிப்பும் இவருக்குண்டு) ஆகியோரிடம் காணக் கிடைக்கின்றன.

‘நானும் ஒருவன்’ என்னும் சுரேஷின் ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு வெளியான ஓராண்டுக்குள் வந்திருக்கும் ’நடனமங்கை’யில் பத்துக் கதைகள் இருக்கின்றன. தொடர்ந்து எழுதி வரும் காலகட்டத்தின் பகுதியிலிருந்து கிட்டியிருக்கும் தொகுப்பு எனக் கொள்ள முடியும். மனப்புதிர்களின் மேல் அதன் மர்மமான நகர்வுகளின் மேல் ஈடுபாடுடையவர் சுரேஷ். முந்தையக் கணத்தில் தோன்றிய எண்ணத்துக்கு நேரெதிராக அல்லது சம்பந்தமற்ற எண்ணத்திற்குள் செல்லும் மனதை காட்டும் தருணங்கள் கதைகளுக்குள் கலந்து வருகின்றன. (“ஏமாற்றப்பட்டு கையறு நிலையில் செய்வதறியாது அமரும்போது, மறுவினாடியே டெலிபோன் பில் கட்டவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது கோவில் பிரகாரம்’). இந்த புரிபடா நிலையை நிறமற்ற மொழிநடையில் அவரது முந்தைய தொகுதிகளிலிருந்து ஒரு வித தொடர்ச்சி போலவும் (கதை சொல்லும் முறையில்) ஒரு அர்த்தத்தில் தொடர்பற்றும் (கதைக்கருக்களின் தேர்வில்) எழுதப்பட்டுள்ள ஆக்கங்கள் இவை.

தொகுப்பின் தலைப்புக் கதையான ‘நடன மங்கை’ மற்றும் ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து…’ ஆகிய இரண்டையும் அருகருகே வைக்க முடியும். ஏனெனில் பிரதான பாத்திரத்தின் கற்பனை மேற்கொள்ளும் மனப்பயணமே- அதுவும் பெண்ணின் ‘வசீகரம்’ சார்ந்து- இவ்விரு கதைகளும் தொட்டுக் கொள்ளும் அண்மையில் இருப்பதை உணர்த்துகிறது. ஓரிடத்தில் ’இருந்து’ கொண்டே தான் ஆசைப்படுவது பலவும் அடுத்தடுத்து நடப்பதாக எண்ணி மகிழ்ந்து கொள்வது மனித இயல்பிற்குள் உள்ள அம்சமே. ஆனால் அதை கதையினுள் கொண்டு வந்தவர்/ வருபவர் சுரேஷ்குமார இந்திரஜித். சில வாக்கியங்களுக்குள் ஒருவனின் கதையை சொல்லி முடித்து வைப்பதையும் சுட்டத் தோன்றுகிறது. இக்கதைகளில் மனக்கோலங்களின் புள்ளிகளை காண்பதிலிருந்து நகர்ந்து அவற்றைக் கதைகளாகச் சொல்லியிருக்கிறார்.

இத்தொகுதி கதைகளுக்குள் காணக் கிடைக்கும் ஒற்றுமை, பெரும்பாலான மையப் பாத்திரங்கள் பெண்களே. அவர்களே கதையை நகர்த்திச் செல்வதற்கான ஆதார விசையாக இருக்கிறார்கள். ‘புன்னகை’, ‘கணவன் மனைவி’, ‘கால்பந்தும் அவளும்’, போன்றவை அத்தகையவையே. இவற்றுக்குள் தற்செயல்கள் பிரதான காரணியாக இருக்கின்றன. பெரியாரின் பேச்சை அகஸ்மாத்தமாக கேட்க நேரும் நீலமேகம் பத்தொன்பது வயதில் விதவையாகிவிட்ட தன் மகளுக்கு மறுமணம் செய்து வைக்கிறார். பிறகு அவளது வாழ்க்கையில் விரும்பத்தக்க மாற்றங்கள் நிகழ்கின்றன. இக்கதை அவளது மரணத்திலிருந்து தொடங்கினாலும் நீலமேகம் அந்த உரையைக் கேட்பது தற்செயலே. போலவே ‘கால்பந்தும் அவளும்’. ‘கணவன் மனைவி’ சிறுகதையை வாசித்ததும், தட்டையாக, பல பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதி ஓய்ந்த சக்கையை மீண்டும் மென்று பார்க்கும் உணர்வையே அளித்தது. வெகு சுமாரான கதை. அசேதனப் பொருட்களான டிரான்சிஸ்டர் (’வீடு திரும்புதல்’), கால்பந்து (கால்பந்தும் அவளும்), விசிறியடிக்கப்பட்ட துணி (நடன மங்கை) போன்றவை ஒரு கட்டத்தில் நினைவின் குறியீடுகளாக ஆகிவிடுவதையும் குறிப்பிட வேண்டும்.

இரு பெண்களும் தங்களது வேறுபட்ட தனிமைகளுக்குள் இருந்து விடுபடுவதை (விடுதலை பெறுவதை?) காட்டும் கதைகள் ‘கோவில் பிரகாரம்’, ‘வீடு திரும்புதல்’. இவ்விரு கதைகளும் இயலாமையின் மேல் எழுதப்பட்டிருப்பினும்கூட மனிதனின் விசித்திரச் செயல்களைக் காட்டுகின்றன. ஆயினும் சில ஒளிப்புள்ளிகளை மட்டும் தந்துவிட்டு உடனே அணைந்து விடுகின்றன.

மிகுபுனைவு கதைகளிலும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் மொழியில் மாற்றமேதுமில்லை. அதே சட்டகத்துக்குள்ளேயே நடை போடுகிறது. இது பெரும் குறை. ஆனால் பெண்களின் மீதான ஈர்ப்பைச் சுட்டும் நடையில் ‘மெளனி’யின் நிழல் விழுந்து கிடக்கிறது. மனதில் உள் அசைவுகளை, விளங்காப் புதிரை அறியத்தரும் சில கதைகளே நல்ல வாசிப்பை அளிக்கின்றன. பிற கதைகளைப் பற்றி சொல்ல பெரிதாக ஏதுமில்லை.

கதைகளின் நடனம்-.சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து- அரிசங்கர்

அரிசங்கர்

சில கலைஞர்களின் நடனம் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த நடனத்தில் நாம் நம்மை மறந்து திளைத்திருப்போம். அருகில் யார் இருந்தால் என்ன, எது நடந்தால் என்ன என்று அந்த நடனம் நம்மைக் கட்டிப்போடும். சில அசைவுகள் நம் உணர்ச்சிகள் பலவற்றைத் தூண்டிவிடும். அந்த நடனம் நம்மை அவ்வாறு கட்டிப் போட்டிருக்கும். பல நேரங்களில், என்ன இது, இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே, என ஏங்க வைக்கும். திரும்பத் திரும்ப அதை நோக்கியே நம்மை இழுக்கும். அப்படிப்பட்ட ஒரு நடனத்தைத்தான் சுரேஷ்குமார இந்திரஜித் தன் கதைகளின் மூலமாக நிகழ்த்தியிடுக்கிறார்.

புத்தகத்தின் தரத்தை அதன் பக்க அளவைக் கொண்டோ, அல்லது கதைகளின் எண்ணிக்கையைக் கொண்டோ வகைப்படுத்த முடியாது என்பதை இந்தத் தொகுப்பு நிறுவியிருக்கிறது. மிகவும் சிறிய அளவிலான இந்தத் தொகுப்பு பத்து கதைகள் கொண்டது. அனைத்து கதைகளும் இதழ்களுக்காக எழுதப்பட்டவை. அதனாலேயோ என்னவோ, ஒவ்வொரு கதையும் கிட்டத்தட்ட ஒரே அளவைக் கொண்டு இருக்கிறது. பல கதைகள் விரைவில் முடிந்துவிட்டதே என்ற குறை நிச்சயம் படிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் அனைத்து கதைகளுக்கும் பொதுவானது என்னவென்றால் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் வேறு ஒரு கோணம் இருப்பதுதான். பெரும்பாலான கதைகள் ஒருவர் பார்வையில் மட்டுமே நிகழ்வதில்லை. வாழ்க்கையின் வேறு ஒரு பரிமாணத்தை தன் கதைகளில் திறந்துவைக்கிறார். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் பார்வை மற்றொருவருக்கு இருக்காது என்பதே பல கதைகளின் ஆதார முடிச்சாக இருக்கிறது.

இந்தத் தொகுப்பில் நான் முதலில் படித்தது தொகுப்பின் கடைசி கதையை. சிறிய கதை என்பதால் வாங்கியவுடன் நின்றுகொண்டே படித்தேன். ஒரு மனிதனுக்கு மிகவும் படபடப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் சிலவற்றில் (முக்கியமாக ஆண்களுக்கு) ஒன்று, தன் மனைவி அருகில் இருக்கும்போது முன்னாள் காதலியைச் சந்திப்பது. ‘அவரவர் வழி’ என்கின்ற இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதை இதைப் பற்றியதே. இந்தக் கதையும் அதன் முடிவும் தந்த பரவசமே அடுத்தடுத்த கதைகளை நோக்கி என்னை நகர்த்தியது. எதிர்பார்க்காத ஒரு விஷயம் நம் எல்லோர் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக நடந்ததே தீரும். அந்த நொடியில் நடக்கும் அந்த மாயாஜாலத்தையே பெரும்பாலும் தன் கதைகளாக்குகிறார்.

அந்தத் தருணம் எல்லா நேரத்திலும் நமக்கு பரவசமூட்டுவதாக அமைவதில்லை. சில நேரம் அது நம்மை மரணத்தின் விளிம்பிற்கே அழைத்துச் செல்கிறது. வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகிறது. வாழ்வின் முடிவை நோக்கி நகர்த்தக்கூடியதாகவும் அமைகிறது. இதை தன் ‘பங்குப் பணம்’ கதையில் நிகழ்த்துகிறார். இந்தக் கதையில் ஒரு திருடனுக்கும் பெருமாளுக்கும் இருக்கும் ஒப்பந்தம்தான் மையம். தான் திருடுவதில் பத்து சதவீதம் பெருமாளுக்குத் தந்துவிடுவதாக வேண்டிக் கொள்ள அன்றிலிருந்து திருட்டுத் தொழில் அமோகமாக நடக்கிறத. சொன்னபடி முதலில் செய்யும் திருடன் பிறகு தன வேண்டுதலை நிறைவேற்றுவதில்லை. அதன் பிறகு திருடப்போகும் இடத்தில் அவன் கால் பிசகிவிட ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாதவனாகிறான். விடியத் துவங்குகிறது. விடிந்ததும் தான் மாட்டிக்கொள்வோம் என்று அவனுக்குத் தெரிந்துவிடுகிறது. தான் பங்குப் பணத்தை தராததினாலேயே தண்டிக்கப்பட்டதாக அவன் நம்புகிறான்.

மனிதனுக்குள் ஏற்படும் மனத்தடையும், மனக்குழப்பமுமே இன்றைய நவீன வாழ்வின் பெரும் சிக்கலாக இருக்கிறது. இத்தகைய விஷயங்களையே இந்தத் தொகுப்பு கையாள்கிறது. மனிதன் எதிலுமே திருப்தியடைவதில்லை. ஆனாலும் அவன் விட்டுக் கொடுப்பதுமில்லை. அவன் தன் ரகசியங்கள்தான் உலகின் மிக முக்கியமாக ரகசியம் என்று நினைக்கிறான். ஆனால் அது அடுத்தவர் பார்வையில் ஒன்றுமே இல்லாத ஒன்றாகத்தான் இருக்கிறது. ‘நிகழ்காலமும் இறந்தகாலமும்’ என்ற கதையும், ‘மாய எதார்த்தம்’ என்ற கதையும் அப்படித்தான்.

இந்தத் தொகுப்பில் முக்கியமான கதையாக நான் கருதுவது ‘அழியாத சித்திரங்கள்’ என்ற கதைதான். எனக்கு மிகப் பிடித்தமாக கதையும் இதுதான். நமக்கு பிடித்தமானவர்களின் மனதில் நாம்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதோ அல்லது நாம்தான் இருக்கிறோம் என்று நம்புவதோ எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதே இந்தக் கதையின் மையம். சிரித்துப் பேசுவதினாலும், கூடப படுப்பதினாலும், உடன் வாழ்வதினாலும்கூட அவர்கள் நமக்கானவர்கள் என்று நம்புகிறோம். இன்றைய நவீன உலகத்தில் வேலை, தொழில் என மனிதன் அலைந்துகொண்டே இருக்கிறான். சேர்ந்து வாழ்வது என்பதோ, கணவன் காலையில் சென்று மாலையில் வீட்டுக்கு வரவேண்டும் என்பதோ நகர வாழ்க்கையில் எல்லாருக்கும் நடக்காதது. இப்படியான காலகட்டத்தில் அவரவர்களுக்கான ரகசியங்கள் இருந்தே தீரும். ஆனால் இந்தக் கதை இன்றைய மன ரகசியங்களை பற்றியது அல்ல. அன்றைய மன ரகசியங்களை பற்றியது. போன தலைமுறையை பற்றியது. அவர்கள் ஆழ்மன ரகசியங்களைப் பற்றியது.

இதுதான் நான் வாசிக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் தொகுப்பு. நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரிலேயே இதை துவங்கினேன். மேலும் சில கதைகளை இணையத்தில் வாசித்தேன்.

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் ‘மாயப்படகு’ என்ற பெயரில் ஒரு மாயாஜால கதையை எழுதினேன். அது நண்பர்களிடத்தில் ரசிக்கப்பட்டது. அது மேலும் கொஞ்சம் மெருகேற்றியபின் ‘புதுவை பாரதி’ என்ற சிற்றிதழில் 12 வாரம் தொடராக வெளிவந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘புதுவை பாமரன்’ என்ற சிற்றிதழில் மூன்று சிறுகதைகள் வந்தன. அதன் பிறகு எழுதவில்லை. பிறகு 2013 ல் சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு தனிமை என்னை மீண்டும் எழுதத் தூண்டியது. இருப்பினும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் எதையும் வெளியிடவில்லை. 2018 பிப்ரவரி மாதம் ‘மலைகள்’ இதழில் என் முதல் கதை வந்தது. இந்த மூன்று மாதத்தில் ‘பதாகை’, ‘மலைகள்’ மற்றும் ‘திண்ணை’ இணைய இதழ்களில் பத்து கதைகள் வெளிவந்துள்ளன. அனைத்தும் பல்வேறு காலகட்டத்தில் எழுதியது.

வாசிப்பையும் அதன் தொடர்ச்சியாக எழுத்தையும் நோக்கி என்னை நகர்த்தியது எனது தனிமையே. இதுவரை எழுத வருகிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் சில கடினமான விஷயங்களைக் கடந்து செல்ல எளிதாக முடியவில்லை. மனிதர்கள் எளிதாகக் கடந்து சென்றுவிடும் அடுத்தவர்களின் துயரங்களை நான் கொஞ்சம் அருகில் சென்று பார்க்க விரும்புகிறேன். எதுவும் செய்ய முடியாத இந்த கையாலாகாத்தனம்  குறித்து எனக்குள் இருக்கும் குற்ற உணர்விலிருந்து மீள எழுதுவது எனக்குக் கொஞ்சம் உதவுகிறது. மனிதர்களை எப்படி அணுகுவது, அனுபவங்களைச் சுவையான கதையாக மாற்றுவது எனச் சில விஷயங்களை நான் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளில் இருந்து கற்றேன். அவ்வகையில், தமிழ்ச் சிறுகதையின் தவிர்க்க முடியாத மாயாஜாலக்காரர் சுரேஷ்குமார இந்திரஜித்.

 

 

நம் வீட்டு மனிதர்கள் – வண்ணநிலவனின் “கடல்புரத்தில்” வாசிப்பனுபவம். -வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

நான் பிலோமி அக்காவைப் பார்த்திருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். அல்லது, பிலோமி அக்காவைப் போன்ற வேறொரு அக்காவை. முட்டத்தில், என் பதின்ம வயதுகளில். அப்பா கூடப் பிறந்த அத்தை, அப்போது முட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராயிருந்தார். மருத்துவமனை அருகிலேயே வீடு. பள்ளி விடுமுறைகளில் சில வாரங்கள் முட்டத்தில் அத்தையின் குட்டிக் குழந்தைகள் சாய், வித்யாவுடன் விளையாட்டுகளில் கழியும்.

வீட்டிற்கு முன்னால் ஒரு மரமல்லி இருந்தது. எப்போதும் மல்லிகள் மரத்தினடியில் சிதறிக் கிடக்கும். ஒரு விடுமுறையில், சாய், வித்யாவுடன் சிறிய மூன்று சக்கர சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கையில் மீன் கூடையுடன் ஒரு அக்கா வாசலுக்கு வந்து நின்று “டாக்டரம்மா” என்று அத்தையைக் கூப்பிட்டார். திரும்பி எங்களைப் பார்த்து சிரித்தார். அத்தை உள்ளிருந்து வந்து, அந்த அக்காவை பேர் சொல்லி கூப்பிட்டு “வந்துட்டியா? உள்ள வா” என்று கூப்பிட்டுப் போனார். அக்கா அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள் போல; சாயிக்கும், வித்யாவிற்கும் அவர்களைத் தெரிந்திருந்தது. நானும், சாய், வித்யாவும் மீன்களை வேடிக்கை பார்க்க உள்ளே ஓடினோம். “இது விஜயன்; அண்ணன் பையன். லீவுக்கு வந்துருக்கான்” என்று என்னைக்காட்டி சொன்னார் அத்தை. அக்கா கன்னத்தை நிமிண்டிவிட்டு சிரித்தார்.

எனக்கு இப்போது முட்டம் நிகழ்வுகள் பெரும்பாலும் கலங்கலாய்த்தான் நினைவிலிருக்கின்றன (ஒருவேளை ஜெனிஃபர் டீச்சரும் கண்ணில் விழுந்திருப்பார்களோ!). அத்தையும், மாமாவும்கூட வெகுநாட்கள் முட்டத்திலில்லை. அத்தை அங்கிருந்து வெள்ளலூருக்கும், நத்தத்திற்கும், அலங்காநல்லூருக்கும் வேலை மாற்றலாகிக் கொண்டிருந்ததால், என் விடுமுறை நாட்களும் அங்கங்கு மாறிக்கொண்டிருந்தன.

இப்போதெல்லாம் எந்தப் புத்தகம் படித்தாலும் மனது பின்னோக்கித் திரும்பி, நினைவுகளில் மூழ்கி, வாசிக்கப்படும் வாழ்வுடன் நோஸ்டால்ஜியாவையும் பின்னிவிடுகிறது. சமீபத்தில் தமிழினி வசந்தகுமார் வெளியிட்டிருந்த பாமயனின் அபுனைவு நூலான “வேளாண்மையின் விடுதலை” படிக்கும்போதுகூட, மனம் தாத்தாவின் வேளாண்மை கொழித்த கிராமத்து வீட்டிலேயே இருந்தது. கமலையும், மாடுகளும், வேர்க்கடலைக் குவியலும் மனதை நிரப்பித் தளும்பின.

நெய்தலின் நான் படித்த முதல் புத்தகம் குரூஸின் “ஆழி சூழ் உலகு”. அவ்வாழ்க்கையை மனதுக்கு நெருக்கமாய் அறிமுகப்படுத்தியிருந்தது. “கடல்புரத்தில்” குறுநாவல்தான்; ஆனால் அந்த மனிதர்கள், அவர்களின் உலகம், அவர்களின் குணம், அவர்களின் பேச்சு… அச்சு அசலானதாய், நானே அருகிலிருந்து பார்ப்பதைப் போலிருந்தது; அதனால்தான் பிலோமி அக்காவைப் பார்த்திருப்பேனோ என்ற பிரமையுண்டானது. இப்புனைவு ஆரம்பமும், முடிவுமில்லாதது; ஆம் அவ்வாழ்வின், அம்மனிதர்களின் ஒரு குறுக்குவெட்டு, 112 பக்கங்களில். சாரத்தைப் பிழிந்து கொடுத்தது மாதிரி; பெரும் புனைவாக விரித்தெடுக்க எல்லாச் சாத்தியங்களும் கொண்ட நறுக்கான, செறிவான குறுநாவல். முன்னுரையில் வண்ணநிலவன் சொன்னதுபோல், ஓரத்தில் ஒதுங்கி நின்று, எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து எழுதிய கலைஞனின் மொழி. எழுத்தாளன் அவ்வாழ்க்கையினூடே பார்வையாளனாக மட்டுமே இருக்கிறான்; கிஞ்சித்தும் ”தன்”-னை வெளிக்காட்டிக் கொள்ளாமல். பெரும் ஆசுவாசம். ஆனால் ஒட்டுமொத்தப் புனைவின் வழியே எழுத்தாளனின் அகம் வெளிப்பட்டு விடுகிறது.

ஒரு விமர்சனம் படித்தேன்; இக்குறுநாவலில் எல்லோருமே அதீத நல்லவர்களாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்; அதனாலேயே செயற்கையாகத் தெரிகிறதென்று. என்னுள் புன்னகை எழுந்தது. என்னவொரு மனநிலைக்கு வந்துவிட்டிருக்கிறோம்! நல்லது ஏதும் கண்ணில் பட்டால், அல்லது நல்லதாகவே கண்ணில் பட்டுக் கொண்டிருந்தால், ”ஏதோ சரியில்லை” என்று நமக்குத் தோன்றுகிறது; கூடவே ஒரு ஐயமும் இது மிகுகற்பனை கொண்ட மெலோடிராமாவாகத்தான் இருக்கவேண்டும் என்று. எனக்கென்னவோ படிக்கும்போது இந்நாவல் மிகுகற்பனையாகவே தெரியவில்லை. நாடகத்தனமாயும் உணரவில்லை.

*

வல்லத்தையும், வீட்டையும் விற்றுவிட்டு தன்னுடன் வந்து இருக்குமாறு செபஸ்தி, அப்பச்சி குரூஸிடம் சொல்கிறான்; அவனுக்கு அந்தப் பணம் வேண்டும், சாயபுவுடன் சேர்ந்து சைக்கிள் கடை வைக்க; குரூஸ் உயிரே போனாலும் மணப்பாட்டைவிட்டு வரமாட்டேன் என்கிறார். செபஸ்தியின் அம்மை மரியம்மைக்கு மகனுடன் செல்ல விருப்பம்தான். மரியம்மைக்கும் வாத்திக்கும் ஸ்நேகம்; அது குரூஸிற்கும் தெரியும்தான். செபஸ்தியின் தங்கை பிலோமிக்கு சாமிதாஸின் மேல் காதல்; சாமிதாஸூம் பிலோமியை விரும்புகிறான்.

பக்கத்து வீட்டில் லாஞ்சி வைத்திருக்கும் ஐசக்; அவனின் நோயாளி மனைவி கேதரின். ஐஸக்கிற்கு கேதரினை அடித்து விரட்டிவிட்டு, பிலோமியை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை.

பிலோமியின் அண்ணன் செபஸ்தியை காதலித்தாலும், உவரியூர் மாப்பிள்ளைக்கு வல்லத்துடன் வாக்கப்படும், பிலோமியின் நெருங்கிய ஸ்நேகிதி ரஞ்சி. ரஞ்சியின் மேல் மிகுந்த நேசம் வைத்திருக்கும் ரஞ்சியின் கொழுந்தன்.

குரூஸின் வல்லத்தில் உடன்வரும் சிலுவை. சிலுவைக்கும் பிலோமியின் மேல் ஒரு கண் உண்டு. சிலுவையின் மனைவி இன்னாசி.

குரூஸின் குடும்பத்திற்கு உதவும், குரூஸின் மீன்களை வாங்கிக்கொள்ளும், பிலோமியுடன் சகஜமாய்ப் பேசும் தரகனார்.

லாஞ்சிக்காரர்களுக்கும், வல்லத்துக்காரர்களுக்குமான பகைமையும், உரசல்களும். பாதிரியாருக்குப் பிரியமான ரோசாரியாவும் லாஞ்சி ஓட்டுகிறான். பிலோமியும் சாமிதாஸூம் ஒருநாள் உடலால் இணைகிறார்கள்.

மணப்பாட்டின் ஒரு கிறிஸ்துமஸ் திருவிழாவின்போது, கள் குடித்த மரியம்மை தூக்கக் கலக்கத்தில் வீட்டுப்படியில் தவறி விழுந்து இறந்து போகிறாள். குரூஸ் நடைபிணமாகிறான். காரியங்கள் முடிந்து செபஸ்தியின் மனைவி போகும்போது பிலோமியிடம், “இனிமே நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும்,” என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.

ஐஸக்கிற்கும், ரோசாரியாவிற்கும் சண்டை வருகிறது. ரோசாரியாவின் மனைவிக்கும், பாதிரியாருக்கும் தொடர்பிருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். ஒருநாள் ஐஸக்கின் லாஞ்சியில் தீப்பிடிக்க, ரோசாரியாதான் வைத்திருப்பான் என்று கோபத்தில் கள்ளுக்கடையில் ரோசாரியாவைக் கத்தியால் குத்தி கொன்றுவிடுகிறான் ஐஸக். ஐஸக்கிற்கு பைத்தியம் பிடிக்கிறது.

நாட்கள் நகர்கின்றன. பிலோமிக்கும், மரியம்மையின் வாத்திக்கும் இடையே நட்புண்டாகிறது. மணப்பாட்டில் அறுப்பின் பண்டிகை வருகிறது. ஊர் விழாக்கோலம் பூணுகிறது. குரூஸ் வல்லத்தையும், வீட்டையும் விற்க முடிவு செய்கிறான். வல்லம் பிரிவதை தாங்கமுடியாமல் மனம் பேதலித்து குழந்தையாகி விடுகிறான்.

*

நான் நெகிழ்ந்த இடங்கள் பல.

பிலோமிக்கு தாத்தா தாசையாவை ரொம்பப் பிடிக்கும்; தாத்தா இறப்பதற்கு முந்தைய டிசம்பரில் கிறிஸ்துமஸ் கோயிலுக்குக் கடைசியாய் அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி நடந்து வருகிறார். வரும்போதே அடிக்கொருதரம் “பிலோமிக் குட்டிக்கி தாத்தாவால் கஸ்டமில்லையே?” என்கிறார். “அதெல்லாங் கிடையாது தாத்தா” பிலோமி பதில் சொன்னதும் “நீ மவராசியா இருப்பே…” என்கிறார் தாத்தா.

*

”பிலோமி உள் நடைப்படியில் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய மடியில் செபஸ்தியுடைய இரண்டு பையன்களும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இந்தப் பிரியமான அத்தையை விட்டுப்போகக் கொஞ்சங்கூட மனசில்லை.

“லே கீழ இறங்கி உட்கார்ந்தா என்ன? அவ பாவம், நோஞ்ச ஒடம்புக்காரி…” என்று செபஸ்தி அதட்டல் போட்டான்.”

*

”கிறிஸ்துமஸூடன் பனியும் வந்துவிடுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அழகைத் தருவதே இந்தப் பனிதான். பனியினூடே கிறிஸ்துமஸ் ஆராதனைக்குப் போகிறதும், பனியைப் பிளந்துகொண்டு கேட்கிற கோயில் மணியோசையும் எவ்வளவு அழகாயிருக்கின்றன.

இரவு பதினொன்றரை மணிக்கு எல்லோரும் ஆராதனைக்குப் புறப்பட்டார்கள். கோயிலில் குலசேகரப்பட்டினத்திலிருந்து வந்திருந்த ரேடியோ, கிறிஸ்தவ கீதங்களைப் பாடிக்கொண்டிருந்தது லேசாகக் கேட்டது. தெருவில் போகும் அந்தப் பிள்ளைகளுக்குள் யார் பிலோமியுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு போவது என்பதில் சிறு சச்சரவு மூண்டது. அமலோற்பவத்துடைய புருஷன் தன் பிள்ளைகளைப் பார்த்து சத்தம் போட்டான். அதிலே ஆசிர் மட்டும் அரைகுறை மனசுடன் தன் அப்பச்சியுடைய கையைப் பிடித்துக்கொண்டான். மெர்ஸி கேட்கவில்லை. அவள் பிலோமியுடைய கையைத்தான் பிடிப்பேன் என்றாள்.”

*

சாய்-ம், வித்யாவும் இப்போது டாக்டர்களாகி விட்டார்கள். மரமல்லி எனக்குப் பிடித்த மரமாகி விட்டது. மரமல்லியும், கீழே மண் தரையில் சிதறிக் கிடக்கும் நீண்ட வெண்பூக்களும், அந்தக்காட்சி அப்படியே மனதில் பதிந்துவிட்டது. பத்து வயதில் பிடித்துப்போன மரமல்லிகளின் வாசம் இப்போதும் மனதில். அதன்பின் பள்ளி முடித்து, தோட்டக்கலை இளங்கலையில் சேர்ந்தபோதும், அந்த நான்கு வருடங்களில் நிறைய பூமரங்கள் அறிமுகம் ஆனாலும், பிடித்த பூமரமாக மரமல்லியே இருந்தது.

பிலோமி அக்காவுடன் பயணிக்கையில் மனது மேல் கொண்டு வந்த இன்னொருவர் ஓடைப்பட்டியில் சின்னக் குடிசையில் கடை வைத்திருந்த காமாட்சி பாட்டி. காமாட்சி பாட்டி தடிமனான கண்ணாடி போட்டிருப்பார்; காதுகளில் கனமான தண்டட்டி. அப்போது நான் ஆரம்பப் பள்ளியில் இருந்தேன். உணவில் கருவாட்டின் மணத்துக்கும், சுவைக்கும் பழகி எந்த சாப்பாடாயிருந்தாலும் தட்டில் ஒரு கருவாட்டு துண்டிருந்தால் மனம் சந்தோஷம் கொள்ளும். அப்பாவிற்கும் கருவாடு பிடிக்கும். காய்கறி ஏதும் சமைக்காதபோது, அம்மா பாட்டி கடையில் கருவாட்டு துண்டுகள் வாங்கிவரச் சொல்லுவார். ஊரிலேயே காமாட்சி பாட்டி கடையில் மட்டும்தான் கருவாடு கிடைக்கும். எங்கள் கிராமத்து வீட்டிலேயே, வீட்டினுள் கொடியில், பண்டிகைக்கு எடுத்த இறைச்சியின் மிச்சங்கள், உப்புக்கண்டமாய் காய்ந்துகொண்டிருக்கும். அம்மா அதைப் பண்ணித் தருகிறேன் என்றாலும், வேண்டாம் என்று சொல்லிவிட்டு பாட்டி கடைக்குத்தான் ஓடுவேன்.

முன்னுரையில் வண்ணநிலவன் “மனம் உய்ய வேண்டும்; அதற்குத்தான் இலக்கியம்” என்கிறார். கடல்புரத்தில் எல்லோரும் முழுமையான அன்பும், கோபமும் ஒருங்கே கொண்ட மனிதர்களாயிருக்கிறார்கள்; செபஸ்தி அப்பாவின் மீது அன்பாகவும் இருக்கிறான்; கோபப்படவும் செய்கிறான். குரூஸிற்கு, மரியம்மையின் மேல் வெறுப்பும் இருக்கிறது; அன்பும் இருக்கிறது. பிலோமிக்கு, சாமிதாஸின் மேல் அன்பு துளியும் குறையவில்லை, அவன் பிரிந்தபோதிலும்.

*

பிலோமியைப் பார்க்க வீட்டிற்கு வருகிறான் சாமிதாஸ். இன்னும் சில நாட்களில் அவனுக்கு திருமணம் உவரியூர் பெண்ணுடன்.

”அவன் மெதுவாகக் குனிந்துகொண்டே வீட்டினுள் வந்தான். அந்தக் கால்களுக்கு அந்த வீட்டினுள் நுழைய அதற்குள் எப்படி இவ்வளவு தயக்கம் வந்தது.

“சும்மா உள்ளே வாங்க. இது அசல் மனுஷர் வூடு இல்ல. உங்களுக்க பிலோமி வூடுதா இது…”

அவனுக்கு வார்த்தைகள் இல்லை.

“பிலோமிக்கு நா பண்ணியிருக்க பாவத்துக்கு ஆண்டவர் என்னயத் தண்டிக்காம வுடமாட்டார்”

அவள் மௌனித்திருந்தாள். மீண்டும் அவனே பேசினான்.

“நீ என்னய மன்னிக்கணும்…எனக்கு மாப்பு தரணும்.”

“இப்படியெல்லாம் நீங்க பேசக்கூடாது.”

“நாளச்செண்டு கல்யாணம். ஒன்னயப் பார்க்கணும் பேசணும் போல இருந்திச்சு. அதான் வந்தேன். நீயும் கண்டிஷனாட்டு வரணும். நா ஒன்னயத்தா ரொம்ப நெனச்சுக்கிட்டிருப்பேன். சரின்னு சொல்லு…”

“ம்…”

பிலோமி சிரித்தாள்.

“என்ன சிரிக்கா? வருவியா?”

“வாரேன்…” என்று சிரிப்பினூடே சொன்னாள் .”

அந்தச் சிரிப்பின் முதிர்ச்சியையும், அன்பின் தளும்பலையும் அடைந்துவிட்டால் இந்த ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடாதா என்ன?

பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’யை முன்வைத்து – நரோபா

நரோபா

‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ அதன் வடிவமைப்பில், பொருளில் என எல்லாவற்றிலும், எனை வழமையான கதைப் புத்தகமாக நடத்தாதே, நான் கூடுதல் கவனத்தை கோருபவன், என அறைக்கூவல் விடுக்கிறது. முன்னுரையே, “கடவுள் வாசகர்களாகிய உங்களை நீள முன்னுரைகளில் இருந்து காப்பாராக” எனும் போர்ஹெசின் மேற்கோளோடு துவங்குகிறது. அடுத்து ‘தோரணம்’ பகுதியில் சில மேற்கோள்கள் உள்ளன. அவை உண்மைக்கும், புனைவுக்கும், அசலுக்குமான உறவைச் சுட்டுகின்றன. அவருடைய ‘வலை’ கதையில் இந்த வினா விரிகிறது. நான் வாசிக்கும் பொருளடக்கம் இல்லாத முதல் சிறுகதை தொகுப்பு இதுதான். இத்தனை கதைகள் கொண்ட பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் சிறுகதை தொகுப்பு, என்று கட்டுரையை துவங்குவதற்கு முன் பக்கங்களைப் புரட்டியோ அல்லது நினைவுகளைத் தோண்டியோதான் எழுத வேண்டியிருக்கிறது. சிறுகதை தொகுப்பின் இறுதியில் குறிப்புகளுக்காக இரண்டு மூன்று பக்கங்கள் விடப்பட்டுள்ளன. இதுவும் தமிழ் சிறுகதைகளில் புதிய முன்மாதிரிதான்.

‘தந்திகள்’ ‘புடவு’  ‘உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்பவர்கள்’ ‘உடைந்துபோன ஒரு பூர்ஷ்வா கனவு’ ‘ஜங்க்’ ‘நாளை இறந்து போன நாய்’ ‘பன்னிரண்டு மரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு’ ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ ‘வலை’ என ஒன்பது சிறுகதைகள் கொண்ட தொகுப்பு ‘யாவரும்’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது (பட்டியலிடவில்லை என்றால் மனம் ஆறாது). இக்கதைகள் வழமையான சிறுகதை வடிவத்திற்கு பொருந்தாதவை. கடினமான, திருகல் எனக் கூறத்தக்க மொழியில் எழுதப்பட்டவை, அவசியம் என்றால் ஆங்கிலத்தைப் பயன்படுத்த தயங்காதவை, பெரும்பாலான கதைகள் தமிழ் நிலத்துடன் (அல்லது நிலத்துடன்) தொடர்பற்ற அந்நியத்தன்மை கொண்டவை. இவை யதார்த்தவாத கதைகளை மதிப்பிட உள்ள கருவிகள், பின்நவீனத்துவ கதைகளுக்குப் பொருந்தாது என்றொரு வாதம் வைக்கலாம். ஆனால் பின்நவீனத்துவ கதைகளுக்குரிய கட்டுடைப்பையோ, மொழி விளையாட்டையோ பாலாவின் கதைகளில் காண முடிவதில்லை. ஒரு எழுத்தாளரை, அவருடைய படைப்புகளை  நிராகரிக்க மேற்கண்ட காரணிகள் போதும்.

ஆனால் பாலா இவற்றைத்தான் தனது படைக்கலமாக கொள்கிறார். தனது படைப்புலகை தான் பிரத்தியேகமாக கண்டடைந்த சட்டங்களைச் சேர்த்து முடைகிறார். அதன் அத்தனை கோணல்கள், பிசிறுகள், துருத்தல்கள், பிழைகளோடும் அவை  கலையாகின்றன. காரணம் அவை கலைஞனின் தனிப்பட்ட தேடலை அவனுக்கே உரிய அசலான குரலில் பதிவாக்குகின்றன. அவ்வகையில் ஒரு வாசகனாக இத்தொகுதியில் உள்ள அனைத்து கதைகளுமே என்னை ஈர்த்தன. புதிய வகையான எழுத்தை வாசிக்கும் பரபரப்பு என்னை தொற்றிக் கொண்டது. கதை சொல்லல் முறையில் தமிழ் புனைகதை உலகில் பாலா தாக்கம் செலுத்துவார் என்றே எண்ணுகிறேன்.

பாலாவின் கதைமாந்தர்கள் அனைவரும் நடுத்தர, உயர்- நடுத்தர வர்க்கத்து நகரவாசிகள். எல்லா கதைசொல்லிகளும், அல்லது முக்கிய கதைமாந்தர்களும் ஆண்கள். பெண்கள் வலுவான பாத்திரங்களாக மனதில் நிலைகொள்ளவில்லை. பொருளாதார மந்த நிலை காரணமான வேலையிழப்பு ஒரு கதைமாந்தரைப் போல் சில கதைகளில் வலுவாக தனது இருப்பைப் பிரகடனப்படுத்திக் கொள்கிறது. ‘தந்திகள்’ கதையில் மாதக்கணக்கில் வேலையின்றி இருக்கும் கணவனை விட்டு மனைவி அகன்று செல்கிறாள். ‘உடைந்து போன பூர்ஷ்வா கனவு’ கதையிலும் சம்பத் எட்டு மாதங்களாக வேலையில்லாமல் இருக்கிறான். மெல்ல கணவன் மனைவிக்கு இடையே விரிசல் நேர்கிறது. நவீன வாழ்வு குடும்ப அமைப்பை என்னவாக மாற்றி இருக்கிறது? உறவுப் பின்னலின் வலுவிற்கும் பொருளாதார காரணிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? இது போன்ற கேள்விகள் கதைகளில் விவாதப் பொருளாக ஆகின்றன.

‘தந்திகள்’ கதையில் இப்படி ஒரு வரி வருகிறது- ‘அவனுடைய விதியை விலங்கின் பெயரால் அழைக்க வேண்டுமென்றால் தயங்காமல் அது ஒரு பூனை என்பான்.’ மூன்று மாதமாக  புதிய சான்றிதழ் படிப்புக்கும் சேர்ந்திருக்கிறான். வேலைக்கான முனைப்பை இழந்தவனாக இருக்கும் அவனை விட்டு அவன் மனைவி அகன்று செல்கிறாள். ஒன்றுக்கு பதிலீடாக மற்றொன்று வரும் எனும் நம்பிக்கை அவனுக்கு உண்டு. மனைவி அவனை விட்டுச் சென்ற அன்று இந்தப் பூனை வந்து சேர்கிறது. இறந்து மூன்று மாதமாகியும் அழுகாமல் கிடக்கும் பூனையை புதிய சமையலறை கத்தியின் சோதனைக்காக பயன்படுத்த எண்ணுகிறான். ‘அழுகாத பூனையை அறுக்கவும் முடியாது’ என அதை தவிர்த்து விடுகிறான். எப்போதும் பிள்ளையை சுமந்து கொண்டு வரும் குடியிருப்பு காவலரின் ஒடிசலான மனைவி மீனாவின் சித்திரம் வருகிறது. பன்றி வேட்டையில் ஓலமிடும் பன்றியின் ஓலத்தைக் கேட்டு மருத்துவம் படிக்க வந்த ஈரானியர்கள் அவன் வீட்டிற்குள் நுழைகிறார்கள். உதிரிச் சரடுகளான இவை யாவும் எப்படி இசையாகிறது என்பதே ‘தந்திகள்’. மனிதர்கள் கதைகளால் பிணைக்கப்படுகிறார்கள்.

‘உடைந்து போன பூர்ஷ்வா கனவு’ நவீன முதலாளித்துவ நுகர்வு சார் வாழ்வு குடும்ப அமைப்பிற்குள் செலுத்தும் பாதிப்பைப் பற்றிய நல்ல பகடி. இரண்டு நண்பர்கள் அவர்களின் குடும்பங்கள், நவீன உயர் வர்க்க வாழ்வின் கொண்டாட்டங்களில் திளைப்பவர்கள். ஒவ்வொரு முக்கிய நாட்களிலும் பரஸ்பரம் அத்தியாவசியமான பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்பவர்கள். அந்த திருமண நாளுக்கு என்ன பரிசு கிடைக்கும் என வேலையிழப்பின் அழுத்தத்தில் நாக்கைத்’ தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருக்கும்போது மகேந்திரன் ஜோடி அவர்களுக்கு மிகவும் அவசியமான ‘அழுக்குக் கூடையை’ பரிசளிக்கிறது. உறவுகளின் ஊடே ஊடுருவும் பொருளியல் சமன்பாடுகள் குறித்தான அபார சித்திரம் அளிக்கும் கதை.

பாலாவின் மிக முக்கியமான பலம் என்பது நுண்ணிய காட்சிச் சித்தரிப்பு. அவை கவித்துவமாகவும் திகழ்கின்றன. ‘சித்திரையில் பெய்த கோடை மழையின் ஈரம் வற்றிய ஓடைத்தடத்தின் நுண் துகள் மணலில் வெய்யிலுக்கு முதுகைக் காண்பித்துக் கிடக்கும் கூழாங்கற்களை மிதித்து மேலேறினர் மூவர்.’ ‘காமிக்ஸ் வேதாளத்தின் கண்கள்’ போல பாறையின் பொத்தல்கள் தென்படுகின்றன. சுடப்படும்போது ‘கரையான் புற்றின் வாயிலிருந்து பாம்பு வெளியேறுவது போல என் உடலில் இருந்து குருதி வெளியேறியதைப் பார்த்தேன்.’ அதே போல், பாலா அசலான சிந்தனைத் தெறிப்புகளை ஒற்றை வரிகளில் சொல்லி விடுகிறார். அண்மைய கால எழுத்தாளர்களில் அதிகமாக மேற்கோள் காட்டத்தக்க எழுத்தாளர் பாலாவாகவே இருப்பார். ‘கண்களால் நாக்குகளைவிட அதிகமான வரலாற்றை சொல்லிவிட முடியும். ஓவியம் கண்களின் வரலாறு.’ ‘மெதுவாக இயங்கும் இணைய தொடர்பே போர்னோகிராபியிலிருந்து நம்மை குணப்படுத்த போதுமானது’ போன்றவை சில உதாரணங்கள். இந்த ஒற்றை வரிகள் சில நேரங்களில் கதையை விட்டு மனம் அகன்ற பின்னும்கூட மனதில் தங்கிவிடுகின்றன.

‘புடவு’ கதையில் அகஸ்டின், சாமிநாதன், கதிரேசன் ஆகிய மூவரும் ‘ஃ’ வடிவ பாறைகளில் ஒளிந்திருக்கும் சமணப் புடவினைக் காண செல்கிறார்கள். அப்போது ஒரு தவிட்டு குருவியை இரண்டு அண்டங்காக்கைகள் துரத்துகின்றன. மகாவீரர், சாமானியன், நீட்ஷே என விவாதம் நகர்கிறது. பாலாவின் கதைகளில் இந்த ‘தளமிடுதல்’ (layering) உள்ளது. உறவிணைப்பை சித்தரிக்கிறார். அகஸ்டின் நடைமுறைவாதி. கதிரேசன் – சாமிநாதனின் உரையாடல்களில் அவனுக்கு ஆர்வமில்லை. தொல்மனிதர்களின் ஓவியங்களைக் காணும்போது ‘கண் முன்னாடி நிற்கிற சேணம் ஏந்திய குதிரையை ஓட்டுவதைவிட நீங்க பேசும் லாஸ்கோ குகையின் ஓவியக் குதிரைகளைப் பார்க்குறது எனக்கு விருப்பமில்லை’ என்கிறான். ஜைனம், மகாவீரரின் உடல் மறுப்பு, துறவு ஒரு பக்கம், மறுபக்கம் உடலை மையமாக கொண்ட நீட்ஷே பற்றிய விவாதம் வருகிறது. அகஸ்டின் இரண்டிலும் விலகி நடைமுறை நோக்குடன் பேசுகிறான். கதை இறுதியில் இரண்டு காக்கைகளுக்கு இடையில் உயிர் பிழைக்கப் போராடும் குருவியை கல்லைக் கொண்டு வீழ்த்துகிறான். “இப்ப எல்லாருக்கும் விடுதலை” என்கிறான்.     செறிவான மெய்யியல் உரையாடல்களும் குறியீட்டுத் தன்மையும் கொண்ட மிக நல்ல கதை. அகஸ்டின் இருத்தலியல் சிக்கல்களை எதிர்கொள்ளாமல் நிராகரிப்பதன் வழியாகவே கடக்கிறான். மரணத்திற்கு முன் அவை பொருளிழப்பதை சுட்டிக் காட்டுகிறான். எல்லா உன்னதங்களையும் மறுக்கிறான். அமரத்துவம் பற்றிய கேள்விகள் பாலா தனது புனைவுகளின் ஊடாக விவாதிக்கிறார். ‘வலை’ கதையையும் சேர்த்துக் கொள்ளலாம். ‘புடவி’ கதையில் மட்டுமே பாலா மரபை கையாண்டுள்ளார். ஒரு தத்துவச் சிக்கலை வெவ்வேறு மெய்யியல் நோக்குகள்  அணுகுவதை கதையாக்குகிறார். இக்கதைகள் பெரும் உள்விவாதங்களின் தீர்மானமான முடிவுகளை உலகிற்கு அறிவிக்கின்றன. பாலா தனது சிந்தனைகளை, மெய்யியல்களை, வெளிப்படுத்தும் ஊடகமாக புனைவைக் கையாள்கிறார் என்றொரு எண்ணம் ஏற்பட்டது. ஆனால் ‘பன்னிரண்டு மரணங்களின் துயரம் மிகுந்த தொகுப்பேடு’, ‘வலை’ ஆகிய கதைகளில் இந்தப் போக்கை மீறுகிறார் எனச் சொல்லத் தோன்றுகிறது.

‘உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்பவர்கள்’ கதை இத்தொகுப்பில் என்னை அவ்வளவாக ஈர்க்காத (பிடிக்காத அல்ல)  கதை என்று சொல்லலாம். வேறொருவனாக தன்னை மாற்றிக்கொள்ள முயன்று தோற்பவனின் கதை. நுட்பமாக உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்பவர்களின் உளவியலை பாலா காட்டுகிறார். தன் காதலி ஏற்கனவே இருவருடன் உறவு முறிந்தவள் என்று அறிந்து விலகுகிறான். அவளுடைய வெற்றிடத்தை தன்னால் நிரப்பமுடியும் என நம்பியவன் தன்னால் அது இயலாது என்பதை உணர்ந்து கொள்கிறான். எனை ஈர்க்காத மற்றொரு கதை என தொகுப்பின் தலைப்பிற்குரிய கதையான “துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை”யை சொல்லலாம். நிகழ் காலத்தில், இறந்த காலத்தில், என இரு வேறு காலங்களில் நிகழ்ந்த கப்பல் தரைதட்டும் நிகழ்வை ஒன்றாகப் பிணைந்து எழுதி இருக்கிறார். அப்பிணைப்பு அளிக்கும் மயக்கமே இக்கதை. இரண்டு காலகட்டங்களுக்கும் சென்று மீளும் உத்திக்காக முக்கியத்துவம் வாய்ந்த கதையாகச் சொல்லலாம்.

பாலாவின் கதைகள் நிகழ்வுகளின் ஊடே அசாதாரண தருணங்களை உருவாகின்றன. அழுகாத பூனையை போல், ‘ஜங்க்’ கதையில் போர்னோகிராபி அடிமைகள் மீட்கும் ரகசிய சங்கம் வருகிறது. தொடர்பறுந்து போன வடகிழக்கு காதலி கிடைப்பதற்கு முன், போர்னோவில் முங்கி கிடக்கும்போது ‘எனக்கு என்ன தேவையென்பதை பிரபஞ்சத்தின் மூலையில் யாரோ அறிந்திருக்கிறார்கள்.’ என பாவ்லோ கொஹெல்ஹோத்தனமாக புளங்காகிதம் அடையும் கதைசொல்லி, இறுதியில் அவளிடமிருந்து, சந்திக்க வேண்டும், என ஒரு குறுஞ்செய்தி வந்தவுடன்  ‘எனக்கு என்ன தேவையில்லை என்பதையும் பிரபஞ்சத்தில் யாரோ அறிந்திருக்கிறார்கள்’, என முடிக்கிறார். பின்னை- வாய்மை காலகட்டத்தில் உற்பத்தியாகி நம்முன் வந்து குவியும் போலி தகவல்கள் நினைவுக்கு வந்தபடி இருந்தது.

அசாதாரண தருணங்களுக்கு மற்றுமொரு உதாரணம், கதையின் தலைப்பே சொல்லிவிடுவது போல் “நாளை இறந்து போன நாய்”. இந்த தலைப்பு எனக்களித்த கற்பனைகள், பரவசங்கள், சாத்தியங்கள் அற்புதமானவை. கதைசொல்லி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறான். அவன் வளர்க்காத நாய் இறந்து போய்விட்டதாக எதிர்க் குடியிருப்பில் இருந்து சொல்லிச் செல்கிறார்கள். அதன் உடமைகளை அளிக்கிறார்கள். அதன் சடலத்தை கூவத்தில் கண்டெடுத்தவர்கள் அப்புறப்படுத்த பணம் கேட்கிறார்கள். அதற்கு உணவு வாங்கிய வகையில் கட்டணம் செலுத்த கோருகிறார்கள். அவனுடைய பிரக்ஞையில் நாய் வளர்த்ததற்கான தடயமே இல்லை. நாட்குறிப்பில் தேடுகிறான், அறிந்தவர்களிடம் பேசிப் பார்க்கிறான், அம்மாவிடம், காதலியிடம், கேட்டுப் பார்க்கிறான். வலுவான புறச் சான்று, தடயமற்ற அகச் சான்றுக்கு இடையிலான போராட்டத்தில் ஒருவழியாக சமரசப் புள்ளியை அடைந்து விடுகிறான். புறச் சான்றின் கை மேலோங்கி விடுகிறது. ஏறத்தாழ காஃப்காவின் ‘விசாரணை’ கதையை ஒட்டியதுதான். செய்யாத, அல்லது என்னவென்றே சொல்லப்படாத, குற்றத்திற்கு எதிராக போராடி கே அதை ஏற்றுக்கொண்டு தண்டனையை சுவீகரிப்பான். இக்கதைக்குள் காஃப்காவின் தொடர்பைப் பற்றிய குறிப்பும் வருகிறது.

எனது சிறுகதை வெளியீட்டு விழா அறிமுக உரையில் இரண்டுவிதமான சிறுகதை போக்குகள் தற்காலத்தில் நிலவுகின்றன, என குறிப்பிட்டு இருந்தேன். நாவலின் தன்மை கொண்ட கதைகள், கவிதைக்கு நெருக்கமான கதைகள். நண்பர் விஷால் ராஜா ‘கவிதைத்தன்மை’ கொண்ட கதைகளுக்கு சில உதாரணங்கள் அளிக்கமுடியுமா என கேட்டபோது சட்டென்று எனக்கு எந்தப் பெயரும் சொல்லத் தெரியவில்லை. பாலாவின் கதைகளை வாசிக்கும்போது அவரின் கதைகளை அப்படி வகைப்படுத்த முடியும் என்று தோன்றுகிறது. கவிதை ஏதோ ஒரு வகையில் குழந்தையின் கற்பனையுடன் நெருக்கமானதும்கூட. தேர்ந்த எழுத்தாளனின் சவால் என்பது, தான் சேகரித்த மேதமைக்கும் தனக்குள் இருக்கும் குழந்தைமைக்கும் இடையிலான சமநிலையை பேணுவதே.

இத்தொகுப்பில் எனை ஈர்த்த, அல்லது முற்றிலும் சாய்த்த, கதைகள் என இரண்டைச் சொல்வேன். ‘வலை’ மற்றும் ‘பன்னிரண்டு மரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு’. ‘பன்னிரண்டு மரணங்கள்…’ கதை அதன் தலைப்பு சுட்டுவதைப் போல் பன்னிரண்டு மரணங்களின் கதையைச் சொல்கிறது. கல்லடிபட்டு இறக்கும் சிட்டுக்குருவி, குளியலறையில் தட்டில் மூழ்கி எலும்புக்கூடான வாலறுந்த பல்லி, சாலையில் அடிபட்டுச் சாகும் தெரு நாய் என உயிர்ப் பிராணிகளில் துவங்கி இப்பட்டியல் சிகரட், ஷூ லேஸ், சதுப்பு நிலம், இரவு, மகாராணியின் வீரப்பதக்கம், கூர் மழுங்கிய கத்தரிக்கோல் என நீள்கிறது. ‘வேறு எவற்றையும்விட விளக்குகள்தான் இப்போது வரை நிகழ்பவைகளின் சாட்சியமாக இருக்க முடியும். விளக்குகளின் இருப்பில் அல்லது இன்மையில் மட்டுமே இப்போது வரை அத்தனையுமே நிகழ்ந்திருக்கின்றன,’ எனும் வரி கவிக்கூற்றுக்கு சான்று. கழிவறைத் தொட்டியில் மூழ்கி மரித்துப் போன பல்லிக்கும், இற்றுப் போன சப்பாத்துக்களின் உள்ளே மரித்துக் கிடக்கும் கொசுக்களுக்கு இரங்கும் அகம் கலைஞனுக்கு உரியது. இக்கதை என்னை நெகிழச் செய்தது. விரட்டி வரும் நான்காவது தோட்டா பற்றிய அச்சுறுத்தல் எல்லாம் சிறுத்துப் போயின. ‘வலை’ மற்றும் இக்கதையின் வழியாக தென்படும் பாலா ஒரு ‘அனிமிஸ்ட்’ என சொல்லத் தோன்றுகிறது. அசையும், அசையா பொருட்கள் என எல்லாவற்றிலும் உயிர்த்துடிப்பை கண்ட பழங்குடியின் நீட்சியாக, உயிர்ப் பரப்பின் வலைப் பின்னலை காட்டி விடுகிறார் என தோன்றியது. பாலாவைப் போல் சொல்வதாக இருந்தால், “ஒரு சிட்டுக் குருவியை விடவோ, ரப்பர் சக்கரங்களில் நசுங்கிச் சாவும் நாயை விடவோ மனிதனின் மரணம் வேறானது அல்ல”.

தொகுப்பின் இறுதி கதை ‘வலை’ சந்தேகமின்றி இத்தொகுதியின் சிறந்த கதை. சிந்தனையின் ஊடகமாக பயணித்த கதைகள் எனும் பாணி மறைந்து கதை தன் போக்கில் விருட்சமாக வேர் கொண்டு வளர்ந்த கதை. பொதுவாக ‘நல்ல கதைகளை’ இரண்டாக வகுக்கலாம். தொழில்நுட்ப நேர்த்தியுடன் நம் உணர்வுகளை கிளர்த்தி, அல்லது உணர்த்தி முடிபவை ஒரு வகை. பெரும்பாலான சிறந்த கதைகள் இவ்வகையையே சாரும். மற்றொரு வகையான ‘நல்ல கதைகள்’ படைப்பாளியாக நமது படைப்பு மனத்தின் மீது தாக்கம் செலுத்தித் தூண்டும். ‘வலை’ இரண்டாம் விதமான கதை. ஓர் எழுத்தாளனாக நான் எழுத விரும்பும் கதை. ‘வலை’ நவீன தேவதைக் கதையின் அம்சம் கொண்டது. ‘சோபியின் உலகம்’ வாசிக்கும்போது ஏற்பட்ட ஆச்சரியம் எனக்கு வலை வாசிக்கும்போதும் கிடைத்தது. மிகுபுனைவு தேவதைக் கதையாக பயணிக்கும் அதே சமயத்தில் உயர் தத்துவ சிக்கல்களை, கேள்விகளை, கதை எதிர்கொள்கிறது. முடிவற்ற ஊழின் நெசவை, வாழ்க்கைச் சுழலை, சித்தரிக்கிறது. அ. கா. பெருமாள் தொகுத்த நாட்டாரியல் ராமாயண கதைகளைக் கொண்ட தொகுப்பான ‘இராமன் எத்தனை இராமனடி’யில் ஒரு கதை வரும். சீதையைக் காண இலங்கை செல்வதற்கு முன் ஹனுமான் குளித்து ஓய்வெடுத்துச் செல்வான். அப்போது ராமன் அளித்த கணையாழியை அங்கு தவம் செய்யும் துறவியிடம் ஒப்படைப்பான். அவர் அதை நீர்ச் செப்பு கலத்தில் போட சொல்வார். கிளம்புவதற்கு முன் அனுமான் தனது கணையாழியை எடுக்கும்போது அதில் ஒரே மாதிரியான பல கணையாழிகள் கிடக்கும். குழம்பி முனிவரிடம் கேட்பான். அப்போது அந்த முனிவர் நீ எத்தனையாவது அனுமானோ, உன்னுடையது எத்தனையாவது கணையாழியோ, எத்தனையோ அனுமான்கள் வந்து செல்கிறார்கள், என்பார். சட்டென இக்கதை அடையும் காலாதீத தன்மை, உயரம், ‘வலை’ கதையின் முடிவில் அடையப்படும் உணர்வு நிலைக்கு நெருக்கமானது. பாலா புதிய கடவுள்களை, அவர்களுக்கென கதைகளை உருவாக்குகிறார். ஜெசியாவை உதாரணமாகச் சொல்லலாம். நாமறிந்த தொன்மங்களை உருமாற்றுகிறார். மூன்று ராஜ்ஜியங்களின் கதை பைபிள் கதையுடன் தொடர்புடையதாக வாசிக்க முடியும். ‘வலை’ கதையைப் பற்றி மட்டுமே தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

பரந்த வாசிப்பும், கூர்ந்த அவதானிப்புகளும் ஒருங்கே அமையும்போது தேர்ந்த எழுத்தாளன் உருவாகிறான். ஒவ்வொரு சொல்லுக்கும் பொறுப்பேற்று பிரக்ஞைபூர்வமாக கதைசொல்லல் ஒருமுறை. அவ்வப்போது நழுவிச்செல்லும் பிரக்ஞையை கதைசொல்லி பின்தொடர்ந்து செல்வது மற்றொரு முறை. பாலா இரண்டு வகைகளையும் பின்பற்றி கதைகளை எழுதுகிறார். பேசுபொருள், கூறும் விதம் என இரண்டு காரணங்களினாலும் பாலா தமிழின் தனிக்குரலாக ஒலிக்கிறார். அண்மையில் சொல்வனம் இதழில் வில் செல்ஃப் வாசகர்களுக்கு வாசிக்க ‘கடினமாக’ இருக்கும் நாவல்களின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் வந்துள்ளது. “விமரிசகர்கள் எங்களைப் புகழ்ந்தபோதும், எங்கள் பிரதிகளோடு ஒரு எச்சரிக்கை வாசகத்தைச் சேர்க்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறார்கள். ‘கடினம்,’ என்று சொல்கிறார்கள்- கூடவே அச்சுறுத்தும் உள்ளர்த்தமாய்-, ஓர் எதிரொலி, டெர் ஸ்டெப்பென்வுல்ஃபின் தாக்கமாய் இருக்கலாம்-, “இந்தப் புத்தகம் அனைவருக்குமானது அல்ல,” என்கிறார்கள்.”… நவீன டிஜிடல் யுகத்தில் வாசிப்பை எளிமைப்படுத்தும், பக்கங்களை விரைவாக விரட்டிச் செல்லும் ஆக்கங்களை உருவாக்குவதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். இவை பெருவாரியான மக்களை சென்று சேரும். ஆனால் அதே நேரம் லட்சிய வாசகன் தன்னை திருப்திப்படுத்தும், உழைப்பைக் கோரும் கடின ஆக்கங்களுக்காக தேடி அலைகிறான். வில் செல்ஃப் நவதாராளவாதம் ‘கடின’ நாவல்களின் விற்பனையை உண்மையில் பெருக்கியுள்ளன, என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். ஒரு வகையில் இந்த அளவுகோளின்படி பாலாவின் புனைவுலகை அறிமுகம் செய்யும்போது அவரையும் “எல்லோருக்குமான எழுத்தாளர்” அல்ல என்றே அறிமுகம் செய்ய முடியும் என தோன்றுகிறது.

மகரந்த் பரஞ்சபே எழுதிய நூலுக்கு ஆஷிஷ் நந்தி எழுதிய முன்னுரையில் பிற விஷயங்கள் பின்னுக்குச் சென்றால்கூட காந்தி, ‘நவீனத்துவத்தின் விமர்சகராக’ எப்போதும் முக்கியமான குரலாக திகழ்வார் என்கிறார். பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதையை வாசித்து முடித்தவுடன் ஏற்பட்ட முதல் மனப்பதிவு என ஆஷிஸ் நந்தியின் இக்கருத்தை சொல்லலாம். நவீன வாழ்வின் அபத்தங்களைப் பாடும் புதுயுக பாணன் பாலா.

 

 

ஏட்டைத் தாவும் பிரதி: யாக்கை

(அண்மையில் மலேசிய எழுத்தாளர் ம. நவீன் வல்லினம் இதழில் எழுதிய “யாக்கை” சிறுகதை குறித்து பதாகை நண்பர்களிடையே விவாதம் நிகழ்ந்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட வாசிப்பு சாத்தியங்கள் கொண்ட கதை. மூன்று வெவ்வேறு விதமான வாசிப்பு சாத்தியங்கள் இக்கதைக்கு உள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.)

யாக்கை என்றால் உடல். யாக்கை என்றவுடன் இயல்பாக யாக்கை நிலையாமையும் மனதில் உதிக்கிறது. உடலை மூலதனமாகக் கொண்டு ஈத்தன் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார். உடலை தனது தொழிலுக்கு மூலதனமாக கேத்தரின் பயன்படுத்துகிறாள். தந்தை தன்னை கடல் மீன்களுக்கு தின்னக் கொடுக்கிறார். கேத்தரினா தன் உடலை கதைசொல்லிக்கு அளிக்கிறாள். தானில்லாமலும் தொழில் நிகழ்கிறது, தான் உடல் மீண்டு வருவது வரை மகள் தத்தளித்திருப்பாள் என்று எண்ணியவர், அப்படி நிகழவில்லை என்றதும் குற்ற உணர்வு கொள்கிறார். கேத்தரின் எப்படியோ தனக்கான வருவாயை தேடிக்கொள்ளும் தொழிலைத் தேர்கிறாள். சொல்லப்படாத இடம் என்பது கோபியின் பாத்திரம் சார்ந்தது. அவன் ஈத்தன் கடலில் விழுந்ததை அறிந்திருக்கவும் கூடும். முன்னரே கல்லூரி செலவுகளை கவனிப்பதாக கேத்தரினை சீண்டியும் இருக்கிறான். இந்த தொழிலுக்கு அவனேகூட கேத்தியை அறிமுகம் செய்திருக்க முடியும். இரண்டு வகையிலும் ஈத்தன் தோல்வி அடைந்ததாக எண்ணுகிறார். தான் நம்பிய கிழட்டு கடல் அன்னையும் கைவிட்டதாக தோன்றுகிறது. தனது யாக்கையை பயனற்று உணரும் கிழவன் கடலில் சென்று மரிக்கிறார். அவளுடைய கதையை கேட்ட கதைசொல்லி குற்ற உணர்வின் காரணமாக அவளிடமிருந்து விலகி வருகிறான்.

இந்தக் கதைக்கு மற்றொரு சாத்தியமும் உண்டு. யாக்கை தூலமான இருப்பு. யாக்கை நிலையாமை என்பது திடப்பொருள் உருவற்றதாக ஆவது என்றும் கொள்ளலாம். ஆங்கிலத்தில் Yoke என்றால் பிணைதல் அல்லது பூட்டுதல். மரபில் அண்டத்தில் இருப்பது பிண்டத்தில், பிண்டத்திலிருப்பது அண்டத்தில் என்றொரு நம்பிக்கை உண்டு. எனினும் உடலில் உள்ள நீரும், புறத்தில் உள்ள நீரும் பிணையாமல் உடல் எனும் எல்லை ‘யாக்கை’ தடுத்து நிற்கிறது. இந்த எல்லையை மீற முடியுமா என்பதே கேள்வி. தனது உடலை மீறியவனுக்கும், உடலாக முடங்கியவனுக்குமான கதையாக இதை வாசிக்க முடியும். “முயக்கத்தில் ஒத்த நிறம் கொண்ட ஜோடியுடன் இருக்கும்போது தனியாக இருப்பதுபோல பிரம்மை அவனுக்கு ஏற்படுவதுண்டு. ஓர் அறைக்குள் நிர்வாண தனியனாக இருப்பதென்பது அவனை அச்சமுற வைக்கும்”- இந்த வரி கதையில் ஏன் வருகிறது? மேலதிகமாக பொருள் அளிக்க கூடிய சாத்தியம் உள்ளது. கதை புலன்களுக்கு ஒரு பஃப்பே விருந்து, கலவியைத் தவிர. கடைசி வரை அது மட்டும் கிடைப்பதில்லை.

“ரொம்ப நல்லது சர். கோத்துருக்கிற நீரெல்லாம் வெளியாயி உடம்பு காத்தாயிரும்”.- சோனாவில் சொல்பவள், “ஒடம்ப பலூனாக்கனும்”, என்று ஜகூசியில் காற்றை நிரப்பி மல்லாக்க மிதக்கிறாள். காற்று உடலுக்குள் செல்கிறது, மீள்கிறது, உடல் ஓர் எல்லையாக ஆகிறது, நீரில் உடல் மிதக்கிறது, நீர் உடலுக்குள் நுழையாமல் யாக்கை காக்கிறது. தந்தை கடலை நோக்கி குறியை நீட்டி ஒன்றுக்கு இருக்கும்போதுதான் கடலில் விழுந்து, கடலால் ஏற்கப்படுகிறான். மகள் கேத்தி அளிக்கும் காண்டமை அணிய கதைசொல்லியின் குறி மறுக்கிறது. கதைசொல்லிக்கு தன் எல்லையின் மீதான பிரக்ஞை அதீதமாக உள்ளது, ஆகவே அவன் அவளுடன் கலக்காமல் தவிர்க்கிறான்.

கடலில் விழுந்த ஈத்தன் “இரண்டாவது நாள் புலரியைப் பார்த்தபோது அவர் கடலில் ஓர் அலையாக மாறியிருந்தார்… மருத்துவர்களின் பேச்சொலி கடல் அலைகளின் இரைச்சல்போல வதைத்தது. அவற்றில் துள்ளலுக்கு ஏற்ப உடல் அலைவதாகத் தோன்றியது. கண்களைத் திறக்க பயந்து கட்டிலைத் தொட்டு திரவ நிலையில் இல்லை என உறுதியானபின் நிம்மதி அடைந்தார்… விழிகள் விரிந்து இயல்புநிலைக்குத் திரும்பி ஓரமாகக் கடல் நீரை வழியவிட்டது”. இந்தப் புள்ளியில் அவனுடைய உடல் எல்லையை கடந்து கடலாகவே ஆகிறது. அவன் மீட்கப்பட்டு உடல் மீண்டதும் அவனுடைய உடலின் எல்லையை, பருன்மையை உணர்கிறான். அதை மீறிச் செல்லவேகூட மீண்டும் அதே இடத்தில் கடலில் குதித்து “தன்னை கடலாக்கி கொள்கிறான்”.

மற்றொரு சாத்தியமும் இக்கதைக்கு உண்டு- கேத்தரினா ‘அரேபிய இரவுகள்’ ஷெஹரசாடேயைப் போன்றவள். அவளைப் போன்றே கதைகளைக் கொண்டு ஆணின் காமத்தைக் கட்டுப்படுத்தி காலம் தாழ்த்தி கலவியைத் தவிர்ப்பவளாக கேத்தரினா ஏன் இருக்கக்கூடாது. அவள் புனைவுகளின் அரசி.

இந்த அரேபிய இரவு தன்மை கொண்டதாலேயே இது முக்கியமான கதையாகப் படுகிறது- ஏட்டைத் தாவும் பிரதி. சிறுநீர் கழிக்கப் போனவன் கடலினுள் விழுந்து மரித்தாற்போல், கலவி கொள்ளப் போனவன் காண்டம் மறுத்து (அதுவும் எத்தனை முறை), காற்சட்டை அணிந்தாற்போல் (கடைசியில் அவன்தான் ஷெஹரசாடே: பெண்ணை யோனியில்லாதவளாய்க் காணச் செய்யும் ஆணின் அச்சம்; கடலும் உடலும்)

Yoke: பிணைத்தல், பூட்டுதல். நீருக்கும் காற்றுக்கும் இடையிலுள்ள எல்லையல்ல, நீரையும் காற்றையும் இன்ன பிறவற்றையும் பூட்டும் யாக்கை. அதன் பணி யாத்தல், ஷெஹரசாடே. யாக்கையின் ஆற்றல் புனைவாற்றல், அதன் மீட்சி. மீட்சி: கலவிக்கு உடலை விலை பேசும் பெண்ணுக்கு கதைகள் அளிக்கும் மீட்சி. கற்பனை கொண்டு யாக்கும் கதைசொல்லியின் மீட்சி: உடல் கொண்டு அளிக்க முடியாத விடுதலை.

சூட்டுக் காற்று கன்னத்தில் பட, தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணின் படுக்கைக்குச் சென்று ரகசியமாய் கிசுகிசுக்கும் அப்பா- இரண்டு மாதங்கள் கடலில் இருந்தேனா என்று கேட்டு வெகு நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் மகளை, மறுநாளே கப்பலேறி முதல் முறை கடலில் விழுந்த அதே இடத்தில் விழுந்து சாகிறான். யாரை விலகி, அல்லது, எதைத் தேடிப் போகிறான்?

எழுத்தாளர் உத்தேசித்ததை விட அதிகம் செல்லும் மிகைவாசிப்புகள் தான் இவை. ஆனால் இந்த வாசிப்புக்களுக்கான இடைவெளி கதையில் இருக்கிறதா என்றால்? ஆம். நாம் ஒவ்வொரு கதையிலும் பல்வேறு வாசிப்புச் சாத்தியங்களை தேடுவதன் விளைவாகவும் இருக்கலாம்தான். திறந்த முடிவு என்ற பெயரில் சில சமயம் முற்றுப் பெறாத கதைகளை, எழுத்தாற்றல் குறைபாடான கதைகளை நாம் மிகையாக பொருளேற்றி வாசிக்கவும் கூடும். ஆனால் இது அப்படிப்பட்ட கதையைத் தெரியவில்லை.